Loading

உயிர் – 11

“என்னோட பயர் இன்ஜின் மாம்ஸ் கிடையாது. ஆதவ் உன்னுடைய பயர் இன்ஜின் மாம்ஸ்” என்று பதிலுக்கு அவளருகில் கிசுகிசுத்திருந்தாள் ருக்மணி.

அவள் தான் ஆதவ்வை பயர் இன்ஜின் என்று கேலி செய்வதால் அப்படி கூறுகிறாள் என்று எண்ணிய அனுராதாவின் தலையும் தானாக ‘ஆமாம்’ என்பது போல் ஆடியது.

ஆனால், அவளின் விழிகள் சற்றும் அசையாது பாடிக்கொண்டிருக்கும் ஆதவ்வில் தான் பதிந்திருந்தது.

மூவருமே அவனை தான் பார்த்துக் கொண்டிருந்தனர்.

அனுராதா அங்கே பாடிக் கொண்டிருப்பது ஆதவ் என்பதையே மறந்து விட்டாள் போலும்.

தன் வலது கரத்தால் கன்னத்தை தாங்கியவாறு பார்த்துக் கொண்டிருந்தவளின் கருமணிகள் நொடியும் எங்கும் அசையவில்லை. அவனிலேயே நிலைத்திருந்தது.

ஆனால், அவளின் கவனம் முழுவதும் அவன் பாடலில் தான் லயித்திருந்தது.

கண்கள் திறந்து இருந்ததே தவிர, அவளின் பார்வை வட்டத்திற்குள் ஆதவ் வரவே இல்லை.

அவனின் குரலில் லயித்திருந்தவள், அதனோடு தனி உலகில் உறவாடிக் கொண்டிருந்தாள்.

ஆதவ் அவளை பார்த்துக் கொண்டே தான் பாடினான்.

அவளின் உடலுக்குள் ஊடுருவி உயிரை உருக்கும் குரலில் பாடினான்.

ஆனால், அதையெல்லாம் அவள் உணர்ந்தாளோ இல்லையோ.. அவனின் எதிர்பார்ப்பு பொய்க்காது அவனின் கட்டி இழுக்கும் காந்த குரலில் அவள் உருகி கரைந்து தொலைந்து போய்விட்டது என்னவோ உண்மை தான்.

“கோகிலமே நீ குரல் கொடுத்தால்

உன்னை கும்பிட்டு கண்ணடிப்பேன்.

…..

……

உன் காலடி எழுதிய கோலங்கள் புது

கவிதைகள் என்றுரைப்பேன்.

என்னவளே.. அடி என்னவளே…” என்றவன் அவளின் விழிகளை பார்த்துக்கொண்டே, “எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்” என்று முடித்திருந்தான்.

இதனை பார்க்கும் பொழுதே ருக்மணிக்கு அத்தனை மன நிறைவாக இருந்தது. தன் தங்கையின் வாழ்க்கை நிச்சயம் மகிழ்ச்சியாக அமையும் என்ற நம்பிக்கையும் தோன்றி விட்டது.

அதிலும், அவனின் பார்வையே அவள் மீது அவன் கொண்டிருக்கும் காதலின் ஆழத்தை வார்த்தைகள் அற்று உணர்த்தி இருந்தது.

அதை உணரும் நிலையில் அனுராதா இல்லாவிட்டாலும், ருக்மணி புரிந்து கொண்டாள். அந்த புரிதல் அவளுக்குள் பெரும் திருப்தியையும் கொடுத்தது.

அந்த இடம் முழுவதுமே பலத்த கரகோஷம் காற்றை துளைத்துக்கொண்டு காதுகளை நிறைத்திருந்தது.

அதில் தன்னிலை அடைந்த அனுராதா அவன் தன்னை தான் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பதை கூட உணராமல், “வாவ்!” என்றிருந்தாள் தன் அக்காவை திரும்பிப் பார்த்து.

அவளோ ‘எப்படி’ என்பது போல் தன் இரு புருவங்களையும் ஏற்றி காண்பிக்க.

அனுவும், “எப்படி?” என்றாள் ஆச்சரியம் கலந்த குரலில்.

“அண்ணா கொஞ்சம் நல்லா பாடுவாங்கன்னு எனக்கு தெரியும். பட், இவ்வளவு சூப்பரா படுவாங்கன்னு இப்போ தான் நானே பார்க்கிறேன்” என்றான் அகிலன்.

