
அத்தியாயம் 108
“ஏன் செல்வா நாம நாலு பேரும் ஒன்னா காரில் கூட போனது இல்லல்ல. இப்ப எனக்கு உன் கூட பைக்கில் போக ஆசையா இருக்கு.” தெய்வா சொல்ல, தம்பியின் பேச்சில் செல்வாவிற்கு வெட்கமே வந்துவிட்டது.
“ஏன் தெய்வா இப்படி ஆகிட்ட. என் பொண்டாட்டி கூட இதுவரைக்கும் இப்படி ஆசைப்பட்டது கிடையாது.” சொல்லிவிட்டு செல்வா சிரிக்க,
“இங்க பார் இதை நான் ஏற்கனவே உன்கிட்ட சொல்லி இருக்கேன். இருந்தாலும் மறுபடியும் சொல்றேன். என்னை உன் பொண்டாட்டி கூட கம்ப்பேர் பண்ணாத. நான் வேற அவங்க வேற.” சற்றே கடுப்பாகச் சொன்னான் தெய்வா.
“சரிடா சரிடா இப்ப என்ன உனக்கு பைக்கில் போகனும் அவ்வளவு தானே.” என்க, “ஆமா அதுவும் உன்கூட.” என்று தமையனின் பேச்சைத் திருத்தினான் தெய்வா.
“காயம் இன்னும் சரியா ஆறல. அதனால் கொஞ்சம் அடக்கி வாசி. காயம் குணமானதுக்கு அப்புறம் நாம நாலு பேரும் போகலாம்.” என்றபடி, இரத்தம் உற்பத்தியாவதற்காக வழக்கமாகப் போடும் ஊசியை போட்டு விட்டு நகர்ந்தான் செல்வா.
“ருக்கு என்னாச்சு உனக்கு. கொஞ்ச நாளா நானும் கவனிச்சுக்கிட்டு தான் இருக்கேன். எப்ப பார்த்தாலும் டல்லாவே இருக்கியே என்ன விஷயம்.” என்றாள் லீலா.
“எனக்கு மனசுக்கு ஒருமாதிரி இருக்குக்கா. இதை உங்ககிட்ட சொல்லலாமா வேண்டாமான்னு கூட எனக்குத் தெரியல.” புதிர் போட்ட தங்கையை விசித்திரமாகப் பார்த்த லீலா, அவளைத் தன்பக்கம் திருப்பி, “என்கிட்ட சொல்ல முடியாத விஷயம் னு ஒன்னு என் தங்கச்சிகிட்ட இருக்கா என்ன.” என்றாள்.
“நீங்க தானே சொல்லுவீங்க. புருஷன் பொண்டாட்டியோட தனிப்பட்ட விஷயத்தை தேவையில்லாமல் அடுத்தவங்க கிட்ட சொல்லக் கூடாது, அது எத்தனை முக்கியமான நபரா இருந்தாலும் சரின்னு.” என்க, அசல் சின்னப்பிள்ளை தான் எனத் தனக்குள் நினைத்துக்கொண்டாள் லீலா.
“ஆமா நான் தான் அப்படிச் சொன்னேன். அதுக்காக என் தங்கச்சிக்கும் அவ புருஷனுக்கும் நடுவில் நடக்கிற விஷயங்கள், என் தங்கச்சியைக் கஷ்டப்படுத்துதுன்னு தெரிஞ்சும் நான் எப்படி அமைதியா இருக்க முடியும். உன் பிரச்சனையை மேலோட்டமா சொல்லு, என்னால முடிஞ்சதை நான் பண்றேன்.” உறுதி கொடுத்தாள் லீலா.
“அ.. அது… அவ… அவர் வர வர என்னைக் கண்டுக்கவே மாட்டேங்கிறாருக்கா. முன்னாடி எல்லாம் ருக்கு ருக்குன்னு என் பின்னாடியே சுத்திக்கிட்டு இருப்பாரு. என்கிட்ட அத்தனை ஆசையா பேசுவார்.
