Loading

அத்தியாயம் 5

 

அடுத்த அரை மணி நேரத்தில், யாழ்மொழியையும் இன்பசேகரனையும் மருத்துவமனையிலிருந்து வெளியேற்றி விட்டனர்.

 

உபயம் யுகேந்திரன்!

 

அவனின் பதவியை உபயோகித்து இருவரையும் வெளியேற்றி இருந்தான். மேலும், அந்த விபத்தில் சில சிக்கல்கள் இருப்பதாகவும், அதைக் கண்டறியும் வரை அங்கு நடந்ததைப் பற்றி யாரிடமும் கூற வேண்டாம் என்றும் அந்த மருத்துவமனையில் இருந்தவர்களிடம் கேட்டுக் கொண்டான்.

 

இருவருக்கும் சிகிச்சை அளித்த மருத்துவரோ, இன்னமும் அதிர்ச்சியிலிருந்து வெளிவரவில்லை.

 

அவர்தான், இன்பசேகரன் திடீரென்று தோன்றியதையும், அவனின் காயங்கள் நொடியினில் மறைந்ததையும் கண்களால் கண்டு, நம்பவும் முடியாமல் நம்பாமலும் இருக்க முடியாமல் திகைத்து விட்டாரே.

 

யுகேந்திரன் கூறியதை ஒப்புக்கொள்வதைத் தவிர அவருக்கும் வேறு வழியில்லை என்பதால் தலையை அசைத்தார்.

 

“போலீஸ்கார் ஃபிரெண்டா இருக்குறதும் ஒருவழியில நல்லதுதான் போல, இல்ல மொழி?” என்று சுடரொளி யாழ்மொழியின் பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்த மென்மொழியிடம் கிசுகிசுக்க, “சும்மா இருடி. நம்ம மனசுல நினைச்சா கூட அவருக்கு தெரிஞ்சுடுதுன்னு நானே பீதில இருக்கேன்.” என்றாள் மென்மொழி.

 

“ஆஹான், அப்போ அவரைப் பத்தி எக்குத்தப்பா எதையோ நினைச்சு வச்சுருக்க போலயே! என்னன்னு எனக்கு மட்டும் சொல்லேன்.” என்று நமுட்டுச் சிரிப்புடன் சுடரொளி வினவ, தோழியை முறைத்தாள் மென்மொழி.

 

சற்றுத் தள்ளி கட்டிலில் அமர்ந்திருந்த யாழ்மொழியோ, கண்ணாடியில் அவளின் முகத்தைக் கண்டு வருந்திக் கொண்டிருந்தாள்.

 

“ப்ச், எனக்கு மட்டும் ஏன் இப்படி?” என்று அவள் முனக, அதே சமயம், “கடவுள் இருக்கான் குமாரு…” என்று சத்தமாகக் கூறினாள் சுடரொளி.

 

அங்கிருந்த மற்ற மூவரும் அவளை முறைக்க, கையைத் தூக்கியவள், “உடனே, கூட்டணி சேர்ந்து முறைச்சுடுவீங்களே! ஹலோ மொழி சிஸ்டர்ஸ் அண்ட் நீயும்தான் மேன்… உங்களுக்கு என்ன பவர் எல்லாம் இருக்குன்னு இன்னும் தெரியல. நீங்க பாட்டுக்கு முறைச்சுட்டே இருக்காதீங்க… நானே பாவம்!” என்றாள் சுடரொளி.

 

அவளின் தலையில் செல்லமாகத் தட்டிய மென்மொழியோ, “எங்களுக்கெல்லாம் என்ன பவர் இருக்குன்னு ஓரளவு தெரிஞ்சுடுச்சு. ஆனா, உனக்கு என்ன பவர் இருக்குன்னுதான் இன்னும் தெரியல.” என்று கூற, “ஆமாவா, நான்தான் ஆட் ஒன் அவுட்டா?” என்று சுடரொளி கூறும்போதே, அங்கு வந்த யுகேந்திரன், “டிஸ்சார்ஜ் ஃபார்மாலிட்டிஸ் எல்லாம் ஓவர்.” என்றவன், மென்மொழியிடம், “உங்க தாத்தா வீட்டுக்கு போனா ஏதாவது லீட்ஸ் கிடைக்குமா? ஆர் யூ ஸ்யூர்?” என்று வினவினான்.

