Loading

யான் நீயே 43

“ரெண்டேறும் சேர்ந்து வம்பு பண்றிங்களா?”

அங்கை உள் வந்ததும் லிங்கம் இடையில் கை குற்றி சிறு முறைப்போடு கேட்க,

“அய்யோ நானில்லை. அக்கா தான்” என்ற அங்கை அவனின் முகம் பார்க்க வெட்கம் கொண்டு தலை கவிழ்ந்து கொண்டாள்.

பிறந்தது முதல் அவனை பார்த்து பழகி, அவனுடன் சேர்ந்து வளர்ந்து, அடமாக காதல் கொண்டு அவனையும் காதலிக்க வைத்து, அவனை கரம் பிடித்திருந்தாலும், இந்நாளுக்கே உரித்தான அச்சமும் பதற்றமும் அவளிடம் தென்பட்டது.

மெல்ல தலையை திருப்பி சிரித்துக்கொண்டவன், அவளை உரசியபடி கடந்து சென்று கதவினை அடைத்து அதன் மீதே சாய்ந்து நிற்க…

அங்கை மெல்ல விழி உயர்த்தினாள்.

லிங்கம் என்ன என்று புருவம் தூக்கிட…

“ஒண்ணுமில்லை.” வேகமாக தலையை ஆட்டியவள், “பால்” என்று அவன் முன் நீட்டினாள்.

“குடிச்சிடு.” லிங்கம் சொல்லிய அடுத்த நொடி ஒரே மூச்சில் காலி செய்திருந்தாள்.

“போ… படுத்துக்கோ!”

“ஹான்…” விலுக்கென அவனை நிமிர்ந்து பார்த்தவள், அவன் மீது விழிகளை பதித்தவாறே கட்டிலில் சென்று படுக்க…

“நான் எங்க படுக்க?” என்று கேட்டான்.

வேகமாக உள்ளே தள்ளி படுத்தாள். கட்டில் சுவற்றை ஒட்டி போட்டிருக்க, அவளோ சுவற்றோடு ஒண்டியிருந்தாள்.

அங்கைக்கு பதற்றம், பயம் இருந்த போதும், அவன் உறங்க சொல்லியதும் அவளுள் ஏமாற்றம் பரவுவதை தடுக்க முடியவில்லை.

திரும்பி அவனை பார்க்கவும் நாணம் தடுத்தது.

கண்களை மூடியிருந்த போதும் அவனின் அரவத்தை அவளால் உணர முடிந்தது.

மூடியிருந்த சன்னலை திறந்து திரையை இழுத்து விட்டான். நிலவின் ஒளி அறை முழுக்க பரவியது. பால்கனி கதவினை திறந்து வைக்க, சில்லென்ற காற்று மேனியை தீண்டியது.

ஒளிர்ந்து கொண்டிருந்த விளக்குகளை அணைத்தவன், மெத்தையில் படுத்து கண்களை மூடிக்கொண்டான்.

சில நிமிடங்கள் சென்றும் அவனிடம் அமைதியே நீடிக்க…

‘ஒன்னுமில்லையா? அம்புட்டு தானா?’ தனக்குத்தானே கேட்டுக்கொண்டவளாக மெல்ல அவன் பக்கம் திரும்பி அருகில் செல்ல…

“கிட்ட வர இம்புட்டு நேரமாடி” என இழுத்து இறுக அணைத்திருந்தான்.

சட்டென்று அவன் இழுத்ததில் “அம்மா” என்று அளறியவளின் ஓசை அவனது இதழில் புதைந்து மறைந்தது.

விரல் தீண்டலைக்கூட தவிர்த்து கண்ணியம் காத்தவன், மொத்தமாக அவள் மேனி தீண்டி சிலிர்க்க வைத்து, தனக்குள் சிறை வைத்தான்.

“மாமா…” மென் முனகலாக அவளின் குரலும், மெல்லிய நாதமாக அவளின் கொலுசின் ஓசையும் அறையை நிறைத்திட, தன்னவளை தனக்குள் மொத்தமாக நிறைத்து, களைத்து, சோர்ந்து, தன்னவளிடமே சராணாகதி அடைந்திருந்தான்.

விழி பார்வையில் ஊர்வலம் நடத்தி, விரல் தீண்டலில் உருக வைத்து, இதழ் உரசி கரை உடைத்து, மெய் தீண்டி அகம் சேர்ந்தான். கொள்ளை கொண்டவன், கொள்ளை போகும் விந்தையும் அங்கு அரங்கேறியது.

உருகி உருகி காதலித்தவள் அவனிடம் மொத்தமாக உருகி நின்ற கணம், அவன் சொர்க்கத்தின் இதம் உணர்ந்து தத்தளித்து கரை சேர்ந்தான்.

இதழ் முத்தத்தில் பிரிந்தவர்கள், இடைவெளியின்றி துயில் கொண்டனர்.