இப்போ என்கிட்ட ஒரு வார்த்தை கூட பேச மாட்டேங்கிறார். எப்ப பாத்தாலும் அவரோட அண்ணன், தம்பிங்க கூட தான் பேசிக்கிட்டு இருக்காரு. என் கிட்ட ஒன்னு இரண்டு வார்த்தை பேசினால் கூட அது முழுக்க முழுக்க அவங்களைப் பத்தி தான் இருக்கு.” என்க, சில மாதங்களுக்கு முன்பு தெய்வா இதே வசனங்களைச் சொன்னது நினைவு வந்தது லீலாவிற்கு.
ஆண் என்றால் என்ன பெண் என்றால் என்ன உணர்வுகள் அனைத்தும் அனைவருக்கும் பொதுவானது தானே. செல்வாவிற்கும் அவளுக்கும் கூட சற்றே இடைவெளி விழுந்தது போல் தான் இருந்தது. ஆனால் அந்தச் சூழ்நிலையை லீலா அழகாகக் கையாண்டாள்.
நடைபழகும் குழந்தைகளுக்கு, நன்றாக நடக்க வேண்டும் என்கிற உந்துதலைத் தவிர வேறு எதுவும் பெரிதாகத் தெரியாது. அதைப் போல் சகோதரத்துவம் என்னும் சாகரத்தின் நுழைவுவாயிலில் இருந்து சற்றே உள்ளே இறங்கி அதில் ஆனந்தமாக நீந்திக்கொண்டிருக்கும் தன் வீட்டு இராஜகுமாரர்களுக்கு அவர்கள் நால்வரைத் தவிர வேறு எதுவுமே மனதில் பதியவில்லை.
அவர்கள் ஒன்றும் வேண்டும் என்றே தங்களைப் புறக்கணிக்கவில்லை. இத்தனை வருடங்கள் தொலைத்துவிட்ட நேரத்திற்கும் சேர்த்து, இப்போது ஒன்றாகச் செலவழிக்க நினைக்கிறார்கள். முடிந்தவரை அவர்களுக்கு தாங்கள் தொந்தரவு கொடுக்காமல் இருப்போம் என்று முடிவுக்கு வந்திருந்தாள் லீலா.
தன் தங்கைகளுடன் தான் நேரம் செலவளிக்கும் போது செல்வாவிடம் இருந்து அவள் எதிர்பார்த்த அதே புரிந்துணர்வை இப்போது அவள் அவனுக்குக் கொடுத்துக்கொண்டிருந்தாள்.
ஆனால் ருக்குவிற்கு அது புரியவில்லை. சின்னப்பிள்ளை கோபம் கொண்டு தமக்கையிடம் புகார் வாசித்துக்கொண்டிருந்தது.
“நான் இப்படி யோசிக்கிறது தப்புன்னு எனக்கும் புரியுது. ஆனா என்னால இதைத் தவிர்த்து வேற எதுவும் யோசிக்க முடியல.” என்பதாய் ருக்கு சொல்ல, “அப்படி என்ன யோசனை உனக்கு.” புருவம் நெறித்துக் கேட்டாள் லீலா.
“அவங்க நாலு பேரும் ஒன்னா சேராமலே இருந்திருக்கலாமோன்னு தோணுது.” மனதில் தோன்றியதை பட்டென்று சொல்லிவிட்டாள் ருக்கு.
“தப்பு ருக்கு.” என்று ஆரம்பித்து நிறைய போதனைகளைச் சொல்லி அவள் மனதைக் கொஞ்சம் தேற்றி அனுப்பி வைத்திருந்தாள் லீலா.
இன்னொரு அறையில், “என்னங்க வரவர உங்களுக்கு ஞாபக மறதி அதிகம் ஆகிடுச்சு. இன்னைக்கு சாயங்காலம் என்னை ஷாப்பிங் கூட்டிட்டு போறேன்னு சொல்லி இருந்தீங்களே, மறந்துட்டீங்களா?” தேவகி தர்மாவிடம் கேட்டுக்கொண்டிருந்தாள்.
“ஸ்சாரி தேவகி, நான் நாகா கூட ஷாப்பிங் முடிச்சுட்டு வந்துட்டேனே. ஒன்னு பண்றியா நீ உன் அக்காங்க யாரையாவது கூட்டிக்கிட்டு உனக்குத் தேவையான பொருள் எல்லாம் வாங்கிட்டு வந்திடுறியா நான் கார்ட் தரேன்.” தர்மா என்னவோ இலகுவாகத் தான் கேட்டான்.
