
யான் நீயே 36
தேர்வு முடித்து வீரனும் மீனாளும் வீட்டிற்கு வரும் பொழுது யாரும் இல்லை.
“இன்னும் ஆலையிலிருந்து யாரும் வரல போலிருக்கே மாமா” என்ற மீனாள் நாமும் ஆலைக்கு போவோமா?” எனக் கேட்டாள்.
“வரும்போதே பார்த்துட்டு வந்திருக்கலாம்” என்ற வீரன், “நீயி உறங்கி எழும்பு. நான் வரேன்” என்று கிளம்பினான்.
“நானும் வாரனே மாமா!”
“இறங்கி வந்ததும் அடம் பிடிக்கிற தங்கம்.” வீரனின் குரல் அதட்டலாக வந்திட… “நான் தூங்கிட்டேன்” என்று உடலை குறுக்கி மெத்தையில் படுத்துவிட்டாள்.
“உண்கிட்டு உறங்கு தங்கம்” என்றவன் ஆலைக்கு சென்றுவிட்டான்.
“ம்ப்ச்…” சலிப்பாக எழுந்து அமர்ந்தவள், “இதுக்கு முன்ன மாறியே இருந்திருக்கலாம். ஊட்டியாவது விட்டுருப்பாங்க” என்று திரும்பிட, உணவோடு நின்றிருந்தான் வீரன்.
இந்த இரண்டு வருடத்தில் தள்ளி இருந்தாலும், விலகலை இருவருமே உணராது இருந்ததற்கு முக்கிய காரணம், வீரன் மீனாளுக்கு உணவு ஊட்டுவது.
ஒரு வேளையாவது அவன் ஊட்டிடுவான். அதுவே அவர்களுக்குள் உயிர்ப்பை கொடுத்திருந்தது. பழகியும் இருந்தது. அவனாக கொடுப்பதில் திருப்தி அவனுக்கு. அவன் கொடுத்து உண்பதில் வயிறோடு சேர்த்து மனமும் நிறையும் அவளுக்கு.
மீனாளை முறைத்துக்கொண்டே ஊட்டி முடித்தவன்,
“இருந்துக்கிடுவோமா?” எனக் கேட்டான். தட்டிலே கையினை கழுவியவனாக.
மீனாள் மெத்தையில் அமர்ந்திருந்த நிலையில் இரு கைகளையும் விரிக்க…
“முடியாது போடி” என்றவன் அவளின் முன் நெருங்க… அவனை இடையோடு கட்டிக்கொண்டவள் வயிற்றில் முகம் புதைத்துக்கொண்டாள்.
“இப்படியே இருந்திடலாம் மாமா!”
“இருந்திருந்தா படிப்பில் கோட்டை விட்டிருப்ப நீயி. ஒத்த நாளுக்கே எம் பின்னால சுத்த ஆரம்பிச்சிட்ட. பரீட்சை முடியுற வரைக்கும் வெரப்பாவே இருந்திருக்கணும் போல” என்றான். அவளின் முதுகை சுற்றி கட்டிக்கொண்டவனாக.
“நீயி இருந்துக்கோ மாமா. ஆனால் என்னைய இருக்க சொல்லாத… ரெண்டு வருசம்… நீயி பக்கமிருந்தும், மூச்சு முட்டிப்போச்சு” என்றவளின் ஈரம் சட்டை தாண்டி அவனால் உணர முடிந்தது.
“நீயி எக்ஸாம் கிளியர் பண்ணி, ட்ரைனிங் பீரியட்லாம் முடிஞ்சு, அந்த சீட்டில் உட்கார்ந்ததும் எல்லாம் மறைஞ்சுப்போவும் தங்கம். இதுக்கெதுக்கு வெசனப்படுற” என்றவன் அவளின் முகம் பிரித்து, தன்னை பார்க்குமாறு கன்னம் தாங்கி உயர்த்தியவன், அவளின் நெற்றி முட்டினான்.
“எனக்கு உன்னைக்காட்டிலும் எதுவும் பெருசு இல்லை மாமா. புரிஞ்சிக்கோயேன். இனி இந்தமாறி கோட்டித்தனமா என்னவும் பண்ணாத” என்று முறைத்துக்கொண்டு கூறினாள்.
வீரன் அவளின் கோவத்தில் சத்தமிட்டு சிரித்தாலும் அவளின் காதலை உள்வாங்கிட மறக்கவில்லை.
வீரனின் சிரித்த முகத்தை இமைக்கொட்டாது ரசித்தவள்,
“முத்தா கொடு மாமா!” என்று கன்னத்தைக் காட்டினாள்.
“ஹான்… உனக்கு வேணுமின்னா நீயி கொடுடி” என்று அவனும் தன் கன்னத்தைக் காட்டினான்.
