
சபதம் -19
குழவி இறப்பினும், ஊன்தடி பிறப்பினும்,
‘ஆள் அன்று’ என்று வாளின் தப்பார்;
தொடர்ப் படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய
கேள் அல் கேளிர் வேளாண் சிறு பதம்,
மதுகை இன்றி, வயிற்றுத் தீத் தணிய,
தாம் இரந்து உண்ணும் அளவை
ஈன்மரோ, இவ் உலகத்தானே?
பொருள்:
வாளின் முன் பின்வாங்காத நேர்மையும் வீரமும் கொண்ட மகனைப் பெற்ற தாயின் பெருமையைப் புகழும் பாடல்.
நாட்கள் இரவிலும் நினைவிலும் பாடாய்ப் படுத்தும் கனவுகளுடன் வேகமாக ஓட, 14 வயது இளைஞன் கரண் பிரதாப் தனது பிறந்தநாளைக் கொண்டாட அவன் அன்னையின் மூதாதையர்கள் வாழ்ந்த கரஹ் அதிவார் அரண்மனைக்கு குடும்பத்துடன் பயணித்துக் கொண்டிருந்தான்.
அராவள்ளியின் உச்சியில் கிரீடம் போல் அமைந்திருந்த பெரும் கல் அரண்மனை முன் கார் நின்றது. கரணின் உடல் முழுதும் வேர்க்கத் தொடங்க, அடிவயிற்றில் தோன்றிய ஒருவகை உணர்வுடன் சொல்ல முடியாத குழப்பத்தில் கீழே இறங்கினான்.
அவனின் தாய், தந்தை மற்றும் உடன் பிறந்தோருடன் அரண்மனை வாசலைக் கடந்த நொடி
அரண்மனைச் சுவர்கள் நடுங்க, சுற்றி இருந்த விளக்குகள் மெல்லத் துடிக்க ஒருவித அமானுஷ்யத்தை அங்கிருந்த அனைவராலும் உணர முடிந்தது.
அரண்மனையில் இருந்த ஒவ்வொரு மூத்தோரும் மண்டியிட்டு கரண் முன் விழுந்து வாட்களை உருவி வணங்கி நின்றனர். அதைக் கண்ட கரண் பின்வாங்கினான்.
“ஏன்…பாபா என்ன நடக்கிறது?” என்று வழிந்த வியர்வையைத் துடைத்தபடி கேட்ட கரணின் முன் வந்து நின்ற மஹாராணி மீரா பாய் அதிவார் கண்களில் நீருடன், “இந்த அரண்மனை அதனின் வரிசை உணர்ந்து கொண்டது மகனே. அதிவார் இரத்தம் திரும்பி வந்திருப்பதை கொண்டாடுகிறது.”
மனைவியின் விழியில் தெரிந்த சந்தோஷத்தை ரசித்தபடி, மகனின் தோளில் கை வைத்த மகாராஜா சமர் சிங், “கரண்.. பேட்டா… அதிவார் வம்சத்தின் நேரடி வாரிசு நீ! உனக்கான பெரும் கடமை ஒன்று காத்திருக்கிறது மகனே” என்றதை கேட்ட கரணின் இதயம் வேகமாகத் துடித்தது.
அந்த பதினான்கு வயது சிறுவன் மேலும் குழம்ப, “என்ன கடமை பாபா?” என்றதும் அரசர் ஆழமாக மூச்சை இழுத்துவிட்டபடி, “அது உனக்கு இப்போது புரியாது. ஒருநாள்…இந்த நிலம் உன்னை அழைக்கும். அன்று நீயே புரிந்து கொள்வாய்.”
கரணின் பிறந்தநாளைக் கொண்டாட பல வருடம் கழித்து அரவள்ளி மலைத்தொடரில் வீற்றிருக்கும் கர்ணி மாதா கோவிலுக்கு குடும்பத்துடன் வந்திருந்தனர் உதய்ப்பூர் அரச குடும்பத்தினர்.
அருகில் இருக்கும் கிராமத்தில் இருந்து பல மக்கள் அங்கே கூடியிருக்க, மஹாராஜாவையும், பிறந்தநாள் காணும் இளவரசரையும் வாழ்த்திப் பல குரல்கள் கோஷமிட்டுக் கொண்டிருந்தன.
கரண் தாயுடன் நடந்து கொண்டிருந்தவன், பல மாதங்களுக்குப் பிறகு முகத்தில் நிறைவான புன்னகையுடன் பவனி வந்தான்.