“அந்த ஆணி புடுங்கற வேலை எல்லாம் எங்களுக்கும் தெரியும். நீங்க எந்த ஐடியாவும் கொடுக்கத் தேவையில்லை. கூட்டிட்டுப் போக முடியாதுன்னு சொல்லிட்டீங்க இல்ல. அதுக்கப்புறம் எதுவும் பேசாதீங்க.” என்றவாறு கோபித்துக் கொண்டாள் தேவகி. உள்ளுக்குள் முணுமுணுவென ஏதோ ஒரு அசௌகர்யம் இருந்து கொண்டே தான் இருந்தது அவளுக்கு.
அன்றைய நாளின் மாலை வேளையில் வீட்டுத்தோட்டத்தில் பூத்திருந்த பிச்சிப்பூக்களை பறித்து எடுத்து வந்து தொடுத்துக் கொண்டிருந்த லீலாவின் அருகே வந்து அமர்ந்தான் செல்வா.
“என்ன பண்ற லீலா?” என்க, “பூ கட்டிக்கிட்டு இருக்கேங்க.” புன்னகையுடன் சொன்னாள்.
“நான் எங்க போய், யாரைப் பார்த்துட்டு வந்திருக்கேன்னு நல்லாத் தெரிஞ்சும் அதைப் பத்தி என்கிட்ட கேட்கிறியா பார். இத்தனை புரிந்துணர்வு வேண்டாமே லீலா.” எனத் தன்னோடு நினைத்து சிரித்துக்கொண்டான் செல்வா.
“பூ கம்மியா இருக்கிற மாதிரி இருக்கு. உங்க நாலு பேருக்கும் இது போதுமா?” என்று தானே ஆரம்பித்தான்.
“இந்த பூ என் ஒருத்திக்கு மட்டும் தான்.” என்றாள் விரக்தியான குரலில்.
“ஏன் உன் தங்கச்சிங்களுக்கு வேண்டாமா?” வழக்கத்திற்கு மாறாக இருக்கிறதே என்னும் நினைப்பில் கேட்டான்.
“எப்பவும் நாலு பேருக்கும் சேர்த்து தான் கட்டுவேன். ஆனா இன்னைக்கு அவங்க மூணு பேரும் வேண்டாம் னு சொல்லிட்டாங்க.” என்றாள்.
“ஏன்னு நீ கேட்கலையா?” என்க, “கேட்டேன். எப்ப பூ வைச்சுக்கணும், எப்ப வைச்சுக்க கூடாதுன்னு முடிவு பண்ற உரிமை இல்லையான்னு ருக்கு கேட்டா.
தலை நிறைய பூ வைச்சுகிட்டு போய் யாரை சந்தோஷப்படுத்துறது எனக்கு ஒன்னும் வேண்டாம் னு தேவகி சொல்லிட்டா.
ஊர்மி அதுக்கும் மேல. எனக்குத் தூக்கம் வருது கொஞ்ச நேரம் என்னைத் தொந்தரவு பண்ணாதீங்கன்னு சொல்லிட்டுப் படுத்துக்கிட்டா.” கடுப்பாகச் சொன்னாள் லீலா.
“உன் தங்கச்சிங்களா உன்கிட்ட இப்படி எல்லாம் பேசினாங்க.” நம்ப முடியாமல் கேட்ட செல்வாவிற்கு சகோதரிகளுக்குள் ஏதோ ஊடல் என்பது வரை புரிந்தது.
“என்னால் கூட இதை நம்பவே முடியல. என் தங்கச்சிங்க என்னை எடுத்தெறிஞ்சு பேசுறாங்க. பாவம் அவங்களுக்கு அப்படி என்ன மனக்கஷ்டமோ தெரியல.” என்றாள் லீலா.
“அது எப்படி லீலா, இதை உன்னால அமைதியா எடுத்துக்க முடியுது. உன்னை எடுத்தெறிஞ்சு பேசுற அளவுக்கு அப்படி என்ன மனக்கஷ்டமாம் அவங்களுக்கு.” கோபம் வந்தது செல்வாவிற்கு.