“மொத நாந்தேன் கேட்டேன். நீயி கொடு.”
“நீயி…”
இருவரும் மாற்றி மாற்றி பிடிவாதம் பிடிக்க…
“யாரோ கொடுங்க… அதுக்கு முன்ன கதவை மூடுங்க” என்று கூறிவிட்டுச் சென்றான் லிங்கம்.
“நான் எப்போ லவ்சு பண்ணாலும்… இந்த லிங்கு பயலுக்கு மூக்கு வேர்த்துப்போவுது” என்று சொல்லிக்கொண்டே வீரன் கதவினை சாற்றிட வர, அங்குதான் சற்றுதள்ளி மார்பிற்கு குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு நின்றிருந்தான் லிங்கம்.
“என்னடே!”
“உன்னை பார்த்துதாண்ணே கத்துகிட்டு இருக்கேன்” என்றான் லிங்கம்.
“என்னதுடே!’
“லவ்சு…”
“அடிங்…” என்று வீரன் வேட்டியை மடித்துக் கட்டியவனாக லிங்கத்தை அடிக்க செல்ல, அவனோ கையில் அகப்படாது ஓடினான். வீரனும் விடாது விரட்டினான். லிங்கம் கீழே ஓடிட… வீரனும் தொடர்ந்தான்.
இருவரின் சத்தமும் கேட்டு வெளியில் வந்த மீனாள், அவர்களின் செயலில்…
“விடாத மாமா… பிடி பிடி… நீயி இன்னும் வேகமா ஓடு மாமா” என்று இருவருக்கும் துணையாக கத்திட…
இருவருமே ஒன்றாக நின்று அவளை பார்த்தனர்.
“என்ன?” மீனாள் மிதப்பாகக் கேட்டிட…
“நீயி யாருக்கு சப்போர்ட் பண்ற?” என ஒருசேரக் கேட்டனர்.
“ரெண்டேருக்குந்தேன்… எனக்கு ரெண்டேருமே முக்கியம்” என்றவள் இருவருக்கும் நடுவில் வந்து நிற்க…
“இது கள்ளாட்டம்” என்றான் லிங்கம்.
“எது?” எனக் கேட்டுக்கொண்டே அங்கை வர,
“எல்லாரும் வந்தாச்சா?” எனக் கேட்டான் வீரன்.
“பொம்பளை ஆளுவ மட்டும் வந்தாச்சு மாமா” என்ற அங்கை வீரனின் அருகில் சென்று நின்றாள். அனைவரும் உள்ளே வந்தனர்.
“இப்போ பாரு” என்று மீனாளிடம் கண்காட்டிய லிங்கம்,
“நீயி எங்க ரெண்டேருல யாருக்கு சப்போர்ட் பண்ணுவ?” என அங்கையிடம் கேட்டான்.
அவளோ சற்றும் யோசிக்காது…
“வீரா மாமாவுக்குதேன்” என்றிருந்தாள்.
“ம்ம்ம் பாரு… நீயுந்தேன் இருக்கியே!” என்று மீனாளின் தோளில் இடித்தான் லிங்கம்.
“வலிக்க போவுதுடே” என்ற வீரன் மீனாளை தன் பக்கம் இழுத்தான்.
அவர்களின் சேட்டையை வசந்தியை தவிர மற்றவர்கள் விளையாட்டாக பார்த்து ரசித்தபடி அமர்ந்தனர்
“இப்படியே உம் பக்கட்டுக்கு இழுத்து புடிச்சிக்க அமிழ்தா… யாரு புருஷன் பொண்டாட்டின்னே தெரியல” என்றபடி தூணில் சாய்ந்தவாறு கால் நீட்டி தரையில் அமர்ந்த வசந்தி…
“அசதியா இருக்குது. மோர் கொடு மீனாளு” என்று தன்னை துளைக்கும் அனைவரின் பார்வையையும் தவிர்த்தவராக சேலை தலைப்பால் முகத்தை துடைத்துக் கொண்டிருந்தார்.
“அந்த ஃபேனை போடு அங்கை.”
“உங்க தலையில வேணுமின்னா போடுறேன்” என்று அங்கை கோபமாக முணுமுணுக்க…
“சும்மா இரு அங்கை” என்று அவளை அடக்கினான் வீரன்.
“என்ன சும்மா இருக்கணும்? காலையிலேர்ந்து ஒருமாறித்தேன் பேச்சு வருது அவங்களுக்கு” என்று சீறினான் லிங்கம்.
