
அத்தியாயம் 7
“சுடர், தாத்தாவோட நோட்ஸ்ல, இந்த கல்லைப் பத்தி எங்கேயும் குறிப்பிடப்படாதது ரொம்ப வியர்ட்டா இருக்கு. எந்தவொரு டீடெயிலையும் விடாதவரு இதை மட்டும் எப்படி மிஸ் பண்ணாருன்னு தெரியலையே.” என்று பார்வையைக் குறிப்புகளிலிருந்து மீட்காமலேயே புலம்பினாள் மென்மொழி.
“ஹ்ம்ம், ஏன்னா உன்னை மாதிரி ஒரு ஆர்வக்கோளாறுக்கும், உன் உடன்பிறப்பை மாதிரி ஒரு அரைவேக்காட்டுக்கும் தெரியக் கூடாதுன்னு நினைச்சுருக்கலாம். ஏற்கனவே, மோட்சமடைஞ்சுட்ட உன் தாத்தாவை விட்டுட்டு, என்னைக் கவனிடி. இல்லன்னா, நானும் அவரோட போய் ஜாயின் பண்ண வேண்டியதிருக்கும் போல. ஆ… அம்மா… எனக்கு மட்டும்தான் இன்விசிபிலிட்டி பவர் கிடைச்சுருக்குன்னு நினைச்சேன். இப்போ உனக்கும் கிடைச்சுருக்கு போல.” என்று பசி மயக்கத்தில் உளறிக் கொண்டிருந்தவளைக் கண்டு பெருமூச்சு விட்ட மென்மொழியோ, “டெலிவரிக்கு இன்னும் பத்து நிமிஷம் இருக்கு.” என்றாள்.
“எது பத்து மாசத்துல டெலிவரியா? யாருக்கு? எனக்கு சொல்லவே இல்ல!” என்று பசியிலும் அடங்காதவளாக வாயாடினாள் சுடரொளி.
அவளின் தலையில் செல்லமாகத் தட்டிய மென்மொழியோ, “கொஞ்ச நேரம் பெனாத்தாம இருடி.” என்று பார்வையை திருப்ப, அங்கு சற்று தொலைவில் எதிரும் புதிருமாக நின்று பேசிக் கொண்டிருந்த யாழ்மொழியும் இன்பசேகரனும் தென்பட்டனர்.
“சுடர், அங்கப் பாரேன். எப்பவும் கோபப்படாத இன்பா கோபத்துல இருக்கான்… அதுவும் யாழ் மேல!” என்று மென்மொழி ஆச்சரியமாகக் கூற, மூடியிருந்த கண்களைத் திறக்காத சுடரொளியோ, “நல்லா பாருடி, அங்க இன்பாவா உருமாறி இருக்குறது உன் அருமை அக்காவா இருக்கப் போகுது.” என்று கேலி செய்தாள்.
அவளை முறைத்த மென்மொழியோ, அவளிற்கு முன்னிருந்த மேசையிலிருந்த நான்கு கற்களையும் ஸ்பரிசித்தவளாக, “இன்னும் ரெண்டு கல்லு யாரு கிட்ட இருக்கும்? அதுக்கு என்ன பவர் இருக்கும்?” என்று வினவ, “எம்மா தாயே, உன் பக்கத்துல இருந்தா, இப்படி அறிவுப்பூர்வமான கேள்வி கேட்டே என் பசியை அதிகமாக்கிடுவ. நான் உன் உடன்பிறப்பு கிட்டயே போறேன்.” என்று தள்ளாடியபடி சென்றாள்.
அங்கோ, “இன்பா, இன்னும் எவ்ளோ நேரம் என்னை அவாயிட் பண்ணப் போற?” என்று சலிப்புடன் யாழ்மொழி வினவ, “வாவ், நான் அவாயிட் பண்றதெல்லாம் உன் கண்ணுக்குத் தெரியுதா? நான் கூட உன் அறிவை மாதிரி கண்ணும் மங்கிடுச்சுன்னுல நினைச்சேன்.” என்று வழக்கமில்லாத கோபக்குரலில் கேலியையும் சேர்த்துக் கூறினான் இன்பசேகரன்.
