Loading

பெரியவர்கள் அனைவரும் முழித்துக் கொண்டு நின்றாலும், தமிழ் ஒரு முடிவோடு தான் மகி வீட்டுக்கு வந்தாள்.

 

“உங்களுக்கும், அகிலாவுக்கும் கல்யாணம் பேசுவதைப் பற்றிப் பேசிட்டு இருக்கோம் சார்.”

 

“என் கல்யாணத்தைப் பற்றிய முடிவை நீங்க ஏன் எடுக்குறீங்க?” என்று நேரடியாகவே தமிழைத் தாக்க,

 

ருத்ரன் பேச வர ருத்ரனின் கையைப் பிடித்த தமிழ், “நான் பேசிக்கிறேன் மாமா” என்று மெதுவாக அவனிடம் சொல்லிவிட்டு,

 

“ஒத்துக்குறேன் சார், உங்க வாழ்க்கையில் முடிவு எடுக்கிற உரிமை எங்களுக்கு இல்லை தான். ஆனா, என் ஃப்ரெண்ட் வாழ்க்கையில முடிவு எடுக்கிற உரிமை எனக்கு இருக்கு இல்லையா? உங்க வீட்டுல உங்களுக்குப் பொண்ணு பார்த்துட்டு இருக்கிறதா கேள்விப்பட்டோம்.

 

என் பிரண்ட் அகிலாவுக்கு உங்களைப் பிடித்திருந்துச்சு. எங்க வீட்ல பேசினோம், எங்க வீட்ல இருக்க பெரியவங்க ஒத்துக்கிட்டாங்க. அதான் மேற்கொண்டு பெரியவங்க பெரியவங்களோட பேசட்டும்னு உங்க அம்மாகிட்டப் பேச வந்து இருக்காங்க. என்னையும் வரச் சொல்லி இருந்தாங்க, நானும் வந்து இருக்கேன்.” என்று விட்டுத் தமிழ் அமைதியாக,

 

தமிழ் சொல்வதை அமைதியாகக் கேட்டவன், “யார் முடிவு பண்ணாலும் லாஸ்ட்டா தாலி கட்டப் போறது நான் தானே. என்னோட விருப்பம் இல்லாம, நீங்க கல்யாணம் பண்ணனும்னு நினைப்பிங்களோ?” என்று நக்கலாகவே கேட்க,

 

ருத்ரனுக்குக் கோபம் தான் வந்தது. தமிழ் சிரித்துக் கொண்டே, “நீங்கள் கேட்பது சரி சார். அதுக்காக தான் நீங்க வர நேரம் பார்த்து, பேச எங்க வீட்ல இருக்க பெரியவங்களை வரச் சொல்லி இருக்கேனே, அதில் இருந்தே உங்களுக்குப் புரிஞ்சு இருக்க வேணாமா? நீங்க ஸ்கூல் விட்டு இந்த நேரத்துக்கு வருவீங்கன்னு தெரியாமல் கூடவா நான் என் வீட்டுப் பெரியவங்களையும் வரச் சொல்லி இருக்கேன். நானும் வந்து இருக்கேன்” என்றவுடன் மகி தமிழைப் பார்த்துச் சிரித்துவிட்டு,

 

“சரிதான் தமிழு. ஆனா…”

 

“பேசி முடிக்கல சார், உங்க விருப்பம் இல்லாம இந்தக் கல்யாணம் நடக்காது. உங்க மனசுல அகிலா இல்லைன்னு உங்க மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்க. அதுக்கப்புறம், நானும் சரி, என் வீட்டுப் பெரியவங்களுக்கு சரி இதப்பத்தி மேற்கொண்டு பேசமாட்டோம்.

