Loading

யான் நீயே 47

வீரன் மீனாளை நேராக அழைத்து வந்தது தன்னுடைய இல்லத்திற்கு. வாயிலில் வீரன் வண்டியை நிறுத்தியதும்,

“நான் அங்கனவே போறேன்” என்றவளின் வாய் வீரன் பார்த்த பார்வையில் கப்பென்று மூடியது.

“இப்போ உள்ள போங்க மேடம் நீங்க… எதுவாயிருந்தாலும் நாளைக்கு ஒரு பத்து மணிக்கு மேல பேசிக்கிடுவோம்” என்றான். அவளை பாராது.

“நான் இன்னும் வரலன்னு ஐயா அம்மா காத்துக்கிட்டு இருப்பாய்ங்க.”

உடனே மருதனுக்கு அழைத்த வீரன்,

“உங்க பெரிய மவ, இங்கன நம்ம வூட்டுல இருக்காய்ங்க. அதில் உங்களுக்கு ஏதும் கஷ்டமா?” எனக் கேட்டான்.

வீரன் சொல்லியது முதலில் புரியாது குழம்பிய மருதன் புரிந்ததும்,

“ரொம்ப சந்தோஷம் அமிழ்தா” என்று சொல்லியவராக வைத்துவிட்டார்.

“இப்போ உங்களுக்கு ஏதும் பிரச்சினையா?”

வீரன் மீனாளை ஏறிட, அவன் மருதனிடம் ‘உங்க பெரிய மவ’ என்று சொல்லியது, அவளுக்கு அத்தனை வலியை கொடுத்தது.

‘தங்கம் சொல்ல மாட்டியா மாமா?’ உள்ளுக்குள் கதறினாள் என்று தான் சொல்ல வேண்டும்.

மலுக்கென கண்கள் குளமாகியிருந்தது.

“ம்ப்ச்.” அவளின் கண்ணீரில் சலிப்படைந்தவன்,

“என்னை ரொம்ப கஷ்டப்படுத்தறடி” என்று பின்னந்தலையில் இரு கரம் கோர்த்து வைத்து தலை உயர்த்தி இருள் வானை வெறித்தான்.

அந்நேரம் லிங்கம் வர,

“வா மீனா” என்று உள்ளே அழைத்தான்.

“மேடம் வருவாங்க” என்ற வீரன் தன்னுடைய வண்டி சாவியை லிங்கத்திடம் கொடுத்து, “எடுத்துட்டு வா” என்றான்.

“வண்டி நின்னுப்போச்சு சொன்னீய?”

“போய் எடுத்துட்டு வாடே!” என்று விரட்டினான்.

“ம்… ம்ம்… புரியுது” என்று லிங்கம் செல்ல,

“மேடம் இப்போ உள்ள வறீங்களா? இல்லையா?” என மீனாளிடம் கேட்டான் வீரன்.

“நான் உனக்கு வேணாமாட்டிக்கு மாமா!” முகத்தை மூடி அழுதபடி கூறினாள்.

“திரும்பத்திரும்ப இதை சொல்லாதடி. உன்னை அடிச்சிடுவனோன்னு அச்சமா இருக்கு” என்ற வீரன், “எனக்கு நீதேன் வேணுமாட்டிக்கு. உள்ள போ” என்றான்.

மீனாளிடம் மாற்றமில்லை.

“உன்னைய ரெண்டு வருசம் பிரிஞ்சி இருந்த என்னால இந்த நாப்பது நாளு இருக்க முடியலடி. அவசியமான பிரிவு வருமுன்னு தெரிஞ்சேதேன் நீயி வேணாமின்னு அம்புட்டு பிடிவாதம் பிடிச்சும் உன்னைய கலெக்டருக்கு அடமா படிக்க வச்சேன். அது என் தங்கப்பொண்ணு ஆசைப்பட்டு எதுவும் கிடைக்காம இருந்திடக்கூடாதேன்னு எனக்கு உம்மேல இருக்கும் காதல். ஆனால் இப்போ நீயி உண்டாக்குற பாரு ஒரு பிரிவு… உன்னைய மனசால தள்ளி வச்சிடுவேனோன்னு அச்சமாட்டு இருக்குடி. உன் காதலை வுடமுடியாதுன்னு அழுத்தமா இருந்த என்னால… நீயி வேணாமின்னு நெனக்க வச்சிட்டன்னாக்கா, பொறவு நீயே நெனச்சாலும் என் எண்ணத்தை மாத்த முடியாது” என்றான். முதல் முறை அவளிடம் காட்டிடாத குத்தும் பார்வையோடு.

அவன் பேச பேச அவளுக்குத் தெரிந்ததெல்லாம் வீரனின் காதல் மட்டுமே. இதை அனுபவிக்க விடாது காலம் ஏன் சதி செய்கிறதென மனதோடு குமுறிக் கொண்டிருந்தாள்.

