
இறுதி அத்தியாயம்
“டேய் அரசு, நம்ம வீட்டுக்குள்ள வர எதுக்காக தயங்கிக்கிட்டு இருக்க, வா உள்ள போகலாம்.” தம்பியின் கைபிடித்து உள்ளே அழைத்து வந்தான் செல்வா.
ஹாலில் வடிவேலு பேப்பர் படித்துக்கொண்டிருந்தார். அரவம் கேட்கவும் நிமிர்ந்து பார்த்தவர் அரசு வந்திருப்பதை உணர்ந்தார். மிகவும் உணர்ச்சிவசப்பட்டவர் அப்படியே அவன் முன்னால் சென்று நிற்க மனம் வராமல் தன்னறைக்குள் சென்றுவிட, அரசுவிற்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது.
“டேய் என்ன பீலிங்கா. ஒரு மண்ணும் வேண்டாம். அப்பா மூச்சுவிடும் வேகத்தின் வித்தியாசம் கூட உனக்கு நல்லாத் தெரியுமே, அப்புறம் என்ன போய் பேசு.” என்று அரசுவை வடிவேலுவின் அறையை நோக்கித் தள்ளினான் தெய்வா.
தயங்கி தயங்கி அந்த அறைக்குள் சென்றவன் மெத்தையில் அமர்ந்திருந்த வடிவேலுவின் காலடியில் அமர்ந்தான்.
“அ” என்று அவன் ஆரம்பிக்கும் முன்னரே, “போதும் டா அடுத்தவங்களோட சந்தோஷத்துக்காக நீ இழந்தது எல்லாம் போதும். இனியாச்சும் உன்னோட, உன் பொண்டாட்டியோட சந்தோஷத்துக்காக வாழப் பாரு.
என்னை சந்தோஷப் படுத்த உன் மனசைக் கஷ்டப்படுத்தி அப்பான்னு கூப்பிட வேண்டாம். என்னை நீ எப்படி கூப்பிட்டாலும், நீ என் பையன் என் இரத்தத்தில் பிறந்தவன் அதை யாராலையும் மாத்த முடியாது.
நான் அதை உன்கிட்ட இருந்து எதிர்பார்க்வும் இல்லை. நீ என்ன எப்பவும் போல அங்கிள் னே கூப்பிடு. இல்லைன்னா செல்லமா கிழவா, ஓல்டுமேன்னு கூப்பிடுவியே அப்படியே கூப்பிடு. உண்மையை சொல்லப் போனால் எனக்கு அதுதான் சந்தோஷமும் கூட.
என்னோட அரசு என்கூட ரொம்ப நெருக்கமா இருக்கிற மாதிரி அந்த வார்த்தைகள் தான் உணர வைக்கும்.” என்க, கண்கள் கலங்கி கண்ணீரை வடித்தான் அரசு.
“எனக்கு என்ன பெருசா ஆசை இருக்கு. நான் பெத்த என் புள்ளைங்க என் கண்ணு முன்னாடி ஒத்துமையா இருக்கணும். நான் போனதுக்கு பின்னாடி அவங்க பங்காளிங்களா மாறிடாம சாகுற வரைக்கும் அண்ணன், தம்பிங்களாவே நல்லா இருக்கணும் அவ்வளவு தான்.
எனக்காக நீ எவ்வளவோ பண்ணிட்ட. இதை மட்டும் கடைசியா எனக்கு பண்ணி கொடுத்திடு அரசு. அந்த சந்தோஷத்திலேயே நான் நிம்மதியா போய் சேர்ந்துடுறேன்.” வடிவேலு சொல்ல அதற்கு மேலும் தாங்க முடியாதவனாய் அவருடைய கால்களில் தன்னுடைய முகத்தை வைத்து அழ ஆரம்பித்தான் அரசு.
“உங்களைக் கஷ்டப்படுத்திடக்கூடாதுன்னு நாளும் பொழுதும் நினைச்ச நான் தான் கடைசியில் உங்களை ரொம்பவே கஷ்டப்படுத்திட்டேன் இல்ல.
என்னை மன்னிச்சிடுங்கப்பா, ஒரு அப்பாவுக்கு நேர்மையா இருக்கிறதா நினைச்சு இன்னொருத்தருக்கு ரொம்ப பெரிய பாவம் பண்ணிட்டேன்.