விடியலில் முதலில் கண் விழித்த லிங்கம், தன் கையில் தலை வைத்து உறங்கும் தன்னவளின் முகம் பார்த்து ரசித்திருக்க… மெல்ல உறக்கம் கலைந்தவள், அவனது பார்வை தாங்காது, அவனுள் முகம் மறைத்து வெற்று மார்பில் இதழொற்றி அணைத்துக் கொண்டாள்.

“புதுசா தெரியுற அங்கை” என்றவன், “உன்னோட வெட்கம், அமைதி எல்லாம் நீதானான்னு டவுட்டை கிளப்புதுடி” என்று சற்று சத்தமாக சிரித்தான்.

“நைட்டு இப்படி இருந்துட்டு… இப்போ நாந்தானோன்னு சந்தேகமாட்டிக்கு? இருக்கும், இருக்கும்” என்றவள் அவனிலிருந்து விலகி அமர்ந்து, இரு கைகளை உயர்த்தி முடியை அள்ளி கொண்டையிட… அவனோ விழிகள் விரித்து, “எப்படி இருந்துட்டு” என்று மயக்க நிலையில் கேட்டான்.

கணவனின் பார்வை மாற்றம், குரல் பேதத்தில் தன்னை குனிந்து பார்த்தவள்,

“அச்சோவ்” என்று அவனின் மார்பிலே தன் முகம் புதைத்தாள்.

அவர்களுக்கு மட்டுமே உரித்தான இனிமையான தருணம் மேலும் நீண்டிட… சூரியனின் கதிர்கள் செம்மை பூசி விரியத் தொடங்கிய நேரம் தான், இரவே அபி “வெள்ளென எழுந்து குளிச்சிப்போட்டு வந்து விளக்கு ஏத்திடு அங்கை” என்று சொல்லியது நினைவு வந்து, விட முடியாதென அடம் பிடித்தவனை சமாளித்து குளித்து முடித்து அவள் அறையை விட்டு வெளியில் வருவதற்குள் போதுபோதுமென்று ஆனது.

“என்ன சின்னக்குட்டி மூச்செல்லாம் பலமா இருக்கு?” மீனாளின் குரலில் அங்கை நிமிர்ந்து பார்க்க, மாடி கூடத்தில் புத்தகமும் கையுமாக மீனாள் நடந்து கொண்டிருந்தாள்.

“அக்கா” என்று அங்கை சிணுங்கிட…

“நான் எதுவும் கேட்கலப்பா! அத்தை முன்னவே நீ எழுந்திட்டியான்னு வந்து கேட்டாங்க. வெரசா போ” என்று அனுப்பி வைத்தாள்.

அங்கை கீழிறங்கி விட்டதை உறுதி செய்துகொண்டு தங்கள் அறைக்குள்ளிருந்து வெளிவந்த வீரன்,

மீனாளின் காதினை வலிக்காது திருகியபடி…

“ராவுலேர்ந்து ரெண்டேரையும் நல்லா ஓட்டுற நீயி. அம்புட்டும் சேட்டை. ஒழுங்கா படி” என்று மிரட்டினான்.

“பயந்துட்டேன் வீரா” என்று கண்ணடித்தவள், “நைட் விட்ட மிச்சம் இப்போ வச்சிக்கிடுவோமா. புத்தகம் பார்த்து பார்த்து மண்டை சூடாகிப்போச்சு” என்று வீரனின் உடல் உரச நெருங்கி நின்று மீனாள் கேட்டிட, சட்டென்று உடலில் ஆர்ப்பரித்த உணர்வலைகளிலிருந்து மீண்டவன், “செடுயூஸ் பண்ண பாக்குறியாடி. கொன்னுடுவேன்” என்றான்.

“அப்போ நீயி இன்னும்…” மீனாள் வார்த்தையை சொல்லாது இழுக்க, அவளின் வாயினை கரம் கொண்டு மூடியவன்…

“மயங்கிப்போய்த்தேன் கிடக்கேன். உருக வைக்காம இருடி” என்று அவளின் நெற்றியில் இதழ் ஒற்றி வேகமாக சென்றுவிட்டான்.

அடுத்து லிங்கம் வர,

“மாமோய்…” என்று மீனாள் அழைத்த தோரணையிலேயே லிங்கம் நிற்காது வேகமாக படியிறங்கி ஓடிவிட்டான்.

லிங்கத்தின் ஓட்டம் கண்டு மீனாளிடம் தோன்றிய சிரிப்பு அவ்வீட்டை நிறைத்தது.

அன்றைய நாள் அனைவருக்கும் மகிழ்வாகத்தான் சென்றது. மருதனும் தன் குடும்பத்தோடு அங்கு வந்துவிட, சொல்லவும் வேண்டுமா? பல நாட்களுக்குப் பின்னர் அனைத்து கவலைகளும் நீங்கி மிக மிக சந்தோஷமாக அந்த நாளினை கடத்தினர்.

