
கருமத்தம்பட்டி
கோவைக்கு வெளியே அமைந்திருக்கும் அவ்வூரின் ஒரு பழைய பேக்கரியில் அமர்ந்திருந்தான், புகழேந்திரன்.
தலையெல்லாம் கலைந்து, வியர்வையில் குளித்திருந்தவன் முகம் விகாரமாய் மாறியிருந்தது.
“என்ன மாமா, விடிஞ்சா கல்யாணமாமா? அந்த ஜிகினாவையே மடிக்கிட்டியே” என்று பேசியவனிடம், “ஏய்” என்று பாய்ந்திருந்தான் புகழ்.
“என்னடா வேணும் உனக்கு இனி? அதான் நீ கேட்டது கொடுத்துட்டேன்ல? அப்புறம் என்ன?” என்று ஆத்திரமாய் அவன் கத்த,
“எதேய், அந்த ஆதாரத்துக்கு மதிப்பு ஒத்த கையெழுத்தா? இல்லையே இல்லையே, பொன்முட்ட போடுற வாத்து நீ, அலேக்காத் தூக்கிக் கொடுத்துட முடியுமா என்ன?” என்க,
“அவ்ளோதான் பார்த்துக்க, நீ கையெழுத்து வாங்கின எடத்தோட மதிப்பே கோடிக்குத் தேரும். இன்னும் என்ன ஆடலாம்னு பார்க்கற?”
“ம்ம்.. நெறையா ஆடலாம்னு இருந்தேன். சரி புதுமாப்புள வேற, போய் சந்தோஷமா கல்யாணம் பண்ணிட்டுத் திரும்ப வா. புருஷன் பொண்டாட்டி ரெண்டு பேருக்கும் போட்டு வைக்கறேன், ஸ்கேட்ச்” என்று புகழின் சட்டையை ஒழுங்கு படுத்தியவாறு சொன்னவன் முகம் நக்கலின் ஊற்றாக இருந்தது.
“கெளம்பு போலீஸே.. கெளம்பு. ஹான் அப்புறம், கல்யாண வாழ்த்துக்கள்” என்று அவன் அங்கிருந்து சென்றுவிட, புகழுக்கு ஒன்றும் புரியாத நிலை.
அவன் நிதானம் முற்றாகக் குழைந்திருந்தது. ஒருமணி நேரத்திற்கு முன்பு அழைத்து அவனை அவசரமாக இங்கே வரச் சொன்னார்கள், வந்தால் இதென்ன இப்படியான ஒரு நிகழ்வு? என்று எண்ணியபடி அவன் திரும்பவும் மண்டபத்திற்குச் செல்ல முனைந்தான்.
புகழ் வீட்டார் கொடுத்த அதிர்வு தாங்காது மயங்கியிருந்தால், ஷக்தி. மயக்கம் என்பதைவிட அவள் மனது அந்தளவுக்கு வார்த்தைகளைத் தாங்கவில்லை.
உடல் பலமும் உள்ளத்துத் தைரியமும் வெவ்வேறு தானே!
போலிஸாரும் வந்துவிட, புகழின் வீட்டினர் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். அதே மண்டபத்தில் வேறு புறம் இருந்த மணமகன் சொந்தத்தோடு ஷண்முகம் பக்கத்தினரை அவர்களை அழைத்துச் சென்றனர்.
காளிதாஸிடம், “செத்த உங்ககிட்ட பேசலாமா?” என்றார் நம்மாழ்வார்.
“இன்னும் என்னத்த சொல்ல போறீங்க. அதான் மொத்தமா படுக்க வெச்சுட்டீங்களே அவள. என்ன வாய் ஸர் உங்க வீட்டு ஆட்களுக்கு, மனுஷ தன்மையே இல்லாம எப்படி பேசுறாங்க?” ப்ரமோத் பேசிவிட்டான்.
காளிதாஸ், “இனி பேச ஒன்னுமில்லைங்க. கல்யாணம் நின்னுருச்சு, எங்க பிள்ளைக்கு இப்படி ஒரு இடமே வேண்டாம்” என்றுவிட்டார்.
நம்மாழ்வார், “கருணா, சிவாவ கூட்டிவா ய்யா” என்றவர்,
“என் வீட்டு ஆளுனால ஒரு பொண்ணோட கண்ணாலம் நிக்க வேண்டாம்.” என்று சொன்னவர் சிவாவை ஒரு கணம் ஆழ்ந்து பார்த்தபடி,
“உங்க சக்திய, என் புள்ள சிவாவுக்குக் கட்டிக் கொடுங்க. அவன் மூச்சு இருக்கற வரைக்கும் சக்திய உசுரா பார்த்துப்பான்” என்றார் கண்களில் நீரைத் தேக்கி.
