Loading

  மேனகா தேவிக்கு ஏற்கனவே உடல்நிலை சரியில்லாமல் இருந்தது, தற்போது அவர் கண்ட அதிர்ச்சியான சம்பவத்தால், அவரின் கை கால்கள் இழுத்துக் கொள்ள, அப்படியே தரையில் விழுந்தார். வாய் ஒருபுறம் கோணிக் கொண்டு தரையில் துடிக்க ஆரம்பித்தார்.

சத்தம் கேட்டு அங்கு வந்து பார்த்த காவல் புரியும் வீரர்கள், உடனே அரசருக்கு தகவலை தெரிவித்தனர்.

   அரச வைத்தியரை அழைத்து வந்து உடனே மேனகாதேவிக்கு முதலுதவி வழங்கப்பட்டது. தாங்க முடியாத அதிர்ச்சியின் காரணமாக அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டுள்ளதாகவும், இனி அவரால் தெளிவாக பேச முடியாது என்றும் அரச வைத்தியர் தெரிவித்து விட்டார்.

  தனது ரத்த தாகத்தை தீர்த்துக் கொண்டு, நாளை பௌர்ணமி ஆதலால் எவ்வாறு ரத்னபுரிக்கு செல்வது என்று, யோசனையுடனே அரண்மனை திரும்பிய மோகனா, இந்த நேரத்தில் அரண்மனை முழுவதும் பரபரப்பாக இருப்பதை உணர்ந்தவள், காரணத்தை அறிந்து கொள்ள ரஞ்சனியின் உடலுக்குள் புகுந்து, அவளும் தன் அறையில் இருந்து வெளியேறினாள்.

   தனது அன்னையின் அறையில் அனைவரும் குழுமி இருப்பதை பார்த்து உள்ளே சென்றவள், மேனகா தேவியின் நிலையினை கண்டு பதறிப் போனாள்.

“மன்னா இதற்கு மேல் என் கையில் எதுவும் இல்லை, இனி அந்த ஆண்டவன் விட்ட வழி”

   என்று கூறிய வைத்தியர் அனுமதி பெற்று கொண்டு அங்கிருந்து வெளியேறினார்.

  அரசர் ஒரு முடிவுடன் வீரர்களை அழைத்து, அரண்மனை ஜோதிடரை நாளை காலை என்னை பார்க்கச் வரச் சொல்லுங்கள் என்று உத்தரவிட்டார்.

  தனது அன்னையின் நிலைமையினை நினைத்து வருந்தி கொண்டிருந்தவளின் முகம் அடுத்த நிமிடமே பிரகாசமானது.
 
அங்கே இருப்பவர்கள் அறியாமல் அங்கிருந்து வெளியேறிய மோகனா, தனது அறைக்கு வந்து சில மந்திரங்களை முணுமுணுத்தாள், அடுத்த நிமிடமே அங்கு ராட்சசன் ஒருவன் தோன்றி, மோகனாவை வணங்கி நின்றான்.

  “ரத்தமாறா உடனே நீ அரண்மனை ஜோதிடர் இருக்கும் இடத்திற்கு செல்,
அவன் அந்த சிவனடியாரின் சிஷ்யனாவான். அவன் உடலுக்குள் புகுந்து, நீ இங்கு வந்து சேர்வது முடியாத செயல், அதனால் அவனை இந்த நாட்டை விட்டு வெளியேற்றி விடு.

அரண்மனை காவலர்கள் அவனைத் தேடி வருவார்கள். நீ அந்த ஜோதிடனை போலவே உருமாறி நாளை அரண்மனைக்கு வந்து சேர். அரசரின் முன் சோழிகளை உருட்டி நான் கூறுவது போலவே அரசரிடம் கூறு.”

    மோகனா அவனிடம் கூறியவற்றை கர்ம சிரத்தியாக கேட்ட அந்த ராட்சசன்,

“தங்கள் ஆணைப்படியே செய்கிறேன் தேவி.” என்று கூறி மறைந்து விட்டான்.

  ராட்சசன் ஜோதிடரின் வீட்டிற்குச் சென்று, தகுந்த நேரத்திற்காக காத்து கொண்டிருந்தான். அரண்மனை காவலர்கள் வந்து அரசரின் ஆணையை கூறி சென்ற பிறகு, ஜோதிடர் அதிகாலையிலேயே ஆற்றுக்கு நீராடச் சென்றார்.