மூன்று ஜோடிகளும் கண்ணுக்கு நிறைவாய் கண் முன்னே நின்றிருக்க… பெரியவர்களின் நெஞ்சம் குளிர்ந்தது.

‘இந்த குடும்பம் தழைக்கணும் ஆத்தா.’ அக்கணம் மீனாட்சியின் வேண்டுதல் அதுவாகத்தான் இருந்தது. அதில் தான் குடும்பம் சந்தோஷத்தை, நிம்மதியை இழந்து தவிக்க இருக்கிறது என்பதை உணராது போனார்.

மனம் கொண்ட மகிழ்வோடு நாட்கள் நகர்ந்தது என்று தான் சொல்ல வேண்டும்.

மீனாள் முழு கவனத்தோடு தனக்காக மட்டுமின்றி வீரனுக்காக மட்டுமே தேர்வினை அதிக ஸ்ரத்தையோடு எழுதி முடித்திருந்தாள்.

அங்கை லிங்கத்துடனே ஹோட்டலிற்கு சென்றுவிடுவாள். வீட்டில் மட்டுமில்லாது வேலையிடத்திலும் லிங்கத்தை ஆட்டி வைத்துக் கொண்டிருந்தாள் அங்கை. அவளின் பார்வைக்கு விரும்பியே சுழல ஆரம்பித்திருந்தான் லிங்கம்.

எப்போதுமே நாச்சியின் மீது பித்தாக இருக்கும் பிரேம் இப்போது இன்னும் அவள் மேல் காதல் கொண்டு ஆர்ப்பாட்டமில்லா சந்தோஷத்தோடு தன் காதல் வாழ்வை வாழ்கின்றான்.

நாட்கள் விரைவாக நகர்ந்து மீனாளின் தேர்வு முடிவுகள் வெளிவரும் நாள் அன்று.

மீனாள் சாதாரணமாகத்தான் வலம் வந்து கொண்டு, அபிக்கு உதவியபடி, மீனாட்சியிடம் வம்பு செய்துகொண்டென இருந்தாள்.

வீரனால் அவ்வாறு இருக்க முடியவில்லை.

தேர்வு முடிவுகள் வெளி வரும் நேரத்திற்காக அத்தனை பதற்றத்துடன் காத்திருந்தான். அவனால் எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை. கூடத்து இருக்கையில் அமைதியாக அமர்ந்துவிட்டான்.

“யாரு பரீட்சை எழுதினிங்கன்னு சந்தேகமாட்டு இருக்கு. நீயி என்னடான்னா ஜாலியா சுத்திக்கிட்டு இருக்க. அண்ணே பதட்டமா உட்கார்ந்திருக்கு… அதுக்கான பொதுத்தேர்வு முடிவுக்கு கூட அண்ணே இப்புடி உட்காரல…” என்று லிங்கம் சொல்ல…

“முடிவு என்னவா இருந்தாலும் எனக்கு ஒகேதேன் மாமா” என்ற மீனாள் கலங்கிய கண்களை லிங்கத்திற்கு காட்டாது திரும்பிக் கொண்டாள்.

“வௌங்குறாப்புல சொல்லு மீனாகுட்டி.”

“பாஸ் ஆனா மாமாவுக்கு சந்தோஷம். அது சந்தோஷம் தான் எனக்கும். ஆனால் மாமாவை விட்டு… மாமா இருந்திடும் தெரியும். நான்?” என்றவள் அடைத்த தொண்டையை சரி செய்துகொண்டு, “பாஸ் ஆகறதைவிட பெயிலாகிப்போவனும் தான் வேண்டிக்கிறேன் மாமா” என்றாள்.

“அப்போ பரீட்சை?”

“நல்லாதேன் எழுதியிருக்கேன். மாமாவை ஏமாத்தக்கூடாதே” என்றவளிடம் வலியோடு ஒரு சிரிப்பு.

“இது உன் கனவு மீனாக்குட்டி.”

“என் மாமாவுக்கு முன்னுக்க எல்லாம் பூஜ்ஜியந்தேன் மாமா” என்ற மீனாள் வீரனின் அழைப்பில் அவனருகில் சென்றிட…

“அக்கா மாறிலாம் என்னால லவ் பண்ண முடியாது மாமா” என்றாள் அங்கை.

லிங்கம் சிரித்தான். அவ்வளவே!

லிங்கத்திற்கு தெரியுமே தன்மீதான அவளின் நேசம் எதற்கும் குறைந்தது இல்லையென்று. அதனை அவள் உணர்த்துவதே அவனுக்கு போதுமானதாக இருக்கும்போது சொல்லிக்காட்டிட வேண்டுமா என்ன?