“நான் கொஞ்சம் கூட எக்ஸ்பெக்ட் பண்ணவே இல்லக்கா. உன் மாம்ஸ் வேற லெவல்!” என்று அவனுக்காக இவள் இங்கே புகழாரம் சூடிக்கொண்டிருக்கும் பொழுதே மீண்டும் அவனின் காந்த குரல் இவர்களின் செவிப்பறையில் ஆட்சி புரிய துவங்கியது.

“கள்ளுர பார்க்கும் பார்வை உள்ளுர பாயுமே..

துள்ளாமல் துள்ளும் உள்ளம் சல்லாபமே..

வில்லோடு அம்பு ரெண்டு கொல்லாமல் கொல்லுதே..

பெண் பாவை கண்கள் என்று பொய் சொல்லுதே..

…….

…….

ராஜ ராஜ சோழன் நான்..

எனை ஆளும் காதல் தேசம் நீ தான்..” என்றான் மீண்டும் அவளை ஊடுருவும் பார்வை பார்த்துக்கொண்டு.

இப்பொழுது தான் அவளின் உள்ளுணர்வு அவன் தன்னை தான் பார்க்கிறானோ என்ற கேள்வியையே எழுப்பியது.

அப்படி ஒரு கேள்வி எழுந்த மாத்திரமே அவளின் விழிகள் நொடிக்குள்ளாக ஒரு உணர்வு குவியலையே காண்பித்துவிட்டது.

தன் சிந்தனை போகும் திசையை உணர்ந்து முதலில் திகைத்து பெரிதாக விரித்து கொண்ட அவளின் விழிகள், பிறகு கொஞ்சமாக அதன் இயல்புக்கு மீண்டிருந்தது.

அவளின் ஒவ்வொரு மென் உணர்வுகளும் இவனுக்குள் ஆழமாய் பதிந்து கொண்டிருந்தது.

“ச்ச.. ச்ச.. அப்படி எல்லாம் இருக்காது. அவர் சென்டர்ல நிற்கிறதால நமக்கு அப்படி தோணுது. அவர் ஏன் நம்மள பார்க்க போறாரு. ஒரு வேளை, அக்காவை பார்க்கிறது நமக்கு நம்மள பாக்குற மாதிரி தோணுதோ?” என்று தனக்கு தானே ஏதேதோ சமாதானமும் செய்து கொண்டாள்.

அவளின் முகமே அத்தனை குதூகலத்தோடு பிரகாசித்தது. அனைவரும் மீண்டும் கரகோஷம் எழுப்ப, தானும் எழுந்து நின்று உற்சாகத்தோடு கை தட்டினாள்.

அவளின் செயலில் இவனுக்கு தான் சங்கடமாகி போனது. தன் நெற்றியை கட்டை விரல் கொண்டு நீவியவனின் இதழோ வெட்க புன்னகையை பூசிக் கொண்டது.

மைக்கை அவர்களிடம் கொடுத்துவிட்டு இவன் கீழே இறங்கி வரவும். அவனை அணைத்து விடுவித்த அகிலன், “வாவ் அண்ணா! ரொம்ப சூப்பரா பாடுனீங்க. கொஞ்சம் கூட எக்ஸ்பெக்ட் பண்ணவே இல்ல. அதுவும் இத்தனை பேர் முன்னாடி நீங்க போய் பாடுவீங்கன்னு சத்தியமா எதிர்பார்க்கல” என்று தன் மனதில் தோன்றியதை மறைக்காமல் கூறியிருந்தான்.

அவனை தொடர்ந்து, “ஆமா ஆதவ், ரொம்பவே நல்லா இருந்தது” என்றாள் ருக்மணி.

இருவருக்கும் சேர்த்து, “தேங்க்ஸ்” என்று மெல்லிய புன்னகையை உதிர்த்தவனின் விழிகள் தன்னிச்சையாக அனுராதாவில் படிய.

அவளுக்கோ என்ன சொல்வது என்றே தெரியவில்லை. அனைத்தையும் தான் இவர்களே கூறி விட்டார்களே. எனவே, எதுவும் கூறாமல் அமைதியாக முகம் கொள்ளா புன்னகையோடு நின்றிருந்தாள்.

அவள் வார்த்தைகளால் கூறாத வாய்மொழியை விட, முக மலர்வோடு வெளிப்படுத்திய விழி மொழியை ரசித்து உள்வாங்கிக் கொண்டான் ஆதவ் கிருஷ்ணா.

அதன் பிறகு மீண்டும் நால்வரும் அமர்ந்து இசை நிகழ்ச்சியை சற்று நேரம் பார்த்துக் கொண்டிருந்தனர்.

