
சபதம்-18
அரண் காத்தலும் காத்தலும் கண்ணுற்ற
திறன் காத்தலும் காப்பு.
பொருள்:
ஒரு நாட்டை அல்லது அரசை காப்பது என்பது
அரண்களை (கோட்டை, பாதுகாப்பு அமைப்புகள்) காத்தல் மட்டுமல்ல;
எதிரியின் வலிமையையும் நிலைமையையும் கவனித்து அறிந்து,
அதற்கேற்ற திறமையான திட்டங்களால் காப்பதே உண்மையான பாதுகாப்பாகும்.
இயந்திரங்களின் மெல்லிய ஓசை காற்றில் கலந்து வர, அந்த சிறிய அறையில் மருத்துவ உபகரணங்களுக்கு இடையில் படுத்திருந்த கலீல் விழிப்புக்கும் மயக்கத்துக்கும் இடையே தத்தளித்து கொண்டிருந்தான்.
அவனின் மூச்சு சீரற்று வர, ஒரு மெதுவான ‘பீப்’ ஒலி அந்த அறை எங்கும் நிறைந்திருந்தது. கலிலின் விரல்கள் நடுங்க, கண்களை திறக்க முயற்சித்தவனால் அது முடியாமல் போக, மெல்ல மெல்ல சுயநினைவை இழந்தவன் மீண்டும் தனது கடந்து வந்த பாதைக்குள் அடி எடுத்து வைத்தான்.
ரஷீத் மற்றும் அவனது தந்தையின் மரணத்திற்குப் பிறகு ரன்வீருக்கு பகலும் இரவும் பனி,புகை, இரத்தம், நெருப்பு என்று அனைத்தும் அவனை பதட்டத்துக்குள் தள்ளி பயத்தை மேம்படுத்தும் (panic அட்டாக்).
ஒவ்வொருமுறை அதிர்ந்தும் பயந்தும் கத்தும் சிறுவன் ரன்வீரை ஆசாத் கான் அணைத்துக் கொண்டு தேற்றுவார். அவரின் துக்கத்தை அந்த சின்னச்சிறு குழந்தையின் தவிப்பில் மறைத்து அவனுக்காக வாழ பழகி கொண்டார்.
என்ன முயன்றும் ரன்வீரை அவன் மனக்காயத்தில் இருந்து வெளியே கொண்டுவர முடியவில்லை. இரண்டு வருடம் நிலையான தங்கும் வசதி இல்லாமல். காட்டுக்குள்ளே வாழ்ந்துவந்தனர். ஒவ்வொரு முறையும் ஆசாத்தை தேடி வரும் ஆள்களின் கண்களின் மண்ணை தூவிவிட்டு ரன்வீருடன் வேறு இடம் தேடி ஓடிக் கொண்டே இருந்தார் ஆசாத்.
அவர்களை பின்தொடரும் துப்பாக்கி சத்தத்தில் உடல் அதிர துடிக்கும் ரன்வீரை அதில் இருந்து மீட்க, “ஒன்றும் இல்லை பேட்டா…. என்னை பாரு.. உன் வாப்பாவை பாரு மகனே.. உன்னக்காக மட்டும் உயிர் சுமந்து கொண்டு திரியும் எனக்காக மீண்டு வா மகனே” என்றவரின் வேண்டுதல்கள் ஒருவாறு அவரிடம் அவனை திரும்ப கொண்டு வந்துவிடும்.
ஆனால் எத்தனை நாளைக்கு இது சாத்தியாம். ரன்வீரை பாதுகாக்க வேண்டும் . அவன் உடலையும் மனதையும் குணப்படுத்த வேண்டும். இன்னும் அவன் பள்ளி படிப்பு , அவன் வம்சத்தின் வரலாறு என்று அனைத்தையும் கற்றுக் கொடுக்க வேண்டிய பொறுப்பு தனக்கு உள்ளதை உணர்ந்த ஆசாத்தின் ஒரே நம்பிக்கை உதய்ப்பூர் அரசர் மகாராஜா சமர் சிங் மற்றும் அவரது மனைவி மஹாராணி மீரா பாய் பரிக்கர்(அதிவார்) தாய் வழி பெயரை பாதுகாப்புக்காக ஏற்றுக்கொண்டவர்.