 

“ம்ம்ம், கண்டிப்பா ஏதாவது தகவல் கிடைக்கும். ஏன்னா, இந்த கல்லெல்லாம் எங்க தாத்தாதான் கலெக்ட் பண்ணி வச்சுருந்தாரு. உங்க கிட்ட இருக்க ப்ளூ கலர் கல் கூட அங்கதான் இருந்துச்சு. ஆனா, எப்படி உங்க கிட்ட வந்துச்சுன்னுதான் தெரியல.” என்றாள் மென்மொழி.

 

“ஒரு திருட்டு கேஸ்லதான் இந்த கல்லு கிடைச்சது. மேபி, அவங்க திருடி இருக்கலாம்.” என்று யுகேந்திரன் அந்த கல்லைப் பார்த்துக் கொண்டே கூற, “ஒரு கல்லை மட்டும் திருடுவாங்களா என்ன?” என்றான், அத்தனை நேரம் அமைதியாக இருந்த இன்பசேகரன்.

 

“இதுக்கு பதில் எனக்கும் தெரியல. ஃபர்ஸ்ட் வீட்டுக்கு போய் ஏதாவது தகவல் கிடைக்குதான்னு பார்ப்போம்.” என்ற யுகேந்திரன் அறையை விட்டு வெளியேற, மற்றவர்களும் அவனைப் பின்தொடர்ந்தனர்.

 

“ஆமா, உன் தாத்தா ரொம்ப வருஷமா இந்த கல்லுங்களை வச்சுருந்தாருன்னு சொன்னதான? அப்போ உன் தாத்தாக்கும் பவர் இருந்துச்சா என்ன?” என்று சுடரொளி மென்மொழியிடம் கேட்க, “அதெல்லாம் ஒன்னுமில்ல.” என்று அவள் பதில் கூறுவதற்கு முன்பே யாழ்மொழி கோபமாகக் கூறினாள்.

 

சிறுவயதிலிருந்தே எப்போதும் திட்டும் தாத்தாவை யாழ்மொழிக்கு சுத்தமாக பிடிக்காது. அதனால் உண்டான வெறுப்பு அவள் குரலில் தெளிவாக புலப்பட்டது.

 

“ஒருவேளை இந்த கல்லுக்கு இப்போதான் பவர் வந்துருக்குமோ?” என்று இன்பசேகரன் கேட்க, “இருக்குமோ?” என்று சுடரொளி சத்தமாக சிந்தித்தாள்.

 

“எல்லா கல்லும் ஒரே நேரத்துல ஆக்டிவேட் ஆகியிருக்கு.” என்று யுகேந்திரன் கூற, “அதே மாதிரி, எல்லாருக்கும் ஆக்சிடெண்ட்டும் ஆகியிருக்கு.” என்று யோசனையுடன் கூறினாள் மென்மொழி.

 

“ஆக்சிடெண்ட் ஆனதால பவர் வந்துச்சா, இல்ல பவர் வந்ததால ஆக்சிடெண்ட் ஆச்சா?” என்று யாழ்மொழி வினவ, “ரெண்டுக்கும் ஏதோ கனெக்ஷன் இருக்கு.” என்றாள் சுடரொளி.

 

பேசிக் கொண்டே மருத்துவமனையை விட்டு வெளியே வந்தவர்கள், அவரவரின் வாகனத்தை தேடிச் செல்லும் நேரத்தில், ஒரு வாகனம் வேகமாக அவர்களை நோக்கி வந்து நின்றது.

