Loading

அத்தியாயம் – 3

தன் தாய் கஸ்தூரி எங்குவென்று கண்டுபிடித்து “நிவே இவளை தனியா விடாத.. அங்க அப்பா வேற முறைச்சிட்டு இருக்காரு..” என்று மனைவிக்கு மட்டும் கேட்கும் குரலில் கூறியவனின் கூற்று துருவினியின் செவியிலும் விழுந்திட, “மாமா இவ அடங்குவானு நினைக்கறீங்களா.?” என்று கேட்டாள் அடக்கப்பட்ட சிரிப்புடன்.

இதில் திருதிருவென சிவா முழிக்க, “இவளுக்கு எல்லாம் பெரிய மாமா தான் சரிப்பட்டு வருவாங்க.. நம்ம என்ன சொல்றோமோ அதைய கேட்டுட்டா அவ வரலாறே மாறிரும்னு சொல்லுவா..” என்று தமக்கையை கிண்டலடித்தாள்.

பாவமாக சிவாவோ “அத்தை ரொம்ப பாவம் துரு.. இவளை வெச்சு எப்படி தான் சமாளிக்கறாங்களோ.?” என்று நொந்து போய் நிற்க, இவர்களின் உரையாடலை கேட்டும் கேட்காததுமாக வேடிக்கை பார்த்திருந்த ஆதிரா “அத்தை எப்ப வீட்டுக்கு போறது.?” என்றாள் கேள்வியாக.

“இன்னொரு பூஜை முடிஞ்சு சாமியை பார்த்துட்டு சாப்பாடு வாங்கிட்டு போயிரலாம்..” – கஸ்தூரி

“வீட்டுக்கு போய் அம்மிணி என்ன பண்ண போறீங்க.?” – துருவினி

“நீ வேற அவளை ஏத்தி விடாத துரு.. அவளே இப்பதான் கம்முனு இருக்கா..” – நிவேதா

சிவாவை அங்கிருந்தவர்கள் ஏதோ வேலையாக அழைத்ததில் அவன் நகர்ந்திட, “அம்மா ஏன் வரல.?” என்று துருவினியிடம் கேட்டாள் நிவேதா.

“அப்பா சொந்தத்துல யாருக்கோ கல்யாணம்னு அங்க போகணும்னு தான் வரல அக்கா.. அதான் நாங்க ரெண்டு பேரும் வந்துருக்கோமே..” என்று அன்னையும் இங்கு வராததற்கான காரணத்தை உரைத்தாள்.

வீரச்சாமியின் உடன்பிறந்த ஒரே தங்கை தான் கல்யாணி.. அவரின் மகள்கள் ஆதிராவும் துருவினியும். கணவர் மாணிக்கம்.. சொந்தமாக ஹோட்டல் ஒன்று வைத்துள்ளார்.. கல்யாணி இல்லத்தரசியாக தான் இருக்கிறார்.

ஆதிரா படிப்பை முடித்து விட்டு இரண்டு வருடங்களாக சென்னையில் ஐடி கம்பெனியில் வேலை செய்கிறாள். இப்போது தான் துருவினி கல்லூரியின் இறுதியாண்டில் இருக்கிறாள்.

வருடா வருடம் திருவிழாவிற்கு தங்கையின் குடும்பத்தை மறக்காமல் அழைத்து விடுவார் வீரச்சாமி. அண்ணனின் அழைப்பிற்கிணங்க குடும்பத்துடன் வந்து விடுவார் கல்யாணியும். இந்த வருடம் மாணிக்கத்தின் நெருங்கிய உறவு முறையில் திருமணம் ஒன்று இருக்க, திருமணத்திற்கு கட்டாயமாக செல்ல வேண்டிய சூழ்நிலையில் மகள்களை மட்டும் அண்ணனின் வீட்டிற்கு அனுப்பி வைத்திருந்தார்.

ஆறெழு வருடங்களாக அவ்வூர் பக்கமே செல்லாமல் இருந்த ஆதிரா அன்னையின் வற்புறுத்தலுங்கிணங்கவே வந்திருந்தாள். அதுவும் திருவிழாவிற்கு முந்தைய நாள் சென்று விட்டு அடுத்த நாளே கிளம்பி வந்து விடுவேன் என்ற கட்டளையுடன். நாளை திருவிழா என்பதால் இன்று மதியம் தான் கிளம்பி வந்திருந்தனர் இருவரும்.

