
வசந்த் “ஆமாம்” என்பது போல் விழிகளில் நீர் திரள தலையாட்ட.
அவனது கண்ணீரை துடைத்தவள் .”என்ன சொன்னாங்க அத்தையா? இல்ல உங்க அண்ணியா ?”என்று கேட்டாள்.
“இரண்டு பேருமே அண்ணனும் தான்” என்றான் சிறு பிள்ளையாக.
“எப்போ? நான் காலேஜ் போன பிறகா இல்ல, இங்க வந்ததுக்கு அப்புறமா ?”என்று கேட்க .
“நீ இங்க வந்ததுக்கு அப்புறம் டி ..”
“என்னவாம் அவங்களுக்கு.”
“இல்ல படிச்சிட்டு இருந்த பொண்ணை கல்யாணம் பண்ணி இருக்கேனாம். உன்ன கல்யாணம் பண்ணி உன் படிப்பை பாதி கெடுத்துட்டேன் . இப்போ இன்னும் இந்த டிகிரி முடிக்கிறதுக்குள்ள…” என்று தயங்கி தடுமாற்றத்துடன் அவளது வயிற்றை பார்த்துவிட்டு “அதுக்குள்ள குழந்தை வந்துருச்சு .இப்போ இந்த குழந்தையை காரணம் காமிச்சு உன் படிப்பை நான் கெடுத்து விடுவேன்.. எனக்கு இது மட்டும் தான் தேவை அப்படிங்கிற மாதிரி பேசினாங்க” என்றான்.
அவனை நெருங்கி அவனது சட்டையை இழுத்து பிடித்தவள். அவனது இதழோடு இதழை பொருத்தி உறவாட விட்டாள்… ஒரு சில நொடி அவனை சமாதானம் செய்ய முயன்றாள்..
வசந்த் நிவேதாவின் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தான். அவளுமே வசந்தை தான் பார்த்துக் கொண்டிருந்தாள் .
கிட்டத்தட்ட ஐந்து நிமிடங்களுக்கு மேல் இதழ் யுத்தம் சென்றது .அதன் பிறகு வசந்த் தான் அவளிடம் இருந்து விலகினான் .
“லூசு! பாப்பா வயித்துல இருக்கு” என்று புன்னகை பூத்தான்.
“நம்ம பாப்பா ..அவங்க சொன்னா சொல்லிட்டு போகட்டும். கல்யாணம் பண்ணிய பிறகும் படிக்க வச்சிட்டு தான இருக்கீங்க.
படிக்க வைக்கிறேன்னு சொல்லி ஏமாற்றி என் படிப்பை கெடுக்கல இல்ல ,பாதியில நிறுத்தல இல்ல ..”
“ஆனா.. இப்போ நீ கன்சீவா இருக்க ..”
“நீங்க என்ன கடைசி வரைக்கும் இந்த டிகிரி நான் முடிக்கிற வரைக்கும் எனக்கு துணையாக இருப்பீங்க என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு. ஏன் உங்க மனசில என்னை காலேஜ் விட்டு நிறுத்துற ஐடியா இருக்கா ?” என்றாள் கேள்வியாக புருவம் ஏற்றி,
அவளது உதட்டின் மேல் கை வைத்தவன். “நான் எப்ப டி அப்படி சொன்னேன்” என்றான் பாவமாக.
“பின்ன நீங்க ஏன் கவலைப்படுறீங்க? என் பொண்டாட்டியை எனக்கு படிக்க வச்சுக்க தெரியும்னு சொல்லி இருக்க வேண்டியதுதானே!” என்றாள் மென்னகையுடன்.
லேசாக சிரித்தவன். “அதெல்லாம் அங்கேயே அவங்களுக்கு பதிலடி கொடுத்துட்டேன் டி.. எனக்கு என் பொண்டாட்டியை படிக்க வச்சுக்க தெரியும், உங்க முன்னாடி நான் அவளை படிக்க வச்சு காட்டுறேன்.
அவ என் புள்ளையும் என் கையில பெத்து குடுத்துட்டு, இந்த டிகிரியையும் நல்லபடியா முடிப்பான்னு சொல்லி இருக்கேன் டி” என்றான் ஆனந்தமாக.