 

அகிலா உடைய வாழ்க்கைக்காக என்று மட்டும் சொல்லாதீங்க. அகிலா வாழ்க்கையே உங்க கையில தான் இருக்கு. அவ உங்களத் தவிர யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டா. இது அவ எனக்குச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. சின்ன வயசுல விவரம் தெரிஞ்சதுல இருந்து நானும், அவளும் ஒன்னு மண்ணா தான் வளர்ந்துட்டு இருக்கோம்.

 

என்னப் பத்தி அவளுக்கும் சரி, அவளைப் பத்தி எனக்கும் சரி, தெரியாத விஷயம் எதுவுமே கிடையாது. இதுக்கப்புறம் முடிவு எடுக்க வேண்டியது நீங்கதான். ஆனா, எதாக இருந்தாலும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்ய எனக்கும் சரி, எங்க வீட்ல இருக்க பெரியவங்களுக்கும் சரி, உங்க அம்மாவுக்கும் சரி விருப்பமில்லை.

 

உங்க விருப்பம் இல்லாம இந்தக் கல்யாணம் நடக்காது. ஆனா, உங்க மனசுல அகிலா இருக்கா என்பது உண்மை. இதுக்கப்புறம் முடிவு நீங்க தான் எடுக்கணும். அவளைப் பத்தி நான் உங்களுக்குச் சொல்ல வேண்டியதில்லை என்று நினைக்கிறேன். ரெண்டு வருஷத்துல நீங்களே அவளைப் பார்த்து இருக்கீங்க.

 

அவ மொத்தமா இந்த வீட்ல இருக்குற எல்லாத்தையும் ஏத்துக்கிட்டு தான் உங்களோட பொண்டாட்டியா வர ஆசைப்படுறா. இதுக்கு மேல இதைப் பிரிச்சுப் பேச நான் விரும்பல. அவ உங்கள எப்படி விரும்பினாளோ, அதே போல தான் உங்க குடும்பத்தையும் விரும்புறா. இதைத் தன் குடும்பமா நினைச்சு மட்டும் தான் இந்த வீட்டுக்குள்ள அடி எடுத்து வைப்பா. உங்க கையால தாலி வாங்கிக்க ஆசைப்படுறா. இதுக்கு அப்புறம் முடிவு எடுக்க வேண்டியது நீங்கதான்.

 

பொறுமையாவே உங்க முடிவு சொல்லுங்க. ஒன்னும் அவசரமில்லை” என்று விட்டுக் கோதையையும் பார்த்துத் தலையாட்டி விட்டு தன் வீட்டுப் பெரியவர்களையும் அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்தாள்.

 

ருத்ரன் தான் வரும் வழியெங்கும் தமிழை முறைத்து கொண்டே வந்தான்.

 

“இப்ப என்ன மாமா உனக்குப் பிரச்சனை? எதுக்கு முறைச்சிகிட்டே வர?” என்றாள்.

 

ருத்ரன் வேகமாக வண்டியை சடன் பிரேக் போட்டு நிறுத்தினான்.

 

தமிழ் ருத்ரன் மீது மோதி நின்றாள்.

 

தமிழ் இப்பொழுது ருத்ரனை முறைத்துவிட்டு, “எதற்கு இவ்வளவு வேகமாக நிறுத்துறீங்க?” என்று கேட்டாள்.

 

“பின்ன நீ மட்டும் அப்படிப் பேசிட்டு வர?”

 

“வேற எப்படிப் பேசணும்? ஒரு விஷயத்தைப் பேசி முடிக்கணும்னு முடிவு பண்ணிட்டு இருக்கேன் மாமா… எந்த ஒரு விஷயத்தையும் பேசாம, நாலா பக்கமும் யோசிக்காமல் சரி பண்ண முடியாது. சரி நேரம் ஆகுது வீட்டுக்கு வண்டியை விடு” என்றாள்.

 

அவளை முறைத்து விட்டு வீட்டிற்கு வண்டியை விட்டான்.

 

அகிலா தமிழுக்காகவும், ருத்ரனுக்காகவும் வீட்டிற்கு வெளியே காத்துக் கொண்டு இருந்தாள்.