அவனுக்கும் அவர்களின் காதலின் ஆழம் தெரியும். இருப்பினும், தன் அண்ணனை போல் தானும் காதலிக்க வேண்டுமென்று தானே அவனும் விருப்பப்படுகிறான். அதனால் அங்கையின் கூற்றை மௌனமாக ஏற்றான்.

“இங்கன எம் பக்கட்டே உட்காருத்தா!”

வீரன் சொல்லிட அவன் பக்கத்தில் அமர்ந்த மீனாளின் பார்வை கடிகாரத்தில் படிந்தது.

“பாஸ் பண்ணிப்புடுவேன் மாமா. நீயி சாதாரணமா இரு” என்றாள்.

வீரன் அவளின் கையோடு கை கோர்த்துக்கொண்டான்.

அவர்களை பார்த்த லிங்கம்…

“வா ஏதும் ஸ்வீட் செய்வோம்” என்று அங்கையை அழைத்துக்கொண்டு சமையலறைக்குள் செல்ல, அங்கு அபி ஏற்கனவே அவல் பாயாசம் செய்ய தயார் செய்து கொண்டிருந்தார்.

லிங்கம் ஆச்சரியமாக ஏறிட…

“அதெல்லாம் மீனா கண்ணு பாஸ் ஆகிடுவாள். முடிவு வந்ததும் உடனே இனிப்பு உண்கனும்ல அதேன் செய்யுறேன்” என்றார்.

“ரிசல்ட் வந்திடுச்சா அமிழ்தா?” பாண்டியன் கேட்டுக்கொண்டே வர, “இந்த நேரம் இன்னைக்குன்னு பார்த்து நகருவேணாங்குது” என்று பாக்கினை இடித்தார் மீனாட்சி.

பல வருடமாக வீரனின் எதிர்பார்ப்பாயிற்றே இது. ஆதலால் குடும்பமே இந்த நாளை ஆவலாக எதிர்நோக்கினர்.

கடிகாரம் ஓசை எழுப்பிட,

பாண்டியன் சென்று தொலைக்காட்சியை உயிர்பித்து செய்தி அலைவரிசையை வைத்திட,

வீரன் அதற்கு உரித்தான இணைய தளத்தின் பக்கத்தினை திறந்து, மீனாளின் தேர்வு எண்ணை அழுத்திட, திரையில் புள்ளியாய் சுழன்று மீனாளின் தேர்வு முடிவு ஒளிர, தொலைக்காட்சியில் மாநில அளவில் யூபிஎஸ்சி தேர்வில் முதலிடமும், இந்திய அளவில் ஐந்தாவது இடமும் என்று மீனாளின் பெயர் ஒலித்தது.

“தங்கப்பொண்ணு.” அத்தனை நெகிழ்வாய் கரகரப்பாக வீரனின் குரல் விளித்திட… தன்னவளை சுற்றம் மறந்து தனக்குள் பொதிந்து கொண்டிருந்தான்.

மீனாளை குடும்பமே கொண்டாடி மகிழ்ந்தது.

முடிவுகள் வந்த சில மணி நேரங்களில் பல செய்தி ஊடகங்களிலிருந்து ஆட்கள் வந்திட, அனைவரும் திக்குமுக்காடி நின்றனர் என்று தான் சொல்ல வேண்டும்.

“கனவு என்னுடையதா இருந்தாலும், இதை அடைவதற்கு முழுக்காரணம் என் மாமா தான்” என்று மீனாள் வீரனை கைகாட்டிட… “அவங்களுக்காக நான் படிக்க முடியாதே! முழு உழைப்பும் அவங்களுடையது தான்” என்று வீரன் மீனாளையே அவளின் வெற்றிக்கு சொந்தமாக்கியிருந்தான்.

மருதன் இந்த பெருமைக்கு காரணம் நீதான் என்று வீரனை தழுவி விடுவிக்க, மகாவும், அபியும் அங்கையுடன் சேர்ந்து பலவித உணவுகளை செய்து இரவு உணவு நேரத்தை அமர்க்களப் படுத்தியிருந்தனர்.

“எப்போ போஸ்டிங் போடுவாங்க?”

உணவு நேரம், நாச்சி கேட்டிட,

“அடுத்தவாரம் நேர்முகத்தேர்வு இருக்கு நாச்சி. அப்போ பயிற்சி எங்கன்னு சொல்லுவாங்க. எங்க? எப்போ? எத்தனை மாசத்துக்குன்னு” என்று வீரன் விளக்கமாத் தெரிவிக்க, மீனாள் அமைதியாக உண்டு முடித்து எழுந்து கொண்டாள்.

“ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்குது தங்கம்.” அறைக்குள் வந்ததும் தன் கை அணைவில் தன்னவளை வைத்துக்கொண்டு வீரன் சொல்லிட, அவனின் கழுத்தைக் கட்டிக்கொண்டு கதறிவிட்டாள் மீனாள்.

