
அழகியே என் மழலை நீ 39
இவை அனைத்தும் வாசலிலே நடந்து முடிந்திருக்க, தெருவில் ஒரு ஆங்காங்கே பலர் கூட்டம் கூட்டமாக நின்று வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தனர்.
அறிவழகன் வெறுப்புடன் மீனாட்சியை பார்த்தவர் ஆரத்தியை வைத்து கொண்டு வேடிக்கை பார்த்து இருந்த மரகதத்திடம் “வந்து ஆரத்தி எடு, அதான் வேலை எல்லாம் முடிச்சிட்டியே அப்புறம் என்ன?” என்று அதட்ட, அதில் பதறி போனவராக தட்டை எடுத்து கொண்டு முன்னேற, வீட்டிற்குள் இருந்து வந்த வேதநாயகி அதை பிடுங்கி நடு ரோட்டில் எறிந்து இருந்தார்.
“என் குடும்ப வாரிசையே அழிக்க பாத்துருக்கா இவளுக்கு ஆரத்தி ஒரு கேடா, எவ்வளவு தைரியம் இருந்தா இவ மறுபடியும் இங்க வந்துருப்பா, என் பேத்தியவே கொல்ல பாத்துருக்கியேடி பாவி. அவ யாரோன்னு தான் அவ மேல வெறுப்ப கொட்டுற, இந்த வீட்டு பொண்ணுன்னு உண்மை தெரிஞ்சதும் நீ மாறிருப்பன்னு தானே டி நான் நினச்சேன். இப்படி நெஞ்சுல வஞ்சம் வச்சு என் பேத்திய பழிவாங்க பாத்துருக்கியே, உனக்கெல்லாம் கொஞ்ச கூட மனசாட்சி இல்லையா? என்று கத்த…
அகரன் “பாட்டி ப்ளீஸ், உள்ள போய் பேசிக்கலாம். ஏற்கனவே எல்லாருக்கும் இங்க அரசல் புரசலா உண்மை தெரிஞ்சுடுச்சு போல, நீங்க சத்தம் போட்டு அதான் உண்மைன்னு காட்டி குடுத்துடாதீங்க பாட்டி”என்று கெஞ்ச, அரவிந்தன் “பாட்டிமா வாங்க என்று வேதநாயகியை அடக்கி உள்ளே அழைத்து சென்றான்.
மீனாட்சிக்கு தலை சுற்றியது. தான் செய்த காரியத்தின் வீரியம் அவருக்கு கொஞ்சம் கொஞ்சமாய் புரிய தொடங்கியது. வேதநாயகியை நினைத்து நெஞ்சம் சில்லிட்டு போனது. அக்கம் பக்கத்தவர்களின் பார்வை வேறு தற்போது அவர் கத்தியது அனைத்தும் சேர்ந்து அவமானமாக இருந்தது.
அனைவரும் உள்ளே சென்று இருக்க, மீனாட்சி மட்டுமே வெளியே இருக்க வாசற் படிக்கு அருகே நின்று அனைத்தையும் பார்த்து இருந்த அர்ச்சனா கண்ணில் பட, அவளை பார்த்து புன்னகைத்த மீனாட்சிக்கு ஒரு நிமிடம் கிடைத்த நிம்மதி அவளின் ச்சீ என்ற ஒற்றை வார்த்தையில் பறி போனது.
அவளும் உள்ளே சென்று விட மீனாட்சிக்கு உள்ளே செல்லவே பயமாக இருந்தது. வீடே அவளுக்கு எதிராக திரும்பி இருந்தது. இப்போது அவருக்கு வேதாவின் மேல் கோபம் வரவில்லை. அவளால் தான் அனைவரும் தன்னை வெறுக்கின்றனர் என்று தோன்றவில்லை. தான் செய்த பாவத்தின் பலனை அனுபவிக்க தயாராகி இருந்தார்.
வேதநாயகி உள்ளே பெண் சிங்கமாய் கர்ஜித்து கொண்டு இருந்தார். உள்ளே வந்தவளை பார்த்தவர் அறிவழகனிடம் திரும்பி இத்தனை செஞ்சதுக்கப்புறமும் இவ உனக்கு வேணுமா? அறிவு. இவளை எங்கையாச்சும் அனுப்பிடு, இல்லைனா டைவோர்ஸ் கூட
பண்ணிடு. இந்த கொலைக்காரியா வீட்டுல வச்சிட்டு அடுத்து யார கடத்துவா யாரை கொல்லுவான்னு எதிர்பார்த்துட்டே இருக்க முடியாது. அப்படியே அடிச்சு தூக்குனா புண்ணியவான் இன்னோரு அடி அடிச்சிருந்தா தூக்கி போட்டுட்டு நிம்மதியா இருந்துருப்போம். இதை அடிமடில கட்டிக்கிட்டு எப்போ எப்போன்னு பயதோடையே இருக்கணுமா? என்று கோவத்தில் மகனிடம் புலம்ப, அவருக்கு தாயின் அதே எண்ணம் தான்.