 

நொடியில் நடந்த நிகழ்வில் ஐவரும் அதிர்ந்து நிற்க, வந்தவர்களோ அவர்களைக் கண்டு விட்டு, யாருக்கோ அலைபேசியில் அழைத்தனர்.

 

அவர்களின் செயல்களை எல்லாம் உன்னிப்பாக கவனித்த யுகேந்திரனோ, “அவங்க நம்மள தேடித்தான் வந்துருக்காங்க. நோக்கம் கண்டிப்பா நல்லதா இல்ல.” என்று கூற, “பார்த்தாலே ரவுடி மாதிரி இருக்காங்க. என் பிஞ்சு உடம்பு தாங்காது. வாங்க ஓடிடலாம்.” என்று சுடரொளி கூறினாள்.

 

“ஆமா, வா சீக்கிரம் போலாம்.” என்ற மென்மொழி திரும்பிப் பார்க்க, அங்கு சுடரொளியைக் காணவில்லை.

 

“அடிப்பாவி, அதுக்குள்ள விட்டுட்டு ஓடிட்டியா?” என்று மென்மொழி கூற, “நான் எங்கடி போனேன். இங்கதான் நின்னுட்டு இருக்கேன். உனக்கென்ன கண்ணா தெரியல.” என்று கத்தினாள் சுடரொளி.

 

சுடரொளியின் குரல் மட்டும் திடீரென்று கேட்க, பயந்து போனவர்கள் சுதாரிக்க முழுதாக ஒரு நிமிடம் தேவைப்பட்டது.

 

“எதுக்கு எல்லாரும் பேயை பார்த்த மாதிரி ரியாக்ஷன் குடுக்குறீங்க?” என்று சுடரொளி கேட்க, “உன் பவர் இன்விசிபிலிட்டி போலடி.” என்றாள் மென்மொழி.

 

“எதே? அப்போ நான்தான் உங்க கண்ணுக்கெல்லாம் தெரியலையா? அடக்கடவுளே, இப்போ எப்படி தப்பிக்க போறோம்?” என்று சுடரொளி வினவ, “நீ ஏற்கனவே தப்பிச்சுட்ட. நாங்கதான் என்ன பண்ண போறோம்னு தெரியல.” என்றாள் யாழ்மொழி.

 

அப்போது யுகேந்திரனோ, “ஆபத்து சமயத்துல பவர் ஆக்டிவேட் ஆகுது போல.” என்றவன், அவன் கையில் ஒளிரும் நீல நிறக் கல்லை காட்டினான்.

 

அப்போதுதான் அனைவரும் தங்கள் கரத்திலிருந்த கற்களும் ஒளிர்வதைக் கண்டனர்.

 

யுகேந்திரனோ கண்களை மூடி எதையோ கிரகிக்க முயன்றவன், “நம்ம கிட்டயிருந்து கல்லை எடுத்துட்டு போறதுதான் அவங்க பிளான். அதுக்கு நம்மள கொல்லக் கூட தயக்கம் காட்ட மாட்டாங்க.” என்று அவனுக்கு கிடைத்த சக்தியைப் பயன்படுத்தி கூற, அனைவரும் செய்வதறியாது திகைத்துப் போயினர்.

 

யுகேந்திரனோ இன்பசேகரனிடம் திரும்பி, “உனக்குத்தான் டெலிபோர்டேஷன் பவர் இருக்குல. உன்னால எங்களையும் இங்க இருந்து வேற இடத்துக்கு டெலிபோர்ட் பண்ண முடியுமா?” என்று வினவ, “எனக்கு பவர் இருக்குன்னே இப்போதான் தெரியுது. இதுல இதெல்லாம் எப்படி தெரியும்?” என்று முனகிய இன்பசேகரன், “செக் பண்ணிப் பார்ப்போம்.” என்று கூறினான்.