மீனாள் அழுத்தமாக நின்றிருக்க…

“சரியா தூங்கி நாப்பது நாளு ஆவுது… எனக்கு நிம்மதியா தூங்கணும்” என்றான்.

அவன் குரல், முகம் காட்டிய வேதனை… அவளின் பிடிவாதம் மெல்ல தளர,

“நீயின்னொரு கல்யாணம்…”

அவள் முடிக்கும் முன் அடிப்பதற்கு கையை ஓங்கியிருந்தான். மீனாள் மருண்டு பார்த்திட,

“ச்சைய்” என்று தூக்கிய கையை இறக்கியவன், தன் கன்னத்திலே ஒன்று வைத்துக்கொண்டான்.

“மாமா…” மீனாளின் உதடு அழுகையில் துடித்தது.

“நாளைக்கு இப்போ சொன்னதை சொல்லு… நீயி எந்த பொண்ணை காட்டிக்கிட்டாலும் கட்டிக்கிடுதேன். இப்போ உள்ள போ” என்றான் அழுத்தமாக.

வீரன் தன்னைத்தானே அடித்துக்கொண்டதில் அவனைவிட அவளுக்குத்தான் அதீத வலி.

மீனாளுக்கு நன்கு புரிந்தது… தான் உடனில்லாத இத்தனை நாட்களும் அவன் தன்னைத்தானே வருத்திக் கொண்டிருக்கிறான் என்பது. அடுத்து எதையும் யோசிக்காது வீட்டிற்குள் சென்றாள்.

அங்கை மட்டுமே விழித்திருந்தாள்.

“பசங்க எங்கத்தா?”

“இப்போதேன் உறங்குச்சுங்க மாமா” என்றவள் மீனாளை கண்டு, “வாக்கா” என்று அழைத்தாள்.

“சாப்பாடு எடுத்து வைக்கவா மாமா?”

“கலெக்டர் மேடம் என்னத்துக்கு இருக்காங்களாம்?” என்று கேட்ட வீரன், “புள்ளைங்க உறங்கும்போதே நீயும் செத்த உறங்குத்தா. லிங்கு வருவியான். மூணேறும் ஒட்டுக்கா உண்கிக்கிறோம்” என்ற வீரன் மாடியேறி சென்றான்.

உடனே மீனாளின் அருகில் சென்று அவளின் கையை பற்றிக்கொண்ட அங்கை…

“ரொம்ப சந்தோஷமாட்டிக்குக்கா… நீயில்லாம மாமா மொவமே சுருங்கிக் கிடந்துச்சு… என்னவா இருந்தாலும் மாமா பார்த்துக்கிடும் நம்பிக்கை உனக்கில்லையாக்கா?” என்று கேட்க, மீனாளுக்கு சிறியவளிடம் அறை வாங்கிய உணர்வு.

அவளுக்கு இந்த விடயம் நம்பிக்கை என்பதை தாண்டியது என்று மட்டுமே தோன்றியது.

“உனக்கு இது சொன்னாக்கா புரியாது சின்னக்குட்டி” என்ற மீனாள் எப்படியும் தன்னை மேலே வரவழைக்கவும் வீரன் ஏதும் பேசுவான், இல்லை தன்னைத்தானே வருத்திக்கொள்வான் என்று எண்ணியவள் தானாக மேலேறிச் சென்றாள்.

வீரன் குளித்து முடித்து வேட்டி, மற்றும் கையில்லா பனியனுமாக கண்ணாடி முன்பு நின்று கொண்டு தலையை துவட்டிக் கொண்டிருந்தான்.

மீனாள் வாயில் நிலைப்படியின் மேல் ஒற்றை காலினை உயர்த்தி நின்றவளாக உள்ளே போகலாமா வேண்டாமா என்று மனதிற்குள் சடுகுடு ஆடிக்கொண்டிருக்க…

“பரவாயில்லையே மேடம் கூப்பிடாமலே மேல வந்துட்டிங்க! இதுக்கும் ஏதும் கெஞ்ச வைப்பீங்களோன்னு நெனச்சேன்” என்றவன் கீழே சென்றுவிட்டான்.

மீனாள் மெல்ல ஆடை மாற்றி வர, லிங்கத்துடன் சாப்பிட்டபடி பேசிக்கொண்டிருந்தான் வீரன்.

“வா மீனு. உட்காரு!” என்ற லிங்கம் உணவினை அவள் பக்கம் நகர்த்தி வைக்க, வீரன் போதுமென எழுந்து கொண்டான்.

“நான் வந்தன்னு போறாரா?”

“அதெப்படித்தேன் மலுக்குன்னதும் கண்ணுல தண்ணி நிக்குதோ?” என்ற லிங்கம், “அண்ணே சப்பாடெல்லாம் கொறஞ்சு போச்சுது மீனு. அம்புட்டுதேன். நீயி உண்கு” என்று சற்று அதட்டலாகவே மொழிந்தான்.