அரவிந்தன் “வேணாம் பாட்டி. இவங்களை பத்தி இனி யாரும் எதுவும் பேசவும் வேண்டாம். அவங்க பண்ண பாவத்துக்கு அனுபவிச்சுட்டாங்க, இதுக்கு மேலையும் அவங்க திருந்தலைனா மனுஷ பிறவியா பிறந்ததுக்கே அர்த்தம் இல்லாம போய்டும். விடுங்க இத்தோட”என்றவன் “மரகதம் என்று சத்தம் போட, அரவிந்தனின் குரலில் அரண்டு போனவளாக வந்து நின்றவள் “தம்பி நான் ஏதும் சொல்லலிங்க” என்று ஆரம்பிக்க”அவனோ மேல இருக்க அந்த ரூமை ரெடி பண்ணுங்க. இவங்க இனி அங்க தான் இருப்பாங்க. எதுக்காகவும் கீழ வர கூடாது. சாப்பாடு, தண்ணி எல்லாம் நேரத்துக்கு கொண்டு போய் போட்ருங்க, இப்படி ஒருத்தங்க இந்த வீட்ல இருக்காங்கனு நாங்க உணரவே கூடாது. அதுக்கேத்த மாதிரி எந்த சத்தமும் வரவும் கூடாது.
இதுல ஏதாச்சும் ஒண்ணு மிஸ் ஆனாலும் உங்க வேலை மிஸ் ஆகிடும் போங்க”என்று கூற, அவன் கூறியதில் மீனாட்சி தீயை மிதித்தது போல திகைப்புடன் அவனை நிமிர்ந்து பார்க்க அவனோ அவரின் முகத்தை கூட பார்க்க விரும்பாதவனாக, தந்தையிடம் திரும்பியவன் “எங்களை பெத்த கடனுக்கு இந்த வீட்ல ஒரு ஓரமா இருக்க மட்டும் தான் பா, எங்களால அனுமதிக்க முடியும். மறுபடியும் இவங்களை அம்மாங்குற ஸ்தானத்துல வைக்கறதுக்கு என் மனசு ஒத்துக்களை, எப்போ இவங்க கர்ப்பிணி பொண்ணுன்னு கூட பாக்காம வேதாக்கு அப்டி ஒரு துரோகத்தை பண்ணாங்களோ அப்போவே அம்மானு சொல்ல கூடிய தகுதி இழந்துட்டாங்க”என்று அவன் கூற, பெருமூச்சு ஒன்றை வெளியிட்ட அறிவழகன் அவனின் தோளை தட்டி விட்டு அவரின் அறைக்கு சென்றவர் மீனாட்சியின் பொருட்கள் அனைத்தையும் எடுத்து வந்து ஹாலில் போட்டவர் மரகதத்திடம் இதை அந்த அறையில் வைத்து விடுமாறு கூறி விட்டு உள்ளே சென்று கதவை அடைத்து கொண்டார். மீனாட்சியின் முகத்தில் அடித்தது போல் இருந்தது.
அனைவரும் சென்று விட, அர்ச்சனாவிடம் வந்த மீனாட்சி அவளின் முகத்தை தொட வர, அவரின் கையை தட்டி விட்டவள் “என்னை தொடாதே, உன்னை பார்க்கவே அருவருப்பா இருக்கு. உன்னை மாதிரி எனக்கும் தான் அவங்களை பிடிக்காம இருந்துச்சு. அதுக்கப்புறம் அவங்க நம்ம சொந்தம்னு தெரிஞ்ச புறம் தான் நான் நல்லா அவங்க கிட்ட பேசினேன். எவ்ளோ நல்லவங்க தெரியுமா? செழியன் அண்ணனுக்கு சரியான ஜோடி அவங்க தான். அவங்களை போய் குழந்தைகளோட கொல்ல பாத்துருக்கீங்களே? ஐயோ எனக்கு இதெல்லாம் நீங்க தான் செஞ்சதுனு சொல்லும் போது நம்பவே முடில. எங்க அம்மா எங்க அம்மானு எவ்ளோ பெருமையா நான் சொல்வேன் தெரியுமா? இப்போ ச்சைக்.அண்ணன் சொன்ன மாதிரி தான். உங்களுக்கு எங்களுக்கும் இருக்க பந்தம் இத்தோட முடிஞ்சது. உன் அன்பும் வேணாம் சொந்தமும் வேணாம். என்னை பொறுத்தவரை எனக்கு அம்மா இருந்தாங்க இப்போ இல்லை அவ்வளவு தான்.”என்றவள் உள்ளே சென்று விட, மீனாட்சி அப்படியே தரையில் அமர்ந்தவள் தலையில் அடித்து கொண்டு கத்தி அழ முற்பட, அவரால் அதுவும் முடியவில்லை. அவரின் இழி நிலையை எண்ணியவளுக்கு தான் அன்றே இறந்திருக்கலாம் என்று தான் தோன்றியது.