 

இருவரும் வந்தவுடன், “மாமா, அவங்க வீட்ல என்ன சொன்னாங்க?” என்று கேட்டாள்.

 

“ஓ இந்த மாமா உன் கண்ணுக்கெல்லாம் தெரிகிறேனா? அது சரி” என்று விட்டு, “பின்னாடி தானே உன் பிரண்டு வரா அவளிடம் கேட்டுக்கோ” என்று உள்ளே சென்று விட்டான்.

 

தமிழைப் பார்த்துவிட்டு அகிலா அமைதியாகி விட, தமிழ் எதுவும் பேசாமல் சமையல் அறைக்குச் சென்று டீ போட்டு எடுத்துக் கொண்டு வந்து அகிலா கையில் ஒன்றைக் கொடுத்துவிட்டு மற்றவர்களுக்கு பிளாஸ்க்கில் ஊத்தி வைத்துவிட்டுத் தங்களது ரூமுக்குச் சென்றாள்.

 

ருத்ரன் தான், “அவகிட்ட எதுவும் பேசலையா?” என்று கேட்டான்.

 

“உன் மாமா மக என் கிட்ட எதாச்சும் கேட்டாளா? உன் கிட்ட தானே கேட்டா, நீ பதில் சொல்லு. சொல்லாட்டிப் போ” என்றவுடன்,

 

அகிலா லேசான விம்மலுடனே வந்து தமிழைப் பின்பக்கம் இருந்து கட்டிக் கொண்டாள்.

 

“தமிழ் உன் கிட்ட மறைச்சிட்டேன்னு உனக்கு என் மேல கோவமாடி” என்று கேட்க,

 

தமிழ் அமைதியாகவே இருக்க, ருத்ரன் இருவரும் பேசட்டும் என்று அமைதியாக இருந்தான்.

 

“தமிழ், உன்கிட்ட மறைக்கணும்னு நினைக்கலடி. ஆனா, எனக்கு அவரப் புடிச்சிருந்துச்சு. உன்கிட்ட சொன்னா…” என்று சொல்லிக் கொண்டு  இருக்கும் போதே,

 

“இப்ப ஏன் சொல்ற? அகிலா, நீ எடுத்துருக்க முடிவு தப்புன்னு எனக்குத் தோணி இருந்தா… அத அப்பவே உன்னைத் தப்பு என்று சொல்லித் தட்டிக் கேட்டு இருப்பேன். நீ எடுத்து முடிவு அதுவும், உன்னோட வாழ்க்கையில் நீ எடுத்த முடிவு சரின்னு எனக்குத் தோணினதால் மட்டும் தான் அமைதியா இருந்தேன். இப்பயும் அதான் சொல்றேன். ரெண்டு வருஷம் பொறுத்து இருந்துட்ட, இன்னும் கொஞ்ச நாள் பொறு. நல்ல முடிவா வரும் என்ற நம்பிக்கை இருக்கு. நீயும் அதை நம்பு” என்று விட்டு அவளது கண்ணைத் துடைத்து விட்டு அவளைக் கட்டிக்கொண்டு அழுதாள் தமிழ்.

 

இருவரையும் பார்த்துச் சிரித்த ருத்ரன், “ரொம்ப தான் பாசம் போல” என்று சொல்ல,

 

“அது உங்களுக்குப் பொறுக்கலையா?” என்று தமிழ் வாயைக் கோணித்துக் காண்பித்து விட்டு வெளியில் செல்ல,

 

“ரொம்ப தேங்க்ஸ் மாமா, எனக்காக வீட்லயும் பேசிட்டு, இப்போ அவங்க வீட்லயும் போய் பேசினதுக்கு” என்றாள்.

