
யான் நீயே 42
அங்கை கோவில் பூசாரியிடம் பேசியதை வைத்து… பூசாரியின் மூலமாக என்னவோ நடக்கிறது என்பதை வீரன் கண்டுகொண்டான்.
அந்நேரம் கோவிலுக்கு படையல் வைத்திட வெளியூரிலிருந்து பக்தர்கள் வருகை தர, மாலை கேட்டுக்கொள்ளலாம் என தன்னுடைய வேலையை கவனிக்கச் சென்றுவிட்ட வீரன் இரவு வீடு திரும்பும் போது நேராக சென்றது ஊருக்குள் கடைசியாக இருக்கும் பூசாரியின் வீட்டிற்குதான்.
அப்போதுதான் இரவு உணவை முடித்த பூசாரி வீட்டின் முன்னிருக்கும் திண்ணையில் உறங்குவதற்கு ஆயத்தமாக படுக்கை விரிப்பை விரித்துக் கொண்டிருந்தார்.
பைக்கின் சத்தத்தில் யாரென்று பார்க்க, வண்டியின் முன் பக்க விளக்கால் வீரனின் முகம் தெரியாது கண்கள் கூசியது.
“வந்திருக்கிறது யாரு?”
பூசாரி கேட்டுக்கொண்டே கூசிய கண்களை கசக்கிட…
“என்ன பூசாரி ஆள் அம்புடலையோ?” என்ற வீரன்,வண்டியை அணைத்து அதிலே தரையில் கால் ஊன்றி அமர்ந்தவனாக மார்பிற்கு குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு அவரை உருத்து விழித்தான்.
“நீங்களா தம்பி?” என்று முன் வந்த பூசாரி, “ஏதும் தாக்கலு சொல்ல வந்தீங்களா?” எனக் கேட்டார்.
வீரன் சுற்றி வளைக்கவெல்லாம் இல்லை.
“நீங்க தான் சொல்லணும் பூசாரி!” என்றவன், “எங்க வூட்டு பொண்ணு உங்ககிட்ட அழுவ காரணமென்ன?” என நேரடியாகக் கேட்டான்.
வீரனின் பார்வையில் அத்தனை கொதிப்பு இருந்தது.
“நான் உங்களை மிரட்டவோ, அதட்டவோ இல்லை. என் குடும்ப விசயம், எங்களுக்குத் தெரியாமா உங்க மூலமா என்னமோ நடக்குது. அத்தைத்தேன் கேட்கிறேன்” என்றான். அழுத்தமாக.
பூசாரிக்கு தொண்டைக்குழி ஏறி இறங்கியது.
“அவரு சொல்ல மாட்டாரு தம்பி. நான் சொல்லுறேன்” என்று வீட்டிற்குள்ளிருந்து வெளி வந்தார் பூசாரியின் மனைவி.
“எனக்கு இன்னைக்கு அந்தி சாய்ஞ்ச பொழுதுதான் விசயம் தெரியும் தம்பி. காலையில வூட்டுக்கு வரலாமின்னு இருந்தேன். நீங்களே வந்துபுட்டிங்க” என்றவர், கணவனை பார்த்து “நீங்க செஞ்சது பெரும் பாவங்க. அதுவும் கருப்பர் பேரை சொல்லி செஞ்சது மகா பாவம்” என்றார்.
“அஞ்சலை…”
பூசாரி தழுதழுக்க…
“வேணாமுங்க… நீங்க விளக்கம் கொடுக்கத் தேவையில்லை. கோவிலுக்கு உங்களை பார்க்க வந்த வசந்தி அம்மா, திரும்ப வூட்டுக்கு வரவும் என்ன சமாச்சராமுன்னு ஒளிஞ்சு நின்னு கேட்டுபுட்டேன். நீங்க இப்படியொரு பாவத்தை செஞ்சிருக்கீங்கன்னு தெரிஞ்சதும், அந்த கருப்பன் என் புள்ளை வாழ்க்கையை தண்டிச்சிடக் கூடாதுன்னு நொடிக்கு ஒரு தரம் அவனுக்கு வேண்டுதல் வச்சிக்கிட்டு இருக்கேங்க” என்று கண்ணீர் சிந்தினார்.
அங்கை வந்து சென்றதாக பூசாரி சொல்லியதும்… கோவிலில் பேசியது போதாதென்று எங்கு பூசாரி உண்மையை சொல்லிவிடுவாரோ என பயந்து மீண்டும் ஒருமுறை மிரட்டிட வீட்டிற்கே வந்திருந்தார் வசந்தி. அப்போது வசந்தி முழுமையாக அனைத்தையும் சொல்லி… இதில் என்னைவிட உனக்குத்தான் அதிக பங்கு. மாட்டினாலும் உனக்குத்தான் அடி பலமா விழுமென்று எச்சரித்து செல்ல அஞ்சலை அனைத்தும் கேட்டிருந்தார்.
