
ருத்ரன் தாலியை வெளியே எடுத்துப் போட்டு, “அப்போ இதுக்குப் பெயர் என்னடி?” என்று கேட்டவுடன் அவனை அடிபட்ட பார்வை பார்த்தவள் எதுவும் பேசாமல் அமைதியாகப் படுத்து விட,
ருத்ரனும் அவளை முறைத்து விட்டுத் தான் பேசியது அதிகப்படியான வார்த்தை என்று எண்ணியவன் அமைதியாகப் படுத்து விட்டான்.
கொஞ்ச நேரம் அவளை எட்டி எட்டிப் பார்த்தான்.
அவள் அழுகையுடனே படுத்துக் கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு, “ஒத்துக்கிறேன்டி. என்னதான் என்கூட சின்ன வயசுல இருந்து ஒன்னு மண்ணா வளர்ந்தாலும், உன்னோட காதலை நான் புரிஞ்சுக்கல தான். நீ என்கிட்ட வந்து அவ தப்பானவனு சொல்லும்போது, உன்னோட காதலுக்காகப் பேசுறேன்னு நெனச்சேன். உன்னைப் புரிஞ்சுக்காம விட்டது என்னோட தப்பு தான். அதுக்காக என்னை இப்படிக் கொல்லாத தமிழ், கஷ்டமா இருக்கு.
நீ இப்படி என்கிட்ட ஃபர்ஸ்ட்ல இருந்து பேசிப் பழகி இருந்தா பெருசா தெரிஞ்சு இருக்காதுடி. நீ இவ்ளோ நாள் பேசினதுக்கும், இப்போ என்கிட்ட நடந்துக்குறதுக்கும் இருக்க வித்தியாசம் வலிக்குது தமிழ். எனக்கு இதுக்கு மேல எப்படி உனக்குச் சொல்லிப் புரிய வைக்கிறதுன்னு தெரியல. நான் பண்ணது தப்புதான். ஆனா, அதுக்காக இப்படியே என்கிட்ட வெறுப்போடு பேசுவியா?
“இப்படியே என்னைச் சாகடிக்கலாம்னு முடிவு பண்ணி இருக்கியா?” என்று கேட்டவுடன் அவனைத் திரும்பிப் பார்த்து முறைத்தவள் எதுவும் பேசாமல் அமைதியாகப் படுத்து விட்டாள்.
மனதிற்குள், ‘எனக்கு மட்டும் அவசியமா மாமா? உன்னை எந்த அளவுக்கு நேசித்தேனோ, அதே மனசுல இப்போ உன் மேல வெறுப்பு தான் கூடிட்டே போகுது. அத்தனை பேர் முன்னிலையில் எப்படியும் ஒத்துப்பா என்ற நம்பிக்கையில தான வந்து என்னைக் கட்டிக்கிறயானு வந்து நிக்கிற. அதே இடத்தில் வேற ஒரு பொண்ணு இருந்து இருந்தா நீ கேட்டிருப்பியா?’ என்று உள்ளுக்குள் எண்ணினாள்.
நாள்கள் வேகமாகச் சென்றது.
தமிழ் எப்பொழுது பேசினாலும் வெறுப்போடு பேசிக்கொண்டே இருந்தாள்.
இங்கு ருத்ரனுக்கு தான் ரொம்பவே வருத்தமாக இருந்தது.
தான் செய்தது தவறாக இருந்தாலும் தமிழ் இப்படி எல்லாம் தன்னிடம் நடந்து கொள்வாள் என்று எண்ணவில்லை.
அப்படி இருக்கும் வேளையில் ஒரு நாள் அவன் வேலையை விட்டு வந்து கொண்டிருக்கும் பொழுது, அன்று தமிழுக்கு ஸ்கூலில் ஏதோ முக்கியமான வேலை இருக்கிறது என்று சொன்ன காரணத்தினால் அகிலா மட்டும் தனியாக வந்து கொண்டு இருந்தாள்.
அப்போது அகிலா மரத்துக்கு அடியில் ஒருவனுடன் நின்று பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்தான்.
‘அகிலாகிட்ட ஏதாச்சும் வம்பு பண்றானோ, தனியா மட்டும் வந்துட்டு இருக்கா. தமிழக் கூடக் காணோம்’ என்று எண்ணி அகிலாவின் அருகில் வர,
“என்ன இங்க நின்னுட்டு இருக்க?” என்று கேட்டவுடன் ஒரு சில நொடி திருதிருவென முழித்த அகிலா அமைதியாக நிற்க,
“உன்ன தான் கேட்கிறேன்?”