மீனாள் மெதுவாக உண்டு முடிக்கும் வரை அவளுடன் அமர்ந்திருந்த லிங்கம், வீரன் பின்பக்கம் செல்வதை பெருமூச்சோடு பார்த்தான்.

“என்னாச்சு மாமா?”

“சாப்ட்டாச்சுல? கை கழுவிட்டு வா” என்ற லிங்கத்துடன் மீனாள் மாடியேறினாள்.

“எதையும் போட்டு அலட்டிக்காம உறங்குத்தா” என்றவன், தன்னுடைய அறைக்குள் வர, இரண்டு தொட்டிலில் இரு குழந்தைகளும் தனித்தனியாக உறங்கிக்கொண்டிருக்க, நோகாது முத்தம் வைத்தவன் மனைவியின் அருகில் ஒட்டி படுத்தான்.

“வந்துட்டியா மாமா” என்று அவனின் தீண்டலுக்கு அவன் பக்கம் திரும்பி படுத்த அங்கை…

“பெரிய சம்பவம் நடந்திருக்கும் போலவே?” என்று கேட்டிட லிங்கம் நடந்ததைக் கூறினான்.

“அப்போ அக்கா அவளா வரலையா?” என்ற அங்கைக்கு மட்டுமல்ல லிங்கத்திற்குமே இப்படி எத்தனை நாளைக்கு மீனாளை இழுத்துப் பிடிக்க முடியமென்று மலைப்பாக இருந்தது.

“எல்லாம் அண்ணே பார்த்துகிடும்ன்னு நெனைக்க வேண்டியதுதேன்” என்று லிங்கம் சொல்ல அங்கை ஆமோதித்தாள்.

“இருந்தாலும் அக்காவுக்கு இம்புட்டு இடும்பு ஆவாது மாமா” என்ற அங்கை, முதல் குழந்தை சிணுங்கிட…

“ஆராம்பிச்சிட்டான்ல… அடுத்து அவன்” என்று முடிக்கும் முன்பு இரண்டாவது குழந்தையும் வீறிட்டது.

லிங்கம் சிரித்துக்கொண்டே முதல் குழந்தையை தூக்கி அங்கையின் கைகளில் கொடுத்துவிட்டு, அடுத்த குழந்தையை தூக்கி தோளில் போட்டு மெல்ல தட்டிக் கொடுத்தபடி அறைக்குள்ளே நடந்தான்.

இரண்டு குழந்தைகளுக்கும் மாற்றி மாற்றி பசியாற்றி உறங்க வைக்கும் வரை அவளையே பார்த்திருந்தான் லிங்கம்.

ஆடையை சரி செய்து, குழந்தைகளை தொட்டிலில் கிடத்தி லிங்கத்தின் மடியில் அமர்ந்தவள்,

“என்னவோ புதுசா பாக்குற மாறி பாக்குற மாமா” என்றாள்.

“உன்னைய குட்டியா தூக்கிட்டு சுத்துன நியாபகம் அங்கை” என்ற லிங்கம் மனைவியை காதலாக அணைத்துக்கொண்டான்.

“அக்கா, மாமா வாழ்கை நேராகிப்புடும்ல மாமா?”

“கண்டிப்பா… மீனுவாலும் அண்ணேவ வுட்டுப்போட்டு இருக்க முடியல. அதுதேன் வீம்பு பண்ணிக்கிட்டேனாலும், இன்னைக்கு அண்ணே கூப்பிட்டதும் வந்துடுச்சு. அன்னைக்கு மாறி இன்னைக்கும் முரண்டு புடிக்க அவளுக்கு எம்புட்டு நேரமாவும்?” என்ற லிங்கம், “உறங்குடி. திரும்ப அவனுங்க எழுந்தாக்க சாமானியத்துல உறங்க மாட்டானுவ” என்று மனைவிக்கு தட்டிக் கொடுத்து உறங்கவும் வைத்தான்.

அறைக்குள் வந்த மீனாள் வீரனை காணாது தேடினாள். அவன் எங்குமில்லை.

“சாப்பிட்டுட்டு இருக்கும்போது மேலத்தேனே வந்தாய்ங்க?” என்று தனக்குத்தானே கேட்டுக்கொண்டவள், சன்னல் திண்டில் சென்று அமர்ந்தாள்.

அவளின் பார்வை தானாக கட்டுத்தறியில் படிந்தது.

கயிற்று கட்டிலில் மல்லாக்க படுத்து வானினை வெறித்தவாறு, கரியனின் முகத்தை தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தான் வீரன்.

‘நிம்மதியா தூங்கி ரொம்ப நாளாச்சு.’ வீரன் சொல்லியது அவளது செவிகளில் எதிரொலித்தது.

அடுத்து மீனாள் எதுவும் யோசிக்கவில்லை, வேகமாக கீழிறங்கி பின்பக்கம் சென்றாள்.

அவளின் மெல்லிய கொலுசொலியிலே வருவதை அறிந்து கொண்டவன் தன்னிலையில் மாற்றமில்லாது படுத்திருந்தான்.

