Loading

அத்தியாயம் 110

     “இவங்களுக்குள்ள வந்த இந்த சண்டை கொஞ்ச நாளைக்கு முன்னாடி வந்திருந்தா, நாம ரொம்ப சந்தோஷப்பட்டு இருந்திருப்போம். ஆனா இப்ப.” சலிப்பாகச் சொன்ன நாகாவுக்கு பயத்தில் பெருமூச்சு வந்தது.

    “இந்த இழவுக்குத் தான் இது எல்லாம் சரி வராதுன்னு நான் ஆரம்பத்தில் இருந்தே சொல்லிக்கிட்டு இருந்தேன். அதையும் இதையும் சொல்லி என்னை இப்படி ஒரு நிலைமைக்கு கொண்டு வந்து விட்டுட்டானே அந்த அரசு.” என்றான் தெய்வா.

     “இதில் அவனைத் தப்பு சொல்ல என்னடா இருக்கு. அவன் நல்லது நினைச்சு தானே பண்ணான். இப்படி எல்லாம் நடக்கும் னு அவனுக்கு மட்டும் தெரியுமா என்ன?” நியாயம் பேசினான் செல்வா.

     “இப்ப அதையெல்லாம் பேசுறதை விட, இனிமே நாம செய்ய வேண்டியதைப் பத்தி பேசலாமே.” சரியாக வழிகாட்டினான் கடைக்குட்டி.

     “இதில் நம்மளால என்ன பண்ண முடியும். இதுக்கு முன்னாடி இப்படி சண்டை வந்து, கொஞ்ச நாளுக்கு அப்புறம் அவங்க சேர்ந்திருந்தால் கூட, அதே மாதிரி ஒரு சூழ்நிலையை உருவாக்கி அவங்களை மறுபடியும் சேர்த்து வைச்சிருக்கலாம். ஆனா முதன் முதலாக சண்டை போட்டு, ஆளுக்கு ஒரு பக்கமாக இருக்காங்க. இவங்களை எப்படி ஒன்னு சேர்க்கிறது.” சோகமாகக் கேட்டான் நாகா.

     “சாத்தியமே இல்லன்னு எல்லோரும் நினைச்சதை தாண்டி நாம நாலு பேருமே ஒன்னா சேர்ந்துட்டோம். அவங்களை நம்மால் சேர்த்து வைக்க முடியாதா என்ன.” நேர்மறையாக யோசித்தான் செல்வா.

     “ஒருவேளை நாம பண்ண மாதிரி அவங்க நாலு பேரும் சேர்ந்து தனிக்குடித்தனம் போறதுக்காக நம்மளைப் பிரிக்க நினைச்சா.” தெய்வா திடீரெனக் கேட்க பெண்கள் நால்வருக்கும் சிரிப்பை அடக்கமுடியவில்லை. மிகவும் சிரமப்பட்டு சத்தம் வராமல் கட்டுப்படுத்தினர்.

     “லூசு மாதிரி பேசாத. நம்மளோட திருட்டுத்தனம் எல்லாம் அவங்களுக்கு சுட்டுப்போட்டாலும் வராது.” என்றான் செல்வா.

     “நீ சொல்றதும் உண்மை தான்.” உடன் ஒப்புக்கொண்டான்  நாகா.

     “ஏன்டா நான் கேட்கிறேன்னு என்னைத் தப்பா நினைச்சுக்காதீங்க. நீங்க யாரும் உங்க பொண்டாட்டி பேச்சை கேட்டு வீட்டை விட்டு போயிட மாட்டீங்களே.” மற்றவர்களைப் பார்த்து பாவமாய்க் கேட்டான் தெய்வா. ருக்குவிற்கு தாங்க முடியாத சிரிப்பு வந்து லீலாவின் தோளில் முகத்தை வைத்து கட்டுப்படுத்தினாள்.

     இதற்கு முன்னால் எப்படியோ இனிமேல் இவர்கள் மூவரையும் பார்க்காமல் ஒருநாள் கூட கடத்த முடியாது என்னும் நிலைக்குத் தள்ளப்பட்டிருந்த தெய்வாவிற்கு மனது அத்தனை வலித்தது. அதை அப்படியே முகத்தில் காட்டவும் செய்தான். இதுவரை கணவனின் பல கோணத்தை பார்த்திருந்த ருக்குவிற்கு அவனுடைய இந்த கோணம் மிகவும் பிடித்தது.

     “ஏய் பாவம்பா அவங்க ரொம்ப கஷ்டப்படுறாங்க. எதுக்காக இந்த விளையாட்டு, போதுமே நிறுத்திக்கலாமே.” கணவனின் முகத்தைக் கண்கொண்டு பார்க்க முடியாமல் தடுமாற்றத்துடன் சொன்னாள் லீலா.

