
தழல் 9:
இரவும் இருளும் தனிமையும் மனதிற்குள் இதமான இனம்பமான உணர்வை ஊட்ட வல்லது. அதே இரவுக்கும் இருளுக்கும் தனிமைக்கும் இன்னொரு கொடூர முகமும் உண்டு. மனிதனுள் மரத்து மரித்துக் கிடக்கும் மிருகத்தை உயிர்தெழ வைக்கும் ஆற்றலும் அதற்குண்டு. மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கவும் துக்கத்தை பன்மடங்காய் கூட்டிக் காட்டவும் அதற்கு தெரியும். ஒரு மனிதன் என்ன மனநிலையில் இருக்கிறானோ அதை அப்படியே பூதகரமாக்கி அதிலேயே அமிழ்த்தி மூழ்கடிக்கவும் முடியும். சாதரணத்தை கூட அசாதாரணமாய் மாற்றி அச்சுருத்த அதற்கு தெரியும். அதே நேரம் அசாதாரண காரீயத்தை கூட வெகு சாதாரணமாய் நிகழ்த்திக் காட்டிடும் பேராற்றலும் அதற்குண்டு.
வெளிச்சத்தில் எழும் சிறு குற்றவுணர்வையும் பெரும் பயத்தையும் கூட இரவும் இருளும் தன் கரிய கரங்களுக்குள் ஒளித்து தான் வைத்துக் கொள்கிறது. எந்த தவறையும் துணிந்து செய்துவிடும் தைரியத்தை தந்துவிடுகிறது அது. இருளில் துணிந்து செய்த ஒரு செயலை வெளிச்சத்தில் சொல்லவே தயங்குபவர்கள் ஏராளம். அவர்களில் அவளும் ஒருத்தி.
எங்கெங்கோ பயணித்த எண்ணதிற்கு கடிவாளமிட்டு கட்டி திசை திருப்ப விரும்பவில்லை அவள். இந்த இரவும் இருளும் தனிமையும் அவளுக்கு புதிதில்லை. அதில் அமிழ்ந்து கரைந்து ஒரு துகளாய் மாறிவிட அவள் ஏங்காத நாளில்லை. ஆனால், அது சாத்தியமில்லை என்றும் அவளுக்கு தெரிந்து தான் இருந்தது.
இன்று நடந்த எல்லாவற்றிலும் பிரதானமாய் தங்கையின் கண்ணீர் முகமே அவள் கண்முன் நிழலாடுகிறது. இன்னும் ஒரே ஒரு நொடிக்கூட அவளை எதிர்கொள்ள முடியாது என்ற கணத்தில் தானே உள்ளே சென்று கதவடைத்துக் கொண்டது. அவளால் என்றுமே தங்கையின் கண்ணீர் முகத்தை சகித்துக் கொள்ளவே முடியாது. அதற்காக எதையும் செய்வாள் அவள்.
இப்பொழுதெல்லாம் அவளைப் பார்த்தாலே மூச்சடைக்கும் உணர்வு. அவளுடன் இனிமையாய் வாழ்ந்த நாட்களெல்லாம் ஏதோ வெகு காலங்களுக்கு முன்பு நடந்தேறிய இனிய கனவுப் போல நெஞ்சில் நிழாலாடுகிறது. நேர்தியான அழகிய குருவிக் கூடாய் இருந்த குடும்பத்தை களைத்துப் போட்டவள் அவள் தானே! அந்த குற்ற குறுகுறுப்பு அணுஅணுவாய் அவளைக் கொன்று தின்றுக் கொண்டே இருக்கிறது! ஒவ்வொரு முறை அன்னையின் முகம் பார்க்கும் போது எப்படி பாசத்தில் மனம் விம்முகிறதோ அதேப் போல குற்றவுணர்விலும் குறுகுறுக்கிறதே! இதோடே வாழ்ந்து மடிந்துப் போவதுதான் அவளுக்கு விதிக்கப்பட்டது என்னும் போது அதை அவள் மாற்ற துளியும் விரும்பவில்லை.