“அய்யா” என்று சிவா அதிர்ந்தான் என்றால், “இந்த அய்யேன் உன்ன நம்பாம இல்ல சாமி. மூனு பிள்ளைய பெத்து ஒன்னுகிட்ட மட்டும் கண்மூடித்தனமா பாசத்த வெச்ச பாவத்துக்கு இந்த அய்யன வெறுத்துடாத சாமி” என்று அவன் காலில் விழச் சென்றுவிட்டார் அவர்.
“மாமா” என்று அவரை கருணா பிடித்துக்கொள்ள, சிவா அந்த அதிர்வில் உறைந்து நின்றிருந்தான்.
தேனாட்ச்சி, “ஆழ்வாரு நம்ம சிவா தானய்யா, அழுவாம இரு சாமி” என்று அந்த முதிர்வயது பெண்மணியும் அழ, அங்குச் சூழ்நிலை சங்கடமானது.
பக்கத்து அறையில் லாவண்யா, மயங்கியிருந்த ஷக்தியைப் பார்த்து அழ அவரோடு சேர்ந்து அழுதான், துருவ்.
ஜான்வி, மருத்துவராய் ஷக்தியைக் கவனித்தாலும் வீட்டின் இச்சூழலில் அவளாலும் ஆறுதல் சொல்ல முடியாத நிலை.
“டேய் எங்க ஆராவ, உன் ஷக்திய கல்யாணம் பண்ணிக்கிறீயா” என்று ஆராவமுதன் கேட்டதற்கு, சிவாவின் கலங்கிய விழிகள் என்ன சொல்லிவிடும்?
ப்ரமோத்தும் காளிதாஸும் யோசிக்க, அதையெல்லாம் பக்கத்து அறையிலிருந்து கேட்ட பெண்களின் நிலையோ அதிர்வாக இருந்தது.
எல்லோரின் சிந்தனை முடிச்சுகளும் வந்து குவிந்த இடம், ஷக்தி ஆராதனா.
திடும் என்று அறைக்குள் வந்த மேகா, “எனக்கு இத்தன நாள் இருந்த எண்ணத்த உங்க அப்பாவே சொல்லிட்டாரு, இன்னும் ரெண்டு மணி நேரம் இருக்கு. மாப்பிள்ளையா ரெடியாகிட்டு வந்து என் நாத்தனாரா, அந்த பால்டப்பாவ கல்யாணம் பண்ணுற” என்றாள்.
தேனாட்ச்சி, கருணா, நம்மாழ்வார் முகங்களில் சொல்ல முடியா ஒரு வேதனையின் சாயல்.
“என் பேரன் பண்ணத் தப்புக்கு, சக்திய பேசுனது தப்புத்தான் சாமி. ஆத்தாவ மன்னிச்சுடுய்யா” என்று பொறுக்கமாட்டாதுக் கையெடுத்து ஆராவமுதனைக் கும்பிட்டார், தேனாட்ச்சி.
“பாட்டி, சும்மா இருங்க. என்ன செய்யுரீங்க” என்றவன் அவர் கைகளைப் பற்ற,
“வேற என்னத்த செய்யய்யா? அந்த பயலோட வாயாலையே எல்லாம் கேட்ட பின்ன, என் சாமி இத்தன வவுசம் பட்ட கஷ்டத்த நினச்சு நான் என்னத்த செய்ய?” என்றவர் அழுக, கருணா அவரைத் தாங்கிக்கொண்டான்.
ஆராவமுதன், “என்ன?” என்றான் புரியாது.
அப்போதுதான் சிவாவுக்கு ஏதோ புரிந்தது. “மாமா” என்று கருணாவைப் பார்க்க,
அவனோ, “ஆத்தா புகழுக்கு துன்னூறு பூச போனப்போ நீயும் புகழும் பேசினத கேட்டுட்டாக” என்க, தலையில் கை வைத்து அமர்ந்துவிட்டான், சிவனேஷ்.
தரணி, அன்று ஷக்தியைத் தாக்கிவிட்டு, அவளால் குண்டடிபட்டு, போலீஸ் விசாரணையில் இருந்தவன்.
