Loading

 

அழகியே என் மழலை நீ 35

 

 

 

ஆதில் வேகமாக ஓடிச்சென்று அவளின் கை பிடித்து பரிசோதிக்க, அவளின் நிலை மிகவும் மோசமாக இருந்தது.

 

ஆதில், “செழியா நீ கொஞ்சம் இங்க வாடா. வேதா நார்மலா இல்லை. மூச்சுவிட கஷ்டப்படுறா. நமக்கு நேரம் இல்லை” என்று கத்த, அதில் அதிர்ந்து திரும்பியவனின் பார்வை அதிரனின் கையில் இருந்த வேதாவில் படிய, அவனின் கோபம் கொஞ்சம் கொஞ்சமாய் குறைய தொடங்கியது.

 

 

வேகமாக வந்தவன் அவளை அதிரனிடம் இருந்து தன்கையில் ஏந்தி நெஞ்சோடு அணைத்தவன் அழ, அவனின் உணர்ச்சிகளை புரிந்து கொண்டவர்கள் அவனையும் அழைத்துக் கொண்டு காருக்கு வர, செழியனோ மருத்துவமனை வரும் வரையிலுமே அவளை கையில் இருந்து இறக்கவே இல்லை.

 

 

அவளை அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்து வைஷ்ணவி அவளுக்கு டிரீட்மென்ட் பார்த்துக்கொண்டிருக்க, ஆதில் செழியனை உள்ளே அனுமதித்து இருந்தான்.

 

 

வைஷ்ணவி அவளை பரிசோதித்து பார்த்தவள் செழியனை நோக்கி, “வேற எங்கயும் காயம் இல்லை, முகத்துல மட்டும் தான். ஆனால் நாலு மாசமா மயக்கத்துலயே வச்சு இருந்துருக்காங்க. அதுனாலதான் இப்போ அவளுக்கு சுயநினைவு இல்லை. பேபிஸ் சேப்டியா இருக்காங்க. கேர் ஃபுல்லாதான் ஹாண்டல் பண்ணிருக்காங்க. டாக்டர் இல்லை நர்ஸ் ஹெல்ப்போடதான் இந்த மருந்த குடுத்திருக்காங்க. இந்த மருந்து குழந்தைங்கள அஃபெக்ட் பண்ணல. ஆனாலும் வேதா மயக்கம் தெளியுறதுக்கு நேரம் ஆகும் செழியன், எப்போன்னு சொல்ல முடியாது” என்று கூற உடைந்து போனான் அவன்.

 

செழியனுக்கு கோபம் கண்ணை மறைக்க அங்கிருந்த ஆதிலிடம் அவனின் கைபேசியை காட்டியவன் இதில் யார் என்று கேட்க அவன் சுட்டி காட்டிய நபர்களை பார்த்தவனுக்கு ஆத்திரம் தாள வில்லை.

 

அதன் பிறகு அவள் கூறிய எதுவும் அவனுக்கு உரைக்கவில்லை. எப்பேர்ப்பட்ட நம்பிக்கை துரோகம் இது. அவர்களை விடக் கூடாது என்று முடிவுக்கு வந்தவன், ஹாஸ்பிடலில் அதிரனையும் தகவல் அறிந்து வந்த ஆதியையும் விட்டுவிட்டு தேவ்வையும் இனியனையும் அழைத்துக்கொண்டு வீட்டுக்கு வந்தான்.

 

 

 

 

வேதாவை கண்டுபிடித்தது வீட்டில் யாருக்கும் தெரியாது. அதிரன் ஆதிக்கு மட்டுமே சொன்னவன் வேறு யாருக்குமே சொல்லவே இல்லை.

 

 

தாமரையின் இல்லத்தில் மீனாட்சி, “அகரன் கல்யாணம் பேசி வச்சது அப்படியே இருக்குது. அவ காணாம போய்ட்டான்னு நிச்சயத்தை கூட அகரன் நடக்க வேண்டாம்னு சொல்லிட்டான். நீங்க எல்லாரும் தப்பா நினைச்சாலும் பரவாயில்லை. நாலு மாசமா கண்டு பிடிக்காதவளை இனிமேல் கண்டுபிடிச்சிற போறங்களா? அவ விதி அவ்ளோதான்னு நினைச்சுக்க வேண்டியது தான். போனவங்களுக்காக இருக்கறவங்க வாழ்க்கையை விட்ரக்கூடாது இல்ல” என்று அவர் பேசி கொண்டே செல்ல பேச, தாமரை எதுவும் பேசாமல் வாயை பொத்திக் கொண்டு அழ ஆரம்பித்தார்.