“மீனாளுக்கு அடிபட்டு ஆஸ்பத்திரியில் இருந்த சமயம், அங்கை பொண்ணு கருப்பனுக்கு விளக்கு வைக்க வந்திருக்கு தம்பி” என ஆரம்பித்து அனைத்தும் கூறினார் அஞ்சலை.
மீனாள் மருத்துவமனையிலிருந்து கண் விழித்த இரண்டாம் நாள், மகா தான் அங்கையை மீனாளுக்காக வேண்டிக்கொண்டு கருப்பருக்கு விளக்கேற்றி வரும்படி அனுப்பி வைத்தார்.
அங்கை கோவிலுக்கு வருவதை அப்போதுதான் சாமி கும்பிட்டுவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்த வசந்தி தூரத்திலேயே கண்டவராக நொடியில் திட்டம் வகுத்து பூசாரியிடம் சென்றார்.
சற்று முன் தான் பூசாரி தனது பெண்ணின் திருமணத்திற்கு பணம் தேவைப்படுகிறதென்று வசந்தி தெரிந்தவராயிற்றே என புலம்பியிருந்தார். அதனை வசந்தி தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார்.
“நான் சொல்றமாறி செஞ்சாக்கா உன் பொண்ணு கல்யாணத்துக்கு வேண்டிய பணத்தை நான் கொடுக்கிறேன்” என்று தன் திட்டத்தைக் கூற பூசாரி ஆடிபோய்விட்டார்.
முதலில் மறுத்தவரை ஏதேதோ சொல்லி சரிகட்டி சம்மதிக்க வைத்த வசந்தி, அங்கை அருகே வருவது தெரிந்ததும் மறைந்து நின்றுகொண்டார்.
இதில் அங்கை, லிங்கத்தின் காதலை தெரிந்துகொண்டது வசந்திக்கு வசதியாகப்போயிற்று. அதை வைத்தே கட்டம் கட்டி ஆட்டத்தை ஆடியிருந்தார்.
அங்கை விளக்கேற்றி கருப்பன் சிலையை சுற்றி வந்து முன் நின்று வணங்கிய நொடி, அவளுக்கு தீபாராதனை காட்ட வந்த பூசாரி திடீரென சாமி வந்து ஆடிட… அங்கை பயந்து இரண்டடி பின் வைத்திருந்தாலும், இதெல்லாம் பார்த்து பழகியிருந்ததால் சில நொடிகளில் திடமாகவே நின்றாள்.
“மனசுல நினைச்சிருக்கவன் கை புடிக்கணுமின்னு காணும் உன் கனவு அவன் உசுரை வாங்கிப்புடும்.
“உன் விருப்பம். அவன் உன் கழுத்தில் கட்டும் தாலி. அவனுக்கு எமனாகிப்போவும்.
“உன் ஜாதகம் அவனுக்கு எம ஜாதகம்.
“அவன் உசுரு முக்கியமின்னா அவனைவிட்டு எட்ட நில்லு.
“என் வார்த்தைய மீறி அவன் கையால தாலி ஏறுச்சு அடுத்த நொடி அவன் மண்ணில் சாய்வான்.”
சுற்றி சுழன்று ஆடிக்கொண்டே சொல்லி முடித்த பூசாரி தரையில் விழுந்தார்.
அங்கையின் அதிர்ந்த விழிகளிலிருந்து கண்ணீர் கொட்டியது. கால்கள் துவண்டது. மூச்சுக்கு தவித்தாள். கண்கள் மேல் சொருகியது. மயக்கம் வரும் போலிருக்க… அருகிலிருந்த சிலையை பற்றிக்கொண்டு துவண்டு நின்றாள். அவளின் நெஞ்சுக்கூடு வெடித்திடும் வலியை கொடுத்தது.
யாரோ எவரோ சொல்லியிருந்தாள் அங்கை நம்பியிருக்கமாட்டாள். பூசாரி மூலமாக கருப்பனே வந்து சொல்ல அவள் என்ன செய்வாள். இதுபோன்று கருப்பன் பூசாரி மீது இறங்கி குறி சொல்லிய யாவும் உண்மையாக நடந்திருக்கிறதே. அவளே கண்கூடாக பலவற்றை பார்த்திருக்கிறாளே! கடவுளே பூசாரியினை ஊடகமாக உபயோகித்து சொல்லும்போது அவளால் எப்படி நம்ப முடியாது இருக்க முடியும்.
வெடித்து கதறி அழுதாள். அவளின் ஓலம் அக்காட்டை நிறைத்தது.