‘ப்ச் என்ன பண்றதுனு தெரிலயே.?’ என்று மனதினுள் புலம்பியபடி சுற்றியும் பார்வைதனை சுழல விட்டவளின் கருமணிகளில் சிக்கினான் கன்னங்குழியால் அவளை மயக்கியவன்.

‘ஐ நம்ம ஆளு’ என்ற குதூகலத்துடன் யாருக்கும் சந்தேகம் வராதவாறு ஆதிரா பார்க்க, முதலிலேயே அவளின் புறம் ஒரு கண்ணை வைத்திருந்த ரூபனும் பெண்ணவள் பார்வையை திருப்பிய நேரத்தில் ஆதிராவை பார்த்திட, இருவரின் கண்ணாமூச்சி விளையாட்டும் கணக்கின்றி தொடர்ந்தது.

அருகில் இருந்தவன் ஏதோ கூறியதற்கு கேசத்தை கோதியவாறு தலையை சாய்த்து கன்னங்குழி விழுக ரூபன் சிரித்திட, ‘ஸ்ஸ்ஸ்ப்ப்பா சிரிச்சே கொல்றானே.! அதுவும் அந்த கன்னங்குழி இருக்கே..!!’ என்று நினைத்தவளுக்கு பெருமூச்சு எழுந்தது.

“ஆதி” என்று சிணுங்கலுடன் மாங்காயை சாத்விக் சுட்டிக்காட்ட, ‘உனக்கு இப்ப இதுவாடா முக்கியம்’ என்று உள்ளுக்குள் கதறியவள் “எதுக்கு உன் அப்பத்தா என்னைய மிதிக்கவா.? உன் அம்மாகிட்டயே கேளு போ” என்றவள் நிவேதாவின் கையில் சாத்விக்கை திணித்தாள்.

“ஏய் ஏன்டி.?” என்று அழுத மகனை சமாதானப்படுத்திய நிவேதா ஆதிராவின் தலையில் கொட்ட, “ஸ்ஸ்ஸ்ஸ் அக்கா ஏன்.?” என்று பாவமாக தலையை தேய்த்து கொண்டு கேட்ட ஆதிராவை பார்த்து வாய்மூடி சிரித்தான் சாத்விக்.

“இனி ஆதி ஆதினு வாடா.. முன்னாடி இருக்கற ரெண்டு பல்லை தட்டி கைல குடுக்கறேன்..” என்று செல்லமாக ஆதிரா கோவித்து கொள்ள, இதை ஓரக்கண்ணால் பார்த்திருந்த ரூபனுக்கு புன்னகையை அடக்க பெரும்பாடாக இருந்தது.

சாதாரணமாக ஆதிரா ரூபனை பார்த்த சமயம் சரியாக அவனும் பெண்ணவளை பார்க்க, அவள் தன்னை பார்ப்பாள் என்பதை எதிர்பார்க்காத ஆடவன் சட்டென்று தலையை திருப்பி கொண்டான்.

இருந்தும் அவனின் மனதோ ‘ச்சே அவங்க என்ன நினைச்சிருப்பாங்க.? இப்படியா பார்த்து தொலைவ.?’ என்று கடிந்து கொண்டவனுக்கு காரணமின்றி மனதும் படபடவென அடித்தது.

‘அட அட என்னமா நம்ம ஆளு வெக்கப்படறான்.. கண் கொள்ளா காட்சியா இருக்கே..’ என்று நினைத்த ஆதிராவுக்கு சிரிப்பு தான் வந்தது. ஆண்களின் வெக்கம் அழகோ அழகு என்று எப்போதோ படித்ததும் ஞாபகத்திற்கு வர, ‘ம்ம்ம்ம் அது உண்மைதான் போல..’ என்று நினைத்தவளையும் வெக்கம் தொத்தி கொண்டதும் உண்மையே.