“எது? உனக்கும் கண்ணு மங்கிடுச்சா? அப்போ இது பசி மயக்கமாதான் இருக்கும்.” என்று கூறியபடி சுடரொளி அங்கு வர, அவ்விடத்திலிருந்து விலகிச் சென்றான் இன்பசேகரன்.
அவனின் இந்தத் திடீர் மாற்றத்திற்கான காரணம் என்னவென்று விளங்காதவளாக விழித்துக் கொண்டிருந்த யாழ்மொழியின் பார்வை, அங்கு மென்மொழியிடம் சிரித்தபடி பேசிக் கொண்டிருந்த இன்பசேகரனிடம் நிலைக்க, அதை நீடிக்க விட மாட்டேன் என்று கங்கணம் கட்டிக் கொண்டதைப் போல அவளை சமீபித்த சுடரொளியோ, “இந்தப் பசி என் மூக்கையும் விட்டு வைக்கல போல! எங்கேயோ கருகுற வாடை ஹெவியா வருது.” என்க, மூக்கு விடைக்க அவளை முறைத்த யாழ்மொழி, விருட்டென்று நகர்ந்து விட்டாள்.
“ஷப்பா, இந்த லவ் பண்றவங்களுக்கு மத்தியில சிங்கிளா சுத்துற என்னை மாதிரி அப்பாவி ஜீவன்களுக்கு எல்லாம் எப்போதான் விடிவு காலம் பொறக்குமோ!” என்று சுடரொளி புலம்ப, சரியாக அதே சமயம் வாயிலில் அழைப்பு மணி ஒலிக்க, “விடிவு காலம் பொறந்துடுச்சு!” என்று கத்திக் கொண்டு வாயில் நோக்கி ஓடினாள்.
*****
உணவுண்ணும் வேளையிலும் எதையோ தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்த மென்மொழியைக் கலைத்தது அலைபேசி ஒலி.
அது சுடரொளியின் அலைபேசி ஒலியே!
“மொழி, அட்டெண்ட் பண்ணி நான் பிஸியா இருக்கேன்னு சொல்லு.”என்று வாய்க்குள் உணவை அடைத்தபடி சுடரொளி கூற, இதழோரப் புன்னகையுடன் அலைபேசியை ஸ்பீக்கருக்கு மாற்றி வைத்தாள் மென்மொழி.
மறுமுனையில் இருந்தவரோ, “அடியேய் சுடரு…” என்று கத்த, அதில் புரையேறி குடித்துக் கொண்டிருந்த தண்ணீரை எதிரில் அமர்ந்திருந்த யாழ்மொழியின் மீது துப்பி விட்டாள் சுடரொளி.
“ச்சீ… தண்ணி கூட ஒழுங்கா குடிக்க தெரியாதா உனக்கு? டிஸ்கஸ்…” என்று எதையோ கூற வந்த யாழ்மொழி, இன்பசேகரனின் முறைப்பில் சட்டென்று அமைதியாகி அங்கிருந்து சென்று விட, அதைக் கண்ட தோழிகள் இருவரும் எட்டாவது அதிசயத்தைக் கண்டது போல வாயைப் பிளந்து பார்த்தனர்.
“மொழி, எனக்கு பசி முத்திப் போயிடுச்சு போல. ஹாலுசினேஷன் எல்லாம் வருது.” என்று சுடரொளி கிசுகிசுக்க, “அப்படின்னா, உனக்கு மட்டும்தான வரணும்? எனக்கும் ஏன் வருது?” என்றாள் மென்மொழி.
“ஒருவேளை, இன்பாக்கு ஹிப்னோடைஸ் பண்ற பவர் கிடைச்சுருக்குமோ?” என்று சுடரொளி வினவ, “மேல மட்டும் பார்க்காத, கீழயும் பாரு.” என்ற மென்மொழி, இன்பசேகரனின் கரத்திற்குள் சிக்கியிருந்த நெளிந்த எவர்சில்வர் கோப்பையைக் காட்ட, “சூப்பர் ஸ்திரேந்த்!” என்று சத்தமாகக் கூறினாள் சுடரொளி.