“குடும்பத்துக்குள்ள குழப்பம் பண்ண பாக்குறாய்ங்கன்னு புரியுதுல. அப்புறம் என்னத்துக்கு நாம அதை கண்டுக்கிடனும். எம்புட்டு நாளைக்கு பேசிடுவாய்ங்க?” என்ற வீரன், வாய் திறந்து ஏதோ சொல்ல வந்த மீனாட்சியினை பார்வையால் தடுத்து,
“எங்க மனசுல எந்த அழுக்கும் இல்லை பெரிம்மா. பார்க்குற உங்களுக்கு தப்பா தெரிஞ்சா அழுக்கு உங்க மனசுலதேன்” என்று கூர்மையாகக் கூறினான்.
“ம்க்கும்… ரொம்பத்தேன். ஊருல யாரும் நாக்கு மேல பல்லு போட்டு பேசிடக்கூடாதேன்னு சொன்னேன். நீங்க எப்படியிருந்தாக்கா எனக்கென்ன?” என்ற வசந்தி…
“நான் என் வூட்டுக்கு போயி ஜூஸ் குடிச்சிக்கிறேன்” என்று சென்றிருந்தார்.
“கொஞ்சநா அடங்கியிருந்தாள். இப்போ ஆரம்பிச்சிட்டாள்.” மீனாட்சி புலம்பினார்.
“அமிழ்தன் ஆலை கட்டுன கடுப்பும்மா அவளுக்கு. அதை காலையிலேர்ந்து இப்படி காட்டிட்டு திரியுறாள்” என்று மகா சரியாகக் கூறினார்.
எல்லாம் சேர்ந்த கோபம் வசந்தியின் மனதில் வன்மமாக வளர்ந்திருக்க… அறுத்திட காத்திருக்கிறார்.
அவரின் கண்ணில் இன்று லிங்கம், அங்கையின் காதல் காட்சி பட்டிருக்க…
“எப்படி கல்யாணம் நடக்குது பார்க்கிறேன்” என்று சூளுரைத்துக் கொண்டார்.
அங்கை ஊருக்கு வந்து நான்கு மாதங்கள் ஆகியிருந்தது. தினமும் இரவில் லிங்கத்துடன் இரண்டு நிமிடங்களாவது வீடியோ காலில் பேசிடுவாள். அவள் மட்டுமே பேசுவாள். அவன் ரசித்துக் கொண்டிருப்பான். ஒருநாள் கால் வரவில்லை என்றாலும் அவளை உண்டில்லை என்று செய்திடுவான்.
“வெயிட் பண்றதுக்கு நீயே பண்ணலாம்ல மாமா?” என்று அங்கை கேட்டால்,
“நான் வெயிட் பண்ணி நீயி கூப்பிடறது நல்லாயிருக்கு அங்கை” என்று கண்களில் காதலோடு சொல்லும் அவனின் அந்த முகம் காணவே வேண்டுமென்று தமாதாமாக அழைத்திடுவாள்.
“காக்க வச்சு வேறுப்பேத்துறியாடி” என்று முதலில் முறுக்கிக்கொள்பவன் அழைப்பின் இறுதியில் அவளை கெஞ்சி கொஞ்சிக் கொண்டிருப்பான்.
இந்த வருடம் அவளின் படிப்பு முடிகிறது என்பதில் அங்கையை விட லிங்கம் தான் பலத்த எதிர்பார்ப்போடு இருக்கிறான்.
காலை அங்கையை மதுரையிலிருந்து நேராக ஆலைக்குத்தான் அழைத்து வந்திருந்தான் லிங்கம்.
அவர்கள் இருவரும் ஒன்றாக வருவது புதிதில்லை என்றாலும், அவர்களுக்கு நடுவில் தெரிந்த நெருக்கம் வேறு கதை சொல்ல வசந்தி உன்னிப்பாகக் கவனித்தார்.
லிங்கத்தின் பின்னால் அமர்ந்திருந்த அங்கையின் கரம் அவனின் தொடை மீது, லிங்கத்தின் கையை பற்றி பிணைத்தபடி இருந்தது.
“கையை வுடு அங்கை. எல்லாரும் இருக்காய்ங்க” என்ற லிங்கத்தின் பேச்சினை காதிலே வாங்காதது போல் மேலும் பிணைத்துக் கொண்டவள்,
“உன்னை கட்டிக்கணும் போல இருக்கு மாமா. இறுக்கமாக கட்டிக்கோ… விடுறேன்” என்றாள்.
“அதெல்லாம் கல்யாணத்துக்கு பொறவு தான்” என்றவன் வலுக்கட்டாயமாக தன் கையை பிரித்தெடுத்து வண்டியை நிறுத்தினான்.
லிங்கு இறங்கியதும் யாரும் பார்க்கின்றார்களா என நோட்டமிட்ட அங்கை நொடியில் அவனை இழுத்துக்கொண்டு மரத்திற்கு பின்னால் மறைவாக மறைந்திருந்தாள்.