கர்னி அன்னைக்கு பூஜை முடித்து, அரச குடும்பத்தின் ஆயத்தங்களை அன்னையின் காலடியில் வைத்து ஆசீர்வாதம் பெற்று வாங்கிக் கொண்டனர்.
அனைத்தும் அமைதியாக செல்ல, எங்கிருந்தோ வந்த துப்பாக்கி சத்தம் சூழலை பரபரப்பாக்க, சுற்றி இருந்த மக்கள் பயத்தில் அங்கும் இங்கும் சிதறி ஓட, அரசரின் மெய்க்காப்பு படை அரச குடும்பத்தை சூழ்ந்து கொள்ள எடுத்த சிறு இடைவெளியில் எங்கிருந்தோ வந்த நஞ்சு தடவிய கத்தி இளவரசை நோக்கி பாய்ந்தது.
எதிர்பார்க்காத அந்த நிகழ்வில் கரணை தள்ளிவிட்டு காக்க முயன்ற அரசியாரின் நெஞ்சத்தை பதம் பார்த்திருந்தது அந்த கத்தி.
அன்னையின் மார்பில் செங்குத்தாய் நின்ற அந்த கத்தியில் இருந்து சிதறிய ரத்தத்திட்டுக்கள் கரணின் முகத்தில் தெறிக்க, அவன் கைகளில் சரிந்து விழுந்த அன்னையை அதிர்ந்து பார்த்தபடி மடிதாங்கி இருந்தான் கரண் பிரதாப் சிங்.
பெற்றவளை இறுக்கத் தழுவிக்கொண்டவன் கைகள் முழுதும் அன்னையின் ரத்தத்தால் நனைந்திருக்க, கரணை பார்த்த மீரா பாய், “கரண்… பேட்டா, எனது சாவு நான் பிறந்ததில் இருந்து என்னை துரத்தி கொண்டு தான் இருக்கிறது” என்றவரை அரசர் தன் மடியில் ஏந்தி கொள்ள, இருவரையும் கரணின் உடன்பிறப்புகள் அழுகையுடன் சூழ்ந்து கொண்டனர்.
தன் கணவனை கண்ட மீரா பாய், “இந்த அழகான வாழ்வை தந்ததற்கு கர்னி மாதாவுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். வாழும் காலம் எல்லாம் காதலில் கசிந்துருகி, அறிவான குழந்தைகளுடன் சிறிது காலம் மகிழ்வாகவே களித்தேன். நான் இன்றி நீங்கள்…” என்றவள் பேச முடியாமல் தொண்டை குழி ஏற இறங்க அரசரை பார்க்க, அவளது நெஞ்சை நீவிவிட்ட மன்னரிடம், “பிள்ளைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள். காலம் நெருங்கிவிட்டது. அத்திவார் குலம் கரணை அழைக்கும். எனக்கான சத்தியத்தை மீறமாட்டீர்கள் என்று தெரியும். ஆனால் கரண்… ” என்றவரை இடைமறித்த அரசர், “அவன் உன் மகன் மீரா… நமது ரத்தம் என்றும் கடமையில் இருந்து விலகமாட்டான்.”
மனைவியின் உயிர் மங்கி கொண்டு வருவதை உணர்ந்தவர், கண்களில் நீருடன், “பிள்ளைகளை உன் இழப்பில் இருந்து எப்படி மீட்டெடுக்க போகிறேன் மீரா. நீ இல்லாத உலகில் நான்…” என்றவரின் உதட்டில் கைவைத்தவர், “காத்திருப்பேன் உங்களுக்காக…” என்றவள் பார்வை மூன்று பிள்ளைகளையும் தொட்டு, கரணிடம் ஒரு நொடி நிலைத்து, கணவனின் கண்களோடு கலந்து, அவர்கள் நெஞ்சில் தெய்வமாகிப் போனால்.
அன்னையின் கண்கள் அசையாமல் நின்றதை கண்ட கரண், “மா….” என்று அந்த மலைத்தொடர் நடுங்க, அவன் குரல் உடையும் வரை கத்தி கத்தி மயங்கி சரிந்தான்.
விமான ஜன்னலின் வழியே வெளி உலகை பார்த்தபடி, கரண் அமைதியாக அமர்ந்திருந்தான்.