செய்திகளில் கிட்டத்தட்ட அவனைத் தீவிரவாதிகளின் கையாளாகச் சித்தரித்துச் சொல்லியிருந்தனர்.
இந்த செய்திகள் எல்லாம் நடந்து இன்றோடு ஓராண்டானது. அவன் என்னவானான் என்பதும், அந்த துப்பாக்கிகள் இருந்த கட்டிடமும் என்னவானது என்பது தெரியாது போயிருந்தது.
அவன், அந்த தரணி புகழால் மரணமடைந்திருந்தான். லாக்கப் டெத். அவனின் ஃபைல் அத்தோடு மூடப்பட்டது. அதைத் திரித்து தற்கொலை என்றுவிட்டனர், புகழைக் காக்க.
“அவர் *** இயக்கத்தைச் சார்ந்த நபருக்கு உதவியாக இருந்தார். விசயம் தெரியவும் நாங்க அரஸ்ட் பண்ணி விசாரிக்கவும், கரண்ட் கம்பிய கடிச்சு சூசைட் பண்ணிட்டார். பாடி இப்போ போஸ்ட் மாட்டம் வந்திருக்கு, முடிஞ்சதும் அவங்க ரிலேடிவ்ஸ் கிட்ட கொடுத்துடுவோம்” அவ்வளவு தான், முடிந்தது என்பது போன்று மீடியாவில் ஒரு அறிக்கையை விடுத்துச் சென்றுவிட்டார் மேலதிகாரி.
இறந்த உயிருக்கான குறைந்த பட்சம் மரியாதைக் கூட அங்குக் கிடைக்கப்பெறவில்லை.
அத்தோடு அந்த வழக்கு முடிந்தது என்று புகழ் நினைத்திருக்க, விதி தன் பிள்ளையார் சுழியிட்ட இடமே இதுதான்!
மூர்த்தி, ஷக்தி சீல் வைத்த ‘ரூக்ஸ் ஃப்ளாசா’ உரிமையாளர். அவனோடு சேர்ந்து மேலும் மூவர் கூட்டாகி அவர்களின் சொத்துக்களை மீட்க நினைத்திருக்க, அப்போது அவர்கள் வலையில் விழுந்தான், புகழேந்திரன்.
“அந்த பயலை அடிச்சே கொன்னியே, அதோட சிறப்புத் தொகுப்பு இப்போ என்கிட்ட. ஒழுங்க அந்த கலெக்டர்கிட்ட நாங்க சொல்லுற இடத்துல எல்லாம் கையெழுத்து வாங்கி கொடுத்தேனா, நீயும் தப்பிப்ப. உன் வேலையும் தப்பிக்கும். இல்லையா, நெட்ல விட்டா, தமிழக மக்களே பார்த்து மேற்கொண்டு பேசிப்பாங்க” என்றிருந்தான்.
அது புகழை நெருக்கியது. ஷக்தியுடன் கொஞ்சம் கொஞ்சமாக அப்போது தான் அவன் முன்னேறி இருந்த சமயம், அவள் தன் காதலைச் சொல்லிய சில நாட்களில் அப்படியான ஒரு குழியில் விழுந்திருந்தான், புகழ்.
ஷக்தி, அவளை ஏமாற்றும் எண்ணம் அவனிடம் துளியும் இல்லை தான். இருந்தும் காலத்தின் கோலம் அவன் செய்தாக வேண்டிய கட்டாயம்.
அவளின் மொத்த நம்பிக்கையும் பெற்றிருந்த பின்னர், அவள் அவனைச் சந்தேகிக்கமாட்டாள் என்று தெரிந்த பின்னர் துணிந்து அவள் அறியாது, அவன் மீதான நம்பிக்கையை ஏமாற்றி ‘சீல் வைத்த கட்டிடத்தில் எந்த தவறும் இல்லை. என்னுடைய கவனக்குறைவால் தான் நான் அவ்வாறு செய்தேன்’ என்று எழுதியிருந்த பத்திரத்தில் புகழேந்திரன் மீதான அசாத்திய நம்பிக்கையில் கையெழுத்திட்டிருந்தாள், துணை ஆட்சியர். ஷக்தி ஆராதனா இமயவரம்பன்.
நிச்சயம் அவள் வேலைக்கே அது ஆபத்தாய் முடியும். அதைத் தெரிந்தும் புகழ் அச்செயலைச் செய்யத் துணிந்திருந்தான் அவன் வேலையையும் அவன் பெயரையும் காக்க எண்ணி.