“அண்ணே என்ன ஆச்சு.?” என்று உடன் இருந்தவன் ரூபனிடம் வினவ, “ஒண்ணுமில்லயேடா.. எனக்கு என்ன.?” என்று சமாளித்தவன் மறந்தும் ஆதிராவின் புறம் பார்வையை திருப்பவே இல்லை..

ஆனால் ஆதிராவோ ஆடவனின் பாவனைகளை கடைக்கண்ணால் ரசித்து உள்ளுக்குள் சிரித்தும் கொண்டாள். படத்தில் பார்ப்பது போன்றும் கதையில் படிப்பது போலும் ஆறடி உயரமும், கட்டுமஸ்தான உடல்வாகும் இல்லை..

தினமும் நாம் பார்க்கும் பத்து பதினொரு ஆண்களில் ஒருவன் தான் இவனும். ஆனால் அந்த கன்னங்குழி சிரிப்பு மட்டும் அவனுக்குரிய ஸ்பெஷல் போலும். ஒருமுறையாவது ஆடவனின் கன்னங்குழி சிரிப்பினை ரசிக்க தூண்டி விடும் பார்ப்பவர்களை.!!

ரூபனின் நினைவில் நின்றிருந்த ஆதிராவை உலுக்கிய துருவினி “ஏய் பிசாசே.!!” என்று கத்த, ‘ஆத்தாடி’ என்று பயத்தில் நெஞ்சை பிடித்து கொண்டு “ஏன்டி ஏன்.? என் காது என் அவுட்டா.? இப்படி கத்தி தொலையற.?” என்றாள் ஏகப்போக கடுப்புடன்.

“எருமை எருமை நான் கூப்பிட்டது தான் உனக்கு கேட்கலயே.. அப்பறம் கத்தாம என்ன பண்றது.?” – துருவினி

“சரி சரி எதுக்கு கூப்பிட்ட.?” – ஆதிரா

“அந்த ரெட் சர்ட் நல்லா இருக்காங்கல்ல.?” என்று மெல்லிய குரலில் துருவினி கூறிட, “அக்கா கிட்ட பேசற பேச்சாடி இது.? கருமம் கருமம் எனக்குனு வந்து சேர்ந்துருக்குது பாரு” என்று வெளிப்படையாகவே தலையில் அடித்து கொண்டாள் ஆதிரா.

“ப்ச் நீ என்னைக்கு எனக்கு அக்காவா இருந்துருக்க.? தங்கச்சினு கூட பார்க்காம அந்த நெட்டச்சி நம்பலனு  நட்டநடுராத்திரில உன் க்ரெஷ் லிஸ்ட்ட எழுதி குடுக்க சொன்னவ தானே நீ.?” என்ற துருவினி இடுப்பில் கை வைத்து முறைக்க, அவளிடம் சரணடைந்த ஆதிரா “ஹிஹிஹிஹி நம்ம சிஸ்டரா இருந்ததை விட ப்ரெண்ட்ஸா இருந்தது தானே அதிகம் பேபி” என்றாள் சமாளிப்பாக.

“த்து உன் நடிப்பு கேவலமா இருக்கு” – துருவினி

“சரி சரி நீ சொன்ன ரெட் சர்ட் யாரு.?” – ஆதிரா

“அங்க இருக்காங்க பாரு..” – துருவினி

‘அய்யய்யோ இவ நம்ம ஆளை தான் சொல்றாளோ.?’ என்ற பதைபதைப்புடன் தங்கை காட்டிய இடத்தில் விழிகளை பதிக்க, ரூபன் போட்டிருந்ததோ ப்ரவுன் சர்ட்.

‘ஹப்பாடி’ என்று நிம்மதி பெருமூச்சுடன் ‘யாருடா அந்த சிவப்பு சட்டை.?’ என்று தேடியவளின் பார்வையில் சிவப்பு சட்டைக்காரனும் சிக்க, “அந்த சிவப்பு சட்டை சூப்பர்.. அப்படிதானே.?” என்று பல்லை கடித்து கேட்டாள் நக்கலும் கேள்வியுமாக.

