Loading

மறுநாள் காலைப் பொழுது நன்றாக விடிந்தது.

 

தமிழ் எப்பொழுதும் போல் காலை 5 மணி அளவில் எழுந்தவள் வாசல் தெளித்துக் கோலம் போட்டுவிட்டு வீட்டுக்குள் வர, அப்போதுதான் எழுந்து வந்த பாக்கியம், “தமிழு அதுக்குள்ள எழுந்துட்டியா?” என்று கேட்க,

 

“சீக்கிரம் எழுந்து பழகிடுச்சு அத்த…” என்று சிரித்த முகத்தோடு சொல்ல,

 

“சரி தமிழ், உனக்கு டீயா. காபியா?”என்று கேட்டார்.

 

“நீங்க எங்க போறீங்க?” என்று கேட்டாள்.

 

“இத்தனை நாள் நீங்க பார்த்தீங்க இல்ல, நான் வந்துட்ட பிறகு அங்க உங்களுக்கு என்ன அத்தை வேலை? இனி உங்களுக்கு ரெஸ்ட் தான், உங்களுக்கு என்ன வேணும் என்று நீங்க சொல்லுங்க…” சிரித்த முகமாகச் சமையல் கட்டிற்குச் சென்று அனைவருக்கும் டீ போட்டாள்.

 

ருத்ரனுக்குக் காபி பிடிக்கும் என்பதால் அவனுக்குத் தனியாகப் பாலைக் கொதிக்க வைத்துக் காபி போட்டு ஃபிளாஸ்க்கில் ஊற்றி வைத்தாள்.

 

அப்போது தான் தனா எழுந்து வர அவள் கையில் ஒரு கப்பையும், தனது அத்தை கையில் ஒரு கப்பையும் வைத்தவள் தனக்கும் டீயை எடுத்துக் கொண்டு வந்து அவர்களுடன் உட்கார்ந்து குடித்துக் கொண்டு இருந்தாள்.

 

அப்போதுதான் ருத்ரன் வெளியில் வர அவனது கண்கள் சிவந்து இருந்தது. அவன் இரவு முழுவதும் தூங்காமல் காலையில் தான் தூங்கி இருந்தான்.

 

அவனைப் பார்த்த பாக்கியம் முதலில் முறைத்துவிட்டுப் பிறகு சிரித்துக் கொண்டே, “டீ குடிக்கிறியா டா” என்று கேட்டார்.

 

அடுத்த நொடி சமையலறையில் இருந்து காபிக் கப்புடன் வந்து நின்றாள் தமிழ். அவனது முன்பு சிரித்த முகமாக நிற்க, ‘இவள் தான் நேற்று தன்னிடம் வெறுப்போடு பேசியவளா?’ என்று பார்த்தான்.

 

எதுவும் பேசாமல் அந்த காஃபியை வாங்கிக்கொண்டு வாயில் வைக்க, காபி என்று உணர்ந்தவுடன் ஒரு சில நொடி அவளை நிமிர்ந்து பார்த்துவிட்டு எதுவும் பேசாமல் அமைதியாக நகர்ந்து விட்டான்.

 

செல்வமும் தனமும் கூட காலை 8 மணி போல வீட்டுக்கு வந்தார்கள்.

 

தமிழ் சமைத்துக் கொண்டு இருக்க, “என்ன தமிழ் சமைக்கிற?” என்று தனம் கேட்டார்.

 

“மாமாவுக்குப் பிடிக்கும்னு வெண்டைக்காய் பொரியல் செஞ்சுட்டு இருக்கேன் மா… சாம்பார், ரசம், கூட்டு வெச்சிட்டேன்” என்று சிரிப்புடனே சொல்ல,

 

தன் மகளைப் பார்த்தவர், அவளுடைய சிரிப்பில் உயிர்ப்பில்லை என்பதைப் பெற்ற தாய்க்குத் தெரியாதா?

