Loading

யான் நீயே 37

மருத்துவமனை வளாகம்.

நள்ளிரவு கடந்த வேளையிலும் தீவிர சிகிச்சைப் பிரிவு அத்தனை பரபரப்பாக இயங்கியது.

காரணம் சற்று நேரத்திற்கு முன்பு நடந்த விபத்தில் குற்றுயிராய் அனுமதிக்கப்பட்டிருக்கும் மீனாளுக்கு துரித கதியில் சிகிச்சை நடைபெற்றுக் கொண்டிருந்தது.

சிகிச்சை அறையின் கண்ணாடி கதவின் முன்னே போடப்பட்டிருந்த இருக்கையில் தொய்ந்து அமர்ந்திருந்த வீரனின் முகத்தில் மிதமிஞ்சிய வலி.

கண்களின் கருவிழியில் காட்சி சிதறலாக தோன்றிடும் நிகழ்வு நொடிக்கு நொடி வீரனின் துடிப்பை அதிகரித்தது.

மூச்சு விட முடியாது தவித்தவனின் தவிப்பு கண்ணீராய் கன்னம் இறங்கிட, வாய் வழி காற்றினை வெளியேற்றியவன் கண்ணீரை அடக்கி அமர்ந்தான்.

சாலையோரம் வண்டியை நிறுத்திய வீரன், மீனாளை அங்கேயே நிற்க கூறியிருக்க…

அவளோ, குல்ஃபி வாங்கிக்கொண்டிருந்த வீரனிடம் “மாமா நாலு வேணும்” என சொல்லிக்கொண்டே முன்னால் அடிகள் வைத்து வந்திருக்க, மின்னல் வெட்டும் நேரத்தில் கனரக வாகனத்தால் தூக்கி எறியப்பட்டிருந்தாள்.

தூக்கி விசிறிய வேகத்திற்கு சாலை நடுவிலிருக்கும் மின்விளக்கு கம்பத்தின் பாதி உயரத்திற்கு எறியப்பட்டு பின் பக்கம் மோதி கீழே தரையில் பக்கவாட்டாக விழுந்திருந்தாள்.

வீரனின் கையிலிருந்த குல்ஃபி கீழே உருகி ஓட… அதற்கு இணையாக மீனாளின் குருதி தரையை நனைத்தது.

“தங்கம்…” பேச்சற்று மௌன அழைப்பாக வெளிவந்த வீரனின் குரலில் மயக்கத்திற்கு சென்று கொண்டிருந்தவள் கடினப்பட்டு இமை பிரித்து…

“மாமா” என்றிட, அவளோடு அவனது உயிரும் கரைந்தது.

“எனக்கு உன்கூட ஆயுசுக்கும் வாழனும் மாமா. வுட்டுப்புடாத மாமா…” திக்கி திக்கி மொழிந்தவளின் வார்த்தைகளில் வீரனின் உயிர்கூடு காலியானது.

கண்களை மூடிகொண்டவளின் முகத்தை தன் நெஞ்சில் புதைத்துக்கொண்டவனின் “தங்கம்” என்ற ஓலம் அவ்விடத்தை நடுங்க வைத்தது.

மீனாளின் கடைசி வார்த்தைகள் செவிகளில் மோதிட கண்ணீரை கட்டுப்படுத்தி சுயம் மீட்டு திடம் பெற்றவன், நடுங்கும் விரல்களால் சட்டை பையிலிருந்து அலைப்பேசியை எடுத்து ஆம்புலன்ஸிற்கு அழைத்தான்.

மருத்துவமனை வந்து மீனாளுக்கு சிகிச்சை தொடங்கிய பின்னர் லிங்குவிற்கு அழைத்து… மருத்துவமனையின் பெயரை மட்டும் சொல்லி வைத்திட்டான்.

அந்நேரத்தில் மருத்துவமனைக்கு எதற்கு வர சொல்கிறான் என்று தெரியாத போதும்… மனதில் ஒருவித தவிப்பு எழுந்து அடங்கிட… வீட்டில் யாருக்கும் சொல்லிடாது பாண்டியனை மட்டும் கூட்டிக்கொண்டு பின் வாயில் வழியாக வீட்டை விட்டு வெளியேறி மருத்துவமனை வந்து சேர்ந்தான்.

“இந்நேரத்தில் என்ன லிங்கு? ஏன்?”

“தெரியலங்களே” என்ற லிங்குவிடம், “விபத்து ஏதும் ஆகியிருக்குமாப்பா?” என்று பரிதவிப்போடு கேட்டார்.

“அண்ணே எப்பவும் கவனமா வண்டி ஓட்டுமே ஐயா” என்ற லிங்கம் மருத்துவமனைக்கு வந்துவிட்டதாக வீரனுக்கு அழைக்க…

“ஐசியூ வார்ட் வாங்க” என்று சொல்லி வைத்திட்டான்.