“எஸ்ஸூ” – துருவினி

“இதைய அவங்க வொய்ப் கிட்டயே சொல்லலாமே..” – ஆதிரா

“மனைவியா.?” – துருவினி

“அந்த ரெட் சர்ட் நம்ம பெத்த அருமை மகன்.. அது கூட தெரிலயானு கேட்டு நான் கடுப்பாகணும் அதுதான் உன் ஆசைனு நானும் அறிவேன்.. கொன்னே போடுவேன் பார்த்துக்க.. நேரங்கெட்ட நேரத்துல மொக்கை காமெடி பண்ணிட்டு இருக்க.?” – ஆதிரா

“ஹிஹிஹிஹி கண்டுபிடிச்சிட்டியா.?” – துருவினி

“மொச புடிக்கற மூஞ்சை பார்த்தாலே தெரியும்டி நீ அதுக்கு எல்லாம் சரிப்பட்டு வர மாட்டேனு..” – ஆதிரா

நறுக்கென்று அவளின் கையை துருவினி கிள்ள, ‘அம்மா’ என்று பதறியவள் “லூசு லூசு” என்று கையை தேய்த்து கொண்டு தள்ளி நின்றாள்.

“நான் என்ன உன்னைய மாதிரினு நினைச்சீயா.? இப்படி இருக்கறது தான் உண்மையான முரட்டு சிங்கிள்..” – துருவினி

“அப்ப நான் மட்டும் என்ன ரெண்டு மூணு லவ்வர் வெச்சுட்டா சுத்தறனா.?” – ஆதிரா

“சுத்துனாலும் சுத்துவ.. உன்னைய நம்ப முடியுமா என்ன.?” – துருவினி

“ஓஹோ அப்படியா.?” என்று கண்ணை சுருக்கி “நீ சிவா மாமாவை சைட்டடிச்சதை நிவே அக்கா கிட்ட சொல்றேன் இரு..” என்றவளின் வாயை மூடிய துருவினி “நான் உன்னைய வெறுப்பேத்த தான்டி சொன்னேன்.. நீ ஏன் நல்லா இருக்கற குடும்பத்துல கும்மியடிக்க பார்க்கற.?” என்றாள் பதறலுடன்.

அப்போதும் அடங்காமல் “நான் ஜொல்லுவேன்.. நான் ஜொல்லுவேன்.. நிவே அக்கா..” என்று ஆதிரா அழைக்க போக, அவளுக்கு பெரிய கும்பிடு போட்ட துருவினி “எம்மா தெய்வமே கோவில்னு பார்க்கறேன்.. இல்ல உன் காலுல விழுந்துருவேன்..” என்றாள் பாவமாக.

“ஹஹஹஹஹஹ யாம் உன்னை மன்னித்தோம் துரு துரு என்கிற துருவினி” என்று இன்னும் தங்கையை வெறுப்பேற்றி ஆதிரா சிரிக்க, “அடங்கவே மாட்டிங்களா.?” என்று முறைத்த நிவேதாவிடம் “நாங்க எல்லாம் நல்ல பொண்ணுக நிவே அக்கா..” என்றாள் ஆதிரா அடக்கத்துடன்.

தலையில் அடித்து கொண்ட நிவேதா ‘நம்பிட்டேன்’ என்றிட, “நீங்க நம்பலனாலும் அதுதான் உண்மை.. உண்மை அக்கா..” என்று ஆதிராவும் துருவினியும் ஹைபை குடுத்து கொண்டு சிரித்தனர்.

ஆதிராவின் பார்வையில் இருந்து ரூபன் மறைந்திருந்தாலும் அடிக்கடி அவள் என்ன செய்கிறாள்.? என்று நோட்டமிட்டவனுக்கு அவள் என்ன பேசுகிறாள் என்று புரியாமல் போனாலும் பெண்ணவளின் பாவனைகளும் சிரிப்பும் வெகுவாக கவர்ந்தது ஆடவனை.!!

‘ச்சே கோவில்டா இது.. தப்பு தப்பு..’ என்று

நெற்றியில் அடித்து கொண்ட ரூபன் தனக்கிட்ட வேலைகளை கவனிக்க அகன்றான்.