****************

சன்னல் திண்டில் முகம் முழுக்க சோகத்தோடு அமர்ந்திருந்தாள் மீனாள்.

வீரன் அவளுக்குத் தேவையானவற்றை பார்த்து பார்த்து பெட்டியில் அடுக்கிக் கொண்டிருந்தான்.

“மாமா ப்ளீஸ்…”

பலமுறை கெஞ்சிவிட்டாள்.

அவனை அணைத்துக்கொண்டு அழுது புலம்பிவிட்டாள்.

வீரன் சற்றும் இறங்கி வரவில்லை.

“நான்பாட்டுக்கு சொல்லிட்டே இருக்கேன். நீயி எடுத்து வச்சிட்டு இருந்தால் என்ன அர்த்தம் மாமா?” மூக்கு விடைக்க, அழுகையை கட்டுப்படுத்தியவளாகக் கேட்டிருந்தாள்.

“போய் தான் ஆவணும் அர்த்தமாட்டிக்கு” என்ற வீரன், பெட்டியினை இழுத்து மூடி எடுத்து வைத்தவனாக அப்போதுதான் அவளின் முகம் பார்த்தான்.

“கஷ்டப்பட்டு படிச்சது வீணாப்போவும் தங்கம். ஒழுங்கா போறதுக்கு மனசை தயார்படுத்திக்கோ” என்றான். அழுத்தமாக.

“ஏன் வீரா புரிஞ்சிக்க மாட்டேங்கிற…?” அவ்வளவு ஆதங்கம் அவளிடம்.

மீனாள் அவனின் பெயர் சொல்வது அரிதிலும் அரிது. அவள் அவனது பெயரை உச்சரிக்கிறாள் என்றால், முழுமையாக அவனுள் அடங்கி உருகும் தருணங்கள் தான் அவை.

இப்போது முதல் முறை வருத்தத்தில் அழைத்திருக்க, அவளின் அருகில் சென்று அமர்ந்து தன் தோளில் சாய்த்துக் கொண்டான்.

“எனக்காகடா!”

அவ்வளவு தான். வீரனின் ஒற்றை வார்த்தை. மீனாளின் அத்தனை பிடிவாதத்தையும் தகர்த்திருந்தது.

அவனை விட்டு பிரிந்திருக்க வேண்டுமென்ற வருத்தத்தை தனக்குள்ளே அழுத்திக்கொண்டே,

“சரி” என்றிருந்தாள். கண்களை திறக்காது.

ஹரியானாவில் ஜிந்த் எனுமிடத்தில் மீனாளுக்கான இரண்டு வருட பயிற்சிகள் நடைபெற இருக்கிறது. அங்கு செல்ல முடியாதென்று அவளின் ஒரு வார பிடிவாதத்தை ஒரு வார்த்தையில் முறியடித்திருந்தான் வீரன்.

அவளே அவனுக்காக எனும் போது, அவன் தனக்காக என்று சொல்லிட மறுத்திடுவாளா என்ன?

“கஷ்டப்படுத்துற மாமா” என்றவள், “நீ போன் பண்ணாலும் பேசவே மாட்டேன் பாரு” என்றவளாக எழுந்து சென்று படுத்துக்கொண்டாள்.

விடிந்தால் ஹரியானாவுக்கு கிளம்ப வேண்டும்.

மீனாளின் உடைந்த குரலில் வீரன் மொத்தமாக உடைந்திருந்தான்.

அவனால் மட்டும் அவனது தங்கப்பொண்ணை விடுத்து எப்படி இருந்திட முடியும்? முயன்று தான் தன் வலியை மறைத்துக் கொண்டிருக்கிறான்.

விளக்கினை அணைத்து, விடி விளக்கை உயிர்பித்தவன் மெத்தையில் படுத்த நொடி, மீனாள் வீரனை இறுக அணைத்திருந்தாள்.

தொடக்கம் மட்டுமே அவளுடையதாக இருந்தது. முடிவென்பதே இல்லாது மீண்டும் மீண்டும் தன்னவளை தனக்குள் உயிர்பித்து உயிர் உடைய வைத்தான். வீரனின் மென்மையான தேடல்கள் யாவும் எங்கோ தூரம் சென்றிருக்க… ஆளுமையாய் தனக்குள் தன் தங்கப்பொண்ணுவை அடக்கி வைத்து, அவளின் வேகத்தில் அடங்கிப்போனான்.

உயிரை சுருட்டி இருவருள் ஒருவர் கரைந்து மீள… மீளா சுழலில் தன்னவனை சிக்குண்ட வைத்து தன்னை தொலைத்து மீண்டாள் மீனாள்.

