Loading

யான் நீயே 41

வழமையான நாள்.

இருப்பினும் வீட்டில் நிலவும் அங்கை மற்றும் லிங்கத்தின் பிரச்சினையால் அனைவரும் மறந்திருக்க… வீரன் உட்பட. அவனவள் நினைவு வைத்து வாழ்த்தியதில் பேருவகை வீரனிடம்.

ஒற்றை கையால் மீனாளின் கன்னம் பற்றி அவளின் நெற்றி முட்டி நின்றவன், கண்களும் இதழ்களும் ஆனந்தத்தில் விரிந்திருந்தன.

“நான் எதுவும் பார்க்கலங்கண்ணே!”

திடீரென ஒலித்த லிங்கத்தின் குரலில்…

“நேரே பார்த்து போடே” என்ற வீரன் தன்னிலையை மாற்றிக்கொள்ளவில்லை.

“ம்க்கும்… ரொம்பத்தேன்” என்ற லிங்கம், “பிறந்தநாள் வாழ்த்துகள் அண்ணே” என்று சொல்லி நகர்ந்தான்.

லிங்கம் சற்று உரக்க சொல்லியிருக்க,

“ஆத்தே… என் மவராசன் பொறந்தநாளை மறந்துபுட்டனே” என்று மீனாட்சி வேகமாக எழுந்து வந்தார்.

அவர் ஏதும் கூறி வருத்தப்படுவதற்குள்,

மீனாளுடன் சேர்ந்து அவரின் காலில் விழுந்திருந்தான்.

“நல்லாயிருக்கணும் சாமி…” என்று வாழ்த்தியவர், மீனாளின் கன்னம் வழித்து, “நான் கேட்டதை சீக்கிரம் கொடுத்துடுத்தா” என்றார்.

மீனாள் வீரனின் தோளில் நாணத்தோடு முகம் மறைக்க, வீரனின் முகம் நொடியில் கலையிழந்து மீண்டது.

அபியும் வாழ்த்துக் கூறிட, இருவரும் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு புறப்பட்டனர்.

“வரும்போது கல்யாணத்துக்கு வேண்டிய துணிகளை எடுத்துட்டு வந்துபுடுறோம்மா” என்று சொல்லிச் சென்றான் வீரன்.

லிங்கத்தின் முகம் வீரனின் பேச்சில் யோசனைக்குத் தாவியது.

‘தன்னைவிட தனக்கும் அங்கைக்கும் திருமணமாக வேண்டுமென அதிகம் ஆசைப்பட்டது அண்ணேதேன்… அப்போ பொண்ணு?’ லிங்கம் கண்டுகொண்டவனாக சிரித்துக்கொண்டான்.

“என்னடே சோலிக்கு போவாமா முத்தத்துல நின்னு சிரிச்சிட்டு இருக்க?” என்றார் மீனாட்சி.

“சும்மாதேன்” என்ற லிங்கம் வயல்வெளிகளை பார்வையிட செல்ல… அங்கு அவனுக்காகக் கிணத்து மேட்டில் காத்திருந்தாள் அங்கை.

தூரத்திலேயே அவளை கண்டுவிட்ட லிங்கம்… பாதையை மாற்றி வேறு பக்கம் கரும்பு கொல்லையிருக்கும் பகுதிக்குச் செல்ல… அவள் மூச்சிரைக்க ஓடிவந்து அவன் முன் நின்றாள்.

நன்கு வளர்ந்து நின்றிருந்த கரும்புகள் சோலையால் அவர்கள் நின்றிருந்த அகலமான வரப்பை புதர் போல் மறைத்திருந்தது.

அவள் குனிந்து கால் முட்டிகளில் கைகளைக் குற்றி மூச்சு வாங்கிட…

‘என்னத்துக்கு இம்புட்டு வேகமா ஓடி வந்த?’ என வாய் வரை வந்துவிட்ட வார்த்தைகளை கேட்காது பக்கவாட்டில் பார்வையை பதித்தான்.

“கல்யாணம் பண்ணிக்கப்போரியா மாமா?”

அவன் உடல் விறைத்தது.

“சொல்லு மாமா?”

“என்ன சொல்லணும்?” கர்ஜனையாக ஒலித்தது அவனது குரல்.

“நீயி இன்னொரு பொண்ணு கழுத்துல தாலி கட்டிடுவியா? உன்னால அது முடியுமா மாமா?” அழுகையோடு கேட்டிருந்தாள்.

“வேணான்னு சொல்லிட்டதானே? பொறவு என்னத்துக்கு கேட்குறவ?” அவனது வார்த்தைகள் ஊசியாய் அவளின் இதயத்தை பதம் பார்த்தது.

அவளின் கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது.