கோவிலில் இருந்து வீட்டுக்கு வந்தும் ஆதிராவின் நினைவை ரூபனே கொள்ளையடித்து இருந்தான். ‘இன்னேரம் அவங்க வீட்டுக்கு போய்ருப்பாங்களா.?’ என்று தனக்கு தானே கேட்டு கொண்டவள் ‘அவங்க போனா என்ன.? இல்ல அங்கயே பாய் போட்டு படுத்தாலும் என்ன.? ரொம்ப கெட்டு போய்ட்டடி நீ..’ என்று கடிந்து கொண்டு அந்நிலையில் இருந்து மீள சாத்விக்கை தேடி சென்றாள்.

ரூபனுக்கும் ஆதிராவின் நினைவுதான்.. அவளை பற்றி சிவாவிடம் கேட்கலாமா.? என்று பலவாறாக யோசனையில் சுழன்றவன் பின்பு தான் இருக்கும் நிலைக்கு இதெல்லாம் தேவையே இல்லை என்பதை உணர்ந்து ஆதிராவின் நினைவை தூக்கி எறிய முயன்றான்.

ஆனால் அவ்வளவு எளிதில் உன்னை விட்டு பிரிய மாட்டேன் என்பதை போல் பெண்ணவளின் நினைவே அவனை முழுவதுமாக ஆட்கொண்டிருந்தது.

அவன் பார்த்த பெண்களில் வித்தியாசமாக தான் தெரிந்தாள் இவள்.. மெல்லிடையும் இல்லை அனைவரையும் கவர்ந்திழுக்கும் கொள்ளையழகும் இல்லை.. இருந்தும் பெண்ணவளின் கொழுகொழுவென தோற்றமும் எப்போதும் துறுதுறுவென இருக்கும் அவளின் இயல்பும் தான் ஆடவனை மிகவும் கவர்ந்தது.

அவனிடம் வந்த சிவா “டேய் ரூபன் அம்மா உன்னைய தேடிட்டு இருந்தாங்கடா.. அவங்களை பார்த்துட்டீயா.?” என்று கேட்க, “அவங்க தேடுனதே நீங்க சொல்லி தான் எனக்கு தெரியுது அண்ணே.. நான் போய் பார்க்கறேன்..” என்றவன் அன்னையை தேடி சென்றான்.

யாருடனோ பேசி கொண்டிருந்த அவனின் அன்னையான மங்கை மகன் தன்னை நோக்கி வருவதை உணர்ந்து பேசி கொண்டிருந்த பெண்மணியிடம் ‘வந்தறேன்’ என்றவர் ரூபனிடம் வந்தார்.

“என்னமா என்னைய தேடுனீங்களா.? சிவா அண்ணா சொல்லி தான் எனக்கே தெரிஞ்சுது..” – ரூபன்

“ஆமாபா உன்னைய தேடிட்டு தான் கோவிலுக்கே வந்தேன்.. ஆனா உன்னைய தான் பார்க்கவே முடில..” – மங்கை

“ஒரு போன் பண்ணிருந்தா நானே உங்களைய தேடி வந்துருப்பனே.? எதுக்குமா என்னைய தேடுனீங்க.? ஏதாவது முக்கியமான விசயமா.?” – ரூபன்

“அது வந்துபா…” என்று விசயத்தை கூறாமல் சுற்றியும் பார்த்தவர் “இந்த விசயத்தை கேட்டதுல இருந்து என்னால ஏத்துக்கவே முடிலபா..” என்று பீடிகையுடன் நிறுத்தினார்.

ரூபனுக்கு ஒன்றும் விளங்காமல் “என்னமா.? என்ன விசயம்.? எனக்கு ஒண்ணும் புரியல.. சொல்றதை தெளிவா சொல்லுங்கமா.. யாரு என்ன சொன்னது.?” என்று சற்று பதட்டத்தில் வினவ, “உன் சித்தப்பன் இருந்த நிலத்தை ரெண்டா பிரிச்சு அவன் பையன் ரெண்டு பேருக்கும் பாதி பாதி எழுதி வெச்சுட்டான்பா..”

என்றார் குரல் கம்ம.

அழகிய பூகம்பம் தொடரும்..

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்