Loading

தழல் 7:

ஆரா சென்றப் பின்னும் இருக்கையை விட்டு அசையாது சுற்றிலும் பார்வையை அலையவிட்டு கொண்டிருந்தவனை கேள்வியாய் பார்த்தார் அனு.

“இங்க என்ன தேடற வேந்தா..? எதையாவது கீழ போட்டுட்டீயா..?” கேட்டபடியே தானும் பார்வையை சுழற்றினார் அனு.

“தெரியல… ஆனா என்ன லீட் பண்ண கூடிய ஏதாவது கிடைக்கும்னு தோணுது…” என்றவனின் பார்வை இன்னும் தேடலை தொடர, அவனை யோசனையாய் பார்த்தார் அவர்.

“தப்பு வேந்தா… ஒருத்தவங்களோட தனிபட்ட அறைக்குள்ள இப்படி அவங்க அனுமதி இல்லாம எதையோ தேடறது ரொம்ப தப்பு…” என்றார் கண்டிக்கும் குரலில்.

“ஒவ்வொரு தடவை குற்றத்துக்கான ஆதாரத்தை தேடும் போதும், அனுமதி வாங்கிட்டே இருக்கணும்னா குற்றவாளிய நெருங்கறதுக்குள்ள எங்க ஆயுசே முடிஞ்சுடும்…”

“நீ அப்படி தேடற அளவுக்கு இங்க எந்த கிரைமும் நடக்கல… ஆரா அக்யூஸ்டும் இல்ல…” என்றார் சற்றே உயர்ந்த குரலில் சிறு கோபம் தொனிக்க அனு.

அந்த நொடி அவன் கண்கள் அவரின் உடற்மொழியை குறிப்பெடுத்துக் கொண்டது. முதன் முறையாக அவனிடம் கோபத்தில் குரல் உயர்த்துகிறார் அவர். அந்த கண்களில் தெரிந்த சிறு பதற்றமும் அலைப்புறுதலும் அவனுக்கு முற்றிலும் புதிது. என்னவோ ஒன்று நிரடியது மனதை.

“அக்யூஸ்டாவும் இருக்கலாம்… இல்ல, விக்டீமாவும் இருக்கலாம்… அதை கிடைக்கற ஆதரத்த பொறுத்து தான் சொல்ல முடியும்…” ஒவ்வொரு வார்த்தையையும் நிதானாமாய் சொன்னபடி அவரை தான் பார்வையால் அளந்துக் கொண்டிருந்தான் வேந்தான்.

“ஸ்டாப்பிட் வேந்தா… திஸ் இஸ் த லிமிட்… உன்னோட போலீஸ் வேலையெல்லாம் ஸ்டேஷனோட வச்சுக்கோ… முதல இந்த ரூம் விட்டு கிளம்பு…” என்றவரின் கோபம் கூடியிருந்தது. முகத்தில் முத்து முத்தாய் வியர்வை துளிகள் துளிர்த்து நின்றது.

இருக்கையை விட்டு எழுந்து அவரின் தோளில் கைப்போட்டு அணைத்துக் கொண்டவன், “ஸ்ஸ்ஸ் ஹப்பா… என் அனும்மாவுக்கு கூட கோபமெல்லாம் வருதே… ஆனாலும் உங்க சிஷ்யப்புள்ள மேல இவ்வளவு பாசம் ஆகாது சொல்லிட்டேன்… சும்மா ஒரு பேச்சுக்கு அக்யூஸ்ட்னு சொன்னதுக்குக்கே பொங்கறீங்க… அவளுக்காக என்னையே திட்டிட்டீங்க இல்ல…” என்றான் அவரின் நுனிமூக்கை பிடித்து ஆட்டி செல்லம் கொஞ்சியபடியே.

“பின்ன… ஆராவ போய் அக்யூஸ்ட் ரேஞ்சுக்கு பேசுனா கோபம் வராம என்ன வருமான்…” என்றார் அவர் சற்றே கோபம் தணிந்த குரலில்.

“தப்புதான்… தப்புதான்… மன்னிச்சு…” என பயந்து ஒற்றை கையால் தோப்புக்கரணம் போடுவதைப் போல செய்கை செய்தான் அவன்.

அவன் காதை பிடித்து மெல்ல திருகியவர், “வாய்… வாய்…” என்றார் புன் சிறுப்போடு.

