Loading

உயிர் – 10

முதல் முறை அவள் தன் காரில் ஏறியதும் ஆதவனிற்குள் ஜிவ்வென்ற உணர்வு.

காரில் ஏறியதும் முதல் வேலையாக கார் கண்ணாடியை சரி பார்த்து அவளின் முகம் தெரியும்படி வைத்துக் கொண்டான்.

இதை கண்ட ருக்மணிக்கு இதழுக்குள் புன்னகை.

இதையெல்லாம் கவனிக்கும் நிலையில் இல்லாத அகிலனுக்கு தான் பெரும் அவஸ்தையாக இருந்தது.

ருக்மணியை மனதார நேசித்தவனுக்கு அவளை இப்பொழுது தன் அண்ணனின் மனைவியாக பொருத்திப் பார்ப்பதே பெரும் நரக வேதனையாய் இருந்தது.

அதிலும், அவளை பார்க்கும் பொழுதெல்லாம் அவள் தன்னவள் என்று அவனையும் அறியாமல் எழும் எண்ணம், அவனை கொஞ்சம் கொஞ்சமாக கொன்று கொண்டு இருந்தது.

ஏதோ தன் அண்ணனுக்கு துரோகம் செய்யும் உணர்வு..

துரோகத்திற்கும், உறவுக்கும் இடையே சிக்கி தவித்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.

ஆனால், தப்பியும் ருக்மணியின் புறம் அவன் திரும்பவே இல்லை. அவளைக் கண்டால் இவனின் மனம் பழையபடி கூப்பாடு போட தொடங்கி விடும்.

தன் அண்ணன் மனைவி என்னும் ஸ்தானத்தில் அவளை வைக்க வேண்டும் என்பதற்காகவே அவளை தவிர்க்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டான். அதை செயல்படுத்தவும் தொடங்கி விட்டான்.

தன் தம்பியின் செயலை ஓரக்கண்ணால் கவனித்த ஆதவ் மனதிற்குள், “ரொம்ப நல்லவன் டா” என்று தப்பாமல் சபாஷ் போட்டுக் கொண்டான்.

நேராக இவர்களின் கார் அருகில் இருக்கும் மால்லை அடைந்து பார்க்கிங் ஏரியாவிற்கு சென்றது.

நொடிக்கு ஒரு முறை கண்ணாடியினோடு அனுவின் முகத்தையே ஆதவ்வின் விழிகள் தீண்டி செல்ல.

அவளோ அதையெல்லாம் எங்கே கவனித்தாள். வெளியே வேடிக்கை பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தாள்.

காலி இடத்தை தேடி பிடித்து காரை நிறுத்த முயற்சித்துக் கொண்டிருந்தான் ஆதவ்.

அப்போது யாதும் எதிர்பாராத விதமாக கத்தி இருந்தாள் அனுராதா.

“ஆஆஆஆ….” என்று கூச்சலிட்டவள், தன் இரு கரம் கொண்டு வாயை பொத்தியவாறு இருக்க.

விழிகள் ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சியோடு பெரிதாக விரிந்து இருக்க..

ஒரு வித குதூகல மனநிலையில் அமர்ந்திருந்தவளை அனைவரும் திரும்பி பார்க்க.

அதற்குள் அவளின் அருகில் இருந்த ருக்மணி, “என்ன ஆச்சு டி? இப்ப எதுக்கு இப்படி கத்துற? பயந்துட்டேன் தெரியுமா” என்றாள் அதட்டலாக.

“ஐயோ அக்கா.. அங்க பாரு.. தீபக்! அது சிங்கர் தீபக் தான! ஐயோ என்னுடைய பேவரைட் அக்கா. என்னால கொஞ்சம் கூட நம்பவே முடியல” என்று இருக்கும் இடம் மறந்து உற்சாகத்தில் பொரிந்து கொண்டிருந்தாள்.

அவள் காட்டிய திசையை தான் ருக்மணியும், அகிலனும் கூட பார்த்திருந்தார்கள்.

ஆனால், ஆதவ்வின் விழிகளோ அவளிலேயே தான் நிலைத்திருந்தது. அதில் ஒரு வித சுவாரசியமும் கூட அவன் விழிகள் வெளிப்படுத்தி இருந்தது.

அவளின் நுண் உணர்வுகளை கூட தனக்குள் உள்வாங்கிக் கொள்ள முயற்சித்துக் கொண்டிருந்தான்.

“ஹே! ஆமா பாத்ரூம் சிங்கர்.. அது சிங்கர் தீபக் தான்” என்று அகிலன் கூட தன் வாயை திறந்து விட்டான்.