 

“ஏன் அகிலா, உன் மாமா ஒரு விஷயத்துல தப்புப் பண்ணா, எல்லா விஷயத்துலயும் தப்பான முடிவு தான் எடுப்பானு நினைச்சிட்டியா?” என்று குற்ற உணர்ச்சியுடன் கேட்க,

 

“ப்ளீஸ் மாமா, இப்ப நான் தமிழப் பத்திப் பேச விரும்பல. இப்ப இல்ல, எப்பவுமே என்னால உங்களைத் தமிழ் விசயத்துல மன்னிக்க முடியாது. நீங்க தமிழைப் பிடிக்கலைன்னு சொன்னது கூட, எனக்குத் தப்பா தெரியல. ஆனா, அவ உங்களை விரும்புறா என்ற ஒரே காரணத்துக்காக தான், நீங்க விரும்பின ஆனந்தியைத் தப்பா பேசுறான்னு நீங்க சொன்னீங்க பார்த்தீங்களா? அந்த விஷயத்தை நானும் சரி, அண்ணனும் சரி, காயத்ரியும் சரி. எப்பவுமே எங்களால ஏத்துக்க முடியாது.

 

அவளப் பத்தி நாங்க சொல்லி தான் நீங்க புரிஞ்சுக்கணுமா என்ன? அவளும் உங்க கூட வளர்ந்தவ தான மாமா. உங்களால புரிஞ்சுக்க முடியலன்னா? இனி நீங்க புரிஞ்சுகிட்டா என்ன? புரிஞ்சுக்கலைன்னா என்ன மாமா” என்று விட்டு வெளியில் செல்லும் போது,

 

“அகிலா எனக்கும் கொஞ்சமாச்சும் பேச டைம் கொடுங்க. நான் என்ன நினைக்கிறேன் என்று சொல்லக் கொஞ்சம் கூடப் பேசவே டைம் கொடுக்க மாட்டீங்களா? நீங்க எல்லாம் பேச மட்டும் டைம் வேணும்னு கேக்குறீங்க இல்ல. அப்ப நானும் பேச, எனக்குக் கொஞ்சம் டைம் கொடுக்கணும் இல்ல.

 

நான் என்ன சொல்ல வரேன்னு கொஞ்சமாவது காது கொடுத்துக் கேட்டா தானே என் பக்கம் தப்பு இருக்கா, சரி இருக்கான்னு யோசிக்க முடியும். ஒத்துக்கிறேன், நான் பண்ணது தப்புதான். நீ சொன்ன மாதிரி நான் தமிழை நம்பி இருக்கணும் தான்.

 

ஆனால், அவ ஏற்கனவே வந்து இந்த மாதிரித் தப்புன்னு சொல்லி இருந்தா பரவால்ல.”

 

“அவளுக்கு உங்க விருப்பமே தெரியாது மாமா, அப்புறம் எப்படி அந்தப் பொண்ணு தப்பான பொண்ணுனு சொல்லுவா? அவ விரும்புறா என்பதை ஃபர்ஸ்ட் உன்கிட்டச் சொல்லணும்னு நினைக்கல. வீட்ல கல்யாணத்தப் பத்தி பேசுறாங்கன்னு அவ கேட்டதால தான், அவங்க பேசுறதுக்கு முன்னாடி அவளோட விருப்பத்தை உங்ககிட்டச் சொல்லணும்ன்றதுக்காக வந்து சொன்னா…”

 

“அவ சொன்னப்ப நான் எதுவுமே சொல்லலையே”

 

“ஒத்துக்கிறேன், அவ சொன்னப்ப நீங்க எதும் சொல்லல. நீங்க ஒரு பொண்ண விரும்புறீங்கனு மட்டும்தான் சொன்னீங்க. ஆனா, அதுக்கப்புறம் அந்தப் பொண்ணு சரியில்லைன்னு…”

 

“ப்ளீஸ், நான் சொல்றதையும் கேளு அகி… என்னை மாதிரி ஒரு சூழ்நிலையில நீ நின்றிருந்தனா… அப்போ உன்கிட்ட ஒருத்தன் வந்து நீ விரும்புற பையன் தப்பான பையன்னு சொன்னா, உன் மனசு எப்படி யோசிக்கும்னு மட்டும் யோசி. இதுக்கு மேல எனக்குச் சொல்ல எதுவும் தோணல. நான் பண்ணது தப்பு தான். சரின்னு சூழ்நிலையைக் காரணம் காட்ட நான் விரும்பல.