அதற்குள் அலைபேசி தொடர்பில் இருந்தவரோ பொறுமையிழந்து போய், “சுடரு, நான் இங்க காட்டுக்கத்தலா கத்திக்கிட்டு இருக்கேன். நீ அங்க யாருக்கிட்ட பேசிட்டு இருக்க?” என்க, “அதான் கத்துறீங்கன்னு உங்களுக்கே தெரியுதுல, அப்புறம் எதுக்கு ஃபோன் போட்டுட்டு? சும்மா நின்னு பேசுனாலே, நாலு தெரு தள்ளியிருக்க எனக்கு கேட்கும்.” என்றவளை அடக்கிய மென்மொழி,
“ஆன்ட்டி, சுடர் என்கூடதான் இருக்கா.” என்று பொறுமையாகக் கூற, “மொழி… அங்கதான் இருக்காளா அந்த வாயாடி. இவ்ளோ வாயடிக்க தெரியுது, நைட்டு வீட்டுக்கு வரலன்னா ஒரு ஃபோன் பண்ணி சொல்லணும்னு தெரியுதா? இவளெல்லாம் கல்யாணம் பண்ணி எப்படி குப்பை கொட்டப் போறாளோ?” என்று புலம்பியவர், சுடரொளியை பெற்றெடுத்த அன்னை.
“குப்பை கொட்ட கல்யாணம் என்ன குவாலிஃபிகேஷனா?” என்று விதாண்டாவாதம் பேசிய தோழியின் வாயை உணவைக் கொண்டு அடைத்த மென்மொழி, அவளின் தாயை ஏதோ சொல்லி சமாளித்து அழைப்பைத் துண்டித்தாள்.
சில நொடிகளுக்கு முன்னிருந்த கோபம் சற்று அடங்கியவனாக எதிரில் அமர்ந்திருந்தவனை நோட்டமிட்ட சுடரொளி, “ஏன் இன்பா, உன் அம்மா எல்லாம் இப்படி கால் பண்ணி விசாரிக்க மாட்டாங்களா? ஹ்ம்ம், இந்த உலகத்துல பொண்ணுங்களுக்கு ஒரு நியாயம், பசங்களுக்கு ஒரு நியாயம்!” என்று வாயாடியவளை தடுத்தவன், “உன் ஃபெமினிசம் ஸ்பீச்சை நிப்பாட்டு. நானெல்லாம் எப்போயோ என் அம்மாக்கு தகவல் சொல்லிட்டேன். உங்களை மாதிரி பொறுப்பில்லாம இருக்க மாட்டேன்.” என்று சுத்தப்படுத்திக் கொண்டு அங்கு வந்த யாழ்மொழியை பார்த்தபடி இறுதி வரியைக் கூறினான்.
“ரைட்டு, நம்ம இடத்தைக் காலி பண்ண வேண்டியதுதான்!” என்று கையோடு தட்டை எடுத்துக் கொண்டு மென்மொழியையும் இழுத்துக் கொண்டு அங்கிருந்த நழுவினாள் சுடரொளி.
“இன்பா பிளீஸ்… என்மேல என்ன கோபம்னு உடைச்சுப் பேசு. நான் உன் ஃபிரெண்டுதான?” என்று யாழ்மொழி திணறலாகக் கேட்டாள்.
அவளிடம் வெளிப்பட்ட தயக்கத்திற்கான காரணம், அவனின் புதிய அவதாரத்தை சற்று முன்னர் கண்டதன் தாக்கமா, இல்லை, அவள் கேள்விக்கான பதிலை அவளின் உள்மனம் கண்டு கொண்டாலும், அதை ஒப்புக்கொள்ள மறுக்கும் பாவையின் நிலையா?
