Loading

ருத்ரன் அருகில் வேகமாக வந்த சரவணன், “மச்சான், என்ன பண்ணிட்டு இருக்க?” என்றான் பற்களுக்கிடையில் வார்த்தைகளை துப்பி.

ருத்ரன் தனது நண்பனைத் திரும்பிப் பார்க்கவும்,

“ஏண்டா உன் தங்கச்சியை என்னை நம்பிக் கட்டிக் கொடுக்க மாட்டியா?” என்றான்.

சரவணன் ருத்ரனை அடிக்கக் கை ஓங்கிக் கொண்டு வர,

வேகமாக அவனது அருகில் வந்த அகிலாவும், காயத்ரியும், “அண்ணா, கையைக் கீழே போடு” என்றார்கள்.

“என்ன மாமா, நினைச்சுட்டு இருக்கீங்க? என் அக்கா என்ன பொம்மைனு நினைச்சீங்களா?”

“இது அவளோட வாழ்க்கை, நீங்க யாரும் முடிவு பண்ண வேண்டாம், நான் அவகிட்டக் கேட்டேன். அவ எனக்குப் பதில் சொல்லட்டும்” என்றான் முறைப்புடன்.

“அதனால் தான் மாமா, நானும் சொல்றேன். இது அவ வாழ்க்கை” என்று காயத்ரியும் கூடக் கூட வாயாட,

“காயத்ரி, நான் உன் அக்காகிட்டப் பேசுறேன், உன்கிட்ட இல்ல” என்றான்.

“போதும் மாமா நிறுத்துங்க, நீங்க விரும்பின பொண்ணக் கல்யாணம் பண்ணிட்டுப் போங்க. அப்பா சொன்ன மாதிரி உங்க பேருலயும், நீங்க கட்டிக்கணும்னு ஆசைப்பட்ட பொண்ணு பேருலயும் பாதிப் பாதி சொத்து எழுதி வச்சிருவாங்க. உங்க சொத்தை வச்சு நானும் சரி, என் அக்காவும் சரி வாழப் போறது இல்ல.

எங்க கையில படிப்பு இருக்கு. எங்க அப்பா எங்களைப் படிக்க வைத்திருக்கிறார். தைரியத்தையும் சொல்லிக் கொடுத்து தான் வளர்த்து இருக்கிறார். எங்க வாழ்க்கையை எங்களுக்குப் பார்த்துக்கத் தெரியும்” என்று சொல்ல,

காயுவை அனல் கக்கும் விழிகளுடன் பார்த்தவன், “அவருதான் காயு என்னையும் வளர்த்தார், அதை மறந்துவிடாதே. உனக்கு இருக்க அதே ரோஷம் எங்களுக்கும் இருக்கு” என்றான்.

“நான் என் மாமா பொண்ணு தமிழ்கிட்டக் கேட்டுட்டு இருக்கேன்” என்றான்.

அவன் சட்டையைப் பிடித்த சரவணன், “நீ விருப்பப்பட்ட பொண்ணைக் கல்யாணம் பண்ணு, பண்ணாட்டிப் போ… என் தங்கச்சிகிட்ட வந்து என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறியானு கேக்கற உரிமையை உனக்கு யாருடா கொடுத்தது?” என்று சரவணன் கை வைக்க,

தனது நண்பனைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே,

தனது சட்டையில் இருக்கும் அவனது கையை எடுத்து விட்டவன்,

தமிழைப் பார்த்து நிற்க, அவளோ ,சிறிதும் அதிர்ச்சி விலகாமல்  ருத்ரனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவளது அருகில் வந்த தனாவும், பாக்கியமும் “ஒத்துக்க தமிழு, ஏற்கனவே நாங்க ரெண்டு பேருமே உன்னைதான் எங்க வீட்டு மருமகளா வர ஆசைப்பட்டோம். அது உனக்கும் தெரியும். உன் மாமா வேற ஒரு பொண்ணை விரும்புறான்ற ஒரே காரணத்துக்காக, உங்க அப்பா சொன்னாங்க என்ற ஒரே காரணத்துக்காக மட்டும் தான் இந்தப் பணத்தாசை பிடித்த பிசாசை அவனுக்குக் கட்டி வைக்க ஒத்துக் கொண்டோம்.