 

அவளது தோளில் கை வைத்து, “நானும் அப்பாவும் தப்பு செஞ்சிட்டோம்னு நினைக்கிறயா தமிழ்” என்று கேட்க,

 

தன் தாயைப் புன்னகையுடனே பார்த்தவள், “தப்பு செஞ்சீங்கன்னு சொல்லலமா… ஆனா, உனக்கும் சரி, அப்பாவுக்கும் சரி, என்கிட்ட ஒரு வார்த்தை கேக்கணும் என்று தோணல. என்னோட ஆதங்கத்தை நான் வேற யார்கிட்டச் சொல்ல முடியும்?” என்று இதழ்களில் உறைந்த புன்னகையுடன் சிரித்த முகமாகவே சொல்ல,

 

அப்பொழுதுதான் சமையலறைக்குள் நுழைய வந்த ருத்ரா அதைக் கேட்டுவிட்டு அமைதியாகவே சென்று விட்டான்.

 

“தமிழ்” என்று சொல்ல,

 

“ஒன்னும் இல்லம்மா, இனியும் இதைப் பத்திப் பேசறதால எதுவும் மாறப் போறது இல்ல. எனக்கு இது தான் விதியின்னு ஆனதுக்கு அப்புறம் இதை யாராலும் மாற்ற முடியாது” என்று சொல்ல,

 

“தமிழ் வேண்டாம்” என்று சொல்ல தன் தாயைப் பார்த்துச் சிரித்த தமிழ், “எல்லாம் சரியாகும், ஆனால் உடனே சரியாகும் என்று நினைக்காத” என்று விட்டு வேறு எதுவும் பேசாமல் அனைத்தையும் எடுத்துக் கொண்டு வெளியில் வந்து வைக்க,

 

அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டார்கள்.

 

“என்ன அண்ணி, அண்ணனுக்குப் பிடிக்கும்னு சொல்லி வெண்டைக்காய் பொரியலா?” என்று கேட்க,

 

தனாவைப் பார்த்துச் சிரிப்பை உதிர்த்தவள் எதுவும் பேசாமல் நகர்ந்துவிட,

 

ருத்ரனுக்கு தான் இங்கு உள்ளுக்குள் வலிக்கச் செய்தது. எதுவும் பேசாமல் சாப்பாட்டைக் கொரித்துக் கொண்டிருந்தான்.

 

செல்வம் தான், “என்னடா ருத்ரா இப்படியே கொரிச்சிகிட்டே இருக்க… வளர்ற புள்ள இல்லையா? சாப்பாட்டை அள்ளிச் சாப்பிடு” என்று சொல்ல, தன் மாமாவைப் பார்த்து லேசாகப் புன்னகை பூத்தவன், “சரி மாமா” என்று விட்டுச் சாப்பிடச் செய்தான்.

 

பாக்கியத்திடம் வந்த தமிழ், “அத்தை ஒரு நாள் தான் லீவு சொல்லிருந்தேன். இன்னைக்கு லீவ் போட்டாச்சு. நாளைல இருந்து நான் வேலைக்குப் போறதா? “என்று கேட்டாள்.

 

மெல்லிய புன்னகை முகத்துடன் “உனக்கு என்ன தோணுதோ, அதைச் செய். நீ நினைக்கிறது நடக்கும்” என்று தனது மகனை முறைத்துக் கொண்டு சொன்னார்.

 

பாக்கியம் வேறு எதுவும் பேசாமல் நகர்ந்து விட்டார்.

 

தனமும், செல்வமும் கூட வேலை இருக்கிறது என்று சென்று விட்டார்கள்.

 

செல்வம், தனம் இருவரும் சொல்லிக் கொண்டு கிளம்ப, அப்போது பாக்கியம், “அண்ணா, ஒரு நிமிஷம்” என்றார்.

 

“என்ன பாக்கியம்?” என்று கேட்க,

 

“என்னைத் தப்பா எடுத்துக்காத… என் மருமக பேர்ல எல்லாச் சொத்தும் எழுதி வெச்சிரு அண்ணா” என்று சொல்ல,

 

“அம்மா, என்ன பேசிட்டு இருக்கீங்க?” என்று ருத்ரன் வர,

 

“என்ன அத்தை பேச்சு இது?” என்று தமிழ் கேட்க,

 

செல்வமும் சரி, தனமும் சரி அமைதியாகப் பாக்கியத்தைப் பார்த்தார்கள்.