அவனின் தந்தை அவன் கையை பிடித்து, “தேவையான நேரத்தை எடுத்து கொள் பேட்டா. காலம் மருந்தாகட்டும். மறக்க முயற்சி செய் அல்லது மனதை தேற்றி கொண்டு அப்பாவிடம் வந்துவிடு. தம்பி தங்கையையும் மறைத்தே வளர்க்க வேண்டிய கட்டாயம். நீங்கள் இல்லாமல் நான் நரகத்தில் வாழ்வேன் என்பதை மறந்துவிடாதே. திரும்பி தாய் நாடு வரும் நாள் தான் நான் மீண்டும் உயிர்த்தெழும் நாள்” என்றவர் மகனை லண்டன் மாநகரில் மறைத்து வளர்க்க தொடங்கினார்.
தன் ஆசைக்காக கரணை பார்க்க சென்று, அவன் உயிருக்கு ஆபத்து வந்துவிடுமோ என்று அவனை நேரில் பார்க்க சென்றதை தவிர்த்தார். மகள் திருமணத்திற்கு வருவதாக சொன்னவனை தடுத்து நிறுத்தி ஒற்றை ஆளை அனைத்தையும் கவனித்துக் கொண்டார்.
மனைவியின் இறப்புக்கு பின் தானாக பிள்ளைகளிடம் இருந்து விலகியவர், பாசமும் நேசமும் தொலைத்தொடர்பிலேயே தொடர்ந்தது.
கரணும் அவனது இளவலும் ஒரு நாள் அன்னையின் இழப்பை மறந்து நாடு திரும்புவர், என்ற நம்பிக்கையை மட்டும் அரசர் இழக்கவேயில்லை.
கரண் மறக்கவில்லை. அவனால் எதையும் மறக்க முடியவில்லை. அவன் இந்தியாவை விட்டு
உடைந்த இதயத்துடன், நிறைவேற்ற முடியாத ஒரு வாக்குறுதியுடன் புறப்பட்டிருந்தான்.
அனைத்தையும் எண்ணிப் பார்த்த கரண், கன்னத்தில் வழிந்த கண்ணீரை துடைத்தான்.
ஆரவள்ளி மலைத்தொடர் மாலை ஒளியில் பொன்னாக ஜொலித்துக் கொண்டிருந்தது.
அதனை பார்த்திருந்தவன் உதடுகள் மெல்ல விரிந்து, “என் கடமையிலிருந்து ஓடினேன்…
என் இரத்த சொந்தத்தை தவிக்கவிட்டு ஓடினேன்… பெற்ற அன்னையின் கடைசி வேண்டுகோளிலிருந்து…” என்றபடி அரண்மனை வெளிப்புற மண்டபத்தின் விளிம்புக்கு அருகே சென்றவன் முகத்தில் மெல்ல பருவக்காற்று வருடிச் செல்ல, “ஆனால் இனி நான் ஓடுவதாக இல்லை” என்றவனின் தாடை இறுகியது.
கண்களில் நெருப்புடன் ஆரவள்ளி மலையை பார்த்தவன், “நான் திரும்பிவிட்டேன். அன்னையின் உயிர் தியாகம் பொய்த்துப் போக விடமாட்டேன். அராவள்ளியையும் என் மக்களையும் காப்பாற்றுவேன்” என்றவனின் வாக்கை காப்பாற்ற கோரி தொலைவில் கேட்ட இடியொலி முழங்க அராவள்ளி பதிலளித்ததாக உணர்ந்தான் கரண் பிரதாப் சிங்.
நான்கு திசையிலும் பறந்து விரிந்த புல்வெளியின் எல்லை கண்ணுக்கு புலப்படாத தூரம் எங்கும் பச்சை பசேலென்றிருக்க, நீல வானம் பகலின் ஒளியுமில்லாது இரவின் இருளுமில்லாது இரண்டிற்கும் நடுவே சிக்கித் தவிக்கும் மங்கிய ஊதா வண்ணத்தில் மிளிர்ந்து கொண்டிருந்தது.
தரையில் படர்ந்திருந்த புற்களுக்கு மேல் மென்மையான பனி மிதக்க, அந்த பனிக்குள் அவன் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் மேகப்பொதிக்குள் நடப்பது போல இருந்தது.
புகைமூட்டத்தின் நடுவே நின்றிருந்த சிறுவன், அந்த குளிரில் வெறுங்காலுடன் எதையோ தேடி ஓடிக் கொண்டிருந்தான்.