“தன்மேல அக்கறை இல்லாத, நல்லதுன்னு எடுத்து சொன்னாலும் புரிஞ்சுக்காத, கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாத, முக்கியமா ‘அழகு’க்கு மட்டும் முக்கியத்துவம் குடுக்குற சுயநலவாதியை எல்லாம் ஃபிரெண்டா கன்சிடர் பண்ண வேண்டாம்னு முடிவெடுத்துருக்கேன்.” என்று அவளைப் பார்க்காமல் கூறினான் இன்பசேகரன்.
அவனின் பேச்சில் அதிர்ந்து நின்று விட்ட யாழ்மொழி நிகழ்விற்கு வரவே சற்று நேரம் பிடித்தது.
அவனின் பேச்சிலிருந்த உண்மை அவளின் மனதை சுட்டாலும், இருவருக்குமிடையே சிறுவயது முதலே இருக்கும் ‘நட்பு’ தந்த உரிமையில், “இவ்ளோ நாள் நான் சுயநலவாதின்னு தெரியலையா இன்பா? அப்போ எல்லாம் நல்லதான பேசுன? இப்போ மட்டும் ஏன்…” என்று அடுத்து என்ன சொல்வதென்று தெரியாமல் நிறுத்த, விரக்தியாக சிரித்த இன்பசேகரனோ, “ஏன் நிறுத்திட்ட? நீ எவ்ளோ அசிங்கப்படுத்தியும் திரும்ப திரும்ப சிரிச்சுட்டு பேசுன நான், இப்போ மட்டும் ஏன் பேச மாட்டிங்குறேன்னு தெரிஞ்சுக்கணும், அதான?” என்று அழுத்தத்துடன் வினவினான்.
அவனின் நேரடியான கேள்விக்கு மறுத்துப் பதில் சொல்ல வார்த்தைகள் வெளிவராத வண்ணம் தொண்டை அடைத்துக் கொண்டது யாழ்மொழிக்கு.
அதுவரை அவளைக் காணாமல், வேறு எங்கோ பார்வையைப் பதித்தபடி பேசிய இன்பசேகரன், இப்போது அவளின் விழிகளைத் தன் பார்வை கொண்டு சுட்டெரிப்பதைப் போன்று நேராகப் பார்த்தபடி, “நீ ஹாஸ்பிடல்ல கண்ணு முழிச்சதும் உன்னைப் பார்க்க வந்தப்போ, ஏன் என்னை அவாயிட் பண்ண?” என்று வினவினான்.
தன்னைக் கண்டு கொண்டு விட்டானே என்ற பதற்றம் அவளின் மேனியில் மெல்லிய நடுக்கத்தைப் படரவிட, விடை சொல்லத் தெரியாமல், மலங்க மலங்க விழித்தாள் யாழ்மொழி.
அவளின் இரு தோள்களையும் பற்றி குலுக்கிய இன்பசேகரனோ, “என்னையும் உன்னை மாதிரி நினைச்சுட்டேல?” என்று அடிக்குரலில் வினவினான்.
அந்தக் குரலில் தெரிந்த அந்நியத்தன்மை அவளை அசைத்துப் பார்க்க, “அப்படியெல்லாம் இல்ல இன்பா.” என்று தன்னெஞ்சரிய பொய் கூறினாள் அவள்.
“உன்னோட ஒவ்வொரு அசைவும் எனக்கு அத்துப்படி யாழ்… க்கும், யாழ்மொழி!” என்றவன் அங்கிருந்து விலகிச் செல்ல, அவன் உதடு உதிர்த்த பெயரே அவனின் நிலைப்பாட்டை எடுத்துச் சொல்ல, அதை ஏற்கப் பிடிக்காதவளாக திக்பிரம்மையுடன் அங்கேயே நின்று விட்டாள் யாழ்மொழி.
அவளின் நிலை கண்டு வருந்திய மென்மொழி அவளைச் சமாதானப்படுத்த அருகே செல்ல எத்தனிக்க, அவளைத் தடுத்த சுடரொளியோ, “இப்போ நீ போய் எதுவும் சொல்லாத மொழி. அவளா யோசிக்கட்டும். விடு… இன்பா இத்தனை நாள் உள்ளுக்குள்ளயே அனுபவிச்ச வேதனையை கொஞ்சமாச்சும் அவ தெரிஞ்சுக்கட்டும்.” என்றாள்.