இருவரின் தேடலும் பிரிவின் துயரை ஈடுகட்டும் விதமாக இருக்க… ஒருவருள் ஒருவர் பாந்தமாக பொருந்தி பேச்சற்று அணைப்பில் கட்டுண்டு இருந்தனர்.

“மாமா…” மெல்ல பிரிந்த மீனாளின் இதழை தனக்குள் உள்வாங்கி விடுத்தவன், “உன்னை அனுப்ப முடியாது… அனுப்பிட்டு எப்படி இருக்கப்போறேன்னு தவிச்சு போயிருக்கேன் தங்கம். திரும்பத்திரும்ப போவலன்னு சொல்லாதே! நானே இருக்க வச்சாலும் வச்சிடுவேன்” என்றவன் மீண்டும் ஒருமுறை அவளுள் மூழ்கி கரை சேர்ந்தான்.

வீரனின் கட்டுப்பாடற்ற கூடலில் தான் அவனின் வேதனையை கண்டு கொண்டவள், தன்னவனுக்காக தன் வருத்தத்தை தள்ளி வைத்து, தன்னை இயல்பாகக் காட்டிக்கொண்டாள்.

“தினமும் போன் போட்டுடு மாமா. மாசத்துக்கு ரெண்டு தரமாவது வந்துடு. வேறென்ன சொல்லணும் தெரியலையே! என்னோடவே வந்திடுறேன் சொன்னியே… முடியாதா மாமா?” என்று கேட்டவள், “முடியாதுதான்ல?” என்றும் கேட்டுக்கொண்டாள்.

“நீயில்லாம இருந்திடுவனா வீரா?”

அவளின் கழுத்து வளைவில் முகம் புதைத்தவன்,

“எதுவும் பேசாதடி” என்று மெல்ல முணுமுணுத்தான்.

“ரெண்டு வருசம் மாமா!”

“உன்னை பேசாதன்னு சொன்னேன்” என்றவன் அவளின் மேனியில் தன் முகம் புதைந்திருந்த இடத்தில் பற்கள் பதிய கடித்து வைக்க… அதுகூட அவளுக்கு இன்பத்தையே கொடுக்க, மீண்டும் அவனிடம் ஒருமுறை தொலைந்து களைந்தாள்.

சோர்வையும் மீறி இருவரும் விழித்திருந்தனர். மீனாள் ஏதேதோ பேசியபடி அவனது மார்பில் படுத்து கிடந்தாள்.

வீரனும் அவளின் தலை வருடியபடி அவள் பேசுவதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்தான்.

“எந்த விசேச நாளுக்குக்கூட வர முடியாது மாமா” என்ற மீனாள், “என்னை விட்டு நீயி மட்டும் ஜாலியா இரு” என்றாள்.

அவள் என்ன பேசுவதென்று தெரியாது வருத்தத்தில் ஏதேதோ பேசுகிறாள் என்பது அவனுக்கு புரிந்தது.

“பசிக்குது மாமா. எதாவது செஞ்சு தா” என்றாள்.

நேர்த்தை பார்த்தான். மூன்றை நெருங்கிக்கொண்டிருந்தது.

“ம்ம்ம்…” என்றவன் எழுந்து ஆடையை மாட்டிக்கொண்டு கீழே சென்று கால் மணி நேரத்தில் திரும்பி வந்தான்.

“என்னது மாமா?”

“கேழ்வரகு மாவு இனிப்பு அடை” என்றவன், அவள் முன் தட்டினை வைத்திட, அவளோ வாய் திறந்து காட்டினாள்.

வீரன் ஊட்டிட வேகவேகமாக உண்டவள்,

“நீயி ஊட்டிவிடாம சாப்பிட்ட மாறியே இருக்காது மாமா” என்று கண் கலங்கினாள்.

“ச்சூ” என்று அவளின் விழிகளை துடைத்தவன், “பார்க்குற, செய்யுற எல்லாம் நெனச்சு அழுவாய்ங்களா? கம்மின்னு இருத்தா. நீயி கலெக்ட்ரா வர நாளுக்கு ஆவலா இருக்கேன்” என்றவன் தன் கண்ணீரை உள்ளுக்குள்ளே மறைத்தான்.

வீரன் கடைசி வாய் உணவினை வைத்திட, அதனை அவனுக்குள் புகுத்தி விலகினாள் மீனாள்.

எழுந்து சென்று கை கழுவி வந்தவனை நோக்கி மெத்தையில் சம்மணமிட்டு அமர்ந்திருந்த மீனாள் கைகளை அகல விரித்து அழைக்க… வீரன் சென்று சன்னல் திண்டில் பக்கவாட்டாக சுவற்றில் சாய்ந்து அமர்ந்து, மீனாளை வாவென்று பார்வையால் அழைத்தான்.

எழுந்து வந்தவள், அவனின் இரு கால்களுக்கும் இடையில் அவனது மார்பில் தன் முதுகை பதித்தவளாக சாய்ந்து அமர்ந்தாள்.