வீடெங்கிலும் மகளை தேடி கிடைக்காது மாடிக்கு வந்தவருக்கு தப்பாமல் கிடைத்தது மகளின் தரிசனம். வெற்று தரையில் படித்திருந்தவளை கண்டு மனம் வழக்கம் போல் வெம்பியது. ‘இந்த பெண் ஏன்தான் இப்படி செய்கிறதோ?’ என சலிப்பாக கூட இருந்தது. எப்பொழுதும் அவள் இருக்கும் இடத்தை நிறைந்திருக்கும் இசை இப்போது இல்லாதிருப்பது அவளின் உள்ளத்தை அவருக்கு வெளிச்சம் போட்டு காட்டியது.
நீண்ட பெருமூச்சுடன் அவள் அருகில் சென்று அமர்ந்தார் அவர். வழக்கம் போல் அவரின் வருகையை உணர்ந்தாலும் வார்த்தைகளை உதிர்க்கவில்லை அவள். அமைதியாய் அவர் மடி சாய்ந்துக் கொண்டாள்.
அவளின் தலையை மென்மையாய் வருடியபடியே, “சாப்பிட வா ஆரும்மா…” என்றார் வாஞ்சை வழிந்தோடும் நேசக்குரலில் பர்வதம்.
அவர் அடித்து திட்டி கத்தி தீர்த்துவிட்டால் கூட பரவாயில்லை என்று தான் தோன்றியது. ஆனால், இந்த அன்பு அவள் மனதில் இன்னும் இன்னும் பாரத்தை ஏற்றுக்கிறது.
நிமிர்ந்து அன்னையின் முகம் பார்த்தவள், மறுநொடி அவரின் மடியில் இன்னும் ஆழமாய் முகத்தை புதைத்துக் கொண்டாள். “சாரிம்மா…” மிக மெல்லிய குரலில் சொன்ன மகளுக்கு பதிலெதுவும் சொல்லவில்லை அவர். விடாமல் அவர் விரல்கள் அவள் தலையை வருடிய வண்ணமே இருந்தது.
“ப்ளீஸ் ம்மா… என்ன இப்படியே விட்டுடுங்களேன்… கடைசி வரைக்கும் உங்க மகளா மட்டுமே இருக்கற பாக்கியம் கூடவா எனக்கில்லை… அந்த நிம்மதி கூடவா எனக்கு குடுத்து வைக்கல…” உடைந்த குரலில் கேட்ட மகளை, அன்பொழுக பார்த்தார் அவர்.
“உன் வாழ்க்கை… உன் முடிவு… இதுல கருத்து சொல்ல எனக்கென்ன உரிமை இருக்கு ஆரும்மா…” அமைதியாய் அழுத்தமாய் வினவியவரை உயிர் துடிக்க பார்த்தாள் அவள்.
“ம்ம்மாமா… நான்…” என பேச முயன்று முடியாமல் தடுமாறி நின்றவள் தலையை கோதியபடியே, “உனக்குனு கடவுள் எழுதி வச்சுருக்கதை நீயே நினைச்சாலும் தடுக்க முடியாது ஆரும்மா… அது உன்ன வந்து எப்ப சேரணுமோ அப்போ சேரட்டும்… நிச்சயமா நான் தினமும் கும்பிடற முருக கடவுள் உனக்கு நல்லதே குடுப்பாருங்கற நம்பிக்கை எனக்கு நிறையவே இருக்கு…” என்றார் உறுதியாய் அவர்.
“ஆனா கனி… அவ சின்ன பொண்ணு ஆரும்மா… அவள நீ இவ்வளவு கஷ்டபடுத்தி இருக்க வேண்டாம்… என்ன செஞ்சாலும் உன்னோட நலனை மட்டுமே முன்னிறுத்தி யோசிச்சு செய்யற அவளை என்ன சொல்லிட்ட நீ… உன்னோட ஒதுக்கம் கொஞ்சம் கொஞ்சமா அவள கொன்னுட்டு இருக்கு… அது புரியலையா உனக்கு… எல்லாம் இருந்தும் நீ இல்லாம அவ வாழ்க்கையில நிறைவான சந்தோஷம் இல்ல… அது புரியலையா உனக்கு..?” என்றவரின் குரலில் சின்ன மகளுக்கான தவிப்பு அப்பட்டமாய் தெரிந்தது.
அவரின் கேள்வியில் அவசரமாய் விழியோரம் கண்ணீர் கட்டி நின்றது அவளுக்கு. அவரின் கேள்விக்கு பதில் சொல்லும் திரணியில்லை. இருந்தும் முயன்று தொண்டையை செறுமி, பொய் சொல்ல வாயெடுத்தவளை கண்டிக்கும் பார்வையிலே அடக்கினார் அவர்.