இதையெல்லாம் யாருக்கும் தெரியாது காதும் காதும் வைத்தவண்ணம் அவன் செய்து முடித்திருக்க, ப்ரமோத்தின் ஷேடோவும் சிவாவின் நம்பிக்கைக்கு உகந்த நபரும் மோப்பம் பிடித்து உரிய நபரிடம் சொல்லியிருந்தனர்.
“ஸர், அவர் பக்காவா ப்ளான் பண்ணி தான் எக்ஸ்க்யூட் பண்ணியிருக்க. இந்த ந்யூஸ் வெளிய வந்தா நிச்சயம் ஷக்தி மேடம் பெயர் போய் அவங்களுக்கு மேமோ (Memo) வரவும் வாய்ப்பு அதிகம். அவங்களா தான் செய்தது தப்புன்னு ஒரு ஸ்டேட்மெண்ட் கொடுக்கறமாதிரி சொல்லியிருக்காங்க. எல்லாமே வெல் ப்ளாண்ட்” என்று அறிக்கை ப்ரமோத்திற்கு பெண்ணழைப்பு முடிந்தவுடன் தான் வந்தது.
திருமண அவசரத்தைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, ஷக்தியிடம் பத்து மாதங்கள் கடந்த நிலையில் கையெழுத்து வாங்கியிருந்தான் என்பது ப்ரமோத் உட்பட அனைவரையும் அதிரச்செய்தது!
இதைப்பற்றி ஏதும் தெரியாது இருந்தனர் புகழின் வீட்டாட்கள்.
இங்கு புகழோடான திருமணத்தை முறித்து, சிவாவோடு திருமணம் என்று முடிவாகியிருப்பது கூட தெரியாது இருந்தனர்.
“இந்த கேடுகெட்டவளுக்காக நம்ம புகழோட கண்ணாலத்த ஏன் நிறுத்தோனும்? அதென் நீலா இருக்கே, குறிச்ச நேரத்துக்கு ரெண்டுக்கும் கண்ணாலத்த முடிச்சுக்கலாம்” என்றார் ஷண்முகம் பக்கத்துப் பெரியவர் ஒருவர்.
கற்பகத்தின் முகம் பிரகாசித்தது. அவரும் போட்ட இத்தனை டிராமாவும் இதற்குத் தானே.
கற்பகம், “ஆமா அத்தாச்சி, நம்ம புள்ளையோட வாழ்க்க இந்த ஒழுக்கம்கெட்டவளோட பாதியில நிக்க வேண்டாம்” என்று இரண்டு துளி கண்ணீர் சிந்தியபடி சொல்ல, பாரதிக்கு அதுவே சரியாகப்பட்டது.
“சண்முகோம் நீ என்னய்யா சொல்லுத, உம்மத் தங்கச்சி மவனுக்கு உம் மகள கொடுக்குதியா?” என்க,
“எம் மருமகனுக்காக உசிரையே கொடுப்பேன், பொண்ணக் கொடுக்க என்னய்யா வந்துச்சு” என்று அவரும் ஒருபுறம் நெஞ்சை நக்க, அவர்களின் திட்டம் நிறைவேறியது.
“புகழூ வந்தோன மொதவேளையா சொல்லி, அதுங்க வாரதுக்குள்ள மணவறையில உட்கார வைக்கோனும்” என்றார் ஷண்முகம் இணைப்பாய்.
ஆக, ஷக்தியின் சுபாவத்தைத் தெரியாது திட்டமிட்டிருந்தார், ஷண்முகம்.
அங்கு நடந்தது அனைத்தையும் காளிதாஸ், ஆராவமுதன், மேகா, லாவண்யாவிடம் சொல்லி முடிந்திருந்தான், ப்ரமோத்.
லாவண்யாவின் அழுகை கூட நின்றிருந்தது புகழ் அவர் பெண்ணை ஏமாற்றியதை நினைத்து. ரத்தம் கொதித்தது அவர்களுக்கு.
“அப்புறம் என்ன கருமத்துக்கு அவள லவ் பண்ணுறேன்னு இத்தன தூரம் கொண்டு வந்தான் உங்க பையன்? ஒரு சைன்காக இத்தன பண்ணினவன், அவனுக்கு வேற ஏதாவது பிரச்சனை வந்தா ஆராவ என்னவும் பண்ணமாட்டான்னு என்ன நிச்சயம்?” என்று கத்தினாள் மேகா.