“மருக்கா உன்கிட்ட கேட்கவே கூடாதுன்னுதேன் தோணுது. என்ன பண்றது. காதலிச்சிட்டனே!” என்ற லிங்கம், “என்னை கட்டிக்கிட சம்மதம் சொல்லு. இந்த கல்யாணத்தை நிறுத்திப்புடுறேன்” என்றான். அவளை கூர்மையாய் பார்த்தபடி.

“புரிஞ்சிக்கோ மாமா!” என்றவள், “கல்யாணம் பண்ணிக்கிட வேணாம். ஆனால்…” என்று தடுமாறினாள்.

அவளின் தடுமாற்றமே ஏதோ ஒப்பாத ஒன்றை சொல்லவிருக்கிறாள் என்பதை லிங்கத்திற்கு உணர்த்தியது.

கண்களை இறுக மூடி தொண்டைக்குழி ஏறி இறங்கிட மூச்சினை ஆழ்ந்து உள்ளிழுத்தவள்,

“தாலி கட்டிக்கிடாம சேர்ந்து வாழலாம்” என்றாள்.

அவள் சொல்லியதன் பொருள் அவனுக்கு அருவருப்பை கொடுத்திருக்க வேண்டும். முகம் சுளித்தான்.

காதல் கொள்ளை கொள்ளையாய் அவள் மீது வைத்திருக்கிறான். ஆனால் எப்போதும் ஒரு சிறு பார்வை அவளை தவறாக பார்திருக்கமாட்டான். எல்லாம் கல்யாணத்திற்கு பிறகு தான் என்று முத்தத்தைக் கூட தவிர்த்து வந்தவனுக்கு, அன்று ஆலையில் அவளாகக் கொடுத்தது தான் முதல் முத்தம். அப்படி கண்ணியமாக இருப்பவனுக்கு அவள் சொல்லியது ஆத்திரத்தை உண்டாக்கியது.

“உளறாம வூட்டுக்கு போ” என்று வேட்டியை மடித்துகட்டியபடி லிங்கம் திரும்ப, அவனின் கையை பிடித்து இழுத்து திருப்பியவள், அவன் உணரும் முன்பு அவனது இதழோடு இதழ் பொருத்தியிருந்தாள்.

லிங்கம் அவளை விலக்கிட முயல, அவளோ அத்தனை பிடியாக அவனை தனக்குள் அடக்கினாள். அவளிடம் இத்தனை பலத்தை அவன் எதிர்பார்க்கவில்லை.

ஒரு கட்டத்தில் சிலையாக மரத்து நின்றான்.

சில நிமிடங்களில் விலகியவள்,

“ப்ளீஸ் மாமா… புரிஞ்சிக்கோ” என்றாள்.

“என்னத்த புரிஞ்சிக்க?”

“இப்போலாம் இது சகஜமாகிடுச்சு” என்றாள்.

அங்கை லிவ்விங் ரிலேஷன்ஷிப் பற்றி சொல்கிறாள் என்பது புரிந்தவனுக்கு நரம்புகள் புடைத்துக் கிளம்பின.

இவள் சொன்னால் புரிந்துகொள்ளும் ரகமில்லை என நினைத்தவன்,

“சரி… நீயே கேட்கும்போது நானும் சம்மதிக்கிறேன்” என்றவனிடன் தன்னுடைய அதிர்வை காட்டிக்கொள்ளாது நின்றாள்.

“எனக்கு இப்போவே இங்குட்டே சரிதேன்” என்று தாங்கள் நின்றிருந்த வரப்பினை காண்பித்தான்.

அவள் அவனை அதிர்வாய் நோக்கினாள்.

“என்ன? எப்புடியும் தாலி இல்லாம வாழப்போறோம். அதுக்கு நடக்க வேண்டியது எங்க எப்புடி நடந்தாக்கா என்ன?” என்றவன், அவளை சுண்டி இழுத்து இறுக்கி அணைத்தான்.

அங்கையின் பார்வை சுற்றுப்புறத்தை அலச…

“இங்குட்டு நம்மளை யார் கண்ணுக்கும் தெரியாது” என்றவன், அவளின் கழுத்து எம்புகளில் முத்தம் வைக்க, அவளோ முகம் உயர்த்தி அவனின் செயல்களை உள்வாங்கிட பெரும் முயற்சி செய்தாள்.

தாலி கட்டிக்கொள்ளாமல் வாழலாம் என்று கேட்டவள் அவள் தான். அவன் மறுத்தும் பிடிவாதம் செய்தவள் அவள் தான். ஆனால் ஏனோ இப்போது நடக்கும் செயலை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அங்கையின் தாவணியில் கை வைத்தவன் அவளின் முகம் காண, கண்கள் மூடி அவனின் செயலை ஏற்கும் விதமாக நின்றிருந்தவளின் மீது கோபம் கட்டுக்கடங்காது பொங்கிக்கொண்டு வர…

“ச்சீய்” என்று உதறி தள்ளினான். வரப்பில் தொப்பென்று விழுந்தவளை தூக்க வேண்டுமெனக்கூட நினையாது விறுவிறுவென அங்கிருந்து சென்றிருந்தான்.