தயங்கித்தான் அவனின் பக்கம் வந்தாள்.

வந்துவிட்டாள்… வார்த்தை வராது தடுமாறினாள்.

கண்களுக்கு மேல் கையினை வைத்திருந்தவன் அவளின் அவஸ்தையை கீழ் கண்களால் நோட்டமிட்டாலும் எதுவும் கேட்கவில்லை.

‘மேடத்துக்கு என்கிட்ட பேசக்கூட வராதாம்மா?’ உள்ளுக்குள் சடைத்துக் கொண்டான்.

நேரம் செல்ல வீரனின் பொறுமை கரையத் துவங்கியது.

‘என்கிட்ட பேச என்னத்துக்குடி தயங்குற?’

அவனின் மறுகல் அவளுக்கு கேட்டதோ…

“மாமா” என்று காற்றாகிய குரலில் விளித்தாள்.

வீரனிடம் அசைவில்லை.

“நீயி உறங்கலன்னு தெரியும்.”

…..

“எந்திரி மாமா!”

…..

“உள்ள வா! ப்ளீஸ்.”

…..

“சாரி மாமா…”

அவன் அசைய போவதில்லை என்பதை உணர்ந்தவள், அவனின் அருகில் சட்டென்று படுத்துக்கொண்டாள்.

பலமடங்கு கோபம் அவனுள். புரிந்துகொள்ளாமல் நடந்து கொள்கிறாளே என்று. அவை யாவும் அவளின் ஸ்பரிசத்தில் காணமல் போவதை உணர்ந்தவன், கோபத்தை இழுத்து பிடித்தான்.

அவள் படுத்ததுமே மறுபுறம் ஒருக்களித்து படுத்தான். முகம் காட்டாது.

“என்னத்துக்கு இங்குட்டு படுத்திருக்க மாமா?”

“ஏய்… எந்திரி!”

“முடியாது.”

“நான் வேணாமின்னு போனவ எதுக்கு என் பக்கட்டு வந்து படுக்கணும்?”

“நீயி உள்ள வா” என்றவள், அவனின் முதுகில் நெற்றி முட்டி இதழ் பதித்தாள்.

அவளுக்கு அவனது அணைப்பும், ஸ்பரிசமும் வேண்டுமாக இருந்தது.

அவனை விட்டு சென்றுவிட்டாளே தவிர, அவளால் ஒரு நாளை அவனன்றி அத்தனை எளிதாக கடத்திவிட முடியவில்லை. அவனாக வந்து அதட்டி, மிரட்டி அழைத்துச் சென்றிடமாட்டானா என்று ஏங்கியிருந்தவளுக்கு அவனுடன் சென்று அவன் வாழ்வை வீணாக்கும் எண்ணமும் இல்லை. ஆனால், அவன் அழைத்து வந்துவிட்ட பின்… அவனை விட்டு இருக்க முடியும் என்கிற அவளது திடம் மொத்தமாக ஆட்டம் கண்டுவிட்டது.

வேகமாக எழுந்து அமர்ந்த வீரன்,

அவள் உடல் குறுக்கி படுத்திருக்க… காலினை நன்கு நீட்டி விட்டான்.

“எந்திரி உள்ள போ” என்றான்.

எழுந்து அவனின் முகம் பார்த்தவள்,

“நீயும் வா மாமா!” என்றாள்.

“என்னத்துக்கு என்னைய இன்னொருத்திக்கு ஈஸியா தூக்கிக்கொடுக்க நினைச்சவள் தானே நீயி. எதுக்கு நீயிருக்கும் அறைக்கு நான் வரணும்?” என்று அவளை வார்த்தையால் குத்திக் கிழித்தான்.

அவளுக்கு அழுகையை தவிர்த்து என்ன பேசுவதென்று தெரியவில்லை.

“எம் முகம் பார்த்து பேசமாட்டியா மாமா?”

“போடி” என்றவன் மீண்டும் படுத்துக் கொண்டான்.

மீனாள் எழுந்து அமர்ந்தவாறு கண்ணீர் சிந்திட…

‘அழுதே கரைச்சிடுவாள். கொஞ்சம் உஷாரா இருந்துக்கோ வீரா’ என்று எழுந்தவன்,

அவளிடம் எதுவும் சொல்லாது உள்ளே சென்றான்.

மீனாளும் கண்களை துடைத்துக்கொண்டு அவன் பின்னால் சென்றிட, அவனோ அறையில் தரையில் பாயினை விரித்துக் கொண்டிருந்தான்.

விக்கித்து நின்றாள்.