பெத்த புள்ளையை பக்கத்தில் வைச்சுக்கிட்டு ஆசையா ஒரு வார்த்தை பேச முடியாம, மகனேன்னு கூப்பிட முடியாம எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பீங்க. எல்லாம் என்னால் தான். உங்களோட மகனா இருக்கிறதுக்கு எனக்கு தகுதி இல்லப்பா.” அரசு சொல்ல அவனை தூக்கி அணைத்துக் கொண்டார் வடிவேலு.
“உனக்குத் தகுதி இல்லைன்னா இந்த உலகத்தில் வேறு யாருக்கு டா தகுதி இருக்கப் போகுது. ஒரு அப்பா தன்னோட பையனை நினைச்சு சந்தோஷப்பட வேண்டிய அதிமுக்கியமான தருணம் எப்ப தெரியுமா?
தன்னோட பையன் தன்னைச் சுத்தி இருக்கிற எல்லாருடனும் அன்பாவும், பாசமாவும், நேசத்துடனும் இருக்கும் போது. தனக்கு மட்டும் நல்லது நினைக்காமல் தன்னை சுத்தி இருக்குற எல்லோருக்கும் சேர்த்து நல்லது நினைக்கும் போது. அரசு மாதிரி ஒருத்தர் உங்களுக்கு கிடைக்க நீங்க கொடுத்து வைச்சுருக்கணும் னு யாராவது மனசாரப் பாராட்டும் போது.
இந்த மாதிரி ஒரு முறை, இரண்டு முறை இல்ல கிட்டத்தட்ட ஆயிரம் முறைக்கும் மேல என்னை நீ சந்தோஷப்படுத்தி இருக்க. என் மத்த பசங்களை விட உன்னை நினைக்கும் போது தான் நான் அதிகமா பெருமைப்பட்டு இருக்கேன்.
நீ என்னோட தங்கப்பையன்டா, செல்லப்பையன். நீ என் கண்ணு முன்னாடியே இருக்கணும், சந்தோஷமா இருக்கணும். அதை இந்த அப்பன் பார்க்கணும்.” வடிவேலு சொல்ல அவரை அணைத்துக்கொண்டு சத்தம் இல்லாமல் அழுதான் அரசு.
அவன் அழ, அவர் அழ என சிறிது நேரம் இருவரும் அழுகையில் கரைந்தனர். “ஹலோ ஹலோ உங்களை மனசு விட்டு பேசிக்கிறதுக்காக தனியா விட்டா, இப்படி நீங்க இரண்டு பேரும் குலுங்கி குலுங்கி அழுதுக்கிட்டு இருக்கீங்க. உங்களுக்கு கொஞ்சமாவது அறிவிருக்கா.” என்று கேட்டுக்கொண்டே உள்ளே வந்தனர் ராஜ் சகோதரர்கள்.
“இதோடா மனசு விட்டு பேசிக்கிறதுக்கு இவரு நான் ஆசைப்பட்டு கல்யாணம் பண்ணிக்கிட்ட என் பொண்டாட்டி பாருங்க.” அரசு சொல்ல, அழுது கொண்டிருந்த வடிவேலு சிரித்துவிட்டார்.
“அது எப்படி டா வெட்கம், மானம், ரோஷம் இது எதுவுமே இல்லாம இப்படி அந்தர் பல்டி அடிக்கிற.” நாகா கேட்க, “ப்ரதர் சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும் னு ஒரு பழமொழி கேள்விப்பட்டதில்லையா. அதே மாதிரி தான். என் அப்பாகிட்டையும் என் அண்ணனுங்ககிட்டையும் இல்லாத பழக்கத்தை என்கிட்ட எப்படி நீங்க எதிர் பார்க்கலாம்.” என்றான் அரசு.
அவன் சொன்னது ஒருகணம் புரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்ட நால்வரும் அதன்பிறகு ஒரேயடியாக அவனைத் திரும்பிப் பார்க்க அவன் இருந்த இடம் காலியாக இருந்தது.