 

“தப்பா எடுத்துக்காதீங்க, என் வீட்டுக்குன்னு ஒரு மகராசி வந்துட்டா. இனி அவ பேருல இருக்கட்டும், உன் மருமகன் பேர்ல கூட சொத்து வேணாம். முழு சொத்தும் என் மருமகள் பேர்ல எழுதி வை” என்றார்.

 

தன் தங்கையை அமைதியாகப் பார்த்த செல்வம், “கீர்த்தனாவுக்கு பாக்கியம்?” என்று கேட்க.

 

“அவளை எப்படிப் பார்த்துக்கணும் என்று மருமகளுக்குத் தெரியும். அண்ணா, இனி என் மகளோட முழுப் பொறுப்பு என் மருமகள்கிட்ட தான் இருக்கு. அதே மாதிரி இந்த வீட்டோட முழுப் பொறுப்பையும் சரி, சொத்தையும் சரி என் மருமகள் கிட்டக் கொடுக்கணும்னு ஒப்படைக்கணும்னு நினைக்கிறேன். இனி என் காலத்துக்குப் பிறகு என் மருமகள் தானே எல்லாத்தையும் எடுத்து நடத்தணும். உனக்கும் வயசாகிட்டே போகுதில்லையா?” என்று சொல்ல,

 

சிரித்த செல்வம் அமைதியாகி விட்டார்.

 

ருத்ரன் தான் இங்கு கொழுந்து விட்டு எரிந்தான்.

 

“அம்மா என்ன நினைச்சிட்டு இருக்கீங்க? மாமாவுக்கு வயசு ஆயிடுச்சுன்னு சொல்லிட்டு இருக்கீங்க. மாமாவே எல்லாக் கணக்கு வழக்கையும் பார்க்கட்டும். மாமா பெயரிலேயே எல்லாச் சொத்தும் இருக்கட்டும்” என்று சொன்னவுடன்,

 

“நீ சொன்னதுக்காக உன் கல்யாண விஷயத்துல நான் தலையிடல, இப்போ நான் பேசுறேன் நீ அமைதியா கேளு. கேட்க முடியலன்னா அமைதியா போயிட்டே இரு. உன் சம்மதத்தை இங்கே யாரும் கேட்கல, இது என் புருஷன் சொத்து, இந்த நிமிஷம் வரைக்கும் ஒன்னுக்கு நாலு மடங்கா இதை உருவாக்குனது என்னோட அண்ணன்.

 

அவரே அமைதியா இருக்காரு, உனக்கு என்னடா வந்துச்சு? என் புருஷன் சொத்து யார் பேர்ல எழுதி வைக்கணும்னு முடிவு பண்ண வேண்டியது நான், நீ கிடையாது” என்று விட்டுத் தமிழைப் பார்க்க,

 

தமிழ் வேண்டாம் என்று சொல்ல,

 

“நாளைக்கு அந்தக் கேடுகெட்ட சிறுக்கி வந்து நிப்பா தமிழு…”

 

“அத தான் அத்தை நானும் சொல்றேன்.”

 

“அவ சொன்ன மாதிரி தான் அப்புறம் லாஸ்ட்ல முடியும்.”

 

“நானும் சரி, எங்க அப்பாவும் சரி, இந்தச் சொத்துக்கு ஆசைப்பட்ட மாதிரி ஆயிடும்…” என்றவுடன் கைதட்டிக் கொண்டு வந்த ஆனந்தி,

 

“சொன்னாலும், சொல்லாட்டியும் அது தாண்டி உண்மை” என்ற உடன் அடுத்த நொடி ருத்ரன் ருத்ரமூர்த்தியாக நின்றான்.

 

“உனக்கு இங்கே என்னடி வேலை?” என்று கேட்க,

 

“நேத்தி அவ்வளவு வீராப்பா தாலி கட்னியே, எப்படி இருக்கீங்கன்னு பார்க்க தான் வந்தேன்”

 

“நாங்க எப்படியோ இருக்கோம், உனக்கு என்னடி வந்துச்சு?”