அனுராதா ருக்மணியின் காதில் கிசுகிசுப்பாக, “பரவாயில்லக்கா பயர் இன்ஜின் மாம்ஸ்குள்ள இவ்வளவு திறமையா.. என்னால நம்பவே முடியல. ரொம்ப கோவம் வருதேனு பார்த்தேன். ஆனா, நீ கோபப்பட்டா சமாதானம் செய்ய கைவசம் இப்படி ஒரு மெல்டிங் வாய்ஸ் வச்சிருப்பாருன்னு நான் நினைச்சு கூட பாக்கல. நிஜமாவே நீ ரொம்ப ரொம்ப லக்கி.. போர் அடிக்கும் போதெல்லாம் பாட்டு பாட சொல்லி கேட்டுகிட்டே இருக்கலாம்” என்று கிண்டல் செய்தாள்.

அதைக் கேட்ட அகிலனின் முகம் வாடி விட.

ஆதவ் இதழிலோ குறும்பு புன்னகை மின்ன. கீழ் அதரங்களை கடித்து தன் சிரிப்பை கட்டுப்படுத்தியவனின் விழிகள் அப்போது தான் தன் தம்பியை தழுவியது.

அவனின் வாடிய முகம் இவனுக்குள் வருத்தத்தை ஏற்படுத்த. சற்று நேரம் எதையோ சிந்தித்தவன் ஒரு முடிவோடு அவனை பார்த்தான்.

“சும்மா இரு அனு யார் காதுலயாவது விழுந்துட போகுது”.

“யார் காதுல விழுந்தாலும் ஒன்னும் கேட்க முடியாதே.. உங்களுக்கு தான் கல்யாணம் ஆகப்போகுதே.. அப்போ கல்யாணத்துக்கு அப்புறம் தினமும் ஒரே கச்சேரி தான்” என்று கண்சிமிட்டி அவள் வெகுளித்தனமாக கிண்டல் செய்து சிரிக்கவும். ருக்மணிக்கோ சங்கடத்தின் உச்சமாகி போனது.

“கச்சேரி தான பண்ணிட்டா போச்சு” என்று உள்ளுக்குள் எண்ணியவனோ சிரிப்பு பொங்க தன் தம்பியின் தோளில் கையை போட்டு, “கொஞ்சம் என்னோட வா” என்று தனியாக அழைத்து சென்று விட்டான்.

பெண்கள் இருவரும் இசை நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டு அமர்ந்திருக்க.

ஆண்கள் இருவரும் தனித்து சென்று பேசிக்கொண்டு இருந்தனர்.

“என்ன ஆச்சு அகில்? ஏன் ஒரு மாதிரி இருக்க?”.

“நத்திங் ப்ரோ ஐ அம் ஓகே” என்றான் தன் தோள்களை குலுக்கி சாதாரணமாக இருப்பது போல் காட்டிக்கொண்டு.

“உன் லவ்வரை நான் கல்யாணம் செஞ்சுக்க போறேன். அந்த வருத்தம் உனக்கு கொஞ்சம் கூட இல்லையா? அப்போ உன்னுடைய காதல் உண்மை இல்லையோ?” என்றதும்.

அவனை தன் விழிகள் தெறித்து விடும் அளவிற்கு பெரிதாக விழிகளை விரித்து அதிர்ந்து பார்த்தவன், “என்ன ப்ரோ சொல்றீங்க?” என்றான் குரலே வெளிவராத குரலில்.

“நான் என்ன சொல்றேன்னு உனக்கு புரியலையா.. ருக்மணிக்கும் எனக்கும் கல்யாணம் இல்லன்னு சொல்றேன்”.

இது அதிர்ச்சிக்கும் மேல் அதிர்ச்சியாக இருந்தது.

முதலில் தன் காதல் விஷயம் எப்படி தன் அண்ணனுக்கு தெரிந்திருக்கும் என்ற அதிர்ச்சி தோன்றியது என்றால், அடுத்ததாக அவன் கூறிய செய்தியை சற்றும் நம்பவே முடியவில்லை.

“வாட்!” என்றான் அதிர்வோடு.

அவனின் தோளில் தன் கையை போட்டு தன்னோடு நெருக்கிக்கொண்ட ஆதவ், “ஆமாண்டா உன்னோட தெய்வீக காதல் உனக்கு மட்டும் தான். ருக்மணி உனக்கு தான்னு சொல்றேன்”.

“ப்ரோ எனக்கு ஒண்ணுமே புரியல”.

அவனிடம் தானும், ருக்மணியும் இன்று காபி ஷாப்பில் பேசிய விஷயங்களை ஒன்று விடாமல் கூறினான் ஆதவ்.