சரியாக அந்நொடி வசந்தியால் தற்செயலாக காண நேர்ந்தது.
‘மரத்துக்கு பின்னாடி இதுங்க ரெண்டும் என்ன பண்ணுதுங்க?’ என்று யோசித்தவரின் பார்வை அங்கேயே நிலைத்திருந்தது.
“அங்கை இதென்ன விளையாட்டு. யாரும் பார்த்தால் தப்பாகிடும்” என்று லிங்கம் வெளிவர பார்க்க, அவனை இழுத்து மரத்தின் தண்டில் சாய்த்தவள் இரு பக்கமும் கைகளை குற்றி…
“ரொம்ப பண்ற மாமா நீயி… இப்படி கட்டிக்கவே இம்புட்டு ரோசிக்கிற” என்று அவனின் மார்பில் தலை வைத்து அழுத்தமாக அணைத்துக் கொண்டாள்.
இருவருக்குமான முதல் அணைப்பு. கண்கள் மூடி இதம் உணர்ந்தவனின் கைகள் தன்னைப்போல் மேலெழும்பி தன்னவளை அணைத்திருந்தது.
லிங்கத்தின் அணைப்புக்குள் இருந்தவாறே முகம் உயர்த்தி அவனின் முகம் பார்த்தவள், அதில் தெரிந்த காதல் கிறக்கத்தில் மெல்ல அவனது பாதத்தின் மீது ஏறி நின்று அவனது இதழில் பட்டும் படாது தன்னிதழை உரசி எடுக்க…
“கொடுத்தா இப்படி கொடுக்கணும்” என்று அவள் அதரத்தை தனக்குள் முழுதாய் விழுங்கியவனாக சுவைத்து விடுவித்தான்.
நெஞ்சில் கை வைத்து மூச்சு வாங்குபவளை ரசனையாக பார்த்தவன்,
“உசுப்பேத்தி விடுற வேலை வச்சிக்கிட்டனா சேதாரம் உனக்குத்தேன்” என்றான்.
“இந்த சேதாரம் நல்லாத்தேன் இருக்குமாட்டிக்கு மாமா” என்றவள், “உன்கிட்ட ஒத்த முத்தம் வாங்க உசுரு போயி வருது” என்றாள்.
“இது தான் லாஸ்ட் அங்கை. கல்யாணம் ஆவுற வரைக்கும் கொஞ்சம் அடங்கி இருடி. மனுசனை போட்டு வதைக்கிற” என்று லிங்கம் மரத்திற்கு பின்னிருந்து முன் செல்ல, அவனுக்கு பின்னால் வந்தவள் லிங்கம் உணரும் நொடியில் கன்னத்தில் அழுந்த இதழ் படித்து ஓடினாள்.
அங்கை லிங்கத்திற்கு கன்னத்தில் முத்தம் வைத்த காட்சியை கண்ட வசந்தி,
“அடியாத்தி…” என்று நெஞ்சில் கை வைத்துக்கொண்டார்.
‘இந்த சின்னதையாவது வளைச்சு போடலாமின்னு பார்த்தாக்கா. காரியம் கெட்டுப்போச்சுதே’ என நினைத்த வசந்திக்கு மொத்த குடும்பத்தையும் வருத்தி வைக்க ஒரு காரணம் கிடைத்துவிட்டதாக எண்ணினார்.
அதற்கான காய்களை அங்கை கொண்டு மெல்ல நகர்த்த ஆரம்பித்தார்.
இதில் லிங்கம் துடித்து நிற்க… அவனை கொண்டு மொத்த குடும்பமும் நிலை குலைந்து தவிக்க போகின்றனர்.
வீரனின் கண்ணசைவுக்கு அடி வைத்திடும் அங்கை… அவனது கெஞ்சலுக்கே செவி சாய்க்காது தன் குடும்பத்தை கலங்கடிக்க இருக்கிறாள்.
****************
வீரன் சர்க்கரை ஆலை சென்று திரும்பிட வெகு இரவாகியிருந்தது. வீரன் சென்றதுமே அங்கிருந்த பாண்டியன், மருதன் வீடு வந்திருந்தனர்.
மாலையே கௌதம் சுபா மற்றும் சுந்தரேசனுடன் துபாய் கிளம்பிவிட்டான்.
ஏனோ அவனால் வசந்தியுடன் மனம் ஒத்துப்போகவில்லை.
“இம்புட்டு நேரஞ்செண்டு உண்கினா உடம்பு என்னத்துக்கு ஆவுமாட்டிக்கு அமிழ்தா” என்ற அபி, சாப்பாட்டினை எடுத்து வைக்க…
“தங்கம் சாப்பிட்டாளாம்மா?” எனக் கேட்டு உணவு மேசை இருக்கையில் அமர்ந்தான்.
