
என்னுள் நீ காதலாய் 💞
அத்தியாயம் 38
“நான் இப்போ ரொம்ப சந்தோஷமா இருக்கேன். ஆனா இந்த சந்தோஷம் எப்போ பறிபோகுமோ அப்படின்னு எனக்குள்ள பயமும் இருக்கு. அந்த பயத்துல இருந்து வெளில வர முடியும்னு எனக்கு தோணல. ஏதோ ஒரு அழுத்தம், ஏமாற்றம் மனசுக்குள்ள இருந்துக்கிட்டே இருக்கு. அது என்னன்னு சொல்ல தெரியல.
“அந்த அழுத்தத்துனால நான் உங்களை கஷ்டப்படுத்திவேனோ அப்படின்னு கூட தோணுது. அப்போ ஏன் என்கூட சந்தோஷமா இருந்த அப்படின்னு நீங்க கேட்கலாம். குழந்தை பிறக்கும் போது ஈஸியா இருக்கும்னு சொன்னாங்க. அதுமட்டுமில்லாம எனக்கும் நீங்க வேணும்னு உங்க அன்பை என்னோட மனசு தேடுது.
அதே மனசு தான் நீங்க வேணாம், விலகி இருன்னு சொல்லுது. நான் என் முடிவுல தெளிவா இருக்கேன்” என்று எங்கோ வெறித்து பார்த்தபடி சொன்னாள். அவன் வேதனையை கண்களில் பார்க்க அவளுக்கு துணிவில்லை. இளமாறன் உள்ளுக்குள் தோன்றிய மன அதிர்வை மறைத்து, பெருமூச்சு விட்டு ஆசுவாசமாக அவளை பார்த்தான். அவனும் இப்படித்தானே இருந்தான்.
செந்தமிழ் மீதிருந்த காதலை ஏற்றுக்கொள்ள முடியாமலும், அவளை விலக்கி வைக்க முடியாமலும் கஷ்டப்பட்டான். இளமாறனால் செந்தமிழை புரிந்துக்கொள்ள முடிந்தது. ‘குழந்தை பிறந்தால், அந்தக் குழந்தையின் முகம் பார்த்தால் செந்தமிழ் மாறி விடுவாள்’ என்று அவனுக்கு தோன்றியது. ‘என் காதல் அவளை நிச்சயம் மாற்றும்’ என்று நம்பினான்.
“அங்க பாரு அது உன் அப்பா தான? என்று அவன் கை காட்ட, செந்தமிழ் அவன் காட்டிய திசையில் பார்த்தாள். அவள் அப்பாவை பார்த்து முகம் மலர்ந்தவள் சட்டென முகம் சுருங்கினாள்.
“வா தமிழ்.. உன் அப்பா கிட்ட போய் பேசலாம் என்று அவன் அழைக்க, “வேணாம் இளா..” என்றாள். “வா உன் தம்பி தங்கச்சிங்க இருக்காங்க பாரு. போய் பேசிட்டு வரலாம்” என்று அவன் மீண்டும் அழைக்க செந்தமிழ் அவர்களை பார்த்தாள்.
அப்பா, சித்தி, செந்தமிழின் 2 தங்கைகள், ஒரே செல்ல தம்பி எல்லோரும் அங்கே கடலில் விளையாடிக் கொண்டிருந்தார்கள். உடன் சித்தியுடைய அண்ணன் குடும்பமும் இருந்தது.
தம்பி தங்கைகளை பார்க்க ஆவல் இருந்தாலும், “இருக்கட்டும் என்னை பார்த்தா அவங்க சங்கடப்படுவாங்க” என்றாள். “நீ இரு வர்றேன்..” என்றவன், எழுந்து அவர்களை நோக்கிச் சென்றான்.
செந்தமிழ் அப்பாவிற்கு அருகில் சென்ற இளமாறன், “மாமா எப்படி இருக்கீங்க?” என்று கேட்க, திரும்பியவர், “நான் நல்லா இருக்கேன் மாப்ள. செந்தமிழ் நல்லா இருக்காளா?” என்று கேட்டார். “நாங்க ரெண்டு பேரும் ஒண்ணா தான் வந்தோம். அங்க இருக்கா பாருங்க” என்று அவன் காட்ட அவர் திரும்பி மகளை பார்த்தார். “வாங்க மாமா.. வந்து அவகிட்ட பேசுங்க” என்று அவன் சொல்ல,
“இங்க என்ன நடக்குது. பாசம் இருக்கவ அப்பாவை பார்த்துட்டு வந்து பேச வேண்டியது தான. மகாராணி அங்க இருப்பா. நாங்க வந்து அவளை பார்க்கணுமோ?” என்று அவளுடைய சித்தி கத்தினார்.
