Loading

அத்தியாயம் 36

பல வருடங்களாக ‘சஞ்சு சந்தனத்திற்குரியவன்’ என்று ஒரே பாட்டைப் பாடிக்கொண்டிருக்கும் தன் அப்பா, தற்போது தன்னைப் பார்க்கவேண்டும் என்றதில் விடயத்தை ஓரளவிற்கு அனுமானித்திருந்த நிர்மலா ஒரு முடிவுடன்தான் வந்திருந்தாள். 

கலியபெருமாள் மகளைப் பார்த்தவுடன், “சந்தனம் எங்கே?” என்றுதான் ஆரம்பித்தார்.

“அவ வேலை இருக்குதுன்னு ஊருக்கு போயிட்டாப்பா! எப்பவும் அர்ஜூனும் அந்த சாக்கடை பேரும்தான் உங்க வாய்ல வரும். இப்போ என்ன அதிசயமா ரெண்டு நாளா என் பொண்ணைக் கேட்கறீங்க? வீடியோ கால் பண்றீங்க?”

“அவன் சாக்கடை இல்லை நிர்மா. சந்தனத்துக்கு உகந்தவன்.”

“ச்சு! இதைச் சொல்ல தான் என்னை வர சொன்னீங்களா? இப்டி பேசறதாலதான் சனாவை உங்களைப் பார்க்க நான் வரவே விடுறதில்லை.”

“என் பேத்தி அவ! நீ சொல்லி என்னைப் பார்க்க வராம இருந்துடுவாளா? சஞ்சுவோட வந்திருந்தாளே… சஞ்சுவும் சந்தனமும் கைப் பிடிச்சு நின்னதை நீ பார்க்கணுமே… என் கண்ணும் மனசும் நிறைஞ்சு போச்சு.”

“என்ன?! இதெல்லாம் எப்போ?!”

ஒரு சின்ன புன்னகை அவரிடம்!

“முதல்ல நீங்க எப்போ இருந்துப்பா இப்டி மாறினீங்க? முன்னாடி அந்த கழிசடை அர்ஜூனைத் தொடறதைக் கூட விரும்பமாட்டீங்க? இப்போ அவன்கிட்ட உங்க பேத்தியைத் தூக்கி கொடுக்கறளவுக்கு மாறிப் போயிருக்கீங்க!” அப்பாவுக்கு இதெல்லாம் புரிகிறதா இல்லையா என்ற எரிச்சலும் ஆத்திரமும் அவளிடம்!

“நிர்மா! நீ நினைக்கறளவுக்கு உங்கப்பன் ஒண்ணும் நல்லவனில்லைம்மா! அவனை… அந்தக் குழந்தையை… குழந்தைன்னும் பாராம ரொம்ப கொடுமைப்படுத்திட்டேன்.”

அப்பா எவ்வளவு நீளமாக பேசுகிறார் என்று இவள் வியந்திருக்க, சிறிதுநேர மௌனத்தில் கரைந்த பெரியவர் திடுமென சத்தம் வராமல் குலுங்கி அழுதார்.

திகைத்துப் போனாள் நிர்மலா. “அப்பா!”

“அர்ஜூனை, அவன் விளையாட்டு சாமானை, என் சட்டையைன்னு எதைத் தொட்டாலும் அடி!, பாத்திரச் சூடு!, பல நாள் உங்கம்மாவும் காமாட்சியும் இல்லாத நேரத்துல தூக்கத்துல எழுப்பி அடிச்சிருக்கேன். அவன் லிங்கத்துல வலிக்கற மாதிரி அழுத்தி, அவன் அழறதைப் பார்த்திருக்கேன். குழந்தை கதறுவான். ஆனாலும் அனுகிட்ட, பாஸ் கிட்ட என்னைக் காட்டிக் கொடுக்கமாட்டான். ஏன் தெரியுமா? உண்மையை யார்க்கிட்ட சொன்னாலும் அனுவைக் கொன்னுடுவேன்னு அவனை மிரட்டி வச்சிருந்தேன்.”

பாவமன்னிப்பு போல் ஓர் பிஞ்சுக் குழந்தைக்கு தான் செய்த கொடுமைகள் அனைத்தையும் மகளிடம் ஒப்புவித்துக் கொண்டிருந்தார். நிர்மலா நெஞ்சில் கைவைத்துக் கொண்டு அப்பாவை வெறித்துப் பார்த்தாள்.

“அத்தோட விட்டேனா? அவன்‌ வளர வளர எங்கே அனு அவனை நம்ம வீட்டு மூத்த வாரிசா கொண்டு வந்து நிறுத்திடுவாளோன்ற பயத்துல நேரம் பார்த்துட்டே இருந்து, அனு அவங்கம்மாவைப் பார்க்க போன சமயம் இவனைத் திருச்சில இருக்க ***கிட்ட விட்டுட்டேன்.”

“அய்யோ! ஏன்ப்பா இப்டி?” என்றவளின் நினைவில் ஏழு வயது சஞ்சுவின் தோற்றம்! ஒரு துளி கண்ணீர் விழியின் விளிம்பில் வந்துவிட்டது.

