Loading

அத்தியாயம் – 2

ரூபனை கண்டதும் “எங்கடா போன.?” என்று சிவா கேட்க, “உங்களைய காணோம்னு தான் நான் வெளில வந்தேன்.. நீங்க எங்க அண்ணே இருந்தீங்க.?” என்று மறுவினாவை ரூபனும் எழுப்பிட, “நான் அன்னதானம் நடக்கற இடத்துல இருந்தேன்டா.. சாப்பாடு எல்லாம் ரெடியாகிருமா.? இல்ல இன்னும் நேரமாகுமானு பார்க்க போனேன்..” என்றான் பதிலாக.

முதலில் அவ்வூர் தலைவராக இருந்தது ரூபனின் தந்தை பொன்னுச்சாமி தான்.. மனைவி மங்கை.. இவர்களின் ஒரே மகன் தான் அபி ரூபன்.

மூன்று வருடங்களுக்கு முன்பு எதிர்பாரா விதமாக நடந்த பொன்னுச்சாமியின் இறப்பிற்கு பிறகு அவரின் தம்பி வேலுச்சாமி தான் அவ்வூர் தலைவராக இருக்கிறார். இவருக்கும் இரண்டும் மகன்கள்.

தந்தை இறந்த இரண்டு மாதங்களில் ரூபனுக்கு பெங்களூரில் வேலை கிடைக்க, அன்னையை தனியாக விட மனமின்றி அவரையும் தன்னுடன் அழைத்து சென்று விட்டான். திருவிழாவிற்கு மட்டும் தவறாமல் சொந்த ஊருக்கு வந்து விடுவார்கள் தாயும் மகனும்.

சிவாவின் தந்தை வீரச்சாமியும் அவ்வூரில் முக்கிய தலைவர் தான்.. அவரின் தலையீடு இல்லாமல் அவ்வூரில் எதுவும் நடக்காது.. இவரின் மனைவி கஸ்தூரி.. ஒரே மகன் சிவக்குமார்.. சிவாவின் மனைவி நிவேதா.. இவர்களுக்கும் ஐந்து வயதில் சாத்விக் என்ற ஒரே மகன்.

பொன்னுச்சாமியின் மகன் என்ற முறையில் ரூபனுக்கும் வீரச்சாமியின் மகன் என்ற முறையில் சிவாவுக்கும் அங்கு மரியாதை அதிகம்..

ஒருபுறம் அம்மனுக்கு அலங்காரம் நடைபெற்று கொண்டிருக்க, இவ்வளவு நேரம் வேலுச்சாமியுடன் பொதுவான கோவில் விசயங்களை பேசி கொண்டிருந்த வீரச்சாமி “இன்னுமாடா உன் ஆத்தா வரல.? பூஜையே ஆரம்பிக்க போறாங்க” என்று கடுகடுத்தார் மகனிடம்.

“அம்மா வெளில தான் இருக்காங்க.. நான் வர்றப்ப பார்த்தேன்பா.. மத்தவங்களைய தான் காணோம்..” – சிவா

“சாத்விக்கை பார்த்தேன் அண்ணா.. அப்ப அண்ணியும் வந்துருப்பாங்க..” – ரூபன்

“பையனை தனியா வுட்டுப்புட்டு அவ என்னடா பண்ணிட்டு இருக்கா வூட்டுல.?” – வீரச்சாமி

“அய்யோ அப்பா சாத்விக் தனியா எல்லாம் இல்லை.. ஒரு பொண்ணு தான் வெச்சிருந்தாங்க..” – ரூபன்

“அப்பா அவன் ஆதிரா கூட இருப்பான்.. இப்ப எதுக்கு நீங்க கோவப்பட்டுட்டு இருக்கீங்க.?” – சிவா

“அந்த பெரிய கழுதை சொல்றதை எதுவும் காதுல வாங்காம ஊர் மேய்ஞ்சுட்டு இருக்காளா.? வீட்டுக்கு வரட்டும்” என்று சிடுசிடுத்தவரிடம் இருந்து சிவாவை காப்பாற்றவே பூசாரி வீரச்சாமியை அழைக்க, அவர் நகர்ந்ததும் “ஏன்டா இப்படி.?” என்று பாவமாக ரூபனிடம் கேட்டான் சிவா.