 

அதன்படி அனைவரும் இன்பசேகரனின் கையை பற்றிக் கொள்ள, “சுடர், நீ இருக்கியா? இன்பாவை பிடிச்சுக்கோ.” என்று மென்மொழி கூற, “ம்ம்ம் பிடிச்சுட்டேன்டி. இன்பா, சீக்கிரம். அந்த ரவடிஸ் நெருங்கிட்டாங்க.” என்றாள் சுடரொளி.

 

இன்பசேகரனோ, “இப்போ எப்படி டெலிபோர்ட் செய்யுறதுன்னு தெரியலையே.” என்று கண்களை மூடி புலம்ப, “இது சரியான ஐடியாவா எனக்கு தோணல.” என்றாள் யாழ்மொழி.

 

அவள் கூறுவதற்கு நியாயம் செய்வது போல, அந்த ரவுடிகள் இவர்களை நெருங்க இன்னும் சில அடிகளே இருந்தன.

 

யாழ்மொழியின் பேச்சு இன்பசேகரனுக்கு சிறிது கோபத்தை கொடுத்திருக்க, அதன் தாக்கத்தில் மீண்டும் கண்களை மூடி முயல, சட்டென்று ஐவரும் அந்த இடத்திலிருந்து மாயமாகி வேறொரு இடத்திற்கு வந்து சேர்ந்தனர்.

 

நால்வரை அழைத்துக் கொண்டு வந்ததாலோ என்னவோ இன்பசேகரன் மிகுந்த சோர்வுடன் காணப்பட்டான்.

 

யாழ்மொழியே முதலில் அவனைக் கண்டு, “இன்பா!” என்று கத்தி, அவன் சோர்வுடன் தள்ளாடும் போது பிடிக்க முற்பட, அவளைத் தடுத்தான் இன்பசேகரன்.

 

அவன் தவிர்த்தது மற்றவர்களுக்குத் தெரியவில்லை.

 

மென்மொழி வேகமாக இன்பசேகரனிடம் நெருங்கி, “பார்த்து இன்பா.” என்று கவலையுடன் கூற, அவளின் ஸ்பரிசமே அவனை நொடியினில் குணமாக்கி இருந்தது.

 

“இப்போ ஓகே மொழி.” என்ற இன்பசேகரன், யாழ்மொழி பக்கம் பார்வையை திருப்பாமல் இருக்க, அவளின் மனமோ அதற்குச் சரியாகத் தவறான காரணத்தை யோசிக்க ஆரம்பித்தது.

 

யுகேந்திரனோ, “நம்ம கிட்ட இருக்க கல் ஆக்டிவேட்டானப்போ, நம்ம என்ன மனநிலைல இருந்தோமோ, அதுதான் நம்ம பவர்ஸை யூஸ் பண்றதுக்கான வழின்னு நினைக்குறேன்.” என்று யோசனையாகக் கூறியவன், “நான் சிலை திருட்டு கேஸ்ல அக்யூஸ்ட்டை அரெஸ்ட் பண்ண போனப்போ, நடந்த கைகலப்புல எனக்கு காயம் ஏற்பட்டுச்சு. அப்போதான் இந்த கல்லும் கிடைச்சுது. அதைப் பத்தி தீவிரமா யோசிச்சுட்டு இருந்தப்போதான் இந்த கல்லு க்ளோ ஆச்சு. அதோட, என்னைச் சுத்தி இருக்கவங்க வாய் திறந்து பேசாமலேயே, அவங்க குரல் தெளிவில்லாம எனக்குள்ள கேட்க ஆரம்பிச்சது.” என்றான்.

 

அப்போது மற்றவர்களின் கண்களுக்குப் புலப்பட்ட சுடரொளியோ, “அப்போ நீங்க எதையாவது ஆர்வத்தோட யோசிச்சா, அந்த பவர் ஆக்டிவேட் ஆகுமா?” என்று வினவ, “எஸ், அதே மாதிரிதான் உங்களுக்கும். நீங்க அப்போ எந்த மனநிலைல இருந்தீங்கன்னு சொல்லுங்க.” என்று மற்றவர்களையும் ஊக்கினான்.