அப்போதுதான் மெல்ல கண் திறப்பதைப்போல் எழுந்த பூசாரி, ஒன்றும் தெரியாததைப்போல் அவளிடம் விசாரிக்க…
அவரிடம் கூறினால் ஏதும் வழி கிடைக்குமென அவர் உடம்பில் கருப்பர் இறங்கி சொல்லியதாக நினைத்தவற்றை அழுகையோடே கூறினாள்.
“எம் மாமான்னா எனக்கு உசுரு பூசாரி. அவருக்கும் நான்னா கொள்ளை இஷ்டம். இப்போ என்ன பண்றது?”
“கருப்பர் வாக்கு தாயி… மீறி ஏதும் செஞ்சிப்புடாதே! விலகிக்க தாயி. ஆசையை விட உசுரு முக்கியமாச்சே!” என்று நயமாக பேசினார்.
சொல்லி முடித்த அஞ்சலை…
“பணத்துக்கு ஆசைப்பட்டு, பொண்ணு கல்யாணத்துக்காக இப்புடி செஞ்சிபுட்டாரு தம்பி. மன்னிச்சிக்கிடுங்க” என்று அஞ்சலை அழுகையோடு கரம் கூப்பிட…
“நாலஞ்சு அமாவாசையா குறி சொல்ல உங்க மேல கருப்பர் ஏன் இறங்குலன்னு புரியுதா உங்களுக்கு?” எனக் கேட்ட வீரன், “இதைவிடவா ஒரு பெரும் தண்டனையை நான் கொடுத்துப்புடப் போறேன்” என்று சென்றுவிட்டான்.
பூசாரிக்கு உண்மை நெஞ்சத்தை சுட்டது. வருந்தி கருப்பனை நினைத்துக் கதறினார்.
வீரன் சொல்லி முடிய ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிலையில் இருந்தனர்.
வசந்தி இந்தளவிற்கு வன்மம் கொண்டவளா? அவர்களால் நினையாது இருக்க முடியவில்லை.
“கூடப் பொறந்து தொலைச்சிட்டாளே! என்ன தான் செய்யுறது?” தலையில் தட்டிக்கொண்டு தரையில் அமர்ந்துவிட்டார் மருதன்.
லிங்கத்திற்கு அங்கையின் காதலின் ஆழம் என்னவென்று புரிந்தது.
‘எல்லாம் எனக்காகவா?’ நினைத்த அதே கணம் அவளை ‘முட்டாள்’ என்றும் நிந்தித்தான்.
நீதான் எனக்கு எல்லாமே என சொல்லி தனக்குள் பொத்தி வைப்பது மட்டும் காதலில்லை. உனக்காக உன்னையே விட்டுத் தருகிறேன்… உனக்காக உன்னையே துறக்கிறேன் என்பதும் காதல் தான்.
இங்கு அங்கை அவளவனின் உயிருக்காக தன் காதலையே துறக்க துணிந்திட்டாளே. இதைவிட பெரும் காதல் ஒன்றை அவனால் உணர்ந்திட முடியுமா என்ன?
“வசந்திக்கு சரியான பாடம் புகட்டனும் அமிழ்தா?” என்று மகா கொதிக்க…
“நம்ம புள்ளைங்க வாழ்க்கையில் என்னம்மா ஆடியிருக்கா(ள்)” என்று கொந்தளித்தார் அபி.
“அந்த சீமை சிரி*கியை உண்டில்லைன்னு பண்ணிப்புடுறேன்” என்றார் மீனாட்சி. ஆவேசமாக.
“கௌதமிடம் சொன்னால் அவங்க கதை முடிஞ்சுது” என்ற பிரேம், “இப்போவே அவனுக்கு போனை போடுறேன்” என்க,
“அவங்களுக்கு சரி சமமா நாமளும் இறங்கணுமா பிரேம்? அவங்க நடக்கக்கூடாதுன்னு நினைத்த கல்யாணத்தை நடத்திக்காட்டுறதில் தான் அவங்களுக்கான தண்டனை இருக்கு” என்றான் வீரன்.
“இருந்தாலும், அவங்களை ஏதும் பண்ணணும்’ண்ணே” என்றாள் நாச்சி.
ஆற்றமாட்டாது ஆளாளுக்கு தங்களின் ஆதங்கத்தைக் காட்டிக்கொண்டிருக்க, லிங்கம் யாரையும் கண்டு கொள்ளாது மீனாளின் அறைக்கு ஓடினான்.
அங்கை மீனாளின் மடியில் முகம் புதைத்து உடல் குலுங்கிட அழுது கொண்டிருந்தாள்.
“எல்லாம் சொல்லிபுட்டேன்.”
மீனாள் சொல்ல லிங்கத்திடம் பெருமூச்சு ஒன்று வெளியேறியது.