கால்களை கட்டிக்கொண்டு மடங்கி அமர்ந்தவளின் அழுகை மட்டும் நிற்கவில்லை.

லிங்கத்தின் உள்ளம் உலைகலனாக எரிந்தது.

‘என்ன காரியம் செய்ய துணிந்துவிட்டாள். கல்யாணம் வேணாமாட்டிக்கு. நான் மட்டும் வேணுமோ?’ பொறுமினான்.

அங்கை தாலி வேண்டாம் என சொல்லியது அவனது காதுகளில் ஒலித்துக்கொண்டே இருந்தது.

அவள் சொல்வது அத்தனை எளிதல்ல என்பதை புரிய வைத்திடவே செயலில் காட்டிட முனைந்தான். ஒரு கட்டத்திற்கு மேல் அவனாலே முறையற்ற செயலை ஏற்க முடியாது அவளை பார்க்க, அவளோ ஏற்கும் விதத்தில் தன்னை ஒப்புவித்து நிற்க, ஆத்திரம் அடைந்து தள்ளிவிட்டு வந்து விட்டான்.

“என்ன நெனைச்சிட்டு இருக்காள். இவ கூப்பிட்டதும் பின்னாடியே வருவேன்னா… ச்சை…” என்று கொதித்தவனுக்கு ஒன்று புரிந்தது, அவளுக்கு தன்னுடன் வாழ்வதில் பிரச்சினை இல்லை. தாலி கட்டிக்கொள்வதில் தான் ஏதோ உள்ளது. சரியாக யூகித்தான்.

அவளின் சம்மதத்திற்காகக் காத்திருந்த வீரனும், இப்படி அதிரடியாக திருமணமென்று சொல்ல அதுதான் காரணமோ என நினைத்தவன், வீரனுக்கு அழைப்பு விடுத்தான். அவன் கோவிலில் இருந்ததால் எடுக்கப்படவில்லை.

லிங்கத்தின் பொறுமையெல்லாம் எங்கோ ஓடியிருந்தது.

என்ன தான் காதல் கொண்டவர்களாக இருந்தாலும் அவனால் இதனை சற்றும் ஏற்க முடியவில்லை.

வரும் வழியிலேயே கிணற்றுக்குள் தொப்பென்று குதித்தவன் தன் கோபம், ஆத்திரம் தீரும் வரை நீந்தினான். மனம் சோர்ந்து உடலும் களைப்படைந்த பின்னரே மேலேறி வந்தவன்.

ஈரம் சொட்ட சொட்ட வீட்டிற்குள் வந்தவனை கண்ட பாண்டியன்,

“என்ன லிங்கு இது?” என பதற்றத்தோடு கேட்க,

“கிணத்து மேட்டுல நின்னு பார்த்திட்டு இருக்கும்போது கால் இடறி கிணத்துக்குள்ளார விழுந்துட்டேனுங்க ஐயா” என்று ஒரே மூச்சாக பொய் சொல்லியவன், பதறியவராக அருகில் வந்த அபியின் முகம் காணாது மேலேறிச் சென்றுவிட்டான்.

அபி சில நிமிடங்களில் மாடியேறி அவனது அறைக்குள் செல்ல… ஆடை மாற்றாது ஈரத்தோடே அமர்ந்திருந்தான்.

அவனால் மனதில் எரிந்து கொண்டிருக்கும் தகிப்பை குளிர் நீராலும் தணிக்க முடியவில்லை.

“சாமி… லிங்கு” என்று உள்ளே நுழைந்தவர், கையிலிருந்த தம்ளரை மேசையில் வைத்துவிட்டு தன் சேலை தலைப்பால் அவனின் தலையை துவட்டினார்.

என்ன கேட்டாலும் அவன் சொல்லப்போவதில்லை என்பதால் அவரும் எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை.

“பார்த்து சூதானமா இருந்துக்க கண்ணு. நீச்சல் தெரியுமின்னாக்காலும், விழுந்த வேகத்துல சுத்து பாறையில மண்டை இடிச்சாக்கா என்னாவுறது?” என்றார். அக்கறையாக.

“இந்தா சூடா கொத்தமல்லி தண்ணி. பனவெல்லம் போட்டிருக்கு. குடிச்சிப்போட்டு உடுப்பு மாத்திக்கய்யா” என்றார்.

வாங்கி பருகியவன் எழுந்து குளியலறைக்குள் புகுந்து கொண்டான். லிங்கம் வெளியில் வரும்வரை அங்கவே நின்றிருந்தவர், அவன் படுத்துக்கொள்ளவும் கீழே வந்தார்.