 

“அப்போ குறிப்பா எந்த மனநிலைல இருந்தேன்னு ஞாபகம் இல்ல. ஆனா, இப்போ இன்விசிபிலானப்போ… பயம்… ஆமா, பயத்துல இருந்தேன்.” என்றாள் சுடரொளி.

 

“மேபி, நான் கவலையா இருந்துருப்பேன்.” என்று யாழ்மொழியைப் பார்த்தவாறு மென்மொழி கூற, “நான் கோபத்துல இருந்தேன்னு நினைக்குறேன்.” என்றான் இன்பசேகரன் யாழ்மொழியைப் பார்க்காமல்.

 

மற்ற மூவரின் பார்வை யாழ்மொழியை நோக்க, “நான் விரக்தில இருந்தேன்.” என்றாள். அதை சொல்லும்போதே அவளின் தோற்றம் மாறியது.

 

“ஹே யாழ், நீ பழையபடி மாறிட்ட.” என்று சுடரொளி கூற, அதற்கு அவளோ, “ஓஹ்…” என்றதோடு நிறுத்திக் கொண்டாள்.

 

மென்மொழியோ சகோதரியின் கரத்தை ஆதரவாகப் பற்றிக்கொள்ள, “நாம எங்க இருக்கோம்?” என்று சுடரொளி கேட்க, அப்போதுதான் அதைச் சிந்திக்க ஆரம்பித்தனர் அனைவரும்.

 

“அந்த ஹாஸ்பிட்டலயிருந்து ரெண்டு தெரு தள்ளி டெலிபோர்ட்டாகி இருக்கோம்.” என்று யுகேந்திரன் கூற, “ரெண்டு தெருதானா?” என்று பயத்தில் வினவினாள் யாழ்மொழி.

 

“ப்ச் யாழ், அதுக்கே இன்பாக்கு முடியல.” என்று மென்மொழி கடிந்து கொள்ள, “இதுதான ஸ்டார்ட்டிங். அப்படித்தான் இருக்கும் போல.” என்ற யுகேந்திரன், “நீங்க இங்கயே மறைஞ்சு நில்லுங்க. நான் அங்க போய், அந்த ரவுடிஸ் போயாச்சுன்னா காரை எடுத்துட்டு வரேன்.” என்றான்.

 

“எங்க வெஹிக்கிலும் அங்கதான் இருக்கு. நாங்களும் வரோம்.” என்று மென்மொழி கூற, “நோ, அது சேஃப் இல்ல. அங்க சிசுவேஷன் எப்படி இருக்கும்னும் தெரியல.” என்று மறுத்தான் யுகேந்திரன்.

 

“இன்பா அவன் பவரை யூஸ் பண்ணி எல்லாரையும் டெலிபோர்ட் பண்ண மாதிரி, என்னாலயும் எல்லாரையும் இன்விசிபிலாக்க முடியுமான்னு செக் பண்ணிட்டு, எல்லாரும் சேர்ந்தே போவோமே.” என்று சுடரொளி கூற, “எனக்குமே எல்லாரும் சேர்ந்து இருக்குறதுதான் பெட்டர்னு தோணுது. நல்லா யோசிச்சு பார்த்தா, நமக்கு கிடைச்ச பவர்ஸை எல்லாம் தனித்தனியா பார்த்தா ஓரளவு டிஃபென்ஸுக்கு மட்டும்தான் யூஸாகும். ஆனா, சேர்ந்து இருந்தா எஃபிசியண்ட்டா எதிர்த்து நிக்க முடியும்.” என்று விளக்கம் கொடுத்தாள் மென்மொழி.

 

அதன்படி, முதலில் சுடரொளியின் சக்தியை சோதித்துப் பார்க்க முடிவெடுத்தனர்.

 

நால்வரையும் தன்னைப் பிடித்துக் கொள்ளச் சொன்ன சுடரொளி கண்களை மூடி, மனதிற்குள் ஒரு நிகழ்வை நினைக்க, தானாகவே பயம் அவளை ஒட்டிக்கொண்டது.