லிங்கத்தின் அரவம் உணர்ந்த அங்கை,
“மாமா” என்று ஓடிவந்து அவனை அணைத்துக்கொண்டு அழுதிட மீனாள் வெளியில் சென்றிருந்தாள்.
“எதுக்குடி அழுவுற?”
“மன்னிச்சிக்கிடு மாமா. கூமுட்டையா இருந்திருக்கேன். எம்புட்டு வதைச்சிட்டேன் உன்னைய… உன்னைய மட்டுமில்ல, எல்லாரையும்” என்றவள் நிமிர்ந்து அவனின் முகம் பார்த்து தன் தலையில் கொட்டிக்கொண்டாள்.
தடுத்த லிங்கம்,
“நீயே கொட்டிக்கிட்டா வலிக்காது. நான் கொட்டுறேன்” என்று கொட்டிட கையை உயர்த்தியவன், சடுதியில் அவளை இறுக்கி அணைத்திருந்தான்.
“என்கிட்ட சொல்லியிருக்கலாமேடி!” அவனிடம் நிறைய ஆதங்கம் உள்ளது. ஆனால் அதையெல்லாம் கேட்டு மேலும் அவளை வருத்த அவன் விரும்பவில்லை.
அங்கையின் மறுப்பு, செயல்கள், காலையில் நடந்துகொண்ட முறையென யாவும் தனக்காகவே என்பது லிங்கத்தை அமைதிப்படுத்தி இருந்தது.
அவளது நிலையில் அவன் இருந்திருந்தாலும் இதைத்தான் செய்திருப்பானோ என்னவோ?
“சொன்னா நீயி கேட்கமாட்டியே மாமா. அதிரடியா ஏதும் பண்ணுவ. எனக்கு நீயி என் கண் முன்னாடி நடந்துகிட்டு இருந்தாலே போதுமாட்டிக்கு” என்றவள் எம்பி அவனின் கன்னத்தில் அழுத்தமாக முத்தம் வைத்தாள்.
“அவங்களுக்கு ஏன் மாமா இப்படியொரு வஞ்சம்?”
“தெரியலையே!” என்ற லிங்கம், “எனக்கு என்ன பேசணும் ஒன்னும் விளங்கல அங்கை. நீயி எனக்கில்லையோன்னு நெனைக்க வச்சிப்புட்ட” என்றவன் காற்றுக்கூட புக முடியாதபடி அவளுடனான அணைப்பை இறுக்கியிருந்தான்.
“லவ் யூ மாமா!”
லிங்கம் அவளது கன்னத்தில் தன் மீசை குத்திட அழுத்தமாக இதழ் பதித்தான்.
அவனின் செயலை நம்ப முடியாது விழிவிரித்தாள் பெண்ணவள்.
“காலையில நீயி பொய்யாதானே அப்புடி நடந்துகிட்ட மாமா?”
“நீயி அப்புடி சொல்லவும் வேறென்ன பண்ண? அறைஞ்சிருப்பேன். தாங்கிக்கமாட்டியே! சுருண்டிருப்ப” என்றவன், “என்னலாம் பேசிபுட்ட நீயி” என்று அவளின் கன்னம் கிள்ளியவன்,
“இப்போ சொல்லு நான் வேணாமின்னு?” என்று மிதப்பாகக் கேட்டான்.
“நீயி செத்துப் போவங்கிறது உண்மையாவே இருந்தாலும்… இனி உன்னைய விடுறதா இல்லை மாமா. சேர்ந்தே செத்துப்போவோம்” என்று அவனின் மார்பில் முத்தம் வைத்து விலகினாள்.
“சேர்ந்து வாழுவோம் சொல்லுடி” என்றவன் அவளின் நெற்றி முட்டி மீண்டும் அணைத்துக்கொண்டான்.
*******************
மீனாட்சி அம்மன் சன்னிதியில் சுற்றம் சூழ நிறைவாய் அரங்கேறியிருந்தது லிங்கம், அங்கையின் திருமணம்.
லிங்கம் பொன் தாலியை அணிவித்த கணம், மார்போடு பதிந்த தாலியை பனித்த கண்களோடு குனிந்து பார்த்தவள், சுற்றுப்புறம் மறந்து தாவி லிங்கத்தின் கழுத்தினை கட்டிக்கொண்டாள்.
அக்காட்சி குடும்பத்தினர் அனைவரது முகத்திலும் மலர்ந்த புன்னகையைத் தோற்றுவித்தது.
லிங்கம் தான் அவளை தன்னிலிருந்து பிரித்து மற்றவர்களின் முகம் காண நாணம் கொண்டான்.
“நாங்க எதுவும் பார்க்கலையாட்டுக்கு மாமா” என்று மீனாள் சொல்லியதில் சிரிப்பால் அவ்விடம் அதிர்வை உண்டாக்கியது.