“என்னட்டி… மேல போயி எம்புட்டு நேரமாச்சு. அடுப்புல வெஞ்சினமெல்லாம் வச்சிப்போட்டு போயிட்ட. நான் பார்க்காம இருந்திருந்தாக்கா… எல்லாம் கருகல் அடைஞ்சிருக்கும்” என்றார் மீனாட்சி.

ஆனால் அவரின் பேச்சினை காதிலே வாங்காத அபி,

“லிங்குவை இப்படி பார்க்க முடியல அயித்த” என்று சேலையில் கண்களை ஒற்றி எடுத்தார்.

“இன்னும் ரெண்டு நா அபி. அமிழ்தன் சரி செஞ்சிடுவியான். செத்த கம்மின்னு இரு” என்று தன் மூத்த பேரன் மீது வைத்திருந்த நம்பிக்கையில் மருமகளை தேற்றினார்.

அபி மேலே செல்லும்போது பின்பக்கம் கட்டுத்தரிக்கு சென்ற பாண்டியன், கால்நடைகளுக்கு தீவினம் வைத்து தண்ணீர் காட்டி உள்ளே வந்தும், மனைவியைத்தேடி சமையலயறைக்குள் வந்தார்.

“என்னங்க?”

“ஏதும் சொன்னானா?”

ஏற்கனவே வருத்தத்தில் இருப்பவரிடம் ஏதும் சொல்லி கலவரப்படுத்த வேண்டாமென்று, “தூங்கிட்டா(ன்)ங்க. ரெண்டு நாளுல கல்யாணமின்னு ஓட்டலுக்கு வர வேணாமின்னு அமிழ்தன் சொல்லியிருப்பான் போல” என்றார்.

“சரி” என்றவர் நகர்ந்திட,

பிரேமுக்கு அழைத்த அபி…

“லிங்கு வரமாட்டியான் பிரேமு. ஓட்டலுவல பார்த்துக்கய்யா” என்றார்.

“சரிங்க அத்தை” என்றவன், “வீரா மாமா பொண்ணு யாருன்னு ஏதும் சொன்னாரா அத்தை?” எனக் கேட்டான்.

“இல்லை பிரேமு” என்று அபி சொல்ல… அவனிடமிருந்து அலைபேசியை பறித்த மகா, “லிங்கு என்ன செய்யிறான்?” என்று வினவினார்.

“உக்கி இருக்கான் மதினி. என்ன செய்யன்னே விளங்கல” என்றார் அபி.

“இந்த சின்னக்குட்டி லிங்குவை பார்க்கத்தேன் காத்திருந்தாள். அவன் கரும்பு கொல்லைக்குள்ள போனது பார்த்துட்டு போனாள். என்ன நடந்துச்சு தெரியல செத்த நேரத்துல லிங்கு கோபமா வெளியில் வந்தியான். கிணத்துல குதிச்சிட்டான். பிரேமை அனுப்பி பார்த்துட்டு வர சொன்னேன். நீந்திக்கிட்டு இருக்கியான்னான். வூட்டுக்கு வந்த சின்னக்குட்டி கதவை சாத்திக்கிட்டு கதறிகிட்டு இருக்காள்” என்று படபடப்பாகக் கூறினார்.

வீரனின் வீட்டு பின் பகுதியிலிருந்தும், பிரேம் வீட்டி முன் பகுதியிலிருந்தும் பார்த்தால் மொத்த பண்ணையும் தெரியும்.

அங்கை வெகு நேரமாக லிங்கத்திற்கு காத்திருந்ததால் மகா அவளை கவனித்துக் கொண்டிருந்தார். அதனால் கரும்பு காட்டுக்குள் நடந்தது தெரியவில்லை என்றாலும் மேலோட்டமான நிலவரம் தெரிந்திருந்தது.

“என்ன ஏதுன்னு தெரியாம நாம என்ன மதினி செய்யுறது?” என்ற அபி,

“அமிழ்தன் மேல பாரத்தை போட்டு வெடிக்கை பார்க்க வேண்டியது தான்” என்றார்.

அபி மட்டுமல்ல மொத்த குடும்பமும் வீரனின் மீதான நம்பிக்கையில் திருமணநாளை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர்.

**************

மீனாட்சி அம்மன் கோவில் சென்று திரும்பிய வீரன் மற்றும் மீனாள் நிறைய பைகளுடன் வீட்டிற்குள் நுழைந்தனர்.

“என்னதுய்யா இம்புட்டு பை?” மீனாட்சி கேட்டிட, இருவருக்கும் தேநீர் கொண்டு வந்து கொடுத்தார் அபி.

“கல்யாணத்துக்கு தேவையான துணிமணி, நகைவயெல்லாம் வாங்கியாச்சு அப்பத்தா” என்ற வீரன்,

“இதில் தாலியிருக்கு. சாமி முன்னாடி வையுங்கம்மா” என்று அபியிடம் சிறு பெட்டியை கொடுத்தான்.