“மாமா…”

“இப்போ இந்த மாமாவுக்கு என்னடி?” என்று சீறியவன், “ராவுல எதுவும் சலம்பல் வேணாமாட்டிக்குன்னு இருக்கேன். உம் மேல அம்புட்டு கோவத்துல இருக்கேன். இருந்தும் நீ சொன்னன்னு உள்ள வந்துட்டேன் தானே! திரும்பத் திரும்ப மாமா மாமான்னு கூப்பிட்ட வை… கடிச்சு வச்சிடுவேன்” என்றவன் அவளுக்கு முதுகுக்காட்டி படுத்துக்கொண்டான்.

அவனின்றி மெத்தையில் அமரவே யோசித்தவள், எப்படி உறங்குவாளாம்?

வீரன் உறங்கும்வரை சன்னல் திண்டில் சென்று அமர்ந்தவள், அவன் நன்கு உறங்கிவிட்டான் என்றதும் அவனருகில் சென்று அவனது கையில் தலை வைத்து படுத்துக்கொண்டாள்.

தானாக அவனது கரங்கள் அவனின் தங்கப்பொண்ணுவை அணைத்து தனக்குள் பொதிந்துக் கொண்டது.

********************

முதலில் கண் விழித்தது வீரன் தான்.

இரவு மீனாள் தன்னருகில் வந்து படுக்கும்போது விழித்துக் கொண்டுதான் இருந்தான். அவள் உறங்காதிருக்க, அவனால் எப்படி உறங்கிட முடியும்?

தான் தூங்கிவிட்டதாக எண்ணி, மீனாள் தன் கை வளைவில் வந்து படுக்க, உறக்கத்தில் அவளை அணைப்பதைப்போல் தனக்குள் புதைத்துக் கொண்டான். அவளுக்கு நோகாது.

இப்போது வரை அந்நிலையில் மாற்றமில்லை.

இமைகள் திறந்தவன்,

வெகு நாட்களுக்குப் பின்னர் விடியலை அத்தனை ரசித்தான்.

“இந்த வாய் என்னவெல்லாம் பேசுது” என மெல்லொலியில் முணுமுணுத்தவன், வலிக்காது அவளின் உதட்டில் கிள்ளி வைத்தான்.

அவளிடம் அசைவு தெரிய, பட்டென்று கண்களை மூடிக்கொண்டான்.

சில கணங்கள் தன் விழிகளுக்கு நெருக்கமாகத் தெரியும் தன்னவனின் முகத்தை ஆழ்ந்து உள்வாங்கியவள்,

“என்கிட்ட எம்புட்டு கோவம் வருது மாமா உனக்கு” என்று அவனின் மீசையை பிடித்து இழுத்து, நெற்றியில் முத்தம் வைத்தாள்.

சட்டென்று வீரன் இமை திறக்க…

வேகமாக விலகி எழுந்து நின்றாள்.

“என்ன?” வீரன் புருவத்தை ஏற்றி இறக்கினான்.

ஒன்றுமில்லையென தலையாட்டியவள், அவன் முன்னிருந்து நகர,

“ஏதும் முக்கிய மீட்டிங் இருக்கா?” எனக் கேட்டான்.

“இல்லை” என்றவளிடம், “கிளம்பு ஒரு இடத்துக்கு போவனும்” என்று எழுந்தான்.

“எங்க?”

“நேத்து ஒரு பொண்ணு விவரம் கொடுத்தியே போய் பார்த்துப்போட்டு வருவோம். எனக்கு எப்படிப்பட்ட பொண்ணு வேணுமின்னு உன்னைவிட வேறு யாருக்கு தெரியுமாட்டிக்கு” என்றவன் படுக்கையை சுருட்டி எடுத்து வைத்தவனாக விக்கித்து நின்றவளின் முகத்தை பார்த்து, ‘எனக்கும் இப்படித்தானே இருக்கும். நல்லா வலிக்கட்டும்’ என்று மனதில் நினைத்தவனாகக் கடந்து சென்றான்.

“நின்னுகிட்டே இருக்காம வெரசா வா” என்றவன் கீழே சென்று கட்டுத்தறியில் வேலைகள் முடித்து வீட்டிற்குள் வந்தான்.

அனைவரும் அங்கு தான் இருந்தனர். மீனாளை தவிர்த்து.

“அவள் வந்துட்டாள். கீழே வரும்போது ஏதும் கேட்கக்கூடாது” என்று மீனாட்சியில் அழுத்தமாக பார்வை பதித்துக் கூறியவன் மேலே சென்றுவிட்டான்.

மீனாள் தயாராகி அமர்ந்திருந்தாள்.

வீரன் சொல்லியது வருத்தத்தை அளித்தாலும், அவனால் ஒருபோதும் சொல்லியதை செய்திட முடியாது… தன்னை வருத்தவே அவ்வாறு கூறுகிறான் என்பதை கணித்திருந்தவள், வீரன் வேறெங்கோ செல்ல அழைக்கிறான் என்பது புரிந்து கிளம்பியிருந்தாள்.