அவன் முகத்தில் எரியும் உறுதியுடன், தன் கைகளுக்குள் இறுக்கி பிடித்த வெள்ளிப் பதக்கத்தை பார்ப்பவன், மீண்டும் நாற்புறமும் கண்களை சுழற்றி கொண்டு ஓடினான்.
அந்த சிறுவனை தீவன், சற்று தூரத்தில் காட்டின் நடுவில் இருக்கும் ஒரு குகைக்கு முன் முழங்காலில் முகத்தை மறைத்தபடி அழுது கொண்டிருந்தவனை நெருங்கி அவன் தோள்களில் கைவைத்தவனை ஏறிட்டு பார்த்த விழிகளில் அதிர்ந்து கீழே விழுந்தான் தீவன்.
அந்த விழிகள், பழுப்பு நிறத்தில் ஒளிர்ந்தபடி அவனை ஏறிட்டது. அந்த கண் தினம் தினம் அவன் கண்ணாடியில் பார்க்கும் அதே கண். மற்றவரின் இருந்து தன்னை வேறுபடுத்தும் அந்த கண்களை அவன் வெறுக்காத நாளில்லை. அந்த சிறுவன் தீவனின் சிறுவயது தோற்றத்தை கொண்டிருந்தான்.
அவனையே பார்த்திருந்த தீவனுக்கு , மெல்ல அனைத்தும் விளங்கியது. சில ஞாபகங்கள் நினைவடுக்கில் இருந்து வெளிப்படுவதாக நினைத்தவன் முன் கைகளை நீட்டினான் அந்த சிறுவன். அவன் கையில் ஒரு சிறிய வெள்ளிப் பதக்கம் பெண் தெய்வத்தின் முன் மண்டியிட்டு வாள் ஏந்திய வீரன் இருப்பது போல் வடிவமைக்கப்பட்டிருந்தது.
அதனை ஒருவித ஏக்கத்துடன் பார்த்த தீவனிடம் அந்த சிறுவன் எதையோ வாயசைத்து உணர்த்த துடித்தான். இரண்டடி இடைவெளியில் நின்றிருந்தும் தீவனால் அந்த சிறுவன் சொல்லுவதை கேட்க முடியவில்லை.
தான் மறந்துவிட்ட எதையோ அந்த சிறுவன் நினைவுபடுத்துவது போல் தீவனுக்கு தோன்றியது.
தான் சொல்வதை தீவன் உணர்ந்துகொள்ளவில்லை என்பதை அறிந்து கொண்ட சிறுவன், கண்களில் கண்ணீரோடு மீண்டும் அந்த குகைக்கு வெளியே அமர்ந்து கொண்டான்.
அந்த சிறுவனுக்கு உதவ துடித்த மனதை ஒருநிலைப்படுத்தி, மெல்ல சுற்றி பார்த்த தீவனுக்கும் தான் இருக்கும் இடம் இன்னதென்று தெரியவில்லை.
எப்படியாவது அந்த சிறுவனையும் தன்னையும் பாதுகாத்திட எண்ணி, “யாராவது இருக்கிறீர்களா…?” என்று கத்தியவனின் குரல் மீண்டும் எதிரொலித்தது.
தொடர்ந்து கத்தியபடி நடந்தவன் பார்வை படும் தூரத்தில் மங்கலான உருவங்கள் தெரிய, அதனை நோக்கி ஓடியவனின் மனதில் ஒரு குரல், “உனது சொந்தங்களை நெருங்கிவிட்டாய் தீவா… ஓடு…ஓடு” என்ற உந்துதலில் ஓடியவன் அவர்களை எட்டும் முன் அந்த உருவங்கள் புகைபோல் கரைந்து போயின.
மூச்சுக்கு திணறிய தீவன், முழங்காலில் மண்டியிட்டு, “ஏன்…?ஏன் அவர்களை நான் காண முடியவில்லை…? என் குடும்பம் எங்கே…?நான் யார்?” என்று பல கேள்விகளை திக்கி திணறி வீசும் காற்றோடு வினவினான்.
அந்த நேரத்தில் அவன் பின்னால் பூமியின் ஆழத்திலிருந்து எழுவது போல ஒரு கரகரப்பான குரல், “ஏனெனில் நீ தவறான திசையில் தேடுகிறாய்” என்ற பதில் கேட்டு தீவன் உறைந்து நின்றான்.