“தங்கத்திலே கோர்த்து வாங்கியாச்சும்மா” என்றான்.

தானும் மீனாட்சியும் பார்த்து முடிய பூஜையறை எடுத்து சென்றார் அபி.

வீரன் மீனாளை ஏறிட அவளும் தலையாட்டிவிட்டு அபியின் பின்னால் அட்டை பெட்டி ஒன்றை தூக்கிக்கொண்டு சென்று சாமியின் முன் வைத்தாள்.

“என்னது மீனாள் இது?”

“பத்திரிகை அத்தை. மீனாட்சி அம்மன் முன்னாடி கோவிலில் வச்சாச்சு. வரும்போது கருப்பருக்கும் வச்சிட்டு வந்துட்டோம். நாளைக்கு ஊருக்குள்ள சொந்தபந்தத்துக்குலாம் வச்சிடலாம்” என்றாள்.

அபிக்கு தோப்பிற்கு சென்ற லிங்கம் வீட்டிற்கு வந்த தோற்றம் நினைவில் வர, பத்திரிகையை எடுத்துக்கூட பாராது வேகமாக வீரன் முன் வந்து நின்று, லிங்கு ஈரத்துடன் வீட்டிற்கு வந்தது, மகா சொல்லியதென எல்லாம் உரைத்தார். படபடவென.

“உன் வார்த்தைக்கு கட்டுப்பட்டு அவன் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டான் அமிழ்தா. ஆனால் அங்கையை மறந்துப்புடல” என்றார்.

வீரன் எதுவும் சொல்லாது அமைதியாக இருக்க…

“அங்கையை தவிர்த்து வேறொரு பொண்ணு கழுத்தில் தாலி கட்டினால் அவன் வாழ்கை உயிர்ப்போடு இருக்கதுய்யா” என்று வழிந்த கண்ணீரை துடைத்துக்கொண்ட அபியின் முன் மீனாள் கொண்டு வந்த பத்திரிகை ஒன்றை நீட்டினான் வீரன்.

அப்போதுதான் வீட்டிற்குள் வந்த பாண்டியன் என்ன பத்திரிகை என்று அபிக்கு முன் அதனை வாங்கி பார்த்தவர்,

“ரொம்ப சந்தோஷம் அப்பு” என்றார் நெகிழ்வாய்.

“நீங்களும் அம்மாவும் இப்பவே போயி மாமா வீட்டில் பத்திரிகை வச்சிட்டு வந்திடுங்க ஐயா! நாளைக்கு சொந்தத்துக்குலாம் கொடுத்திடனும்” என்றவன், லிங்கத்தின் அறைக்கு சென்றான்.

“இந்த பையில் தட்டில் வைக்க வேண்டிய பூ, பழமெல்லாம் இருக்கு அத்தை. இந்த ரெண்டு பையிலும், அங்கன வேண்டிய துணிங்க இருக்கு” என்ற மீனாள் பெரிய பித்தளை தாம்பால தட்டு ஒன்றை எடுத்து வந்தாள்.

“எனக்கு ஒண்ணும் புரியலங்க” என்று ஏறிட்ட அபியின் கையில் “பத்திரிகையை பாரு” என கொடுத்தார்.

பார்த்தவர் முகம் மகிழ்வை காட்டியது.

“ஆனால் அங்கை…?”

“பெரியவன் பார்த்துக்கிடுவான். நீயி வா. போயிட்டு வந்துபுடுவோம்” என்ற பாண்டியன் உள்ளே சென்று ஆடை மாற்றி வந்தார்.

“நீயி சேலை மாத்தணுமின்னா மாத்தியா!” என்றார் மனைவியிடம்.

அதற்குள் மீனாள் மீனாட்சியிடம் விடயத்தை சொல்லியிருக்க,

“எந்த சலம்பலும் இல்லாம கல்யாணத்தை நடத்திக்கொடுத்திடு ஆத்தா” என்று சாமி கும்பிட்டபடி பூஜை அறையில் மீனாட்சி அம்மனின் திருவுருவ படத்திற்கு முன் கரம் குவித்து அமர்ந்துவிட்டார்.

“வூட்டை பார்த்துக்க கண்ணு வந்துப்புடுறோம்” என்று சென்ற இருவரிடமும் நீண்ட நாட்களுக்குப் பின் அதீத மகிழ்வு.

“லிங்கு…”

அழைப்போடு உள் வந்த வீரனிடம்,

“அங்கை தானே பொண்ணு?” எனக் கேட்டான் லிங்கம்.

“வேற யாரையும் உன் பக்கட்டு நிக்க வச்சிடுவனா என்ன?” அங்கிருந்த இருக்கையை லிங்கத்தின் முன் இழுத்துப்போட்டு அமர்ந்தான் வீரன்.