“தெரியலையே என்னவா இருக்கும் னு யோசிச்சு யோசிச்சு தான் நானும் மண்டைய ஒடைச்சுக்கிட்டு இருக்கேன்.” சொன்ன லீலாவின் முகத்தில் கொஞ்சமும் அருளில்லை.
“விடு, நான் தம்பிங்ககிட்ட பேசி பார்க்கிறேன்.” என்றான் செல்வா.
“வேண்டாங்க. புருஷன், பொண்டாட்டி பிரச்சனை எதுவா இருந்தாலும் அவங்களுக்குள்ள பேசி முடிச்சுக்கட்டும்.” புத்தி சொன்னாள் லீலா.
“அதுவும் சரிதான் லீலா. நான் உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேச வந்தேன். பேச்சுவாக்கில் அதை மறந்தே போயிட்டேன்.”
“என்னங்க”
“எனக்கு ஒரு வாரத்துக்கு வேண்டிய திங்க்ஸ் எல்லாம் எடுத்து வைக்கிறியா?”
“என்னங்க நாம எங்கேயாவது வெளியூர் போகப் போறோமா என்ன?” கண்கள் மின்ன ஆசையாய் கேட்டாள் லீலா.
“இல்ல லீலா நானும் தம்பிகளும் கொஞ்ச நாள் வெளியூர் போயிட்டு வரலாம் னு நினைக்கிறோம். சின்ன வயசில் இருந்தே ஆளுக்கு ஒரு திசையில் இருந்துட்டு இப்போ தான் ஒன்னா சேர்ந்து இருக்கோம். அந்த சந்தோசத்தை கொண்டாடனும் தானே.” பூரிப்பாய் சொன்னான் செல்வா.
“நாம எட்டு பேரும் போகலாமே.” கேட்ட லீலாவிற்கு தங்கைகளின் பிரச்சனை என்னவாக இருக்கும் என்பது புரிந்தது.
“இப்ப வேண்டாமே லீலா. நாங்க நாலு பேரும் ஒருத்தரை ஒருத்தர் இன்னும் நல்லா தெரிஞ்சுக்க நினைக்கிறோம். அது மட்டும் இல்லை, உங்க நாலு பேரை மாதிரி ஒற்றுமையா இருக்க ஆசைப்படுறோம். இதுக்காகத் தானே நீங்க, அப்பா, அரசு எல்லோரும் ஆசைப்பட்டீங்க. அதுக்கு எங்களுக்கு இந்த தனிமை தேவைப்படுது.” இது தான் முடிவு என்பது போல் செல்வா சொல்லி முடிக்க, லீலாவின் கண்களில் இருந்த ஒளி முகத்தில் இருந்த பொலிவு அனைத்தும் காணாமல் போயிருந்தது.
“சந்தோஷமா போயிட்டு வாங்க.” என்றவள் வேறு எதுவும் சொல்லாமல் அங்கிருந்து எழுந்து சென்று விட்டாள்.
அடுத்த நாள் அதிகாலையில் ராஜ் சகோதரர்கள் இராதா இல்லத்தை விட்டு கிளம்பிச் சென்றிருக்க, எட்டு மணி அளவில் தூக்கக் கலக்கத்தில் மெதுவாக கீழே இறங்கி வந்தாள் ஊர்மி.
“என்னாச்சு ஊர்மி இப்பெல்லாம் நீ ரொம்ப நேரம் தூங்கிக்கிட்டே இருக்க.” அக்கறையாய் விசாரித்தாள் லீலா.
“போன தடவை செக்கப்புக்கு போனப்ப உடம்பில் நீர்ச்சத்து ரொம்ப கம்மியா இருக்குன்னு டாக்டர் ஒரு டானிக் கொடுத்தாரு அக்கா. அதைக் குடிச்சா தூக்கம் தூக்கமா வருது.” உறக்கம் கலையாத குரலில் சொன்னாள் ஊர்மி.
“சரி போய் ப்ரஷாகிட்டு வா, நான் டீ போட்டு தரேன்.” என்றாள் லீலா.
