
அகம்-36

“அறிவு இருக்கா ரோஹன் உனக்கு? பைத்தியமா டா நீ? அப்போவே உன் கிட்டே சொன்னேன் தானே? அந்த தீப்தி பொண்ணு சுஸைட் பிரச்சனை அப்போவே சொன்னேனே எல்லா ஆதாரத்தையும் க்ளியர் பண்ணுன்னு.. என்ன பண்ணிட்டு இருந்தே.? ஆணி புடுங்கிட்டு இருந்தியா?”
எரிச்சலும் கோபமாய் தன் எதிரே அமர்ந்திருந்த மகனிடம் கத்திக் கொண்டிருந்தார் தர்மேந்தர்.
மத்திய அமைச்சர் என்கிற அதிகாரம், மகனை அருகில் பார்ப்பதை சாத்தியமாக்கியிருந்தது. சிறையில் இருக்கிறோம் என்கிற உணர்வே இல்லாது, அதித கவனிப்புடன், ஐந்து நட்சத்திர விடுதி போன்றொரு அமைப்பில் தங்கியிருக்கும் மகனைப் பார்த்ததும் அவருக்குக் கொஞ்சம் நிம்மதியாய் இருந்தது. மத்திய மந்திரியின் மகன் என்பதால் யாரும் சட்டெனக் கை வைத்துவிட முடியாது தான். இருந்தாலும் தனக்குத் தெரியாமல் விசாரித்திருப்பார்களோ என்ற பயமும் அவருக்கு இருந்தது. ஆனால் விசாரணை எதுவும் மேற்கொள்ளப் படாது, விருந்தாளியைப் போல் சொகுசாய் மகன் இருப்பதில் அவருக்குக் கொஞ்சம் நிம்மதி தான்.
“சும்மா கத்தாதீங்க டாட்! என் பக்கமிருந்து எந்த ஆதாரமும் வெளியே போகவே இல்லை. எப்படி வெளியே போச்சுன்னு எனக்குத் தெரியலை.!”
“இப்படியே சொல்லிட்டு, இங்கே உட்கார்ந்து கம்பி எண்ணிக்கிட்டு இரு.! ஆதாரமா கிடைச்சிருக்கிறது உன்னோட பர்ஸ்னல் ஐ பேட்! இப்போவும் எப்படி போச்சுன்னு தெரியலைன்னு சொல்லுவியா இடியட்? இல்லை இப்படி சொகுசா இங்கே உட்கார்ந்திருக்கிறது நல்லா இருக்குன்னு நினைக்கிறியா? கட்சி மேலிடத்தில் கூப்பிட்டு கிழி கிழின்னு கிழிக்கறானுங்க! எல்லாத்துக்கும் காரணம் நீ தான். நீ வச்சிருந்த ஐ பேட், உனக்குத் தெரியாமல் நடந்து போச்சா?”
“வெய்ட்! வெய்ட்.. கம் அகெய்ன்? என்ன சொன்னீங்க? என் ஐ பேட் ஆதாரமாய் கிடைச்சுதா? அது காணாமல் போய்டுச்சு டாட்! நான் அதைத்தான் ஒன் வீக்கா தேடிட்டு இருக்கேன்.!” என ரோஹன் சொல்ல,
“வாட்.?” இந்தமுறை அதிர்வது தர்மேந்தரின் முறையானது.
“யா டாட்! அது மிஸ் ஆகிடுச்சு! பட் எப்படின்னு தெரியலை!”
“முட்டாள்! முட்டாள்! அசால்ட்டாய் தொலைஞ்சுடுச்சுன்னு சொல்றே? என் அரசியல் வாழ்க்கைக்கு முடிவு கட்டிடுவ போல..? ஒருவேளை இது எதிர்கட்சியோட சதியா இருக்குமோ? சைபர் க்ரைமில் ஆதாரத்தைக் கொடுத்தால், வேலைக்கு ஆகாதுன்னு தெரிஞ்சே, எதிகட்சியில் ஒரு முக்கியப் புள்ளிக்கிட்டே கொடுத்துருக்காங்க! இது உன்னை வச்சு எனக்கு போட்ட ப்ளானா இருக்குமோ? நீ செஞ்ச வேலையால் என் பதவியே போய்டும் போல.. பெத்தப் புள்ளையா பதவியான்னு வந்தால் நான் எதை செலெக்ட் பண்ணுவேன்னு உனக்குத் தெரியும் ” என்றபடியே யோசனையாய் மகனைப் பார்த்தார் தர்மேந்தர்.