 

ஆனா, என்னோட நிலைமையில நீயோ இல்ல, உன் பிரண்ட் தமிழ் கூட இருந்திருந்தால், என்ன பண்ணி இருப்பீங்கன்னு யோசிங்க” என்றுவிட்டு அவன் வெளியில் செல்லப் போகும்போது,

 

“மாமா ஒரு நிமிஷம்” என்று சொல்லிக் கொண்டு காயத்ரி அப்பொழுதுதான் ரூமுக்குள் வந்தாள்.

 

அவளைப் பார்த்துவிட்டு ருத்ரன் அப்படியே நிற்க,

 

“நீங்க இதுவரைக்கும் பேசினதை நான் ஒத்துக்குவேன் மாமா, நான் என்ன பொய் சொல்லுவனா? என்னோட அக்கான்னுறதுக்காக அவளுக்கு சப்போர்ட் பண்ண முடியாது இல்லையா?

 

இதுவரைக்கும் நீங்க பேசின எல்லாமே சரி. உங்க சூழ்நிலையில் இருந்து பார்க்கும்போது எல்லாமே சரியா தான் இருக்கும். ஆனால் அகிலா அக்கா மாதிரி என்கிட்ட வேற ஒரு கேள்வி இருக்கு மாமா. நான் கேட்கிறதுக்காகத் தப்பா எடுத்துக்காதீங்க…

 

அக்காவோட இடத்துல நானோ, இல்ல அகிலா அக்காவோ இருந்திருந்தா, எங்க ரெண்டு பேத்துகிட்டயும் வந்து என்னைக் கட்டிக்கிறியா? என்று நீங்க அந்தச் சூழ்நிலையில் கேட்டு இருந்திருப்பீங்களா?” என்ற உடன் காயத்ரியை ஓங்கி அடித்து இருந்தான்.

 

“நீ குழந்தைடி. உன்னை இந்த நிமிஷம் வரைக்கும் என் குழந்தை மாதிரி தான் பார்த்துட்டு இருக்கேன்”.

 

“அப்போ தமிழ், மாமா…” என்றாள்.

 

“காயு” என்று வேகமாக ருத்ரன் கத்த,

 

“அதுதான் மாமா, நானும் கேட்கிறேன். தமிழையும் எங்க கூட வளர்ந்தவளா தான் பார்த்தேன்னு சொல்றீங்க. ஆனா, அந்த நிமிஷம் உங்களுக்கு எப்படி, நாங்க அத்தனை பேர் இருக்கோம். ஏன், உங்க சொந்த அத்தை பொண்ணு கூட இருக்கு. இத்தனைப் பேரையும் தாண்டி உங்களுடைய பார்வை தமிழ் கிட்டப் போச்சு. அதுக்காக நீங்க தமிழை விரும்புனீங்க, விரும்புறீங்க அப்படின்னு நான் சொல்ல மாட்டேன். என் அக்கா என்ன இளிச்சவாயின்னு நினைச்சீங்களா?.

 

எதைச் சொன்னாலும், இந்தக் குடும்பத்துக்காக ஒத்துக்குவா, தலையாட்டுவான்னு நினைச்சிட்டீங்களா? அப்படி நினைச்சு தான் அவகிட்ட  என்னைக் கட்டிக்கிறியான்னு கேட்டீங்களா?” என்று கேட்டாள் காயத்ரி.

 

ருத்ரனால், பதில் சொல்ல முடியவில்லை. அமைதியாகவே நின்று கொண்டிருந்தான்.

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்