“இந்த கல்யாணம் வேணாம். நிறுத்திடுண்ணே!”

லிங்கம் சொல்லியதில் வீரன் அதிரவெல்லாம் இல்லை.

“காரணம் சொல்லு?” எனக் கேட்டிருந்தான்.

“என்ன சொல்ல சொல்றண்ணே” என்ற லிங்கம், காலையில் அங்கை தன்னிடம் வந்து பேசியதில் சொல்ல வேண்டியதை மட்டும் கூறினான். அதையும் இக்காலத்திற்கு ஏற்ற வகையில் நாசூக்காகத்தான் சொன்னான்.

“அவளுக்கு லிவ்விங் ரிலேஷன்ஷிப் ஒகேவாம். தாலி மேலெல்லாம் நம்பிக்கை இல்லையாம்” என்றான். அடங்கியிருந்த கோபம் சட்டென மேலெழும்பியது.

“என்னத்துக்கு இம்புட்டு கோவம் லிங்கு?” என்ற வீரன்,

“அவ பக்கட்டிருந்து கொஞ்சம் ரோசிடே… உம் மேல உசுரையே வச்சிருக்கவ ஏன் இம்புட்டு இடும்பு பண்ணுறான்னு ரோசிடே” என்றான்.

“என்னத்த ரோசிக்கிறது. அவ பக்கட்டு ஏதோ காரணமிருக்குன்னே வச்சிக்கிடுவோம். அதுக்கு தாலி வேணாம் சொல்லுவாளா அவ?” என்று கொதித்தான்.

“உன்னைய வுட்டுக்கொடுக்க முடியாமத்தாம்டே… ஒரு வழியும் அம்புடாம இப்படி கேட்டுப்புட்டாள்.” காரணம் தெரிந்த வீரனுக்கு அங்கையின் பக்கமிருக்கும் நியாயம் தெரிந்திருந்தது. அதனால் அங்கைக்கு துணையாக பேசினான்.

“நீயி ஆயிரம் சொல்லுண்ணே! மனசு ஒப்ப மாட்டேங்குது” என்ற லிங்கத்திடம் இனி மறைக்கக்கூடாது என வீரன் தானறிந்த உண்மையை சொல்ல வாய் திறந்த தருணம்… நலுங்கிய உடையில் அழுத முகம் சிவந்து வீங்கியிருக்க, திடீரென உள்ளே நுழைந்த அங்கை…

“இந்த கல்யாணம் வேணாமாட்டிக்கு மாமா. ப்ளீஸ் நிறுத்து” என்று வீரனின் கைகளை பிடித்துக்கொண்டு மன்றாடினாள்.

பாண்டியனும், அபியும் மருதனின் இல்லம் சென்று பத்திரிகை வைத்ததும் வீடே மகிழ்வில் திளைக்க… பெண் யாரென்று அறிந்த அங்கை புயலென வீரனின் வீடு நோக்கிச் சென்றாள்.

அவளின் வேகம் கண்டு பதறியவர்களாக அனைவரும் அவளின் பின்னாலே வந்திருக்க, அவள் வீரனிடம் சொல்லியதைக் கேட்டு மருதன் கொதித்தெழுந்தார்.

“உன்னால குடும்பமே பரிதவிச்சு கிடக்கு. எதுக்கு இப்படி எல்லார் உசுரையும் வதைக்கிற நீயி. உன்னால குடும்ப நிம்மதியேப் போச்சு” என்று அவர் தலையில் அடித்துக்கொள்ள…

“அச்சோ மாமா நிலைமை தெரியாம ஏதும் பேசாதீங்க” என்று அவரை அடக்கினான் வீரன்.

“கொஞ்சம் பொறுமையா இருங்க ஐயா. கண்டிப்பா இந்த கல்யாணம் நடக்கும்.” மீனாள் மருதனை அமைதிப்படுத்தினாள்.

“எப்படிம்மா… இப்பவும் இம்புட்டு புடியா வேணாமின்னு நிக்குறாளே” என்று அழுதார் மகா.

லிங்கம் அங்கையை முறைத்துக்கொண்டு நின்றான்.

தன்னை உயிராய் சுமப்பவள், எதையோ நினைத்து கல்யாணம் வேண்டாமென மறுத்தாலும், தாலி கட்டிவிட்டால் சரியாகிவிடுவாளென நினைத்தே வீரன் வெள்ளியன்று திருமணமென சொல்லியதும் சம்மதமாக ஏற்றான் லிங்கம்.

ஆனால் இப்போது அவள் தாலியே வேண்டாமென சொல்பவளிடம் எத்தனை தரம் கீழிறங்கி செல்வதென்று அவனுக்கும் ஈகோ எட்டிப்பார்த்தது.