“அவனைத் துரத்தியடிச்சதும், பாஸும் வீட்டை விட்டு போனதுக்கப்புறம் உங்கம்மாவே என் முகத்தைப் பார்க்கமாட்டேனுட்டா! அப்போ கூட நான் கௌரவ செருக்கோட தான் இருந்தேன்ம்மா. பிற்பாடு அவளும் போய் வீடே சூன்யமாகி, என் மனசும் ஒரு கட்டத்துல சூன்யமாகிடுச்சு. எங்கே பார்த்தாலும் குழந்தை சஞ்சுதான் தெரிஞ்சான். என் உடம்பெல்லாம் எரிஞ்சது. புழு போல துடிச்சுக் கிடந்தேன். அப்போதான் புரிஞ்சது, அவனைத் திரும்ப முழுசா பார்த்தாலொழிய அந்த எரிச்சல் அடங்காதுன்னு! உங்கண்ணன் கிட்ட அவனைக் கண்டுபிடிக்கச் சொல்லி கேட்டேன். ஆனா அவன்கிட்ட எதையும் சொல்லலை… என் பிள்ளை தாங்கமாட்டானே…” என்றுவிட்டு மீண்டும் அழுதார்.

“எனக்கு எப்டி என் பிள்ளையோ, அப்டித்தான் அவனுக்கும் அவன் குழந்தை இல்லையா? இந்த அறிவெல்லாம் அப்போ இல்லாம போயிடுச்சு நிர்மா. பொண்டாட்டி பேச்சைக் கேட்டுக்கிட்டு என்‌ பேச்சை மீறி நடக்கறான்ற ஆத்திரம் புத்தியை மறைச்சிடுச்சு!”

ஏழு வயது சஞ்சுவிற்காகவும் அவன் நினைவால் இத்தனை வருடங்களாக அப்பா அனுபவித்துக் கொண்டிருக்கும் வேதனைக்காகவும் வருத்தம் கொண்டாள் நிர்மலா. “சரிப்பா, இப்போதான் அவன் வந்துட்டானே… நிம்மதியா இருங்கப்பா!”

“அவன் திரும்ப நம்ம குடும்பத்தோட சேரணும் நிர்மா! அப்போதான் என் பாவத்துல பாதியாவது கரையும். அதுக்கு ஒரே வழி நம்ம சந்தனம்தான்!”

அவ்வளவுதான்! அவள் கண்ணில் துளிர்த்த நீர் ஆவியாகி போனது. அங்கே மீண்டும் ஆத்திரம் வந்தமர்ந்து கொண்டது. “அவன் எப்படிப்பட்டவன்னு தெரியாம எப்டிப்பா என் பொண்ணை அவனுக்கு கொடுக்க முடியும்?”

பேத்தியிடம் சொன்னதையே மகளிடமும் சொன்னார். “அந்த வயசுலேயே அவன் அம்மாவுக்காக என் சித்ரவதைகளைப் பொறுத்துக்கிட்டு இருந்த பையன்! நிச்சயம் அவன் நல்லவனாதான் இருப்பான் நிர்மா.”

“ஓஹோ! நல்லவனா இப்போ காசு, பணம்ன்னு நல்லாதானே இருக்கான்? நீங்களும் இனி அவனை நினைச்சு இப்டி வேதனைப்பட்டுக்கிட்டு இருக்காம, நிம்மதியா அண்ணன் வீட்டுல வந்து காலாட்டிட்டு இருங்களேன்!”

“காசு, பணம்ன்னு நல்லாதானே இருக்கான்! நீயும் உன் பொண்ணை அவனுக்கு கொடேன்…” வேண்டுதல் போல் கேட்டார்.

“நீங்க என்ன சொன்னாலும் சரி! எனக்கு மனசு ஒப்பலைப்பா. ஒரு குழந்தைக்கு நீங்க செஞ்சதா சொன்னதை நினைச்சா பரிதாபமா தான் இருக்குது. அம்மா உங்க மேல கோவப்பட்டதுல தப்பில்லை. செஞ்சதுக்கு நீங்களும் இவ்ளோ தூரத்துக்கு அனுபவிச்சிட்டீங்க! 

ஆனா உங்க பாவம் தீரணும்ங்கறதுக்காக எவ வயித்துலயோ பிறந்தவனுக்கு என் பொண்ணைப் பலி கொடுக்கறளவு எனக்கு பெரிய மனசில்லைப்பா!” என்றவள் அப்பாவிடம் விடைபெறாமலேயே எழுந்து போய்விட்டாள்.

சஞ்சு குறித்து அப்பா சொன்ன அனைத்தையும் மனதிற்குள் அசைப்போட்ட நிர்மலா, அதனை வேறு யாரிடமும் பகிர்ந்துகொள்ளவில்லை. அவர் என்ன செய்தாலும் அவளின் அப்பா அல்லவா?