அவன் காதிலிருந்த அவரின் கையை அழுத்தமாய் புடித்துக் கொண்டு, “ஐய்யோ… அம்மா… கொலை… கொலை… இந்த அனும்மா அவங்க சிஷ்யபுள்ளைக்காக என்ன போட்டு அடியோ அடினு அடிக்கறாங்களே… இந்த அநியாயத்த கேக்க யாருமே  இல்லையா..? இந்த அப்பாவிய காப்பாத்த ஒரு நாதியும் இல்லையா..?” அவன் அளவுக்கு அதிகமாகவே நடித்துக் கொட்டி ஆர்பாட்டம் செய்ய, இம்முறை சற்று வலுவாய் வலிக்கும் படியே திருக்கினார் அனு.

அதற்குள் யாரோ கதவை தட்டி அனுமதிக் கேட்க, சமத்துப் பிள்ளையாய் நின்றுக் கொண்டான் அவன்.

“மேம்… பேரண்ட்ஸ் ஒருத்தவங்க அவங்க பையன் அட்மிஸன் பத்தி உங்ககிட்ட அவசரமா பேசணும்னு சொல்லறாங்க… இப்ப இருக்க சொல்லட்டும்மா… இல்ல ஈவ்னீங் அப்பாயிண்ட்மென்ட் தரட்டுமா மேம் …” என்றாள் பவ்வியமாய் அந்த பணிப்பெண்.

“ஓஓஓ… சரி… என் ரூம்ல உக்கார வைங்க… ஐஞ்சு நிமிஷத்துல நான் வந்துடறேன்…” என்று அப்பெண்ணை அனுப்பி வைத்தவர், வேந்தனையும் கையோடு இழுத்துக் கொண்டு வெளியேறினார்.

“இதெல்லாம் டூ மச் அனும்மா… யாராவது நீங்க என்ன இப்படி இழுத்துட்டு போறத பாத்தா சிரிக்க போறாங்க…” என்றான் சிணுங்கும் குரலில் அவன்.

“என் பையன நான் அப்படிதான் இழுத்துட்டு போவேன்… சிரிக்கறவங்க சிரிக்கட்டுமே… என்ன இப்போ…” என்றபடியே அவனையும் இழுத்துக் கொண்டு நடந்தார் அவர். அவரின் இழுப்புக்கு இசைந்துக் கொடுத்து நடந்தான் அவன்.

“கேன்டின் போறேன் அனும்மா… நீங்க போய் உங்க வேலைய பாருங்க…” என்றான் அவரிடமிருந்து தனது கையை பிரித்தபடி.

“நீ ரெஸ்ட் எடேன் வேந்தா… ஏதாவது வேணும்னா இங்கையே கொண்டு வர சொல்லறேன்…”

“வீட்டூல போர் அடிக்குதுனு தான் இங்க வந்தேன்… இங்கையும் வந்து உக்காந்தே இருந்தா இன்னும் போர் அடிக்காதா… அப்படியே சூடா ஒரு டீ குடிச்சுட்டு சின்னதா ஒரு ரவுண்ட்ஸ் போயிட்டு வரேன்…” என கண்சிமிட்டு புன்னகைத்தவன் கிளம்பிவிட்டான். அவன் வாயிலை தாண்டி கண்ணைவிட்டு மறையும்வரை ஆதுரமாய் அவனைதான் பார்த்திருந்தார் அனு.

உள்ளே நுழையும் போதே ஒரு ஓரத்தில் அமர்ந்து கதையளந்துக் கொண்டிருந்த ஆராவும் நித்யாவும் இவன் கண்களில் தப்பாமல் விழுந்திருந்தனர். “ஹாய் கேர்ள்ஸ்…” வாசலில் இருந்தே ஆர்பாட்டமாய் கூவி அழைத்தபடி அவர்களை நோக்கி விரைந்தான் அவன்.

‘இங்கையும் வந்துட்டான்ய்யா…’ ஆரா அவனை சலிப்பாக பார்த்து வைக்க, நித்யாவின் முகம் அவனைக் கண்டதும் பூவாய் மலர்ந்தது.

“ஹாய் சார்…” என்றாள் அவளும் தொற்றிக் கொண்ட அவனின் ஆரவாரத்தோடு.

ஆராவின் அருகிலிருந்த நாற்காலியை வேண்டுமென்றே சத்தம் வர இழுத்து நித்யாவின் அருகில் போட்டான் அவன். அவள், கடுப்பாய் அவனை முறைத்துப் பார்க்கவும், குறிப்பாய் கையிலிருந்த கட்டை காட்டினான் அவன்.