இரண்டு ஆண்டு தொடர் ஓட்டமும், சண்டையும் ஆசாத்தை வலுவிலக்க வைத்தது. மலைகள்,
குளிர் காற்று,மறைந்த குகைகள், மௌனமான இரவுகள் என்றிருந்த ஆசாத் மற்றும் கலீல் கிராமத்திலிருந்து கிராமத்துக்கும், தங்களை துரத்தும் நிழல்களை எப்போதும் கவனித்தபடி பயணித்தனர்..
கலீல் மெல்ல மாறினான், அவனின் வயதை விட பெரிய சுமைகளை தனது உள்ளத்தில் சுமந்தவனது கண்கள் கடினமானது.
ஒரு மாலை, இந்தியா–பாகிஸ்தான் எல்லை அருகே, ஆசாத் மற்றும் கலீல் கச்வாஹா ராஜ்புத் குல தளபதி மற்றும் அவரது குடும்பத்தைச் சந்தித்தனர்.
ஆசாத்தை கண்ட தளபதிக்கு பெருத்த அதிர்ச்சி. ராஜ்புத் குலத்தில் இப்பொது சில காலங்களாக பரவி வரும் புரளி ஆசாத் உயிரோடு இல்லை என்பது தான்.
ஆசாத்தை கண்டவர் அவருக்கு வணக்கம் தெரிவித்து தனது மகிழ்வை தெரியப்படுத்த, இருவரும் சில நேரம் தனித்து உரையாடி ராஜ்புத் அரசியலை பற்றி தங்களுக்கு தெரிந்தவற்றை பரிமாறி கொண்டனர்.
ரகசிய பேச்சுக்கள் முடிந்து அறையை விட்டு வெளியே வந்த தளபதி, தன் மகளின் வற்புறுத்தலுக்கு செவிசாய்க்காமல், சிலையாய் அமர்ந்திருந்த கலீலின் முன் மண்டியிட்டு, “பேட்டா … உன் தந்தை ஒரு சிங்கம். சிறந்த அரசர். அவரின் ராணா வம்ச இரத்தம் உன்னுள் ஓடுகிறது. காலங்கள் மாறும். காற்று உன் பக்கம் திரும்பும். ராஜ்புத் குலம் அன்று உன் பின் நிற்கும். கலங்காதே பேட்டா… ஆசாத் கான் இருக்கும் போது காளன் கூட உன்னை நெருங்கமாட்டான்” என்ற வார்த்தைகளை கேட்ட கலீல், பல மாதங்களுக்கு பிறகு சிறிய புன்னகை உதிர்த்தான்.
ஆனால் அந்த நிமிடம் நீடிக்கவில்லை. திடீர் குண்டு வெடிப்பு, எங்கும் கூச்சலும் துப்பாக்கிச் சத்தமும் கேட்க துடங்கியது. தீவிரவாதிகள் எல்லை முகாமை சூழ்ந்த தகவல் அவர்களின் காதுகளில் விழுந்த அதே நேரம் தளபதியின் மனைவி ஒரு துப்பாக்கி குண்டால் வீழ்த்தப் பட்டார்.
தளபதி தனது மகள் அதிராவை காக்க முயன்று ஆசாத் மற்றும் ரன்வீருடன் அங்கிருந்து வெளியேற முயலும் சமயம் தொண்டை குழியில் சுடப்பட்டு உயிரிழந்தார்.
அதில் அதிர்ந்த குழந்தைகள் அதிரா மற்றும் ரன்வீரை ஒரு பதுங்கு குழிக்குள் மறைத்துவிட்டு வெளியேறிய ஆசாத் உதவி வரும் வரை புயல்போல் போரிட்டார்.
இந்திய ராணுவம் உள்ளே நுழைந்த நொடியில் சிங்கத்தை கண்ட சிறு நரிகலாய் சிதறி ஓடிய தீவிர வாதிகளிடம், “அல்லாஹ் பெயரால் உயிரை கொள்ளும் இந்த ஈன செயலை செய்யும் உங்களை போன்ற முசல்மான்கள் இந்த பூமிக்கு சாபக்கேடு” என்றவரை நோக்கி வந்த தீவிரவாதியை இந்திய ராணுவம் வளைத்து பிடித்தது.