அண்ணனிடம் சொன்னால், அப்பாவுக்கு இந்த ஆடம்பர சொகுசு இல்லம் கிடைக்காமல் போவதுடன், அவரை அவன் கைக் கழுவிவிடும் அபாயமும் உள்ளது. அனுவுக்கு தெரிந்தால் அப்பாவை நடுச்சாலையில் இழுத்து நிறுத்தி கொல்லவும் தயங்கமாட்டாள்.

இப்படியாக தனக்குள் சில பல கணக்குகள் போட்ட நிர்மலா, கேள்விப்பட்டவைகளை அவளின் சித்தி காமாட்சியிடம் கூட சொல்லாமல் தனக்குள்ளேயே அமிழ்த்திக்கொண்டாள்.

அத்துடன் எப்போதும், ‘தான் சஞ்சுவின் மனைவி’ என்று சொல்லித் திரியும் தன் மகளின் மனநிலைக் குறித்து ஒருவித பதைபதைப்புடன் இருந்தவள், உண்மை தெரிந்து நான்கு மாதங்களாகியும் அவளிடமிருந்து சஞ்சுவைப் பற்றிய பேச்சு எழாததில் நிம்மதியாக உணர்ந்தாள்.

                  **********

இடம்: பெங்களூரு.

மனஸ்தாபங்களற்று எந்த உறவும் பயணித்துவிடுவதில்லை. பங்கிட்டுக் கொள்ளும் எந்த அன்பும் தோற்றுவிடுவதுமில்லை! 

அவ்வகையில் நிரஞ்சனாவிற்கு அக்னியின் பொருட்டு அனுவிடம் மனஸ்தாபங்கள் வரவே செய்தன. ஆனால் அவள் அதனை வளரவிடாமல் அவன் மேல் உள்ள அன்பினை அனுவுடன் பங்கிட்டுக் கொண்டாள்.

உதாரணமாக அவன் தன் கையில் கிடைத்ததிலிருந்து இந்த இருபத்தியிரண்டு வருடங்களாக அவனின் தேவைகளைக் கவனித்துக் கொண்ட நிரஞ்சனாவிற்கு, இப்போது ஒவ்வொன்றிலும் அனுவின் அபிப்பிராயத்தையும் கேட்டுச் செய்ய வேண்டிய நிலை! ஆரம்பத்தில் அது மிகக் கடினமாகத் தெரிந்தது. ஆனால் அனுவின் அப்பழுக்கற்ற நட்பு நிரஞ்சனாவின் மனதில் ஏற்படும் உறுத்தல்களை உடனுக்குடன் களைந்தெறிந்தது.

நலிந்தோர்க்கு நாளும் கோளும் இல்லை என்பார்கள். தன்னை அப்படியோர் நிலையில் நிறுத்திக்கொண்ட அனுவிற்கு சஞ்சயிடம் முழு உரிமை கொண்டாட ஆசையிருந்தாலும், இத்தனை வருடங்கள் உயிருடன் இருக்கிறானோ இல்லையோ என்றும் தெரியாத மகனை, இன்று புடம் போட்ட தங்கமாய் தன்னிடம் தந்துள்ள நிரஞ்சனாவிடம் தோன்றியுள்ள பக்தியில் அந்த உரிமையை அவளுடன் பங்கிட்டுக் கொள்வதில் ஓர் நிறைவையே கண்டாள். 

தவிர, சஞ்சுவைப் பின்னுக்கு தள்ள எண்ணுபவர்களிடம் மட்டும்தான் அவளின் மூர்க்கத்தனம் வெளிப்படும். தன் மகனைக் கொண்டாடுபவர்களிடம் அவளுக்கென்ன மனஸ்தாபம் வந்துவிடப் போகிறது?

அனு, பாஸ்கரன் பெங்களூர் வந்து ஒரு மாதம் ஓடிப்போனது. இப்போதுதான் அந்த வீட்டின் பூச்சு வேலைகளும் உள் அலங்காரங்களும் முழுவதுமாக முடிந்திருந்தன. கல்யாண களேபரத்தில் தேங்கியிருந்த அலுவலக வேலைகள் அர்ஜூனை உள்ளிழுத்துக் கொண்டதால் அவன் தற்சமயம் பெங்களூர் வருவது குறித்து சிந்திக்கவில்லை. காமாட்சி சிறிது காலம் சென்னையில் நிர்மலாவுடன் இருக்க விருப்பப்பட்டதால் பாஸ்கரன் தம்பதியர் மட்டுமே இங்கே வந்திருந்தனர். 

முதலில் அக்னி அனுவின் வீட்டில் தங்கிய முதல்நாள் இரவு நிரஞ்சனா உறங்கவே இல்லை. அவளின் தாய்மனம் அலையின் ஓசைப் போல் ஓயாது கூப்பாடு போட்டது. ‘இத்துடன் அக்னி தனக்கில்லையோ? அனுவின் தூய அன்பில் அவனும் நிறம் மாறிவிடுவானோ?’ என்றெல்லாம் சிந்தித்து உள்ளுக்குள் பதறிக்கொண்டிருந்தாள். 