“அண்ணே எனக்கு எப்படி தெரியும்.? ஆனா ஒண்ணு இந்த ஊருல இருக்கற ஓல்டு மேன் எல்லாரும் சாந்தமா பேசி நான் பார்த்ததே இல்லை.. எப்படி தான் அவங்களைய சமாளிக்கறாங்களோ அவங்க வீட்டம்மா..” என்றான் ரூபன் மெல்லிய குரலில்.

இதை கேட்டு சிவாவுக்கு சிரிப்பு எழுந்தாலும் மற்றவர்களை கருத்தில் கொண்டு தாடியை நீவுவது போல் “உன் கருத்தை நானும் வழி மொழிகிறேன் தம்பி” என்றவனுக்கு ஹைபை குடுக்க எழுந்த கையை கஷ்டப்பட்டு கட்டுப்படுத்தினான் ரூபன்.

“எங்கடி அந்த பெரிய கழுதை.?” என்று நிவேதாவிடம் கஸ்தூரி எகிறிட, திருதிருவென விழித்த நிவேதாவிற்கு என்ன பதில் கூறுவது என்றே புரியவில்லை. தங்களுடன் தான் வந்தவள் தங்கள் பேச்சை கேட்காமல் சென்றால் இவளும் என்ன தான் செய்வாள்.?

மாமியாரின் பார்வை தன்னை பொசுக்குவதை உணர்ந்த நிவேதா தலையை திருப்பி கொள்ள, அவளுக்கு ஆதரவாக துருவினியோ “அத்தை அந்த லூசு எங்க பேச்சை காதுல வாங்காம போனதுக்கு நீங்க ஏன் நிவே அக்காவை முறைக்கறீங்க.?” என்று தமக்கையை போட்டு குடுத்தாள்.

“உங்க ஆத்தா என்ன தான் புள்ள வளர்த்தி வெச்சிருக்காளோ.? ஏழு கழுதை வயசாகுது இன்னும் ஊர் மேய வேண்டியது..” என்று ஆதிராவை மட்டுமின்றி அவளின் அன்னையையும் வறுத்தெடுக்க தொடங்கிய நேரம் பூஜை ஆரம்பமானதற்கு அறிகுறியாக மணியோசை அடிக்க தொடங்கியது.

“இப்பவே கூட்டம் அதிகம்.. இதுல அவ எங்குட்டு சாமி கும்படறது.?” என்று புலம்பியபடி கஸ்தூரி பூஜையை கவனிக்க ஆரம்பித்து விட, “ஸ்ஸ்ஸ்ஸ்ப்ப்பாபா எப்படி தான் உன் அக்காளை சமாளிக்கறீயோ.?” என்று வாய்விட்டு புலம்பிய நிவேதாவிற்கு இப்போதே கண்ணை கட்டியது.

ஒரு கடை விடாமல் அந்த இடம் முழுவதும் சாத்விக்குடன் சேர்ந்து சுற்றி விட்டு சாவகாசமாக அத்தையை தேடி ஆதிரா வர, அதற்குள் அவர்கள் அனைவரும் சாமி கும்பிட்டு விட்டே வெளியில் வந்திருந்தனர்.

பொது இடம் என்பதையும் மறந்து “வீட்டுல உன்கிட்ட என்னடி சொன்னேன்.? இங்க வந்தா அடக்க ஒடுக்கமா இருக்கணும்னு சொன்னேன்ல.?” என்று அனல் பார்வையில் கஸ்தூரி ஆரம்பிக்க, நல்ல பிள்ளையாக அத்தையின் கையில் இருந்த திருநீறை எடுத்து நெற்றில் வைத்து பின்பு “அத்தை சாப்பிட போலாமா.?” என்று கேட்டாள் தீவிரமான பாவனையில்.

இதில் கஸ்தூரிக்கு எக்கச்சக்கமாக ரத்த அழுத்தம் எகிற தொடங்க, “அத்தை நீங்க போங்க நான் பார்த்துக்கறேன்..” என்று மாமியாரை வலுக்கட்டாயமாக அனுப்பி வைத்த நிவேதா நங்கென்று கொட்டினாள் ஆதிராவை.

முகத்தை சுருக்கி தலையை தேய்த்து “வொய் திஸ் கொலைவெறி அக்கா” என்று ஆதிரா பாவமாக வினவ, “எங்கடி போய் தொலைஞ்ச.? உன்னால நாங்களும் திட்டு வாங்க வேண்டியதா இருக்கு” என்றாள் முறைப்புடன்.