“மிஞ்சியை மாட்டிய்யா… நல்ல நேரத்தில் கருப்பன் கோவிலுக்கு போவணும்” என்றார் மீனாட்சி.
லிங்கம் மெட்டி அணிவித்து நிமிர, ஐயர் அம்மனின் குங்குமத்தை அவன் முன் நீட்டினார்.
அங்கையின் நெற்றியிலும், வகிட்டிலும் வைத்தவன், மார்பை உரசிக் கொண்டிருந்த தாலியில் அழுத்தமாக வைத்தான்.
“லவ் யூ மாமா!”
ஓசையின்றி உதடசைத்தாள்.
அலைபேசியில் வீடியோ எடுத்துக்கொண்டிருந்த கௌசிக்… அவளின் அசைவை வைத்து கண்கள் விரித்து…
“ஒன்னும் கேட்கலையாட்டுக்கு அங்கை. சத்தமா சொல்லு பார்ப்போம்” என்று சிரித்திட,
“எனக்கென்னடே பயம்” என்றவள், எல்லோருக்கும் கேட்கும் விதமாக சத்தமாக சொல்லி, அவனது கன்னத்தில் முத்தமும் வைத்தாள்.
லிங்கம் தான் அவளின் அட்டகாசத்தில் நெளிந்தான்.
“உன்னைய ஓடவிடப்போறாள்” என்று வீரன் சிரித்திட…
“அண்ணே!” என்ற லிங்கத்தின் தோளில் தட்டிக் கொடுத்தவன், “ஆசீர்வாதம் வாங்கிக்கோடே” என்று பெரியவர்களை கை காண்பித்தான்.
பெற்றோரிடமும், மீனாட்சியிடம் ஆசீர்வாதம் பெற்று வீரனின் காலிலும் இருவரும் பணிய,
“என்னடே என் காலுல விழுந்துகிட்டு” என்று பதறியவனாக வீரன் அடியை பின் வைத்தான்.
“உன் ஆசீர்வாதம் வேணுமிண்ணே! நீயி இந்த ஆத்தாளுக்கும் மேலண்ணே” என்று லிங்கம் மீனாட்சி அம்மனை கைகாட்டி கூற, இருவரையும் கை கொண்டு எழுப்பிய வீரன் தன் தம்பியை இறுக அணைத்திருந்தான்.
கௌசிக் அனைத்தையும் வளைத்து வளைத்து காணொளி, புகைப்படம் என்று எடுத்துக் கொண்டிருக்க,
“கொஞ்சம் அடங்குடே! கண்ணுப்பட போவுது” என்றார் மீனாட்சி.
அடுத்து அனைவரும் பிரேமின் பொறுப்பில் சொந்தபந்தங்களை மீனாட்சி ஹோட்டலுக்கு விருந்திற்கு அனுப்பி கருப்பர் கோவிலுக்கு செல்ல பயணித்தனர்.
திடீர் திருமணம் என்பதால் கௌதமால் தன் குடும்பத்தோடு வர முடியவில்லை. கௌசிக் மட்டுமே வந்திருந்தான். அதுவும் தன் தாயின் செயலை அறிந்து பொங்கிவிட்டான்.
“இனி பெயருக்குத்தான் நீங்க என் அம்மா. கடைசி காலத்தில் புள்ளைங்க கை விட்டுட்டாங்கன்னு ஊர் பேசிடக்கூடாது பாருங்க” என்று அவன் முகத்திற்கு நேரே சொல்லிட, அப்போதும் வசந்தி மிதப்பாக பார்த்தபடி தான் நின்றிருந்தார்.
“உங்களையெல்லாம் திருத்தவே முடியாது” என்று கௌசிக் தான் தன் கோபத்தை கட்டுப்படுத்தி அங்கிருந்து நகர்ந்திருந்தான்.
வசந்தி செய்ததுக்கு அவரை பழி வாங்கிட வேண்டுமென்றெல்லாம் வீரனோ, லிங்கமோ குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களோ யாரும் நினைக்கவில்லை. ஆனால் ஆதங்கம் மலையளவு இருந்தது.
“ரத்த சொந்தமாயிட்டாளே! எங்கன தண்டிக்கிறது?” மீனாட்சியின் எண்ணம் தான் அனைவருக்கும்.
ஆனால், அவர் போட்ட திட்டமெல்லாம் ஒன்றுமில்லாமல் போய்விட்டது என்று வசந்திக்கு உணர்த்திட நினைத்த வீரன், லிங்கத்தையும் அங்கையையும் சேர்ந்து ஒன்றாக வசந்தியின் வீட்டிற்கு பத்திரிகை வைத்திட அனுப்பி வைத்தான்.