நிவேதா இதழ்களில் உறைந்த புன்னகையுடன்,”அப்புறம் ஏன் மாமா !”என்றாள்.
அவள் ‘மாமா ‘என்று அழைத்தவுடன் தேனாக உருகியவன் ,அவளை இழுத்து அவளது உதட்டில் சிறிது நேரம் உறவாடி விட்டு பிறகு அவளையே விழி அகலாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.
“ஒன்னும் இல்ல சரியா. அவங்க பேசினா பேசிட்டு போகட்டும்.
உங்க அம்மாவும் இப்படித்தான் சொன்னாங்களா ?”
“எங்க அம்மாவுக்கு குரங்கு மனசு டி அப்பப்ப தாவிக்கிட்டே தான் இருக்கும். என் அண்ணனும் , அண்ணியும் ஏதாச்சும் சொல்லி இருப்பாங்க.. என் மேல இருக்க காண்டுல, அதை அப்படியே புடிச்சுகிட்டு அவங்க கூட சேர்ந்து ஜால்ரா தட்டிட்டு வந்துடுச்சு.
அவங்களுக்கு குழந்தை வரதுல பிரச்சனை இல்லடி . அவங்க அந்த எண்ணத்துலையும் சொல்லல. நான் உன் படிப்பை கெடுத்து விடுவேன் அப்படின்ற மாதிரி பேசினாங்க . என்ன மட்டம் தட்டி பேசினாங்க,மத்தபடி குழந்தையை அவங்க ஒன்னும் சொல்லல “என்றான்.
“யாரோ ஏதோ சொல்லட்டும் விடு!.
இப்போ கூட நீ யாரையும் விட்டு கொடுக்காம பேசுற இல்லையா?” என்று புன்னகை பூத்தாள் .
“என் குடும்பம் டி.. எனக்கு கெடுதலே நினைச்சாலும் விட்டுக் கொடுக்க முடியாது இல்ல. நீ என் பொண்டாட்டியே ஆனாலும் ,உன்கிட்ட கூட என் குடும்பத்தையோ, என்ன பெத்தவங்களையோ விட்டுக் கொடுத்துற முடியுமா ?” என்றான் குரல் நடுங்க, கண்கள் ஈரமாயின..
அவனது நெஞ்சில் சாய்ந்து கொண்டு,” நான் உன்ன என்கிட்ட இல்ல ,யார்கிட்டயும் உன்னோட அம்மாவை விட்டுக் கொடுக்க சொல்லல சரியா ? நீ நீயாவே இரு!.. எனக்கும் உன்னை இப்படி பார்க்க தான் பிடிக்கும்!” என்றாள் மென்மையாக.
அவனுமே அவளை இன்னும் தன்னோடு இறுக்கிக் கொண்டான்.
அவனுக்கு என்ன தேவை என்பதை உணர்ந்த நிவேதா அவனுக்கு தேவையானதை அவனுக்கு கொடுத்து அவனை சந்தோஷமடைய செய்தவள், அவளும் சந்தோஷமாக அன்றைய இரவை கழித்தாள் .
மறுநாள் காலை விடிந்தவுடன் நிவேதாவிடம் சொல்லி விட்டு வீட்டிற்கு சென்று விட்டான் வசந்த்.
அடுத்த நாள் மாலை நிவேதாவே வசந்துக்கு போன் செய்து” இன்னைக்கும் இங்கு வரிங்களா ?”என்று கேட்டாள்.
“அடியே! எனக்கு வேலை இல்ல. அங்க வந்து உட்கார்ந்துகிட்டு இருக்க.. எனக்கு ஒரு மாதிரி இருக்கு !”என்றான்.
கண்களில் சின்ன சிரிப்பு மின்ன,
“சரி விடுங்க!… நாளைக்கு சாயங்காலம் நானே அப்படியே அங்க வந்துடுவேன். அத மறந்துடாதீங்க! ஞாபகத்துல வச்சுக்கோங்க!” என்றாள்.
“நீ வரலைனாலும் நானே வந்து உன்னை தூக்கிட்டு வந்துருவேன் டி “என்று சிரித்துவிட்டு சிறிது நேரம் அவளிடம் பேசிவிட்டு வைத்து விட்டான் வசந்த்.