சில இரவுகள் இப்படித்தான் இம்சைகளைக் கூட்டும்.

மனைவி இன்னும் உறங்கவில்லை எனத் தெரிந்து, மெதுவாக அவள் தோளணைத்துத் திருப்பினான் பிரபஞ்சன்.

“இன்னும் தூங்கலையா நீங்க?”

“நீ தூங்காதப்போ எனக்கெப்டி தூக்கம் வரும்?”

“நான்… இதோ!” என க்வில்ட்டை எடுத்துப் போர்த்திக்கொள்ள,

அவள் கரம் பற்றி தடுத்தவன், அவளைத் தன் முகம் பார்க்கச் செய்தான். “அக்னி இன்னும் குழந்தை இல்லை ரஞ்சி!”

“……”

நெருங்கி படுத்து தன் மார்பை நனைக்கும் மனைவியின் தலை மேல் தலை சாய்த்துக்கொண்டு விடிவிளக்கின் வெளிச்சத்தை வெறித்தவாறு மேலும் சொன்னான். “பழகிக்கணும் ரஞ்சி. இந்த ஒரு நைட்’லயே துவண்டா எப்டி? அனு அனுபவிச்சதையெல்லாம் கம்பேர் பண்ணும்போது நம்மளோட இந்த கஷ்டம் ஒண்ணுமேயில்லை. கஷ்டம்ன்னு கூட சொல்ல முடியாது. இது வெறும் தூசு!”

“ஆமாங்க! ஒரு பொண்ணு தன்னோட இலட்சியம் முக்கியம்ன்னு நினைச்சு மாற்றுப் பாதைல போனதுக்கு இந்த தண்டனை ரொம்பவே அதிகம்! நாமளும் இத்தனை வருஷம் அவனோட வாழ்ந்துட்டோம். தொலைச்சவளுக்கு கொஞ்சம் விட்டுக் கொடுக்கறதுல தப்பில்லை. அதனாலதான் அக்னியை, அத்தை அனு கூட இருப்பான்னு சொன்னப்போ நான் அதுக்கு சம்மதிச்சேன். ஒரு பொண்ணா, ஒரு அம்மாவா அனுவோட வலியை என்னால புரிஞ்சிக்க முடியுது.”

“அனுவோட வலி ஒருவிதம்னா, பாஸ்கரோட வலி எப்டிப்பட்டதா இருக்கும்ன்றதை நானும் இப்போ உணருறேன்.”

நிரஞ்சனா கேள்வியாகத் தலையை நிமிர்த்தி பார்த்தாள். “இதோ தன்னோட சரி பாதி ராத்திரி தூங்காம தொலைஞ்சு போன மகனை நினைச்சு கண்ணீர்ல கரையுறதைப் பார்க்க எத்தனை திடம் வேணும்? ஒருநாள் ரெண்டு நாள் இல்லை; இருபத்திரண்டு வருஷம்! நானா இருந்தா ரெண்டே நாள்ல சலிச்சு போயிருப்பேன்.”

ஊடலாகப் பார்த்தாள். “சரி நான் அழலை! அனுவை நினைச்சு மனசைத் தேத்திக்கறேன்.”

“அனுவை மட்டுமில்ல! நாளைக்கு அவனுக்கு கல்யாணம் ஆகும். மருமகள்ன்னு ஒருத்தி வருவா! அப்போ நீயோ, அனுவோ அழுது புரண்டாலும் அக்னிக்கு ஸ்பேஸ் கொடுத்து தள்ளிதான் இருக்கணும். டிபிகல் மாமியாரா மாறி எல்லாத்துலேயும் மூக்கை நுழைக்காம இருக்க இப்போவே டிரைனிங் எடுத்துக்கோ!”

பல்லைக் கடித்தவள், “ரொம்ப பேசறீங்க! அத்தை கூட இத்தனை வருஷம் இருந்திருக்கேன். எதுல தலையிடணும்? எதுல தள்ளி இருக்கணும்ன்னு எனக்கும்‌ தெரியும்.” என்றாள் வெடுக்கென்று.

“ஹ்ம்ம்! தெரிஞ்சா ஏன் இப்டி பத்து நிமிஷ தூரத்துல இருக்கறவனுக்காக கண்ணீர் விட்டுட்டு இருக்க போறே? இதைத்தான் சொன்னேன். நீ இவ்ளோ ஃபீல் பண்றதுக்கு அக்னி இன்னும் குழந்தை இல்லை.”

“புரியுதுங்க! இனி அழ மாட்டேன். அக்னி மனசு புரிஞ்சும் சுயநலமா நடந்துக்கிட்டோம்ன்னு ரொம்ப கில்ட்டா இருந்தது. ஆனா இப்போ அக்னி‌ மட்டுமில்லாம, அனு முகத்துலயும் தெளிவையும் சந்தோஷத்தையும் பார்க்கறதே மனசுக்கு ஆறுதலா இருக்குது.” 