“எப்பவும் போல அவ காதலிச்சு கல்யாணம் பண்ணிகிட்டது தான் காரணம்னு மட்டும் சொல்லிடாத ஆரும்மா… நாலு வருஷமா இதே பொய்ய கேட்டு கேட்டு சலிச்சு போச்சு எனக்கு… என் பொண்ணு உண்மைய பேசறாளா பொய் பேசறாளானு கண்டு பிடிக்க முடியாத அளவுக்கு ஏமாளி இல்ல நான்… என்கிட்ட கூட சொல்ல முடியாத அளவுக்கு என் பொண்ணு வாழ்க்கையில ரகசியம் இருங்கறதே ஆச்சரியமா இருக்கு… என்ன பிரச்சனையா இருந்தாலும் அம்மாகிட்ட சொல்லும்மா… அம்மா பாத்துக்கறேன்…” ஆறுதலாய் மொழிந்தவரை இயலாமையுடன் பார்த்து வைத்தாள் அவள்.
நுனி நாவுவரை வந்துவிட்ட வார்த்தைகளை அப்படியே எச்சில் கூட்டி விழுங்கிக் கொண்டாள். ஒரே ஒரு முறை கனியின் மலர்ந்த முகம் கண்முன் தோன்றி மறைந்தது. இப்பொழுதில்லை எப்பொழுதுமே அதை அவள் யாரிடமும் சொல்ல துணிய போவதில்லை.
“பசிக்குதும்மா…” மெல்லிய குரலில் அவர் முகம் பார்க்காமல் சொன்னவளை, வேதனையோடு பார்க்க மட்டும் தான் முடிந்தது அவரால்.
“எழுந்துக்கோ… சாப்பிட போவோம்…” என்று மடியிலிருந்து மகளை எழுப்பிவிட்டவர், தானும் எழுந்துக் கொண்டார்.
ரகசியங்கள் எப்போதும் ரகசியமாகவே இருந்து விடுவதில்லை. அது சபையில் அம்பலம் ஆகும் நாளும் வரத்தான் செய்யும். அவள் கட்டிக் காக்க போராடும் ரகசியம் உரியவரின் வாயிலிருந்தே சபையில் அம்பலமாகும் நாள்நோக்கி காத்திருக்கிறதென்று அவளுக்கு யார் சொல்வது?
❁❁❁❁❁
வேந்தன் தன் கையிலிருந்த அந்த சிறிய வாழ்த்து அட்டையையே இப்படியும் அப்படியுமாய் திருப்பி திருப்பி பார்த்துக் கொண்டிருந்தான். அனுவை அந்த பணிப்பெண் அழைக்க வந்த போது அவரின் கவனத்தை கவராத வகையில் மேசைக்கு அடியில் கிடந்ததை காலாலேயே எடுத்து பத்திரப்படுத்திக் கொண்டிருந்தான் அவன்.
மீண்டும் மீண்டும் அதிலிருந்த வாக்கியத்தை வாசித்துப் பார்த்தான். அந்த கடைசி வரியை தவிர்த்துப் பார்த்தால், அது ஒரு அழகான காதல் கடிதமாகவே தோன்றியது. ஆனால், அந்த கடைசி வார்த்தைகள் உள்ளுக்குள் ஏதோ இடறியது. எப்படி யோசித்தாலும் அதில் ஏதோ தவறு இருப்பதைப் போலவே தோன்றியது. அதுவும் இயல்புக்கு மீறிய ஆராவின் பதற்றமும் மயக்கமும் அவனை இன்னும் ஆழமாய் இதைப் பற்றி சிந்திக்க வைத்திருந்தது.
ஆராவுடனான முதல் பேச்சு வார்த்தையும் சந்திப்பும் இன்று காலையில் தான் என்றாலும் இருவருக்குமான அறிமுகம் இன்று நேற்றானது அல்ல. ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளும் முன்பே பேசிக் கொள்ளும் முன்னமே, எதிராளியை துல்லியமாய் அறிந்து வைத்திருந்தனர். உபயம் அனுராதா என்று விளக்கி சொல்லவும் வேண்டுமா?
