
அத்தியாயம் 111
பெண்கள் நால்வரும் அரசுவை முறைக்க, அவனை அவர்களிடம் இருந்து காப்பது போல் மற்ற நால்வரும் முன்னே வந்து நின்று அவரவர் மனைவிமாரை முறைத்தனர். இப்போது பெண்களின் முகம் கோபத்தில் இருந்து அசடு வழியும் நிலைக்கு மாறியது.
“நாம மாட்டிகிட்டோம் போலவே.” லீலா சொல்ல, ”ஆமாக்கா இப்ப என்ன பண்றது.” என்றாள் ஊர்மி.
“வேற வழியே இல்ல. ஆளுக்கு ஒரு பக்கமா ஓடிப் போயிட வேண்டியது தான். தங்கச்சிங்களா ஓடிப் போயிடுங்க.” என்ற லீலா முதல் ஆளாய் அங்கிருந்து ஓட்டம் பிடித்தாள்.
“லீலா எங்க ஓடுற. இன்னைக்கு உன்னை சும்மா விடப் போறதில்லை. மரியாதையா நிக்கிறியா இல்லையா.” என்றவாறு அவளை துரத்திக் கொண்டு ஓட ஆரம்பித்தான் செல்வா.
அண்ணனும் அண்ணியும் ஓடி விளையாடுவதை மற்றவர்கள் பார்த்துக்கொண்டு நிற்க, “டேய் என்னடா இப்படி செஞ்சு வைச்ச சிலையாட்டம் நிக்கிறீங்க. உங்க அண்ணங்காரன் உங்களுக்கு நல்ல ஒரு ரூட்டைக் காட்டிட்டுப் போயிருக்கான். அதையே நீங்களும் பாலோவ் பண்ணி போங்க. உங்க பொண்டாட்டியை கோழியைப் பிடிக்கிற மாதிரி பிடிங்கடா வெண்ணைங்களா.” யோசனை சொல்லிக்கொடுத்தான் அரசு.
ஊர்மி ஓட முடியாமல் முதலாவதாகத் தன்னுடைய கணவனிடம் மாட்டிக் கொள்ள, அவள் தலையில் வலிக்குமளவிற்கு கொட்டியவன், “விஷம் விஷம். ஒரு நிமிஷத்தில் என்ன பதற வைச்சிட்டியே டி பாவி. நான் யாரு, நான் நினைச்சா என்னவெல்லாம் பண்ணலாம் எல்லாம் தெரிஞ்சிருந்தும் என்கிட்ட இப்படி ஒரு விளையாட்டை விளையாடி இருக்க. இவ்வளவு நாளா இல்லாத திருட்டு புத்தி இப்ப எப்படி வந்தது உனக்கு.” என்றான்.
“ம்ம்… இத்தன நாளா நான் ஒருத்தர் கூட இருந்தேன் இல்ல. அவரோட புத்தி தான் எனக்கும் ஒட்டிக்கிச்சு.” கீழே விழுந்தாலும் மண் ஒட்டவில்லை என்பது போல் கெத்து காட்டினாள் ஊர்மி.
ருக்குவை வளைத்துப் பிடித்த தெய்வா, “ஏய் போலீஸ் காரன் பொண்டாட்டி. நீதான் இது எல்லாத்துக்கும் ஏற்பாடாடி. ஒரு நிமிஷத்தில் வயித்தில் புளியைக் கரைச்சிட்டியே படுபாவி. நீ எல்லாம் நல்லா இருப்ப.” என்க,
“என்ன பண்றது சிலருக்கு அவங்க பாஷையில் சொன்னால் தான் புரியும். அதில் முதல் ஆளு நீங்க. உங்களுக்கு உங்க பாஷையில் சொல்ல நினைச்சேன் சொல்லிட்டேன்.” என்று கண்ணடித்தாள்.
“மேடம் அப்படி எதை என்கிட்ட என்னோட பாஷையில் சொல்ல நினைச்சீங்க.” என்க, “எதுக்கெடுத்தாலும் வா தனிக்குடித்தனம் போகலாம், வா தனிக்குடித்தனம் போகலாம் னு கூப்பிடுவீங்களே. நமக்கு ரொம்பப் பிடிச்சவங்கள விட்டுவிட்டு வர சொல்லி, நமக்கு பிடிச்ச இன்னொருத்தர் கட்டாயப்படுத்தும் போது ஏற்படும் வலி என்னன்னு உங்களுக்குப் புரிய வைக்க நினைச்சேன். கிட்டத்தட்ட புரிஞ்சு இருக்கும் னு நம்புறேன்.