வெளியே தலை தெறிக்க ஓடி வந்து கொண்டிருந்த அரசு பெண்கள் அணியின் முன்னால் சடென் ப்ரேக்கிட்டு நின்றான். முகத்தில் குழப்பத்தை தாங்கி நின்றிருந்த அனைவரையும் பார்த்து என்ன என்று கண்களால் வினவினான் அரசு.
“உங்களைப் பத்தி தெரிஞ்ச எல்லோருக்கும் நீங்க பிரச்சனைகளைத் தீர்ப்பதில் கெட்டிக்கார் னு தெரியும். இப்ப எங்களுக்கு ரொம்ப பெரிய பிரச்சனை. என்ன பண்றது, ஏது பண்றதுன்னு புரியாம முழிச்சுக்கிட்டு இருக்கோம். நீங்க தான் ஒரு தீர்வு சொல்லணும்.” என்றாள் லீலா.
“என்ன லீலாம்மா நீ, நான் இருக்கும் போது நீ ஏன் இத்தனை யோசிச்சு சங்கடப்படுற. உன் பிரச்சனை என்னன்னு என்கிட்ட சொல்லு. நான் பத்தே நிமிஷத்தில் அதை தீர்த்து வைக்கிறேன்.” பெருமிதமாய் சொன்னான் அரசு.
“அரசு வேண்டாம், உங்க நல்லதுக்குத் தான் சொல்றேன். பேசாம இங்க இருந்து ஓடிப் போயிடுங்க. இன்னும் கொஞ்சம் நேரம் நீங்க இங்க இருந்தாலும் அப்புறம் நீங்க ரொம்பவே சங்கடப்படுவீங்க.” கணவனைக் காப்பாற்றப் பார்த்தாள் அறிவு.
“ஏய் என்னடி நீ. என் தங்கச்சிங்க என்கிட்ட பேச வந்திருக்காங்க. அதில் நான் சங்கடப்பட என்ன இருக்கு.” வான்ட்டாக வந்து தலையைக் கொடுத்தான் அரசு.
“இதுதான், இதுதான் எங்களோட பெரிய பிரச்சனை. இதுநாள் வரைக்கும் நாங்க உங்களை அண்ணன்னு கூப்பிட்டோம். ஆனா இனி நாங்க உங்களை எப்படி அப்படிக் கூப்பிடுறது. உங்களை அண்ணன்னு கூப்பிட்டா எங்க புருஷன்களும் எங்களுக்கு அண்ணன் முறையா வருமே.” ருக்கு பாவமாய் முகத்தை வைத்துக் கொண்டு சொல்ல, இந்த விஷயம் அரசுவுக்கே புதிதாய், புதிராய் இருந்தது.
எந்த ஒரு பிரச்சனையில் இருந்தும் எப்படி தப்பிப்பது என்று அதிவேகமாக யோசிக்கும் அவனுக்கு இந்த பிரச்சனையின் ஆரம்பமும் முடிவும் ஒரே இடத்திலேயே இருப்பதால் என்ன செய்வது என்று புரியாமல் நெற்றியில் கை வைத்தான்.
“எதுக்காக இவ்வளவு பில்டப் கொடுக்கிற. இதுவரைக்கும் கூப்பிட்ட உறவுப் பழக்கத்தை மாத்திக்க முடியாது. அதுக்காக அதே மாதிரி கூப்பிட்டுக்கோங்கன்னு சொல்லவும் முடியாது. அதனால் எல்லோரும் பெயரைச் சொல்லியே கூப்பிட்டுக்கோங்க.” யோசனை சொன்னான் செல்வா.
“அது எப்படி நாங்க அவரை பெயர் சொல்லி கூப்பிட முடியும். என்ன இருந்தாலும் அவரு உங்க கூட பிறந்தவர் இல்லையா?” சங்கடமாய் கேட்டாள் தேவகி.
“தேவகி உனக்கும் தர்மாவுக்கும் ஒரே வயசு தான். அப்படி பார்த்தா அரசுக்கும் உனக்கும் கூட ஒரே வயசு தான். அதனால பேர் சொல்லி கூப்பிடுறதில் எந்த தப்பும் இல்லை.”
“என்னவோ போங்க மாமா. வழக்கத்தை மாத்துறதுக்கு எங்களுக்கு ஒரு மாதிரி இருக்கு.” என்றாள் ஊர்மி.