மறுநாள் காலையில் தன்னைக் காண வந்த அக்னியை, தொலைக்காட்சி தொடரில் வரும் பாசக்காரத் தாயைப் போல் பார்த்துக்கொண்டு வாசலில் நிற்க, அவன் இவளைக் கண்டுகொள்ளவேயில்லை. தவித்திருக்கும் தாயைத் தாவி அணைக்கவில்லை. 

“பாட்டி எங்கேம்மா?” எனக் கேட்டான். 

தடதடவென மாடியேறிப் போனான். அவனறையில் இருந்த துண்டை எடுத்துக்கொண்டு வந்து நிரஞ்சனாவின் தோள் மேல் வீசிவிட்டு, “ஏன்மா அப்டி அப்டியே போட்டு வச்சிருக்க?” என அதிகாரம் செய்தான்.

கடுப்பாகிப் போனாள் அவனின் அம்மா!

“என்ன சமையல்மா இன்னிக்கு? வாசமா இருக்குது.” என அடுப்படியில் பாத்திரங்களை உருட்டியவன், “மெய்ட் இன்னும் வரலயா? கிச்சன் கசகசன்னு கிடக்குது?” என எரிச்சலூட்டினான்.

அதில் நிரஞ்சனாவே மகனைப் பிரிந்திருந்த வேதனையை மறந்து எப்போதும் போல், “உள்ளே வந்ததும் வராததுமா ஏதாவது சொல்லிக்கிட்டே இருக்கணுமா உனக்கு?” என சரிக்கு சரியாகப் பேசியபடி அன்றைய காலை சிற்றுண்டியை எடுத்து வைத்தாள்.

வழக்கம்போல் தாடையில் ஓர் இறுக்கத்துடன் அலைபேசியைத் தடவியபடி உணவினைக் காலி செய்தான். மிக மிக இயல்பாக இருந்தான். 

இது என் இடம்! இங்கேதான் நான் இருக்கிறேன். எங்கே போய்விட போகிறேன்? என் மீதான உன் உரிமையும், உன்‌ மீதான என் உள்ளன்பும் பத்திரமாக இருக்கிறது. நீ கலங்குவதற்கும் கரைவதற்கும் நான் வழியே விடமாட்டேன் என ஒவ்வொன்றையும் செயலால் உணர்த்தினான். 

பார்த்திருந்த பிரபஞ்சன் உள்ளுக்குள் மகனை மெச்சிக்கொண்டான்.

தினமும் இதுவே வழக்கமாயிற்று. பின்னர் நிரஞ்சனாவும் இந்த ஏற்பாட்டிற்கு பழகிப் போனாள். இந்நாட்களில் சில மாத அனுவுடனான நட்பில் அவள் மட்டுமல்லாது, அபிராமியும் உற்சாகமாகக் காணப்பட்டார். விளைவாக, பாஸ்கரனும் பிரபஞ்சனும் தனித்து விடப்பட்டனர்.

இப்படித்தான் அன்றொரு நாள் மதிய நேரத்தில் பிரபஞ்சனின் வீட்டிற்கு வந்தான் பாஸ்கரன். 

சஞ்சுவின் ஆலோசனையின் பேரில் அர்ஜூன் பெங்களூருவிலும் தன் கிளை அலுவலகத்தை நிறுவி, அதனைத் தற்சமயம் பாஸ்கரனின் தலைமையில்தான் நிர்வகித்து வந்தான்.  

இன்று பாஸ்கரன் அந்நிறுவனத்திற்கு காலையில் சென்றுவிட்டு மதிய உணவிற்கு வீட்டிற்கு வந்தால் அங்கே அனு இல்லை‌. இதுபோன்ற சில நேரங்களில் நிரஞ்சனாவுடன் இருப்பாள்.

உள்ளே வந்தவனைப் பார்த்த பிரபஞ்சன் நீள்விரிக்கையில் சாவகாசமாக சாய்ந்து, இரு கரங்களையும் தலைக்கு மேல் கோர்த்துக்கொண்டு, “என்ன பாஸ்? வீட்டம்மா வீட்ல இல்லையா?” எனக் கேலியுடன் கேட்க,

“ஆமா பிரபு. அதான் கூட்டிட்டு போக வந்தேன்.” என்ற பாஸ்கரனின் கண்களில் குழப்பம்!

“வேலைக்கார அம்மா, காலைல சமைச்சதைச் சாப்பிட சொல்லிருப்பாங்களே…”

“ஆமா, உங்களுக்கெப்டி தெரியும்? அனு சொன்னாளா?”

“அனு சொல்லலை. அஷ்டலட்சுமி அம்மா சொன்னாங்க.”

அவர் இங்கிருக்கும் பணிப்பெண். இரு வீட்டிலும் மற்ற வேலைகளுக்கு ஆட்கள் இருந்தாலும் சமையல் செய்வது வீட்டு பெண்கள்தான்!