     “ஹலோ அக்கா, என்ன செல்வா மாமா கொஞ்சம் தவிப்பா பேசுறதைப் பார்த்ததும் மனசு உருகிடுச்சோ. மறந்துட்டீங்களா என்ன, அவரும் கூட்டு சேர்ந்து தான் நம்ம நாலு பேரையும் பிரிக்க நினைச்சு இருக்காரு. இது மட்டும் நியாயமா.” வேகமாய் வார்த்தைகள் வந்தது ஊர்மிளாவிடம் இருந்து.

     “நான் அப்பவே சொன்னேன். அக்கா இந்த விஷயத்துக்கு சரிப்பட்டு வர மாட்டாங்கன்னு. யாருமே கேட்கல, நீங்க வேணும்னா பாருங்க, லீலா அக்காவால தான் நம்ம எல்லாரும் மாட்டிக்கப் போறோம்.” என்றாள் தேவகி.

     “ஹே, கொஞ்சம் அமைதியா இருங்க. நீங்க போடுற சத்தத்தில் அவங்க பேசுற எதுவுமே எனக்கு கேட்க மாட்டேங்கிது.” என்றாள் ருக்கு. அவளுக்கு கணவன் வாயில் இருந்து வரும் வார்த்தைகள் எல்லாவற்றையும் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும் என்கிற உந்துதல் இருந்தது.

     “எதுக்காகடா வீணா கவலைப்பட்டுக்கிட்டு இருக்கீங்க. அவங்க சண்டை எல்லாம் ரொம்ப நாளைக்குத் தாங்காது. கொஞ்ச நாள் பிரச்சனையை ஆரப்போடலாம். கண்டிப்பா நல்லது நடக்கும்.

     இடைப்பட்ட நாளில் உங்க பொண்டாட்டிங்க உங்ககிட்ட தனிக்குடித்தனம் பத்தி பேசினா ஆரம்பத்தில் நாம கேட்கும் போது அவங்க நமக்கு சொன்ன அதே பதிலைச் சொல்லி ஆஃப் பண்ணிடுங்க.” நேர்மையாக யோசனை சொன்னான் தர்மா.

     “ஏன் நீ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அதைத் தான் பண்ணிட்டு வந்தியாக்கும்.” சரியாக நாடி பிடித்துக் கேட்டான் தெய்வா.

     “ஆமா இப்போதைக்கு இப்படி தான் அவ வாயை மூடி வைச்சிருக்கேன். அது என்னவோ தெரியல கல்யாணத்துக்கு முன்னாடி பொண்ணுங்க தேவதை மாதிரி தெரியுறாங்க அவங்க பேசுற ஒவ்வொன்னும், அடடா எவ்வளவு அழகுன்னு ஆச்சர்யப்படுற விதமா இருக்கு.

     ஆனா அதே பொண்ணு பொண்டாட்டியா வாய்ச்சதுக்கு அப்புறமா எப்படா வாயை மூடுவான்னு தோணுது.” விளையாட்டு போல் தர்மா சொல்ல, “உனக்கு மட்டுமா இந்த பிரச்சனை நாட்டில் பாதி ஆம்பிளைங்களுக்கு இதே பிரச்சனை தான்.” தெய்வாவும் கூட்டு சேர்ந்துகொண்டு பேசினான்.

     “இப்படியான மாற்றங்களுக்கு காரணம் யாரு புருஷனா இல்ல பொண்டாட்டியா?” பட்டிமன்றத் தலைப்பைப் போல் புலம்பினான் நாகா.

     “டேய் கண்டதையும் பேசுறதை விட்டுட்டு, அடுத்து நாம என்ன பண்ணலாம் னு சொல்லுங்க.” என்றான் செல்வா.

     “வேற வழியே இல்ல. நாம நாலு பேரும் சேர்ந்து தான் அவங்க நாலு பேரையும் ஒன்னா சேர்த்து வைக்கணும். இதுக்கு முன்னாடி எப்படியோ, ஆனால் இனிமேல் காலத்துக்கும் அவங்க நாலு பேரும் ஒத்துமையாக இருக்கிறது தான் நம்ம எல்லாருக்குமே நல்லது.” தீர்க்கமாகச் சொன்னான் தெய்வா. வாழ்க்கை ஒரு வட்டம் என்பது அவன் வாழ்க்கையில் சரியாகிப் போயிற்று.