“உனக்காகக் காத்திருந்தாள் போல… மணியாவவும் , இப்போதேன் சாப்பிட வச்சு அனுப்பினேன்” என்றவர் மகனுக்கு பரிமாறினார்.
“நாச்சியாக்கு ஏதும் போட வாங்கி வச்சிருக்கியா கண்ணு?”
“நீங்களும் அப்பத்தாவும் நாலு நாளுக்கு முன்ன மருத செண்டு வாங்கியாந்திங்களேம்மா” என்றவன், “வேறெதுவும் வாங்கணுமா?” எனக் கேட்டான்.
“செத்த மின்ன பலகார பிள்ளையார் பிடிச்சோம். வசந்தி வாங்குன நகையை காட்ட சொன்னாளேன்னு எடுத்து காட்டினேன். என்ன பண்ணான்னு தெரியல… அறுந்துப்போயி இருக்குது” என்று கொண்டு வந்து காட்டினார்.
“ஏற்கனவே அயித்த வசந்தி மேல கோபமா இருக்காங்க. தெரிஞ்சா என்ன சொல்லுவாங்களோ? நம்மால மருதன் அண்ணேவுக்கு சங்கட்டம் எதுக்குன்னு மதினிகிட்டவும் சொல்லிக்கல” என்றார்.
அபியிடம் அதீத வருத்தம்.
சுப நிகழ்விற்காக வாங்கியது. இப்படி சகுனத்தடை போல் செய்துவிட்டாரே என்றிருந்தது.
“விடுங்கம்மா தெரியமா நடந்திருக்கும்” என்ற வீரனுக்கே அது உண்மையில்லை என்று தெரியும்.
“தானா அறுந்து இருந்தாக்கா சொல்லியிருப்பாளே அமிழ்தா!”
“அவங்களே கவனிக்கலையாட்டு” என்ற வீரன் உண்டு முடித்து கையை கழுவி வந்தான்.
வீரன் நேரத்தை பார்க்க பதினொன்றை தாண்டியிருந்தது.
“இந்நேரம் எந்த கடையும் திறந்திருக்காதேம்மா” என்று வீரன் யோசித்திட…
“காலையிலே ஒன்பது மணிக்குலாம் மனையில உட்கார வச்சிப்புடனும் அயித்த சொன்னாய்ங்க அமிழ்தா. கடையே பத்து மணிக்குத்தேனே திறக்கும்” என்றார். கவலையாக.
“வளையல் வாங்கியிருக்கே! அதை போடுங்கம்மா. பொறவு நாச்சியா இங்கன வந்ததும் நிறைக்க வாங்கி போட்டுடலாம்” என்றான்.
“சபை நிறையாது சாமி.”
வீரனுக்கும் அவரின் சங்கடமான நிலை புரியத்தான் செய்தது. இதுபோன்ற விழாக்களில் எவ்வளவு சீர் செய்கிறார்கள் என்பதை பேசவே ஒரு கூட்டம் வருமே. ஆனால் இப்போது கடைசி நொடியில் வீரனாலும் என்ன செய்திட முடியும்?
“நாம எப்பவும் வழக்கமா நகை எடுக்கும் கடை ஓனர் தம்பி, உம்ம கூட்டாளித்தானே அப்பு. கேட்டுப்பாரேன்” என்றார்.
அந்த யோசனை வீரனுக்கும் தோன்றிடவே அவனுக்கு அழைத்து விட்டான்.
வீரன் தயங்கித்தான் கேட்டான்.
ஆனால் வீரனின் நண்பன் சுரேஷ்…
“இன்னும் கடையடைக்கல அமிழ்தா. வாரக்கடைசி கணக்கு பார்த்துக்கிட்டு இருக்கோம். நீயி அரை மணியில வந்தீய்ன்னா எடுத்துப்புடலாம்” என்றான்.
“அவன் வர சொல்றான். போயிட்டு வந்துடுறேன்” என்று வீரன் கிளம்ப,
“மீனாளை கூட்டிட்டு போயேன் அமிழ்தா. புள்ளை நல்லா பார்த்து எடுக்குமே” என்றார் அபி.
“வேண்டாம்மா… அவள் படிச்சிக்கிட்டு இருப்பாள்” என்று சொல்லியபோதும் வீரனின் கால்கள் தன்னைப்போல் மாடியேறியது.
அபி புன்னகைத்தவராக அறைக்குள் சென்றுவிட்டார்.