“டாட்! முதலில் என் ஐ பேட், யார் மூலமா யாருக்குக் கிடைச்சதுன்னு மட்டும் விசாரிச்சு சொல்லுங்க! நான் நினைக்கிற ஆள் தானான்னு நான் சொல்றேன்!” ஏதோ யோசனையோடே பதில் சொன்னான் ரோஹன்.
“ம்ப்ச்.. இதெல்லாம் சரியா வருமா டா? நீ என்னமோ பண்ணித் தொலை.. எந்த ஆதாரமும் இல்லாமல் பண்ணுன்னு சொன்னேனா இல்லையா? வீடியோவைக் கூட அனலைஸ் பண்ணி, ஒரிஜினல் வீடியோன்னு சொல்லிட்டானுங்க! பத்தாக் குறைக்கு அந்த தீப்தி வேற செத்துப் போய், அது கொலை கேஸா மாறிடுச்சு. இப்போ உன்னால் நான் தான் மாட்டிக்கிட்டு முழிக்கிறேன். நீ ஜாலியா ஏசி ரூமுக்குள்ளே வந்து உட்கார்ந்துகிட்டே!”
“டாட்! ரிலாக்ஸ்.. முதலில் இந்த ஐ பேட் யார்கிட்டே இருந்து ஆப்போஸிட் பார்ட்டிக்கிட்டே போச்சுன்னு மட்டும் கேட்டு சொல்லுங்க!”
“ஒரு டென் மினிட்ஸ் வெய்ட் பண்ணு.. விசாரிச்சுட்டு வர்ரேன்.!” ரோஹன் விசாரணைக்காக தங்கியிருந்த அந்த சகல வசதிகளுடன் கூடிய அறையிலிருத்தது வெளியேறினார் தர்மேந்தர்.
தந்தை அங்கிருந்து அகன்றதும் கண்களுக்குள் வந்து போனது கருவிழியின் உருவம் மாத்திரம் தான். அவன் டெல்லியில் கணக்கிலடங்கா பெண்களுடன் பழகி இருக்கிறான் தான். ஆனால் மதுரையில் வெகு சொற்பமே.! அந்தச் சில பெண்களில் நீண்டகாலம் பழகிய பெண்களில் முதலும் கடைசியும் கருவிழி மட்டுமே. கருவிழியின் வழியாகத்தான் தன் வசமிருந்த ஐ-பேட் அவள் வசம் போயிருக்குமென்பதில் ரோஹனுக்கு துளியளவும் சந்தேகமே இல்லை.
ஏனென்றால், அன்று.. அவள் அவனை அடித்த நாளன்று.. அவளைத் தன் மகிழுந்த ஏற்ற முயன்ற போது, முதலில் அவன் பறித்து வாகனத்திற்குள் வீசியது அவள் தோள் பையைத்தான்.
அவள் தோள் பையைப் பறித்து வாகனத்தின் இருக்கையில் எறிந்துவிட்டு, அவளை வாகனத்திற்குள் ஏற்ற முயன்ற போது தான், தன்னை அறைந்து விட்டு அவள் சென்றிருந்தாள். சொல்லப் போனால் இருவரின் கடைசிச் சந்திப்பும் கூட அது தானே? அவளின் தோள் பையைப் பறித்து வீசுகையில், வாகன இருக்கையில் அவளின் புத்தங்கள் சிதறி விழுந்தது அவன் நினைவிற்கு வந்தது. அவனை அறைந்துவிட்டு, புத்தகங்களை அள்ளி பைக்குள் திணிக்கையில், அவனது ஐ-பேடும் தவறுதலாய் அவள் பைக்குள் இடம் பெயர்ந்திருக்கும். உறுதியாய் இது தான் நடந்திருக்கும் என்று கணிப்பதற்கு அவனுக்கு வெகு நேரம் தேவைப்படவில்லை.