*****
காவல் நிலையம் வந்த யுகேந்திரனோ, மருத்துவமனை முகப்பிலிருந்த சிசிடிவி காட்சிகளை வரவழைத்து அதிலிருந்து அவர்களைத் தேடி வந்த ரவுடிகளைப் பற்றிய தகவல்களை சேகரிக்க ஆரம்பித்தான்.
“செல்வா, இந்த ஃபூட்டேஜ்ல இருக்க கார் நம்பரை டிரேஸ் பண்ண முடியுதான்னு பாருங்க. அப்புறம் இதுல இருக்க எல்லாரோட டீடெயில்ஸும் வேணும். இது கான்ஃபிடென்ஷியல். சோ, பீ கேர்ஃபுல்.” என்று யுகேந்திரன் கூற, ‘இதென்ன புது கேஸ்னு தெரியலையே. தானா வர கேஸை விட, இவரா எடுத்துட்டு வர கேஸ்தான் அதிகமாகிட்டு வருது.’ என்று எப்போதும் போல மனதிற்குள் புலம்பினான் செல்வா.
சட்டென்று எதிரிலிருந்தவனை நிமிர்ந்து பார்த்த யுகேந்திரனோ, “என்ன கேஸ்னு விளக்கம் குடுத்தாதான் செக் பண்ணுவீங்களா செல்வா?” என்று கேட்க, மனதில் நினைத்தது அவனிற்கு எப்படி கேட்டது என்ற ரகசியம் அறியாதவனாக பதறி விழித்த செல்வா, “அப்படியெல்லாம் இல்ல சார்.” என்று திணறினான்.
செல்வாவிடம் பேசிக் கொண்டே இருந்த யுகேந்திரனின் பார்வை அந்தக் காட்சியின் ஓரத்திலிருந்த அடர் பச்சை வண்ண வாகனத்தில் விழுந்தது.
அதைக் கண்டவனிற்கு இன்பசேகரன் கூறியது நினைவிற்கு வர, அந்த வாகனத்தின் எண்ணைப் பார்க்க முயன்றான்.
சிசிடிவியிலிருந்து சற்று தொலைவில் நிறுத்தப்பட்டிருந்ததால், வாகன எண் சரிவரத் தெரியவில்லை.
அந்த வாகனத்தையே பார்த்துக் கொண்டிருந்தவனை இடைவெட்டிய செல்வா, “சார், அந்தச் சிலை கடத்தல் கேஸ்ல மாட்டினவங்களை எஸ்.ஐ அன்வர் விசாரிச்சுட்டு இருக்காரு. அவங்கதான் கடத்துனதா ஒப்புதல் வாக்குமூலம் குடுத்துட்டாங்க சார்.” என்றான்.
“ஓஹ் அப்படியா?” என்ற யுகேந்திரன், நேராக அந்த கைதிகள் இருந்த இடம் நோக்கிச் சென்றான்.
அங்கு ஏற்கனவே, அடித்துத் துவைக்கப்பட்ட நிலையில் வலியில் முனகிக் கொண்டிருந்தவர்களைக் கண்டவன், “அன்வர், ஆல் ஓகே?” என்று வினவ, “எஸ் சார்.” என்று விறைப்பாக சல்யூட் வைத்தான் அன்வர்.
“ஹ்ம்ம், எனக்கு கொஞ்சம் பெர்சனலா இவங்களை விசாரிக்கணும்.” என்று யுகேந்திரன் கூற, புருவம் சுருக்கி அவனைக் கண்டான் அன்வர்.
அதிலேயே அவன் மனதின் மொழியைப் படித்தவனாக, “என்னன்னு சொன்னாதான் விசாரிக்க விடுவீங்களா அன்வர்?” என்று யுகேந்திரன் வினவ, அதில் ஒருநொடி பதறி, “நோ சார்…” என்றவன், விரைந்து வெளியேறி விட்டான்.