ஏற்கனவே செந்தமிழுக்கு சூடு வைத்த விஷயத்தில் அவளின் சித்தி மீது மிகுந்த கோபத்தில் இருந்தவன், ‘தேவையில்லாமல் பிரச்சனை செய்ய வேண்டாம்’ என்ற எண்ணத்தில் அவரைக் கண்டு கொள்ளாமல், அவள் அப்பாவின் புறம் திரும்பி, “இல்ல செந்தமிழ் ப்ரெக்னன்டா இருக்கா. அதான் எழுந்து வரல. நீங்க வந்து பேசுனா சந்தோஷப்படுவா” என்று சொல்ல,
“அதான பார்த்தேன். இதை சொல்லத்தான் வந்தியா? மாசமா இருக்கா, வளைகாப்பு பண்ணனும், பிள்ளை பெக்க கூப்பிட்டு போகணும்னு சொல்லத் தான் வந்தியா?” என்று அவள் சித்தி இன்னும் கோபமாக பேச, ‘இதெல்லாம் என்ன ஜென்மமோ?’ என்று இளமாறன் அவரை அருவருப்பாக பார்த்தான்.
அவளுடைய அப்பாவோ, “அவ நல்லா இருந்தா போதும். அவளை நல்லா பார்த்துக்கோங்க” என்று சொல்ல, “இதுநாள் வரைக்கும் அவளை பார்த்து உன் கைல பிடிச்சு கொடுத்தாச்சு. எங்களுக்கு இன்னும் பிள்ளைங்க இருக்கு. அவங்களை கரை சேர்க்க வேணாமா? அவளை பார்த்துக்கிட்டே இருந்தா போதுமா?” என்று பேசிக் கொண்டே இருந்தார் அவள் சித்தி.
‘அப்பா வந்து செந்தமிழிடம் பேசினால் அவள் சந்தோஷப்படுவாளே’ என்று நினைத்தவன், முகம் சுருங்கிப் போனவாறு திரும்பி அவளுக்கருகில் வந்து அமர்ந்தான். அவளுக்கு இதுதான் நடக்கும், அப்பாவும் சித்தியும் இதுதான் பேசியிருப்பார்கள் என்று தெரியும். “என் சித்தி என்ன சொன்னாங்க?” என்று கேட்டாள்.
அங்கு நடந்ததை அவன் சொல்ல, அவளுடைய சித்தி இளமாறனை மரியாதை இல்லாமல் நீ, வா, போ என்று பேசியது அவளுக்கு வலித்திட கண்ணீரோடு அவர்களையே பார்த்தாள்.
“சாரி டி தமிழ். நீ இவ்ளோ ஃபீல் பண்ணுவன்னு தெரிஞ்சிருந்தா நான் போய் பேசியிருக்க மாட்டேன். நீ வா.. நாம வீட்டுக்கு போகலாம்” என்று அவன் அழைக்க, “இல்ல இருங்க.. போகலாம்” என்றவள் தன் கை விரல்களோடு அவன் கை விரல்களை இறுக்கமாக கோர்த்துக் கொண்டு, அவர்களை கண்ணீரோடு பார்த்துக் கொண்டிருந்தாள்.
‘அவளும் தன்னுடைய நீண்ட நாள் மன பாரத்தை இறக்கி வைக்கட்டும்’ என்று நினைத்த இளமாறன், அவள் அழும் வேதனையை தாங்க முடியாமல் முகம் திருப்பி அமர்ந்திருந்தான். கொஞ்ச நேரம் அழுதவள் கண்களை துடைத்தவாறே, “இளா போகலாம்..” என்று சொல்ல, அவன் எழுந்து அவளுக்கு கை கொடுத்து தூக்கி விட்டான்.
வீட்டிற்கு செல்லும் போதும் இருவருக்குள்ளும் அமைதி தான். வீட்டில் இருந்த புனிதா இருவரின் வாடிய முகத்தைப் பார்த்து, “என்னடா சிரிச்சுக்கிட்டே போனீங்க, இப்படி சோகமா வர்றீங்க?” என்று கேட்க, இளமாறன் பீச்சில் நடந்த கதைகளை சொன்னான்.