“அக்கா உங்க கொழுந்தன் எங்க?” சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டே கேட்டாள் ஊர்மி.
கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக கணவனிடம் இருந்து கிடைத்த அனுசரணையான விஷயங்கள், கடந்த சில நாள்களாக கிடைக்கவில்லை என்பதால் கணவனை அதிகம் தேடினாள் ஊர்மி.
லீலாவின் புருவங்கள் உயர்ந்தது. “என் வீட்டுக்காரர், அவரோட தம்பிங்களைக் கூட்டிக்கிட்டு பிக்னிக் போய் இருக்காரு. நாகா உன்கிட்ட சொல்லிட்டு போய் இருப்பாருன்னு நினைச்சேனே.“ என்க, தமக்கையின் பேச்சில் அதிர்ந்து போய் அப்படியே நின்றுவிட்டாள் ஊர்மி.
அவளுக்கு கண்ணெல்லாம் கலங்கிப் போயிற்று. இத்தனை நாளாக அவன் கண்டும் காணாமல் இருந்தது வலித்தது தான். இருந்தாலும் அவனுக்குக் கிடைத்த இந்த புது உறவுகளை, அதன் புனிதத்தை, சுகந்தத்தை நன்றாக அனுபவிக்கட்டும் என்று நினைத்து, அவனை எந்த வகையிலும் தொந்தரவு செய்யாமல் இருந்தாள். ஆனால் இப்போதோ கணவன் தன்னை வேண்டுமென்றே நிராகரிக்கிறானோ என்று தோன்றியது.
ஊர்மிக்கு மாறாக ருக்கு, தேவகி இருவருக்கும் விஷயம் தெரிய வந்திருந்தது. ஆனால் முழு மனதாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை அவர்களால். ஊழ்வினை உறுத்து வந்து ஊற்றிக்கொண்டிருக்கிறது என்று தெரியாமல் மனம் வருந்திக்கொண்டிருந்தனர்.
இவர்கள் இங்கே இப்படிப்பட்ட மனநிலையில் இருக்க, தனியாக ஊர் சுற்றச் சென்ற ஆண்களைக் கையில் பிடிக்க முடியவில்லை. கோயம்புத்தூரைத் தாண்டி ஆள் அரவம் அதிகம் இல்லாத அமைதியான ரெசார்ட் ஒன்றில், ஒரே அறையில் ஒன்றாகத் தங்கினர் சகோதரர்கள் நால்வரும்.
ஒரு மெத்தையில் ஒன்றாகப் படுத்திருப்பது, ப்ளாங்கெட்டிற்காக சண்டை போடுவது, ஏசியை எந்த டெம்பரேச்சரில் வைப்பது, இருக்கும் ஒரே டீவியில் ஆளுக்கொரு சேனல் பார்க்க ஆசைப்படுவது, சாப்பாட்டில் எதை ஆர்டர் செய்வது என்பன போன்றவற்றில் சின்ன சின்ன விவாதங்கள் வந்தாலும் அது எதுவும் சண்டையில் முடியவில்லை.
செஸ், கேரம், புட்பால், வாலிபால், த்ரோ பால், ஷட்டில், டென்னிஸ், கபடி, கிரிக்கெட் அவ்வளவு ஏன் கில்லி வரைக்கும் சிறுவயதில் ஒன்றாக விளையாட முடியாத ஒவ்வொரு விளையாட்டையும் அனுபவித்து விளையாண்டனர்.
நீச்சல் போட்டி, சாப்பாட்டுப் போட்டி, தண்ணீர் குடிக்கும் போட்டி, சமைக்கும் போட்டி, பாட்டு போட்டி, நடிப்பு போட்டி, ஐஸ்க்ரீம் சாப்பிடும் போட்டி,எனப் பல நடைபெற்றது அனைத்திலும் ஒருவரை ஒருவர் கிண்டல் அடித்துக்கொண்டு சந்தோஷமாக பொழுதைக் கழித்தனர்.