“ஒன்னும் இல்ல மாமா, நீ போ நான் பார்த்துக்கிறேன்.”
“அகிலா, ஏதாச்சும் பிரச்சனையா?”என்று கேட்க, அகிலா எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க,
அந்தப் பையன் தான், “சார் நீங்க?” என்று கேட்க,
அவனை ஒரு சில நொடி உற்றுப் பார்த்து முறைத்துக் கொண்டே, “நான் அகிலாவோட மாமா… நீங்க யாருன்னு தெரிஞ்சுக்கலாமா? இங்க என்ன பிரச்சனை?” என்று கேட்டான்.
“பிரச்சனை ஏதும் இல்ல சார். நான் அகிலா கூட தான் ஸ்கூல்ல ஒர்க் பண்றேன். என்னோட பெயர் மகிழன்.”
“சரி, அதுக்கு என்ன இப்போ?”
சிரிப்புடனே ருத்ரனைப் பார்த்தவன், “நான் உங்க வீட்டுப் பொண்ணுகிட்ட எந்த வம்பும் பண்ணல சார்” என்றான்.
“சரி, ஆனால் இங்கே அகிலா உங்ககிட்ட வாதாடிட்டு இருந்த மாதிரி தானே இருந்துச்சு அதான்…”
“சொன்னாலும் சொல்லாட்டியும் அது தான் சார் உண்மை. அதான் நானும் சொல்ல வரேன், எப்படி ஆச்சும் யார்கிட்டயாவது பேசணும்னு நினைச்சேன். எனக்கு இதைப்பத்தித் தமிழ் கிட்டப் பேசக் கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சு. இப்போ உங்களைப் பார்த்தது ரொம்ப சந்தோஷம்” என்றான் மகி.
அகிலாவைத் திரும்பிப் பார்த்தான் ருத்ரன்.
அகிலாவின் கண்கள் அலைபாய்வதை உணர்ந்தவன், ‘இவதான் ஏதோ வேலை பார்த்து வச்சிருக்கா’ என்று மனதிற்குள் எண்ணி விட்டு, “சரி சொல்லுங்க சார்” என்றான்.
“நீங்க இந்த சார் எல்லாம் போட்டுக் கூப்பிட வேணாம். என்னோட பேரு மகிழன். என்னைப் பேர் சொல்லிக் கூப்பிடுங்க.”
“சரி நீங்க சொல்லுங்க மகி” என்றவுடன்,
“சார், எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி 3 வயதில் ஒரு பையன் இருக்கிறான்.”
இப்பொழுது அகிலாவைத் திரும்பி ருத்ரன் முறைக்க,
“சார், நான் முழுசா சொல்லி முடிச்சுடுறேன். அதுக்கப்புறம் நீங்க ஒரு முடிவுக்கு வாங்க.”
“சரி சொல்லுங்க மகி” என்றவுடன்,
“என்னுடைய வைஃப் குழந்தை பிறந்த உடனே டெலிவரில இறந்துட்டாங்க. எனக்கு அரேஞ்ச் மேரேஜ் தான். இப்போது என் கூட என்னோட அம்மா மட்டும் தான் இருக்காங்க” என்று விட்டு மகி அமைதியான உடன்,
“உங்களுக்கு அகிலாவைப் புடிச்சிருக்கா?” என்று கேட்டான்.
ருத்ரனைப் பார்த்து லேசாக முன்முறுவல் பூத்த மகி, “எனக்கு அவங்களப் புடிச்சிருக்கா இல்லையா என்பது விசியம் இல்ல சார். அவங்களுக்கு தான் என்னைப் புடிச்சிருக்கு. எனக்கு மூணு வயசுல ஒரு குழந்தை இருக்கு, நான் ஒரு விடோன்னு சொல்லியும் கிட்டத்தட்ட 2 வருஷமா என்னைத் துரத்தி கிட்டு இருக்காங்க. நான் அவங்ககிட்ட முதல்ல மறைமுகமாகவும் சொல்லி, இப்ப வெளிப்படையாகவும் சொல்லிட்டு இருக்கேன்.
ஆனா, அவங்க காதிலே வாங்க மாட்றாங்க. நீங்க வேற ஒருத்தவங்களோட புருஷனா இருந்து, உங்க பொண்டாட்டி உயிரோட இருந்தா, நான் ஏன் உங்களைத் துரத்தி வரப் போறேன்னு கேக்குறாங்க. இதுக்கு என்கிட்ட உண்மையாவே பதில் இல்லை. ஏற்கனவே வாழ்க்கையை இழந்துட்டு நிற்கிற என்ன ஏன் சார் விரும்பனும்?” என்று கேட்க,
அகிலாவை அமைதியாக தான் ருத்ரன் பார்த்தான்.