“எல்லாரும் கொஞ்சம் பொறுமையா இருங்க” என்ற வீரன், மார்பிற்கு குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு நிமிர்ந்து நின்றான்.

அப்போதும் அங்கை அவனிடம் கல்யாணத்தை நிறுத்துமாறு கெஞ்சிக் கொண்டிருந்தாள்.

“எனக்கு காரணம் சொல்லு?”

வீரன் விடுவதாக இல்லை.

“லிங்குவை புடிக்கலன்னு சொல்லிடாத… சத்தியமா நம்பமாட்டேன்” என்றான்.

“மாமா…”

“சொல்லு… நீயி சொல்லும் காரணம் சரின்னாக்கா. லிங்குவுக்கு வேற பொண்ணை பார்த்து கட்டிவச்சிப்புடுறேன்” என்றான்.

வீரனின் வார்த்தையில் அவளின் கண்ணீர் அதிகமாகியது.

“சரி நீயி அழுதுகிட்டே இரு. எங்களுக்கு கல்யாண சோலி கிடக்கு. அதைப்போய் பார்க்கணும்” என்று வீரன் அடி வைத்திட,

“அம் பிஸிக்கலி அன்பிட் ஃபார் மேரேஜ் லைஃப்” என்று அங்கை சொல்லி முடிக்கும் முன் வீரனின் கரம் அவளின் கன்னத்தில் இடியென இறங்கியது.

அனைவரும் ஸ்தம்பித்து நின்றனர்.

வீரன் வீட்டு ஆட்களிடம் இத்தனை கோபம் காட்டியதில்லை.

அங்கை சொல்லியது ஆங்கிலத்தில் என்பதால் பெரியவர்களுக்கு புரியவில்லை என்றாலும், வீரன் அடித்ததில் சொல்லக்கூடாத ஒன்றை சொல்லியிருக்கிறாள் என புரிந்து கொண்டனர்.

லிங்கத்திற்கு அவள் சொல்வது பொய்யென்று தெரிந்தது. காலையில் அந்நிலையிலும் அவனது கைகளில் அவள் உருகி குழைந்தாளே! எப்படி அவனால் அவள் சொல்லியதை நம்ப முடியும்.

“இவ்வளவு இறங்கி பொய் சொல்லணுமின்னு என்ன அவசியம் அங்கை?” என்ற வீரன், “லிங்கு உயிர் போயிடுமின்னா?” எனக் கேட்டு அவளை அதிர்வுக்குள்ளாக்கியவன் “உன்கிட்ட இதை நான் எதிர்பார்க்கல” என்றவனாக, “இவளை கூட்டிட்டுப்போ தங்கம்” எனக்கூறி “வடிகட்டிய முட்டாள்” என்று சாடினான்.

“வா அங்கை” என்று மீனாள் இழுத்துச்செல்ல… அப்பவும் அவள் “கல்யாணத்தை நிறுத்து மாமா” என்று அரற்றியபடி தான் சென்றாள்.

“என்ன அமிழ்தா… என்னதான் நடக்குது? ஏன்” என்று பாண்டியன் கேட்டிட…

“கல்யாணத்துக்கும் லிங்கு உசுருக்கும் என்னய்யா?” என்றார் மீனாட்சி.

நேற்று அங்கை கருப்பர் கோவிலுக்கு சென்றது அங்கு அவளுக்கும் பூசாரிக்கும் நடந்த பேச்சினைக் கூறியவன்,

“நேத்து சாயங்காலம் செவ்வாய் கிழைமின்னு கருப்பருக்கு விளக்கேத்த தங்கம் போயிருக்காள். அங்கன வசந்தி பெரிம்மா பூசாரியிடம்” என்று அனைத்தும் கூறினான். கூடவே பூசாரியின் வீட்டிற்கு தான் சென்றதையும், அங்கு நடந்ததையும்.

மீனாள் கோவிலுக்கு சென்ற சமயம் வசந்தி வேறு யாரும் இருக்கிறார்களா என நோட்டமிட்டபடி உள்ளே நின்றிருக்க… அவரின் உடல் மொழியில் ஏதோ வித்தியாசத்தை உணர்ந்த மீனாள் அவருக்கு ஏதும் உடம்புக்கு முடியலையா என்று வேகமாக அருகில் செல்ல சிலைக்கு பின்னிருந்து வந்த பூசாரியிடம் வசந்தி பணத்தினைக் கொடுத்தார்.

அதில் சுதாரித்த மீனாள் ‘இவங்க எதுக்கு பூசாரிக்கு பணம் கொடுக்கணும்?’ என சிந்தித்தவளாக அரவம் காட்டாது அருகில் சென்று மரத்திற்கு பின் ஒளிந்து நின்றாள்.

காட்டு மரங்களுக்கு நடுவில் கோவில் என்பதால் அவர்களால் மீனாளின் வரவை அறிய முடியாமல் போனது.