இருவரையும் ஒருசேர தன் வீட்டில் கையில் திருமண அழைப்பிதழுடன் பார்த்தது… வசந்திக்கு சரியான மூக்கடி.
இருவருமே வாய் திறந்து எதுவும் பேசவில்லை. கௌசிக்கின் கையில் தட்டினை கொடுத்துவிட்டு, “வந்திடு கௌசிக்” என்று சொல்லி திரும்பியிருந்தனர்.
அவர்களின் உதாசீனத்தில் பொங்கிய வசந்தி… அனைத்தையும் நல்லானிடம் சொல்லி எவ்வளவு திட்டம் போட்டேனென்று குமுறிட கௌசிக் அருவருத்துப் போனான். அவர்களுடன் இருந்துகொண்டே அவர்களை ஒதுக்கி வைத்திட்டான்.
கருப்பன் முன் இருவரும் விழுந்து வணங்கி எழ, பூசாரி மீனாட்சி காலிலே விழுந்துவிட்டார். நெடுஞ்சாணாக.
“மன்னிச்சிக்கிடு ஆத்தா… என் குடும்பத்தை வாழ வச்ச உன் குடும்பத்தை கலங்கடிச்சிப்புட்டேன்” என்று அவர் மனம் வருந்தி கண்ணீர் சிந்த…
“நல்லாயிரு” என்று மீனாட்சி பின் நகர்ந்து கொண்டார்.
அவருக்கான தண்டனையை கருப்பனே கொடுத்திருந்தாரே! வேறென்ன செய்ய.
அங்கிருந்து நேராக மருதனின் இல்லம் சென்று, பாண்டியன் இல்லம் திரும்பினர்.
வீட்டில் சாமி கும்பிட்டு அங்கை விளக்கேற்றி வர…
“முதலில் பால் காய்ச்சி, ஏதும் இனிப்பு செய்யுத்தா” என்றார் மீனாட்சி.
“சரி அம்மத்தா” என்று அங்கை வேகமாக தலையாட்ட… லிங்கம் சிரிப்போடு மாடியேறினான்.
“நான் ஒரு எட்டு ஆலைக்கும், ஹோட்டலுக்கும் போயிட்டு வந்துப்புடுறேன் தங்கம். பிரேம் ஒத்தையில அல்லாடுவான்” என்ற வீரன் சட்டையை கழட்டி வேறு மாற்றிட,
“ரெண்டு நாளுல பரீட்சை மாமா” என்றாள் மீனாள்.
“எல்லாமே ஏற்கனவே படிச்சது தானே தங்கம். என்ன வெசனம்?” சட்டையின் கையினை மடித்துக்கொண்டே வினவினான்.
அவனின் முகத்தை பார்த்தவள்,
“ஒண்ணுமில்லை மாமா. நீயி போய் வா” என்று கூறினாள்.
மனைவியின் சிறு அசைவுக்கே விளக்கம் கண்டு பிடிப்பவனுக்கு, அவளின் முக மாற்றத்திற்கா அர்த்தம் புரிந்துகொள்ள முடியாது.
“நீயி எங்குட்டு போனாலும், நானும் அங்குட்டு வந்துப்புடுறேன் தங்கம். தேர்வு முடிவு வந்து பயிற்சி காலம் மட்டுந்தேன் பிரிஞ்சிருக்கமாறி இருக்கும். அதையும் பார்த்துகிடலாம்” என்றவன், “எதையும் நெனைக்காம படி” என்று அவளின் தலையில் கையை அழுத்தமாக வைத்து ஆட்டியவனாக வெளியேறினான்.
“லிங்கு.” மாடியறை கூடத்தில் நின்னு வீரன் அழைக்க, லிங்கம் அவனது அறையிலிருந்து வெளியில் வந்தான்.
“கரியன் கிட்ட உன் மொவத்தை காட்டிப்புட்டு வந்திடுடே. பொறவு கல்யாண கோலத்தை பார்க்கலன்னு உண்காமா அழிச்சாட்டியம் பண்ணுவியான்” என்ற வீரன், “அங்கையையும் கூட கூட்டிட்டு போ” என்று சொல்லிச் சென்றான்.
“சரிண்ணே” என்ற லிங்கம் திறந்திருந்த வீரனின் அறையை தற்செயலாக ஏறிட, மீனாள் புத்தகங்களை அடுக்கிக் கொண்டிருந்தாள்.
“ஆரம்பிச்சிட்டாரா?” லிங்கம் சிரித்துக்கொண்டே வினவ, நிமிர்ந்து பார்த்த மீனாள்,
“பெயிலா போவணும் வேண்டிக்கிடு மாமா” என்றாள்.
“அண்ணே கிட்ட போட்டுக்கொடுக்கட்டுமா?”