அந்த தளத்தின் இறுதியில் வீரன் அமர்ந்திருப்பது, இந்த முனையில் வந்து கொண்டிருப்பவர்களுக்கு தெரிந்திட வேகமாக அடி வைத்தனர்.

வீரனை நெருங்கும்போது தான் அவனது சட்டை மற்றும் வேட்டியில் படிந்திருக்கும் ரத்தக்கறை கண்டு பாண்டியன், “யாருக்கு என்னாச்சு?” என்று வினவினார். வீரனோடு மீனாள் சென்றது அவருக்குத் தெரியாதே!

தெரிந்த லிங்கம் வீரனுக்கு பக்கவாட்டில் நின்று “மீனாக்குட்டிக்கு என்னாச்சுண்ணே” என்று கேட்பதற்குள் தொண்டை அடைத்துக்கொண்டு வந்தது.

“மீனாவா… மீனாளை இந்நேரம் எதுக்கு கூட்டிகிட்டு வந்த? புள்ளை எங்கப்பு? என் கொலை நடுங்குதே!” பாண்டியன் புலம்பினார். அவருக்கு மகனின் ஆடையில் தென்படும் ரத்தத்துளிகள் உடலை நடுங்கச் செய்திட வீரனுக்கு பக்கத்து இருக்கையில் தொப்பென்று தளர்ந்து அமர்ந்தார்.

“லிங்கு” என்ற வீரன் தம்பியின் வயிற்றில் முகத்தை புதைத்து கண்ணீர் சுரந்திட… லிங்கத்திற்கும் மீனாளுக்கு என்னவனாதென்று தெரியாமலே விழிகள் கலங்கியது.

எப்போதும் காவலனாக மற்றவர்களை அரவணைத்துக்கொள்ளும் வீரன் இன்று தன் தம்பியின் அரவணைப்பை நாடியிருந்தான்.

எதிலும் தங்களை தேற்றிடும் அண்ணனுக்கு என்ன தேறுதல் சொல்வதென்று தெரியாது, வீரனின் பின்னந்தலையில் கை வைத்து தன்னோடு அழுத்திக்கொண்ட லிங்கம்…

“எதுவாயிருந்தாலும் சரியப்போகும்ண்ணே. நீயி அழுது பார்க்கிறது வலியா இருக்குண்ணே” என்றவனின் குரலும் அழுகையில் தோய்ந்து வெளிவந்தது.

“விடியுறதுக்குள்ள அந்த கோகுல் உயிரோட இருக்கக்கூடாது லிங்கு” என்ற வீரன்… “மீனாளை கண்ட்டெயினர் வச்சி…” அதற்கு மேல் சொல்ல முடியாது அடைத்த தொண்டையை சரி செய்தவன், “குருமூர்த்திக்கு கோகுல் பண்ணது தெரிஞ்சா அவனை மறைச்சு வைக்க ட்ரை பண்ணுவான். அப்படி விட்டுடக்கூடாது” என்றான்.

லிங்கம் வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு கிளம்பிட…

தன்னுடைய மகன்களின் ருத்ர அவதாரத்தில் பாண்டியன் மிரண்டு பார்த்தார்.

“லிங்கு நில்லுடே… வேணாமாட்டிக்கு” என்ற பாண்டியன், “அந்த குருமூர்த்திதேன் ரெண்டு வருசமா நம்ம பக்கட்டே வரது இல்லையே. மேலும் மேலும் பிரச்சினை வேண்டாமப்பு” என்றார்.

“அங்க உயிருக்கு போராடிட்டி இருக்கிறவளை கொஞ்சம் நெனச்சுப் பாருங்க. கலங்கி உட்கார்ந்திருக்க உங்க மூத்த பையனை இதுக்கு முன்னுக்க இப்படி பார்த்திருக்கீரா?” என்ற லிங்கம், “அண்ணே கொடுத்த அடியில் தான் அந்த குருமூர்த்தி ரெண்டு வருசமா நம்ம பக்கட்டுக்கு வரலயாட்டுக்கு. அப்போவே அந்த கோகுலையும் ஏதாவது பண்ணியிருக்கனும். ஆளு எங்கயோ போயிட்டான். இப்போ மாட்டுனான்” என்று சொல்லி வேகமாக செல்லும் லிங்குவின் கோப குணம் அறிந்த பாண்டியனுக்கு பயந்து வந்தது.

இரண்டு வருடத்திற்கு முன்பு குருமூர்த்தி மீனாட்சி ஓட்டலிற்கு உணவு பாதுகாப்புத்துறையை அனுப்பி வைத்த அன்றே வீரன் தன் குடும்பத்தாரிடம் காட்டிக்கொள்ளாது பல வகையில் குருமூர்த்தியின் தொழில்களை முடக்கி தொல்லை கொடுத்தான்.