“பாருடா புருஷனுக்கு பொண்ணு பார்க்க போறோமின்னு எம்புட்டு ஆர்வம். இம்புட்டு வெரசா கெளம்பி நிக்கிறீங்க?” என்ற வீரன் மீனாளின் முறைப்பை பொருட்படுத்தாது குளியலறைக்குள் புகுந்து வெளிவந்தான்.

நான்கு சட்டைகளை எடுத்து மெத்தையில் போட்டவன்,

“இதிலெது மாப்பிள்ளை மாறி இருக்கும்? செலெக்ட் பண்ணுங்க பாப்போம்” என்றான். அவளிடம்.

மீனாள் அவனை முறைத்திட…

“என்னத்துக்கு மொறச்சிட்டே இருக்கீய்ங்க மேடம்? எனக்கு என்ன கலர் சட்டை போட்டா நான் அம்சமா இருப்பேன்னு உங்களுக்குத்தேன் நல்லா தெரியுமே! அதேன் கேட்டேன்” என்றவன், “ஒருத்தியை பார்க்க போறேன்னு சொல்றதையே இவிங்கனால ஏத்துக்க முடியலையாம். இதுல கல்யாணம் கட்டிக்கிடனுமாம்” என்று முணங்கியவனாக ஒரு சட்டையை எடுத்து உடுத்தி அவள்புறம் திரும்பினான்.

“போவோமா?” என்றவன் முன் செல்ல…

‘நான் சொன்னா செய்வீயோ? எம்புட்டு தூரம் போறன்னு பார்க்கிறேன் மாமோய்’ என்று நினைத்தவள் அவன் பின்னால் சென்றாள்.

வீரன் சொல்லியதால் மீனாள் அங்கு வந்ததைப்பற்றி யாரும் ஒரு வார்த்தை கேட்கவில்லை. அவள் வீரனுடன் இருந்தால் போதுமென்றே நினைத்தனர்.

“ஒரு இடம் போயிட்டு வரேனுங்க ஐயா!” என்று பாண்டியனிடம் சொல்லிய வீரன் மீனாளை அழைத்துக்கொண்டு வெளியில் வந்தான்.

வீரன் காரினை எடுக்க, மீனாள் அங்கு நின்று கொண்டிருந்த வீரனின் இருசக்கர வாகனத்தை பார்த்தாள். அதில் அவனுடன் பயணிப்பதில் அவளுக்கு அத்தனை பிடித்தமாயிற்றே!

“ராவே வண்டி நின்னுப்போச்சுதே” என்றவனை நம்பாத பார்வை பார்த்தபடி காரினுள் ஏறி அமர்ந்தாள்.

அவளுக்குத்தான் லிங்கம் வண்டியை கொண்டு வந்து நிறுத்தியது தெரியுமே!

இருவரிடமும் பேச்சென்பதே இல்லை.

வீரன் மருத்துவமனை வளாகத்தில் வண்டியை செலுத்த, அவனை அதிர்வாக பார்த்தாள்.

“எப்படியும் நெகட்டிவ் தானே வரப்போவுது. அதேன் முந்தைய ரிப்போர்டில் தெளிவா எனக்கு குழந்தை பிறக்க வாய்ப்பே இல்…”

“உன் வாப்பெட்டியை கொஞ்சம் சாத்துடி” என்று அதட்டியவன், “அதை டாக்டர் சொல்லட்டும். இப்போ உள்ள போவோம் வாங்க” என்று பற்களை கடித்தவனாக மருத்துவரிடம் அழைத்துச் சென்றான்.

அவனுள் ஒரு கணிப்பு, ஆதலால் இரவே முன்பதிவு செய்து வைத்திருந்தமையால் காத்திருக்க வேண்டிய அவசயமின்றி மருத்துவரை சந்திக்க நேர்ந்தது.

“வாங்க வீரன்…”

வீரனுடன் மீனாளும் வர பரிசோதனைக்கு என்று ஆச்சரியமாகத்தான் நினைத்தார் மருத்துவர்.

“ஒரு வழியா உண்மையை சொல்லிட்டிங்க போல” என்ற மருத்துவர், இருவரையும் தனக்கு முன்னிருந்த இருக்கையில் அமர்த்தினார்.

“எப்படியிருக்கீங்க மேடம்?”

மேடம் அவளின் பதவிக்கு கிடைத்த விளிப்பென்று புரிய புன்னகையோடு தலையசைத்தாள்.

அவளுள் பெரும் பதற்றம். தானாக கணவனின் கரம் பற்றிக்கொண்டாள்.

“டெஸ்டுக்கு எழுதிடவா?” என்று மருத்துவர் வீரனிடம் கேட்க,

“டெஸ்ட் தான் டாக்டர். ஆனால் ***** டெஸ்ட் கிடையாது. பிரெக்னென்சி டெஸ்ட்” என்றான் வீரன்.

மருத்துவர் புன்னகைத்தார். அவருக்குத்தான் தெரியுமே. மீனாளுக்கு உண்டானது தானாக சரியாகக்கூடிய ஒன்றென்று. அதனால் அவர் வீரன் சொல்லியதை சாதரணமாகத்தான் ஏற்றார்.