பாஸ்கரன் புரியாது முழிக்க, “என்னையும் காலைல செஞ்ச காய்ஞ்சு போன சப்பாத்தியைச் சாப்பிட சொன்னாங்க பாஸ்.” என சலித்துக்கொண்டான் பிரபஞ்சன்.

“ஏன் பிரபு? லேடிஸ் எல்லாரும் எங்கே? அனு என்கிட்ட ஒண்ணும் சொல்லலையே?”

“இவளும் என்கிட்ட ஒண்ணும் சொல்லல. இப்போ தான் நான் கால் பண்ணி கேட்டேன். மூணு பேரும் ஷா…ப்பிங் போயிருக்காங்களாம்.”

“மூணு பேர்னா? அம்மாவுமா?” ‘இந்த வயதில் இந்தம்மாவிற்கு இதெல்லாம் தேவையா?’

“வெளியே கிளம்ப ஐடியா கொடுத்ததே அம்மாவா தான் இருக்கும். இன்னிக்கு இந்த டிரைவர் பாடுதான் திண்டாட்டம்.” 

“இப்போ என்ன பண்றது பிரபு? நீங்க சாப்பிட்டீங்களா?”

“ம்ஹூம்! ஆர்டர் பண்ணலாமான்னு யோசிச்சிட்டிருந்தேன். உங்களுக்கும் சேர்த்தே பண்ணிடுவோம்.” என அலைபேசியை எடுக்க,

அக்னி உள்ளே வந்தான். “இங்கே என்ன டாடி பண்றீங்க? வீட்ல அம்மாவும் இல்லை. காலைல செஞ்ச பொங்கல்தான் இருக்காம். மெய்ட் சொல்றாங்க!” என பாஸ்கரனிடம் கேட்டவன்,

தன் புலம்பலைக் கேட்டு இரு அப்பாக்களும் ஒருவரையொருவர் பார்த்து நகைப்பதில் கடுப்பாகி இருவருக்கும் நடுவே வந்து அமர்ந்தான். “என்னவாம்?”

பிரபஞ்சன், “மூணு பேரும் ஷாப்பிங் போயிருக்காங்களாம்டா!” என்றதில்,

“பாட்…டீஈஈ!” எனப் பல்லைக் கடித்தான் அவன்.

“சரி விடு! இப்போதைக்கு வரமாட்டாங்க. உனக்கும் சேர்த்தே ஆர்டர் பண்றேன்.” எனும்போது,

“பாஸ் மாமா!” என்றபடி அங்கே வந்தாள் சந்தனா.

கருப்பு நிற கேப்ரீயும் பழுப்பு நிற காலர் வைத்த மேல்சட்டையும், அலட்சியமாக கழுத்தைச் சுற்றியிருந்த ஸ்டோலும் உயர்த்திப் போட்ட கொண்டையுமென, வீட்டைத் துடைத்துக் கொண்டிருந்தவள் மறந்து போய் வெளியே வந்துவிட்டதைப் போலிருந்தாள். 

ஆனால் அந்த சாதாரண தோற்றத்திலும் தன்னை அவள் ஈர்க்கிறாளென நினைத்தான் அக்னி. காதல் பித்தென்றால் இப்படித்தான் இருக்கும் போலும். நமக்கெங்கே இதெல்லாம் தெரிகிறது!

“நீ என்னடா இந்நேரத்துக்கு இங்கே? கால் பண்ணிருக்கலாம்ல?”

“இன்னிக்கு எனக்கு லீவ்தான் மாமா. நேத்தே அத்தைக்கிட்ட சொன்னேனே?” என்றவள் அக்னியின் புறம் விழி திருப்பவில்லை. 

அனுவிற்கு மருமகளைத் தன் வீட்டில் தன்னுடனே வைத்துக்கொள்ள ஆசையிருந்தாலும், அவளை வற்புறுத்த மனமில்லாமல் அவள் போக்கிலேயே விட்டுவிட்டாள். இவளும் வேலையில் ஓய்வு கிடைக்கும் நேரங்களில் வர முடிந்தால், எப்போதும் அக்னி இல்லாத மாலை நேரங்களில் வந்து அத்தையைப் பார்த்துவிட்டு ஓடிவிடுவாள். அவனும் நேரமிருந்தால் மட்டும்தான் மதிய உணவிற்கு வீடு வருவான் என்று அனு சொல்லியிருக்க, அந்த தைரியத்தில்தான் இன்று வந்திருந்தாள் இவள்.

“இப்போ வீட்ல அத்தை இல்லை. அதான் இங்கே தேடி வந்தியா?”

“ம்ம்!”

“சரி, அப்போ நாலு பிரபு!” என்ற மாமாவை வினோதமாகப் பார்த்தாள் பெண்.

“லன்ச் ஆர்டர் பண்ண போறேன் கேர்ள்? உனக்கு என்ன வேணும்?” எனக் கேட்ட பிரபஞ்சன் பெண்கள் வெளியே போயிருப்பதைச் சொல்லி, இப்போதைக்கு வரமாட்டார்கள் என்றான்.