வீரனின் தலையீட்டால் ஓரளவிற்கு நல்லமுறையில் சென்றுகொண்டிருந்த குருமூர்த்தியின் அனைத்து தொழில்களும் சரிவை நோக்கி வேகமாக நகர்ந்திட… வீரனிடம் நேரடியாக இறங்கி வந்துவிட்டார்.

“இனி உன் பக்கட்டுக்கே திரும்ப மாட்டேன். என்னாலோ, என் பையனாலோ உனக்கும் உன் குடும்பத்துக்கும் எந்த பிரச்சினையும் வராது” என்று சொல்ல, அவர் சொன்னதை ஒரு பேப்பரில் எழுதி கையெழுத்து வாங்கிக்கொண்டே விட்டான்.

அப்போதும்…

“எனக்கு சாதாரணமா நட்டம் வந்தாலும், இந்த பேப்பரை வைத்து உன்னைய என்னவும் செய்ய முடியும் என்னால்” என்று மிரட்டியே அனுப்பி வைத்தான். இந்த விடயம் வீரனுக்கு அடுத்து அறிந்தது லிங்கம் மட்டுமே.

கோகுலின் இரண்டு வருட பொறுமை கூட குருமூர்த்தியின் அடக்கலால் தான்.

காலை வீரன் மற்றும் மீனாளை தேர்வு எழுத அழைத்துச் சென்று திரும்பி வரும்போது இருவரையும் ஒன்றாகப் பார்த்த கோகுல் தன் பல வருட கோபத்தை இறக்கி வைத்திட நினைத்து மீனாளை கவனிக்க ஆரம்பித்தவனுள் அத்தனை வெறி. அவர்களையே கவனித்துக் கொண்டிருந்தவனுக்கு இருவரும் இரவில் ஒன்றாக வருவது தெரிந்து தானே கனரக வாகனத்தின் மூலம் மீனாளை மோதியிருந்தான்.

அந்நொடி அவன் வீரனை பார்த்து சிரித்த சிரிப்பு… வீரனுக்கு நெஞ்சுக்குள் தீ பற்றியது.

“மாமாவுக்கு சொல்லணுமே

அமிழ்தா!”

“சொல்லுங்க” என்றவனின் குரல் இறுகியிருந்தது.

லிங்கம் நேராக குரு மூர்த்தியின் வீட்டிற்கே சென்று அவனது அடியாட்கள் பலரையும் மீறி கோகுலை புடைத்து எடுத்துவிட்டான். உடலின் எந்த பாகத்தையும் விட்டு வைக்கவில்லை.

“உயிரையாவது விட்டு வைப்பா!” என்று குருமூர்த்தி கெஞ்சிட… “அங்க அரை உயிரா படுத்துக்கிடக்கிறவள் சீக்கிரம் கண்ணு முழிக்கணும் வேண்டிக்க. நானாவது உயிரை விட்டு வைக்கிறேன். என் அண்ணே… உனக்கு புள்ளை இல்லாமல் ஆக்கிபுடும்” என்றான். 

விரல் நீட்டி, நாக்கை மடித்து லிங்கம் சொல்லிய தோரணையில் குருமூர்த்திக்கு நா வறண்டு போனது.

“அய்யோ வேண்டாம். அவனை எந்த நாட்டுக்காவது அனுப்பி வச்சிடுறேன். இனி உங்க பக்கட்டுக்கே வர மாட்டான்” என்று கிட்டத்தட்ட லிங்கத்திடம் மன்றாடினார் குருமூர்த்தி.

அதையெல்லாம் கண்டு கொள்ளாத லிங்கம் மேலும் கோகுலை அடித்து துவைத்து காயப்போட்டுவிட்டே மருத்துவமனை வந்தான்.

மொத்த குடும்பமும் நின்றிருந்தது.

யாருக்கு யார் ஆறுதல் சொல்வதென்றே தெரியாது தவித்து நின்றிருந்தனர். எல்லோரும் அழுகையில் கரைந்தபடி ஆளுக்கொரு மூலையில் அமர்ந்திருந்தனர்.

வீரனின் அருகில் செல்லவே அஞ்சினர். நேரமாக ஆக, மீனாளின் உடலில் முன்னேற்றமில்லாமல் இருந்திட வீரனின் உடல் இறுகிக்கொண்டே சென்றது. 

அவனது முகமே இரும்பென இருந்தது.

“எய்யா அமிழ்தா…” மீனாட்சியின் குரலுக்கும் அசைவற்று இருந்தான்.

“அவள் வர நேரம் நீயி நல்லாயிருக்கணுமே அப்பு” என்றார்.

சுவற்றில் தலையை சாய்த்து கண்களை மூடிக்கொண்டான்.

“அண்ணே…”

லிங்கம் அவனருகில் அமர்ந்திட…

“சீக்கிரம் வர சொல்லு லிங்கு. நானில்லாம அவ இருக்கமாட்டால. இப்போ என்னைய வுட்டுப்போட்டு தனியா படுத்து கெடக்கா! அவயில்லாம நான் என்னத்த பண்றது? வேணுமின்னாக்கா என்னையும் வந்து கூட்டிகிட்டு போவச்சொல்லு” என்று கண்களை மூடியபடி வீரன் பேசிய வார்த்தையில், மொத்த பேரும் ஸ்தம்பித்துப் போயினர்.