“ஐயோ! என்னால நம்பவே முடியல! அவரை மீட் பண்ணுவேன்னு நான் நினைச்சு கூட பாக்கல. நான் போய் அவரோட ஒரு செல்பி எடுத்துட்டு வந்துடறேன்” என்றவாறு இவள் வேகமாக கதவை திறக்க முற்படவும், அதுவோ ஆதவ்வின் கை வசத்தால் லாக் செய்யப்பட்டிருந்தது.

இப்பொழுது ஏனோ ஆதவ்விற்கு சம்பந்தமே இல்லாமல் கோபமும் கொஞ்சம் எட்டிப் பார்க்க துவங்கியது அவளின் அதீத குதூகலத்தில்.

அதிலும், வேறொருவனை கண்டு அவள் குதூகலிப்பது தான் இவனின் பிரச்சனையோ என்னவோ..

கதவு திறக்கப்படாமல் போகவும், சட்டென முகம் வாட தன் அக்காவை நோக்கி குனிந்தவள், “அக்கா ப்ளீஸ் ஓபன் பண்ணி விட சொல்லு.. நான் போய் ஒரே ஒரு செல்பி எடுத்துட்டு வந்துடறேன். காலேஜ்ல ஃபுல்லா அதை காட்டி கெத்து காட்டுவேன். ப்ளீஸ்க்கா சொல்லு” என்று தன் அக்காவை உசுப்பினாள்.

ருக்மணி, “ஆதவ்..” என்று தன் வாயை திறக்கும் முன்னரே, அனுவின் வார்த்தைகள் அவனின் செவிகளில் தவறாமல் விழுந்திருக்க.

ருக்மணி கூறுவதை யாராலும் கேட்க முடியாத அளவிற்கு சத்தமாக காரில் இசைத்துக் கொண்டிருந்த பாடலின் ஒலியை கூட்டி இருந்தான்.

எதிர்பாராத சத்தத்தில் அனைவருமே ஒரு நிமிடம் திடுக்கிட்டு விழிக்க.

“என்னண்ணா எதுக்கு இவ்வளவு சவுண்ட்?” என்றான் அகிலன்.

“சிங்கர் தீபக் உடைய சாங் தான் போயிட்டு இருக்கு. அதான் உங்களுக்கு எல்லாம் பிடிக்குமேனு வால்யூமை ரைஸ் பண்ணேன்” என்று பற்களை கடித்து தன் சிரிப்பை கட்டுப்படுத்தியவாறு ஆதவ் கூறுவது, அகிலனுக்கும் கூட நன்கு புரிந்தது.

ஆனால், ஏன் இப்படி என்பது தான் அப்பொழுது அவனுக்கு விளங்கவில்லை.

அதற்குள் தீபக் படம் பார்ப்பதற்காக மாலிற்கு வந்திருந்தவன், தன்னை கண்டு கூட்டம் கூடும் முன்னரே வேக வேகமாக தன் முகத்தை மறைத்தபடி மின்தூக்கியில் ஏறி விட்டிருக்க.

அனுராதாவிற்கு ஆதவ்வின் மேல் பெரும் கோபமே எழுந்து விட்டது. இதுவே வேறு யாரேனும் இருந்திருந்தால் இந்நேரம் சண்டைக்கு நின்றிருப்பாள்.

இவனிடம் அப்படியும் செய்ய முடியாதே. சண்டையிடும் அளவிற்கு கூட இவர்களின் உறவு ஒன்றும் சுமூகமாக இல்லையே.

தன் அக்காவை ஒன்றும் பேச முடியாத நிலையில் தவிப்பாக பார்த்துவிட்டு, “எல்லாம் உன் மாம்ஸால தான். அவர் இப்போ போயிட்டாரு.. இதோட நான் அவரை எப்ப பார்ப்பேன். ஒரே ஒரு செல்பி கூட எடுக்க முடியாம பண்ணிட்டார்ல போக்கா” என்று கோபமாக கிசுகிசுத்தாள்.

சட்டென பாடலின் ஒலியை ஆதவ் பழையபடி குறைத்திருக்கவும், அவளின் கிசுகிசுப்பு அவனின் செவிகளையும் தீண்டி விட. அவனின் இதழிலோ ரகசிய புன்னகை ஒட்டிக்கொண்டது.

ஒரு இடம் காலியாக இருப்பதைக் கண்டு அங்கே காரை நிறுத்த ஆதவ் செல்லும் பொழுது தான் அனுராதா கத்தி இருந்தாள்.