என்ன ஒன்னு இன்னும் கொஞ்ச நாள், உங்களை நல்ல அலைய விடனும், சுத்த விடனும், மண்டை காய விடனும் னு நினைச்சேன். இவ்வளவு சீக்கிரத்தில் மாட்டிப்பேன்னு நினைக்கவே இல்லை.” வில்லத்தனமான திட்டத்தைச் சொன்னாள் ருக்கு.
“அடி கிராதகி உனக்குள்ள எவ்வளவு வஞ்சம் இருந்திருக்கு.” தெய்வா அதிர முத்துப் பற்கள் தெரிய சிரித்தாள் அவள்.
“தேவகி நான் உன்னை ஒன்னும் தெரியாத அப்பாவின்னு நினைச்சிருந்தேன். ஆனா என் நினைப்பு ரொம்பவே தப்புன்னு எனக்கு நல்லா புரிய வைச்சுட்ட.” தர்மா சொல்ல,
“நான் கூட தான், பெயருக்கு ஏத்த மாதிரி நீங்க ரொம்ப நேர்மையானவர், எல்லா விஷயத்திலும் நடுநிலையா இருப்பீங்கன்னு நினைச்சேன். என்னோட நினைப்பை பொய்யாக்கிக்கிட்டு கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சியே இல்லாம, உங்க அண்ணன் தம்பிங்க கூட சேர்ந்துக்கிட்டு என்னென்ன வேலை பார்த்து இருக்கீங்க. அதுக்கு முன்னாடி நான் பண்ணது எல்லாம் சின்ன விஷயம் தான்.” என்றாள் தேவகி.
“லீலா மத்தவங்கள விடு. நீயுமா அவங்க கூட சேர்ந்துக்கிட்டு என்னைக் கஷ்டப்படுத்த நினைச்ச.” கேட்ட செல்வாவின் வார்த்தைகளில் ஆதங்கம் பெரிதாய் இருந்தது.
“அதையே தான் நானும் கேட்கிறேன். மத்தவங்களை விடுங்க, நீங்க கூட எனக்கு ரொம்பப் பிடிச்ச என் தங்கச்சிங்களை என்கிட்ட இருந்து பிரிக்க நினைச்சிருக்கீங்களே இது நியாயமா?” என்றாள் லீலா.
அவள் கண்ணை நேருக்கு நேராகப் பார்க்க முடியாமல் கடுமையாய் திண்டாடிய செல்வா, “அது வந்து என்னென்னா” தடுமாற ஆரம்பித்தான்.
“மை டியர் கேர்ள்ஸ் அண்ட் பாய்ஸ் எல்லோரும் கொஞ்சம் பொறுமையா இருங்க. இந்த வீட்டில் நடந்த ஒவ்வொரு விஷயத்துக்குப் பின்னாடியும் நான் தான் இருக்கேன். நான் மட்டும் தான் இருக்கேன்.
எப்படி குருஷேத்திர போரில் கொல்வதற்கு யோசனை கொடுத்தவனும் நானே, கொல்ல ஆயுதம் வீசியவனும் நானே, கொல்லப்பட்டவனும் நானேன்னு கண்ணன் சொல்வாரோ அதே மாதிரி, அண்ணன் தம்பிகளுக்கு உங்களை பிரிக்க ஐடியா கொடுத்ததும் நானே. அவங்க இப்படி ஐடியா பண்ணாங்கன்னு உங்க கிட்ட சொல்லி ரிவென்ஜ் எடுக்க சொன்னதும் நானே. நீங்க இங்க பேசிக்கிட்டு இருக்கிற விஷயத்தை சொல்லி அவங்களை இங்க கூட்டிட்டு வந்ததும் நானே.” அரசு தன்னால் முன்வந்து ஆஜரானான்.
பாபநாசம் படத்தில் குழிக்குள் இருந்து எடுத்த கன்றுக்குட்டியைப் பார்த்து, அதிர்ச்சியில் நால்வரும் ஒரே நேரத்தில் திரும்பியதைப் போன்று எண்வரும் ஒரே பார்வையில் அரசுவைப் பார்த்தனர்.
“எதுக்காக பா எல்லாரும் என்னை இப்படி பார்க்கிறீங்க. நாரதர் கலகம் நன்மையில் முடியுமாம். அதே மாதிரி இந்த அரசுவோட திட்டம் எப்போதும் நன்மையில் மட்டும் தான் முடியும்.
யாருமே கையிலெடுக்க பயப்படுற ஒரு மிகப்பெரிய விஷயத்தை கையில் எடுத்து, குறிப்பிட்ட தேதிக்குள்ள அதை எக்ஸிக்கியூட் பண்ணி முடிச்சு காட்டியிருக்கேன்.” என்றவன் சுற்றியிருந்தவர்களின் புரியாத பார்வையை புரிந்துகொண்டு, “என்ன புரியலையா? உங்க நாலு பேரையும் சேர்த்து வைக்கிறதைப் பத்தி தான் சொல்றேன். இதை ஓவர்கான்பிடன்ஸ் னு நீங்க சொன்னாலும் பரவாயில்லை. எனக்குத் தெரிஞ்சு உங்க நாலு பேரையும் இந்த உலகத்தில் என்னைத் தவிர வேறு யார் நினைத்திருந்தாலும் சேர்த்து வைச்சிருக்க முடியாது.