“ரொம்பப் பெரிய தப்பு பண்ணிட்ட பேபி! தெரியாமல் எடுத்துட்டு போய்ட்டேன்னு என்கிட்டே வந்து கொடுத்திருந்தால் கூட, உன்னை விட்டுருப்பேனோ என்னவோ? இனிமே நோ வே பேபி! உன்னை விட மாட்டேன் டி! இதுக்கு மட்டும் நீ காரணம்ன்னு தெரியட்டும்.. உன்னைக் கொல்லாமல் விட மாட்டேன் டி! நீ அணு அணுவா துடிச்சு துடிச்சு சாகணும்! செதில் செதிலாய் உன்னை அனுபவிச்சுக் கொல்லுவேன் டி!” கண்கள் பழி வெறியையும் தாண்டிய வன்மத்தில் பளபளத்தது ரோஹனுக்கு.
அடுத்த பத்து நிமிடத்தில் மீண்டும் அறைக்குள் வந்த தர்மேந்தர், ரோஹனின் யூகம் சரியென்பதை உறுதி செய்ய, வெறிப் பிடித்தவன் போல் அறையதிரக் கத்தினான் அவன்.
“எனக்கு இங்கிருந்து வெளியே போகணும்! முதலில் எற்பாடு பண்ணுங்க! எனக்கு வெளியே போகணும்! அவளைக் கொல்லணும்!”
“பொறுமையாய் இருடா! மீடியா, எதிர்கட்சின்னு எல்லாருடைய கவனமும் நம்ம மேலதான் இருக்கு. நான் வேணும்ன்னா உன்னை டெல்லிக்கு கூட்டிட்டுப் போறதைத் தாமதப் படுத்தறேன். இப்போதைக்கு நீ சென்னையில் இருப்பது தான் நல்லது.!”
“யோவ்! நான் சொல்றது புரியுதா இல்லையா உனக்கு? எனக்கு அவளைக் கொல்லணும். என் கையால் கொல்லணும்!”
“ஜஸ்ட் ஷட் அப் ரோஹன்! நான் உன்னை நிரந்தரமா வெளியே எடுக்க ப்ளான் பண்ணிட்டு இருக்கேன். சட்டப்படி அதற்கு வாய்ப்பு இல்லை! கொஞ்சம் பொறுமையாய் இரு! முழுசா ப்ளான் பண்ணிட்டு சொல்றேன். அதுவரை நீ அமைதியாய் இருந்து தான் ஆகணும்! வெளியில் வந்த பிறகு நீ என்ன வேணும்னாலும் பண்ணிக்கோ!” என்றவர் மகனின் பதிலை எதிர்பாராது எழுந்து சென்றிருக்க..
“கரு…விழி!” என்றவனின் அலறலில் அந்தச் சிறைச்சாலையே அதிர்ந்து அடங்கியது.
********
அதே நேரம்,
“தப்பா எடுத்துக்காதீங்க! நீங்க வந்து அன்றைக்கு பேசும் போது, வேணாம்ன்னு தான் நினைச்சோம். பிறகு பெரியம்மாவே வந்து பேசினாக! அவங்க சொன்ன பிறகு தான் வயசைக் காட்டி, பிள்ளைகளை ஏன் பிரிக்கணும்ன்னு தோணிச்சு. உங்க கிட்டேயும் ஒரு மாதிரி பேசிட்டோம் தப்பா எடுத்துக்கிடாதீங்க!” நிஜமாவே மனம் வருந்தி, அரசியிடமும், பூங்கொடியிடமும் மன்னிப்பு வேண்டினார் மதுவின் தாய் மஞ்சுளா.