எனவே, காரை பார்க் செய்யாமல் அப்படியே நிறுத்திவிட்டு இவளை பார்த்திருந்தவன், இப்பொழுது தான் மீண்டும் காரை பார்க் செய்வதற்காக அந்த இடத்திற்குள் நுழைய முற்படவும்.

அதற்குள் எங்கிருந்தோ வேகமாக வந்த கார் இவர்களை முந்திக்கொண்டு அந்த இடத்தில் சென்று நின்றது.

இதைக் கண்ட ஆதவ்விற்கோ நொடியில் முகம் கடுகடுக்க கோபமாக பார்த்தான்.

அதற்குள் அங்கே பணிபுரிபவன் வேறு ஒரு இடத்தை காட்டி அங்கே காரை நிறுத்த சொல்லவும்.

உர்ரென்ற முகத்தோடு ரிவர்ஸ் எடுத்துக் கொண்டிருந்தான் ஆதவ்.

‘என்னை செல்பி எடுக்க விடாம பண்ணாருல்ல நல்லா வேணும்’ என்று மனதிற்குள் அவனுக்கு அர்ச்சித்துக் கொண்டிருந்தாள் அனுராதா.

அவர்களின் கார் பின்னே இருக்கும் சுவரை நெருங்கி விட்டதை கவனித்த பணியாள் போதும் என்பதுபோல் சைகை செய்யவும்.

அதை சற்றும் கண்டு கொள்ளாமல் கோபமாக தன் காரை கொண்டு போய் அந்த சுவற்றில் ஒரு இடி இடித்தான் ஆதவ். இதை யாருமே எதிர்பார்க்கவில்லை.

யார் மேலோ இருக்கும் கோபத்திற்கு இப்படியா செயலாற்றுவான் என்று பெண்கள் இருவரும் அவனை அதிர்ந்து பார்க்க.

“அண்ணா கூல்”.

“நாம தான் பார்க் பண்ண போறோம்னு தெரியும்ல.. அவன் வேற எங்கேயாவது போய் பார்க் பண்ண வேண்டியது தான.. எதுக்காக நம்ம போற ரூட்ல குறுக்க வந்து பார்க் பண்றான். இடியட்” என்று தன் பற்களை கடித்துக் கொண்டே சிடுசிடுத்தான்.

“ஓகே ஓகே லீவ்.. இந்த மாதிரி நடக்கிறது சகஜம் தான். விடுங்க.. அதான் வேற இடம் இருக்குல்ல” என்று அகிலன் அவனை சமாதானம் செய்யவும்.

வேறு ஒரு இடத்தில் காரை நிறுத்திவிட்டு கீழே இறங்கினர்.

அனுராதாவிற்கு தன் அக்காவின் நிலையை எண்ணும் பொழுது தான் பாவமாக இருந்தது.

ஆதவ் கோபக்காரன், முரட்டுத்தனமானவன் என்பதெல்லாம் தெரியும். வெகுநாட்கள் கழித்து அவனின் முரட்டுத்தனத்தையும், கோபத்தையும் மீண்டும் நேரில் சந்தித்ததில் உண்மையில் அரண்டு தான் போய்விட்டாள்.

அதிலும், தன் அக்கா இவனை எப்படி தான் சமாளிக்க போகிறாளோ என்ற எண்ணமும் அவளின் மனதிற்குள் எழுந்தது.

நொடி நேர கோபம் சட்டென வடிந்திருக்க சாதாரணமாக இருந்தான் ஆதவ்.

அனுராதாவிற்கு தான் அவனின் மனநிலையை சற்றும் கணிக்க முடியவில்லை.

அதன் பிறகு அனைவருடனும் சகஜமாக அவன் பேச. அனுராதா அவனிடம் பேசவும் இல்லை. அவனின் புறம் திரும்பவே இல்லை. வேடிக்கை பார்த்துக்கொண்டே அவர்களுடன் சென்றாள் அவ்வளவே..

மாலிற்குள் நுழைந்ததுமே எங்கோ இசை நிகழ்ச்சி நடப்பதற்கான அறிகுறி தென்பட்டது. அதை யூகித்து அனைவரையும் அழைத்துக் கொண்டு அங்கே சென்றிருந்தான் ஆதவ்.

அவன் நினைத்தது போலவே ஃபுட் கோர்ட்டில் சிறிய அளவிலான மேடை அமைத்து ஒருவர் கிட்டார் வாசிக்க, அருகில் ஒரு ஆண் காதல் பாடல்களின் குறிப்பிட்ட வரிகளை மட்டும் தேர்ந்தெடுத்து பாடிக்கொண்டிருந்தார்.