பதுங்கு குழியில் இருந்த ரன்வீர் துப்பாக்கி சத்தத்தில் மீண்டும் சுயநினைவை இழக்க துடங்கும் சமயம் அவன் கைகளில் ஈரப்பத்ததோடு நடுங்கிய கைகளை கோர்த்த அதிரா, “பய்யா.. முஜே பஹுத் டர் லக் ரஹா ஹை. க்யா மா அவுர் பாபா பி வகான் சோ கயா ஹேன்?… ஏஹ் கைசி அவாஸ் ஹை …. முஜே மா ஜாஹியே…க்யா தும் முஜே மா கே பாஸ் லே ஜாவோகே?(பையா..எனக்கு மிகவும் பயமாக உள்ளது. எதற்காக அம்மாவும் அப்பாவும் அங்கே படுத்து கொண்டார்கள்?… அது என்ன சத்தம்..பயமாக இருக்கிறது… எனக்கு அம்மா வேண்டும்…நீ என்னை அவர்களிடம் அழைத்து செல்கிறாயா?)” என்று மழலைக் குரல் அவன் பயத்தில் இருந்து நிஜத்துக்கு அவனை மீட்டு வந்தது.
அன்று அதிரா ரன்வீரின் கைகளில் அவளின் பாதுகாப்பை ஒப்படைத்து, அவனை அவனது பயத்தில் இருந்து மீட்டு கொண்டு வந்தாள். இதனால் வரை அவனை பாதுகாக்கவே பல உயிர்கள் பறிபோயின, இன்னும் ஆசாத் அவனை பாதுகாக்கவே போராடி கொண்டிருக்கிறார் .
ஆனால் அதிராவின் கண்கள் முதல் முறை அவனை நம்பிக்கையுடன் ஏறிட்டு, ‘என்னை பாதுகாக்க போராட மாட்டாயா?’ என்று கேட்பது போல் தோன்ற அதையே தனது வாழ்வின் லட்சியமாக மாற்றி கொண்டான் ரன்வீர் என்னு கலீல் ஹாசிம்.
அந்த பதுங்கு குழியில் அதிராவாள் உயிர்ப்பிக்க பட்டவன் தான் இன்றைய கலீல் ஹாசிம். ரன்வீர் சிங் ராணா அனைவராலும் பாதுகாக்க பட்டவன். கலீல் ஹாசிம் அனைவரையும் பாதுகாக்க, போராட உயிர்ப்பித்தவன்.
அந்த நேரம் பதுங்கு குழியில் இருந்த இரு குழந்தைகளையும் பிடித்த ஆசாத், “என்னைப் பிடித்துக் கொள்ளுங்கள் …விட்டு விடாதீர்கள்” என்றபடி இருவருடன் புகை, தீ, குழப்பமிகுந்த இடத்தில் இருந்து ஓடினான். இரு வம்சத்தின் கடைசி வாரிசுகளைத் தாங்கிக் கொண்டு.
தன்னுடன் இரு குழந்தைகளை அழைத்து கொண்டு நடு இரவில்,காஷ்மீர் காட்டின் நடுவே ஒரு சிறிய குடிசைக்குள் நுழைந்த ஆசாத்தின் எண்ணம் ஒன்று தான். எப்படியாவது இந்தியாவை விட்டு செல்லும் முடிவு எடுத்துக் கொண்டான்.
அந்த குளிர் இரவில் நெருப்பை மூட்டி அதன் அருகில் பிள்ளைகளை உறங்க வைத்தவன் முகம் சோர்வால் சுருங்கியிருந்தது.
கண்களில் துயரம், தோல்வி, பயம். இதற்கு மேல் முடியாது என்பதுபோல், “காஷ்மீர் இனி பாதுகாப்பானதல்ல……”என்றவர் காகிதத்தை எடுத்து மகாராஜா சமர் சிங்க்கை ரகசியமாக சந்திக்க கடிதம் எழுதினார்.