அதைக் கேட்ட அகிலனுக்கு ஆனந்தம் ஒரு புறம் இருந்தாலும், அதிர்ச்சி ஒருபுறம் என திகைத்து தான் போனான்.

“என்னடா எவ்வளவு சந்தோஷமான விஷயத்தை சொல்லி இருக்கேன். இப்படி முழிக்கிற?”.

தன் காதல் கிடைத்து விட்டதையும் தாண்டி, அனுராதாவை எப்படி ஆதவ் காதலித்தான் என்ற அதிர்வு தான் அவனிடம் பெரிதாக தென்பட்டது.

“அண்ணா நீங்க எப்படி அனுவை?”.

தன் தலையை கோதிக்கொண்டே சற்று தூரத்தில் அமர்ந்திருந்த அனுராதாவை ரசனை பொங்க பார்த்தவன், “ஐ டோன்ட் நோ.. பட், ஐ லவ் ஹர்” என்றதோடு முடித்துக் கொண்டான்.

அவனின் பார்வையும், பேச்சும் இது உண்மையிலேயே ஆதவ் தானா என்ற சந்தேகத்தையே அகிலனுக்கு ஏற்படுத்தி விட்டது.

அதிலும், அவன் அனுராதவை பார்த்த பார்வையும், அவனின் குரலில் தென்பட்ட காதலோடு கூடிய அந்த மென்மையும் அவனுக்கு மயக்கம் வராத குறை தான்.

“ருக்மணிக்கு நான் ப்ராமிஸ் பண்ணி கொடுத்து இருக்கேன். அவளுக்கு தகுந்த மாதிரி நல்ல மாப்பிள்ளையை பார்க்கிறேன்னு சொல்லி இருக்கேன். அப்படி ஒரு நல்ல மாப்பிள்ளையா நீ இருப்பியா?” என்றதும் அவனின் கையை பிடித்துக் கொண்ட அகிலன், “அண்ணா என்ன இப்படி கேட்டுட்டீங்க.. எனக்கு ருக்மணினா உயிர். பல வருஷமா நான் அவளை காதலிச்சுட்டு இருக்கேன். இன்னைய வரைக்கும் நான் அவகிட்ட இதை பத்தி சொன்னது இல்ல. முதல் தடவை உங்ககிட்ட தான் என்னுடைய காதலை வெளிபடுத்துறேன். எனக்கு எல்லாமே அவ தான். அவ மட்டும் என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டா, அவளை என் கண்ணுக்குள்ள வச்சு பாத்துப்பேன்”.

“முக்கியமா அவங்க அப்பா போல இருக்காத மாப்பிள்ளை தான் அவளுக்கு வேணுமாம்”.

“ஐயோ அண்ணா! என்ன பேசுறீங்க நீங்க.. எனக்கு எல்லாமே அவ தான்னு சொல்லிட்டு இருக்கேன். நீங்க என்னடான்னா நான் அவளை விட்டுட்டு வேற பொண்ணு பின்னாடி போயிடுவேன்னு நினைக்கிறீங்களா? இந்த ஜென்மத்துல என்னுடைய முழு காதலும் அவ ஒருத்திக்கு மட்டும் தான்” என்று உணர்வு பொங்க கூறியவனின் விழிகளும் அவளை தான் தொட்டு மீண்டது.

“இந்த விஷயத்தை உன்கிட்ட இப்ப சொல்லக்கூடாதுனு தான் நினைச்சேன். இன்னும் கொஞ்ச நாள் சர்ப்ரைஸா வச்சிருக்கலாம்ன்னு நினைச்சேன். பட், அவளை பார்த்து பார்த்து சின்ன குழந்தை ஐஸ்கிரீமை பார்த்து ஏங்குற மாதிரி நீ பாக்குற பார்வையை என்னால சகிச்சுக்க முடியல. அதான் இப்பவே சொல்லிட்டேன்” என்ற ஆதவ்வை பார்த்து அசடு வழிந்தவாறு நின்று இருந்தான் அகிலன்.

ஆண்கள் இருவரும் தங்கள் வாழ்க்கை துணை விஷயத்தில் தெளிவாகி விட்டனர்.

தாங்கள் உருகி கரைந்து காதலிப்பவர்களை தான் மணம் முடிக்கப் போகிறோம் என்ற திருப்தியோடு இருக்க.

இங்கோ பெண்கள் இருவருக்கும் தாங்கள் மணக்க போகும் ஆண் மகன் யார் என்ற விஷயம் கூட தெரியாமல் இசை நிகழ்ச்சியில் லயித்துக் கொண்டிருந்தனர்.

Click on a star to rate it!

Rating 4.5 / 5. Vote count: 12

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
6
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்