இரண்டு நாட்களுக்குப் பிறகு நிவேதா தன் புகுந்த வீட்டிற்கு வந்திருந்தாள் .
அதன் பிறகு , அவர்களது வாழ்க்கை அவ்வப்போது கூடலும் ஊடலுமாக சென்றது.
மாதம் மாதம் செக்கப்பிற்கு அழைத்து சென்றான் வசந்த்.
முடிந்த அளவிற்கு அவளை லீவ் கூட போட விடாமல் மாலை அவள் காலேஜ் முடிந்து வந்தவுடன் அப்படியே அவளை மருத்துவமனை அழைத்துச் சென்று டாக்டரை பார்த்து விட்டு வருவான்.
ஸ்கேன் செய்வதற்கும் அப்படியேதான் பார்த்துக் கொண்டான் .
நடுவில் ஒரு நாள் அவள் மயக்கமாக இருக்கிறது தனக்கு ஒரு மாதிரியாக இருக்கு என்று கூறியிருக்க .
அன்று ஒரு நாள் மட்டும் லீவு எடுக்கும் படியாக இருந்தது .
ஐந்தாவது மாத சாதம் கூட ஞாயிற்றுக்கிழமை நாளாக பார்த்து தான் வைக்க சொல்லி இருந்தான் தனது மாமியாரிடம்..
நாட்கள் வேகமாக சென்றது .
நிவேதா அன்று காலேஜ் சென்று வீட்டிற்கு வந்து இரவு உணவு சமைப்பதற்கு தேவையான அனைத்தையும் செய்து கொண்டிருந்தாள் .
அப்பொழுது அவளது போன் அலறியது நேரத்தை பார்த்தாள் .
இரவு ஏழு மணி நவிலனிடம் இருந்து போன் வந்திருந்தது .
இந்த நேரத்துக்கு மேக்சிமம் இவன் போன் செய்ய மாட்டானே என்று யோசித்து விட்டு … சிறிது யோசனை உடனே போன் எடுத்தாள்..
“என்னடி பண்ணிட்டு இருக்க .சாப்பாடு செஞ்சிட்டியா ?”என்று கேட்டான்.
“அதுக்கு தாண்டா காய் கட் பண்ணி கிட்டு இருக்கேன் சொல்லு .. நீ என்ன பண்ற? காலேஜ் எப்படி போது எக்ஸாம் எப்படி பண்ணி இருக்க?” என்று கேட்டாள்.
“அதுலாம் நல்லா போயிட்டு இருக்கு” .
“என்னடா இந்த நேரத்தில் போன் பண்ணி இருக்க..?”
“உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லனும் அதான்..”
” அப்படி என்ன முக்கியமான விஷயம் ..சார் என்கிட்ட சொல்லணும்?” என்று பூவாய் சிரித்தாள் .
“முக்கியமான விஷயம் தான்..!”
“என்னடா ஏதாச்சும் பொண்ணு கரெக்ட் பண்ணிட்டியா ?”என்று கேலியாக சிரித்தாள்..
“லூசு!” என்றான்..
“அதைத் தாண்டி நீ என்கிட்ட இப்போ என்ன டி மாப்ள முக்கியமான விஷயம் சொல்ல போற “..
“உனக்கு வர வர வாய் கூடிப்போச்சு டி “என்று சிரித்துவிட்டு ,”ஆனாலும் அதைப்பத்தி தான் பேசணும் “என்றான் தடுமாற்றத்துடன்..
இவ்வளவு நேரம் விளையாட்டிற்கு தான் கேட்டாள் .ஆனால் தனது நண்பன் அதைப்பற்றி தான் பேச வேண்டும் என்று கூறியவுடன் ஒரு நிமிடம் சிந்தனையில் உறைந்தாள் ..பின்பு, “உண்மையாவே லவ் பண்றியா டா ..?”
“ஆமாண்டி!” என்றான் நவி.
“யாருடா சொல்லவே இல்ல ..”
“உனக்கு தெரிஞ்ச பொண்ணு தான்.”
“எனக்கு தெரிஞ்ச பொண்ணா ?”என்று எண்ணி விட்டு.. “டேய் அங்க காலேஜ்லையா இல்ல ,இங்க நம்ம ஊர் பக்கமா” என்றாள்..