“சரி சார், நான் அகிலாகிட்டப் பேசுறேன் .அவ உங்கள ரொம்பத் தொந்தரவு பண்ணி இருந்தா சாரி” என்றான்.
“ரொம்பத் தொந்தரவு எல்லாம் பண்ணல சார். இருந்தாலும், அவங்க வாழ்க்கைனு ஒன்னு இருக்குல்ல அதுக்காக தான். எனக்கு இதைத் தமிழ்கிட்டப் பேச ரொம்ப நேரம் ஆகாது.”
“அப்போ தமிழுக்குத் தெரியாதா?” என்று கேட்டான்.
“இல்ல சார், தமிழுக்குத் தெரியாது. இதுவரைக்கும் நான் தமிழ்கிட்ட இதைப் பத்திச் சொல்லல. எனக்குத் தெரிஞ்சு தமிழ்கிட்ட இந்த நிமிஷம் வரைக்கும் அகிலாவும் சொல்லலனு நினைக்கிறேன்” என்றவுடன் அகிலாவை முறைத்துக் கொண்டு நின்றான்.
“சரி எதா இருந்தாலும் வீட்ல போய் பேசிக்கோங்க. இது பொது இடம், நான்கு பேர் வந்து போற இடம். தப்பா எடுத்துக்காதீங்க” என்று விட்டு வேறு எதுவும் பேசாமல் மகி சென்று விட,
அடுத்த நொடி ருத்ரனின் 5 விரல்களும் அகிலாவின் கன்னத்தில் பதிந்திருந்தது.
“என்ன அகி, நெனச்சிட்டு இருக்க. உன்ன மாமாவும் அத்தையும் இப்படித்தான் வளர்த்தாங்களா? அது மட்டும் இல்லாம உன் அண்ணனைப் பத்தி யோசிச்சியா? உன் மேல அவ்ளோ நம்பிக்கை வச்சிருக்கான். அவனுக்குத் தெரியுமா இந்த விஷயம்?” என்று கேட்க,
இல்லை என்பது போல் மண்டையை ஆட்டினாள்.
“தமிழுக்குக் கூடத் தெரியல அப்படித்தானே?” என்றவுடன் வேகமாக நிமிர்ந்து “நான் சொல்லல தான். ஆனா, அவளுக்குத் தெரியும். மாமா, ப்ளீஸ் எனக்கு அவரைப் புடிச்சிருக்கு.”
“அகி உன்கிட்ட மரியாதையா இந்த நிமிஷம் வரைக்கும் அவர் மனசுல இருக்கறதைச் சொல்லி இருக்காரு. அப்புறமும் நீ அவரைத் தொந்தரவு பண்ணிட்டு இருக்க, இது சரியா?” என்றான்.
“மாமா, நான் அவரைத் தொந்தரவு பண்ணல, மாமா.”
“என்ன தொந்தரவு பண்ணல, அவருக்குக் கல்யாணம் ஆகி ஒரு குழந்தை இருக்குன்னு சொல்லி அவர் விடோனு சொல்லி இருக்காரு. அதுக்கப்புறம் அவர் மனசு புரிஞ்சுக்காம பின்னாடி போயிட்டு இருக்க.”
“மாமா ப்ளீஸ், அவர் பேசினது இவ்ளோ நேரம் காது கொடுத்துக் கேட்ட இல்ல, இப்போ கொஞ்சம் நான் பேசுவதையும் காது கொடுத்துக் கேளு” என்ற உடன் கைகட்டிக் கொண்டு அகிலாவைப் பார்க்க,
“எனக்கு அவரப் புடிச்சிருக்கு மாமா” என்றவுடன் முறைத்தபடி பார்த்தான்.
“அவருக்கும் என்னைப் பிடிக்கும் மாமா.”
“இப்போதான் சொன்னாரு, உன் முன்னாடி தான…”
“ப்ளீஸ் மாமா, என்னப் பேச விடு. அவருக்கு என்னைப் பிடிக்கும். இப்பயும் அவரு என்னோட நல்லதுக்காக, என் வாழ்க்கை கெட்டறக்கூடாது என்ற ஒரே காரணத்திற்காக மட்டும் தான் என்னை வேண்டாம்னு சொல்றாரு. அவரு ஆரம்பத்துல என்ன வேணாம்னு சொன்னது என்னவோ உண்மைதான். போகப் போக அவருக்கு என்னைப் பிடிக்க ஆரம்பிச்சுருச்சு. இப்போ இந்த நிமிஷம் வரைக்கும் கூட நான் அவருக்கு ரெண்டாவது பொண்டாட்டியா வந்துரக்கூடாது என்ற ஒரே காரணத்துக்காகவும், ஊர்ல இருக்குறவங்க எதுவும் சொல்லிடக் கூடாதுன்னு மட்டும் தான் யோசிக்கிறாரே தவிர, அவருக்கு என்னைப் பிடிக்காமல் இல்லை. இதுக்கு மேல என்கிட்டச் சொல்ல எதுவும் இல்ல. இதுவரைக்கும் உன் பொண்டாட்டி அமைதியா இருக்கான்னா? நீயே யோசிக்கோ.