     “நீ சொல்றது தான் சரி. என்ன இருந்தாலும் நம்ம மேலும் கொஞ்சம் தப்பு இருக்கு. நாம நமக்கு கொடுத்துக்கிட்ட நேரத்தில் பாதியாவது அவங்களுக்கும் கொடுத்து இருக்கணும். கொஞ்ச நாள் முன்னாடி வரைக்கும் நாம எந்த நிலைமையில் இருந்தோமோ அதே நிலைமையில் தான் நமக்கே தெரியாம நம்ம பொண்டாட்டிங்களை கொண்டு வந்து நிறுத்தி இருக்கோம்.

     எனக்கென்னவோ அதுதான் இத்தனை பிரச்சினைகளுக்கும் காரணமோன்னு தோணுது. அதனால இதை நிவர்த்தி போன்ற பொறுப்பும் நமக்கு தான் இருக்கு.” உணர்ந்து சொன்னான் செல்வா.

     “சரி ப்ளான் என்ன?” தெய்வா கேட்ட அதே நேரத்தில் ருக்கு பெண்கள் அனைவரையும் அழைத்துக்கொண்டு கீழே வந்தாள்.

     “இவ்வளவு நடந்ததுக்கு அப்புறமாச்சும் கொஞ்சமாவது திருந்தி இருக்காங்களான்னு பாருங்க. இப்போ கூட நாலு பேரும் ஒன்னா சேர்ந்து திருட்டு சதித் திட்டம் தீட்டிக்கிட்டு இருக்காங்க.” ஊர்மி படபடக்க,

     “அவங்க ஒன்னா சேர்ந்து திட்டம் போடுறாங்க தான். ஆனா இந்த முறை, நம்ம நாலு பேரையும் ஒன்னா சேர்த்து வைக்கிற நல்ல எண்ணம் தான் அதில் இருக்கு. தர்மத்திற்காக அதர்மம் பண்ணாலும் அது தர்மமே அப்படின்னு கிருஷ்ணர் கூட சொல்லி இருக்காரு.” என்றாள் ருக்கு.

     “விஜய் டீவியில், சன் டீவியில் மகாபாரதம் போட்டாலும் பாரு, பாலிமரில் சூரியபுத்திரன் கர்ணன் போட்டாலும் பாரு. நடந்ததா நம்பப்படும் ஒரு இதிகாசத்தை இவன் ஒருமாதிரிப் போடுவான், அவன் ஒருமாதிரிப் போடுவான்.

     இரண்டையும் பார்த்துட்டு வந்து எது சரி எது தப்புன்னு என் உயிரை வாங்கு. உன்னோட இதே ரோதணையாப் போச்சு. ஒரு நாள் இல்ல ஒருநாள் பாரு உனக்கு செமையான கச்சேரி இருக்கு.” லீலா சொல்ல ருக்கு சிரித்தாள்.

     “அதை விடுங்கக்கா. நான் உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்ல மறந்துட்டேன். என் புருஷன் கிட்ட உங்களைப் பத்தி பொய்யா குற்றம் சொல்லும் போது, அவருக்கு எவ்வளவு கோவம் வந்துச்சு தெரியுமா. என்னையே அடிக்க கை ஓங்கிட்டாருன்னா பார்த்துக்கோங்க.

     உங்ககிட்ட சகஜமா பேசலையே தவிர்த்து, உங்க மேல ரொம்ப மரியாதை வைச்சிருக்கார். இதை நினைக்கும் போது எனக்கு அவரை இன்னும் இன்னும் ரொம்பப் பிடிக்கிது.” கன்னங்கள் சிவக்கச் சொன்னாள் ஊர்மி.

     “என் புருஷன் மட்டும் என்னவாம். அவரும் தான் சொன்னார். நீ குற்றம் சொல்ற மாதிரி உங்க அக்கா பண்ணி இருக்க மாட்டாங்க. நீ தான் ஏதோ தப்பா புரிஞ்சுகிட்டு இருக்கன்னு.” தன் கணவனுக்குப் பரிந்து கொண்டு வந்தாள் ருக்கு.

     “ஹலோ என்ன நடக்குது இங்க. அவரவர் புருஷன்மாருக்கு சப்போர்ட் தூள் பறக்குது. லீலா அக்கா என்னடான்னா செல்வா மாமா பாவம் இதை இத்தோட விட்டுடலாமான்னு கேட்குறாங்க. நீங்க இரண்டு பேரும் உங்க புருஷனை ஆகா ஓகோன்னு புகழ்ந்து தள்ளுறீங்க.” என்றாள் தேவகி.