“இங்க காலேஜ்ல உனக்கு யாரு டி தெரிஞ்ச பொண்ணு இருக்கு..”
“அது என்னவோ உண்மைதான். உன் காலேஜ்ல எனக்கு எந்த பொண்ணை தெரியும். உனக்கு வேணா பல பொண்ணுங்கள தெரியும்!” என்று அவன் காலை வாரினாள்..
“நான் சொல்றதை கேட்பியா கேட்க மாட்டியா ..டி இப்போ”என்றான் சிறு எரிச்சலுடன்..
“கேட்கலாம் விடு டா.. கோவபடதா.. சொல்லு டா யாரு “.
“அதான் சொன்னேனே டி உனக்கு தெரிஞ்ச பொண்ணு தான்னு…”
“நான் அதை கேட்கல ..பொண்ணு யாரு அத சொல்லு..”
அவளுக்கு உள்ளுக்குள் ஒரே சந்தோஷம்.. தனது நண்பன் ஒரு பெண்ணிடம் விழுந்து விட்டான் என்றவுடன் ..
“அ..அது” என்று தடுமாறினான் ..
“எனக்கு தெரிஞ்ச பொண்ணு , நம்ப ஊர் பக்கம் சொல்ற .. அப்புறம் ஏன் டா இழுத்துட்டு இருக்க. யாரு டா அதையாவது சொல்லித் தொல!” என்றாள் அவன் யார் என்று சொல்லாமல் நேரம் வளர்த்த.
“அ..அது வ..வனிதா தெரியும்ல “என்றான் தயக்கத்துடன்.
ஒரு நிமிடம் யோசித்து விட்டு ,”ஹம் “என்றாள்.
“பேசு டி! .பேர் சொன்ன உடனே ஹம் மட்டும் சொல்ற”..
“சரி அவளுக்கு என்ன இப்போ ?” என்றாள் லேசான புன் சிரிப்புடன் ..
“எனக்கு அவளை புடிச்சிருக்கு..”
“அவகிட்ட சொல்லிட்டியா டா ..?’
“பேசிட்டேன் அவகிட்ட” என்றான் நவி ..
“பரவால்ல டா மச்சான் நீ.. எனக்காக சண்டை போட அவ கிட்ட போன, எனக்கு தெரிஞ்சி இதுவரைக்கும் நீ அவ கிட்ட பேசுனதுல பாதி வார்த்தை சண்ட தான் ..
ஒருவேளை இந்த படத்துல எல்லாம் சொல்ற மாதிரி .. மோதல்ல ஆரம்பிச்சா காதல்ல முடியும்னு சொல்லுவாங்களே அந்த மாதிரி இருக்கு உன் கதை ” என்றாள் கிண்டலும் கேலியுமாக..
“எருமை மாடே ! நான் வந்து எனக்கு அவளை புடிச்சிருக்குன்னு சொல்றேன் .நீ என்னன்னா லூசு மாறி ஏதோ சொல்லிட்டு இருக்க..?”
“அதனால என்னடா .உனக்கு புடிச்சிருக்கு இல்ல லவ் பண்ற ஓகே .. நான் இப்ப எதுவும் சொல்லலையே!” என்றாள் தோள்களைக் குலுக்கி
“இல்லடி அவளுக்கும் உனக்கும் ..!”என பேச்சை முழுமையாக முடிக்காமல் தயக்கத்துடன் தடுமாறினான்..
“என்னடா எனக்கும் அவளுக்கும் ..?”
“இல்ல உனக்கு அவளை பிடிக்காது இல்ல ..”
“அவளுக்கும் தான் என்ன பிடிக்காது .. என்ன அதுக்கு இப்போ ?” என்றாள் நக்கலாக ..
“இல்ல டி உனக்கு பிடிக்காத பொண்ணு …”
“அடிச்சி பல்லுக்கில்லெல்லாம் தட்டி எடுத்துடுவேன் டா.. நான் பக்கத்துல இல்ல.. நீ அவகிட்ட சண்டை போட போனதே எனக்காக அது உனக்கு ஞாபகம் இருக்கா ..