மீனாளுக்குத்தான் உச்சகட்ட அதிர்வு. விழிகள் தெறிக்க வீரனை பார்த்தாள்.

மீனாளுக்கு விபத்து ஏற்பட்ட போது தண்டுவடத்தில் ஏற்பட்ட அதிர்வால் இந்தப் பிரச்சினை உண்டானது. ****** என்பது பெண்ணின் மல**த்தன்மையை குறிப்பது.

ஏதேனும் ஒரு அதிர்வு ஏற்படும் போது சில கணங்கள் எந்தவொரு உறுப்பும் தன் செயல்பாட்டினை நிறுத்துவது இயற்கை. இங்கு மீனாளின் விடயத்திலும் அதுதான் நடந்தது.

கீழ் தண்டுவட நரம்பில் ஏற்பட்ட அதிர்வில், மீனாளின் கருப்பை உறுப்புகள் தனது செயல்பாட்டினை நிறுத்தியிருந்தன. சரியான உணவுமுறை, மருந்துகள், உடற்பயிற்சி ஆகியவற்றின் மூலம் இது எளிதில் சரியாகக்கூடிய ஒன்றாக இருந்தாலும் பாதிக்கு பாதி தான் மருத்துவரால் உறுதி கொடுக்கும் நிலை, விபத்து ஏற்பட்ட சமயம். இன்று அது குணமாகியும் இருந்தது.

“மீனாளுக்கே நீங்க சொல்வதில் நம்பிக்கை இல்லை போலிருக்கே?”

மீனாளின் முகம் கண்டு மருத்துவர் வினவினார்.

“அறுபத்தி மூணு நாளாவுது டாக்டர்” என்று வீரன் மீனாளின் முந்தைய மாதாந்திர நாளின் திகதியை குறிப்பிட… அப்போதுதான் மீனாளுக்கே இரண்டு மாதங்கள் தள்ளி சென்றிருக்கிறது என்பது நினைவு வந்தது.

தனக்கிருந்த வருத்தத்திலும், குழப்பத்திலும் மீனாள் இதனை கவனிக்கத் தவறினாள்.

மீனாளுக்கு உண்மை தெரிந்த இரவுக்கு பத்து நாட்களுக்கு முன்னதாகவே அவளுக்கு வந்திருக்க வேண்டியது.

இரு தினங்களுக்கு முன்பு தான், அன்றைய மாதத்திற்காக அவளுக்கு வாங்கி வைத்த பயன்பாட்டு பொருளை குளியலறையில் கண்ட வீரனுள் ஏதோ கணக்கீடு.

நாட்கள் தவறி… மருதனின் வீடு சென்ற பின்னர் வந்திருக்கலாமென நினைத்துக்கொண்டவன், நேற்றைய இரவு மீனாள் பத்து பதினைந்து நாட்களாகவே மயக்கம், தலை சுத்தலாக இருப்பதாக சொல்லியதில் என்னவாக இருக்குமென்று கண்டுகொண்டான்.

நெஞ்சிற்குள் அப்படியொரு நிம்மதி வீரனிடம். வார்த்தைகளற்று அக்கணத்தை மனதோடு மௌனமாக கடந்திட்டான். அவன் பட்ட துன்பத்திற்கெல்லாம் மருந்தாக அமைந்திட்ட நொடிகள் அவை.

அப்போதே மீனாளிடம் சொல்லிட நினைத்தாலும், இத்தனை நாட்கள் தன்னை வருத்தியதிற்கு எப்படி சும்மா விடுவதென நினைத்து அவளை சீண்டினான். ஒரு நாள் இரவு பக்கமிருந்தே தவிக்க வைத்தான்.

மீனாளை பரிசோதித்த மருத்துவர்,

“கங்கிராட்ஸ் வீரன்” என்று வாழ்த்துக்கூறி, “தேர்ட் மன்த்ஸ் ஸ்டார்ட் ஆகுதுல… ஸ்கேன் பார்த்திடலாம் வாங்க” என்று இருவரையும் அழைத்துச்சென்றார்.

மானிட்டரில் புள்ளியாக தெரிந்த குழந்தையை இருவருக்கும் காட்டிய மருத்துவர்,

“இது பேபியோட ஹார்ட்பீட் சவுண்ட்” என கேட்கவும் வைத்தார்.

மீனாள் தனக்கு அருகில் நின்றுகொண்டிருந்த வீரனின் கைகளை இறுகப்பற்றிக் கொண்டாள். இருவருக்குமே ஆனந்தத்தில் கண்கள் பனித்தது. இத்தருணத்திற்காக மனதால் இருவரும் கொண்ட வலிகள் அதிகமாயிற்றே. குழந்தையின் இதயத் துடிப்பின் ஒலியில் அனைத்து வலியையும் துறந்தனர்.