மெல்ல திரும்பியவன் முன் ஒரு கருத்த உருவம், சடா முடியுடன், கோரை பற்களை அகோரமாய் காட்டியபடி, அன்று கர்னி மாதா கோவிலின் முன் ஆனந்த தாண்டவமாடிய அந்த உருவத்தின் மங்கலான கண்கள் மட்டும்அந்த இருளைத் துளைத்து நின்றது.
அந்த உருவத்தை கண்ட தீவன் பதறிப்போய் ஒரு அடி பின் நகர்ந்தான்.
“யார்…நீ ?” என்றவனின் கேள்விக்கு அந்த உருவம் தலையை சாய்த்து, “நான் கர்னி மாதாவின் தூதுவன். உன்னைப்போல் திக்கு தெரியாமல் அழைப்பவர்களுக்கு வழிகாட்டி.” என்றதை கேட்ட தீவன் எச்சில் விழுங்கினான்.
தீவன் மனதில் ஒரு முடிவுடன் குரல் நடுங்க, “நான்…என் குடும்பத்தைத் தேடுகிறேன்…” என்றவனின் அருகில் வந்த அந்த உருவம் அவனை ஆழ்ந்து பார்த்தபடி, “உன்னை பெற்றவர் துயரத்தில் துடித்து கொண்டிருக்கிறார். நீ இறந்ததாக நினைத்து அவரின் வேண்டுதல் அனைத்தும் உன்னை விரைவாக சேர்ந்துவிடும் எண்ணத்தில் இருக்கிறார்” என்றதை கேட்ட தீவனின் கண்கள் பெரிதாகின.
“நீங்கள் அவரை அறிவீர்களா? அவர் எங்கே இருக்கிறார்?” என்றவனின் குரலில் இறைஞ்சுதல் இருக்க அதை உணர்ந்த அந்த உருவம் ஒரு கையை உயர்த்தி, “அவசரம் வேண்டாம் மகனே! உன் வம்சம் உனக்காக காத்திருக்கிறது. உனக்கான கடமை உன்னை அழைக்கிறது. இனி நீயே தடுத்தாலும் உன் விதி உன்னை உன் குடும்பத்துடன் இணைக்கும்”
“நீ உன் வம்சத்தின் வித்து. உன் முன்னோர் வாக்கை காக்க உன் உயிரை இழக்க துணிந்தவன். இப்போது உன்னை எதிர்பார்த்து நிற்கும் ஒரு மரபை நீ சுமக்க இருக்கிறாய்.” என்ற வார்த்தைகளில் தீவனின் உடல் நடுங்கியது.
“மரபா…?” என்றவனின் கேள்விக்கு அந்த உருவம் பனிக்குள் எதையோ சுட்டிக்காட்ட
தொலைவில் ஒரு மங்கலான ஒளி மின்னுகிறது.
அதை தன் பழுப்பு நிற கண்களை சுருக்கி பார்த்தவனிடம், “துயரத்தை கண்களில் சுமந்த மனிதனை நோக்கி நட. உன் நினைவுகளை உயிரோடு வைத்திருக்கும் அந்த மனிதன்,
இன்றும் உன்னை ‘மகனே’ என்று பிரார்த்தனையில் அழைப்பவனை உன் உள்ளம் கண்டுகொள்ளும்” என்றதும் தீவனின் கண்கள் நீரால் நிரம்பின.
தீவன் அந்த ஒளியை நோக்கி ஒரு படி எடுத்துவைத்தவன் பின்னால், அந்த கரிய உருவத்தின் குரல், “செல், மகனே! உன் பயணம் குடும்பத்தை அடைவதற்கானது அல்ல… உன்னை மறக்காது நினைவுகளில் சுமந்து கொண்டிருக்கும் மனிதரிடம் திரும்புவதற்கானது” என்றதை கேட்ட தீவனின் உடலில் உத்வேகம் கூட, அந்த ஒளியை நோக்கி ஓடினான்…
வேகமாக…
அவனைப் பார்த்துக்கொண்டே நின்ற, அந்த கரிய உருவம் மெல்ல புன்னகைத்தபடி, “ராஜபுத்திர இளவரசர்களுக்கு விரைவில் உன் உதவி தேவைப்படும்…” என்றபடி மெதுவாக இருளுக்குள் மறைந்து போனது அந்த உருவம்.
ரணசூரன் வருவான்..