மீனாளுடன் நேரம் செலவழித்து மாதங்கள் பல ஆகியிருந்தது. ஒன்றாக வெளியில் சென்றும். அந்த ஏக்கம் வீரனுக்குமே இருந்திட அவளுடன் வெளியில் செல்ல நினைத்தான்.
மரத்தாலான படிகள் என்பதால் வீரனின் வரவை உணர்ந்த மீனாள் புத்தகத்தை மூடி வைத்துவிட்டு அறையின் வாயிலுக்குவர…
அவளின் காத்திருப்பு அவனுக்கு புரிவதாய். அவன் மனம் அவளின் காதலை உணர்வதாய்.
“வெளிய போய் வருவோம். வா தங்கம்” என்று அவன் நிலைப்படியில் நின்றே அழைத்திட…
எங்கு என்று ஒரு வார்த்தை கேட்காது வேகமாக விழிகள் விரித்து உற்சாகமாகத் தலையாட்டியவள்,
“பைக்லயா மாமா?” எனக் கேட்டாள்.
“ம்ம்.”
“டூ மினிட்ஸ் மாமா!” என்றவள் உள்ளே சென்ற வேகத்தில் ஆடை மாற்றி வெளியில் வந்தாள்.
தாவணிக்கு என்ன?”
அணிந்திருந்த தாவணி மாற்றி பளாஸோ பேண்ட்டும் டாப்பும் அணிந்து வந்திருந்தாள்.
“வண்டியில் ஏறியதும் சொல்றேன்” என்றாள்.
“வெளிக்கதவை பூட்டிடு தங்கம்” என்றான் வீரன்.
மீனாளும் பூட்டிவிட்டு சாவியை அதற்குரிய இடத்தில் வைத்துவிட்டு வர, வீரன் வண்டியை இயக்கியிருந்தான்.
வீரனின் பின்னால் இரு பக்கமும் காலிட்டு அமர்ந்தவள், அவனின் இடையில் கைகள் நுழைத்து வயிற்றில் கோர்த்து பிடித்தவளாக அவனின் முதுகில் ஒட்டிக்கொண்டு அமர்ந்தவளின் தாடை அவனது தோளில் பதிந்திருந்தது.
“தங்கம்…” வீரனின் குரல் உணர்வுகள் பிடியில் காற்றாகி ஒலித்தது.
“இதுக்குத்தேன் ட்ரெஸ் மாத்தினேன்” என்றவள் சற்று எம்பி, அவனின் கன்னத்தில் முத்தம் வைக்க…
“நான் எதுவும் பார்க்கல” என்ற குரல் கேட்டது.
“இந்த லிங்கு பயலுக்கு…” என்று பற்களை கடித்த வீரன், அவன் எங்கு என்று பார்வையை மேலுயர்த்தி சுழற்ற…
மொட்டை மாடி சுவற்றினை பிடித்துக்கொண்டு கை காட்டினான்.
“அங்கன என்னடே பண்ற?”
“நீங்க பண்ற லவ்ஸ் பார்க்கத்தேன்…”
“அடிங்க…”
“உங்கக்கிட்ட இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன் அண்ணே!” என்று லிங்கம் கேலி செய்ய,
“உங்களுக்குத்தேன் ஆளிருக்கே மாமா. நீயே லவ்ஸ் பண்ணலாமே! எதுக்கு எங்கமேல கண்ணு போடுற?” என்று மீனாள் கேட்க, லிங்கம் கையெடுத்து கும்பிட்டு…
“நீயி கிளம்புத்தா! வூடு அமைதியா இருக்குது. என் கதையை போட்டு கொடுத்துப்புடாதே! யாருக்கும் கேட்டுச்சுன்னாக்கா எங்கிருந்து பிரச்சினை வருமுன்னே தெரியல” என்றான்.
“அந்த பயம் இருக்கணும்” என்று மீனாள் விரல் ஆட்டி சொல்ல…
“உனக்கு மட்டுந்தேன் அந்தப்பய அடங்குறான்” என்றான் வீரன்.
“ம்க்கும்… உன் கண்ணசைவுக்கு லிங்கு மாமா நவரும் எங்களுக்குத் தெரியுமாட்டிக்கு. நீயி வண்டியை முடுக்கு மாமா” என்றவள் தங்களை பார்த்து நின்ற லிங்கத்திற்கு புன்னகை முகமாக சென்று வருவதாக கையசைத்திருந்தாள்.
இருவரும் ஒன்றாக செல்லும் காட்சியை கண்கள் நிறைக்க பார்த்து நின்றிருந்தான் லிங்கம்.
தன் அண்ணனின் முகத்தில் தெரியும் மகிழ்வு காலத்துக்கும் நீடிக்க வேண்டுமென மனதார நினைத்தவனுக்கு இன்னும் சற்று நேரத்தில் அந்த மகிழ்வு காணமல் போகவிருக்கிறது என்பது தெரிந்திருக்கவில்லை.