அதன்படி ஒரு ரகசிய இடத்தில், மஹாராஜா சமர் சிங்கைச் சந்தித்தவர், “மஹாராஜா…
உங்கள் உதவி எனக்கு வேண்டும். இவர்களை வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்ல முடிவெடுத்திருக்கிறேன். இங்கே இருந்தால்… அவர்கள் உயிர் பிழைக்க மாட்டார்கள்” என்ற உண்மையை உணர்ந்த அரசர், ஆசாத்தின் தோளில் கை வைத்தபடி, “உங்கள் நிலை எனக்கு புரிகிறது ஆசாத். உங்கள் பயணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் நான் பார்த்து கொள்கிறேன். ராஜபுத்திர குலம் உங்களுக்கு கடன் பட்டுள்ளது ஆசாத். அதிவார் வம்சமும் ராணா குலமும் இந்த உலகம் இருக்கும் வரை உங்கள் கடமையை நினைவு கொள்ளும். குழந்தைகளை பார்த்து கொள்ளுங்கள். எந்த உதவி என்றாலும் கேட்க தயங்காதீர்கள்” என்றவர் கண்களும் கலங்கி போனது.
அதன் பின் நடந்த அனைத்திலும் பழைய தெளிவு மீண்டிருந்தது ஆசாத் கானுக்கு. அரசரிடம் ராஜ்புத் மன்றத்தை அவசரமாக கூட்ட செய்தார்.
ராஜ்புத் மூத்தோர்களால் நிரம்பிய மண்டபத்தின் முன் நின்ற ஆசாத் கான், முகம் வெளுத்து, குரலில் அமைதியுடன், “எல்லை அருகே நடந்த தாக்குதலில்…ராணா வம்சமும்…கச்வாஹா குல ராஜ்புத் தளபதியின் குடும்பமும்…உயிரிழந்தனர்” என்றதும் அதிர்ந்த சபை தங்களுக்குள் மெல்ல கிசுகிசுத்துக் கொண்டனர்.
அதனை உணர்ந்த ஆசாத் தலை குனிந்தபடி, “என் மகனையும்…இரண்டு ஆண்டுகளுக்கு முன்…இதேபோன்ற தாக்குதலில் இழந்தேன்” என்றவரின் வாயால் கேட்ட செய்தியில் மொத்த
மண்டபம் அமைதியாகியது.
மேலும் தொடர்ந்த ஆசாத், “என் குல முன்னோர் அளித்த சத்தியத்தை என்னால் காப்பாற்ற முடியவில்லை. நான் சோர்ந்துவிட்டேன். இதற்கு மேல் இங்கு எனக்கு கடமைகள் எதுவும் இல்லை. அதனால் ஹூன் வம்சத்தின் கடைசி வாரிசு, ராஜபுத்தர்களின் காவலன் ஆசாத் கான் எனும் நான் ராஜ்புத் அரசியலிலிருந்து விலகுகிறேன்” என்றவரின் விழியோரம் நின்றிருந்த கண்ணீர் கன்னத்தில் வழிய, அதைக் கண்ட மூத்தோர் துக்கத்துடன் தலை அசைத்தனர்.
ராஜ்புத்தின் மாபெரும் உண்மையை மறைத்த ஆசாத் , தான் காப்பாற்றிய இரண்டு குழந்தைகளுடன் தாய் நாட்டை விட்டு வெளியேறினார். இந்த உண்மை அறிந்தவர் மகாராஜா சமர் சிங் மட்டுமே.
இது அனைத்தும் அமைச்சர் ராகவ் பிரதாப் மூலம் மாலிக்குக்கு உடனே தெரிவிக்கப்பட்டது.
அந்த இருண்ட அறைக்குள் வந்த ராகவ், அங்கு இருளுக்குள் நின்றிருந்த உருவத்திடம், “மாலிக்… உங்களுக்கு ஒரு நற்செய்தி. ஆசாத் கான் ராஜ்புத் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இரண்டு வருடம் முன் நாம் கொன்ற அந்த சிறுவன், ஆசாத்தின் மகன் என்று சபையில் தெரிவித்துள்ளார். அது மட்டும் அல்ல எல்லையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் கச்சவாஹா வம்ச தளபதி குடும்பம் முடிந்ததாக வந்த தகவல் உண்மை என்றும், அதோடு அந்த தாக்குதலில் ராணா வம்ச வாரிசும் உயிர் இழந்து விட்டதாக சொன்ன ஆசாத், தனது முன்னோர் வாக்கை காக்க தவறியதால் இனி ராஜ்புத் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்” என்றதை கேட்ட மாலிக் மெதுவாக சிரித்தான்.