மறுநாள் காலை அனைவர்க்கும் முன்பாகவே விடியற் காலையே லாவண்யா கிளம்பி மருத்துவமனைக்கு வந்து இருந்தாள்.வேதாவிற்கு தலை வாரிக் கொண்டு இருந்தான் செழியன். அவர்களின் முன் வந்து நின்றவளை கண்ட வேதா அக்கா என்று அழைக்க,”அவங்க பண்ணதுக்கும் எனக்கு எந்த சம்பந்தமும் இல்லை வேதாமா. என்ன நம்புறியா நீ?”என்று கண்ணீருடன் கேட்டவளை வேதாவும் செழியனும் திகைப்பாக பார்க்க, அப்போது தான் அனைவருமே உள்ளே வந்து இருந்தனர்.
செழியன்”என்ன அண்ணி என்ன சொல்றிங்க புரியல?”என்று கேட்க…
லாவண்யா”அது சவிதாவும் அவங்க அத்தையும் பண்ணது எனக்கு எதுவும் தெரியாது”என்று கூறினாள்.
வேதா”அக்கா உங்களை யார் என்ன சொன்னாங்க, எனக்கு தெரியும் உங்களை பத்தி நீங்க எதுவும் போட்டு குழப்பிக்க வேண்டாம் அக்கா.
செழியனோ “இதுல உங்க தப்பு எதுவுமே இல்லை அண்ணி. நீங்க முதல்ல எதுக்கு இப்படி ஒரு எஸ்பிளானேஷன் குடுக்குறீங்கன்னே எனக்கு புரியல”என்றவன் அரவிந்தனை திரும்பி பார்க்க, அவனோ நேற்று நடந்த அனைத்தையும் கூற,”அடுத்தவங்க ஆயிரம் சொல்வாங்க அண்ணி. உங்களை பத்தி எங்களுக்கு தெரியும்”என்றவன் அதோடு அதற்கு முற்று புள்ளி வைத்தான்.
அப்போது தாமரையும் வேதாவிற்கு சமைத்து எடுத்து வந்திருக்க, அனைவரும் வேதாவை பார்க்க வந்திருந்தனர் தன்வி அனு உட்பட. அனைவரும் நலம் விசாரித்து விட்டு அறையிலேயே அமர்ந்திருந்தனர். அவர்களுக்கு அவளை மீண்டும் காண்பதே அவ்வளவு மகிழ்வாய் இருந்தது. இதற்கு இடையில் செழியன் மருத்துவரை காண சென்றிருந்தான்.
தாமரை அவளுக்கு இட்லி எடுத்து வைத்து தர, வேதா தட்டை கையில் வாங்கவே தெம்பில்லாமல் நடுங்க, தாமரை அனைத்தையும் எடுத்து வைத்து கொண்டு இருந்தார். தேவ் அதிரன் அகரன் அரவிந்த் ஆதி அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தவன், வேதாவின் கரங்கள் நடுங்கியதை கவனித்துவிட, சிறிதும் யோசிக்காமல் அவள் அருகே சென்று அவளின் கையில் இருந்து தட்டை வாங்கி இருந்தான்.
அனைவரும் யோசனையாக அவனை பார்க்க, இட்லியை பிய்த்து அவளுக்கு ஊட்ட, ஒரு வாய் வாங்கிகொண்டவள், “தேங்க்ஸ்ண்ணா” என்று கூற, அவனோ அவளின் மண்டையில் கொட்டியவன், “புருஷனுக்கும் பொண்டாட்டிக்கும் வேற வேலையே இல்லை. எதுக்கெடுத்தாலும் தேங்க்ஸ்” என்றவன் முகத்தை சுழித்து கொள்ள, வேதாவின் இதழ்களோ புன்னகைத்தது.