“ஓ! இஃப் யூ டோண்ட் மைண்ட் நான் வேணும்னா சமைச்சு எடுத்துட்டு வரட்டுமா மாமா? சீக்கிரமே செஞ்சிடுவேன்.” என்றுவிட்டு வெளியே திரும்ப,

“ஏன் அதை இங்கேயே சமைக்கறது?” என்றான் பிரபஞ்சன்.

அர்ஜூனிடம் அம்மா, அப்பா என்று அழைக்கச் சொன்ன பிரபஞ்சன் தம்பதி, இவளையும் அத்தை, மாமா என்றழைக்கச் சொல்ல, வெகுவாக தயங்கி நின்றாள் இவள். 

“அவினாஷ்க்கு அத்தை, மாமா தானேடா? நீயும் அப்டி நினைச்சு கூப்பிடேன்.” என்ற பாஸ்கரனின் சொல்லைத் தட்ட முடியாது, கடந்த இரு மாத காலங்களாக அவர்களை அத்தை, மாமா என்றழைக்க ஆரம்பித்திருந்தாள். 

ஆனால் அனுவிடம் போல் அவர்களிடம் உரிமை எடுத்துக் கொள்வதில்லை. இதுபோல் அனு இங்கே இருக்கும் நேரங்களில் இவளும் வர நேர்ந்தால், ஹால் வரை வந்துவிட்டு போய்விடுவதுதான் வழக்கம்! 

இன்னமும் அவளுக்கு அவர்களிடம் அந்த உரிமையுணர்வு வரவில்லை. அக்னி அவளிடம் எதிர்பார்ப்பதும் அந்த உரிமையுணர்வைத் தான்! ஆனால் அதை வாய் திறந்து சொன்னதில்லை.

அவள் அப்படியே தயங்கி நிற்பதைக் கண்டு அக்னி பல்லைக் கடிக்க, 

பாஸ்கரன், “மூணு பேரும் பசியோட இருக்கோம்டா!” எனவும், அசட்டுத்தனமாய் ஒரு சிரிப்பைத் தந்துவிட்டு சமையலறைக்கு சென்றாள்.

சொன்னதைப் போல் விரைவிலேயே தேங்காய் பால் சேர்த்து நெய் சாதம் செய்திருந்தாள். தொட்டுக்கொள்ள வீட்டிலிருந்த நொறுக்குத் தீனிகளைத் தேற்றி எடுத்துவந்தான் அக்னி‌ஸ்வரூபன். 

அவள் மூவருக்கும் பரிமாற, “நீயும் உட்காரு கேர்ள்!” என அவளுக்கு ஒரு தட்டை வைக்க,

“வர்றேன் மாமா!” என்று அவள் மும்முரமாக அவர்களின் தட்டை நிரப்ப, அக்னிக்கு பசி பறந்துபோனது.

சந்தனா சமைக்கும் பொருட்டு, துப்பட்டாவைத் தூக்கி கடாசிவிட்டிருந்தாள். காதல் கொண்டவனுக்கு அருகே நின்று பரிமாறுபவளைக் கண்டு ‘வயிற்றுப்பசி’ காணாமல் போனதில் ஆச்சரியமொன்றுமில்லை.

அவன் ஒன்றும் ‘துப்பட்டா போடுங்க டோலி’ குழுவைச் சேர்ந்தவன் அல்ல தான்! ஆனால் கண்ணியத்திற்கு பெயர் போன அவன் கண்கள், அவளிடம் மட்டும் காவாலி என்றே பெயரெடுக்க முற்படுகிறது.

அவள் தனக்கும் பரிமாறிக்கொண்டு அக்னிக்கு எதிர் இருக்கையில் அமர, பிரபஞ்சன் சொன்னான். “உங்க பாட்டி சொன்னது சரிதான். பிரமாதமா சமைக்கிற கேர்ள்!”

“சனாவுக்கு எங்கம்மா கைப் பக்குவம் பிரபு.”

இரு மாமாக்களும் பாராட்டுவதைக் கண்டு அவன் ஒன்றும் சொல்லவில்லையென உள்ளம் சிணுங்க, மெல்ல விழியுயர்த்தி பார்த்தாள்.

 

“ஆன் அமேஸிங் ட்ரீட் ஃபார் ஐஸ்!” என்றான் அவன்.

மற்ற இருவரும் நிமிர்ந்து பார்க்க, நெய்யில் புரண்டு குளித்து பளபளவென்றிருந்த பச்சை மிளகாயை உயர்த்திக் காட்டினான். அதில் அவர்கள் சிரித்துவிட்டு உணவினைத் தொடர, அவன் விழிகள் இப்போது சந்தனாவிடம்!

‘பச்ச மொளகாயா அமேஸிங்?’ எனும் சந்தேகத்துடன் அவள் விழிக்க, 

அவன் விழிகள் நகர்ந்து டைனிங் ஹால் வாசலைத் தாண்டி, அவளுக்கு பின்னால் நீள்விரிக்கையில் கிடந்த ஸ்டோலில் படிந்து, மீண்டும் இவளிடம் வந்து நிலைத்தது.