அவன் கண்களில் இருந்த குரோதத்துடன், “அருமையான செய்தி ராகவா…முதல் தடை அழிந்துவிட்டது. அடுத்தது அதிவார் வம்ச வாரிசு எங்கு ஒளிந்திருக்கிறது என்று அறிய வேண்டும்” என்றபடி அந்த அரண்மனை அதிர கைகளில் இருந்த கோப்பையை விட்டு எறிந்தான்.
தனது நினைவுகளில் இருந்து மெல்ல வெளியே வந்த கலீல் சுவாசத்திற்கு துடிக்க, அவன் நெற்றியில் முத்து முத்தாய் பூத்திருந்த வியர்வை துளிகள் காதோரமாய் இறங்கி தொண்டைக்குழியில் சிக்கிக் கொண்டது.
வேகமாக துடித்த இதயத்தை மருந்து ஏறிக் கொண்டிருந்த இடது கைகளால் அழுத்தி பிடித்தவன், உதடுகள், “வாப்பா…மே ஆஹ் ரஹா ஹூன்( நான் வருகிறேன்)” என்றவன் பின்னால் இருந்த கண்ணாடி சுவரில் ஒரு நிழல் அசைந்தது. கலீல் விழித்திருப்பதை அறிந்த ஒருவன் தனது எஜமானுக்கு அதை தெரிவுபடுத்த விரைந்தான்.
உதய்ப்பூர் அரண்மனையின் முற்றத்தில் நின்ற கரண் அராவள்ளி மலைத்தொடரை தன் விழிகளால் அளந்தவனை உருவாக்கியதும், உடைத்ததும், இப்போது மீண்டும் அழைத்துக் கொண்டிருப்பதும் அந்த நிலம் தான்.
மாலை நேரம் சூரியன் மலைச் சிகரங்களுக்கு பின்னால் மறைய, வானம் ஆரஞ்சு நிறத்தில் ஜொலித்து கொண்டிருந்தது. காற்றில் தூசியையும், நினைவுகளையும், அதையும் தாண்டி பல ஜென்மம் கடந்த ஒரு உயிரின் மூச்சையும் சுமந்திருந்தது அந்த மலைத்தொடர்.
கரண் அரண்மனை பாதையின் விளிம்பில் தனியாக நின்றவன், கைகளைக் நெஞ்சோடு மடித்து கொண்டு, அவனின் வாழ்நாளை வடிவமைத்த மலைகளை நோக்கியபடி நின்றிருந்தான்.
அவனின் மூச்சு நடுங்க, விழிகளை மூடியவனுக்கு அராவள்ளி ஒரு நிலப்பரப்பு அல்ல.
அது —அவனின் நினைவுகளின் கல்லறை.
ஆறு வயதுக்கும் குறைவான கரண், வியர்வையில் நனைந்து படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்தான்.
அவன் கனவுகளில், அரண்மனை பாதைகளில் சிரித்தபடி ஓடும் இரண்டு சிறுவர்கள். கொஞ்சும் கொலுசின் மணியோசையுடன் சிரிக்கும் ஒரு சிறுமி. சூரிய ஒளியில் நனைந்த அழகிய மாளிகை. போர்க்களத்தின் நடுவில் கையில் வாளுடன் நின்ற வீரன் என்ற காட்சிகள் மின்னல் போல வந்து போனது.
கரண் தலையைப் பிடித்து கொண்டு, குழம்பியபடி படுக்கையில் அழுது கொண்டிருந்தவனை அனைத்து ஆறுதல் கூறிய வலைக்கரம் மீண்டும் அவனுக்கு வாய்க்காத ஒன்று, அவனின் தாய் மடி.
ரணசூரன் வருவான்…….