  தனது கழுத்தில் உள்ள ருத்ராட்ச மாலைகளை கழட்டி வைத்துவிட்டு ஆற்றினுள் இறங்கினார். இதுதான் சரியான தருணம் என்று உணர்ந்த ராட்சசன், திடீரென்று வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தி அவரை ஆற்று நீரினுள் மூழ்கும்படி செய்து, அவரை ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லுமாறு செய்தான்.

   தனது உருவத்தை ஜோதிடரின் உருவமாக மாற்றி கொண்டவன், அரண்மனையை நோக்கிச் சென்றான் அங்கு அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களும், அமைச்சர் பெருமக்களும் அந்த அதிகாலைப் பொழுதிலேயே ஒன்றாக குழுமியிருந்தனர்.

  அரசரை வணங்கி நின்றவனைப் பார்த்து அரசர், தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள  நிலைமையினை சரி செய்ய என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்று ஜோதிடம் பார்த்து கூறுமாறு கூறினார்.

    தீவிரமாக சோழிகளை உருட்டுவது போல நடித்தவன் அரசரைப் பார்த்து மோகனா கூறியவற்றை அப்படியே கூறத் தொடங்கினான்.

   “அரசர்ப் பெருமானே ஏதோ கெட்ட சக்திதான் நமது நாட்டை ஆட்டி படைக்கின்றது. இந்த பாவமானது ஒரு கன்னி பெண்ணின் இறப்பினால் நேர்ந்தது. இந்த பாவத்திலிருந்து நம் நாடு மீள வேண்டும் என்றால், அதற்கு இன்னொரு கன்னிப் பெண்ணை கொண்டு தான் பரிகாரம் செய்ய வேண்டும்.

  ஒரு கன்னிப்பெண், அண்டை நாட்டில் இருக்கும் சிவாலயங்களில் உள்ள, லிங்கதிருமேனியாருக்கு தனது கைகளாலேயே அபிஷேக பூஜையினை  பௌர்ணமி நாளில் செய்ய வேண்டும். அந்த சிவபெருமானின் அருட்பார்வையால் நமது நாடு அந்த கெட்ட சக்தியிலிருந்து மீண்டுவிடும்.”

   அரசரும் அமைச்சர்களும் யாரை அனுப்பலாம் என்ற யோசனையில் இருக்க, ரஞ்சனியே முன்வந்து தான்  சென்று வருவதாக கூறினாள்.

     ஆனால் அரசர் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை, ஏற்கனவே தனது குடும்பத்தை இழந்து வாடும் ரஞ்சனியை, இப்படி ஒரு பிரச்சனையில் இழுத்து விட அவருக்கு மனம் ஒப்பவில்லை.

அதனால் ரஞ்சனியோ,

“இது மோகனாவால் ஏற்பட்ட பிரச்சனை, இதற்கு தான் செல்வது தான் சரியாக வரும் என்று எடுத்துக் கூறினாள்.”

ஜோதிடரும் தானும் உடன் சென்று வருவதாக கூற, அரசர் அரை மனதாக அதற்கு ஒப்புக் கொண்டார். இன்று பௌர்ணமி ஆதலால் இன்றிலிருந்தே அந்த பூஜையை ஆரம்பித்து விடலாம் என்று ஜோதிடர் கூறினார்.

ரகுநந்தனும் பிரதீபனும் தற்போது நாட்டில் இல்லாத காரணத்தால், மித்ரனை அவர்களுடன் அனுப்பி வைக்க முடியவில்லை, ஆதலால் அரசர் அவர்களை படைவீரர்கள் புடை சூழ பக்கத்து நாட்டிற்கு சிவபூஜை செய்ய அனுப்பி வைத்தார்.

பிரதீபன் ரத்னபுரியில் ஆட்சி பொறுப்பை ஏற்ற பிறகு ,அங்குள்ள மக்களின் துயர்களை துடைக்க தொடங்கினான். ரங்கராஜ பூபதியின் ஆட்சியில் அதிகமான வரிகளும் பல கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு, மக்கள் நரக வாழ்க்கை தான் வாழ்ந்து கொண்டிருந்தனர். அத்தோடு படை வீரர்களின் அத்துமீறல்களும் அவ்வப்போது நடந்து கொண்டே இருந்தது.