புருவங்கள் சுருக்கி பின்னால் திரும்பிப் பார்த்தவளுக்கு விடயம் புரிந்து போக, மேனி குறுகுறுத்ததில் பட்டென்று எழுந்துவிட்டாள்.

“என்ன கேர்ள்?”

“த… த… தண்ணி மாமா!”

‘இங்கே இருக்கிறது.’ எனும் முன், வெளியே ஓடி ஸ்டோலை எடுத்துக்கொண்டு, பக்கவாட்டில் இருந்த சமையலறைக்குள் மறைந்ததில் அக்னியின் இதழ்கள் குறுஞ்சிரிப்பொன்றைக் குத்தகைக்கு எடுத்துக்கொண்டது.

பாஸ்-த்ரூ (pass through) வழியாக தெரிந்து விடாதபடி சுவற்றில் சாய்ந்து நின்றுகொண்டாள். அந்த உடையின் இறுக்கம் காரணமாகத் தான் ஸ்டோலைச் சுற்றிக்கொண்டு வந்திருந்தாள். 

இப்போது…

‘ஆன் அமேஸிங் ட்ரீட் ஃபார் ஐஸ்!’ அவன் குரலில் இருந்த மோக கேலியில், பட் பட்டென்று நெற்றியைச் சுவற்றில் முட்டிக்கொண்டாள். 

இதுவே வேறு யாராவதாக இருந்திருந்தால் ஓங்கி ஒரு அறை அல்லது குறைந்தபட்சம் ஒரு மோசமான வார்த்தையாவது உதிர்த்திருப்பாளே! இப்போது இந்த படபடப்பும் வெடவெடப்பும் புதியதாக இருந்தது. 

“இப்போ எப்டி அவன் முகத்தைப் பார்ப்பேன்? ஆஹ்!” 

சிறிது நேரத்தில் முயன்று தன்னைச் சமன்படுத்திக்கொண்டு, தண்ணீரையும் எடுத்துக்கொண்டு வெளியில் வர, அக்னி இருந்த இருக்கை காலியாக இருந்தது.

“தண்ணி இங்கேதானே இருக்குது?”

“பார்க்கல மாமா… ம்ம்… ஸ்வரூப் எங்கே?”

“வேலை

இருக்குதுன்னு நாலு வாய்ல அள்ளிப் போட்டுட்டு கிளம்பிட்டான்.”

இவள்‌ உணர்வுகள் புரிந்து புறப்பட்டிருக்கிறான். உள்ளத்தில் சொல்லத் தெரியாத உளைச்சலை உணர்ந்தாள் சந்தனமாரி.

துருவங்கள் போல் நீளும்…

இடைவெளி அன்று…

ஓ… ஓ… தோள்களில்…

உன் மூச்சு இழைகிறதின்று…

இசைக்கும்🎵🎶…

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 11

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
11
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

4 Comments

  1. சஞ்சுவை புறக்கணிப்பவர்கள் என்றால் எதிர்த்து நிற்கலாம்.

    இங்கோ அனைவரும் அவனின் மீது பேரன்பின் துளிகளை சிதற விடுபவர்கள் ஆயிற்றே.

    தொடர்களில் வரும் பாசக்கார அம்மா. 🤣🤣

    எதுவும் மாறவில்லை மாறிவிட போவதும் இல்லை. இயல்பே இயல்பாய் என்றென்றும் நிலைக்கும்.

    அபி பாட்டியின் மருமகளுக்கு தெரியாதா, தனது மருமகளை எவ்வாறு நடத்த வேண்டும், மருமகள் வந்த பின் மகனிடம் எந்த எல்லையில் உரிமை கோட்டை இட வேண்டும் என்று.

    “Amazing treat for eyes” 💫

    அக்னி சனாவின் உணர்வு தழும்பல்கள் மற்றும் தவிப்புகள் அழகு. 💛

    1. Author

      நன்றியோ நன்றிகள் சிஸ்🫶🫰

  2. எனக்கு தெரிஞ்சு இங்க பியூர் சோல் நிரஞ்சனா பிரபஞ்சன் தான். மற்றவங்களை அவங்களோட வலிகளை புரிஞ்சுக்கிற, அதை யோசிக்கிற பக்குவம் வேணுமே.
    தெய் ஆர் அமேஸிங்.

    ச்சே இதென்ன அக்னி கிட்ட இருந்து எனக்கும் ஒட்டிக்கிச்சு. இப்போதான் பழைய லவ்வர் பாய் அக்னி வந்திருக்கான். ஆனா அப்பா முன்னாடி என்னப்பா இதெல்லாம்😜😜😜😜 நாட்டி பாய்.

    1. Author

      🤣🤣ஒரு செகண்ட் அக்னி கிட்ட இருந்து என்னடா ஒட்டிக்கிச்சுன்னு யோசிச்சேன். ஹாஹா… நன்றிகள் சிஸ்🦋🌷