“அட இதுக்கெல்லாம் என்னத்துக்கு சங்கடப் படுறீக! நம்ம பிள்ளைகள் தானே? கடைசியில் சம்மதிச்சுட்டீங்க தானே? அதுவே போதும்.!” என பூங்கொடி சொல்ல கூடத்தில் விரித்திருந்த ஜமுக்காளத்தில் அனைவரும் அமர்ந்திருந்தனர்.
மதுவின் தாய் தந்தையோடு மது ஒருபுறம் அமர்ந்திருக்க, தன் அன்னை தங்க மீனாட்சியுடன், அழகரைப் பார்த்த படியே அமர்ந்திருந்தாள் கருவிழி. எதிரில் நெடுமாறனோடு, சரவணனும் பூங்கொடியும், அழகருடன், அரசியும் கதிர்வேலும் அமர்ந்திருந்தனர்.
சக்கர நாற்காலியில் நடப்பதைப் பார்த்துக் கொண்டு, சொக்கேசன் அமர்ந்திருக்க, கயலழகியும், காத்தவராயனும் ஓரமாய் நின்றிருந்தனர். சரவணனும் கதிர்வேலும் விஷேஷத்தில் பங்கு கொண்டதிலேயே அங்கயற்கண்ணிக்கு கொஞ்சம் நிம்மதியாய் இருந்தது.
சரவணனுக்கும் கதிர்வேலுவுக்கும், அங்கயற்கண்ணி செய்த ஏற்பாடுகளில் பிடித்தம் இல்லாத போதும், ‘உங்க பிள்ளைகளுக்கு நல்ல அப்பனா யோசிங்க!’ எனச் சொன்ன அவரின் வார்த்தைகளை சாதாரணமாக தவிர்க்கவும் முடியவில்லை.
“பெரிய விசேசமா ஏற்பாடு செஞ்சு பரிசம் போட்டுடலாம்ன்னு தான் நினைச்சோம். ஆனால் இவுக முடியாமல் கிடக்கிறப்ப, அம்புட்டு பெருசா வைக்கணுமான்னு ரோசனையா இருந்துச்சு. இவுகளும் நானும் நல்லா இருக்கும் போதே, பேரப் பிள்ளைங்க கல்யாணத்தை பார்த்துப்புடணும்ன்னு ஒரு எண்ணம் உள்ளே ஓடிட்டே இருக்கு. புள்ளை படிக்குது படிப்பு வீணாப் போயிரும்ன்னு கவலைப் பட வேணாம். மது இனிமே எங்க வீட்டுப் புள்ளைதேன். நம்பி அனுப்புங்க பார்த்துக்கிடுவோம்!” என அங்கயற்கண்ணி சொல்ல, நொடுமாறனின் பார்வையும், மதுவின் பார்வையும் தொட்டுத் தழுவி நின்றது.
“உங்களுக்கு சம்மதம் தானே? எதுவும் சங்கடம் இருந்தால் சொல்லிப்புடுங்க!” மஞ்சுளாவையும், திருமூர்த்தியையும் தீர்க்கமாய்ப் பார்த்தார் அங்கயற்கண்ணி.
“நீங்களே வந்து பேசின பிறகு யோசிக்க எதுவும் இல்லைங்கம்மா! எங்க பொண்ணை உங்கப் பேரனுக்குக் கொடுக்க பரிபூரண சம்மதம்மா!” என அவர்கள் சொன்னதும், வெற்றிலை ,பாக்கு, பூ, பழம் அடங்கிய தட்டை இருவரும் மாற்றிக் கொள்ள, நெடு மாறனுக்கும், மதுவிற்கும் வாங்கி வைத்திருந்த மோதிரத்தை அவரவர் கரத்தினில் கொடுத்தார் அங்கயற்கண்ணி.
மதுவையும், நெடுமாறனையும் பக்கத்தில் நிறுத்தி, மோதிரம் மற்றிக் கொள்ளச் சொல்ல, புன்னகையும், தயக்கமுமாய் மோதிரம் மாற்றிக்கொண்டு பெரியவர்களிடம் ஆசி பெற்றனர் இருவரும்.