   பிரதீபனின் ஆட்சியில் தான் அவர்கள் நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருந்தனர். பிரதீபனும் போர்க்களத்தில் தப்பிச் சென்ற ரங்கராஜ பூபதியை தேடிக் கொண்டு தான் இருந்தான். பிரதீபன் அவ்வப்போது நாட்டு மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து அதை நிவர்த்தி செய்து கொண்டிருந்தான், அவ்வாறு அவன் நாட்டை சுற்றி வந்து கொண்டிருந்த வேளையில் லந்தங்காட்டு பகுதிக்கு வந்திருந்தான்.

  லந்தங்காட்டுக்கு வெளியே பரிதவிப்போடு நின்றிருந்த ரஞ்சனி, பிரதீபனைக் கண்டு ஆன்மாவாக அவனை நோக்கி சென்றாள். பிரதீபனாவது அவளுடைய அத்தானை காப்பாற்ற மாட்டானா, என்று அவனை சுற்றி சுற்றி வந்தாள். ஆனால் அவள் ஆன்மாவாக இருந்த காரணத்தால் அவளால் தங்களது நிலைமையை பற்றி, அவனிடம் புரிய வைக்க முடியவில்லை.

    அவன் லந்தங்காட்டை நெருங்கும்போது மகிழபுரியிலிருந்து வந்திருந்த தூதுவன் ஒருவன், அரசரிடமிருந்து ஒரு அவசர செய்தி வந்திருப்பதாக கூறினான். மேனகா தேவியின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும் உடனே வந்து பார்க்குமாறும் அரசரிடம் இருந்து செய்தி வந்திருந்தது.

    பிரதீபனுடன் இருந்த ரஞ்சனி, இன்னொருமுறை மோகனாவிடம் பேசி முயற்சித்து பார்க்கலாம் என்று, பிரதீபனுடன் மகிழபுரியை நோக்கி சென்றாள்.

  ஒரு பூவனத்தில் மித்ரனது தோளில் சாய்ந்து கொண்டு மதுரா கதை பேசிக் கொண்டிருந்தாள். அப்போது திடீரென்று கருப்புநிற புகை அவனை சூழ்ந்து கொண்டு, அவளிடம் இருந்து பிரித்து இழுத்துச் செல்வது போல பிம்பம் தோன்றியது.

  மித்ரனது கைகளைப் பிடித்து மதுரா தன்னோடு இழுத்துக்கொள்ள முயற்சி செய்ய, அந்தக் கருப்பு நிற பிம்பம் இவளை தூக்கி வீசியது. அவளின் கண் முன்பே மித்ரனின் உடலை கொஞ்சம் கொஞ்சமாக அந்த கருநிற புகை சூழ்ந்து, மொத்தமாக அவனை உள்ளே இழுத்துக் கொண்டது.

   மதுரா அழுது கொண்டே தீரா என்று உரக்க கூறி அழைத்துக் கொண்டு அவனை நோக்கி செல்ல, அவர்கள் இருவருக்கும் இடையே இருந்த தூரம் அதிகரித்துக் கொண்டே சென்றது.

   ஒரு கட்டத்தில் அவன் முழுமையாக அந்த இடத்தில் இருந்து வெளியேறி இருந்தான். அவள் பதறி எழுந்து அமர்ந்த போது தான் தெரிந்தது, அது கனவு என்று. ஆனால் கண்களில் இன்னும் நிற்காமல் கண்ணீர் வடிந்து கொண்டே இருந்தது. இவளது சத்தத்தை கேட்டு எழுந்த ஏந்திழை அம்மையார், இவள் இருக்கும் கோலத்தைப் பார்த்து அவள் அருகினில் பதறி ஓடி வந்தார்.

   “வாணி என்ன ஆயிற்று? ஏதாவது கெட்ட சொப்பனம் கண்டாயா? ஒன்றுமில்லை…ஒன்றுமில்லை… முதலில் நீ அழுவதை நிறுத்து, அம்மா நான் இருக்கிறேன் அல்லவா, நான் சொல்வதைக் கேள், முதலில் அழுவதை நிறுத்து வாணி.”