 

 

அகரனோ, “அம்மா வாய மூடிட்டு இருக்க மாட்டிங்களா? எப்போ என்ன பேசறதுனு கூட தெரியாதா உங்களுக்கு? நான் கேட்டேனா இப்போ எனக்கு கல்யாணம் பண்ணி வைங்கன்னு. எங்க நல்லதுக்காக பேசறேன்னு நினச்சு உங்க மரியாதைய நீங்களே கெடுத்துக்காதீங்க” என்று திட்டியவன் தாமரையிடமும் அன்பரசனிடமும், “மன்னிச்சிருங்க மாமா, அவங்க பேசினது மனசுல வச்சுக்காதீங்க, வேதா சீக்கிரம் வந்துடுவாங்க” என்று ஆறுதல் கூறினான்.

 

 

சவிதாவோ, “என்ன மாமா ஏதோ பிக்னிக் போயிருக்கா. வந்துருவாங்குற மாதிரி சொல்றீங்க. அவளை கடத்திட்டு போயிருக்காங்க. அப்போ ஒரு வீடியோ வந்துச்சு அவளோதான். உயிரோட வச்சிருக்காங்கலான்னு கூட தெரியல” என்று பேச, லாவண்யா ஓங்கி அவனின் கன்னத்தில் அறைந்திருந்தாள்.

 

 

“கூட வந்தியா, இருந்தியான்னு கிளம்பனும். இந்த நக்கல் பேச்செல்லாம் இங்க வச்சுக்கக்கூடாது. இதனால தான் இங்க உன்னை வர வேணாம்னு சொன்னேன். இவங்களால தான் உன்னை கூட்டிட்டு வந்தேன்” என்று மாமியாரை காட்ட, அப்போது உள்ளே வந்தான் செழியன்.

 

 

“இரண்டு பேராலயும் கொஞ்ச நேரம் கூட பிரிஞ்சிருக்க முடியல. ஒன்னும் பிரச்னை இல்லை. உங்க ரெண்டு பேரையும் ஒரு செல்லுல போட்டுறேன். ஜெயிலுக்குள்ளேயும் ஒன்னாவே இருக்கலாம்” என்று கூறிக் கொண்டே வர, சவிதாவின் முகம் வெளிறி போக, மீனாட்சியின் முகத்தில் மாட்டிக்கொண்டோம் என்ற பயம் அப்பட்டமாக தெரிந்தது.

 

 

அனைவரும் அவன் கூறியதில் அதிர்ந்து போய் அவனை பார்க்க, அவன் கண்ணில் இருந்த உறுதியை கண்டு அரண்டு போயினர். தேவ் முன்னாடி வந்தவன், “என்ன ரெண்டு பேரும் பேசாம அமைதியா இருக்கீங்க, பயமா இருக்கா?” என்று கேட்டவனை அசராமல் பார்த்தனர்.

 

 

சவிதா, “நாங்க எதுக்கு பயப்பட போறோம். நாங்க ஒன்னும் வேதாவை கடத்தி அடைச்சு வைக்கலியே” என்று வாயை விட்டாள்.

 

 

செழியன் சிரித்தவன், “நாங்க நீ கடத்துனதா சொல்லவே இல்லை. அப்போ நீங்க தான் இந்த வேலையை செஞ்சுருக்கீங்க அப்படிதானே. துரோகிங்களா.. கூடவே உங்களை வச்சுட்டு எல்லா பிளானையும் உங்ககிட்டயே சொல்லிட்டு, தேடி போய் ஒவ்வொரு தடவையும் ஏமாந்து போய் வந்துருக்கேன். என்னை மாறி முட்டாள பார்த்துருக்கீங்களா? எல்லாரும் நல்லா பார்த்துக்கோங்க. என் பொண்டாட்டிய கடத்துனவங்க என் வீட்டுக்குள்ளயே இருந்துருக்காங்க. நான் வெளியே தேடிட்டு இருந்துருக்கேன்” என்று கூறி தலையில் அடித்துக்கொண்டான்.

