Loading

யான் நீயே 45

மீனாள் அழுது அழுது உறங்கியிருந்தாள்.

அவள் வீட்டில் இருப்பவர்கள் பேசியதற்காக அழவில்லை. வருத்தம் கொள்ளவில்லை.

அவளுக்குத் தெரியும்… அவளுக்கும், வீரனுக்குமிடையேயான உறவு. நன்றாக இருக்கும்போது தனக்கு ஏன் இன்னும் குழந்தை தங்கவில்லை என்று அவளுக்குள்ளேயே சில வாரங்களாக எழும் கேள்வி இது. இதில் அடுத்து என்ன செய்ய வேண்டுமென்றும் அவளுக்குத் தெரியவில்லை.

பயிற்சிக்கு என்று அவள் செல்வதற்கு முன்பே இருவருமிடையே சுமூகமான உறவு தான். அப்போவே அவள் எதிர்பார்த்தது தான். குழந்தை உண்டாகிவிட்டால் அதை காரணமாக வைத்து பயிற்சிக்கு சென்றிட வேண்டாமென்றும் நினைத்தாள்.

அப்போதே அவள் எதிர்பார்ப்பு பொய்த்துப் போனதில் ஏமாற்றம் பரவினாலும், தங்களுக்கான நேரம் வரும்போது அனைத்தும் தானாக நடக்குமென்று இருந்தவளுக்கு இப்போது எதிர்பார்ப்பு ஆசையாகியிருந்தது.

அந்த ஆசை ஒவ்வொரு மாதமும் ஏமாற்றத்தைக் கொடுக்க… மனதில் வலி பரவத் தொடங்கியிருந்தது.

அதிலும் அங்கையை நிறை மாதமாக காணும் போது… மனதில் தானாக ஒரு வலி எழும். தன்னுடைய எண்ணத்தால் தங்கைக்கும், குழந்தைக்கும் ஏதும் ஆகிவிடுமோ என்று பயம் தோன்றும். அதனாலே அங்கையின் அருகில் சென்றிட மாட்டாள்.

“ஆதங்கந்தேன் கண்ணு. இந்த வூட்டோட சொத்தே அமிழ்ததேன். அவன் வாரிசை ஐஞ்சு வருசம் செண்டும் பார்க்க முடியலையேன்னு தான் பேசிப்புட்டாக. மனசுல வச்சிக்காதத்தா” என்று அபி அவளுக்கு சமாதானமாக சொல்லியிருந்தாலும், அந்த வார்த்தைகளுக்குள் இருக்கும் பொருளை அவளால் உணர்ந்துகொள்ள முடிந்தது.

வீட்டின் மூத்த வாரிசு வீரன். அனைவருக்கும் அவனென்றால் கொள்ளை பிடித்தம். இப்போது பிறந்த நாச்சியின் மகனுக்குக்கூட வீரன் என்றால் பிடித்தம். மாமா என்று லிங்குவை விட வீரனிடத்தில் அத்தனை ஒட்டுதல் அவன்.

அவனுடைய வாரிசை வீட்டிலிருப்போர் எதிர்பார்ப்பதில் தவறில்லையே.

மீனாளுக்கும் அவளது மாமனின் உதிரத்தில் அவனது சாயலில் குட்டி வீரனை பார்க்க வேண்டுமென்று ஆசை இருக்கத்தான் செய்கிறது. ஆனால் இதில் நாம் செய்வதற்கு ஒன்றுமில்லையே. அதுவாக நடக்கவேண்டிய ஒன்று.

பலவற்றை எண்ணியபடி அழுகையில் கரைந்தவள் உறங்கியுமிருந்தாள்.

அங்கையும், லிங்குவும் கூட ஆள்மாற்றி ஆள் உணவுண்ண அழைக்க வந்து அவள் தூங்கிக்கொண்டிருக்கவும் எழுப்பாது சென்றிருந்தனர்.

நேரமாக எல்லோரும் உறங்கச் சென்றிருந்தனர்.

அங்கை தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருக்க… லிங்கம் உறங்க அழைத்தும் அவள் செல்லவில்லை. அவனும் அவளுடனே உட்கார்ந்துவிட்டான்.

தொலைக்காட்சி ஓடிக்கொண்டிருந்தாலும், அங்கையின் கவனம் அதிலில்லை.

“என்ன ரோசனை அங்கை?”

“ஹான்… என்ன மாமா?”

“ஏன் உட்கார்ந்திருக்க? உறக்கம் வருதுத்தா!”

“மாமா வந்துப்புடட்டும் மாமா.”

அன்று வீரன் மிக தாமதமாகத்தான் வீடு வந்தான்.