மீனாள் மீதான வீரனின் காதல் தெரியும். ஆனால் அதனின் ஆழம்? கேட்டவர்களுக்கு கண்களோடு மனமும் கலங்கியது.

மருதன் தான் அதிகளவு நொறுங்கியிருந்தார் வீரனின் பேச்சில். அவருக்கு அவரது மகள் படுத்திருப்பதை விட, அவரது மருமகனின் கோலத்தை தான் கண்கொண்டு பார்த்திட முடியவில்லை.

“உன் நம்பிக்கைதேன் அவளை மீட்டெடுக்கும் அமிழ்தா. தைரியமா இரு” என்று தன்னை திடப்படுத்திக்கொண்டு மருதன் சொல்ல…

“என் மொத்தமும் அவள் தானே மாமா” என்றிருந்தான் வீரன்.

அடுத்து யாருக்கு யாரிடம் என்ன பேசுவதென்று தெரியாது மருத்துவரின் வருகைக்காகக் காத்திருக்க…

“ஸ்டேட்மெண்ட் வாங்கணும். ஆக்சிடெண்ட் ஸ்பார்டில் இருந்தது யாரு?” எனக் கேட்டு ஆய்வாளர் அங்கு வந்தார்.

வீரன் லிங்கத்தை அர்த்தமாக ஏறிட…

“எல்லாம் முடிஞ்சுதுண்ணே. அவன் எழுந்திருக்கவே வருசம் ஆவும்” என்று வீரனுக்கு கேட்டும் மட்டும் கூறினான் லிங்கம்.

“திடீரென எந்தப்பக்கமிருந்து வந்தது தெரியல. மோதிட்டு நிக்காம போயிடுச்சு. யாரு என்னன்னு தெரியல. பதட்டத்துல வண்டி நெம்பர் நோட் பண்ணல.” ஆய்வாளர் கேட்பதற்கு முன்பே சரளமாகக் கூறினான் வீரன்.

கொஞ்ச நேரத்திற்கு முன்பு அந்த கோகுலை கொல்ல வேண்டுமென வீரன் லிங்கத்திடம் ஆடிய ருத்ர தாண்டவம் என்ன? இப்போது போலீஸிடம் ஒன்றுமே தெரியாததைப்போல் சொல்லுவது என்ன?

மகனின் பரிமாணத்தில் தந்தையான பாண்டியன் ஆடிவிட்டார்.

வீரனின் அழுத்தமான நிதானமான அதிரடி தெரியும். ஆனால் இந்த முகம்? தங்கள் பிள்ளைகள் எப்போதும் தாம் நினைப்பது போல் இருப்பதில்லை என்பதை அக்கணம் உணர்த்தியது.

“அப்போ இது எதிர்பாராத விபத்துன்னு பைல் பண்ணிடலாமா?”

“பண்ணிடலாம் சார்.”

“நிஜமாவே உங்களுக்கு யார் மீதும் சந்தேகமில்லையா?”

“இல்லை சார். எங்களுக்கு பகைன்னு யாருமில்லை” என்று வீரன் அழுத்திக் கூறினான்.

ஆய்வாளர் வீரனிடம் ஒரு கையெழுத்தை வாங்கிக்கொண்டு,

“அவங்க கண் விழித்ததும் தகவல் கொடுங்க” என்று சொல்லிச் சென்றுவிட்டார்.

பாண்டியனைத் தவிர உண்மை தெரியாத மற்றவர்களும், வீரன் சொல்வதே உண்மையென நம்பினர்.

*********************

வீரனின் உயிரை மொத்தமாக நிலை குலைய வைத்திருந்தாள் மீனாள்.

சிகிச்சை முடிந்தும் எவ்வித அசைவுமின்றி மரக்கட்டையை போல் படுத்திருந்தவளை பார்க்கவே வீரனுக்கு மூச்சடைத்தது.

“மாமா.” காற்றில் எங்கும் அவளது குரலாக ஒலிக்க, இதயத் துடிப்பு தறிகெட்டு தாறுமாறாகத் துடித்தது.

அனைவரும் அந்த வராண்டாவில் தான் மருத்துவர் என்ன சொல்வாரோ என்கிற பதைபதைப்புடன் அமர்ந்திருந்தனர்.

“பயமா இருக்கு மாமா. அக்கா வேணும். வீரா மாமாவுக்காகவாவுது அக்கா திரும்பி வரணும்.” சிறு பிள்ளையென அழும் அங்கையை தேற்றும் வகை தெரியாது நின்றிருந்தான் லிங்கம்.