அண்ணன் தம்பிங்க நாலு பேரும் ஒன்னா ஒற்றுமையாக இருக்கிறதில், இருக்கிற சந்தோஷத்தையும் கஷ்டத்தையும் நீங்க இப்ப ரொம்ப நல்லாவே உணர்ந்துட்டீங்க.
ஒன்னா இருக்கிற நாலு பேரையும் இன்னொருத்தர் பிரிக்க நினைச்சா அது எவ்வளவு பெரிய வலியை கொடுக்கும் னு உங்க பொண்டாட்டிங்க பக்கம் இருந்த நியாயத்தை உங்களுக்குப் புரிய வைக்க தான் அவங்கள வைச்சு சின்ன விளையாட்டு விளையாடினேன்.” என்க, ஆண்கள் அவனை முறைத்தனர்.
“கொஞ்ச நாளைக்கு எப்படி உங்களுக்கு ஐடியா கொடுத்தேனோ, அதே மாதிரி அவங்களுக்கும் ஐடியா கொடுத்து உங்களைச் சுத்த வைக்க நினைச்சேன். ஆனா ஒரு விஷயத்தை நினைச்சு என்னோட மனசாட்சி என்னைக் குத்திக்கிட்டே இருந்துச்சு.” என்க, இது என்ன புதுக்கதை என்பது போல் பார்த்தனர் அனைவரும்.
“தெரிஞ்சோ தெரியாமலோ நீங்க எல்லோரும் இது நாள் வரைக்கும் என்னோட விளையாட்டில் இருக்க பொம்மை மாதிரி, நான் சொன்னதை கேட்டு செஞ்சுக்கிட்டு இருந்தீங்க. நீங்க வாழவேண்டிய சுதந்திரமான வாழ்க்கையில் தலையிட்டு, உங்களை முழுக்க முழுக்க என்னோட கட்டுப்பாட்டில் வைச்சிருந்ததை நினைச்சா கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சு.
அதனால் தான் எல்லாத்தையும் இத்தோட முடிச்சுட்டு, உங்களுடைய வாழ்க்கையை உங்கள் இஷ்டப்படி வாழ விட்டுடுடலாம் னு நினைச்சு இதைப் பண்ணேன்.” என்றான் அரசு. எப்போதும் கலகலப்பாக மட்டுமே பேசும் அரசுவின் சீரியஸான பேச்சுவார்த்தை சுற்றியிருந்தவர்களை அவனைக் கவனிக்க வைத்தது.
“தங்கச்சிங்களா உங்களுக்கு வரப் போற புருஷன் எப்படி இருக்கணும் னு ஆசைப்பட்டீங்களோ அதே மாதிரி உங்க புருஷங்க மாறிட்டாங்க.
என்னதான் அவங்க மாறினாலும், கூட்டுகுடும்பம் அப்படின்னா சில சில பிரச்சினைகள் வரத்தான் செய்யும். அதை நீங்கதான் பார்த்து கொஞ்சம் பொறுமையா நிவர்த்தி பண்ணனும்.” அண்ணனாய் அறிவுரை சொன்னான்.
“நீங்க சொல்ல வர விஷயம் எங்களுக்கு ரொம்ப நல்லாவே புரியுதுண்ணா. இந்த வீட்டில் எங்களால எப்பவும் எந்த விதமான பிரச்சனையும் வராது.” தங்கைகளுக்கும் சேர்த்து தான் வாக்குக் கொடுத்தாள் லீலா.
“ஊர்மி, தேவகி, ருக்கு நீங்க மூணு பேரும் ஒன்னும் சொல்லலையே.” என்க, “அக்கா எங்களுக்கும் சேர்த்து தான் அண்ணா சொன்னாங்க. அவங்க சொன்னதைத் தான் நாங்களும் சொல்லப் போறோம்.” என்றாள் ருக்கு.
“என்னடா ராஜாக்களா நீங்க எதுவுமே சொல்லல.” ராஜ் சகோதரர்களைப் பார்த்து கேட்க, “நாங்க சொல்றதுக்கு என்னடா இருக்கு. சும்மா இருந்தவங்களை சுரண்டி பசை போட்டு ஒட்டி வைச்சிட்ட. இனிமேல் நாங்க என்ன தான் சண்டை போட்டாலும், ஒருத்தருக்கு ஒருத்தர் அடிச்சிக்கிட்டாலும், கோபத்தில் ஒருத்தரை விட்டு ஒருத்தர் பிரிய மட்டும் நினைக்கவே மாட்டோம்.