அங்கையையும், லிங்கத்தையும் பார்த்த வீரன்,

“இந்நேரம் வரை என்னத்துக்கு முழிச்சிருக்க? நேரமானா உண்கிட்டு உறங்க வேண்டியதுதானே?” என்று அங்கையை கடிந்து கொண்டான்.

“நானும் கூப்பிட்டு பார்த்துப்புட்டேன். நீயி வரட்டும் சொல்லிட்டாண்ணே!” என்றான் லிங்கம்.

“சாப்பாடு எடுத்து வைக்கட்டுமா மாமா?” அங்கை கேட்டிட…

“நான் எடுத்து வச்சு உண்கிக்க மாட்டேனா?” என்ற வீரன் உணவு மேசை சென்றான்.

“தங்கம் சாப்பிட்டாளா?”

வீரனுக்கு உணவு எடுத்து வைத்த அங்கை,

“நீயி உண்கிட்டு கொண்டு போ மாமா” என்றாள்.

“என்ன நடந்துச்சு?” அங்கையின் முகம் பார்த்துக் கேட்டான்.

“நீயி சாப்பிடு மொத.”

“என்னடே நடந்துச்சு?”

“தெரியலண்ணே! என்கிட்ட எதுவும் சொல்லலையே!” என்றான் லிங்கம்.

“நான் சொல்றேன் சாப்பிடு மாமா மொத” என்ற அங்கை, எழ முயற்சித்த வீரனின் கை பிடித்து அமர வைத்தாள்.

“நாந்தேன் சொல்றேன் சொல்லறனே! பொறவு என்னத்துக்கு அவசரம்? சாப்பாட்டை வாயில் அள்ளி வைய்யீ மாமா” என்றாள்.

வீரனும் உண்டு முடித்து… கை கூட கழுவிடாது, “இப்போ சொல்லு?” என்றான்.

அங்கை மாலை நடந்ததை யார் என்ன பேசினார்கள் என்பதை ஒரு வார்த்தை மாறாது முழுதாக சொல்லிவிட்டாள்.

“அக்கா மொவமே உக்கி போச்சு மாமா” என்ற அங்கைக்கு கண்கள் கலங்கியது.

அவளால் மீனாள் பதில் சொல்ல முடியாது நின்ற நிலையை ஜீரணிக்க முடியவில்லை. அதுவும் அங்கு மகா கேட்டது அன்னையாக இருந்தாலும், அவளாலே ஏற்றுக்கொள்ள முடியவில்லை எனும் போது, மீனாளுக்கு எப்படி இருந்திருக்கும்.

வீரன் இறுகிப்போய் அமர்ந்திருந்தான்.

நெஞ்சம் கனத்துப் போனது.

இப்படியொரு சூழல் வருமென்று அவன் முன்பே அறிந்தது தான். ஆனால் இதிலிருந்து தன்னவளை மீட்க, தான் முதலில் திடம் பெற்றிட வேண்டுமென நினைத்த வீரன் மௌனமாகவே இருந்தான்.

“இப்போ என்னாச்சுன்னு இம்புட்டு பேச்சு பேசி இருக்காய்ங்க. அப்போவே எனக்கு போன் போட வேண்டியதுதானே? என்னவாம் அவங்களுக்கு?” என்று லிங்கம் கோபம் கொண்டு வேட்டியை மடித்துக்கட்டி, “எல்லாரும் இருக்கும்போதே சொல்ல வேண்டியதுதானே!” என்று அங்கையை கடிந்தான்.

“லிங்கு…”

வீரனின் ஒற்றை விளிப்புக்கு லிங்கம் அமைதியாகியிருந்தான்.

“நேரமாச்சுல… அங்கை பாரு சோர்ந்து தெரியுறா(ள்). கூட்டிட்டுப்போ! தூங்குங்க” என்ற வீரன் கை கழுவிட எழுந்து சென்றான்.

“இனி மாமா பார்த்துக்கும். நீயி வா மாமா” என்று அங்கை தான் லிங்கத்தை கூட்டிச் சென்றாள்.

கை கழுவி வந்த வீரன் வருத்தத்தோடு இருக்கையில் தலை சாய்த்து கண்களை மூடிக்கொண்டான். அவனால் இதனை அவனது தங்கப்பொண்ணுவிடம் எப்படி சொல்லிட முடியும்?

மூச்சினை ஆழ்ந்து இழுத்து வெளியேற்றியவன், வரவழைக்கப்பட்ட புத்துணர்ச்சியோடு மேசை மீது கூடையிலிருந்த மாதுளை பழத்தை எடுத்து முத்துக்களை பிரித்து எடுத்தவன், பால் விட்டு அரைத்து சுவைக்கு தேன் கலந்து குவளையில் ஊற்றி எடுத்துக்கொண்டு மேலேறினான்.

விடி விளக்குமின்றி அறையே இருளில் மூழ்கியிருந்தது.

கண்களை இறுக மூடித் திறந்தவன், விடி விளக்கை மட்டும் உயிர்பித்து மீனாளின் அருகில் சென்று அமர்ந்தான்.

காய்ந்த கண்ணீரின் தடம் அவளது கன்னத்தில். முகமே வீங்கி சிவந்து காணப்பட்டது. அம்முகமே அவனுக்கும் கண்ணீரை துளிர்க்கச் செய்திட, வேகமாக துடைத்துக் கொண்டான்.

தருவிக்கப்பட்ட புன்னகையோடு,

“தங்கம்” என்று அழைக்க… குரலில் தடுமாற்றம்.

“ஊப்…” காற்றினை ஊதி தன்னை சமன் செய்தான்.

“தங்கம்.” அவளை மெல்ல அசைத்து எழுப்பினான்.

ஒன்றுமே நடவாததைப்போல்,

“எப்போ வந்த மாமா? சாப்பிட்டியா?” எனக் கேட்டுக்கொண்டே கண்களை திறந்தவள், அவனின் மடியில் தலை வைத்துக்கொண்டாள்.

“ஏன் சாப்பிடல?”

“வொர்க் லோட் மாமா. செம டயர்ட். படுத்தேன். உறங்கிட்டேன் போல.” சரளமாக பொய் சொன்னாள். அவளின் வருத்தம் அவனை எந்தளவிற்கு கவலைகொள்ளச் செய்யுமென்று அவளுக்குத்தான் தெரியுமே!

‘வீரனின் மனம் துவண்டது. தனக்காக அவள் யோசித்துக் கூறும் பொய்யில்.’

“சரி… இந்த ஜூஸ்ஸை குடித்தா” என்று அவளை எழுப்பி அமர வைத்து தானே புகட்டினான்.

குடித்து முடித்தவள் மீண்டும் படுத்துக்கொள்ள, வீரன் அவளையே பார்த்தவாறு அமர்ந்திருந்தான்.

“நமக்கு எப்போ குழந்தை பிறக்கும் மாமா?”

திடீரென மீனாள் இந்த கேள்வியை கேட்பாளென்று வீரன் எதிர்பார்க்கவில்லை.

உடலில் அதிர்வு பரவி சீரானது.

“இப்போ என்னடாம்மா அவசரம். கொஞ்சநா போவட்டுமே.!” மனதை திடப்படுத்திக்கொண்டு கட்டிலில் கால் நீட்டி சாய்ந்து அமர்ந்து கூறினான்.

வேகமாக எழுந்து அமர்ந்தவள்,

வீரனின் மீசையை முறுக்கிவிட்டபடி…

“எனக்கு உன்னை மாறியே குட்டி வீரா வேணுமாட்டிக்கு மாமா” என்றாள்.

வீரனுக்கு இதயத் துடிப்பே நின்றது.

அவனுக்கும் தன் தங்கபொண்ணுவை மீண்டும் குழந்தையாக கையில் ஏந்திட வேண்டுமென்கிற ஆசை இருக்கிறது. ஆனால் உண்மை தெரிந்தது முதல் தன் ஆசையை வளர விடாது தவித்துக் கொண்டிருக்கிறான்.

“அதுக்கென்ன கொடுத்துட்டா போச்சுது” என்ற வீரன் அடுத்து அவளை பேச விடாது தனக்குள் மூழ்கிட வைத்து, அவளை சுயம் மறக்க வைத்தான்.

அடுத்தடுத்த நாட்களில் மீனாளை அதிகம் தனித்து விடாது உடன் சுற்றிக்கொண்டே இருந்தான். அதிலும் வீட்டில் அனைவரும் இருக்கும் நேரம் அவளைவிட்டு கொஞ்சமும் நகர்ந்திடமாட்டான். மீண்டும் அவளிடம் குழந்தையைப் பற்றி பேசி வருந்தச் செய்திடுவார்களோ என்று.

ஆனால் தன் மனைவி தனக்குத் தெரியாது உள்ளுக்குள் வருந்திக் கொண்டிருக்கிறாள் என்பதை வீரன் உணரவில்லை. அந்தளவிற்கு தன் வருத்தம் கணவனுக்கு தெரியாது தன்னைக் காட்டிக்கொள்கிறாள்.

“என்னவாம் மாமாக்கு? ரொம்பத்தேன் பொண்டாட்டி மேல லவ்வுசு?” என்று அங்கைக்கூட கிண்டல் செய்திட்டாள்.

“புருஷனுக்கும் பொண்டாட்டிக்கு நான் லவ் பன்றதை கேலி பேசுறதே சோலி” என்ற வீரன், “எம் பொண்டாட்டி. உனக்கு வேணுமின்னாக்கா உம் புருஷனை பண்ணு” என்றான்.

என்ன தான் வீரன் தன்னை சாதரணமாகக் காட்டிக்கொண்டாலும், உண்மை மீனாளுக்கு எப்போது தெரிந்துவிடுமோ என்கிற பயத்திலேயே இருந்தான்.

அவனின் ஒரே வேண்டுதல்,

கடைசி வரை இந்த உண்மை மீனாளுக்கு தெரியக்கூடாது என்பதே!

நாட்கள் நகர்ந்திட அங்கையின் வளைகாப்பு தினமும் வந்தது.

மீனாளும், நாச்சியும் சேர்ந்து தான் அங்கையை தயார் செய்து இருக்கையில் அமர வைத்தனர்.

மீனாள் தான் அங்கைக்கு வேண்டியவற்றை பார்த்து பார்த்து செய்தாள்.

மூத்த பெண்கள் ஆரம்பித்து வைத்து வளையல் பூட்டிட, நாச்சி முடித்து மீனாள் வளையல் போட அங்கையின் அருகில் செல்ல…

உறவினராக வந்திருந்த பெண்மணி ஒருத்தர்,

மீனாளை கரம் பற்றி தனியே அழைத்து வந்தார்.

உறவினர் கூட்டம் ஏராளம். வீடே நிறைந்திருந்தது. இதில் இதனை கவனித்தார் யாருமில்லை.

தனக்கு பின்னால் நின்ற மீனாள் எங்கேயென்று நாச்சி சுற்றி பார்த்திட, உறவினர் ஒருவருடன் அவள் செல்வது தெரிந்து நாச்சியும் பின்னால் சென்றாள்.

“சொல்லுங்கம்மா! எதுக்கு தனியா கூட்டிட்டு வந்திருக்கீங்க?”

மீனாள் கேட்டிட,

“நீயி செய்யுறது சரியில்லை மீனா” என்றார். அவர் எடுத்ததும்.

“என்ன சொல்றீங்க? எனக்கு விளங்கல.”

அவர் மீனாளை அழுத்தமாக பார்த்திட…

“நான் போய் வளையல் போடணும். எதுவாயிருந்தாலும் பொறவு பேசிக்கலாம்” என்று மீனாள் நகர,

“என்ன படிச்சு என்னத்த? கலெக்ட்டரானா போதுமா? இங்கிதம் வேணாம். இதெல்லாம் நாமளா புரிஞ்சு விலகி நிக்கிறதுதேன் சரி” என்றவர், “அஞ்சு வருசமாகியும் குழந்தை இல்லையே, நாம வளையல் போட்டு தாயுக்கும், சேய்க்கும் எதுமாச்சுன்னா என்னான்னு ரோசிக்கிறதுல?” என்று அவர் கேட்டிட.. மீனாளுக்கு உயிரே நின்றது.

“ஏய்?”

இதனை கேட்க நேர்ந்த நாச்சி கத்திட, அவ்விடமே அமைதியாகி அனைவரும் அவர்களை திரும்பி பார்த்தனர்.

“என்ன பேசுற நீயி? உன்னைய யார் கூப்பிட்டாய்ங்க. எதுக்கு தேவையில்லாம பேசிட்டு இருக்க?” நாச்சிக்கு மரியாதை எல்லாம் தூரம் சென்றிருந்தது.

“நான் என்னடிம்மா இல்லாததை சொல்லிப்புட்டேன். இங்க வந்தவலுவள்ள எவ இதைபத்தி பேசலன்னு சொல்லு பார்ப்போம்? என்னமோ போ! குழந்தை இல்லையே இவளோட பார்வை ஏக்கமா அந்தபொண்ணு மேல படிஞ்சாலும் குழந்தைக்கு ஏதும் ஆகுமேன்னு நல்லது நினைச்சு பேசுனாக்கா என்னையவே மரியாதையில்லாம பேசுற நீயி?” என்று அவர் கூறிட…

“நீயி பார்த்தாதேன் ஏதும் ஆகும். மொத கிளம்பு” என்றிருந்தான் லிங்கம்.

“லிங்கு…”

வீரன் அதட்டிட,

“சும்மா எப்பவும் பொறுமையா போவனும் அவசியமில்லை மாமா. எதுக்கு மாமாவை அதட்டுற நீயி” என்று முன் வந்த அங்கை,

“கூப்பிட்டோமின்னு வந்ததுக்கு நன்றி. கெளம்புங்க” என்று அந்த பெண்ணிடம் வாயிலை நோக்கி கைக்காட்டினாள் அங்கை.

அவரும் நொடித்துக்கொண்டு சென்றிட, ஒவ்வொருவராக கலைந்திட, அவ்விடத்தில் நிற்க முடியாது அழுது கொண்டே மீனாள் அறைக்குள் சென்று மறைந்தாள்.

***************

அழுகையோடு சென்ற மீனாளை தேற்றும் வகை தெரியாது சிலையென நின்றிருந்த வீரனை லிங்கம் தான் தொட்டு நிகழ் மீட்டான்.

“அண்ணே…”

வீரனின் கண்கள் கலங்கியிருந்ததோ?

லிங்கம் பரிதவித்துப்போனான்.

“ஒன்னுமில்லைடே! அவள் அழுதாளா… இங்க” என்று நெஞ்சில் உள்ளங்கை வைத்து தேய்த்தவன், “என்னவோ பண்ணுதுடே” என்று அதற்கு மேல் முடியாது லிங்கத்தை கட்டிக்கொண்டு தம்பியின் தோளில் முகம் மறைத்து கண்ணீர் சிந்தினான்.

லிங்கத்திற்கு யாரோ உயிரை உருவும் உணர்வு.

இதுவரை லிங்கம் தான் வீரனிடம் ஆதரவு தேடியிருக்கிறான். மீனாளுக்கு அடிபட்ட அன்றும், இன்றும் வீரனை அவனால் கண்ணீர் நிலையில் காண முடியவில்லை. வீரனை சுற்றி கைகளால் அரணிட்டவன், பிடியில் அழுத்ததைக் கூட்டினான்.

அங்கிருந்த அனைவருக்கும் மனம் விம்மியது.

“அய்யோ! என் மவராசன் அழுவுறாய்ங்களே!” என்று மீனாட்சி புலம்பிட,

வீரனைச்சுற்றிக் கூடிவிட்டனர்.

“அப்பு…” பாண்டியன் மகனின் தோள் தொட்டிட…

முகத்தை லிங்கத்தின் தோளிலே தேய்த்து துடைத்தவனாக,

“ஒன்னுமில்லைங்க ஐயா” என்று நிமிர்ந்து நின்றான்.

“நாம வேணுமின்னா ஆஸ்பத்திரிக்கு போயி வருவோமா கண்ணு?” மகா கேட்டிட, அவரை வேண்டாமென அழுத்தமாக பார்த்தவன்.

“குறை என்கிட்டதேன்” என்றான்.

மீனாட்சி “ஆத்தே” என்று நெஞ்சில் கை வைத்திட…

“பொய் சொல்லாத அப்பு” என்று அபி தலையில் தட்டிக்கொண்டு அழுதார்.

“என்னத்துக்கு இந்த பொய்யின்னு தெரியல… ஆனால் இதுக்கு பொறவு இன்னொருவாட்டி இதை சொல்லாத அமிழ்தா.” மருதன் இறைஞ்சலாகவேக் கூறினார்.

“அப்போ இனி குழந்தையை பத்தி அவகிட்ட யாரும் பேசக்கூடாது. மீறி பேசினால் ரெண்டேறும் தனியா போயிடுவோம்” என்றவன், அதிர்ந்து நின்றவர்களை பொருட்படுத்தாது இரு அடிகள் வைத்து திரும்பி…

“அவ என்னுல பாதியில்லை, மொத்தமும் அவதேன்… அவளை இன்னொருவாட்டி யாரும் அழ வச்சிங்க. நான் உசுரோட இருக்க மாட்டேன். இல்லாத ஒன்னை நினைச்சு வெசனப்படாம… ஒன்னுக்கு ரெண்டா வரப்போறதை நினைச்சு சந்தோஷப்படுங்க” என்று அங்கையின் வயிற்றை பார்த்து சொல்லிவிட்டு விடுவிடுவென சென்றுவிட்டான்.

“அமிழ்தன் என்னத்தையோ நம்மக்கிட்ட மறைக்கிறாப்புல இருக்குங்க.” அபி பாண்டியனிடம் சொல்ல…

“எதுவாயிருந்தாலும் அவனே சரி செஞ்சிப்புடுவான்” என்ற பாண்டியன், “இனி இதைப்பத்தி யாரும் பேசாதீங்க” என்று நகர்ந்தார்.

மகா என்னவென்று தெரியாது அழுது புலம்பிட…

“உங்களுக்கெல்லாம் அவீங்க ரெண்டேறு மனசும் புரியாதா? ஏம்மா இப்படி கஷ்டப்படுத்துறீங்க? என் மாமா அழுது பார்க்க வச்சீட்டிங்கல” என்ற அங்கை, “எதுக்கு மாமா மரமாட்டம் பார்த்துகிட்டு சும்மா நிக்குற” என்று லிங்கத்திடமும் தன் கோபத்தைக் காட்டினாள்.

“வயசானா என்ன பேசனுமின்னு தெரியாதுங்கிறது சரியாத்தேன் இருக்கு. அந்த பொம்பளை அந்தப்பேச்சு பேசுது. நம்ம புள்ளைய பேச அவ யாருன்னு குடுமியைப் பிடிச்சு ஆயாமல் வேடிக்கை பார்த்துகிட்டு நின்னுபோட்டு இப்போ என்ன புலம்பல் வேண்டிக்கடக்கு” என்று நாச்சியும் தன் பங்கிற்கு கத்திவிட்டு, மகனை தூக்கிக்கொண்டு பிரேமினையும் கூட்டிக்கொண்டு சென்றுவிட்டாள்.

நாச்சி அன்று மீனாட்சியும், மகாவும் பேசியதை அங்கையின் மூலம் அறிந்து கோபம் கொண்ட போதே, பிரேம் தான் சண்டை வேண்டாமென்று அவளை அமைதிப்படுத்தியிருந்தான். இன்று என்ன முயன்றும் அவளால் கோபத்தை அடக்க முடியவில்லை. இதற்கு மேலும் ஏதும் பேசிவிடுவோமென அஞ்சியே சென்றுவிட்டாள்.

“இப்படி ஊர் பேசுமின்னுதேன் அன்னைக்கு அப்படி பேசினோம். அதுவே இப்போ நடந்துப்போச்சே. இனி என்ன குறையோன்னு ஆளாளுக்கு பேசுவாலுங்களே” என்று மீனாட்சி அப்போதும் விடாது அரற்றிட… அருகிலிருந்த சொம்பினை எடுத்து விசிறியடித்தான் லிங்கம். ஆத்திரமாக. சுவற்றில் பட்டு தரையில் உருண்டு சுழன்று நின்றது.

அதன் சத்தத்தில் மீனாட்சியின் வாய் கப்பென்று மூடிக்கொண்டது.

“நீயி போய் செத்த நேரம் உறங்கு. அசந்து தெரியுற” என்று அங்கையிடம் சொல்லிய லிங்கம் மற்றவர்களிடம் எதுவும் சொல்லாது ஹோட்டலுக்கு புறப்பட்டுவிட்டான்.

அங்கை மெல்ல மாடியேறி வர, வீரனின் அறை மூடியிருந்தது.

பெருமூச்சோடு தனதறைக்குள் சென்றவள் ஆடை மாற்றி படுத்துக்கொண்டாள்.

வீரன் சொல்லாது மறைக்கும் விடயம், அதுவும் தன்மீது தயங்காது குறை சொல்லிடவே… நிச்சயம் மீனாளுக்குத்தான் ஏதோ என்று அவள் கண்டு கொண்டாள்.

ஆனால் வீரனே மறைக்க நினைத்திடும்போது தானேதும் கேட்டுவிடக் கூடாதென முடிவெடுத்தவளாக உறங்கிப்போனாள்.

வீரன் வந்தது முதல் அவனை கட்டிக்கொண்டு அழுது கொண்டிருக்கிறாள் மீனாள்.

அவளால் இன்னமும் சில வார்த்தைகளை ஜீரணிக்க முடியவில்லை.

நேரம் தான் ஓடியது தவிர அவள் அழுகையை நிறுத்துவதாக இல்லை. வீரன் அதட்டலாகவும், கொஞ்சலாகவும் எவ்வளவோ சொல்லி பார்த்தும் அவளது கண்ணீர் மட்டும் நிற்கவில்லை.

“தங்கம்…” வீரனின் குரல் அழுகையில் தோய்ந்து கலங்கி வெளிவர,

அவனிலிருந்து பிரிந்தவள், வேகமாக அவனது அதரத்தை தனக்குள் விழுங்கி முத்தத்தை தொடர்ந்தவள், அவனுள் மொத்தமாக புதைந்த பின்னரே கரை சேர்ந்தாள்.

அவளின் வலிகள் யாவுக்கும் அவன் ஒருவனே மருந்தாவான்.

தன் மார்பில் களைத்து உறங்கும் மீனாளின் நெற்றியில் முத்தம் வைத்தவன்,

‘உன்கிட்ட இதை எப்படி சொல்றது தங்கம்? சொன்னா தாங்குவியா?’ உள்ளுக்குள் மருகினான்.

மாலை போல் கண் விழித்த மீனாள்,

தன்னை அணைத்தபடி சன்னல் வழி எங்கோ வெறித்துக் கொண்டிருந்த வீரனின் கன்னத்தில் எம்பி முத்தம் வைத்தவள்,

“உறங்கலையா மாமா?” எனக் கேட்டாள்.

“இப்போதான் விழிச்சேன்” என்றவன் தன்னுடைய அணைப்பைக் கூட்டினான்.

“இனி அழுவாத மாமா. அது இன்னும் வலியாவுது. நான் அழுதா நீயி ஆயிரம் வார்த்தையில ஆறுதல் சொல்லணுமின்னு அவசயமில்லை. ஒத்த முத்தம் தா. அது போதுமாட்டிக்கு உன் தங்கப்பொண்ணுக்கு. இனி நானும் எதுக்காகவும் அழமாட்டேன். சரியா?” என்றாள்.

அவளின் நெற்றி முட்டியவன்,

“நமக்கு குழந்தையே இல்லைன்னாலும் நீயி அழுதது இதுதேன் கடைசியா இருக்கணுமாட்டிக்கு” என்றவனின் வாயில் கை வைத்து மூடியவள்…

“நமக்கு குழந்தை பொறக்கும் மாமா. என்ன கொஞ்சம் தாமதமாவுது. இனி யார் சொன்னாலும் கண்டுக்க மாட்டேன். வரப்போ வரட்டும். ஆனால் கண்டிப்பா நமக்கு குட்டி வீரா வருவான். எனக்கு நம்பிக்கை இருக்கு” என்றாள்.

அவளின் நம்பிக்கை பொய்த்துவிடக் கூடாதென்று தான் வீரனும் நினைக்கிறான்.

காலப்போக்கில் தானாகவே சரியாகிவிடுமென மருத்துவர் சொல்லியிருக்கவே, கடந்து சென்ற வருடத்தில் சரியாகியிருக்கலாம் என்று இந்த நொடி வரை மீனாளிடம் உண்மையை சொல்லாதிருக்கிறான்.

ஒரு முறை டெஸ்ட் செய்துவிட்டால் சரியாகிவிட்டதா இல்லையா தெரிந்துவிடும்.

சரியாகியிருந்தால் பரவாயில்லை. குணமாகாது இருந்துவிட்டால்? இதனை மீனாளுக்குத் தெரியாது பரிசோதித்து பார்த்திட முடியாது. அந்த வகையில் அவள் அறிய நேரிட்டால் என்னாகுமென்று வீரனுள் இருக்கும் பயமே மீனாளுக்கு பரிசோதனை செய்து பார்க்க வேண்டுமென்பதை தவிர்த்துக் கொண்டிருக்கிறான்.

“எனக்கு ஆறு மணிக்கு ஒரு மீட்டிங் இருக்கு மாமா! மினிஸ்டர் வீட்டுக்கு போவனும். கெளம்பு. டிராப் பண்ணிடு” என்று எழுந்தவளை எழுவிடாது, ஒரு ஆலிங்கினை நடத்தியே விடுவித்தான்.

இருவருக்குமே தவிப்புகள் அடங்குமிடம் அவர்களின் காதல் தான்.

மீனாள் குளித்து வருவதற்குள் தயாராகியவன், மீனாளின் முந்தைய மருத்துவ கோப்புகளை அவளுக்குத் தெரியாது எடுத்துக்கொண்டான்.

மீனாளை அமைச்சர் மாளிகையில் இறக்கிவிட்டவனிடம்,

“ஒரு மணி நேரத்தில் வந்து கூட்டிக்கோ மாமா” என்று உள் நுழைந்தவள் மறையும் வரை பார்த்திருந்தவன், நேராக மருத்துவமனைக்குத்தான் வந்தான்.

ஏற்கனவே மருத்துவரை பார்க்க முன்பதிவு பெற்றிருந்ததால் வந்ததும் மருத்துவரின் முன் அமர்ந்திருந்தான்.

மீனாளின் மருத்துவ கோப்பினை அவர் முன் வைத்தான்.

“இப்போ குணமாகியிருக்க வாய்ப்பிருக்கா டாக்டர்?” அவனின் முகத்தில் தெரிந்த பரிதவிப்பு மருத்துவரையே தாக்கியது.

“நான் தான் அப்போவே சொன்னனே வீரன், கண்டிப்பா இது தன்னாலே குணமாகக்கூடியதுன்னு. முறையான உணவுமுறை உடற்பயிற்சி மூலமாக இப்போ சரி ஆகியிருக்கலாம்” என்றார்.

“அப்போ ஏன் டாக்டர் கன்சீவ் ஆகல?”

“ஆயிரம் மருத்துவ வளர்ச்சிகள் வந்தாலும் சிலது இயற்கையின் கையில் தான் இருக்கு வீரன். செயற்கை முறையில் ஏன் தங்கலன்னு கேட்டால் என்னால் பதில் சொல்ல முடியும். இதில் எப்படி சொல்றது?”

மருத்துவரின் கேள்வி அவனுக்கும் சரியாகப்பட்டது.

மௌனமாக இருந்தான்.