“செல்வா சொல்றது சரிதான். ஒவ்வொரு வீட்டில் புருஷனையே பெயர் சொல்லி கூப்பிடுறாங்க. அப்படி இருக்கும் போது புருஷன் கூடப் பிறந்தவனை அதுவும் ஒரே வயசில் இருக்கிறவனை பேர் சொல்லி கூப்பிடப் போறீங்க அதுக்கு என்ன.” என்றபடி வந்தான் தெய்வா.
“அடேய் நல்ல ஆமா சாமி போடுறடா.” அரசு சொல்ல, “இதுக்கு யாரையாவது உதைக்கணும் னா உன்னைத் தான்டா உதைக்கணும். உன்னால் தான் எப்படி எப்படியோ இருந்த நாங்க நாலு பேரும் இன்னைக்கு இப்படி இருக்கோம்.” என்றான் தர்மா.
“அரசு எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம் உள்ளுக்குள்ள உறுத்திக்கிட்டே இருக்கு, அதைக் கேட்கவா?” அமைதியாய் இருந்த நாகா கேட்டான்.
“வேண்டாம் விட்டுடுன்னு சொன்னா கேட்கவா போற கேளு, கேட்டுத்தொலை கருநாகமே.” படு ஸ்டைலாக அறிவின் தோள்களில் கை வைத்தபடி கேட்டான் அரசு.
“இல்ல நீ எவ்வளவு முயற்சி பண்ணியும் நாங்க கடைசி வரைக்கும் ஒன்னா சேரவே இல்லன்னா என்ன பண்ணி இருப்ப.” நாகா கேட்க,
“பெருசா என்ன பண்ணி இருப்பான். இதுங்க திருந்தாத ஜென்மங்க, நாம இனியாவது நம்ம வேலையை பார்ப்போம் னு அவன் வேலையை பார்த்துக்கிட்டு போய் இருந்திருப்பான் அப்படித்தானே டா.” என்றான் தெய்வா.
“அது தான் இல்ல. என்னோட கடைசி அஸ்திரம் பிரம்மாஸ்திரமா ஒரு ஐடியா வைச்சிருந்தேன். அந்த அஸ்திரத்தை உபயோகப்படுத்த வேண்டிய நிலைமை வந்துடக் கூடாதுன்னு நான் கடவுள் கிட்ட வேண்டிக்காத நாளே இல்லை. நல்ல வேலை நீங்க நாலு பேரும் எனக்கு அந்த வேலையை வைக்கல. அதுக்கு உங்களுக்கு ரொம்ப பெரிய நன்றி.” கையெடுத்துக் கும்பிட்டான் அரசு.
“அப்படி என்னடா பெரிய திட்டம் வைச்சிருந்த அதுவும் எனக்கே தெரியாமல்.” வடிவேலு கேட்க, “இங்க இருக்கிறவங்களில் எத்தனை பேரு நவீன சரஸ்வதி சபதம் படம் பார்த்து இருக்கீங்க. அந்தப் படத்தில் ஜெய் அவனோட ப்ரண்ட்ஸ் மூணு பேரு எந்தவித ஆதரவும் இல்லாம தனியா ஒரு தீவில் மாட்டிக்குவாங்களே.
அதே மாதிரி உங்க நாலு பேரையும் தனித்தீவில் போட்டுட்டு நான் வந்திருப்பேன். உறவுகளோட பாசமும், நேசமும் புரியுற வரைக்கும் அங்கேயே கிடந்து கஷ்டப்படுங்கன்னு விட்டுடலாம் னு நினைச்சேன்.” அரசு பயத்தில் நால்வரையும் திரும்பித் திரும்பிப் பார்த்தவாறு சொல்ல, நால்வரும் ஆச்சரியத்தில் விழி பிதுங்கி நின்றனர்.
“அடப்பாவி அரசு உனக்கு நாங்க கனவில் கூட துரோகம் நினைச்சது இல்லையே. அப்புறம் ஏன்டா எங்களுக்கு இப்படி ஒரு பாவத்தைப் பண்ண நினைச்ச.” நாகா ஆச்சர்யத்துடன் கேட்டான்.