அவனால் கசங்கியத் தோற்றத்தில் கலங்கியிருக்கும் தன் அண்ணனை பார்க்கவே பொறுக்கவில்லை.

அவனுக்கும் மீனாளின் நிலை பெருந்துயரத்தை கொடுக்க, சுவற்றில் தலையை சாய்த்தபடி கண்களை மூடிக்கொண்டான்.

மீனாட்சி புலம்பியபடி அழுது கொண்டிருந்தார்.

அபிக்கு மகாவை தேற்றிடவே அத்தனை வலியாக இருந்தது.

இந்நேரத்தில் இங்கிருக்க வேண்டாமென்று எத்தனையோ சொல்லியும் நாச்சி மருத்துவமனை விட்டு கொஞ்சமும் நகர்ந்தாள் இல்லை. வயிற்றில் இருக்கும் பிள்ளைக்காக பிரேம் வாங்கி கொடுத்த பாலினை மட்டும் குடித்திருந்தாள்.

மற்றவர்களுக்கு அதீத கவலையே வீரனை குறித்து தான்.

இதுவரை அவனை யாரும் இப்படி கண்டதே இல்லை. மீனாள் இருக்கும் அறையின் கதவை தாண்டி அவனின் பார்வை வேறெங்கும் அசையவில்லை. பல மணி நேரமாக ஒரு சொட்டு நீர் கூட அருந்தாது அமர்ந்திருக்கிறான். அவனை கொண்டு தானே மொத்த குடும்பமும். நெஞ்சம் பிசைய கலங்கி நின்றனர்.

விடயமறிந்து தாமதமாக, வர வேண்டுமென்று வந்தார் வசந்தி. அப்போதும் நல்லான் வரவில்லை.

கொஞ்ச நேரம் அமைதியாக அனைவரையும் பார்த்திருந்த வசந்தி…

“நான் கொட்டா எரிஞ்ச அப்பவே சொன்னேன் யாரு கேட்டிங்க? இப்போ வீரனை ஒத்தையில தவிக்க விடப்போறீங்க. இனி அவன் வாழ்க்கை எப்படி இருக்குமோ? எதையும் ரோசிக்காம கொஞ்ச நாள் செண்டு ரெண்டாம் கல்யாணம் கட்டி வையுங்க” என்றார். அவ்வளவு தான் லிங்கம் கொதித்தெழுந்துவிட்டான்.

வீரன் யாரையும் கருத்தில் கொள்ளும் நிலையில் இல்லை.

“உங்களுக்கு அவ்வளவு தான் மரியாதை. எதுவரை ரோசிக்கீறீங்க நீங்க? அப்போ அவள் உயிரோடு வரக்கூடாதுங்கிறது தான் உங்க நெனப்பா?” எனக் கேட்டவன், “உங்க உறவே வேண்டாமாட்டிக்கு. கிளம்பிடுங்க. இல்லை வயசு, சொந்தன்னுலாம் பார்க்க மாட்டேன். வகுந்துடுவேன்” என்று மிரட்டினான்.

வசந்தி மருதனை பார்த்தார். அவர் மகள் குறித்த கவலையில் இருந்தபோதும், உனக்கு இது தேவை தான் என்று அலட்சியமாக பார்த்து வைத்தார்.

“அங்குட்டு என்ன பார்வை? கூட பொறந்துட்டிங்கன்னு அவரு அமைதியா இருக்கார்” என்ற லிங்கம், “உங்க நிழல் கூட எங்க வூட்டுப்பக்கம் படக்கூடாது” என்று எச்சரித்து அனுப்பி வைத்தான்.

கிட்டதட்ட வசந்தியை ஓடவிட்டிருந்தான் லிங்கம்.

“எம்புட்டு வஞ்சம் வச்சிருக்காள் மனசுல.” அபி புலம்பியிருந்தார்.

செவிலி இத்தனை பேர் இருக்கூடாதென்று வந்து சொல்ல…

“எம் பேத்தி கண்ணு முழிக்கிற வரைத்தா. சத்தம் காட்டாம இருந்துக்கிறோம்” என்று கண்களில் நீரோடு கையேந்தி மீனாட்சி கேட்டதில் செவிலி அமைதியாக சென்றுவிட்டார்.

ஒவ்வொரு நொடியும் யுகமாக கழிய, மனதில் மலையை தூக்கி சுமக்கும் வலியை அனுபவித்தான் வீரன்.

அவனது உள்ளம் தங்கம் என்று விடாது ஒலித்துக் கொண்டிருந்தது.

சிகிச்சை முடிந்து இரண்டு மணி நேரமாகியும் எவ்வித தகவலும் அளிக்காது மருத்துவர் இருக்க… பாண்டியனை அழைத்துக்கொண்டு லிங்கம் அவரின் அறைக்குச் சென்றான்.