தினமும் அவனிடம் ஐந்து நிமிடமாவது பேசிவிட வேண்டும் அனுவுக்கு. அப்படி பேசும் சமயங்களில் பெரும்பகுதியை ஆக்கிரமித்திருப்பது ஆரா தான். ஒருவேளை தப்பிதவறி அன்றைய தினம் அவளைப் பற்றி பேசவில்லை என்றால் அவரின் மனநிலை மிக மோசமென்று அர்த்தம். ‘இன்னைக்கு ஆரா என்ன பண்ணா தெரியுமா..? இன்னைக்கு மதியம் ஆரா சாப்பிடவேயில்ல… இன்னைக்கு நானும் அவளும் கேன்டின் போய் அவளக்கு பிடிச்ச மாசாலா டீ குடிச்சோம்… இந்த ஆராவ என்னால சமாளிக்கவே முடியலடா வேந்தா… கோபம் வந்தா திட்ட வேண்டியது தானே..! பேசாமலேயே இருந்து காரீயம் சாதிக்கறாடா அவ…’ இப்படி இன்னும் இன்னும் ஏராளம் அவன் ஆராவைப் பற்றி அறிந்து வைத்திருப்பது. அவள் பெயரை உச்சரிக்கும் போதே அதில் வழியும் அன்பும் வாஞ்சையும் பல சமயங்களில் அவன் பொறாமை தீயைக் கொழுந்துவிட்டு எரியச் செய்திருக்கிறது.
ஆரம்ப காலக்கட்டத்தில் எரிச்சலுற்று, கோபப்பட்டு, போறாமைக் கொண்டு பின் சலித்து இறுதியாய், ‘இன்னைக்கு என்ன பண்ணாங்க உங்க ஆரா…’ என அவனே கேட்டு தெரிந்துக் கொள்ளும் நிலையில் வந்து நிற்கிறது அவளின் மீதான அவன் பிடித்தம். அவளின் விருப்பு, வெறுப்பு, பிடித்தங்கள், ரசனை, உணவு பழக்கவழக்கம், உடல்மொழி அத்தனையும் அவனுக்கு அத்துபடி. ஏன் எந்த விசயத்தை அவள் எப்படி அணுகுவாள், எந்த உணர்வை எப்படி வெளிபடுத்துவாள் என்பதும் கூட அவனுக்கு அத்துபடி. அவன் மனதில் அவளின் மீதான ஆழ நேசத்திற்கு அவரை அறியாமலே விதை தூவி நீர் வார்த்துக் கொண்டிருக்கிறார் அனு.
ஆராவுக்கும் இது அத்தனையும் பொருந்தும். அனு வேந்தனைப் பற்றி அவளிடம் பேசவில்லை என்றால் தான் அதிசயம். தினம் ஒரு தகவல் போல, அவனைப் பற்றி ஏதாவது சொல்லிவிட வேண்டும் அவருக்கு. வேந்தனுக்கு மிகவும் பிடித்த ஊத்தாப்பத்தில் எத்தனை கரண்டி நெய் விட வேண்டும் என்னும் அளவிற்கு அவன் அவளுக்கு அத்துபடி. அதுதான் காலையில் அவன் திட்டும் போதுகூட அவளை ஒரு முறுவலுடன் கடக்க வைத்திருந்தது. அவனின் முன்கோபமும் பதற்றத்தையும் படபட பேச்சையும் சிறுபிள்ளை தனங்களையும் அறிந்தவளுக்கு கோபம் எப்படி வரும்.
அவனின் பிரியமானவருக்கு பிரியமானவள் என்பது தான் அவன் அவளை சீண்டவும், அவளுக்கு ஏதோ பிரச்சனை இருக்குமோ என யோசித்த மாத்திரத்தில் அதில் தீவிரமும் காட்ட வைத்திருந்தது.
“யுவர் லவ்வபில் டெவிள்…” மனதிற்குள் மீண்டும் அந்த வார்த்தைகளை ஓட்டிப் பார்த்தான்.