தெய்வாவிற்கு செல்வாவும், தர்மாவிற்கு நாகாவும் ஊஞ்சல் கூட ஆட்டிவிட்டனர். காரோடு கொண்டு வந்திருந்த ஒற்றை பைக்கில் நால்வரும் அமர்ந்துகொண்டு அந்த ரெசார்ட்டை சுற்றி சுற்றி வந்து கும்மாளம் அடித்தனர்.
இத்தனை வருடங்களில் குடும்பப் புகைப்படத்திற்குக் கூட ஒன்றாக நிற்காத அவர்கள் நால்வரும், ரெசார்ட்டில் எடுத்துக் கொண்ட போட்டோக்களின் எண்ணிக்கையைப் பார்த்து அவர்களுடைய செல்போனே அழுதிருக்கும்.
ஒருவருக்கு இன்னொருவர் ஹேர்ஸ்டைல் செய்கிறேன் என்று வம்பிழுத்து அட்டகாசம் செய்து கொண்டிருந்தனர். மிகக்குறுகிய நாட்களிலே நால்வரும் ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிந்து கொண்டனர்.
இப்போது இருக்கும் நிலையில் நால்வரில் எவரேனும் ஒருவரைப் பற்றிக் கேட்டால் எல்லாவற்றையும் தெள்ளத்தெளிவாக மற்றவர்களால் சொல்லமுடியும் என்னும் அளவிற்கு அவர்களுடைய நெருக்கம் அமைந்தது.
இனி என்ன ஆனாலும் எவ்வளவு பெரிய சண்டை வந்தாலும் எப்பொழுதும் யாருக்காகவும் நாம் பிரியக் கூடாது என்று உறுதிமொழி வேறு எடுத்துக் கொண்டனர் ராஜ் சகோதரர்கள்.
தந்தை, மனைவிமார்கள், அரசு அனைவருக்கும் கைகொள்ளா அளவு பரிசுகளுடன் வீட்டிற்கு வந்த சேர்ந்த நால்வருக்கும் மிகப்பெரிய ஆச்சர்யத்தை அளித்தனர் பெண்கள் நால்வரும்.
“டேய் தர்ம பிரபுக்களா, எங்கடா போய் தொலைஞ்சீங்க இத்தனை நாளா. எத்தனை போன் பண்ணேன். ஒரு முறையாவது என்ன ஏதுன்னு கேட்கத் தோணுச்சா உங்களுக்கு.
உங்களுக்கு என்ன புதுசா லவ் பண்ண ஆரம்பிச்ச ஜோடின்னு நினைப்பா மனசில். யாரைக் கேட்டுட்டு போனை ஆஃப் பண்ணி வைச்சுட்டு ஊர்சுத்திக்கிட்டு இருந்திருக்கீங்க.” அரசு வந்ததும் வராததுமாக நால்வரையும் பிடித்து திட்ட ஆரம்பித்தான்.
“டேய் ரேடியோவை ஆப் பண்ணுடா. நீங்க தானே ஆசைப்பட்டீங்க அண்ணன், தம்பி நாலு பேரும் கண்ணுக்கு கண்ணா, இமைக்கு இமையா ஒத்துமையா இருக்கணும் னு. இப்ப வந்து ஏன்டா இப்படி பண்றீங்கன்னு கேட்டா நாங்க என்ன தான் பண்றது.” கோபித்தான் தெய்வா.
“அது ஒன்னும் இல்ல மை டியர் பிரதர், இந்த அரசு பயலுக்கு கொஞ்சம் பொறாமை. நாம நாலு பேரும் இப்படி ஊரு கண்ணு படுற மாதிரி ஜெகஜோதியா இருக்கிறது வயிற்றில் எரிச்சலை கிளப்புது போல என்னடா.” என்றான் நாகா.
“இல்லடா அவனுக்குப் பொறாமை தான். ஆனா நாம ஊர் சுத்தினதுக்காக இல்ல. அவனை விட்டுட்டு ஊர் சுத்தினதுக்காக இருக்கும்.” சிரித்தான் தர்மா.
“மண்ணாங்கட்டி என் வாய்ல நல்லா வந்துடும்.” அரசு கோபமாய் பேச, “அரசு என்ன ஆச்சு. எதுக்காக உன் முகம் டல்லா இருக்கு. வீட்டில் ஏதாவது பிரச்சனையா?” மூத்தவனாய் அக்கறையாய் கேட்டான் செல்வா.