நெஞ்சு பதறியது அவளுக்கு. இதையெல்லாம் தெரிந்தால் தாங்குவாளா ஷக்தி என்று பயந்து வந்தது அவளுக்கு.
“எனக்குப் பயமா இருக்கு அமுது, ஆரா தாங்க மாட்டாடா” என்ற கணவனிடம் அவள் சொல்லி அழ, அவனோ இறுகிப்போய் நின்றிருந்தான்.
“அதென் சொல்லுதேன் ஆராதனாவுக்கு கையோட சிவாவை முடிச்சிடுவோம். தனியா தவிக்க விட்டாதான் புள்ளையாள தாங்கிக்கிட முடியாது. சிவான்னா கூடவே இருப்பான்ல”
லாவண்யா, “அவனோன்னும் ஆல்ட்ரனேட் இல்லையே. அவன கட்டி வைங்கன்னு சொல்லுறீங்க, அவன்கிட்ட சம்மதம் கேட்டீங்களா? இல்ல என் பொண்ணுத் தான் ஒத்துக்கிட்டாளா? உங்க வீட்டம்மா என்ன சொன்னாங்க? புகழில்லேனா சிவான்னு இருப்பியான்னு கேட்டாங்க தான? இப்போ, இவனையே என் பெண்ணுக்கு கல்யாணம் பண்ணி வைக்க கேட்கறீங்க, வெட்கமா இல்லையா உங்களுக்கெல்லாம்? உங்க பாவத்த தொலைக்க இடமில்லேனா எங்கையோ போங்க. என் மக வாழ்க்கையில் உங்க பையன் விளையாடின வரை போதும். உங்க வீட்டு பையன என் பொண்ணுக்குக் கட்ட துளி விரும்பமில்ல எனக்கு, மேற்கொண்டு நாங்க பார்த்துக்கறோம்” என்று அதுவரை பேசாது இருந்தவர் ருத்ரதாண்டவமே ஆடிவிட்டார்.
ப்ரமோத், “அவங்க பேசினது எல்லாம் தப்பு தான். ஆனா சிவா மாதிரி ஆராவுக்கு யாரும் கிடைக்க மாட்டாங்க அத்த. என் மேல நம்பிக்க இருந்தா, ஆராவுக்குச் சிவாவையே கல்யாணம் பண்ணி வைப்போம்” என்றான் அத்தனை ஸ்தீரமாய்.
ஆராவமுதன், “அம்மா” என்று அவர் கைப்பிடித்து நின்றுவிட்டான்.
லாவண்யாவின் மனக்கொதிப்பு அடங்கவில்லை. எத்தனை ஆட்டங்கள், எத்தனை பொய்யான அன்பு வலையங்கள் உண்மை தெரிந்து ஷக்தி என்ன செய்வாள் என்று பெற்றவராக அவர் பதற, இவை அனைத்தையும் கேட்டவண்ணம் இருந்தாள், ஷக்தி ஆராதனா எந்தவித உணர்வுகளும் அற்ற ஜடமாய்.
***
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
20
+1
2
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


புகழ் தன்னை மட்டும் அல்லாமல் தன்னுடன் சேர்த்து சக்தியையும் சிக்கலில் மாட்டி வைத்துள்ளான் போலவே.
நம்மாழ்வாருக்கு இப்பொழுதாவது சிவாவின் மனநிலை புரிந்ததே.
குற்றஉணர்விலும் சக்தியை பேசிய பேச்சுகளின் கரை அகலவும் அவர் வேண்டிக்கொண்ட முடிவு சரியே.
இமயவரம்பனை போலவே சக்தியை தாங்கும் வல்லமை படைத்தவன் சிவா என்று அறிந்துள்ளார் நம்மாழ்வார்.
தங்கள் மகளை புகழுக்கு மணமுடிக்க அடுத்த வீட்டுப் பெண்ணை பற்றி எத்தனை கேவலமாக பேசிவிட்டனர்.
இவன் வேலையை காப்பாற்றிக்கொள்ள அவளது வேலையை ஆபத்தில் தள்ளி விட்டான்.
லாவண்யாவின் கவலையிலும் நியாயம் உள்ளதே. பெரியவன் இல்லைனா சின்னவன் என்று அவர்கள் சொன்னதை போல் நடந்தால் இன்னும் பேசுவார்களோ என்ற பயம்.