அதன் பின்னர் மருத்துவர் சொல்லிய அறிவுரைகளை பெற்று, மருந்துகளை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வந்தனர்.

மருத்துவர் மீனாளின் கர்ப்பத்தை உறுதி செய்த நொடி முதல் வீரன் மீனாளிடம் ஒரு வார்த்தை பேசவில்லை.

வீரன் தான் வீட்டினரிடம் விடயத்தை பகிர்ந்துகொண்டான்.

அப்போதே மீனாட்சி மீனாளை மீனாட்சி அம்மன் படத்தின் முன்பு நிற்க வைத்து, குழந்தை நல்லபடியாக பிறக்க வேண்டுமென்று ஆயிரம் வேண்டுதல் வைத்தார்.

அனைவரும் மீனாளை கொண்டாடித் தீர்த்தனர்.

எதிலும் வீரன் கலந்துகொள்ளவில்லை. அமைதியாகப் பார்த்திருந்தான்.

அபி அப்போதே அவளுக்கு பிடித்த இனிப்பனை செய்து உண்ண வைத்து தன் மகிழ்வைக் காட்டினார்.

“மாமா இப்போ வருவாரு… அவளை அனுப்பி வச்சிடுங்க” என்ற வீரனின் குரலில் மொத்த சந்தோஷமும் வடிந்து அனைவரும் ஸ்தம்பித்து நிற்க, யாரையும் பொருட்படுத்தாது வீரன் மேலே சென்றுவிட்டான்.

“இன்னும் உங்களுக்குள்ள சடவு தீரலையா மீனாள்?” அபி கேட்டிட,

“மொத நீயி… இப்போ அவனா?” எனக் கேட்டார் மீனாட்சி.

“நான் பார்த்துகிறேன்” என்ற மீனாள் மெல்ல அறைக்குள் நுழைந்தாள்.

வீரன் சன்னல் திண்டில் அமர்ந்திருந்தான். தயங்கித்தான் அவனருகில் சென்று நின்றாள்.

மீனாள் வந்து நின்றது தெரிந்தும் வீரன் தன் பார்வையை திருப்பவில்லை.

“மாமா…” மெதுவாக அழைத்திட, வேகமாக திரும்பி வாயில் விரல் வைத்து, “மூச்” என்றவனின் விழிகள் தீ கங்குகளாக கனன்றது.

அடக்கி வைத்த அவனது மொத்த கோபம் மற்றும் வலியின் வெளிப்பாடு அது.

“மாமா…”

“போயிடுடி… போயிடு…” அடக்கப்பட்ட சீற்றமாகக் கூறினான்.

“இதுக்காகத்தாண்டி என்னைய வுட்டுப்போவனுமின்னு அத்தனை இடும்பு பண்ண? குழந்தைக்காக உன்னைய நான் கட்டிக்கிட்டேன்னு நினைச்சுட்டல… உன் மூலமா என் குழந்தை வரணுமின்னு ஆசைப்பட்டேனே தவிர, குழந்தைக்காக உன்னைய கட்டிக்கிடல” என்றான். உணர்ச்சி பிழம்பாய்.

“தப்புதேன் மாமா. கிறுக்கு பிடிச்ச கணக்கா நடந்துக்கிட்டேன்…” என்றவள் முகம் மூடி அழ…

“அழுதே உசுரை உருவாதத்தா… முடியலடி” என்றான். நொறுங்கிவிட்ட குரலில்.

“இப்போயிருக்க சூழலுக்கு உன்னைய வார்த்தையாலே வதைச்சிடுவனோன்னு அச்சமா இருக்கு. நீயி என்னைய வேணாமின்னு அத்தனை அடமா நின்னது இன்னும் என் கண்ணுக்குள்ள நிக்குது. உன்னைய வெறுக்க வச்சிடாதத்தா. நீயி அங்கிருக்கிறதுதேன் ரெண்டேருக்கும் நல்லது” என்றான். அவன் பொறுமையாக சொன்னாலும், அவனின் மனவலி அப்பட்டமாக குரலில் தெரிந்தது.

“மாமா… என்னைய போவ சொல்லாத மாமா. நீயில்லாம இந்த கொஞ்ச நாளே செத்துப்போன மாறி இருந்துச்சு. இதுல நீயே என்னைய வேணாமின்னு சொன்னாக்கா… உண்மையாவே செத்து…” வேகமாக அவளின் வாயினை தன் கரம் கொண்டு மூடியிருந்தான்.

“வலி ஏத்தாதடி…” என்றவன் தன்னவளை இழுத்து தன் மடியில் அமர வைத்து அணைத்து விடுவித்தான்.

“மாமா…”

“போ… படுத்தா” என்றவனின் மனம் அவனவளுக்காக துடித்த போதும்… முன்பு போல் இயல்பாய் அவளுடன் இருந்திட அவனால் முடியவில்லை.

இதனையும் அவனின் தங்கத்திற்காக வீரன் கடந்து வருவான்.

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 45

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
42
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments