
பெண்ணழைப்பு முடிந்த நிலையில் இன்னும் சில புகழ் பக்கத்துச் சடங்குகள் பாக்கி இருந்தனர்.
திருமண மண்டபம் முழுவதும் அத்தனைக் களைக்கட்டி இருந்தது. சொந்தங்களும் நட்புகளும் சூழ, திரும்பும் இடங்களில் எல்லாம் ஷக்தி – புகழின் புகைப்படங்கள் மண்டபத்தில் இருந்த எல்.ஈ.டி திரையில் மின்னிக்கொண்டிருந்தது.
பணத்தின் செழுமை பார்க்கும் இடங்களிலும் உணவின் தரத்திலும் ஷக்தியிடத்திலும் நிரம்பி வழிந்தது. அதைவிட பெண்ணவளுக்குக் கொடுக்க வேண்டிய சீர் வரிசை அனைத்தும், மணமேடைக்குப் பக்கமாகக் குட்டியாக மேடை அமைத்து அதில் அணிவகுத்திருந்தனர்.
வெள்ளி, பித்தளை, வெண்கலம், எவர்சில்வர் சாமான்கள், மரப்பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள், புகழுக்கும் ஷக்திக்கும் தேவையான துணிகள், ஷக்திக்குப் பிள்ளை பிறந்தால் அந்த குழந்தைக்கு உண்டான பொருட்கள், துணிகள் என்று அது ஒருபுறம் நீண்டிருந்தது.
மாப்பிள்ளை பெண்ணிற்கு நலுங்கிட்டு முடிய, “அமுதா, மேகா கூப்பிட்டா, போய் பாரு” என்று மேடைக்கு வந்திருந்தான், ப்ரமோத்.
அவன் முகத்தில் ஏதோ ஒருவித யோசனை. மேடையில் இருக்கிறோம் என்ற கவனம் இம்மி கூட இல்லை அவனிடம். அதைக் கவனித்துவிட்டாள் அவன் மனைவி.
“என்ன ப்ரமோ” என்று அவனிடம் வர,
“ஜானு, ஆரா கூடவே இரு. புகழ் பேசனும்னு சொன்னா அலோ பண்ணாத” என்க அதிர்ந்தாள் அவள்.
நிச்சயம் முடிந்த இந்த இடைப்பட்ட ஆறு மாதங்களில் ஷக்தியின் காதல் தீவிரத்தைப் பார்த்தவளால் அவளை அடக்க முடியும் என்று தோன்றவில்லை.
“என்னங்க?”
“ஒரு ப்ராப்ளம். நீ எதையும் அவகிட்ட காட்டிக்காத, கல்யாணம் நல்லபடியா முடிஞ்.. ம்கூம்.. நத்திங், நீ அவ கூட இரு” என்றுவிட்டு ஷக்தியைத் திரும்பிப் பார்த்தான்.
அத்தனை பூரிப்புடன், வேறு எந்தவொரு எண்ணமும் இல்லாது அத்தனை ஈடுபாட்டுடன் புகழின் அருகே முகம் சிவக்க நின்றிருந்தாள் பெண்ணவள்.
புகழும் அவளுக்கு இணையான ஆனந்த பெருக்கில் நின்றிருந்தான் அவன் காதல் பெண்ணை(?) கரம் பற்றப்போகும் எண்ணத்தில்.
எல்லா சடங்கும் முடிய மணி இரவு ஒன்பதைக் கடந்திருந்தது. அதற்குப் பின்னர், இருவரையும் ஜோடியாய் சில புகைப்படங்கள் எடுத்தனர்.
“கொழந்தய வெச்சிட்டு இன்னும் தூங்காம என்ன செய்யற மேகா? போ, போய் தூங்கு. சின்னப்பா முழிச்சக்கப் போறான்” என்றுவிட்டார் லாவண்யா.
குழந்தை துருவ் இமயவரம்பன் பிறந்து ஒரு மாதம் ஆகியிருந்தது. ஷக்தி அழுத்தமாய் சொல்லிவிட்டாள், திருமணம் மேகாவிற்குக் குழந்தை பிறந்த பின்னர் தான் என்று.
அதற்காகவே காத்திருந்து ஆறு மாதங்கள் சென்று இதோ இப்போது அவள் ஆசைப்பட்டது போலவே அவளின் வாழ்வின் முக்கிய நிகழ்வும் நடக்க இருக்கிறது.
நேரம் சரியாக நள்ளிரவு பன்னிரெண்டு.
ப்ரமோத்திற்கு தெரிந்த செய்தியும் சிவாவிற்குக் கிடைத்த ஆதாரங்களும் கிட்டத்தட்ட ஒன்றாக இருந்தது.
ப்ரமோதாகட்டும் சிவாவாகட்டும் இருவரும் யோசித்தது ஷக்திக்காக மட்டுமே. ஆனால் ப்ரமோத் அளவிற்குச் சிவாவிடம் பொறுமை இல்லை.
இப்போதே புகழைக் கிழித்தெடுக்க வேண்டும் என்ற ஆத்திரம் கொண்டு அவன் அறைக்குச் சென்றான்.
கையிலிருந்தக் கத்தைக் காகிதங்களைக் கிட்டத்தட்ட அவன் முகத்தில் விட்டடித்திருந்தான், சிவனேஷ் வீரபத்திரன்.
“வெட்கமா இல்ல உனக்கு? எதுக்கு இத்தன படிச்சு இந்த யூனிபார்ம் எல்லாம். ஒன்றை வருஷம், ஒன்றை வருஷம் நீ அவள ஏமாத்தியிருக்க. இதுக்கு உன் மேல கேஸ் போடலாம்”
ஒரு நிமிடம் அதிர்ந்துவிட்டான் புகழேந்திரன். இவனுக்கு எப்படித் தெரிந்தது என்றொரு புறம் படபடப்பு வேறு.
இருந்தும் அதையெல்லாம் மறைத்தபடி, “போடு, போடுடா. என்னோடச் சேர்ந்து அவ மானமும் தான் போகும். நான் என்ன வேணும்னா பண்ணே? ஒரு எவிடென்ஸ் அதுக்காகத் தான் இத்தன பிரச்சினை. இதுல வெட்கப்பட ஒரு வெங்காயமும் இல்லை! நீ இப்போ வரலேனா எல்லாம் ஸ்மூத்தா போயிருக்கும். சைக்” என்று தலையில் அடித்துக்கொண்டான், புகழேந்தி.
”என்ன ஸ்மூத்தாவா? அண்ணான்னு கூட பார்க்க மாட்டேன்டா. அவள ஏமாத்தி சைன் வாங்கியிருக்க, அது தெரியாம அவளும் உன்ன நம்பி பின்ன வந்திருக்கா. இதுவே ஒரு அப்பன்ஸ். இதுயெல்லாத்தையும் விட அவள எப்டிடா ஏமாத்த தோனுச்சு உனக்கு? எவ்வளவு லவ் பண்ணுறா உன்ன? ஒடஞ்சிட மாட்டாளா” என்றவன் குரல் கம்மியது.
“ஆமா ஏமாத்து வேல தான் இது. என்ன செய்ய சொல்லுற? என் வேலையவிட இது ஒன்னும் பெரிசில்லை. ஒரு ஸாரி கேட்டா ஆராதனா சமாதானம் ஆகிட போறா. நீ தான் இப்போ நடுவுல புகுந்து இத்தன குடையுற” என்று சுவரில் குற்றியவன் தம்பியைப் பார்த்தபடி,
“ஆராதனாவுக்குத் தெரியுமா” என்றான் அவனை ஆழ்ந்து பார்த்தவண்ணம்.
புகழேந்திரன் மனதில் முதலில் ஷக்தியின் மீதான ஈர்ப்பு மட்டுமே இருந்தது. ஆனால் நாள் போக்கில் மெல்ல அவனுக்கும் காதல் வந்திருந்தது ஷக்தியிடம். அதை அவன் ஒற்றுக்கொள்ளவும் தயங்க மாட்டான். இருந்தும் பகிரங்கமாகச் சொல்லும் ஆண்மகன் அவன் இல்லை.
அதுதான் வினை!
அவன் ஆராதனா அவன் கைவிட்டுப் போக முழுக்க முழுக்க காரணமாகப் போவதும் அவனின் இந்த ஒரு குணத்தினாலேயே தான்.
சிவாவின் மௌனமே அவனுக்கான விடையைக் கொடுத்திருக்க, “இனியும் வாயத் தொறக்காத. ஆராதனாகிட்ட எப்படி சொல்லனுமோ அப்படி சொல்லிக்கறேன். தேவையில்லாம எங்க நடுவுல நீ வராத. இல்ல நான் சொல்லுவேன்னு சொன்னேனா, உன் ஷக்தி தான் கம்பி எண்ணுவா” என்றவன் முகத்தில் மிதமிஞ்சிய கோபம்.
“இருக்காத இங்க, கெளம்பு. வழக்கம் போல இருக்கற எடம் தெரியாம இருந்துக்க, முன்ன வந்து என் மூட ஸ்பாயில் பண்ணாத” என்றுவிட்டு தண்ணீரைப் பருகினான் புகழேந்திரன்.
அவனின் மறுபக்கம். அது இப்படி தான் மற்றவரைக் குத்திக் கிழிக்கும். அதைவிட அவன் அளவிற்கு அவனை நல்லவனாகக் காட்டிக்கொள்ள, எத்தனை பேரின் இருதயத்தையும் துளையிட்டு தனக்கான சாதகத்தை எடுத்துக்கொள்வான்.
சிவாவிற்கு எல்லாம் விட்டுவிட்ட உணர்வு. என்ன செய்ய? இன்னும் நான்கு மணிநேரத்தில் திருமண சடங்குகள் ஆரம்பம் ஆகிவிடும். விதியிட்ட வழி என்றும் அவனால் இருக்க முடியவில்லை.
புகழுடன் பேசிவிட்டு வந்தவனுக்கு
அத்தனை அழுத்தம். என்ன செய்துவிட்டான் ஷக்தியை என்று நினைக்க நினைக்க மனது ஆற மறுத்தது.
எத்தனை பெரிய துரோகம். இதைத் தாங்குவாளா ஷக்தி? என்று எண்ணம் செல்ல, கண்களை இறுக மூடி நின்றுவிட்டான்.
நிச்சயம் அவளுக்குத் தெரிந்தால் எப்படி இதை எடுத்துக் கொண்டு நடப்பால் என்பதை நினைக்கவே பதறிக்கொண்டு வந்தது.
புகழ் மேல் அவள் கொண்டுள்ள காதல், அதுவேறு அவனை வதைக்க எதுவும் செய்ய முடியாத கையறு நிலையில் தவித்துக்கொண்டிருந்தான், சிவனேஷ்.
“ஷக்தி” என்றான் மென்மையை.
“என்ன நடந்தாலும் உன் கூட தாண்டி இருப்பேன்” என்றான் தன்னைப் போல்.
அவன் கண்ணோரம் கரித்தது. இந்த திருமணம் தேவை தானா என்ற கேள்வி இப்போது அவனுக்கு வந்தேவிட்டது.
‘அவளுக்கு ஒரு நல்ல நண்பனா இருந்து, அவ ஆசை படுறவன கல்யாணம் பண்ணி வெச்சு, அவ வாழ்க்க முழுசும் எம் புள்ள கூடவே இருடா சிவா’ என்ற இமயவரம்பனின் வார்த்தைகள் அவன் காதில் வருடம் கடந்தும் ரீங்காரமிட்டது.
அவன் ஒருநிலையில் இல்லை. புகழின் நடவடிக்கைகள் தெரிந்த பின்னர், அவன் எதற்காக ஷக்தியை நெருங்கினான் என்று அறிந்த பின்னர் அவனால் அமைதியாக இருக்க முடியவில்லை.
தவிப்பு, அவன் ஷக்திகான பெருந்தவிப்புடன் இருந்தவனை நோக்கி வந்தாள் அவள்.
முகம் பூரிக்க, நாளை திருமதி புகழேந்திரனாக மாறப் போகிறோம் என்ற கனவோடு அது கொடுத்த நிறைவோடு அவளின் ஷிவ்வைப் பார்க்க அவன் இருந்த அறைக்கு மேகாவோடு வந்தாள் பெண்ணவள்.
சிவனேஷ் இருந்த நிலை பார்த்து, “அய்யனாரே” என்று அவனை உலுக்கி எடுத்தாள் மேகா.
அதில் திடுக்கிட்டு விழித்தவனைப் போல் மேகாவையும் ஷக்தியையும் அந்த நேரத்தில் அங்கு அவன் சுத்தமாய் எதிர் பார்க்கவில்லை.
அதிலும் ஷக்தியின் ஆசை சிந்தி ஒளிர்ந்த முகத்தைப் பார்க்கப் பார்க்க இமயவரம்பன் அவன் கண் முன்பு வந்தார்.
“அவளுக்கு பிடிச்சவன், சரியானவனா இல்லையே சிவா” என்று மனதில் நினைத்த நொடி, எதையும் யோசிக்காது ஷக்தியை இழுத்தணைத்திருந்தான், சிவனேஷ் வீரபத்திரன்.
இறுகிய அணைப்பு. அதை பெண்ணவளும் எதிர்பார்க்கவில்லை. அவனின் அத்தனை நேரப் போராட்டமும் மன அழுத்தமும், ஷக்தியின் வாழ்க்கையில் அடுத்த இனி என்னாகும் என்ற பதைப்பும் அவனை அவ்வாறு செய்ய வைத்தது.
அதில் காமத்தை யாரும் பார்க்க முடியாது. ஒரு தோழனின் தவிப்பும் உண்மை தெரிந்தும் ஏதும் செய்ய இயலாத குற்றவுணர்வும் மட்டுமே தெரிந்தது.
அவனிடம் தெரிந்த வித்தியாசத்தில், ஷக்தியும் அவனைத் தழுவிக்கொண்டாள், அவனை அறிந்த தோழியாய்.
“என்னடா” என்றாள் அவளும் பரிவுடன்.
“அண்ணி தண்ணீ கொடுங்க இவனுக்கு.. என்ன ஷிவ், அழுறையா நீ?” என்றவள் அவனை பிரித்தெடுக்கப் பார்க்க, அவன் மேலும் அவளை ஒண்டினான்.
கதவைத் திறந்து வைத்து அவர்கள் இவ்வாறு நிற்பது மேகாவிற்குச் சரியாகப் படவில்லை. தண்ணீரை எடுத்துக்கொடுத்தவள், கதவை அடைக்கப் பார்க்கச் சரியாக உள்ளே நம்மாழ்வார், கருணா இன்னும் மூவருடன் அந்த அறைக்குள் நுழைந்திருந்தார், ஷண்முகம்.
அவர்கள் பின்னே ப்ரமோத், ஆராவமுதன், காளிதாஸ் இருக்க இவர்களின் அணைப்பைக் கண்டு நின்றுவிட்டனர் அனைவரும்.
ஆராவமுதனுக்கும் ப்ரமோத்திற்கும் அது தவறாக இல்லை. அவர்கள் அந்த கண்ணோட்டத்திலும் பார்க்க மாட்டார்கள். ஆனால் மற்றவர்கள்?
“நாத்தனாருக்கு விளக்கு பிடிக்கறியோ, ச்சீ வெக்கமா இல்ல” என்று மேகாவை ஷண்முகம் திட்ட,
“ஏய்” என்று சீறிக்கொண்டு வந்தனர் அவள் கணவனும் அண்ணனும்.
அதில் ஷக்தி சிவாவைப் பிரித்தெடுக்கப் பார்க்க, “அய்யோ நாங்க வந்துட்டோம்னு நீங்கப் பிரிய வேண்டாம் தாயி.. நல்ல கட்டிக்கோ, நாளைக்குப் புகழக் கண்ணாலம் பண்ண பின்னையும் கட்டிக்கோ” என்று நக்கல் பேசிய ஷண்முகத்தை அடக்க யாராலும் முடியவில்லை.
கருணா சிவாவிடம் விரைந்து அவன் சட்டையைப் பிடித்து உலுக்கியிருந்தான்.
“என்னடா மாப்புள பண்ணுத” என்றவன் கத்தாது அவனைக் கடிய,
“நம்ம பையன என்ன திட்டுற கருணா, அவன் ஒழுக்கமா தான் இருக்கான். தோ இத பாரு, மேய வந்திருக்கு” என்று ஷக்தியைக் காட்டி சொல்ல, அவளோ அலங்க மலங்க விழித்தால்.
சிவா, “தப்பா பேசாதீங்க மாமா, ஷக்தி என்ன பார்க்கத்தான் வந்தா.” என்றவன் கத்த,
“உங்கய்யா பார்த்துட்டார் சிவா, இந்தா இது உன்ன பார்க்க வந்தத”
ஆராவமுதன், “அது இதுன்னே அவ்வளவுதான் பார்த்துக்க” என்று அவர் சட்டையைப் பிடித்துவிட்டான் அவன்.
ஷக்தியைப் பேசியதும் ஆத்திரம் அதிகரிக்க, “வாயோட சேர்த்து நால விடுடா அந்தாள” என்ற சிவா,
“அய்யா என்ன இப்போவாது நம்பிவிங்களா? ஷக்தி என்ன பார்க்கத் தான் வந்தா. நான்தான் அவள கட்டிபிடிச்சேன்” என்க, அவனை கை நீட்டித் தடுத்தார், நம்மாழ்வார்.
“நம்ப மாட்டிங்க அப்போ, எல்லாம் உங்க மூத்த பையன தான் நம்புவீங்க, இல்லையா?” என்றான் ஆத்திரமாய்.
“டேய் வாய மூடுடா. அவர்கிட்ட என்ன விளக்க **ர் சொல்லிட்டு இருக்க? சொன்னாலும் கேட்டுடுவாரா என்ன?” என்ற ஆராவமுதன்,
“பெத்த புள்ளைய நம்பாத வீட்டுல சம்பந்தம் செய்ய இருந்தோம் பாருங்க, எங்களை சொல்லனும்” என்றுவிட்டான்.
அது பலவகையில் மருவி, புகழ் வீட்டுப் பெண்கள் காதில் வேறாகப் போய் சேர்ந்தது.
ஷண்முகத்தின் மனைவி கற்பகம், செய்தியைத் திரித்து உண்ணமலையிடமும் பாரதியிடமும் சொல்லியிருக்க, கொதித்துப் போய் வந்தனர் பெண்கள் இருவரும்.
அங்கு அவர்களின் மூளை மரத்திருந்தது கற்பகத்தின் பேச்சால்.
“கருக்கல்ல கண்ணாலத்த வெச்சுட்டு உன் சின்ன மகனோட ஒன்னு மண்ணா இருக்காறா உன் பெரிய மருமக” என்று இன்னும் விஷமிய வார்த்தைகளைச் சொல்லியவர் பேச்சு பெண்களின் மூளையை மழுக்கியிருந்தது.
ஆங்காரமாய் வந்த பாரதியோ, “நீயா வந்து லவ் பண்ணுறேன் அத பண்ணுறேன்னு சொல்லும் போதே சுதாரிச்சிருக்கனும்.. கருமம் கன்றாவி இன்னும் என்னெல்லாம் நாங்க பார்த்து தொலையனுமோ” என்க,
“ஒழுக்கம்னா என்னனு தெரியுமா உனக்கு? புகழு, சிவான்னு இப்படி நிமிஷத்துக்கு ஆண்பளைக்காக மாறுற.” என்று உண்ணாமலை பேச,
ஷண்முகத்தின் மனைவி, “யாரு கண்டா சிவா, சிவானு இப்படி உருகுராலே அவனோட ஒன்னுமண்ணா இருந்துட்டே புகழக் கட்டிக்க இருந்தாலோ என்னவோ?”
“இந்த மாதிரி கேடுகெட்ட நாயெல்லாம் நம்ம வீட்டுக்குத் தேவையா மச்சான்.. எத்தன பேர் கூட இருந்து தொலைஞ்சுதோ என்னமோ” என்று ஷண்முகம் நம்மாழ்வாரிடம் கேட்க,
அங்கு ஏதும் அறியா ஷக்தியின் ஒழுக்க நலம் கேள்விக்குறியானது.
அவர் முடித்த நொடி கன்னம் பழுக்கும் அளவிற்கு அவரை அரைந்திருந்தார், காளிதாஸ்.
அதுவரை கோபத்தை அடக்கியபடி இருந்தவர், “யூ ஃப***, யார என்னடா சொல்லுற. உன் புத்தியெல்லாம் எங்க புள்ள மேல தூவிவியோ” என்று இன்னும் ஒரு அடியை அவர் வைக்க, ஆழ்வார்திருநகரையே அவருக்கு எதிராக வந்து நின்றது. பிரச்சனை பெரிதானது.
“என்னய்யா பண்ணுவீங்க? எங்க பொண்ணையே பேசுவீங்க கேட்டா அடிக்க வருவிங்களா? அண்ணா போலீஸ்ஸ கூப்பிடுங்க” என்று ஆராவமுதன் ஒருபுறம் சண்டையிட,
“வார்த்தை முக்கியம். என்ன நடந்ததுன்னு கேட்காம இப்படியா பேசுவீங்க” என்று ப்ரமோத்தும் கத்த, அவனின் பாதுகாவலர்கள் போலீஸாருக்குத் தகவல் கொடுத்துவிட்டனர்.
“அண்ணா” என்று கிட்டத்தட்ட அவர்கள் கொடுத்த நிமிடம் இடைவெளி இல்லாத அதிர்வில் ஆராவமுதனிடம் வந்திருந்தாள், ஷக்தி.
ப்ரமோத்தும் ஆராவமுதன் பக்கத்தில் நிற்க, இருவரும் அவளைத் தாங்கிக்கொண்டனர்.
அவள் உடல் நடுங்கியது. அவர்களுக்கு அது அப்பட்டமாகத் தெரிந்தது.
இம்மாதிரி பேச்சுக்களை அவள் கேட்டதும் இல்லை அவளை இப்படி யாரும் சொன்னதும் இல்லை.
அதைவிட, சிவாவையும் அவளையும் இணைத்து?! குன்றி கூசிவிட்டாள் ஷக்தி ஆராதனா.
நடுயிரவு இரண்டு மணி, மண்டபமே விழித்துக்கொண்டது சண்டையை உணர்ந்து. இதில் புகழேந்திரன் அந்த நேரத்திற்குக் காணாது போயிருந்தான்!
••••
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
16
+1
2
+1
2
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


தன் காரியத்தை கருத்தாக சாதிக்க அவளையும் பயன்படுத்தியுள்ளானா புகழ்?
உண்மையை கூறி தோழியின் மகிழ்வை அழிக்க துணிவில்லை அதே நேரம் உண்மை தெரிந்தால் அவள் அடைய போகும் துயர் நினைத்தும் பயம்.
என்ன நடந்தது என்று தெரியாமல் வார்த்தையை வாளாக வீசிவிட்டனர் புகழ் குடும்பத்தினர்.
ஆம் புகழ் குடும்பத்தினர் மட்டுமே. தங்கள் பிள்ளையையும் குறை கூறுகிறோம் என்ற உணர்வில்லாமல் என்னவெல்லாம் பேசுகின்றனர்.
ஏதோ கெட்டதிலும் நல்லதாக புகழுடனான திருமணம் நின்றதே.