குளிர்ந்த காற்று முகத்தில் மோத, தன் தங்கப்பொண்ணுவின் நெருக்கத்தில் வண்டியில் பறந்து கொண்டிருந்த வீரனின் மனம் சிறகின்றியே விண்ணில் மிதந்தது.
“குல்ஃபி வாங்கித்தா மாமா?”
அவனது தோளில் முகம் பதித்திருந்தவளின் இதழ் அவனின் செவிமடல் உரசிட… கட்டுப்படுத்தி வைத்திருக்கும் உணர்வுகள் யாவும் பொங்கி பிரவாகம் எடுத்திட…
“யூ ஆர் டிரைவிங் மீ தங்கம்” என்று கூறினான்.
“ம்க்கும்… பொய் சொல்லாத மாமா. நீதான் என்னை உன் பக்கட்டு தேடிவர வைக்கிற” என்றவள், “இப்படியே வாழ்க்கை முழுக்க போயிட்டே இருக்கலாம் மாமா” என்றாள் வானோக்கி முகம் உயர்த்தி இரு கைகளையும் பறவையின் சிறகாக நீண்டு விரித்து.
“கொஞ்சம் அடங்கி உட்காருடி. மனுசன் நிலைமை புரியாமல்” என்றவன் வண்டியை நிறுத்திவிட்டான்.
“ஏன் நிறுத்திட்டீங்க?”
“இறங்கி என் முன்னுக்க வா தங்கம்.”
அது முக்கிய சாலையிலிருந்து கிளை சாலையாக பிரிந்த அவர்கள் ஊருக்கு செல்லும் பாதை. அந்நேரத்தில் சிறு பூச்சியின் அரவம் கூட இல்லை. இருபக்கமும் வயல்கள் சூழ்ந்து கும்மிருட்டாக இருந்தது.
“என்ன மாமா?” இறங்கி தன் முன் வந்து நின்று கேட்டவளின் இறுதி ஒலி வீரனின் வாய்க்குள் அடங்கி ஒலித்தது.
மீனாளின் இமைகள் புருவம் தொட்டு மெல்ல மெல்ல மூடிக்கொண்டன.
மீனாளின் கைகள் உயர்ந்து அவனது பிடரியில் நுழைந்துகொள்ள… வீரன் இதழ் வழி தன்னவளின் உயிரை உறிஞ்சிய பின்னரே விடுவித்தான்.
மீனாள் வீரனின் முகம் பார்க்கத் திணறியவளாக கீழ் அதரம் கடித்து தடுமாறிட…
“மெல்ட் பண்ணாம உட்காருடி” என்றான் வீரன்.
“தாடி குத்துது மாமா. எடுத்துப்புடு” என்று சொல்லியவளாக மீனாள் வண்டியில் ஏறிட…
“மீசை குத்தலையாட்டுக்கு?” என்றான் வீரன்.
“அதை நீயி முறுக்கிவிட்டு நடந்து வரது ரொம்ப புடிக்கும் மாமா. அது இருக்கட்டும்” என்றவள் தன் கையை வீரனின் முகத்துக்கு நேராக முன் கொண்டு சென்றவள் அவனின் மீசையை இரு பக்கமும் முறுக்கிவிட்டிருந்தாள்.
“இந்த நெனப்புல பரீட்சையை மறந்துப்புடதா தங்கம்.”
“ம்க்கும்… என்ன பண்ணாலும் நீயி உன் கரியாயத்துல கண்ணுதேன் மாமா” என்றாள்.
அவனை சீண்டி குறும்பு செய்து பேசியபடி இருவரும் நகைக்கடை வந்து சேர்ந்தனர்.
“இந்நேரத்தில் நகை வாங்கவா? யாருக்கு?”
மீனாள் கேட்டிட வீரன் காரணத்தைக் கூறினான்.
இருவரும் உள்ளே செல்ல, சுரேஷ் வீரனை அணைத்து விடுத்தான்.
“ஆளுங்க எல்லாவும் போயிட்டாய்ங்க. மேனேஜர் தான் இருக்கார். அவரோட போயி பாருங்க” என்று சுரேஷ் சொல்ல…
தான் கையோடு கொண்டு வந்திருந்த நகையை எடுத்து சுரேஷிடம் கொடுத்த வீரன், “நாலு நாளைக்கு முன்னுக்க இங்கன வாங்கியதுதேன். எப்படின்னு தெரியல. வுட்டுப்போச்சு. பத்தவச்சு கொடுக்க முடியுமாடே?” எனக் கேட்டிருந்தான்.