 

லாவண்யா அதிர்ச்சியில் உறைந்து போனவள், தங்கையா இந்த மாபாவத்தை செய்தாள் என்று அதிர்ந்து போய் நிற்க, தாமரை முடியை அள்ளி முடிந்து கொண்டவர் வேகமாக வந்து அவளின் முடியை பற்றி இழுத்து கன்னம் கன்னமாக அறைந்தவர், “பாவி பாவி நீயெல்லாம் நல்லாருப்பியா? என் பொண்ண கடத்தி வச்சுட்டு, எங்க வீட்டுக்கே வந்து எத்தனை தடவ ஆறுதல் சொல்லிட்டு போன நீ. அவ உனக்கு என்னடி துரோகம் பண்ணா. ஒரு ஈ எறும்புக்கு கூட வலிய குடுக்கமாட்டா என் பொண்ணு. அவ புள்ளத்தாச்சியா இருக்கான்னு தெரிஞ்சும் இப்படி மகாபாவத்தை பண்ணிருக்கியே? உனக்கெல்லாம் நல்ல சாவே வராதுடி” என்றவர் அவளை அடித்து தள்ளி விட்டார்.

 

 

தாமரையை யாருமே தடுக்கவில்லை. அறிவழகனுக்கு மனம் அடித்து கொண்டது. இதில் மனைவியின் பங்கு இருக்கக்கூடாது என்று அத்தனை கடவுளிடம் கோரிக்கை வைத்தார்.கருணையே இல்லாமல் அவரின் மனுவை நிரகரித்தார் அவரை படைத்தவன்.மறுநொடியே செழியன் கேட்ட கேள்வியில் அவர் மனமும் அடிபட்டு போனது.

 

 

செழியன் அன்னையை நோக்கி நடக்க அதுவரை அதிர்ந்து நின்று இருந்த அரவிந்தனும் அகரனும், அதிர்வாய் தம்பியை பார்க்க, அவர் அருகில் சென்றவன், “நிஜமாவே நீ தான் என் அம்மாவா?நீ தான் என்னை பெத்தியா?” என்று கேட்க, மீனாட்சி கண்கலங்க அதிர்ந்து போய், “செழியா” என்று அழைக்க, “ஏய்” என்ற அவனின் கத்தலில் அவரின் இதயம் வேகமாய் துடிக்க, அனைவரின் பார்வையும் அதிர்ந்து அவர்களின் மேல் திரும்பியது.

 

 

அவனோ, “உன்னை எல்லாம் அம்மானு சொல்லவே நாக்கு கூசுது. அப்படியே உன்னை வெட்டி போடுற அளவுக்கு ஆத்திரம் வருது. அதை நான் செய்யமாட்டேன். நானும் உன்னை மாறி கேவலமானவனா மாறமாட்டேன்” என்று கூறினான்.

 

 

அவரோ, “உன்னோட நல்லதுக்காக தான்” என்று அவர் கூற, “ஏய் வாய மூடு சொல்றேன். இனி ஒரு வார்த்தை பேசின அவ்வளவு தான். உனக்கெல்லாம் பேசவே தகுதி இல்லை. என் நல்லதுக்காகவா. அப்படி அழுது துடிச்சனே. அப்போகூட உனக்கு மனசு இரங்கல இல்லை. அவ உனக்கு என்ன பாவம் பண்ணா. நீ அவளுக்கு இப்படி ஒரு பாவத்தை பண்ணிருக்க. நீயெல்லாம் அம்மாவ இல்லை மனுசியா இருக்கக்கூட தகுதி இல்லை உனக்கு. இதுக்கு மேல உங்கிட்ட பேச கூட அருவருப்பா இருக்கு எனக்கு. எப்படி அவளை கொன்னுட்டா கொஞ்ச நாளுல மனசுமாறி இவளை கல்யாணம் பண்ணிப்பேனா” என்று கேட்க, மீனாட்சி உறைந்து போய் அவனை பார்த்தார்.

 

 

அந்த ரௌடியின் போனை எடுத்து காட்டியவனோ, “நீ பேசுன எல்லாத்தையும் கேட்டேன். மனசு குளிர்ந்து போச்சு. இப்படி ஒரு அம்மா யாருக்கு கிடைப்பாங்க. மருமகளையும் அவ வயித்துல வளர குழந்தைங்களையும் கொன்னு இன்னொரு பொண்ண கல்யாணம் பண்ணி வைக்கணும்னு நினைக்குற உன்னை மாறி அம்மாலாம் யாருக்கும் கிடைக்கமாட்டாங்க. உன்னை மாறி ஒருபிறவி இனி இந்த உலகத்துல பிறக்கவே கூடாது, ச்சி” என்றவன் அவரின் முகத்தில் காரி துப்பிவிட, உடைந்து போய் அப்படியே அமர்ந்து விட்டார்.