இன்று தான் இந்த வருடத்தின் இறுதி நாள். நாளை புது வருட பிறப்பு. அதற்காகவே இந்த இசை நிகழ்ச்சி பிரத்தியேகமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நால்வரும் ஒரு இருக்கையில் அமர. அங்கிருந்து பார்க்கும் பொழுது அந்த இசை நிகழ்ச்சி நன்றாக அவர்களுக்கு தெரிந்தது.

அனுராதா இசை நிகழ்ச்சியை ஒருவித மென்புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவளின் தற்போதைய மனநிலையில், ஆதவ்வின் கோபம் எங்கோ ஒரு மூலையில் சென்று இருந்தது.

அனைவருக்கும் காபி வாங்கி வருவதாக கூறிவிட்டு ஆதவ் எழவும்.

அவனுக்கு முன்பாக எழுந்த அகிலன், “அண்ணா நான் போறேன். நீங்க இருங்க” என்று விட்டு விறுவிறுவென அங்கிருந்து நகர்ந்து விட்டான்.

ருக்மணியுடன் இருக்கும் சூழலை தவிர்க்கவே அவன் இவ்வாறு செய்கிறான் என்பதை உணர்ந்ததும் ஆதவ்வின் இதழிலோ ஒருவித குறும்பு புன்னகை.

அனைவருக்கும் காபி வரவும் அதை கொஞ்சம் கொஞ்சமாக அருந்தி கொண்டிருந்தனர்.

அனுராதாவை பொருத்தவரை ஆதவ்வை வேண்டாம் என்று தவிர்க்கவும் முடியாத, விருப்பப்பட்டு ஏற்றுக்கொள்ளவும் முடியாத நிலை தான்.

தன் அக்காவிற்காக வேண்டும் அவனை சகித்துக் கொள்ள நினைத்து விட்டாள். ஆனாலும், அவனிடம் சகஜமாக பழக முடியவில்லை.

எனவே, ஏனையவர்களிடம் பேசுவதும், அவர்களின் பேச்சை கேட்பதுமாக காபியை அருந்திக் கொண்டிருந்தாள்.

முதலில் காபியை குடித்து முடித்த ஆதவ் வேகமாக எழுந்து சென்று அங்கே மைக்கை பிடித்து பாடிக் கொண்டிருந்தவரின் காதில் எதையோ கிசகிசுக்கவும்.

“என்னக்கா உன் மாம்ஸ் அவர் பாடுன பாட்டு பிடிக்கலைனு அவரை போய் திட்டுறாரோ.. நல்லா தானே பாடிட்டு இருந்தார்”.

அவளின் ‘உன் மாம்ஸ்’ என்ற அழைப்பில் அகிலனுக்கு ஏனோ மனம் வலிக்கத்தான் செய்தது.

அனுராதாவிடம் கூட அவனால் சகஜமாக பேச முடியவில்லை.

“சும்மா இரு டி நீ வேற” என்றாள் அவளின் தோள்களை தட்டியபடி ருக்மணி.

“ஆனாலும், ஓவர் ஃபயரா தான் இருக்காரு உன் பயர் இன்ஜின் மாம்ஸ். சம்பந்தமே இல்லாம யாரு மேலயோ இருக்க கோபத்தை கார் மேல போய் காட்டுறார். எப்படித்தான் நீ இவரை கட்டிக்கிட்டு சமாளிக்க போறியோ” என்று ஏதோ சிந்தனையில் வெளிப்படையாக கூறிவிட்டவள். பின் தன் நாகை கடித்து தன் அக்காவின் முகத்தை பார்த்தாள்.

அவளின் முகத்திலோ வருத்தத்திற்கான எந்த ஒரு சாயலும் தென்படவில்லை.

“ஐயோ, அக்கா கிட்ட இப்படி சொல்ல கூடாதுன்னு நினைச்சேன். அவசரப்பட்டு இப்படி சொல்லிட்டேனே” என்று தன்னை தானே தலையில் தட்டிக் கொண்டவள்.

சட்டென கேட்ட அந்த இனிமையான குரலில் பாடல் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி கொண்டிருந்த திசையை நோக்கி அவளின் தலையை தானாக திருப்பி இருந்தது அவளின் உள்ளுணர்வு..

ஆம், கிருஷ்ணா.. ஆதவ் கிருஷ்ணா தான் பாடிக் கொண்டிருந்தான்.

அதுவும் தன் ராதைக்காக..

தன் அனுராதாவிற்காக..

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்