“டேய் நல்லவனே நீ நல்லா இருப்ப டா. உனக்காவது என்ன ஆச்சுன்னு கேட்க மனசு வந்துச்சே. நீங்க இங்கே இருந்த கிளம்பியதில் இருந்து நிலைமையே சரியில்ல. அதுவும் கடந்த மூணு நாளா ரொம்ப மோசம்.” வானிலை அறிக்கை போல் சொன்னான்.
“எங்க பொண்டாட்டிங்க இந்த வீட்டில் இருக்கும் போது யாருக்கு என்ன பிரச்சனை வந்திடப் போகுது. பிரச்சனை எதுவா இருந்தாலும் அவங்க கிட்ட சொல்லு, அவங்க எல்லாத்தையும் பார்த்துப்பாங்க.” அதீத நம்பிக்கையுடன் சொன்னான் தர்மா.
“அடேய் நல்லவனுக்குப் பொறந்தவனே பிரச்சனையை அவங்களால் தான்டா.” பெருமூச்சோடு சொன்னான் அரசு.
“என்ன” என்று சகோதரர்கள் நால்வரும் ஒரே சேர ஆச்சர்யப்பட, “ஆமான்டா. நீங்க இங்க இருந்து கிளம்பிய அடுத்த நாளே அவங்க நாலு பேருக்குள்ள பயங்கர வாக்குவாதம் நடந்துச்சு.
நானும், அங்கிளும் அக்கா தங்கச்சிங்களுக்குள்ள எதுவா இருந்தாலும் அவங்களே பேசித் தீர்த்துக்கட்டும் னு விட்டுட்டோம். ஆனா அதுவே பெரிய பிரச்சினை ஆகிடுச்சு.” என்க, நால்வரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
“நாலு நாளைக்கு முன்னாடி காலையில் பத்து மணி வரைக்கும் யாரும் எதுவும் சமைக்கல. என்ன ஏதுன்னு விசாரிச்சேன்.
நான் மட்டும் தான் சமைக்கணுமா, அவளைச் சமைக்க சொல்லுங்க, அவங்களையே சமைக்கச் சொல்லுங்க அப்படின்னு ஒவ்வொருத்தரும் என்னைப் போட்டு பாடா படுத்தி எடுத்துட்டாங்க.
சரி சமைக்கிறதில் தான் பிரச்சனை போலன்னு ஹோட்டலில் இருந்து ஆர்டர் பண்ணி சாப்பிட கூப்பிட்டா, நான் அப்புறம் தனியா சாப்பிட்டுக்கிறேன். நீங்க சாப்பிடுங்கன்னு சொல்லிட்டு கண்டுக்காம போயிட்டாங்க நாலுபேரும்.” என்க, ஆண்கள் நால்வரும் ஒரு சேர வாயில் கை வைத்தனர்.
“சரின்னு விட்டா, அடுத்த நாள் தனித்தனியா சமைச்சு சாப்பிடுறாங்க. அது மட்டும் இல்ல என் சமையலைத் தான் நீங்க சாப்பிடனும் னு ஒரே நேரத்தில் நாலு பேரும் என்னையும், உங்க அப்பா அந்தக் கிழவரையும் என்ன பாடு படுத்தினாங்க தெரியுமா?” அரசு கண்ணீர் சிந்தாத குறை தான்.
“நீங்க வந்ததுக்கு அப்புறம் எதுவா இருந்தாலும் பேசித் தீர்த்துக்கலாம் னு நினைச்சோம். ஆனா நிலைமை கை மீறி போயிடுச்சு.
நீங்க நாலு பேரும் இப்படி உங்க பொண்டாட்டிங்களை மறந்துட்டு ஊர் சுத்துறதுக்கு செல்வா தான் காரணம் னு ருக்கு சொல்ல, லீலாவுக்கும் ருக்குவுக்கும் சண்டை.