“உங்க மகன் பஞ்சு மிட்டாய் வேணும்னு அழுதானு தான் வாங்க கூட்டிட்டு போனேன்..” – ஆதிரா

“உனக்கு வேணும்னு தான் அவனை தூக்கிட்டு போனேனு சொல்லு.. அதுதான் சரியா இருக்கும்..” – துருவினி

“இப்ப உன்கிட்ட யாராவது பேசுனாங்களா.?” – ஆதிரா

“நானும் உன்கிட்ட சொல்லலயே..” – துருவினி

“லூசுகளா கொஞ்சம் அமைதியா இருங்க..” என்று அவர்களை அடக்கிய நிவேதா மகனை தன் பக்கம் இழுத்து பின்பு “முதல்ல நீ போய் சாமியை பார்த்துட்டு வா.. இல்லனா உங்க அத்தை இருக்கற கோவத்துக்கு கடிச்சு குதறிடுவாங்க..” என்று ஆதிராவை கடிந்தாள்.

“எதே.? இந்த கூட்டத்துல..? அதுவும் நானு..? அட போங்க அக்கா.. சாப்பிட்டு வந்து போறப்ப மெதுவா பார்த்துட்டு போலாம்.. ஒண்ணும் தப்பு இல்லை..” என்றாள் சாதாரணமாக.

“கொன்றுவேன் ஒழுங்கா போய்ட்டு வாடி.. உள்ள தான் உன் மாமாவும் இருக்காங்க..” என்று எப்படியோ ஆதிராவை நிவேதா அனுப்பிட, அஷ்டகோணல் முகத்துடன் நகர்ந்த ஆதிரா நிரம்பி வழிந்த கூட்டத்தை விழிகள் பெரிதாக விரிந்திட கண்டவளுக்கு மலைப்பாக இருந்தது.

‘ஆத்தி இத்தனை கூட்டமா.? நம்ப வெளில போனாலும் விட மாட்டாங்களே.. தாயே மாகாளி எந்த சேதாரமும் இல்லாமல் பத்ரமா என்னைய வெளில போக வெச்சாரு..’ என்று வேண்டுதல் வைத்து கூட்டத்தினுள் நுழைந்தாள்.

பூஜை முடிந்ததும் சித்தப்பாவின் கட்டளைக்கு இணங்க அன்னதானம் நடைபெறும் இடத்திற்கு செல்ல ரூபன் வெளியில் வர முயன்ற நேரம் அம்மனை காண மக்கள் முன்னேறி வந்து விட, வெளியே செல்ல முடியாமல் தவித்து நின்றிருந்தான் நின்ற இடத்திலே.!!

அவனின் அலைப்பேசி வேறு நொடிக்கொரு முறை அடிக்க “ரெண்டு நிமிசத்துல அங்க வந்துருவேன்” என்று விட்டு கூட்டத்தை காண பெருமூச்சு எழுந்தது அவனுள்.!

“வரிசையா தான் வாங்களேன்மா.. ஏன் இப்படி பண்றீங்க.? கொஞ்சம் பொறுமையா இருங்களேன்..” என்று கூட்டத்தை நோக்கி கத்த, அவன் கத்தலை யாரும் காதில் வாங்கவே இல்லை.. ‘அய்யோ தொண்டை தண்ணீ வத்த கத்துனாலும் யாரும் கேட்க போறது இல்ல.. வெளில போனா போதுமே..’ என்றிருந்த ரூபனுக்கு தலையே சுற்றியது.

அந்நேரம் “ச்சை எல்லாம் அந்த நிவே அக்காவால வந்தது.. இந்த கூட்டத்துல என்னைய துரத்தி விட்டுட்டு அவங்க மட்டும் ஹாயா வெளில நின்னுருக்காங்க” என்று முணுமுணுத்தவாறு வாசற்படியில் ஏறி இருந்த ஆதிராவை பக்கத்தில் இருந்தவர்கள் இடித்ததில் பிடிமானம் இல்லாமல் சாய போனவளின் கையை சட்டென்று பிடித்திருந்தான் ரூபன்.