வெளியே, “செல்வா, சாருக்கு என்னாச்சு? எப்பவும் விட இன்னைக்கு ரொம்ப ஷார்ப்பா தெரியுறாரே!” என்று அன்வர் வினவுவதும், “ஆமா, மனசுல நினைச்சதை சட்டுன்னு கண்டுபிடிச்சுட்டாரு. கையில அடிபட்டு ஹாஸ்பிட்டல் போயிட்டு வந்த மனுஷன் கொஞ்சமாச்சும் டையர்ட்டா இருக்காரா…” என்று செல்வா கூறுவதும் கேட்கவே செய்தது.
செல்வா கூறிய பின்னரே, அடிபட்டது நினைவிற்கு வர, கட்டை பிரித்து பார்த்தவனின் விழிகள் மின்ன, இதழ்களின் ஓரம் அரிதாக வெளிப்படும் புன்னகை கீற்றாக மின்னி மறைந்தது.
சட்டென்று அவனின் போலீஸ் மூளை விழித்துக் கொள்ள, ‘எங்க வச்சு என்ன யோசிச்சுட்டு இருக்கேன்?’ என்று தன்னைத்தானே நிந்தித்துக் கொண்டவன், எதிரே புதிராக அவனையே பார்த்துக் கொண்டிருந்த நால்வரின் மருண்ட பார்வையை, கூர்விழிகளுடன் சந்தித்தான்.
தன் காற்சட்டை பையில் பத்திரமாக வைக்கப்பட்டிருந்த நீல நிறக்கல்லை எடுத்து அவர்கள் முன் காட்டியவன், “இதை எங்க இருந்து திருடுனீங்க?” என்று வினவினான்.
அவர்கள் நால்வரும் திருட்டு முழியுடன் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ள, “உண்மையை சொன்னா இப்படியே கோர்ட்டுக்கு போவீங்க. இல்லன்னா, தேவையில்லாம பாத்ரூம்ல வழுக்கி விழுந்து கையும் காலும் உடைஞ்சு போக வேண்டியதிருக்கும்.” என்று மோவாயை தடவியபடி யுகேந்திரன் கூற, ஏற்கனவே வலியைத் தாங்க முடியாமல் தள்ளாடியவர்கள், அலறியபடி, “சார் சார்… நாங்க சொல்லிடுறோம்.” என்றனர்.
அதில் ஒருவன், “சார், இந்த கல்லு ****ல இருந்த பாழடஞ்ச கோவில்ல சிலை கடத்தும் போது கிடைச்சது.” என்று எச்சிலை விழுங்கியபடி கூறினான்.
எந்த சக்தியும் இல்லாமல் இருந்தாலே, அவன் கூறுவது பொய்யென்று கண்டு கொள்பவனிற்கு, இப்போது அவனைக் கண்டு கொள்வது சிரமமாகவா இருக்கப் போகிறது?
“எனக்கு பொறுமை ரொம்பவே கம்மி. இன்னொரு முறை கேள்வி கேட்டுட்டு இருக்க மாட்டேன்.” என்று யுகேந்திரன் பல்லைக் கடித்துக் கொண்டு கூற, அக்கூட்டத்திலிருந்த இன்னொருவன் தலையைச் சொறிந்து கொண்டே, “சார்… அதுவந்து… நாங்க ஒரு காரை திருடுனோம். அதுலதான் இந்த கல்லு கிடைச்சது.” என்றான்.
அதைச் சரிபார்க்க வேண்டி, கூறியவனின் மனதைப் படிக்க முயன்றான் யுகேந்திரன்.
இம்முறை, எதிரிலிருந்தவனின் நினைவுகள் தெளிவில்லாத காட்சியாக யுகேந்திரனிற்கு தெரிந்தது.
அக்காட்சியில், அவன் கூறியது போல நால்வரும் வாகனத்தைத் திருடுவதும், அதன் இருக்கைக்கு அருகிலிருந்த நீல நிறக்கல்லை தற்செயலாக எடுப்பதும் தெரிந்தது.
கூடுதலாக, அந்த வாகனம் மஹிந்திரா தார் என்பதும் தெரிந்தது!
தொடரும்…