  ஏந்திழை அம்மையார் கொற்றவை தேவியின் பிரசாதத்தை அவள் நெற்றியில் இட்டு, அவளை தன்னோடு அணைத்துக் கொண்டார். ஆனாலும் மதுராவின் கண்ணீர் நின்றபாடில்லை. தேம்பிக் கொண்டே தன் அன்னையிடம் கனவில் தான் கண்டவற்றை விரிவாக கூறினாள்.

ஏந்திழை அம்மையாருக்கும் ஏனோ மனதிற்கு சங்கடமாக இருந்தது. இருந்தாலும் மதுராவை தேற்றி அவளை பூஜைக்காக மூலவர் சன்னிதிக்கு தயார்படுத்தி அனுப்பி வைத்தவர். இங்கு கொற்றவை தேவியின் முன்பு நின்று, கைகூப்பி வணங்கிக் கொண்டிருந்தார்.

“தாயே என் மகளின் வாழ்க்கையை காப்பாற்று, அவர்கள் இன்னும் வாழ்வை தொடங்கவே இல்லை. அதற்குள் முடித்து வைத்து விடாதே தாயே, உன்னை நம்பித்தான் அவளை அவ்வளவு பெரிய இடத்தில் வாழ வைக்க முடிவு செய்தேன். அவளின் நல்வாழ்க்கைக்கு நீயே துணை.

  ஏதோ கெட்ட சக்திகள் ஊருக்குள் அட்டகாசம் செய்து கொண்டிருப்பதாக கேள்விப்பட்டேன், சீக்கிரம் நீ மீண்டு வர வேண்டும் தாயே, அந்த கெட்ட சக்திகளை அழித்து, மக்களின் வாழ்வை நலம் பெற வைக்க வேண்டும்.”

என்று  மனதார வேண்டிக் கொண்டார்.

  மதுராவிற்கு ஏனோ இன்று மனம் தெளிவாகவே இல்லை, ஏதோ ஒரு தவறு நடக்கப் போவதாக மனதில் தோன்றிக் கொண்டே இருந்தது.

கொற்றவை அன்னையை நோக்கி கைகூப்பி, கண்களை மூடி மனதில் வேண்ட தொடங்கினாள்.

  “தாயே இது என்ன மாதிரியான உணர்வு என்று என்னால் உணர முடியவில்லை. ஆனால் ஏதோ கெட்டது நடக்க போவதாகவே என் உள் மனம் உரைக்கின்றது. அதுவும் அவர் என்னை விட்டுப் விலகி செல்வது போல, இன்று அதிகாலை நான் கண்ட கனவு, ஏனோ என் மனதை கொய்வது போல் உள்ளது. அவரை எந்த தீங்கும் நெருங்காமல் பத்திரமாக காத்தருள வேண்டும் அம்மா. உன்னையே நம்பி இருக்கும் இந்த பிள்ளையை காப்பாற்று தாயே.”

  அவள் யாருக்காக வேண்டிக் கொண்டு இருந்தாளோ, அவனே அந்த குளத்தில் இருந்து இவள் அறியாமல் இவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

மதுராவிற்கு வந்த அதே கனவு மித்ரனுக்கும் வந்தது. அவன் பதறி அடித்துக் கொண்டு எழுந்து அமர்ந்த பிறகு, இன்று எப்படியாவது மதுராவை பார்த்தே தீர வேண்டும் என்று முடிவு செய்து கொண்டான். திடீரென்று தனது அறையின் கதவு தட்டப்பட்டதும் என்ன ஏது என்று வந்து பார்க்க, அப்போதுதான் காவலர்கள் மேனகா தேவிக்கு நடந்ததை அவனிடம் கூறினார்.