“அப்ப இருந்த நிலைமைக்கு நீங்க நாலு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் பேசிக்க கூட மாட்டீங்க. சப்போஸ் உங்களை அந்த மாதிரி தீவில் விட்டா, பேசுறதுக்கு ஆள் இல்லாம நீங்க நாலு பேரும் பேசிக்க ஆரம்பிப்பீங்க. உங்களுக்குள்ள ஒரு நல்ல புரிதல் உருவாகும் னு நினைச்சேன். சொல்லப்போனா அந்த மாதிரி ஒரு தீவு செலக்ட் பண்ணி அதை வாங்குறதுக்கு காசு கூட சேவ் பண்ண ஆரம்பிச்சுட்டேன்.” அரசு உளறிக்கொட்டிவிட,
“என்னங்க ஆபத்து ஓடிப்போய் ஒளிஞ்சுக்கோங்க.” அறிவு சொன்னதும் தான் தான் உளறியதை நினைத்துப் பதறிய அரசு எங்கே ஓடுவது என்று புரியாமல் அவர்களையே சுற்றி சுற்றி ஓடி வந்தான்.
“என்னம்மா இந்த வீட்டு கடைசி மருமகளே புருஷனை காப்பாத்துறதுக்கு ப்ளான் போடுறியா? அது எல்லாம் எங்க கிட்ட நடக்கவே நடக்காது. இப்ப பாரு அவனை கோழியை அமுக்குற மாதிரி ஒரே அமுக்கா அமுக்குறோம் டேய் வாங்கடா.” என்று நாகா முன் ஓட, அவனைத் தொடர்ந்து மற்றவர்களும் சென்றனர்.
சிறிது நேரம் விளையாடிக் களைத்து பின்னர் அமைதியாக ஹாலில் வந்து உட்கார்ந்த சமயம், “ஏன் அரசு எனக்கு ஒரு ஐடியா தோணுது. நீ சொன்ன அந்த தீவுக்கு நாம ஐந்து பேரும் பிக்னிக் போயிட்டு வரலாமா.” நாகா தான் ஆரம்பித்து வைத்தான்.
“ஐ நல்ல ஐடியாவா இருக்கே.” என்ற தெய்வா பெண்களைக் கண்காட்டி, “இவங்களை என்ன பண்றது.” என்று மெல்லிய குரலில் கேட்டான்.
“இவங்க எதுக்கு அந்த மாதிரி இடத்துக்கு. அங்க பசங்க நமக்கு நிறைய வேலை இருக்கும். இவங்க வந்து என்ன பண்ணப் போறாங்க. அதோட இரண்டு பேர் ப்ரக்னெண்ட்டா வேற இருக்காங்க. அதனால எல்லோரும் வீட்டிலேயே இருக்கட்டும். நாம மட்டும் போயிட்டு வந்திடலாம்.” பெருந்தன்மையுடன் சொன்னான் நாகா.
“போயிடுவீங்களோ எங்களை விட்டுட்டு அவ்வளவு தூரம் போயிடுவீங்களோ.” முந்தானையை சுழற்றிக்கொண்டே கணவனை நெருங்கி வந்து கேட்டாள் ஊர்மி.
“ஏன் போக மாட்டோம் னு நினைக்கிறியா? நீ சொன்னதுக்காகவே நாங்க மட்டும் தனியாத்தான்டி போகப் போறோம். என்னடி பண்ண முடியும் உன்னால்.” வீம்பாய் நின்றான் நாகா.
“ஓஹோ அந்தளவுக்கு வந்துட்டீங்களா. அப்ப தாராளமா போங்க. ஆனா திரும்பி வரும் போது தனிக்குடித்தனம் போக ரெடியா வாங்க.” என்றாள் ஊர்மி.
“ஐயோ கடவுளே, வீக் பாயிண்ட்டைப் பார்த்து சரியா அடிக்கிறாளே பாதகத்தி.” மனதுக்குள் நினைத்த நாகா,
“கண்ணம்மா நான் சொன்னதை நம்பிட்டியாம்மா. அத்தான் உன்கிட்ட சும்மா விளையாடினேன். உன்னை விட்டுட்டு அத்தான் எங்கேயாச்சும் போக முடியுமா. நான் என் திரு வாயை வச்சுக்கிட்டு ஏதாவது தப்பா பேசியிருந்தா என்ன மன்னிச்சிடு செல்லம்.” என்று பகிங்கரமாக சரண்டர் ஆக அந்த வீட்டில் சிரிப்பலை பொங்கியது.