“ரெண்டு வருசம் பயிற்சின்னு எங்க அடைச்சு வைப்பாய்ங்கன்னு பயந்து வருது. மாமா கூட இல்லாம” என்று தலையை உலுக்கிக் கொண்டாள்.
“இது உன் கனவு மட்டுமில்லை மீனாக்குட்டி… அண்ணே லட்சியம். விளையாட்டாய் ஏதும் பண்ணிப்போடாதே. சிலருக்கு உன் மூலமா அடி கொடுக்க நெனக்குது அண்ணே” என்ற லிங்கம், மீனாட்சி அம்மன் கோவிலில் வசந்தி பேசியதை கூறினான்.
“எனக்கும் ஆசைதேன் மாமா. ஆனால்…” என்று அவள் இடை நிறுத்த,
“புருஷன வுட்டு இருக்க முடியாதாக்கும்?” என சிரித்துக்கொண்டே கேட்டான்.
“இன்னைக்குத்தானே கல்யாணம் ஆயிருக்கு. நானும் பார்க்கத்தேன் போறேன் உங்களை” என்று அவலம் காட்டினாள் மீனாள்.
“மாமா.” கீழே அங்கை கூப்பிடும் சத்தம் கேட்க,
“இந்தா கூப்பிட்டாச்சு… ஓடு ஓடு” என்று மீனாள் கிண்டல் செய்திட,
“சேட்டை கூடிப்போச்சுத்தா உனக்கு” என்றவனாக லிங்கம் கீழே சென்றான்.
“என்னட்டி? எதுக்கு இம்புட்டு கத்தி கூப்பிடுற?” இறுதி படியில் நின்றிருந்தவளிடம் வேகமாகக் கேட்டிருந்தான்.
“அப்பத்தா காய்ச்சிய பாலை உனக்கு மொத கொடுக்க சொன்னாய்ங்க. அதேன் கூப்பிட்டேன்” என்றவள், அவனின் கையில் பால் அடங்கிய குவளையை திணித்தாள்.
“இதை மாடியேறி வந்து கொடுக்கமாட்டியாடி நீயி?”
“அப்பத்தா என்னைய நைட்டுக்குத்தேன் மேலேறுனும் சொல்லிப்புடுச்சு” என்றவள் நகர,
பாலினை ஒரே மூச்சில் குடித்து முடித்து, “பின்னாடி வாடி” என்று அழைத்துச் சென்றான்.
“சார் எம் பெயரை சொல்லவே ரோசிப்பீங்க… இப்போ என்னானா வரிக்கு ஒரு டி போடுறீங்க? என்னவாம்?”
“ம்ம்ம்… உரிமை இருக்கு கூப்பிடுறேன். சிலதுலாம் கல்யாணத்துக்கு பொறவுதேன்னு இருந்தேன். இப்போதேன் கல்யாணம் ஆகிப்போச்சுதே” என்றவன், “நீயி எம் பொண்டாட்டிடி” என்றான் கண்களில் அத்தனை காதலாய். குரலில் அத்தனை உரிமையாய்.
“ரொம்பத்தேன்” என்றவள் பின் கட்டிற்கு வந்திருக்க, “கரியன் உங்களை மொறைக்கதாட்டம் இருக்கு மாமா” என்றாள்.
“ம்க்கும்… அவென் அண்ணேக்கு மட்டும் தான் அடங்குவான்” என்ற லிங்கம் கரியனின் முன் அங்கையுடன் சென்று நின்றான்.
“இவுகதேன் உன் ரெண்டாவது அண்ணி” என்று லிங்கம் சொல்ல… கரியன் நாக்கினை வளைத்து வெளியே சுழற்றியவனாக தன் தலையை அசைத்து ஆசீர்வதித்தது.
“ஆசீர்வாதம் பன்றான்” என்ற லிங்கம் கரியனின் நெற்றியில் தடவிக் கொடுக்க, அதுவோ தன் கழுத்து மணி சத்தம் எழுப்பிட மீண்டும் தலையை ஆட்டி, தன் மூக்கால் லிங்கத்தின் நெஞ்சை முட்டியது.
அங்கை புன்னகையுடன் அதனின் கழுத்தை தடவிட…
“ம்மாஆஆஆஆ” என்று சத்தம் எழுப்பி தன் மகிழ்வை வெளிப்படுத்தினான்.
“சின்னக்குட்டி…”
“அத்தை கூப்பிடுறாய்ங்க மாமா” என்று அங்கை உள்ளே ஓடிட, “அவென் எங்கே. உன் கூடாலத்தானே பின்னாடி வந்தியான்?” என லிங்குவைக் கேட்டார் அபி.
லிங்கமும் பின்னோடு வந்திருக்க. “உட்காருய்யா” என்று உணவு கூடத்தில் விரிக்கப்பட்டிருந்த விரிப்பைக் காட்டியவர், “நீயும் உட்காருத்தா” என்றார் அங்கையிடம்.