“இந்த சைத்தான் எந்த சைத்தானா இருக்கும்னு தெரியலையே… அடேய் சைத்தான்… லீவுல கூட என்ன சின்சீயரா வேல பாக்க வச்சிட்டீயேடா… டேய்…
ஒருவேளை உண்மையிலுமே லவ்வரா இருப்பானோ..? ஆமான்மான்… இந்த சிடுமூஞ்சுக்கு லவ்வர் எல்லாம் வரிசை கட்டி நின்னுட்டாலும்…
ஒருவேளை அவன் லவ்வ சொல்லி இவ மூஞ்சு மேலையே நாலு காட்டு காட்டி இருப்பாளோ..? அந்த கடுப்புல எவனாவது கொழுத்தி போட்டு விளையாடுறானோ..? இருக்கும்… இருக்கும்… இவ செய்ய கூடிய ஆளாதான்…
ஆனா இது சும்மா குறைக்கற நாயா இல்லை கடிக்கற நாயானு தெரியலையே..? ஸ்ஸ்ஸ்… ஹப்பா… ரவுடியையும் மாஃபியா கும்பலையும் தீவிரவாதியையும் அசால்டா டீல் பண்ணவன இப்படி புலம்ப விட்டீயேடா சைத்தான்… கையில மட்டும் சிக்கு… வடைய நசுக்கற மாதிரி நசுக்கி தூக்கி போட்டறேன்…” அவன் வாய்விட்டே புலம்ப,
“அண்ணா… நாளைக்கு வேணா அம்மாகிட்ட உனக்கு ஒரு சிட்டிங் ஏற்பாடு பண்ண சொல்லவா…” என்றாள் கவி அப்பாவி முகத்துடன் கேலி வழிந்தோடும் குரலில். ராதா – கிருஷ்ணனின் புதல்வி. அவனின் செல்ல குட்டி தங்கை.
“ஆவுனா ஆஸ்பத்திரிக்கு குடும்பமா ஆளு புடிக்க கிளம்பிடுவீங்களே… யம்மா தாயே… இன்னும் பைத்தியமாகல… ஆனா சொல்லி அனுப்பறோம்… அப்பறம் வாங்க…” அவன் அதே கேலியுடன் பாவணையாய் சொல்லி முடிக்க கலகலத்து நகைத்தாள் அவள்.
“சரி… சரி… உன் இஷ்டபடி எப்ப வேணாலும் வந்து சேர்ந்துக்கோ… ஆனா சம்பள கவர மட்டும் இப்பவே என் கையில குடுத்துடு…”
“குட்டி குரங்கே… சம்பள கவரா வேணும்… இந்தா… ஏய் வாங்கிட்டு போடி…” அவன் அடிப்பதைப் போல பாவணை செய்ய அறையைவிட்டு மின்னலென மறைந்துப் போயிருந்தாள் அவள்.
“டேய் அண்ணா… அம்மா சாப்பிட கூப்பிட்டாங்க… சீக்கிரம் கீழ வா… உனக்கு பிடிச்ச ஊத்தப்பமும் காரசட்னியும்…” என கத்தியபடியே படிகள் தடதடக்க ஓடியவளை முறுவல் பூக்க பார்த்திருந்தான் அவன்.
இவனுக்கும் அவளுக்கும் கிட்டதட்ட இருபது வயது வித்தியாசம். அந்த வித்தியாசம் அவர்கள் உறவை எந்த வகையிலும் பாதித்ததே இல்லை. அவளின் விடுமுறை எல்லாம் அவனோடு தான் கழிந்திருக்கிறது. இதோ இப்போதும் அவளின் வற்புறுத்தலின் பெயரில் தான் இங்கே வந்திருக்கிறான். விளையாட்டுக்கு அவள் கேட்டதைகூட அவன் மறுத்ததில்லை. ஏன் அடுத்த மாத சம்பள கவரைக் கூட அவளிடம் தான் கொடுப்பான். கேட்டுவிட்டாளே! அவளாய் பார்த்து இவனுக்கு ஐஞ்சு பத்து கொடுத்தால் தான் உண்டு!
கையிலிருந்த அந்த சிறிய வாழ்த்து அட்டையை தனது அறையில் பத்திரபடுத்தியவன், “அரே… சைத்தான் கே பச்சா… உனக்கு வேப்பில்லை அடிக்கலைனா நான் வேந்தன் இல்லடா…” என்ற சபத்தோடு, அதை முழுவதுமாய் கிடப்பில் போட்டுவிட்டு உண்ண சென்றுவிட்டான் அவன்.
ஒருவேளை வேந்தன் அவனை நெருங்கும் முன்னமே, எல்லாம் அவன் கைமீறிப் போயிருக்கும் என்பதை அறிந்திருந்தால், முடிந்த அளவிற்கு இன்னும் முனைப்பாய் அவனை தேடிக் கண்டுப் பிடித்திருப்பானோ என்னவோ?
– பற்றி எரியும்…