அவனுக்காக மட்டுமே ஒரு மனதாக ஒத்துக் கொண்டோமே தவிர, மனசு வந்து ஒத்துக் கொள்ளவில்லை என்று உனக்கே தெரியும். தமிழு, உன் கால்ல கூட விழுறேன் ஆத்தா, உன்னவிட என் வீட்டுக்கு ஏத்த மருமகள் வேற யாரும் வர முடியாது. எனக்காக உன் மாமனோட மனசு மாறும். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு. உன் அப்பாவோட வளர்ப்பு தப்பாகாது” என்று காலில் விழாத குறையாகக் கெஞ்ச,

சுற்றித் தன் கண்ணைச் சுழல விட்ட தமிழ் அனைவரையும் பார்க்க, இறைஞ்சும் பார்வையோடு பாக்கியமும், தனாவும் நிற்க, செல்வமும் தனமும் கையைப் பிசைந்து கொண்டு தன் மகள் என்ன சொல்வாள் என்று அவளையே பார்த்துக் கொண்டிருக்க,

‘தான் விரும்பியவர் தான். ஆனால், இப்போது தனக்கு விருப்பமே இல்லை என்றாலும்… தன் அப்பா இந்த அளவிற்குத் திருமணத்தைக் கொண்டு வந்து நிறுத்த, இந்தக் கல்யாணம் இப்படி மணமேடை வந்து நிற்பது நன்றாக இருக்காது என்ற காரணத்தினாலும், தனது அத்தை கேட்டுக் கொள்வதற்காகவும் சரி என்று மண்டை ஆட்ட,

வேகமாக மணமகன் அறைக்குச் சென்ற ருத்ரன், ஒரு புடவை எடுத்துக் கொண்டு வெளியில் வந்து, தமிழ் கையில் திணித்தான் அந்தப் புடவையை.

தமிழ் அதிர்ச்சியாக அவனைப் பார்க்க, “இது உனக்குன்னு வாங்கின புடவை தான் தமிழு. நீ வேணான்னு சொன்னதுனால என்கிட்ட இருந்துச்சு. கல்யாணத்துக்கு வாங்குனது தான்” என்று அவளது கையில் கொடுத்து, “இந்தப் புடவை மட்டும் கட்டிடு” என்று தங்கையைப் பார்க்க, அவள் வேகமாகத் தன்னிடம் இருக்கும் நகைகளை எடுத்துக் கொண்டு வந்து தர,

“இதை மட்டும் போட்டு வந்து மணவரையில உட்காரு” என்று சொல்லிவிட்டு ஆனந்தி பக்கம் திரும்ப,

ஆனந்தியின் பார்வை தான் இப்பொழுது மிரட்சியுடன் இருந்தது.

“ருத்ரா நீ பண்றது சரி இல்ல, உன் மனசு முழுக்க நான் இருக்கேன்”.

“என் மனசு முழுக்க நீ இருந்த, இப்போ இல்ல. இப்படி மனசு முழுக்க அழுக்கு இருக்கற நீ எனக்குப் பொண்டாட்டியாவும் இருக்க முடியாது, என் குடும்பத்துக்கு மருமகளாகவும் இருக்க முடியாது. என் அம்மா எத்தனை முறை சொன்னுச்சு. என்னையும், தனாவையும் தமிழ் தவிர வேறு யாராலும் பார்த்துக்க முடியாதுடா அப்படின்னு… அப்பக் கூட உன்னைப் பெத்த என் மேல நம்பிக்கை இல்லையானு கேட்டாங்க.

எனக்கும் கூட கல்யாணத்தைப் பத்தி நாங்க பேச வரும் போதும் சரி, முகூர்த்தப் புடவை எடுக்க வந்த போதும் சரி, லேசா மனசு உறுத்துச்சு. உங்க நடவடிக்கையால… இருந்தாலும் மாமா சொன்னாரு என்ற ஒரே காரணத்துக்காக அமைதியா இருந்தேன். ஆனா, இப்ப தாண்டி உங்க உண்மையான சுயரூபமே வெளியே வருது.”