   மித்ரன் நடந்த சம்பவங்களால், நாட்டினுள் ஏற்பட்ட பிரச்சனைகளை ஒரு வழியாக தீர்வுக்கு கொண்டு வந்திருந்தான். மதுரா குங்கும பூஜை செய்ய எப்படியும் மூலவர் சன்னிதிக்கு செல்வாள் என்று, அவனுக்கு நன்றாக  தெரியும். ஒருவேளை ஏந்திழை அம்மையார் மதுராவுடன் இருந்தால், தூரத்தில் இருந்தாவது அவளை பார்த்துவிட்டு வரலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தான்.

     ஆனால் திடீரென்று தனது அத்தையான மேனகாதேவிக்கு உடல்நிலை சரியில்லாது போன காரணத்தால், அவளை பகல் பொழுதில் சென்று சந்திக்க முடியவில்லை. இருந்தாலும் அவளை இன்று எப்படியாவது சந்தித்தே தீர வேண்டும் என்று அந்த கடும் குளிரிலும் உறை பனியை கூட கண்டு அஞ்சாமல், குளிர்ந்த நீரில் தனது ஆசை மனைவியைக் காண நீந்தி வந்திருக்கிறான். 

  ஒருவேளை ஏந்திழை அம்மையார் தன்னை கண்டு விட்டாள், தான் இங்கு வருவதை நினைத்து கோபப்பட கூடும் என்று நினைத்து தான், மறைந்திருந்து மதுராவை கண்காணிக்க தொடங்கினான். ஆனால் அவள் மட்டும் இங்கு தனியாக அமர்ந்திருப்பதை கண்ட பிறகுமா இவ்வாறு மறைந்திருப்பான்? உடனே அவள் முன்பு பிரசன்னம் ஆகிவிட்டான்.

  மதுரா தனது கண்களைத் திறந்ததும் தனக்கு எதிரே தெரிந்த மித்ரனது திருமுகத்தை கண்டு இமைக்க மறந்தாள். எங்கே இமைகளை சிமிட்டினாள் அவனது உருவம் மறைந்து விடுமோ, என்று நினைத்து அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

  மனதில் உண்டான கலக்கம் அப்போது சரியாக அந்த நேரத்தில் ஞாபகத்திற்கு வர, அவளது கண்களில் நீர் சூழ்ந்தது, அது அவளது கண்கள் என்னும் அணையினை உடைத்துக் கொண்டு வெளியேறும் போது, மித்ரன் தனது கைகளால் அதைத் துடைத்தெரிந்தான்.

  அந்த கைகளை தனது இரு கரங்களாலும் பிடித்துக் கொண்ட மதுரா, அதை தனது நெற்றியில் வைத்துக் கொண்டு குலுங்கி அழ தொடங்கினாள்.

“எனை மறந்து போவாயா தீரா? என்னை விட்டுச் சென்று விடுவாயா?”

தன் காதலியின் கண்களில் தூசு பட்டாலே தாங்காதவன், அவள் கதறி அழுவதை தாங்கிக்கொள்வானா என்ன?  உடனே பாய்ந்து, அவளை தன் மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டான்.

   “இறப்பிலும் உன்னை பிரியேன் பிரியசகி, இப்படிப்பட்ட வார்த்தைகளை கூறி என்னை வதைக்காதே மதுரா, நான் என்றுமே உனது தீரன் தான்.”

அவளைத் தன்னில் இருந்து பிரித்து, தனது கழுத்தில் பிறந்தது முதல் என்றும் ஒட்டியே இருக்கும், தனது குடும்ப சங்கிலியை கழட்டி அவளது பொற்கழுத்தில் மாலையாக இட்டவன்,

“மதுரா இப்பிறவியில் மட்டுமல்ல, இனி நான் எடுக்கும் அத்தனை பிறவியிலும் இந்த தீரன் உனக்கு மட்டுமே சொந்தமானவன்.”

   அவன் கூறியவற்றை கேட்டு கனிந்திருந்த அவளது காதல் முகம், நிதர்சனத்தை உணர்ந்து கோபத்தில் மாறத் தொடங்கியது.

தனது தோளினை அணைத்திருந்த அவனது கைகளை உதறியவள்,

“நீ…நீங்கள் எதற்காக இங்கு வந்தீர்கள்?”

  இவள் கேட்ட கேள்வியில் மித்ரனின் முகம் போன போக்கை கண்டு, அந்த கொற்றவை தேவி கூட சிரித்திருப்பாரோ!!!!

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்