மீனாளின் தோளில் தாடை பதித்து, அவளின் வயிற்றோடு கைகளிட்டு இறுக்கிக் கொண்டவன், அவளின் வெற்றுத்தோள் வழியாக அதரத்தால் ஊர்வலம் செய்து கன்னத்தில் அழுத்தமாக முத்தம் வைத்து நிமிர்ந்து இருளில் பார்வை பதித்தான்.

“உன்னைவுட்டு இருக்கணுமாட்டிக்கு?” என்று உணர்வற்று கேட்டவன், “இருந்துதேன் ஆகணுமாட்டிக்கு” என்று அவள் பக்கம் திரும்பினான்.

“அப்போ நான் போவாமா உன் பக்கட்டுக்கே இருந்திடவா மாமா?” மீனாள் உற்சாகமாகக் கேட்டிட…

“எப்போன்னு இருக்க நீயி?” என்று அவளின் கன்னம் கிள்ளினான்.

“இதுக்காக கஷ்டப்பட்டது அதிகம் தங்கம். விளையாட்டெல்லாம் ஓரமா வச்சிப்புட்டு ஒழுங்கா இருக்கணும். நேரத்துக்கு உண்கனும். சரியா உறங்கனும். உடம்பை பார்த்துக்கோ. நித்தம் போனுல பார்த்துக்கிடலாம். இல்லையா நான் நேரில் ஓடி வந்திடுவேன். நீயி அங்கன பத்திரமா இருக்கணும். என் உசுரு உனக்குள்ள இருக்குன்னு நெனவு வச்சிக்கத்தா” என்று இறுக்கி அணைத்தான்.

வீரனுக்கும் அதற்கு மேல் என்ன சொல்வதென்று தெரியவில்லை.

கண்களை மூடி தாங்கள் இருக்கும் நிலையை அதீத ரசனையோடு உள்வாங்கியவன், அவளின் கன்னம், நெற்றி, உள்ளங்கை என முத்தம் பதித்துக்கொண்டே இருந்தான்.

அவனது உணர்வுகள் யாவும் கரை உடைந்த வெள்ளமாய் அவனையும் மீறி வெளிவந்தது.

“நீயி இப்படிலாம் பண்ணாக்கா… எனக்கு போவவே மனசு வராது மாமா” என்றவள் வீரனின் மீசையை இழுத்து பிடித்து அவனது கன்னத்தில் அழுத்தமாக இதழ் ஒற்றினாள்.

விடியல் வந்த பின்னரும் அவர்களின் நிலையில் மாற்றமில்லை.

பயிற்சிக்காக அவனை பிரிந்திருக்க முடியாது தவிப்பவள் தான், தானில்லை என்றால் அவனில்லை என்பது தெரிந்தும் பின்னாளில் அவனை துடிக்க, தவிக்க வைக்க இருக்கிறாள். பிரிவிற்கு வருந்துபவள், அவன் வருந்துவானென்று தெரிந்தே பிரிவை கொடுக்கவிருக்கிறாள்.

மீனாள் இதுவரை எப்படி எதில் செல்லவிருக்கிறோம் என்று கேட்கவில்லை. அவனை விட்டு இருக்க வேண்டுமென்கிற பரிதவிப்பே அவளை மற்றவற்றை சிந்திக்க விடவில்லை.

“கெளம்பனும் தங்கம்” என்றவன், அவளை தன்னிலிருந்து பிரித்தெடுக்க, அவளோ அவனது நெஞ்சத்தில் தலை முட்டி முடியாதென மறுத்தாள்.

“திரும்ப ஆரம்பிக்காதடி” என்றவன் தூக்கிக்கொண்டு சென்று குளியலறைக்குள் விட்டு, “வெரசா வா” என்று சொல்லி நகர்ந்தான்.

‘இவள் போறதுக்குள்ள என் உசுரு ஆவியாகிடும்’ என்றவன் தலையை உலுக்கிக்கொண்டு எடுத்து வைத்தவற்றை ஒருமுறை சரி பார்த்தான்.

மீனாள் வெளியில்வர, அவள் வேண்டுமென்றே ஏதும் செய்வாள்… கிளம்பத் தாமதப்படுத்துவாள் என்று வேகமாக குளியலறைக்குள் புகுந்துகொண்டான்.

“வெவரந்தேன் மாமா” என்றவளின் குரலில் சிரித்துக்கொண்டான்.

இருவரும் கீழே வர, அனைவரும் அவர்களுக்காகக் காத்திருந்தனர்.

நாச்சியும், அங்கையும் அணைத்து விடுவிக்க, நாச்சியின் மகன் நித்ரனை தூக்கி செல்லம் கொஞ்சினாள் மீனாள்.