நாங்க மட்டும் இல்ல. எங்களுக்குப் பிறக்கப் போற குழந்தைங்களை கூட ஒன்னா இதே வீட்டில் தான் வளர்க்கப் போறோம். அப்பா, சித்தப்பா, பெரியப்பா பேதம் பார்க்காம வளர்க்கப் போறோம்.
அப்பாவோட கடைசி காலம் வரைக்கும் இங்க இருக்க நினைச்சோம். இனி எங்க கடைசி காலம்வரைக்கும் நாங்க இங்க தான் இருக்கப் போறோம் ஒன்னா ஒத்துமையா என்னங்கடா.” செல்வா கேட்க, “சத்தியம் டா” என்றவாறு மற்ற மூவரும் அவன் கையில் அடித்தனர்.
“எல்லாம் நல்ல படியா முடியப் போகுற மாதிரி இருக்கே.” என்றபடி வந்தார் வடிவேலு.
“ஆமா ஓல்டு மேன் உங்க பசங்க திருந்திட்டாங்க, ச்சே மாறிட்டாங்க. உங்க மருமகள்களும் மனசில் இருந்த சின்ன சின்ன வருத்தத்தைக் கூட க்ளியர் பண்ணிக்கிட்டாங்க. இனி என்ன எல்லோருக்கும் எப்போதும் சந்தோஷம் மட்டும் தான்னு எண்ட் கார்டு போட்டுடுட வேண்டியது தானே.” என்றான் அரசு.
“இல்லையே ஒரு முக்கியமான விஷயம் ஒன்னு பாக்கி இருக்கே.” என்க, “பாக்கியா இன்னும் என்ன இருக்கு.” என்றவனுக்குப் பதிலாக வடிவேலு ஏதோ சொல்ல வர,
“இருங்க இருங்க நிறையக் கதைகளில் வர மாதிரி, எனக்கு இன்னொரு குடும்பம் இருக்கு. இன்னொரு பையன் இருக்கான். இல்லைன்னா என்னோட ஒரு பையனை தத்து கொடுத்துட்டேன் அப்படின்னு ஏதும் சொல்லிடாதீங்க.
அப்புறம் அவனைத் தேடிக் கண்டுபிடிச்சு, இந்த வீட்டுக்கு கூட்டிட்டு வந்து அவனை இவனுங்க கூட சேர்த்து வைக்க ப்ளான் போடனும்.
அவனுக்கு ஒரு கல்யாணம் பண்ணி வைச்சா அந்தப் பொண்ணு பணத்துக்கு ஆசைப்பட்டு குடும்பத்தை பிரிக்க நினைக்கும்.
அந்தப் பொண்ணு பண்ற எல்லா சதித்திட்டத்தையும் மத்த மருமகளுங்க நாலு பேரும் முறியடிப்பாங்க. அப்புறம் அந்தப் பொண்ணை திருத்த நான் அவங்களுக்கு ஹெல்ப் பண்ணனும். ஐயோ என்னால முடியாது. ஆரம்பத்தில் இருந்து மறுபடியும் என்னால போராட முடியாது.” வழக்கம் போல் கண்ட கற்பனையுடன் மூச்சுவாங்கப் பேசினான் அரசு.
“பேசி முடிச்சிட்டியா. யப்பா அது என்ன வாயா இல்ல எலக்ட்ரிக் ட்ரெயினா. நிக்காம போய்க்கிட்டே இருக்கு. விடிய விடிய முழிப்பு இருந்து கண்ட கண்ட சீரியலைப் பார்க்காதன்னு சொன்னாக் கேட்கிறியா. நான் நினைக்கிறது, நீ சொல்ற மாதிரி கேடுகெட்ட கதை இல்ல வேற.” என்றார் வடிவேலு.
“வேற என்னவா இருக்கும். எனக்குத் தெரியாம இங்க ஒரு சின்னத் துரும்பு கூட அசையாதே.” அரசு யோசிக்க, “எனக்குப் புரிஞ்சு போச்சு, புரிஞ்சு போச்சு, எனக்குப் புரிஞ்சு போச்சு.” என்று கவுண்டமணியின் பாடலை அவரைப் போலவே பாடினான் நாகா.
“டேய் கருநாகம் என்னடா புரிஞ்சது உனக்கு. இந்த ஓல்டு மேன் ஆசைப்பட்டது எல்லாத்தையும் தான் நிறைவேத்தி வைச்சுட்டேமே. இனியும் அவருக்கு அப்படி என்ன ஆசை இருக்கு.” அரசு கேட்க, “அவர் வளர்ப்பு மகனோட கல்யாணம்.” என்றனர் அனைவரும் கோரஸாக.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
2
+1
+1