“காலையில் அங்கை வந்து பரிகாரம் எதுமிருக்கும்மான்னு கேட்டு அழுவும்போது உண்மையை சொல்லிப்புடலான்னு தோணுச்சுங்க. எதுக்கு இப்படியொரு பழிவாங்கல். சின்னதுங்க வாழ்ந்துட்டு போவட்டுமே!” என்று பூசாரி சொல்ல…

“என்கிட்ட கட்டு கட்டா பணம் வாங்கித்தேன் உம் பொண்ணு கல்யாணத்தை முடிச்சிருக்க. மனசுல வச்சிக்க பூசாரி” என்றார் வசந்தி.

“அந்த பணத்தை ஏன் வாங்கினேன்னு இருக்கு” என்ற பூசாரி…

“நீயெல்லாம் கோவிலுக்கே வராத. கருப்பர் மன்னிக்கவே மாட்டார்” என்றார்.

“அதை கை நீட்டி காசு வாங்குன நீயி சொல்லாதே! இனி நீயே நான் சொன்னதுலாம் பொய்யின்னு சொன்னாலும் அங்கை நம்பமாட்டாள். என்னையவே மூஞ்சியில முழிக்காதன்னு சொன்னியான். அவனை சந்தோஷமா இருக்கு விட்டுடுவனா நானு?” என்று வஞ்சமாக மொழிந்த வசந்தி, “என்னை ஒதுக்கி வச்ச காரணத்துக்காக மொத்த குடும்பமும் நிம்மதியில்லாம தவிக்கணும். எங்க தட்டுனா நடக்குமின்னு தெரிஞ்சு தட்டியிருக்கேன்” என்றவர், “என்னை மாட்டிவிடுறன்னு நீயி மாட்டிக்காதே. வீரன் பொளந்து கட்டிடுவியான்” என்றார்.

வீரனின் அடியை… அய்யனார் போன்று நிமிர்ந்து நிற்கும் அவனின் தோற்றத்தை நினைத்து பார்த்த பூசாரி பயத்தில் தலையை உலுக்கிக் கொண்டார்.

“கருப்பன் வந்து தண்டிச்சாலும் தண்டிக்கட்டும் வீரனிடம் அடி வாங்கும் தெம்பு கிடையாது” என்றார் பூசாரி.

“நெனச்சது நடந்துப்போச்சு. நான் எதிர்பார்த்த மாறியே அங்கையே லிங்குவை வேணாமின்னுட்டாள். எனக்கு இது போதும். குடும்பம் உடைஞ்சிடும்” என்ற வசந்தி…

“கொஞ்ச நாளைக்கு என்னைய பார்த்தாலும் என்கிட்ட பேச வராதே பூசாரி…” எனக்கூறிச் சென்றார்.

இதுதான் விடயமென்று அவர்கள் பேசிக்கொள்ளவில்லை என்றாலும், பேசியது வைத்து வசந்தி தான் பூசாரி மூலம் விளையாடியிருக்கிறார் என்பதை புரிந்துகொண்ட மீனாளுக்கு… இவர்கள் என்ன வேணாலும் சொல்லியிருக்கட்டும். அதை அங்கை எப்படி நம்பினாள் என தங்கையின் மீது தான் ஆத்திரம் வந்தது.

இதனை வீரனிடம் சொல்லிய மீனாளுக்கு, அவன் சொல்லிய மற்றைய பக்க விடயம் அங்கையை அடிக்கும் ஆத்திரத்தை கொடுத்தது.

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 37

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
38
+1
0
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

4 Comments

  1. Adi pavi vasanthi neilam oru maisiya ah kudumbatha ah pirika ipadilam.ah panuvanaga

  2. அந்த அண்ணன் – தம்பி பிணைப்பு அற்புதம்….

  3. பெண் யாரென்று கூறாமலே வீரன் தன் மகிழ்வையும் நிம்மதியையும் தான் முன்னிலைப்படுத்துவான் என்றறிந்து அமைதி காக்கின்றான் லிங்கம்.

    அங்கை எதனை மனதில் போட்டு குழப்பி கொண்டு இவ்வாறு செய்கின்றாலோ? தாலி கட்டிக்கொள்ளாமல் வாழ வேண்டுமா?

    அவள் தவிப்பது மட்டும் அல்லாமல் குடும்பத்தையே தவிப்பில் ஆழ்த்துகிறாள்.

    வீட்டில் இருக்கும் அனைவருமே நிலைமை சரி இல்லையென்றாலும் வீரனின் மீதுள்ள நம்பிக்கையில் இருக்கின்றனர்.

    வசந்தியின் வன்மம் எந்த அளவு விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது.

    சொந்த அண்ணன் குடும்பத்தில் இப்படி குழப்பம் விளைவிக்க எப்படி மனம் வந்ததோ!