அதே போல், மீனாட்சியும், அரசியோடு கதிர்வேலும் தாம்பூலம் மாற்றிக் கொள்ள, அழகருக்கும், விழிக்கும் கூட, மோதிரங்களை வாங்கி வைத்திருந்தார் அங்கயற்கண்ணி.
பொன்மஞ்சள் நிறப் புடவையில், அரக்கு நிற ஆரி ஒர்க் செய்யப்பட்ட ப்ளௌஸ் அணிந்து, அழகரின் முகம் பார்க்கத் தயங்கி, இமைகள் குடையாய் விரிந்து கண்களை மறைத்திருக்க, அவனை நிமிர்ந்துப் பார்க்காது நின்றாள் கருவிழி. இத்தனை நாள் இருந்த மாமன் மகன் என்ற உணர்வைத் தாண்டி புதுவிதமான உணர்வு அவள் உள்ளமெங்கும் வியாபித்திருக்க, அவன் முகம் பார்க்கவே நிரம்பவும் தயக்கமாய் இருந்தது அவளுக்கு.
“ஏய் கரு.. கரு..!”
“நிமிர்ந்து பாரு டி..!”
“மாட்டேன் மாமா! ஒரு மாதிரி தயக்கமா இருக்கு..!” அவளுக்கே கேட்காத மெல்லிய குரலில் சொன்னாள் கருவிழி.
“இந்தாரு தங்கச்சி, சட்டுபுட்டுன்னு முடிச்சு விடுங்க! முடிச்சுப்புட்டு சாப்பிடப் போக வேணாம்! நீங்க அங்கிட்டு போய் தனியா வெட்கப்படுங்க! எம்மா தங்கச்சி கொஞ்சம் நிமிர்ந்து தான் பாரேன்..!” காத்தவராயன் சொல்ல, சங்கடமாய் நிமிர்ந்தவள் அழகரைப் பார்க்க, அவள் விழிகளோடு தன் விழி கலந்தவன், அவள் மென்விரல் தொட்டு மோதிரத்தை அணிவித்திருந்தான்.
மீண்டும் அவன் விரல்களில் மோதிரம் அணிவிக்கையில் அவள் தலை கவிழ,
“என்னைப் பாருடி கரு கரு!” காதோரம் உரசிய அவன் குரலில் அவளுள் ஏதேதோ மாற்றங்கள். அப்போதும் தலைவியோ தலைவனை நிமிர்ந்துப் பார்க்கத் துணியவில்லை.
“ஸ்ஸ்ஸ்.. ஆஆஆ.. மெதுவா டி..!” என்ற வலி மிகுந்தாற் போன்ற பொய்ச் சிணுங்களில் தலைவியின் வதனம் தன்னால் நிமிர, அவள் அணிவித்த மோதிரம் அவன் விரலில் குறுகுறுப்பூட்ட, மனம் அவளோடு இணையும் நாளுக்காய் எதிர்பார்த்துக் காத்திருந்தது இனி நடக்கவிருக்கும் விபரீதங்கள் அறியாமல்.
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


ரோஹனுடனான கடைசி சந்திப்பில் கரு கரு மிக சாமர்த்தியமாக செயல்பட்டுள்ளால்.
அவளை தொல்லை செய்ய நினைத்து அவன் செயல்புரிய, கரு கருவோ அவனுக்கு தொல்லை அளிக்கும் விடயத்தை செய்திருக்கிறாள்.
ரோஹன் கொஞ்சம் sharp தான் போல. தனக்கு எதிராய் ஆதாரம் அளித்தது கருவிழியாக தான் இருக்கும் என கண்டுகொண்டானே.
நெடு மது நிச்சய தாம்பூலம், அழகர் விழி நிச்சய தாம்பூலம் 😍
என்ன கரு கரு புதுசா வெட்கம் எல்லாம் வருது.
மிக சுவாரசியமாக செல்கின்றது. அடுத்தடுத்து என்ன விபரீதம் நிகழப்போகின்றதோ.