“ரொம்ப தேங்க்ஸ் சார்…” என்றவளின் குரலில் உண்மைக்குமே ஒரு நெகிழ்ச்சி இழையோடியது.

“எதுக்காம்..?” என்றான் தலை சாய்த்து கண்ணை சுருக்கி, சிறு முறுவலுடன் வேந்தன்.

“யுவாவ காப்பாத்துனதுக்கு… தேங்க் காட்… நீங்க மட்டும் இல்லைனா… நினைச்சே பாக்க முடியல… அப்பவே உங்கள தேடி வந்து சொல்லணும்னு நினைச்சேன்… ஆனா முடியல…”

“உங்க ப்ரெண்டுக்கு எந்த நல்ல பழக்கமும் இல்லையா..?” கேள்வி அவளிடம் என்றாலும் அவனின் பார்வை என்னவோ ஆராவை தான் மொய்த்துக் கொண்டிருந்தது.

“என்ன..? என்ன சார் கேக்கறீங்க… புரியல எனக்கு…”

“இல்ல… உங்கள மாதிரி தேங்கஸ் சொல்லற நல்ல பழக்கமெல்லாம் உங்க ப்ரெண்டுக்கு இல்லையானு கேட்டேன்…”

அவனுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாது பாவமாய் இருவரையும் மாறி மாறி பார்த்து வைத்தாள் நித்யா.

“எனக்கு வேலை இருக்கு நித்தி… நான் கிளம்பறேன்… நீ இருந்து சாரோட பேசிட்டு பொறுமையா டீய குடிச்சுட்டு வா…” என்றவள் இருக்கையிலிருந்து எழுந்தும் கொள்ள,

“ஆமான்… ஆமான்… பதினோரு மணிக்கு வந்து… ஒரு மணி நேரம் டீ ப்ரேக் எடுத்து… ஒரு மணி நேரம் லஞ்சுக்கு டைம் எடுத்து… பாவம் அவங்களுக்கும் வேலை இருக்கும் தானே… குடுக்கற சம்பளத்துக்கு இரண்டு மணி நேரயாவது வேலை பாக்கணுங்கற எண்ணமும் இருக்கும் தானே… விடுங்க மேடம்… உங்க ப்ரெண்டு போகட்டும்…” என்றான் கேலி இழைந்தோடும் குரலில் வேந்தன்.

திரும்பி நின்று அவனை சலனமில்லாது பார்த்தவள், சிறு தோள் குலுக்கலோடு, மேசை மீதிருந்த கைப்பேசி எடுத்துக் கொண்டு போயே விட்டாள். ‘அப்படியா நினைக்கிறாய்..! நினைத்துக் கொள்..!’ என்பது தான் அந்த தோள் குலுக்கலின் அர்த்தம் என்று அவள் சொல்லாமலே அவனுக்கு புரிந்தது.

செல்லும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தவனை, “சாரி சார்… காலையில நடந்ததுல ரொம்பவே டென்ஷன் ஆகிட்டா… டென்ஷன்ல அவ உங்கள ஏதாவது சொல்லி இருந்தா தப்பா எடுத்துக்காதீங்க… ப்ளீஸ்…” என்ற நித்யாவின் கெஞ்சும் குரலில் தான் திசை திருப்பியது அவன் பார்வை.

“அச்சச்சோ… சாரியெல்லாம் எதுக்கு… நீங்க நினைக்கற மாதிரி ஒன்னுமில்ல… சும்மா ஒரு விளையாட்டுக்கு அவங்கள டீஸ் பண்ணதான் அப்படி சொன்னேன்… நீங்க பெரிசா எடுத்துக்காதீங்க…” என்றவனின் குரலில் பொய்யில்லை. அவன் ஏன் ஆராவை சீண்டிப் பார்க்க எண்ணுகிறான் என்று அவனுக்கு புரியவில்லை. அருகில் அமர்ந்திருந்த நித்யாவுக்கும் புரியவில்லை. அதை உணர்ந்து அவள் கேள்வி எழுப்பும் முன்னமே லவகமாய் பேச்சை வேறு பொதுவான விசயத்தை நோக்கி திருப்பி இருந்தான் அவன்.

❀❀❀❀❀

தாயிடம் சொன்ன நேரத்திற்கு ஆராவால் வீட்டிற்கு கிளம்பியிருக்க முடியவில்லை. காலையிலேயே தாமதமாய் வந்திருக்க, வேலைகள் அவளை இழுத்துக் கொண்டது. அவசர அலுவல்களை மட்டும் முடித்துக் கொண்டு, மீதியை கிடப்பில் போட்டுவிட்டு கிளம்பி இருந்த போதும் முழுதாய் கூடுதல் இரண்டு மணி நேரத்தை அது விழுங்கி இருந்தது.