“கடவுளே என் வீட்டில் இப்ப கேட்கிற இந்த சிரிப்பு சத்தம், எப்பவும் கேட்கணும். அதுக்கு நீதான் துணையா இருக்கணும்.” மானசீகமாக கடவுளிடம் வேண்டிக் கொண்டார் வடிவேலு.
இதைப் போன்ற இனிமையான பொழுதுகளுடன் நாட்கள் வாரங்களாகியது, வாரங்கள் மாதங்களாகியது, ஒவ்வொரு நாளும் புது புது கலாட்டாக்களுடன் அந்த வீட்டில் சந்தோஷ அலை கரை புரண்டு ஓடியது.
அரசுவின் பெயருக்குப் பின்னால் ராஜ் என்று சேர்க்க முடியாததில் அத்தனை வருத்தம் மற்ற நான்கு ராஜ் சகோதரர்களுக்கு. ராஜ் என்கிற அடைமொழி இருந்தால் தான் அவன் ராஜாவா. எங்கிருந்தாலும் எப்படி இருந்தாலும் அவன் ராஜா தான் என்று சொல்லி வடிவேலு தான் அனைவரையும் சமாதானப்படுத்தி வைத்திருந்தார்.
ஊர்மியின் வளைகாப்பின் போது தேவகிக்கு லேசாக வயிறு மேடிட ஆரம்பித்தது. தர்மாவிற்கு அடுத்ததாக செல்வா இல்லை தெய்வா இருவரில் யாராவது சந்தோஷ செய்தியை சொல்வார்கள் என்று வடிவேலு நினைத்துக் கொண்டிருக்க அவரை முற்றிலும் ஆச்சரியப்படுத்தும் விதமாக அடுத்து தந்தையின் ஸ்தானத்திற்கு உயர்ந்தான் அரசு. அனைவரும் அவனையும், அறிவையும் கொண்டாடித் தீர்த்தார்கள்.
ஒரு நல்ல நாளில் ஊர்மி இரண்டு பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்தாள். அன்றைய தினம் நாகா செய்த அட்டகாசத்தைப் பார்த்து ஒரு மாதம் வரை கிண்டல் செய்தனர் சகோதரர்கள் அனைவரும்.
வீட்டினரின் ஒட்டுமொத்த ஆமோதிப்பில், பெண்களின் மூத்த அக்கா ரஞ்சினியின் பெயரை ஒரு குழந்தைக்கும், மாமியார் ராதாவின் பெயரை ஒரு குழந்தைக்கும் வைத்தார்கள்.
அடுத்த சில மாதங்களில் தேவகிக்கும் ஒரு பெண் குழந்தை பிறந்தது. உத்ரா எனப் பெயரிட்டு மகிழ்ந்தார்கள். அடுத்ததாக அரசுவிற்குப் பிறக்குப் போகும் குழந்தைக்காக அனைவரும் காத்திருந்த நிலையில் ருக்குவும் தாயாகப் போகும் சந்தோஷமான விஷயத்தை பகிர்ந்து கொண்டாள்.
அடுத்தடுத்து அறிவு, ருக்கு இருவரும் கூட இரண்டு பெண் குழந்தைகளையே பெற்றெடுக்க அந்த ஊரில் இருந்த அனைவரும் இவர்கள் குடும்பத்தைப் பற்றி வித்தியாசமாக பேச ஆரம்பித்தார்கள்.
வடிவேலுவிற்கு அனைத்தும் ஆண் வாரிசுகள் என்று ஊரின் ஒட்டுமொத்த கண் திருஷ்டியும் அவர் மேல் தான் இருந்தது. அதனால் தான் இப்பொழுது வரிசையாக ஐந்து பெண் குழந்தைகள் பிறந்து விட்டது என்றும், பெண்கள் வீட்டில் பிறந்த அனைவரும் பெண்கள் என்பதால் தான் அவர்களுக்கு மீண்டும் பெண் குழந்தைகளே பிறக்கிறது இது அவர்கள் தலைமுறையின் சாபம் என்று சிலரும் பேசிக்கொள்ள ஆரம்பித்தார்கள்.