 

 

சவிதாவின் புறம் திரும்பியவன் மொத்த பலத்தையும் ஒன்று திரட்டி ஓங்கி அறைய, கண்கள் இருள மயங்கியே விழுந்துவிட்டாள்.

 

 

தாமரை மீனாட்சியின் அருகில் வந்தவர், “உன்னை மாறி கேவலமான பிறப்ப நான் பார்த்ததே இல்லை. பொம்பளையா நீ” என்றவர் செழியனின் அருகில் வந்து, “செழியா என் பொண்ணு எங்க கிடைச்சிட்டாளா? அவளுக்கு ஒண்ணுமே ஆகலையே?” என்று கேட்டார்.

 

 

அன்பரசன், “மாப்பிள்ளை சொல்லுங்க என் பொண்ணு நல்லாருக்காளா?” என்று மொத்த உயிரையும் கண்களில் தேக்கி கேட்க, அரவிந்தன், அகரன் இருவரும் அவனை தொட, பாய்ந்து இருவரையும் கட்டிகொண்டவன்,

 

 

“முடியலடா என்னால. அவளுக்கு சின்னதா ஏதாச்சும் ஆனால் கூட என்னால தாங்கிக்க முடியாது. இப்போ டாக்டர் எப்போ கண்முழிப்பானு தெரியாதுன்னு சொல்ராங்க. இதெல்லாம் இவங்களாலதான். அந்த ரௌடி கூட சேர்ந்து ரெண்டு பேரும் அவளை கடத்தி அடைச்சு, மயக்கத்துலயே வச்சுருக்காங்க” என்று கூறி அழ, அவனை அரவிந்தன் தோளில் சாய்த்து தட்டி கொடுக்க, அவன் அழுகையில் தேவ்வுக்கும் அழுகை வர, இனியனின் கைகளில் இருந்த விலங்கை வாங்கியவன் மீனாட்சியின் கைகளில் மாட்டினான்.

 

 

அறிவழகன் அதிர்ந்து போய் தேவ்வை பார்க்க, செழியன் மனதிற்குள் நீங்களும் என்ன ஏமாத்திடாதீங்க அப்பா என்று மறுக, அவரோ மீனாட்சியின் அருகில் வந்தவர் பளார் பளார் என அறைந்தார்.

 

 

“இவ சாகுற வரைக்கும் வெளியவே வரக்கூடாது செழியா நடக்க வேண்டியதை பாரு,” என்று மகனின் தோளை வருட, மீனாட்சி கணவரை அதிர்ந்து போய் பார்க்க, செழியன் தந்தையை அணைத்துக் கொண்டவன், “தேங்க்ஸ்ப்பா” என்று கூறினான்.

 

 

 

தேவ் பெண் உதவியாளர் ஒருவருக்கு அழைத்து வர சொல்லி, சவிதாவையும் மீனாட்சியையும் விலங்கோடு வண்டியில் ஏற்றினான். யாருமே தடுக்க வில்லை.சிறிது நேரத்திலேயே மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்த செழியனுக்கு போன் வந்தது. அந்த பெண் உதவி ஆய்வாளர் தான் அழைத்திருந்தார். மீனாட்சி மற்றும் சவித்தாவை அழைத்து செல்லும் போது எதிரில் வந்த லாரி மோதியதில் இருவரும் உயிருக்கு போராடுகின்றனர் எனவும், அவருக்கும் சரியான அடி என்று கூறவும் விக்கித்து போனான் செழியன். இது அவன் எதிர்பார்க்கதது அல்லவா…

 

 

 

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 6

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
3
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. ஒருவேளை இந்த கடத்தல்ல அந்த ரவுடி தவிர வேற யாருக்கும் சம்பந்தம் இருக்குமோ. அதான் மீனாட்சியை கொல்ல பார்த்திருக்காங்களோ. இல்ல அந்த ரவுடி தானா. நல்ல வேளை வேதாவுக்கு ஒண்ணும் ஆகலையே 🤔