     மற்ற ராஜ் சகோதரர்களைப் பற்றி அவளுக்குப் பெரிதாய் கவலையில்லை. நியாயவான், தர்மாவான் என தான் நம்பிக் கொண்டிருக்கும் தன் கணவன், தன்னையும் தன் சகோதரிகளையும் பிரிக்க நினைத்திருக்கிறான் என்பதை தேவகியால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. சரியான பாடம் சொல்லிக்கொடுத்தால் மட்டுமே இது போன்ற கோமாளித்தனத்தை இனியொரு தரம் செய்யாமல் இருப்பார்கள் அனைவரும் என உறுதியாய் இருக்கிறாள்.

     “ஏய் அற்பப் பதரே எங்க புருஷங்க நல்லது பண்ணா அதை நாங்க பாராட்டுவோம். அதே நேரத்தில் அவங்க தப்பு பண்ணா தட்டிக்கேட்காம விட மாட்டோம்.

     நம்மளைப் பிரிக்க நினைச்சு அவங்க பண்ணது என்ன சின்ன தப்பா. அதை அவ்வளவு சீக்கிரத்தில் மறந்துடுவோமா என்ன. நாம ஆட்டுற ஆட்டில் இனிமே ஜென்மத்துக்கும் தனிக்குடித்தனம் போகவே கூடாது எல்லாரும் ஒன்னா தான் இருக்கணும் னு அவங்க நினைக்கணும்.” வெகுண்டெழுந்து தங்கையின் முடிவைத் தானும் ஆதரத்தாள் ஊர்மி.

     “நீ சொல்றது சரி தான் ஊர்மி. நான் கூட கொஞ்சம் தடுமாறிட்டேன். உண்மையில் அவங்க அப்படி பண்ணி இருக்கக் கூடாது. நம்மளைப் பிரிக்கிறதுக்காக அவங்க நாலு பேரும் ஒன்னா சேருவாங்களா. நினைக்கிறதுக்கு காமெடியாக இருந்தாலும் ரொம்பக் கொடுமையான விஷயம்.

     அவங்க நினைச்ச மாதிரி நம்மை நாலு திசைக்கு பிரிச்சிருந்தா, கற்பனையே கொடூரமா இருக்கு. இன்னொரு தடவை அவங்க நாலு பேரும் மனசிலும் இந்த மாதிரி ஒரு எண்ணம் வரவே கூடாது. அதுக்காக நீங்க என்ன வேண்ணாலும் பண்ணுங்க நான் உங்க கூட இருக்கேன்.” என்றாள் லீலா.

     “நல்லவேளை அவங்க எல்லா திட்டத்தையும் அரசு அண்ணா கிட்ட சொல்லி இருந்திருக்காங்க. இல்லைன்னா கடைசி வரைக்கும் இந்த விஷயம் நமக்குத் தெரியாமலேயே போய் இருந்திருக்கும்.” அனைத்திற்கும் சூத்திரதாரியே அவன் தான் என்பதை அறியாத அப்பாவியாய் சொன்னாள் தேவகி.

     “ஏன் ஊர்மி அடுத்ததா அவங்களோட திட்டம் என்னவா இருக்கும்.” ருக்கு கேட்க,

     “பெருசா என்ன இருக்கும், நம்ம நாலு பேரையும் ஒன்னு சேர்த்து வைக்கப் போறதா பேசிக்கிட்டாங்க இல்லையா? அதுக்கு துவக்கப்புள்ளியா எல்லோரும் சேர்ந்து வெளியே போற மாதிரி ஏற்பாடு ஏதாவது பண்ணுவாங்களா இருக்கும்.

     நாம ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும். பிடிச்ச ஒரு விஷயத்தைப் பார்த்ததும், பழக்க தோஷத்தில் அக்கான்னு ஜாலியா ஓடிவரக் கூடாது.” என்றாள் உர்மி.

     “அது என்னவோ உண்மை தான். மனசில் இருக்கிறது எப்படியும் நம்மளை மீறி வெளியே வரத் தானே செய்யும். ஆனாப் பாருங்க எனக்கு ஒரு சந்தேகம். உங்க மூணு பேருக்கும் மனசுக்குள் எத்தனை நாள் ஆசையோ இந்த நாலு நாளைக்குள் கூப்பிட்டு பழகிக்கிறேன் அப்படின்னு லீலா லீலான்னு என் பேரை சொல்லி கூப்பிட்டீங்க.” விளையாட்டுப் போக்கில் சிரித்துக்கொண்டே சொன்னாள் லீலா.