அதை தேவகி, ஊர்மி இரண்டு பேரும் என்ன ஏதுன்னு கூட கேட்கல. அதை லீலா கேட்கப் போக, அவங்க இரண்டு பேரும் லீலாகிட்ட கோச்சுக்க நாலு பேருக்கும் பயங்கர சண்டை ஆகிடுச்சு.” அதிர்ச்சிகரமான விஷயங்களாக அரசு சொல்ல சொல்ல ராஜ் சகோதரர்களின் முகத்தில் பெரிதாக எந்த மாற்றமும் இல்லை.
“கடந்த இரண்டு நாளா நாலு பேரும் ஒரு வார்த்தை கூட பேசிக்கல. உங்களைச் சேர்த்து வைக்கப் போய் அவங்களை பிரிச்சிட்டோமோன்னு எனக்கு ரொம்ப குற்ற உணர்ச்சியா இருக்கு.
நான் கூட பரவாயில்ல. வடிவேலு அங்கிளோட நிலைமை ரொம்பக் கஷ்டம். எப்படி இருந்த பொண்ணுங்க நம்மளால தான் இப்படித் தனித்தனியாக ஆகிட்டாங்கன்னு புலம்பிக்கிட்டே இருக்காரு. இராத்திரி முழுக்க தூங்கவே இல்ல.” புலம்பலாகச் சொன்னான் அரசு,
“இன்னைக்கு ஏப்ரல் ஒன்னு கூட இல்லையே. அப்புறம் எதுக்காக இப்படி ஒரு அண்டப் புழுகு புழுகி எங்களை ஏமாத்த நினைக்கிற.” ஒரு சேரக் கேட்டு அவ்வளவு நேரமாக மூச்சைப் பிடித்துக்கொண்டு அரசு சொன்ன அனைத்தையும் விளையாட்டாய் நினைத்து சிரித்தனர் அந்த வீட்டு இராஜகுமாரர்கள்.
“ப்ராங்க் பண்றதுன்னு முடிவு பண்ணிட்ட, நாங்க நம்புற மாதிரி ஏதாவது ஒரு பொய்யைச் சொல்ல வேண்டியது தானே. இந்த உலகமே அழிஞ்சாலும் எங்க பொண்டாட்டிங்க சண்டை போட்டுக்க மாட்டாங்க. இது எங்களுக்கும் தெரியும். எங்களை விட அதிகமா உங்களுக்கு நல்லாவே தெரியும். அப்படி இருக்கும் போது ஏன் டா?” அதீத நம்பிக்கையுடன் கேட்டான் நாகா.
“அட ஏன்டா நீங்க வேற. நாங்க கூட நேத்து வரைக்கும் இப்படிப்பட்ட ஒரு மமதையில் தான் இருந்தோம். என்ன சண்டையா இருந்தாலும் எப்படியாவது அக்கா, தங்கச்சிங்க ஒன்னா சேர்ந்துடுவாங்கன்னு நம்பிக்கையா இருந்தோம். ஆனா இன்னைக்கு காலையில் நாலு பேரும் சேர்ந்து எங்க தலையில் பெரிய இடியைத் தூக்கி போட்டாங்க டா.” என்று சொல்லி இவர்கள் தலையில் குண்டைப் போடத் தயாரானான் அரசு.
“பாருடா நான் இவ்வளவு தூரம் சொல்லியும் ப்ராங்க்கை கண்ட்டின்யூ பண்ற. செம தைரியம் அரசு உனக்கு. சரி சொல்லு மிச்ச பொய்யையும் கேட்கிறோம்.” அசராமல் கேட்டான் தர்மா.
“அடேய் நெட்ட கொக்கே, அறிவு கெட்ட பூதமே. என் வாயில் பச்சை பச்சையா வருது. வீட்டில் நிலைமை எல்லை தாண்டி போகுதுன்னு சொல்லிக்கிட்டு இருக்கேன். நீ மொக்க மொக்க காமெடியா சொல்லிக்கிட்டு இருக்க.
டேய் உங்க காதை நல்லாத் தீட்டி வைச்சிக்கிட்டு கேளுங்க. உங்க பொண்டாட்டிங்க நாலு பேரும் தனி குடித்தனம் போக ஆசை படுறாங்க டா.” என்றான் அரசு.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
7
+1
2
+1