“இன்னும் கொஞ்சம் அப்செர்வ் பண்ணனும் லிங்கம்” என்ற மருத்துவர் மீனாளின் சிகிச்சை அறைக்குள் சென்று எடுத்த டெஸ்ட் ரிப்போர்ட்கள் அனைத்தையும் பொறுமையாக பார்வையிட்டார்.

முதல் நாள் இரவு வரை பார்த்த மருத்துவர், “இன்னும் ஒரு இரவுக்குள் கண் விழிக்கவில்லை என்றால் மூளைச்சாவு ஏற்பட வாய்ப்புள்ளது. பின்னந்தலை மற்றும் முதுகெலும்பில் நல்ல அடி” என்றிருந்தார்.

அனைவரும் ஸ்தம்பித்துப் போயினர்.

‘தங்கம்… என்னை உயிரோட கொன்னுப்புடாதடி. எனக்காக வந்துப்புடு தங்கம்.’ மருத்துவர் சொல்லியதைக் கேட்ட வீரனின் உயிர்க்கூடு கொஞ்சம் கொஞ்சமாக காலியாகிக் கொண்டிருந்தது.

கடக்கும் ஒவ்வொரு நொடியையும் இப்போது கண் திறந்திட மாட்டாளா என்று உயிரை கையில் பிடித்து அமர்ந்திருந்தனர்.

மருத்துவர் முற்றிலும் கைவிட்ட நிலையில் இரண்டாம் நாள் மாலை போல் மெலிதாக முகத்தில் சுருக்கத்தைக் காட்டினாள் மீனாள்.

தீவிர சிகிச்சை பிரிவு என்பதால் மருத்துவர் மற்றும் செவிலியைத் தவிர யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.

மீனாளுக்காக ஒட்டுமொத்த குடும்பமும் வெளியில் கண்ணீரோடு காத்திருப்பதையும், தன் பேத்திக்காக கையேந்திய மீனாட்சியின் செயலுக்காகவும், வீரனின் அசைவற்ற நிலைக்காகவும் மீனாள் கண் விழித்திட வேண்டுமென்று கண்கொத்தி பாம்பாக அவளை கவனித்துக் கொண்டிருந்த செவிலி, மீனாளின் சுருக்கம் கண்டு மருத்துவரை அழைத்து வந்தாள்.

பரிசோதித்தவர்,

“உயிருக்கு ஆபத்து இல்லையென்றாலும், கோமாவிற்கு செல்ல வழியிருக்கிறது. கண் திறந்தால் தான் எதுவும் சொல்ல முடியும்” என்று நகர்ந்தார்.

“சிஸ்டர்.”

சிகிச்சை அறைக்குள் நுழைய இருந்த செவிலியை வீரன் தான் அழைத்திருந்தான்.

“ஒருமுறை நான் பார்க்கட்டுமா?” மன்றாடல் விதமாக ஒலித்த அவனது குரலில் மற்றவர்களால் அவனது வலியை உணர முடிந்தது.

தீவிர சிகிச்சைப் பிரிவு என்பதால் நோயாளிக்கு நோய் தொற்று ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக, வீரனை மொத்தமாக அதற்குரிய ஆடையால் கவர் செய்து உள்ளே அனுமதித்தார் செவிலி.

மீனாளை பார்த்ததும் உடைப்பெடுத்த கண்களை கட்டுப்படுத்தியவன், மெல்ல கால்களை நகற்றி அவளின் பக்கம் சென்றான்.

வாய் திறந்து ஏதும் பேசவில்லை.

தன்னவளின் முகத்தை பார்த்தது பார்த்தபடி நின்றிருந்தான்.

சுவாசத்தால் தன்னுடைய தங்கப்பொண்ணிற்கு தன்னிருப்பை உணர்த்தினான்.

மனதின் அதீத கேவலோடு, மௌனமாக “தங்கம்” என்று துடித்து அடங்கிய அவனின் இதயத்தின் விளிப்பு அவளின் அகம் தொட்டதோ…

மெல்ல புருவம் சுருக்கி விரித்து…

இமைகள் பிரிந்து விழித்த நொடியில் மயங்கிவிட்டாள்.

பதறிப்போன வீரனிடம்,

“ஜஸ்ட் மயக்கம் தான். கண்ணு திறந்துட்டாங்க தானே! இனி பயப்பட ஒண்ணுமிருக்காது” என்று தைரியப்படுத்தினார் செவிலி.

சிறிது நேரத்தில் மருத்துவரும் வந்து பரிசோதனை செய்து செவிலி சொல்லியதையே சொல்லிச்செல்ல அனைவருக்கும் அக்கணம் தான் மூச்சு சீரானது.

அதன் பின்னர் தான் வீரனின் முகத்தில் ஒரு தெளிவை காண முடிந்தது.

மூன்று மணி நேரத்தில் நன்றாக கண் விழித்துவிட்டாள் மீனாள்.

இரண்டு இரண்டு பேராக உள்ளேச் சென்று பார்த்து வந்தனர்.