என்கிட்ட இந்த நிமிஷம் வரைக்கும் அவ இதப்பத்திக் கேட்கல. நானும் இதுவரை சொல்லல தான், ஒத்துக்கிறேன். ஆனா நான் அவரை விரும்புறது அவளுக்குத் தெரியும்” என்று விட்டு அகிலா வேறு எதுவும் பேசாமல் வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பி விட,
ருத்ரன் தான் ஒரு சில நொடி ஒன்றும் புரியாமல் நின்றான்.
இறுதியில் அவள் சொன்னதை யோசித்துப் பார்த்துவிட்டுத் ‘தமிழுக்குத் தெரிந்திருந்தால், அதுவும் அகிலா அவருக்கு விருப்பம் இல்லாமல் தொந்தரவு செய்கிறாள் என்று உணர்ந்திருந்தால், இந்நேரம் தமிழே இதைச் சமாளித்திருப்பாளே. அவளே அமைதியாக இருக்கிறாள் என்றால்…’ என்று எண்ணியவன் முதலில் இதைப் பற்றித் தமிழுடன் பேச வேண்டும் என்று எண்ணிக்கொண்டு வீட்டிற்குச் சென்றான்.
அவன் போகும்போது அவள் வீட்டில் இல்லை.
அவன் அம்மாவிடம் கேட்கப் போகும்போதே “வர்றதுக்கு லேட் ஆகும்னு சொல்லிட்டுத் தான்டா போனா. ஏன்? உன்கிட்ட போன் இல்ல, அவளுக்கு போன் பண்ணிக் கேட்டா குறைஞ்சு போயிடுவியோ?” என்று விட்டு அமைதி ஆகிவிட,
அதன் பிறகு அவன் எதுவும் பேசவில்லை.
‘தமிழுக்கு போன் செய்து பார்க்கலாமா? வேண்டாமா?’ என்று யோசித்துக் கொண்டே நடந்து கொண்டிருந்தான்.
சிறிது நேரம் கழித்து வெளியில் இருக்கும் கயிற்றுக் கட்டிலில் உட்கார்ந்து கொண்டு யோசித்தான்.
தமிழ் போனுக்கு போன் செய்ய, அது தன் அருகில் கேட்பதை உணர்ந்தவன் திரும்பிப் பார்த்தான். அப்பொழுதுதான் தங்கள் வீட்டின் முன்பு வண்டியை நிறுத்திவிட்டு நடந்து வந்து கொண்டிருந்தாள்.
போனை எடுத்துப் பார்த்த தமிழ், ருத்ரனிடமிருந்து ஃபோன் வந்திருப்பதைப் பார்த்துவிட்டு போனை சைலண்டில் போட்டுவிட்டு, “என்ன மாமா, விஷயம்?” என்று கேட்டுக் கொண்டு அருகில் வர,
“ஒன்னும் இல்ல, நீ பிரஷ் ஆகிட்டுவா பேசலாம்” என்றான்.
“சரி…” என்று அவனை ஒரு நிமிடம் நின்று பார்த்தாள்.
‘ஏதோ முக்கியமான விஷயமாக இருக்கப் போய் தான் தனக்கு போன் செய்திருக்கிறார்’ என்று எண்ணி விட்டு வேறு எதுவும் பேசாமல் வீட்டிற்குள் சென்றுவிட்டாள்.
அப்போது பாக்கியம் தான் சிரித்துக் கொண்டே, “என்னமா தமிழ், உன் மாமனுக்கு இன்னைக்கு என்னவாம்… குட்டி போட்ட பூனை மாதிரி உன்னைத் தேடிட்டு இருக்கான். என் மகன் திருந்திட்டானா? என்ன?” என்று கேட்டவுடன் தன் அத்தை கேட்ட விதத்தில் சிரித்து விட்டாள்.
ருத்ரன் முறைப்புடனே தன் தாயைப் பார்த்துக்கொண்டு வீட்டிற்குள் வந்தான்.