நாச்சி பிடித்திருக்கிறதென்று அத்தனை ஆசையாக சொல்லியிருக்க, அதனை அப்படியே விட அவனுக்கு மனமில்லை.
“அதுக்கான ஆளு காலையிலதேன் வருவாய்ங்க அமிழ்தா. கொடுத்திட்டு போ. நாளைக்கு சாயங்காலம் வந்து வாங்கிக்க. நானே கடையில இருப்பேன்” என்றான் சுரேஷ்.
அதன் பின்னர் இருவரும் நகை தேர்ந்தெடுத்திட… ஒரு மணி நேரம் சென்றிருந்தது.
முழுக்க மரகதம் பதித்த நகை தோடு முதல் அட்டிகை, ஆரம், வளையல், மோதிரம் என்று இருக்க… அதனின் வேலைப்பாடும் புதுமாதிரியான வடிவமைப்பும் ஈர்த்திட அதையே மீனாள் தேர்வு செய்தாள்.
“முன்ன வாங்கினதைவிட சவரன் கூடுதலா இருக்கும்ல?”
வீரன் கேட்டிட மீனாள் ஆமென்றாள்.
“அப்போ நாளைக்கு உன் வசந்தி அத்தை மூஞ்சில கடுகு பொறிக்கலாம்” என்று வீரன் சிரித்திட… அவனை முறைக்க முடியாது மீனாளும் சிரித்திருந்தாள்.
பில் போட்டு அதற்குரிய தொகை செலுத்தி வெளியில் வர மேலும் இருபது நிமிடங்கள் ஆகியிருந்தது.
“ரொம்ப தேன்க்ஸ்டே…” வீரன் சுரேஷின் கரம் பற்றி குலுக்கிட…
“எனக்குதேன் லாபமாட்டிக்கு” என்ற சுரேஷ், “பார்த்து போடே” என்று அனுப்பி வைத்திருந்தான்.
வண்டியின் அருகில் செல்வதற்குள்,
“மாமா குல்ஃபி” என ஆயிரம் முறைக்கு கேட்டுவிட்டாள்.
“இந்நேரம் சாப்பிட்டால் தொண்டை கட்டும், தும்மல் வரும் தங்கம்” என்று வீரன் எவ்வளவோ எடுத்து சொல்லியும் மீனாள் கேட்கவில்லை.
முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டு வர…
கண்ணாடி ஊடே அவளின் முகம் கண்டவன்,
“வாங்கித்தரேன் அப்படி மூஞ்சியை வைக்காதடி” என்றான்.
“நீயி மொத வாங்கித்தா” என்றவள் முகத்தை மாற்றிக்கொள்ளவே இல்லை.
இரவு நேரங்களில் குல்ஃபி கிடைக்கும் இடம் சென்றவன், அவர்களுக்கு எதிர் புறம் ஒரு குல்ஃபி வண்டி செல்ல, அவரை அழைத்து நிற்க வைத்து, தன்னுடைய வண்டியை நிறுத்தினான்.
“இங்குட்டே நில்லு. வாங்கி வரேன்” என்று சாலையை கடந்து எதிரே செல்ல…
“மாமா நாலு” என்று கத்தியவளுக்கு சரியென தலையசைத்தபடி குல்ஃபியை வாங்கிக்கொண்டு திரும்பியவனின் முகம் பேரதிர்ச்சியை தத்தெடுத்திருந்தது. காணும் காட்சி பார்வையை மங்கச் செய்திட… சுற்றம் மறந்து சமைந்து நின்றான்.
டமால் என்ற பெரும் சத்தம் வீரனை சுயம் மீட்க…
“தங்கம்” என்ற வீரனின் பெருங்குரல் அவ்விடத்தை கிடுகிடுக்க வைத்தது.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
36
+1
+1
1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


Very shocking…
🫂🫂🫂🫂
Yena achu
All is well
உரிமையான உறவாய் இருந்தும் மனம் நிறைய நேசம் இருந்தும் விலகி நிற்பது என்பது பெரும் சுமை தான்.
அன்பையும் அக்கறையையும் வழங்கி ஒருவாறு மனதை தேற்றிக்கொண்டு இருக்கின்றனர்.
வீரனே எப்பவாவது தான் romance செய்றான் அப்பவும் அவன correct டா catch செஞ்சிடரியே லிங்கம்.
வசந்தியின் மனதின் அழுக்கு பேச்சிலும் வெளிப்படுகின்றது.
இவர்களது காதல் காட்சி இவர் கண்ணிலா பட வேண்டும்.
கஷ்டத்திற்கு முடிவு காலம் என்று நினைத்தால் இப்பொழுது தான் ஆரம்பமாகின்றது.
Super super super super acho enna aaachu