     “அக்கா நாங்க பண்ணது தப்பு தான். உங்க காலைக் காட்டுங்க உங்க காலில் விழுறேன்.” ஊர்மியும் விளையாட்ட  சொல்ல, “என்னடி காரியம் பண்ற.” என்று பதறினாள் லீலா. “வயித்துப் பிள்ளைத்தாச்சி. ஆறு தாண்டி ஏழாம் மாசம் ஆரம்பிக்கப் போகுது. வேலை செஞ்சுக்கிட்டே இருந்தா ஒன்னும் தெரியாது. ஆனா டாக்டர் ரெஸ்ட் எடுக்கச் சொல்லிட்டாருன்னு மெத்தையை விட்டு எழுந்திரிக்காம காலத்தை ஓட்டுற நீ திடீர்னு இப்படியெல்லாம் குனிஞ்சு நிமிர்ந்தா எங்கேயாவது பிடிச்சுக்கப் போகுது.” தங்கையின் தலையில் கொட்டி அவள் தவறைப் புரியவைத்தாள் ருக்கு.

     “நீங்க எங்க அக்கா. உங்களை நாங்க பேர் சொல்லி கூப்பிடாம வேற யாரு கூப்பிடப் போறா. எங்களுக்கு எல்லா உரிமையும் இருக்கு.” தேவகி சொல்ல தன்னையும் அறியாமல் தலையாட்டினாள் லீலா.

     “தேவகி நான் பேச்சுவாக்கில் ஒரு விஷயத்தை காதில் வாங்கினேன். நீ வாங்கினியான்னு எனக்குத் தெரியல. இப்ப எல்லாம் உன்னோட புருஷன் கண்ணுக்கு நீ பேய் மாதிரி தான் தெரியுற போல.” ஊர்மி தேவகியைப் பார்த்து சிரிக்க, “ஆமா ஆமா நானும் கவனிச்சேன். அவர் ரூமுக்கு வரட்டும், நல்லா பேயோட்டுறேன்.” என்றாள் பதிலாய்.

     “எப்படியோ லீலாக்கா அவங்க பண்ண கூத்தால, நாங்க கொஞ்சம் மண்டை குழம்பிட்டோம். சரியான நேரத்தில் நீங்க எங்க மூணு பேரோட மனசைப் புரிஞ்சுக்கிட்டு, நடக்கிறது என்னன்னு எங்களுக்குப் புரிய வைச்சீங்க.

     இல்லைன்னா எங்க அவங்களுக்கு எங்களைப் பிடிக்காம போயிடுச்சோ, எங்களை விட அண்ணன் தம்பிங்க முக்கியமாய் போயிட்டாங்களோன்னு கண்டதையும் யோசிச்சு நாங்க எங்க நிம்மதியோட சேர்த்து, அவங்க நிம்மதியையும் பறிச்சிருப்போம். தேங்க்ஸ் லீலாக்கா. அக்கான்னா அக்கா தான். உங்களால மட்டும் எப்படி எல்லா சூழ்நிலையிலும் சரியா யோசிக்க முடியுது. இது எல்லாத்தையும் எங்களுக்கும் கொஞ்சம் சொல்லிக்கொடுங்கக்கா. நாங்களும் கத்துக்கணும் தானே. அப்ப தானே எங்க பிள்ளைங்களுக்கு சொல்லிக்கொடுக்க முடியும்.” என்றாள் ருக்கு.

     “அடிப் பாவிங்களா அப்ப இத்தனையும் டிராமாவா.” என்ற குரல் கேட்க நால்வரும் பரபரப்புடன் திரும்பிப் பார்த்தனர்.

     அவர்களின் எண்ணத்தை சற்றும் பொய்யாக்காமல் அவர்களுடைய கணவன்மார்கள் ஒருவர் தோளில் ஒருவர் கையைப் போட்டவாறு அங்கு நின்று கொண்டிருந்தனர் உடன் அனைத்திற்கும் காரணகர்த்தாவானவனும் நின்றிருந்தான்.

     “உங்ககிட்ட வாங்கின காசுக்கு தென்னை மரத்தில் ஒரு குத்து. அவங்ககிட்ட வாங்கின காசுக்கு பனை மரத்தில் ஒரு குத்து.“ என்கிற காமெடிக்காட்சி போல், ஆண்களுக்கு பெண்களைப் பிரிப்பதற்கான யோசனையும் கொடுத்து, அதைப் பற்றி பெண்களிடம் சொல்லி ஆண்களை சிறிது நேரமாகினும் பதற வைத்து, இப்போது எல்லாம் விளையாட்டு என்பதை ஆண்களிடமும் போட்டுக்கொடுத்துவிட்டு அவர்களுடனே வந்து நின்று மாயக்கண்ணனின் அடுத்த அவதாரம் போல் போஸ் கொடுத்துக் கொண்டிருந்தான் அரசு.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
3
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்