“மீனாள் என்ன பன்றான்னு தெரியல” என்றவர் அவளை அழைக்க…
“திங்களு பரிட்சையாட்டுக்கும்மா. படிக்கிறாள்” என்றான் லிங்கம்.
“பெரியவன் அவளை வுடமாட்டியான் போல” என்றவர் இருவருக்கும் இலை போட்டு உணவினை பரிமாறினார்.
“எல்லாம் உம் பொண்டாட்டி செஞ்சதுதேன்” என்று லிங்குவிடம் சொல்லியவர், “பார்த்து வையுங்க அத்தை. நான் மீனாளுக்கு சோறு கொண்டுபோயி கொடுத்திட்டு வரேன்” என்றவர் தட்டிலிட்டு எடுத்துச்சென்று கொடுத்து வந்தார்.
இருவரும் உண்டு முடிய, “நீயி இங்கன அத்தை ரூமுல இருத்தா” என்றார் அங்கையிடம்.
மணியை பார்த்த லிங்கம் மென் சிரிப்புடன் மாடியேறிவிட்டான்.
இரவுக்கு அணிய வேண்டிய புடவையை அபி அங்கையிடம் கொடுத்து தயார் ஆகக் கூறியவர் மீனாளை அழைக்க, அவள் தங்கைக்கு சென்று உதவி செய்தாள்.
“பயமா இருக்குக்கா!” அனைவருக்கும் இருக்கும் இனிய படபடப்பு தானே! இந்த தருணம்.
“எனக்கும் என்ன சொல்லணும் தெரியல சின்னக்குட்டி. இதெல்லாம் கடந்துதேன் வரணும்” என்றாள் மீனாள்.
அங்கை தயாராவதற்குள் வீரனும் வந்திருக்க, பாண்டியனுடன் உணவை முடித்துக்கொண்டு அனைவரும் முடங்கிவிட்டனர்.
“லிங்கு பால் வேண்டாமின்னுட்டான். அவென் குடிக்க மாட்டானே! இருந்தாலும் கொண்டு போத்தா” என்று அங்கையின் கையில் பால் சொம்பினை கொடுத்த அபி, திருநீறு பூசி மீனாளுடன் அனுப்பி வைத்தார்.
தாழிடாது வெறுமெனவே கதவினை சாற்றி வைத்து, வாயிலையே பார்த்தபடி லிங்கம் அமர்ந்திருந்தான்.
அவனுள் தன்னவளை தனக்குள் பொதிந்துகொள்ளும் வேட்கை காதலாக.
லிங்கம் கண்களில் ஆர்வத்தோடு, உடலில் பரபரப்பைக் கூட்டி கதவு திறக்கப்படுவதற்காகக் காத்திருக்க…
கதவினை திறந்து கொண்டு உள் வந்த மீனாளை கண்டு அவனின் விழிகள் அதிர்ச்சியைக் காட்டின.
“என்ன நீயி வந்திருக்க?” அப்படியொரு ஏமாற்றம் லிங்கத்தின் குரலிலும், முகத்திலும்.
“இன்னைக்கு சடங்கு எதுவும் இல்லையாம் மாமா. இன்னும் மூணு நாள் செண்டுதானாம். அப்பத்தா உன்னைய தலகாணியை கட்டிப்புடிச்சிக்கிட்டு தூங்க சொல்லுச்சு” என்று சிரிப்பினைக் கட்டுப்படுத்தியவளாகக் கூறிய மீனாள், லிங்கத்தின் முகம் போன போக்கில் அட்டகாசமாக சிரித்திட…
“சேட்டை பண்ணாமல் வாடி” என்று வீரன் வந்து மீனாளை இழுத்துச் செல்ல, அங்கை சிறு புன்னகையோடு உள் நுழைந்தாள்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
44
+1
+1
1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


Super super
Thank you
பூசாரியின் பாவ செயலுக்கு தகுந்த தண்டனை கிடைத்துவிட்டது.
மருதன் கூட பிறந்த பாவம் வசந்தி.
உனக்காக உன்னையே துறக்கிறேன் என்பதும் காதல் தான்.
பெருங்காதல் தான் அங்கையினுடையது.
அவனுக்காக தான் எல்லாம் என்று அறிந்ததும் கோபம் குறைந்துவிட்டது லிங்கத்திற்கு.
அவள் நிலையில் தான் இருந்தாலும் அதே தான் செய்திருப்போம் என்ற புரிதல்.
மீனாளின் கனவு வீரனின் லட்சியமாக.
Thank Yiu
மீனாளின் குறும்பு நல்லாருக்கு…
Thank you
Super super super settaii pudichavangapa
Thank You