தாமரை தேவ்வை விழி விரித்து பார்த்தவர், “அவளே சாப்பிடுவானு தான் நான் குடுத்தேன். நீங்க குடுங்க தம்பி நான் ஊட்டி விடுறேன்” என்று கேட்க, அவனோ, “அவளுக்கு முடியல ஆண்ட்டி கை எல்லாம் நடுங்குது. இதுல என்ன இருக்கு. நானே ஊட்டுறேன்” என்றவன் அவளுக்கு பொறுமையாக ஊட்ட, தாமரை அனுவை பார்க்க, அவளோ நெகிழ்வுடன் இருவரையும் பார்த்து கொண்டிருந்தாள்.
அதிரனுக்கும் ஆதிக்கும் கண்கள் கலங்கியது. மற்றவர்களுமே அவர்களின் பிணைப்பை மகிழ்வுடன்தான் பார்த்து கொண்டிருந்தனர். செழியன் கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தவன்,
“ஹேய் என்ன நடக்குது இங்க. எல்லாருமே இங்க இருக்கீங்க? நர்ஸ் திட்டுவாங்க” என்றவாறே வந்தவன் வேதாவின் அருகில் அமர, தேவ் அவனுக்கும் சேர்த்தே ஊட்ட தொடங்கினான்.
அவனோ, “டேய் எனக்கு வேணாம், நான் அப்புறம் சாப்பிட்டுகிறேன். அவளுக்கு குடு” என்று கூற, அவனோ, “டைம் ஆச்சுடா.. இனி எப்போ சாப்பிடுவ அப்படியே நீயும் உள்ள இறக்கு” என்றவன் தாமரையிடம் மேலும் நான்கு இட்லிகளை வாங்கியவன், அவர்கள் இருவருக்கும் ஊட்ட, மூவரும் ஏதோ பேசி சிரித்தபடி இருக்க, மற்றவர்களுக்கு அவர்களின் பிணைப்பு அத்தனை நெகிழ்ச்சியாய் இருந்தது.
இரண்டு நாட்கள் கடந்திருந்தது.அர்ச்சனா ஆதிக்கு கால் செய்ய அவன் எடுக்கவே இல்லை.என்ன ஆனாலும் சரி என்று அவன் அலுவலகத்துக்கே வந்து இருந்தாள். முதலில் அவளை பார்க்க முடியாது என்றவன் அவள் மதியம் வரை அங்கையே உக்காந்து இருப்பதை கண்டு அவளை உள்ளே அழைத்தான்.
அறைக்குள் வந்தவள் அவனை பார்க்கவே சங்கடமாக இருக்க தலை குனிந்தே இருக்க அவனோ “என்னாச்சு அர்ச்சனா நான் தான் வேலை இருக்கு அப்புறம் பாக்கலாம் சொன்னேனே. புரிஞ்சுக்க மாட்டியா? எனக்கு கொஞ்சம் டைம் குடு. “என்றவனை நிமிர்ந்து பார்த்தவள் “அந்த டைம் என்னை மறக்கறதுக்கு இல்லை தானே ஆதி”அழுகை கலந்த குரலில் கேட்க அவனுக்கே அவளின் கேள்வியில் ஒரு மாதிரியாகி விட்டது.
வேகமாக அவளின் அருகில் வந்து அவளை அணைத்து கொண்டவன்”என்ன பேசற அர்ச்சனா. எனக்கு வேதா விஷயத்துல கொஞ்சம் வருத்தம் இருந்துச்சு. என்னால உங்கம்மா செஞ்சத ஏத்துக்க முடியல. அதுக்கு கொஞ்சம் நேரம் தேவை பட்டது. அதனால தான் உன்னோட என்னால சரியா பேச முடியல. அப்புறம் நானே அதையும் சரி பண்ணிட்டேன். அதுக்காக நீ இந்தளவு யோசிக்க வேண்டியது இல்லை”என்றவன்”அந்தம்மா செஞ்சதுக்காக உன்னை விட்டுருவேன்னு நீயா எப்படி முடிவு பண்ணலாம்”என்றவன் அவளின் அழுகையை துடைத்து விட்டு அவளை தன்னை பார்த்து நிற்க வைத்தவன் உங்கிட்ட நான் ஒரு விஷயம் சொல்வேன் அர்ச்சனா. அதை நீ எப்படி எடுத்துக்கிட்டாலும் சரி. இதை செழியன் கிட்ட சொன்னாலும் சரி எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை”என்றவன் பீடிகை போட, அர்ச்சனா ஒன்றும் புரியாமல் நிமிர்ந்து அவனை பார்த்தாள்.