ஆனால் இது எதுவும் அந்த வீட்டின் பெரியவர்களைப் பாதிக்கவில்லை. தங்கள் வீட்டு மகாராணிகளுக்குப் பிறந்த இளவரசிகளை கொஞ்சுவதிலேயே அவர்களுக்கு முழு நாளும் கடந்ததால் இந்த மாதிரி தேவையில்லாத பேச்சுக்கள் அவர்களுடைய காதுகளை எட்டவே இல்லை.
இது என் குழந்தை, இது உன் குழந்தை என்ற பேச்சுக்கே அந்த வீட்டில் இடம் இல்லாமல் போனது. உண்மையை சொல்லப்போனால் யாருக்கு யார் அப்பா அம்மா என்று தெரிந்து கொள்வதில் குழந்தைகளுக்கே சற்று சிரமம் தான்.
வேலையில் இருந்து ஒவ்வொருவரும் வரும் போது வரவேற்பறையில் எந்தக் குழந்தை இருந்தாலும் அவர்களைத் தூக்கிப் போட்டு கொஞ்சுவதை ஆண்கள் யாரும் மறந்ததே இல்லை.
தினம் தினம் ஆண்கள் ஐவரும் பிள்ளைகளுக்கு விளையாட எதையாவது வாங்கிக்கொண்டு வந்து சேர்க்க, விளையாட்டுப் பொருள்கள் போடுவதற்கே இரண்டு அறைகள் சரியாக இருந்தது அந்த வீட்டில்.
சைக்கிள் வாங்கினால் கூட ஐந்து பேருக்கும் ஐந்து வண்ணத்தில் தேர்ந்தெடுத்து வாங்க இதெல்லாம் வேண்டாம் என்று சொல்லிப் பார்த்து தவித்துப் போனாள் லீலா.
பிள்ளைகளை அவர்களின் உடைமைகளை சகோதரிகளுக்குப் பங்கிட்டு பகிர்ந்து கொள்ளும் திறனுடன் வளர்க்க வேண்டும் என அவள் சொன்னது எதையும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை அந்த வீட்டு ராஜாக்கள்.
தான் நினைத்தது அனைத்தும் நடந்து விட்டது என்ற சந்தோஷ மிகுதியில் உடம்பு இன்னும் இன்னும் ஆரோக்கியமாக இருப்பதை உணர்ந்த வடிவேலு தன்னுடைய பேத்திகளுடன் விளையாடியே தினம் தினம் பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தார்.
எல்லோரும் ஆசைப்பட்ட படி வடிவேலுவின் கட்டுமானத் தொழில் முழுக்க முழுக்க அரசுவின் வசம் வந்தது. அதில் அறிவின் குடும்பத்திற்கும் அத்தனை சந்தோஷம். அறிவு மற்ற பெண்களை தன் உடன்பிறந்த சகோதரிகள் போலவே பாவிக்க அவர்களும் இவளைத் தங்கள் கூட்டில் சேர்த்துக்கொண்டனர்.
லீலா, செல்வா இருவரும் மனமொத்த தம்பதிகளாக வாழ்ந்தாலும் ஏனோ கடவுள் அதுவரை அவர்களுக்கு குழந்தை என்னும் ஆசிர்வாதம் அளிக்கவில்லை.
அதைக் குறித்து அவர்கள் இருவரும் கவலைப்படாமல் இருந்தாலும் மற்றவர்களுக்கு சின்ன உறுத்தலாகவே இருந்தது. செல்வாவிற்கு என்று தனியாக குழந்தை பிறக்கும் வரை தாங்கள் இனி அடுத்த குழந்தையை பற்றி நினைக்கப் போவதில்லை என்று சகோதரர் நால்வரும் உறுதி எடுத்துக்கொண்டனர்.
லீலாவிற்கு குழந்தை வரம் வேண்டி ருக்கு, ஊர்மி, தேவகி அறிவு நால்வரும் செவ்வாய் தோறும் முருகனுக்கு விரதம் இருக்க ஆரம்பித்தார்கள். ஆண்கள் வருடம் ஒருமுறை திருச்செந்தூர் சென்று தங்கள் கரங்களால் அன்னதானம் செய்தார்கள். வடிவேலு தன்னால் இயன்றவரை தர்ம காரியங்கள் செய்தார்.