 

“அது தான் உன் மாமா மகள் ஒரே நாள்ல சொத்து முழுசா அவ பேருல ஆட்டையப் போட முடிவு பண்ணிட்டாளே” என்றவுடன் அவளை ஓங்கி அறைந்து இருந்தான் கன்னம் இரண்டும் பழுக்கும் அளவிற்கு… அவன் அடித்ததில் கன்னம் சிவந்து எரிச்சல் ஏற்படுத்தியது

 

“அவ கேட்கல இந்தச் சொத்த. என் அம்மா தான் அவ பேருல எழுதி வைக்கச் சொல்லிட்டு இருக்காங்க”

 

“இப்ப நானே சொல்றேன். உங்க பேர்ல இருக்க முழு சொத்தையும் தமிழ் பேர்ல எழுதி வையுங்க மாமா” என்றான்.

 

“ஏய்!”என்று ஆனந்தி கத்த,

 

“எங்க வீட்டுச் சொத்த நாங்க யார் பேருல எழுதி வச்சா உனக்கு என்னடி? அதைக் கேட்க நீ யாருடி கழிச்சடை, முதல்ல வீட்டை விட்டு வெளியே போடி. நீ நின்ன இடத்தை பினாயில் ஊத்திக் கழுவனும்” என்றவுடன் கீர்த்தனா வேகமாகச் சிரித்து விட,

 

ஆனந்தி கீர்த்தனாவை முறைத்துக் கொண்டு அருகில் வந்தாள்.

 

அப்போது ஆனந்தி அருகில் வந்த காயத்ரி, “என் பிரண்ட முறைச்சிப் பார்க்கிற வேலை எல்லாம் வச்சிக்கிட்ட, என்ன செய்வேன்னு தெரியாது. இவ்ளோ நாளா என் மாமாவுக்காக அமைதியாப் பொறுத்துப் போயிட்டு இருந்தேன். இனிமே பொறுக்க வேண்டிய அவசியம் இல்லை.

 

இந்தச் சொத்து யார் பேர்ல இருக்கணும்னு முடிவு பண்ண வேண்டியது என் அத்தையும், என் மாமாவும். அவங்க ரெண்டு பேருமே அக்கா பேருல இருக்கணும்னு முடிவு பண்ண பிறகு, உனக்கு என்னடி வேலை? வந்து பூச்சாண்டி வேலை காட்டிக்கிட்டு இருக்க…

 

உன் வீட்டைப் பார்த்துக் கிளம்பிட்டே இருந்தா நல்லது, இல்லன்னு வச்சுக்கோ…”

 

“என்னடி பண்ணுவ?” என்று ஆனந்தி எகிறிக் கொண்டு வர,

 

அதற்கு முன்பாகவே அகிலா அவளது அருகில் வந்து அவளது கையைப் பின் பக்கமாக முறுக்கி, “நானுமே என் மாமா முகத்துக்காக மட்டும்தான் அமைதியா இருந்தேன். அமைதியாப் போயிடு, இல்லன்னு வச்சுக்கோ. வந்த இடம் தெரியாத அளவுக்கு ஆகிடும்” என்றாள்.

 

“வலிக்குது விடுடி” என்று ஆனந்தி கத்த,

 

“இது சும்மா ட்ரைலர் தான் செல்லம், இன்னும் அஞ்சு நிமிஷம் நீ இங்க நின்னனு வச்சுக்கோ. உன் கையும் காலும், உனக்கே சொந்தம் இல்லாம ஆகிடும், பத்திரம்” என்று காயத்ரியும், அகிலாவும் எச்சரிக்க,

 

மொத்தக் குடும்பத்தையும் கருவிக்கொண்டு, “நீங்க எப்படிக் குடும்பத்தோட சந்தோஷமா இருந்துடுவீங்கனு நானும் பார்க்கறேன்டா” என்று விட்டுச் சென்று விட்டாள்.

 

“அதையும் பாருடி உன் முன்னாடி தான் வாழப் போறேன்” என்று சொல்லிவிட்டு ருத்ரன் திரும்ப அங்கு தமிழ் ருத்ரனை முறைத்துக் கொண்டு நின்றாள்.

 

‘நாம இப்ப என்ன தப்பா பேசினோம், இப்படி முறைச்சிக்கிட்டு நிக்கிறா. எந்த நேரம் பார்த்தாலும் முறைப்புடனும், வெறுப்புடனும் பார்க்க வேண்டியது’ என்று முனங்கி விட்டு ருத்ரன் அமைதியாக வெளியே சென்று விட்டான்.