 

சிறிது நேரத்தில் கண்களைத் திறந்தவள், “இப்போ நாம இன்விசிபிலாகிட்டோமா இல்லையான்னு எப்படி கண்டு பிடிக்கிறது?” என்று கேட்க, எரிச்சலான யாழ்மொழியோ சுடரொளி மீதிருந்து கரத்தை எடுத்துவிட்டு, “இது ஒர்க்கவுட்டாகாது.” என்று கூறியவள், அவர்களை நோக்க, அவர்கள் நின்றிருந்த இடம் காலியாக இருந்தது.

 

அதைக் கண்டு அதிர்ந்த யாழ்மொழி, “மொழி…” என்று கத்த, “உன் பக்கத்துலதான நிக்கிறா. எதுக்கு இப்படி கத்துற?” என்று சுடரொளி வினவ, “ஹே இது ஒர்க்கவுட்டாகிடுச்சு.” என்றாள் யாழ்மொழி.

 

இப்போது மென்மொழியோ, “நான்தான் சொன்னேன்ல எல்லாரும் ஒன்னா இருக்கணும்.” என்றாள் யுகேந்திரனை பார்த்தபடி.

 

அவனும் தகையசைத்து அவளுக்கு ஒப்புதல் வழங்க, ஐவரும் அந்த மருத்துவமனை நோக்கி சென்றனர்.

 

அங்கு அவர்கள் எதிர்பார்த்தபடி யாரும் இல்லாமல் போக, வேகமாக அவரவரின் வாகனத்தை நோக்கி சென்றனர்.

 

இன்பசேகரன் மற்றும் யாழ்மொழியைத் தன்னுடைய வாகனத்தில் வரக்கூறிய யுகேந்திரன் மென்மொழியிடம், “நீங்க முன்னாடி போங்க. நான் உங்களை ஃபாலோ பண்ணி வரேன்.” என்றான்.

 

*****

 

டெல்லி…

 

அந்த அறையின் ஜன்னல்கள் திரைச்சீலைகளினால் மூடப்பட்டிருக்க, இருள் சூழ்ந்த அந்த அறையின் ஒரு பகுதி மட்டும் இரவு விளக்கின் ஒளியில் ஒளிர்ந்தது. அதற்குப் போட்டியாக அந்த ஒளியை உள்வாங்கி ஒளிர்ந்து கொண்டிருந்தது அந்த கருநிறக்கல்.

 

அதையே பார்த்தபடி இருந்தவனைக் கலைத்தது, அந்த அறைக்கதவை திறந்து வந்தவளின் குரல்.

 

“என்னங்க, எவ்ளோ நேரம் அந்த கல்லையே பார்த்துட்டு இருக்கப் போறீங்க? வேலைக்கு போகணும்னு நினைப்பு இருக்கா? லாயரை பார்க்கப் போகணும்னு வேற சொன்னீங்க!” என்றவள் மெத்தையிலிருந்த போர்வையை மடித்து வைத்தபடி, “அங்க போயிட்டு வந்ததுலயிருந்து இப்படித்தான் இருக்கீங்க.” என்று முனக, அவளின் கரத்தை இறுகப் பற்றினான் அவன்.

 

அதிலே அதிர்ந்து அவனை அவள் பார்க்க, “நான் என்ன செய்யணும், எப்போ செய்யணும், எப்படி செய்யணும்னு எல்லாம் நீ சொல்லக் கூடாது, புரிஞ்சுதா?” என்று அவன் கடுமையாகக் கூற, வலியில் நெளிந்தவளோ அவனிடமிருந்து தள்ளி வந்து, “எதுக்கு இப்படி காட்டுமிராண்டி மாதிரி பிஹேவ் பண்றீங்க? ச்சீ, இனி உங்க விஷயத்துல நுழையவே மாட்டேன், போதுமா? நீங்களே என்னவோ செய்ங்க, எனக்கென்ன வந்துச்சு?” என்று கத்தியவள், அந்த அறையிலிருந்து விறுவிறுவென்று வெளியேறினாள்.