லிங்கம் சென்ற போது மீனாளின் விழிகள் அவனுக்கு பின்னால் ஆவலாய் நோக்கியது.

“பயம்காட்டிட்ட மீனாக்குட்டி” என்று பரிவுடன் அவளின் தலை வருடியவன்,

“எங்கயும் வலிக்குதாடா?” என அவளை ஆராய்ந்தபடி கட்டிடப்பட்டிருந்த இடங்களை பார்த்தபடி கேட்டிட,

“மாமா எப்படியிருக்காங்க?” என்று கேட்டாள்.

அத்தனை பேர் வந்த போது வாய் திறக்காதவள் லிங்குவிடம் தன்னவனின் நலன் விசாரித்தாள்.

“அண்ணேக்கு ஒன்னுமில்லைடா.” ஆறுதலாகக் கூறினான்.

“கடைசியா கண் மூடும் போது மாமாவோட அழுத முகம்…” திக்கித் திணறிக் கூறினாள். சரேலென கண்ணீர் வழிந்து அவளின் காதுமடல் நனைத்தது.

லிங்கத்திற்கு கண்கள் கலங்கும் போலிருந்தது. லிங்கத்திற்கு அங்கையை விட ஒரு படி மேல் தான் மீனாள். அவளுக்கும் மேல் வீரன். தன் மனதிற்கு நெருக்கமான இருவரின் துயர் கண்டு துடித்திருந்தவனுக்கு மீனாள் கண்ணீர் தன்னையும் கலங்கச் செய்தது.

“எல்லாரும் பார்த்துட்டு போயிட்டால் அண்ணே கூடவே இருக்கலான்னு” என்ற லிங்கம், “நான் போனதும் அண்ணே வரும்” என்றான்.

லிங்கம் சென்றதும் கதவு திறக்கப்பட… மீனாளின் பார்வை வாயிலிலே நிலைத்திருந்தது.

நலுங்கிய தோற்றத்தில் உள்ளே வந்த வீரனின் தோற்றம் தன்னிலை மறந்து அவளுக்கு உயிர்வலி கொடுத்தது.

தன் வாழ் நாளில் இப்படியான ஒரு தோற்றத்தில் மீனாள் வீரனை கண்டதே இல்லை.

நெஞ்சை அறுக்கும் போல் உணர்ந்தாள்.

கண்கள் ஜீவனின்றி, தன்னெதிரே நின்றவனை பார்க்கையில் இதற்கு தான் காரணமோ? கொஞ்சம் கவனமாக இருந்திருக்கலாமோ? உள்ளம் வருந்தினாள்.

“மாமா.” கட்டிடாத கையினை அவனை நோக்கி நீட்டிட, தாய் பறவையை நாடும் சேயாய் அவளின் கரம் பற்றியிருந்தான்.

“சாரி மாமா.”

“உசுரு போயிடுச்சிடி. என்னை அழ வச்சிட்டல நீயி.” சிறுப்பிள்ளையாய் தேம்பினான்.

“ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்ல…” அவனின் அழுகை அவளுக்கும் அழுகையை கொடுத்தது.

அவள் அழுகையை உணர்ந்த கணம் தன்னை சீராக்கி நிமிர்ந்து அவளருகில் இருக்கையை இழுத்துப்போட்டு அமர்ந்தான்.

“தங்கம்” என்று அவளின் கையை தன்னுடைய கைகளில் பொத்திக்கொண்டான். அவளது புறங்கையில் முத்தம் வைத்தவனின் கண்ணீர் தன்னைப்போல் வழிந்து அவளின் கையில் பட்டுத் தெறித்தது.

அவளின் கையில் தன்னுடைய நெற்றி முட்டி கண்களை மூடிக்கொண்டான்.

அவனால் தன்னுடைய தேவதைப்பெண் ரத்த வெள்ளத்தில் தன் மடியில் கிடைந்ததை இன்னமும் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

“மாமா…”

“போடி…” என்றவன், உடல் குலுங்க அழுதிட… மீனாள் தவித்துப்போனாள்.

“ப்ளீஸ்… மாமா.” வறண்ட குரலில் மன்றாடினாள்.

“நீயி அழுவுறது எனக்காகன்னாக் கூட வேணாமாட்டிக்கு மாமா” என்றாள்.

“முடியலடி தங்கம்… என் ஆயுசுக்கும் போதுமாட்டிக்கு இந்த வலி. இனியொரு வலி கொடுத்துப்புடாத… தாங்கிக்க நான் உசுரோட இருக்கமாட்டேன்” என்றவன் வரும் நாட்களில் அவளது வார்த்தைகளால் உயிரற்ற பிணமாக நடக்கவிருக்கிறான்.

இதைவிட பெரும் வலி ஒன்றை அவனுக்கு கொடுக்கவிருக்கிறாள் அவனது தங்கப்பொண்ணு.