‘ஆத்தாடி அம்மா.. கீழே விழுந்துருந்தா நாலு மாசம் பெட்ல இருந்துருக்கணும் போல’ என்று கண் மூடி திறந்தவளுக்கு மனமும் படபடவென அடித்து கொண்டது.

அப்போது ரூபனுக்கு எப்படியாவது வெளியில் செல்ல வேண்டும் என்ற எண்ணம் மட்டும் இருந்ததால் “பார்த்துமா.. பார்த்து போங்க..” என்று கனிவாக கூறிவனிடம் இருந்து கையை பிரித்தெடுத்து கொண்ட ஆதிரா “தேங்க்ஸ்ங்க ரொம்ப தேங்க்ஸ்..” என்றாள் கீழே விழாமல் காப்பாற்றியதற்கு.

பதிலின்றி புன்னகை மலருடன் கூட்டத்தில் நுழைந்து ரூபன் வெளியேற, ஆடவனின் கன்னத்தில் விழுந்த கன்னங்குழியை ஒரு வினாடி ரசித்த பெண்ணவள் ‘ச்சை கோவில்டி இது’ என்று தன்னை தானே கடிந்து “தாயே மாகாளி” என்று கன்னத்தில் போட்டு கொண்டாள்.

ஏதேச்சையாக பிடித்த பெண்ணவளின் கரத்தை தான் வாழ்நாள் முழுவதும் பற்ற போகிறோம் என்று ரூபனும், அவனின் சிரிப்பு மட்டுமின்றி அவனே அவளுக்கானவனாய் மாற போகிறான் எ

ன்பதை ஆதிராவும் அப்போது அறிந்திருக்கவில்லை.!!!!

ஆதிராவை கண்டதும் வீரச்சாமி கடுங்கோவத்தில் முறைக்க, ‘ஸ்ஸ்ஸ்ப்ப்பா இந்த மீசைக்காரர் ஏன் நம்மளைய இவ்ளோ பாசமா பார்க்கறாரு.?’ என்ற தீவிர யோசனையில் முகத்தை சுருக்கினாள்.

அதற்குள் சிவா இவளை பார்த்து விட, “திரா இங்குட்டு வா” என்று கூட்டத்தினுள் நசங்கியவாறு நின்றிருந்த ஆதிராவை தன்பக்கம் இழுத்து “இந்த கூட்டத்துல தான் வரணுமா என்ன.?” என்று கடிந்து கொண்டான்.

“ப்ச் இதைய விடு மாம்ஸ்.. மீசைக்காரர் ஏன் என்னைய அவ்ளோ பாசமா பார்த்தாரு..” என்று தன் சந்தேகத்தை அவனிடமும் எழுப்ப, “ம்ம்ம்ம் பொங்கல் குடுக்க தான்.. சாமி கும்பிட்டு போய் வாங்கிக்க.. சாமியை பார்த்தாச்சுல வா போவோம்..” என்றான் கடுப்பு மேலோங்க.

“அய்யே இவரு குடுக்கற பொங்கல் எல்லாம் நீங்களே வாங்கிக்கங்க.. நான் வெளில குடுக்கறதை வாங்கிக்கறேன்.. என்ன இருந்தாலும் கோவில்ல குடுக்கற பொங்கல் தான் தனி சுவை..” என்று இதழை சுழித்தவளை என்ன செய்தால் தகுமென்று சிவா முறைக்க, ஆதிராவோ கர்மசிரத்தையுடன் சாமியை பார்ப்பது போல் பாவ்லா செய்தாள்.

பின்பு “போலாமா மாம்ஸ்” என்றும் கேட்க, “போவோம் போய் தொலைவோம் வா..” என்றவன் அத்தை மகளை இழுத்து கொண்டு வெளியேறினான்.

“தேங்க்ஸ் மாம்ஸ்.. நான் அவங்ககிட்ட போறேன்.. நீங்க போங்க..” என்று ஓட போனவளின் ஜடையை இழுத்து பிடித்த சிவா “கொன்றுவேன் நானும் வர்றேன்.. உன்னைய நம்ப முடியாது.. உன்னால அந்த மனுசன் கிட்ட என்னால திட்டு வாங்க முடியாது.. ” என்றிட, கடுப்பான ஆதிரா “ம்ம்ம்க்க்க்கும்” என்றாள் முணுமுணுப்பாக.

அழகிய பூகம்பம் தொடரும்..

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்