“வேணுன்னா ஒருமுறை அவங்களுக்கு டெஸ்ட் எடுத்து பார்த்துட்டு… முடியவே முடியாதுன்னா, வேற முறையில் ட்ரை பண்ணலாம் வீரன்” என்றார் மருத்துவர். இதற்கு மாற்றுவழி இருப்பதாக.

“டெஸ்ட் எடுத்தால் அவளுக்குத் தெரிஞ்சிடுமே டாக்டர்” என்ற வீரன் “வேற வழின்னா?” என்று கேள்வியாக நோக்கினான்.

“உங்களோட உயிரணுவை இன்னொரு பெண்ணின்…” அவர் முடிக்கவில்லை,

“என் நிழல் கூட அவள் ஒருத்திக்கு மட்டுந்தேன் சொந்தம் டாக்டர்” என்று வெடித்திருந்தான்.

“இது உங்க விருப்பம் வீரன். மருத்துவரா இதற்கு அடுத்து என்னன்னு சொன்னேன். அவ்வளவு தான்” என்றார் அவர்.

“நீங்க ரொம்ப காம்ப்லிகேட் பண்ணிக்கிறீங்க வீரன். சின்ன டெஸ்ட். வாய்ப்பிருக்கா இல்லையா தெரிஞ்சிடும். ஏன் பயப்படுறீங்க?”

“இது உங்களுக்கு சொன்னா புரியாது டாக்டர்” என்றவன், “சரியாகியும் இருக்கலாம் தானே?” எனக் கேட்டான்.

“நீங்க எத்தனை முறை கேட்டாலும், ஒரே பதில் தான் வீரன். குணமாகியிருக்கலாம். நிறைய சான்சஸ் இருக்கு” என்றார்.

“அப்போ குணமாகியிருந்தால் கண்டிப்பா குழந்தை பிறக்கும்ல?”

“கண்டிப்பா.”

வீரனின் மனநிலையை புரிந்துகொண்ட மருத்துவர் மெதுவாக அனைத்து விளக்கங்களும் கொடுத்து, அவனை சமாதானம் செய்து தெளிந்த பின்னரே அனுப்பி வைத்தார்.

வீரனின் அலைப்புறுதல்கள் யாவும் மருத்துவரிடம் பேசிய பின்னர் மட்டுப்பட்டது.

இனி யாவும் இறைவனின் கையில் என்று மொத்தமாக சராணாகதி அடைந்துவிட்டான்.

சின்ன பரிசோதனை. செய்து பார்த்துவிட்டால் எவ்வித கலக்கமும் இருக்காது. ஆனால் அதில் அவனவளின் உயிர் அல்லவா பொதிந்துள்ளது. சாதகமற்று முடிவு வருமாயின் மரிக்கப்போவது அவனவள் அல்லவா? அதற்கே இருக்கும் எளிய வழியை விட்டு, இல்லாத பாதையை தேடி முட்டி மோதிக்கொண்டிருக்கிறான்.

மீனாள் அமைச்சருடனான கூட்டம் முடிந்து அழைப்பதற்கு முன் அங்கு சென்றுவிட்டான். கட்டிடம் உள்ளே கூட செல்லவில்லை. வெளியில் மரத்தடியில் வண்டியை நிறுத்தி அதில் சாய்ந்து நின்றுகொண்டான்.

தான் வந்த விடயம் முடித்து வெளியில் வந்த மீனாள், கணவனை கண்டு அருகில் செல்ல… இருக்கும் இடம் மறந்து அவளை அணைத்துக்கொண்டான்.

“என்னாச்சு மாமா?”

“எதுவும் கேட்காத தங்கம். இப்போ எனக்கு இது தேவை” என்றவன் மிட்ச மீதி தவிப்பையும் அவளிடம் இறக்கி வைத்த பின்னர் தான் விலகினான்.

“நல்லவேளை மாமா இருட்டிடுச்சு. இல்லைன்னா எவனாவது போட்டோ எடுத்திருப்பான். பொறவு நாளைக்கு தலைப்பு செய்தி நாமதேன். மாவட்ட ஆட்சியர் கணவருடன் வெட்ட வெளியில் காதல் செய்யும் மாயம் அப்படின்னு கொட்டை எழுத்தில் போட்டிருப்பானுங்க” எனக்கூறி சிரித்தாள்.

வீரனுக்கும் அவளின் சிரிப்பு தொற்றிக்கொண்டது.

“வாலு… சேட்டத்தா உனக்கு” என்று அவளின் கன்னம் கிள்ளியவன், “நீ ஓகே தானடாம்மா?” எனக் கேட்டான்.

“உன் பக்கட்டு நான் நல்லாதேன் இருக்கேன் மாமா” என்றவளிடம் கண்ணுக்கு எட்டாத புன்னகை.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 38

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
35
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

3 Comments

  1. அவர்களின் தீரா நேசம் : கொள்ளை அழகு…