ஒற்றை கையால் ஒரு பக்க வேட்டி நுனியை பிடித்து, மறு கையால் மீசையை முறுக்கிவிட்டபடி ஆலையில் நடந்து செல்லும் வீரனின் தோரணையில் அத்தனை கம்பீரமும் மிடுக்கும் இருக்கும். இன்று அவன் குழந்தைப்போல் தனக்காக அழுவதை அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்பதைவிட முற்றும் முதலாக ஏற்கமுடியவில்லை.

“நான் உன் கைக்குள்ளத்தேன் இருக்கேன் மாமா. இப்போ எதுக்கு அழுவுற? என் மாமாவை கம்பீரமா பார்த்துதேன் பழக்கம். இனியொருக்கா நீயி அழுவுறதை நான் பார்க்கக்கூடாது” என்றாள். மிரட்டல் போல். முயன்று வரவழைத்த திடத்துடன்.

இப்படி சொல்பவள் தான் அவனை நொடிக்கு நொடி கலங்கடிக்க இருக்கிறாள்.

“கண்ணத்தொட மாமா” என்றவள் சிரமப்பட்டு துடைத்தும் விட்டாள்.

“சிரி மாமா.”

“முடியல தங்கம். நீயி என் நெஞ்சுல நெத்தி முட்டி கட்டிக்கிட்டு நிப்பியே அப்படி நில்லு நான் சிரிக்கிறேன்” என்றான்.

அப்போதுதான் அவளின் கால் அடிபட்டு பெரிய கட்டாக போடப்பட்டிருப்பதை உணர்ந்தாள்.

“நடக்க முடியாது சொல்லிட்டாய்ங்களா மாமா?”

“ஆறுமாசம் ஆவுமாம்.”

மீனாளின் முகம் சின்னதாகியது.

“நான் எதுக்கு இருக்கேனாம். முகம் சுருங்குது. நெஞ்சில் சுமக்குற எனக்கு கையில சுமக்க கஷ்டமா என்ன?” என்றான்.

“கையி…”

“ரெண்டு மாசத்தில் சரியாப்போவும்.”

“அப்போ எக்ஸாம்?” அவளிடம் அதிர்வு. எப்படியும் இன்றைய தேர்வு எழுதவில்லை. இனி அடுத்தடுத்த தேர்வுகள் எழுதினாலும் வீண். மனம் வருந்தி தவிப்புடன் அவனை பார்த்தாள்.

“ச்சூ… அடுத்தவாட்டி பார்த்துக்கிடலாம் தங்கம்.” தேறுதலாக பேசினான்.

அவளின் முகத்தில் சிறு பயம்.

“என்னட்டி?”

“திரும்ப எக்ஸாம் எழுதுறவரை விலகி நிக்கிறேன், தள்ளி இருக்கேன்னு இருந்திடுவியா மாமா?” என்று பரிதவிப்போடு கேட்டாள்.

“மாட்டேன்… நீயி மொத்தமா என்னைவிட்டு போயிடுவேன்னு ரெண்டு நாளா நான் துடிச்சது போதுமாட்டிக்கு. வாழ்க்கை நீண்டு கிடந்தாலும், எப்போ என்ன வேணாலும் நடக்குமாட்டிக்கு. அதை எனக்கு காலம் வலிக்க உணர்த்திடுச்சு. எனக்கு உன்னோட திகட்டாத ஒரு வாழ்வு நொடிக்கு நொடி வாழணும்” என்று சொன்னவனின் முகத்தில் அவள் என்றும் பார்த்திடாத ஓர் உணர்வு. தவிப்பு, ஏக்கம், எதிர்பார்ப்பென எல்லாம் கலந்த கலவையாக பிரதிபலித்தான்.

யாவும் நொடியில் சிதறும் நீர்க்குமிழியாக உடைய காலம் காத்து நிற்கிறது.

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 46

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
40
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

4 Comments

  1. அண்ணன் – தம்பி ரெண்டு பேருக்கும் கஷ்ட காலம் தான்….

  2. குடும்பத்தினருக்கு மீனாள் வீரா காதல் தெரிந்திருந்தாலும் அதன் ஆழத்தினை கண்டுவிட்டனர் இன்று.

    உள்ளே உயிருக்கு போராடும் அவளை விட வெளியில் உயிர்பில்லா முகத்தோடு அமர்ந்திருக்கும் இவனை கண்டு தான் அனைவருக்கும் பெரும் வேதனை.

    அவனது கம்பீரமான முகத்தினையே கண்டு பழகியவர்களுக்கு அவன் இந்த அளவு உடைந்து போய் இருப்பதை பார்க்க திடமில்லை.

    மருதனுக்கும் மகளை விட மருமகனை நினைத்து தான் கலக்கமே.

    வன்மம் நிறைந்த வசந்தியை விலக்கி வைத்தாயிற்று.

    தங்கம் என்ற ஒற்றை வார்த்தைக்கு விழித்துவிட்டாலே மீனாள்.