 

அவனோ அதைப் பற்றி பெரிதாகக் கவலை கொள்ளாமல், மீண்டும் அந்த கல்லில் பார்வையைச் செலுத்த, அதுவோ அவனிடம் ஏதோ கூறுவது போல அவன் கண்களுக்கு மட்டும் புலப்பட்டது.

 

*****

 

ஐவரும் ஆராவமுதனின் (மென்மொழியின் தாத்தா) இல்லத்திற்கு முன்பு நின்றிருந்தனர்.

 

“இங்க எதுவும் இருக்காது. தேவையில்லாம டைம் வேஸ்ட் பண்ண வேண்டாம்.” என்று யாழ்மொழி சுழித்த முகத்துடன் கூற, “அப்போ எதுக்கு இங்க வந்து, அந்த ஆரஞ்சு கல்லை எடுத்தியாம்?” என்றாள் சுடரொளி.

 

“ப்ச், நீ எதுக்கு என்னை கேள்வி கேட்குற? இது என் தாத்தா வீடு. எனக்கு எல்லா உரிமையும் இருக்கு.” என்று யாழ்மொழி கூற, “உரிமை இருக்குறவ எதுக்குத் திருடனும்?” என்று மெல்லிய குரலில் முனகினாள் சுடரொளி.

 

சுடரொளியைக் கண்டனப் பார்வை பார்த்த மென்மொழி, “ரெண்டு பேரும் கொஞ்ச நேரம் சும்மா இருக்கீங்களா?” என்றவள், அந்த வீட்டின் கதவைத் திறக்க, அனைவரும் உள்ளே சென்றனர்.

 

மற்ற நால்வருக்கும் அந்த வீடு பரிச்சயம் என்பதால், ஏதாவது தகவல் கிடைக்குமா என்று சுற்றிலும் பார்க்க, யுகேந்திரன் அந்த வீட்டைச் சுற்றிப் பார்த்தான்.

 

“உங்க தாத்தா நிறைய ரிசர்ச் பண்ணியிருப்பாரு போல?” என்று யுகேந்திரன் வினவ, மொழிகள் பதில் சொல்வதற்கு முன்னர், “ஹையோ, அதை மட்டும் கேட்காதீங்க. அப்புறம் ஹிஸ்டரி ஜியாகிரஃபின்னு கதை சொல்ல ஆரம்பிச்சுடுவா.” என்று சலிப்புடன் கூறினாள்.

 

“ப்ச், சுடர்!” என்று மீண்டும் கண்டனப் பார்வை பார்த்த மென்மொழி, யுகேந்திரனிடம் திரும்பி, “உங்களுக்கு குமரிக்கண்டம் பத்தி தெரியுமா?” என்று ஆர்வத்துடன் வினவினாள்.

 

“கடலுக்குள்ள போன இடம்தான? ஓரளவு தெரியும்.” என்றவன், சுற்றி இருக்கும் குறிப்புகளை ஒரு பார்வை பார்த்து விட்டு, “இவ்ளோ டீடெயிலா தெரியாது.” என்றான்.

 

மென்மொழியோ, அவளுக்கு தெரிந்தவற்றைக் கூற ஆரம்பித்து விட, “இதுக்குத்தான் வேண்டாம்னு சொன்னேன். ஹ்ம்ம், இன்னும் அரை மணி நேரமாகும்.” என்ற சுடரொளியோ, “உங்க ரெண்டு பேருக்கும் ஏற்கனவே கதை தெரியும்தான? அப்பறம் ஏன் அவ வாயை பார்த்துட்டு இருக்கீங்க? வாங்க போய் தேடுவோம்.” என்றாள்.