அங்கு அமர்ந்திருந்தவள் தலையை ஆறுதலாக வருடித் தந்த புனிதாவை பார்த்து சிரித்தாள் செந்தமிழ். “நீ ஒண்ணும் கவலைப்படாத.. உனக்கு நாங்க எல்லாம் இருக்கோம்ல” என்று அவர் சொல்ல, கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டாள்.
முகத்தை இயல்பாக வைத்துக் கொண்டவள், தோசையும் சட்னியும் செய்து, அவர்கள் இருவரையும் சாப்பிட வைத்து அவளும் சாப்பிட்டு முடித்து அறைக்கு சென்றாள். இளமாறன் மெத்தையில் அமர்ந்து லேப்டாப்பில் ஏதோ வேலைகள் செய்து கொண்டிருக்க, செந்தமிழ் ஒன்றும் பேசாமல் அவனுக்கு முதுகு காட்டி திரும்பி படுத்துக் கொண்டாள்.
அவனும் வேலையில் மும்முரமாக இருக்க, கொஞ்ச நேரம் கழித்து விசும்பல் சத்தமும், செந்தமிழ் முதுகு குலுங்குவதையும் பார்த்து பதறிப் போனவன், வேகமாக அவளை திருப்பி அணைத்துக் கொள்ள, அவளோ இன்னும் இறுக்கமாக அவனை அணைத்துக் கொண்டாள்.
“இன்னும் நீ உன் வீட்டை பத்தி நினைச்சு ஃபீல் பண்றியா?” அவன் கேட்க, அவள் பதில் சொல்லாமல் அழுதாள். “அழாத டி.. என்னாச்சு? இப்படி அழுதுட்டே இருந்தா உனக்கு உடம்புக்கு சேராம போயிட போகுது. குழந்தைக்கும் ஏதாவது பிரச்சனையா ஆகிட போகுது” என்று இளமாறன் பதட்டமாக சொல்ல,
“அந்த குழந்தை வேணாம்னு தான முதல்ல சொன்னீங்க. இப்போ மட்டும் உங்களுக்கு என்ன அக்கறை?” என்று அவள் பதிலுக்கு கேட்டதும், அவளை அதிர்ச்சியாக பார்த்தான்.
“எனக்கு ஒரு உதவி பண்றீங்களா?” அவள் கண்ணீரோடு கேட்க, கேள்வியாய் அவளை பார்த்தவன், “என்ன தமிழ்.. சொல்லு” என்றான்.
“நீங்க இன்னொரு கல்யாணம் பண்ணிக்காதீங்க ப்ளீஸ்” என்று சொன்னவளை திகைப்பாய் பார்த்தான்.
“புனிதாம்மா நம்ம குழந்தையை நல்லா பார்த்துப்பாங்கனு எனக்கு நம்பிக்கை இருக்கு. ஆனா நீங்க இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிட்டா, என் குழந்தையும் என்னை மாதிரியே சித்தி கொடுமை எல்லாம் அனுபவிப்பாளோ. இப்பப்போ தான் நீங்க குழந்தை மேல பாசமா இருக்கீங்க. அதுக்கு முன்ன என் அப்பா மாதிரி கண்டுக்காம தான் இருந்தீங்க.
“எனக்கு ரொம்ப பயமா இருக்கு. நீங்க அந்த குழந்தை மேல அன்பு காட்டலனா கூட பரவாயில்ல. இன்னொருத்தரை புதுசா கொண்டு வந்து அவளை நோகடிச்சுடாதீங்க. நான் பட்ட கஷ்டம் எல்லாம் என்னோட போகட்டும். அவளை எந்த சூழ்நிலையிலும் கஷ்டப்படுத்த மாட்டேன், அவளை அன்புக்காக ஏங்க விடமாட்டேன் அப்படின்னு எனக்கு சத்தியம் பண்ணுங்க.
“இளா அன்னைக்கு கோபத்துல நான் உங்களை ரொம்ப திட்டிட்டேன். கண்டபடி பேசிட்டேன். என்னை மன்னிச்சிடுங்க. நான் உங்க கூட என் வாழ்க்கை முழுக்க வாழணும்னு உங்களை கல்யாணம் பண்ணிட்டு வரல. காலேஜ் சேர்ந்து படிக்கணும்னு ஆசைப்படல. உங்க சந்தோஷத்துக்காக, உங்க பிசினஸுக்காக உதவி கேட்டீங்கன்னு தான் நான் உங்களை கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.