இப்போ உனக்கு அவளை புடிச்சிருக்கு ..இப்போ வரை எனக்கும் அவளுக்கும் சண்டை இருக்கான்னு கேட்டா சண்டையே இல்ல சரியா ?..
அன்னைக்கு ஒரு நாள் ஒரு வார்த்தை சொன்னா, அது கஷ்டமா இருந்துச்சு ..நான் லேசா அழுதுட்டு இருந்தேன். அந்த விஷயம் தெரிஞ்சு நீ அவகிட்ட சண்டை போட்ட ..அதுக்கப்புறம் ரெண்டு பேரும் ஒரே டியூஷன் ..
அப்பப்போ பாத்துக்கும் போது சண்டை போட்டுக்கிட்டீங்க சரியா ?.. அப்படி பார்த்தா நீ ஒவ்வொரு முறை சண்டை போடும் போதும் எனக்காக தான் சண்டை போட்டனு ஆயிடுமா ?..”
“பின்ன இல்லையா டி?” என்றான் .. வேகமாக..
சிரித்துவிட்டு ,”அவ்வளவு தான் விடு! .. என்னோட நண்பன் எனக்காக சண்டை போட்டான்.
இப்போ அவனுக்கான லைஃப் பார்ட்னரா அவளையே சூஸ் பண்ணி இருக்கான்.
அவ்வளவுதான் ..! இதுல எனக்கு எந்த வருத்தமும் கிடையாது .இது அவனோட தனிப்பட்ட லைப். என்ன முடிவு எடுக்கணும்னு யோசிக்க வேண்டியது நீ தான்.
உனக்கு அவளை தான் புடிச்சிருக்குன்னா அதை நான் வேணாம்னு சொல்ல போறது கிடையாது. அவ தப்பான பொண்ணு இல்லையே டா. அன்னைக்கு அவளுக்கு என்ன தோணுச்சோ அதை சொன்னா ..
அவ அப்போ சின்ன பொண்ணு டா.. அப்போ என்ன ஏஜ் அவளுக்கு “என்று புன்னகை பூத்தாள்.
“இப்பவும் சின்ன பொண்ணுன்னு சொல்றியா ?”என்றான் மெல்லிய சிரிப்புடன்
“டேய் தடிமாடு.. அவளை லவ் பண்ற ,அவகிட்ட சொல்லிட்டேன்னு சொல்ற அப்புறம் என்ன ..?”
“ஆனா, அவ 12த் தான் படிச்சிட்டு இருக்கா ..”
“ஞாபகம் இருக்கு.. ”
“எனக்கும் நிறைய கமிட்மெண்ட் இருக்கு..என் வீட்ட பத்தி உனக்கு தெரியாதா ?..”
“உன் வீட்டை பத்தியும் தெரியும். உன்ன பத்தியும் தெரியும்.ஆனா லவ்வுன்னு வந்துட்டு பிறகு இப்படித்தான் இருப்பாங்கன்னு எதுவும் விதிவிலக்கு இல்லையே” என்றாள் .
“அப்போ என் மேல உனக்கு நம்பிக்கை இல்லையா ?..”
“உன் மேல நம்பிக்கை நான் வச்சு என்னடா பண்ண போறேன் .
இந்த விஷயத்துல …நீ உன் மேல நம்பிக்கை வை . அவ்வளவுதான் .. அவ சின்ன பொண்ணு படிக்கணும் ..அவளுக்குன்னு ஒரு எதிர்காலம் இருக்கு ..அதே தான் உனக்கும் ..உனக்கும் ஒன்னும் வயசாகிடல இல்ல..
உனக்கு என்றும் ஒரு எதிர்காலம் இருக்கு .. லவ் அது ஒரு டிராக்ல தனியா போகட்டும். உங்களுக்கான எதிர்காலத்தை நோக்கி நீங்க ஒரு பக்கம் தனியா போங்க ..அவ்வளவுதான்! “என்றாள்.
“சரிடி.. ஆனா, உனக்கு இதுல எந்த கோபமும் இல்லையா ?..”
“டேய் லூசு திரும்பத் திரும்ப கேட்காதே. அவ நல்ல பொண்ணு தான் சரியா “.
பிறகு இருவரும் ஆயிரம் கதைகள் பேசிவிட்டு போனை வைத்து விட்டார்கள்.