 

இன்பசேகரனோ, “எதைத் தேடணும்?” என்று வினவ, “யாருக்குத் தெரியும்? எதையாவது தேடுங்க. இல்ல தேடுற மாதிரி சீனாவது போடுங்க.” என்றவள் ஒரு அறைக்குள் நுழைந்து கொண்டாள்.

 

யாழ்மொழி இன்பசேகரனைப் பார்க்க, அவனோ அவளைத் தவிர்த்தபடி வேறு பக்கம் சென்று விட்டான். வழக்கம் போல, அதற்கும் அவளே ஒன்றை கற்பனை செய்து கொண்டு மனம் வாடினாள்.

 

மென்மொழியின் குரல் பின்னணியாக கேட்டுக் கொண்டிருக்க, சுடரொளியோ அங்கிருந்த அறைக்குள் நுழைந்து  அங்குமிங்கும் பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

சற்று நேரத்திற்கு முன்னர், அவளும் மென்மொழியும் எப்படி விட்டுச் சென்றிருந்தனரோ அப்படியே இருந்தது அந்த அறை. அவர்கள் எடுக்க மறந்த கற்கள் இருந்த பெட்டி கூட அலமாரிக்கு கீழேதான் இருந்தது.

 

‘ஹ்ம்ம், இதுக்குள்ள என்னத்த தேட?’ என்றபடி சுற்றிலும் பார்த்தவள் எதிரே இருந்த அலமாரியைப் பார்க்காமல் அதில் இடித்துக் கொள்ள, “அவுச்…” என்றபடி கீழே அமர்ந்து பாதத்தைப் பிடித்துக் கொண்டாள்.

 

“ச்சே, என்னதான் பவர்ஸ் கிடைச்சாலும், இப்படி கண்ணு மண்ணு தெரியாம விழுந்து வாரிக்குறதை நிறுத்த மாட்டிங்குறேன்.” என்று தன்னைத்தானே திட்டிக் கொண்ட சுடரொளி எழ முற்பட அப்போதுதான் அலமாரிக்குக் கீழே பரிதாபமாகக் கிடந்த பெட்டியைக் கவனித்தாள்.

 

“இந்த பெட்டிக்குள்ளதான அந்த கல்லு இருந்துச்சு!” என்றவாறே குனிந்து சிரமப்பட்டு அதை எடுத்த சுடரொளி, அதை இப்படியும் அப்படியும் திருப்பி பார்க்க, அவள் கரம் பட்டு சட்டென்று அதற்குள் இருந்த ஒரு ரகசிய இடம் திறந்தது.

 

“பெட்டிக்குள்ள பெட்டியா?” என்றவள், அதனுள் கைவிட்டு பார்க்க, பழைய காகிதம் ஒன்று அவளுக்கு அகப்பட்டது.

 

ஏனோ, ‘அது முக்கியம்!’ என்று அவளின் உள்மனம் கூற, அதைக் கவனமாகப் பிரித்துப் பார்த்தவள், கண்கள் விரிய மற்றவர்களைக் கத்தி அழைத்தாள்.

 

“கைஸ் எல்லாரும் இங்க வாங்க.” என்ற சுடரொளியின் குரல் கேட்டு மற்ற நால்வரும் அங்கு விரைய, “எதுக்கு இப்படி காட்டுக்கத்தலா கத்திட்டு இருக்க?” என்று யாழ்மொழி எரிச்சலுடன் கேட்டாள்.

 

“இதைப் பாருங்க… நம்ம அஞ்சு பேரு இல்ல. இன்னும் ரெண்டு பேரு இருக்காங்க.” என்று சுடரொளி கூற, மென்மொழி அந்தக் காகிதத்தை வாங்கி அவசரமாகப் பார்வையை ஓட்டினாள்.

 

அதில் இருந்தது அவளின் தாத்தாவின் கையெழுத்துதான்!

 

VIBGYOR – என்று ஆங்கிலத்தில் கிறுக்கலாக எழுதி இருந்தது.

 

தொடரும்…

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
4
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்