“எப்படியும் இந்த வீட்டை விட்டு போகத்தான் போறோம். புனிதாம்மா சந்தோஷமா இருக்கணும்னு குழந்தை பெத்துக் குடுக்கலாம்னு நினைச்சேன். நான் உங்க சந்தோஷத்தை, புனிதாம்மா சந்தோஷத்தை பத்தி யோசிச்சேன். என் குழந்தையோட சந்தோஷத்தை பத்தி யோசிக்காம போயிட்டேன்.
“தப்பு பண்ணிட்டேன் இளா. நான் பட்ட கஷ்டம் எல்லாம் என் குழந்தைக்கு வந்திடுமோ. யாரும் இல்லாம என் குழந்தையும் அனாதையா நின்னுடுமோன்னு பயமா இருக்கு.
“இப்போ நாளும் கடந்திடுச்சு, அபார்ஷனும் பண்ண முடியாது. நான் என் குழந்தையை தூக்கிட்டு போயிரட்டுமா. நானும் என் குழந்தையும் சேர்ந்து செத்து கூட போயிடுறோம் இளா. என்னால முடியல, எல்லாரும் இருந்தும் எனக்கு யாருமே இல்லாம இருக்கிறது ரொம்ப வலியா இருக்குது. நான் தப்பு பண்ணிட்டேன். நான் இப்போ என்ன பண்ணட்டும்?” என்று முகத்தில் அடித்துக் கொண்டு கதறி அழுத்தவளை, அவள் கைகளை தடுத்து, அவன் கண்களில் கண்ணீரோடு இன்னும் இன்னும் இறுக்கமாக அணைத்துக் கொண்டான்.
அவள் அழுது முடிக்க, அவள் முகத்தை தூக்கி கன்னங்களை கைகளில் ஏந்தி கண்ணீரை துடைத்தான். கலைந்திருந்த அவள் தலைமுடியை சரி செய்தவன், “தமிழ் இங்க பாரு.. என்னை பாரு டி” என்று அவன் கண்களை பார்க்கச் செய்தான்.
“நடந்ததை எல்லாம் விடு. நான் உன்னையும் குழந்தையையும் எந்த கஷ்டமும் வர விடாம பார்த்துக்கிறேன். உங்க ரெண்டு பேரையும் அன்புக்காக ஏங்க விட மாட்டேன். இது என் மேல சத்தியம். நான் உன்மேல வச்சிருக்க காதல் மேல சத்தியம். நீ நம்பி என் கூட இரு. இவ்ளோ நாள் நான் பண்ணதை எல்லாம் மன்னிச்சு எனக்கொரு சான்ஸ் குடு டி.
“நான் உன்கூட நிறைய வருஷம் சந்தோஷமா வாழணும்னு ஆசைப்படுறேன். எனக்கு நீ வேணும் தமிழ். உனக்கு நான், அம்மா, நம்ம குழந்தை எல்லாரும் இருக்கோம். உனக்கும் குழந்தைக்கும் ஏதாவது ஆகிடுச்சுன்னா நானும் உயிரோட இருக்க மாட்டேன். ஐ லவ் யூ டி!” என்றவன் அவள் இதழை கவ்வி முத்தமிட்டான். அவளை மார்போடு அணைத்து அவள் முதுகில் தட்டிக் கொடுத்து தூங்க வைத்தான்.
இரவு தூக்கத்தில் ஏதோ சத்தம் கேட்டு இளமாறன் விழித்துப் பார்த்தால், “என்னை காப்பாத்துங்க.. என்னை யாராச்சும் காப்பாத்துங்க” என்று தலையை இருபுறமும் ஆட்டி செந்தமிழ் தூக்கத்தில் முனகிக் கொண்டிருந்தாள். “தமிழ் என்னை பாரு. என்னாச்சு?” என்று அவள் கன்னங்களில் தட்டி அவன் எழுப்ப, திடுக்கிட்டு கண் விழித்தவள் பயந்து போய் அவனை பார்த்தாள்.
“தமிழ் நான் தான் டி.. ஏன் பயப்படுற?” அவள் பயந்த விழிகளைப் பார்த்து மிரட்சியாய் கேட்டான்.
“இளா என்னை காப்பாத்துங்க ப்ளீஸ்” என்று அவள் உடல் நடுங்கச் சொல்ல, “ஒண்ணும் இல்லடி.. நான் இருக்கேன்ல. நீ பேசாம தூங்கு” என்று அவன் செந்தமிழை அணைத்துக் கொள்ள, “ஆஆ.. அய்யோ வலிக்குது” என்று கத்தினாள்.