“பொங்கலுக்கு கூட வர ஆவாதாத்தா!” மீனாட்சி கேட்டிட, இல்லையென தலையசைத்தாள் மீனாள்.

“நீ வெசனப்படாத மீனாக்குட்டி… நான் கெளம்பி அங்கன வந்துப்புடுறேன்” என்று அவளின் கன்னம் வழித்து முத்தம் வைத்தார் மீனாட்சி.

அபியும், மகாவும் அவளின் பாதுகாப்பிற்காக ஆயிரம் அறிவுரைகள் மாற்றி மாற்றி வழங்கிட, மருதனும், பாண்டியனும் அவளின் தலையில் அழுத்தம் கொடுத்து விலகினர்.

பிரேம் அவளை ஆதுரமாக தோளோடு சேர்த்து விடுவிக்க… “போவோமா?” எனக் கேட்டு லிங்கம் வீரனின் கையிலிருக்கும் பெட்டியை வாங்கினான்.

மீனாள் அதிர்வாய் வீரனை பார்க்க…

“பார்த்து சூதானமா கூட்டிட்டு போவணும் லிங்கு. வழியில நல்ல உணவா வாங்கிக்கொடு” என்று லிங்கத்திடம் பேசியபடி மீனாள் புறம் திரும்பிய வீரன் அவளின் அதிர்வை கண்டுகொண்டதாகக் காட்டிக்கொள்ளவே இல்லை.

அவளிடம் வங்கி அட்டையை கொடுத்தவன்,

“உன் செலவுக்கு வச்சிக்க. எதுவானாலும் வாங்கிக்கோ தங்கம். பணம் போட்டு வுடுறேன்” என்றான்.

“எனக்கு இதெல்லாம் வேணாமாட்டிக்கு. நீயி கூட வா மாமா” என்று அவனை கட்டிக்கொண்டு அழுதுவிட்டாள்.

“வெளிய நிக்கிதோம்” என்று லிங்கம் நகர, மற்றவர்களும் வாயிலில் சென்று காத்திருந்தனர்.

“லிங்கு வரான் தங்கம். பார்த்து போ. சூதானமா இருந்துக்க” என்றவன் அணைப்பைக் கூட்டி நெற்றியில் முத்தம் வைத்து விலக்கினான்.

“அங்க வந்து வுட்டுபோட்டுக் கூட உன்னால வர முடியாத மாமா?” அழுகையோடு கேட்டாள்.

“இன்னும் கொஞ்ச நேரம் எம் முன்னுக்க நீயி நின்னாலும், நானே உன்னை போவவேணாமின்னு நிறுத்திப்புடுவேன். இதுல அங்கன வரை வந்து நான் திரும்புவேணாங்கிறது சந்தேகந்தேன். நீயி புறப்படு” என்றவன், அவளின் அழுகையையும் பொருட்படுத்தாதவனாக கை பற்றி வெளியில் கூட்டி வந்தான்.

“ப்ளீஸ் வீரா…”

அவளின் அந்த குரலுக்கு அவனால் அடுத்த அடியை வைத்திட முடியவில்லை.

“உசுரை உருவாதத்தா!” என்று இடையில் கை குற்றி மேல் நோக்கி தலையை உயர்த்தியவன், இதழ் குவித்து காற்றினை ஊதியவனாக தன்னை நிலைப்படுத்தினான்.

“லிங்கு கூட்டிட்டு போடே!” என்றவன், மீனாளின் முகம் பாராது வேகமாக உள்ளே சென்றுவிட்டான்.

கண்ணீரோடு அவன் முதுகு தெரியும் வரை பார்த்து நின்றவள்,

“போடா!” என சத்தமின்றி உதடசைத்து லிங்கத்துடன் யாரின் முகத்தையும் ஏறிட்டு பாராது புறப்பட்டிருந்தாள்.

வீரனின் முகம் காணாது யாரின் முகத்தையும் பார்த்து போயிட்டு வருகிறேன் என்று சொல்லும் திடம் அவளிடமில்லை.

பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு அவர்களின் அன்பு மனதை கனக்கவே செய்தது.

மொட்டை மாடியில் நின்று செல்லும் தன்னவளை பார்த்திருந்தவனை நெஞ்சமெங்கும் அவளின்றி நகரவிருக்கும் நாட்களின் சுமை கூடி தெரிந்தது.

இதைவிட பெரும் பாரம் ஒன்றை மீனாள் தரவிருக்கிறாள் என்பதை அக்கணம் யாரும் அறிந்திருக்கவில்லை.

அதில் வீரன் மொத்தமாக தன்னிலை இழந்து தவிக்க இருக்கிறான்.

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 40

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
36
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

4 Comments

  1. பிரிவின் துயரங்களும் உணர்வுக் குவியல்களும் – வார்த்தைக்கு அப்பாற்பட்ட கவிதை….