தாய் சொன்னபடி இனிப்புகளை வாங்கிக் கொண்டு, அவள் வியர்க்க விறுவிறுக்க வாசலில் போய் நின்ற போது, வெற்றியின் மொத்த குடும்பமுமே நடுகூடுத்தில் அமர்ந்து அவள் வீட்டு ஆட்களோடு கலகலத்துக் கொண்டிருந்தனர்.

கனிமொழியும் அவளின் கணவன் அறிவானந்தனும் மட்டுமே அவள் சார்பாய் அங்கிருந்த உறவினர்கள். அவன் வீட்டாள்கள் எப்படியும் இருபது பேருக்கும் மேலேயே வந்திருந்தனர். அறிவு வந்தவர்களுடன் தீவிரமாய் ஏதோ பேசிக் கொண்டிருக்க, அழுதன் வெற்றியின் மடியில் அமர்ந்து மீசையை இழுத்து விளையாடிக் கொண்டிருந்தான். அதற்குள்ளாகவா இத்தனை நெருக்கமாகி விட்டார்கள் என வியக்காமல் இருக்க முடியவில்லை அவளால்.

அவளை முதலில் கண்டவன் வெற்றிதான். பின்னே அவளின் வரவை எதிர்பார்த்து வழிமேல் விழி வைத்து காத்திருப்பவர்கள் அவனும் பர்வதமும் தானே. அவளை கண்ட மாத்திரம் மலர்ந்து விகாசித்தது அவனின் முகம்.

“என்ன ஆரும்மா இது…” வாசல்வரை ஓடி வந்து அவளின் கைப்பிடித்து அழைத்துக் கொண்டு உள்ளே சென்ற பர்வதத்தால் பெயருக்கு கூட மகளிடம் கோபத்தை காட்ட முடியவில்லை.

“பத்தே நிமிஷம் இப்போ ரெடியாகி வந்திடுவா…” என்றபடியே அவர் சின்ன மகளைப் பார்க்க எழுந்துப் போய் அக்காவுடன் நின்றுக் கொண்டாள் அவள்.

அப்போதே விளக்கி சொல்லி அவர்களை அனுப்பிவிட அவளின் மனமும் நாவும் துடித்தாலும் தாயின் கண்களில் வழிந்த அளவுக்கு அதிகமான ஏக்கமும் ஏதிர்பார்ப்பும் ஆசையும் அவளின் வாயை அழுந்த முடச் செய்திருந்தது.

நொடிக்கும் அதிகமான நேரம் வெற்றியிடம் தான் அவளின் பார்வை பதிந்தது. அவனும் விழியகற்றாமல் அவளைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான். மெல்லியதாய் மிக மெல்லியதாய் ஒரு புன்னகை அவன் இதழ்களில். கண்களில் மின்னி மறையும் அந்த கர்வம் என்ன சொல்கிறது அவளுக்கு, ‘என்னை மறுக்க முடியாத இடத்தில் உன்னைக் கொண்டு வந்து நிறுத்திவிட்டேன் பார்..!’ என்றா? சிறு தலையசைப்புடன் வேகமாய் அறைக்குள் சென்று மறைந்துவிட்டாள் அவள். அதைக் கண்டவனின் மென்னகை இன்னும் பெரிதாய் விரிந்தது.

கனியும் அவளின் பின்னோடே சென்று அறையினுள் நுழையும் முன்னமே, கதவை சாற்றி உள் தாழ்ப்பாழும் போட்டிருந்தாள் ஆரா. ‘இவள வச்சுகிட்டு…’ என தலையில் அடித்துக் கொள்வதை தவிர வேறு வழியில்லை கனிக்கு. ஏனோ, பர்வதத்தை போல கனியால் நிம்மதியாய் இருக்க முடியவில்லை. எந்த நேரத்தில் ஆரா எதை செய்து வைப்பாளோ என உள்ளுக்குள் பதைபதைத்துக் கொண்டே இருந்தது. நல்ல வேளையாக படுக்கையறை, கூடத்தில் அமர்ந்திருப்பவர்கள் பார்வையில் படும்படி இல்லை. அதுவே ஆகப் பெரும் இப்போதைய நிம்மதி அவளுக்கு.

      – பற்றி எரியும்…

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
7
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்