 

அடுத்த ஒரு வாரத்தில் அனைத்துச் சொத்துக்களையும் தமிழ் பெயரில் மாற்றியிருக்க,

 

தமிழ் தான் தனது அப்பா, அம்மாவிடமும் தனது அத்தையிடமும் கெஞ்சிக் கொண்டிருந்தாள்.

 

“எதுக்கு?” என்று அவள் கேட்டதற்கு ஒரே வார்த்தையாக, “உன் பெயரில் இருக்கிறது நல்லது தான்” என்று மூவருமே சொல்லிவிட,

 

அதன் பிறகு அவளால் எதுவும் பேச முடியவில்லை.

 

இந்த ஒரு வாரத்தில் அவள் பெரியதாக ருத்ரனிடம் எதுவும் பேசவில்லை.

 

வெளியில் அனைவரின் முன்பு மாமா என்று கூப்பிடுவாள் .

 

பாசமாக அன்பைப் பொழிவாள். அறைக்குள் வந்து பிறகு அவனிடம் முகம் கொடுத்துக் கூடப் பேச மாட்டாள்.

 

இங்கு ருத்ரனுக்கு தான் பைத்தியம் பிடித்து விடுவது போல் இருந்தது.

 

‘நல்லா இருந்த உறவை நானே கெடுத்துக் கொண்டேனே’ என்று ஒரு சில நொடி வருந்துவான்.

 

ஒரு சில நேரங்களில் அவளிடம் சண்டைக்கு நின்று கொண்டிருப்பான்.

 

ஒரு சில நொடி அவளுடன் வாதாடச் செய்வான். ஒரு சில நேரங்களில் “ஏன்டி இப்படி இருக்க? மனுஷனைக் கொல்ற” என்று கேட்க,

 

“நான் உங்களைக் கொல்றேனா? நீங்க தான் என்னை மொத்தமாகக் கொன்னுட்டீங்க, இப்போ உங்க முன்னாடி சடமாட்டம் இருக்கேன்” என்று சொன்னவுடன் அவளை இறுக்கி அணைக்க தான் தோன்றியது.

 

தன்னுடன் வளர்ந்தவளாக ஆறுதல் படுத்த எண்ணி அதையும் எங்குத் தவறாக எண்ணி விடுவாளோ? தமது உறவையே கொச்சைப்படுத்தி விடுவாளோ? என்று பயத்திலே,

 

“நான் பார்த்து வளர்ந்த என் மாமா மகள் விழி, இப்படிப் பேச மாட்டாடி” என்று சொல்ல,

 

“என்னை விழின்னு கூப்பிடுற உரிமையை உங்களுக்கு யார் ஃபர்ஸ்ட் கொடுத்தது? எல்லாரும் கூப்பிடுற மாதிரிக் கூப்பிடுங்க” என்று சொல்ல,

 

“இவ்வளவு நாளும் நான் அப்படி தான்டி கூப்பிட்டுகிட்டு இருக்கேன், அப்போலாம் உன் கண்ணுக்குத் தெரியலையா?”

 

“இத்தனை வருஷமா காதல் என் கண்ணை மறைச்சிருச்சு, இப்போதுதான் எனக்குப் புத்தி வந்திருக்கு” என்று சொல்ல,

 

அவளை அடிக்கக் கை ஓங்கிக் கொண்டு வந்தவன், கீழே போட்டுவிட்டு ஆனாலும், “என் மாமா மகள் இப்படி இல்லடி. வார்த்தைக்கு வார்த்தை எந்த நேரமும் வெறுப்புடன் இருக்க மாட்டா… இப்படி அடுத்தவங்க மனசு நோகும்படி பேசவும் தெரியாது” என்று விட்டு எதுவும் பேசாமல் வெளியில் சென்றுவிட்டான்.

 

போகும் ருத்ரனைப் பார்த்துவிட்டு, ‘வேற எப்படி மாமா உன்கிட்ட நடந்துக்கணும்னு நினைக்கிற?’ என்று மனதிற்குள் புழுங்கச் செய்தாள் தமிழ்.

 

 

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
4
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்