நான்கு வருடங்கள் கடந்து விட்டிருந்த நிலையில் குழந்தைகள் அனைவரும் ஓடியாடி விளையாடும் வயதுக்கு வந்தனர்.
பெற்றவர்கள் நகமும் சதையைப் போல இருந்தாலும் குழந்தைகள் என்பதால் அவர்களுக்குள் அந்தளவு ஒற்றுமை இல்லை. குழந்தைகளுக்கே உரித்தான பொறாமை குணம் அவர்களுக்குள் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது என்று சொல்லலாம்.
தன்னுடைய அம்மா அப்பா எப்பொழுதும் தன்னை மட்டுமே கொஞ்ச வேண்டும். பெரியம்மா, பெரியப்பா, சித்தி சித்தப்பாக்களிடம் சென்றால் அவர்களுடைய குழந்தையை தவிர்த்து தன்னை கொஞ்ச வேண்டும்என்ற எண்ணம் அந்தப் பிஞ்சுகளின் மனதில் ஆழமாக பதிந்திருந்ததால் ஒருவரை ஒருவர் வெறுக்க ஆரம்பித்திருந்தனர்.
இது முதலில் புரியாமல் போனாலும் நாளாக நாளாக பெண்களின் கவனத்திற்கு வந்தது. ஆனால் இதை அவர்களின் நிலைக்கு சென்று எப்படி அவர்களுக்கு புரிய வைப்பது என்று புரியாமல் முழிக்க ஆரம்பித்தனர்.
இதைப் பற்றி தன்னுடைய கணவன்மார்களிடம் சொல்லி வருத்தப்பட அவர்கள் நால்வரும் மிகவும் கூலாக, “எங்களைச் சேர்த்து வைக்க அரசு வந்த மாதிரி, அவங்களைச் சேர்த்து வைக்க ஒருத்தன் வராமலா போயிடுவான்.” என்றனர்.
அவர்கள் சொன்னது கடவுளுக்கு கேட்டு, அடுத்து ஏதோ ஒரு திட்டம் மூளையில் உதயமானது போல அவருக்கு. அடுத்த சில நாட்களிலே லீலா கருவுற்றாள்.
வீடே விழாக்கோலம் பூண்டது. முதல் மாதம் துவங்கி பிரசவம் வரை கண்ணின் இமையாக அவளைக் காத்தனர் அந்த வீட்டின் அனைத்து உறுப்பினர்களும்.
அந்த வீட்டைப் பற்றிய அனைத்து வதந்திப் பேச்சுகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக செல்வாவை உரித்து வைத்தது போன்று அழகான ஒரு ஆண்மகனை ஈன்றெடுத்தாள் லீலா.
ஒட்டுமொத்த குடும்பமும் ஒன்றாக சேர்ந்து அவனுக்கு இனிய நேசன் என்ற அழகான பெயரை வைத்தனர்.
“இவன் என் தம்பி. இவனை நீங்க தொடக்கூடாது. இல்லை இல்லை இவன் எனக்கு தான் முதலில் தம்பி. அதுக்கு அப்புறம் தான் உங்களுக்கு ஊர்மி அம்மா சொன்னாங்க. நீ பொய் சொல்ற, அவங்க அப்படி சொல்லி இருக்க மாட்டாங்க. நீ தான் பொய் சொல்ற. நீ தான், நீ தான், நீ, இல்ல நீ…” என்று குழந்தைகள் ஐவருக்கும் நடுவே அடிக்கடி சண்டை வர ஆரம்பித்தது.
“டேய் நேசா இவங்களை எங்களால கட்டுப்படுத்த முடியாது போல. நீதான் சீக்கிரம் வளர்ந்து எங்களைக் காப்பாத்தணும்.” என்று ஆண்கள் பரிதாபமாய் அவனைப் பார்க்க, அது புரிந்தது போல அவர்களைப் பார்த்து சிரித்தான் நான்கு மாத குழந்தையாக இருந்த நேசன்.
இரத்த பந்தங்களின் இனிய தொல்லைகள் தொடரும்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
15
+1
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️சொல்ல வார்த்தைகளே இல்லை. ரொம்ப நெகிழ்ச்சியாக இருந்தது. அருமையான கிளைமாக்ஸ்