“இப்ப நான் இருந்த மனசுல உன் மாமா பொண்ணு வந்துருவாளா?” என்றவுடன் அப்பொழுதுதான் புடவையைக் கட்டிக் கொண்டு வெளியில் வந்த தமிழ் அதைக் கேட்டு விட்டு அதிர்ச்சியாக ருத்ரனைப் பார்க்க,

ருத்ரன் திரும்பி தமிழைப் பார்த்தவன் அவளது தோளில் கையைப் போட்டுக் கொண்டு, “எனக்கு இவளைப் பிடிக்கும்டி. பிடிக்காதுன்னு இல்ல. நான் சொன்ன பிடிக்கும்ன்ற அர்த்தம் காதலா இல்ல, ஆனால் இதுக்கப்புறம் என் மனசு மாறலாம். என் கூட சின்ன வயசுல இருந்து ஒன்னு மண்ணா வளர்ந்தவடி. எனக்கு ஒன்னுனா இந்த நிமிஷம் வரைக்கும் துடிச்சுப் போறவ.

என்னப் பத்தி எனக்கு முன்னாடியே யோசிக்கிறவ. எனக்கு என்ன தேவைனு நான் சொல்லாமலே செய்யிறவ. அம்மா எத்தனை முறை சொல்லி இருக்கு… என்னையும் சரி, என் குடும்பத்தையும் சரி, இவளைத் தவிர வேற யாராலயும் பார்த்துக்க முடியாதுன்னு. அதை எங்க அம்மா சொல்லித்தான் உணர வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.

எனக்கே தெரியும். இருந்தாலும் உன்னை மனசுல வச்சுகிட்டு என்று மட்டும் தான் யோசிச்சேன். இப்போ உன்னை இந்த மனசுல இருந்து தூக்கி எறிஞ்சிட்டேன்டி. இந்த நிமிஷம் என் மனசுல யாரும் கிடையாது. என் மாமா மகள் தமிழ் பத்திச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லடி. என்னை விட என்னை நல்லாப் புரிஞ்சுகிட்டவ இவ தாண்டி, என்னோட விழி” என்று சொல்ல,

தமிழ்விழிக்குக் கண்கள் கலங்கினாலும் அமைதியாகவே நின்று கொண்டிருந்தாள்.

“இப்போது நான் கேட்டேன் என்ற ஒரே காரணத்துக்காக எதைப் பத்தியும் யோசிக்காம எனக்காகவும், என் குடும்பத்துக்காகவும் வந்து இந்த இடத்தில் நிற்கிறா…” என்று விட்டு அவளைக் கையோடு அழைத்துக் கொண்டு மணவரைக்குச் செல்ல,

ஆனந்தி, “நீங்க ரெண்டு பேரும் எப்படிச் சந்தோஷமா வாழுறீங்கன்னு பார்க்கிறேன்” என்று சொல்ல,

“உனக்கு இங்க என்னடி ஃபர்ஸ்ட் வேலை, உன் குடும்பத்தைக் கூட்டிட்டுக் கிளம்பிட்டே இரு” என்று சொல்லிவிட்டு மணமேடையில் உட்கார்ந்து இருக்கும் தமிழைத் திரும்பிப் பார்க்க, அவளது கண்கள் கலங்கி இருந்தது.

“விழி…” என்று அவளது கையைப் பிடிக்க,

அத்தனை பேர் முன்பும் தனது கோபத்தை அவனிடம் காட்ட விரும்பாதவள், அமைதியாகவே இருந்தாள்.

நேரம் செல்ல, ஐயர் மந்திரங்கள் சொல்ல, ருத்ரன் கையில் தாலி கொடுக்கப்பட்டது.

தாலியைக் கையில் வாங்கியவன் ஒரு சில நொடி சுற்றி இருந்த தனது மாமா, அத்தை இருவரையும் பார்க்க,

இருவரும் கண்ணை மூடித் திறக்கத் தன் தாயைப் பார்த்தான். அவர் சிரித்த முகத்துடன் இருக்க,

தனது நண்பன், அகிலா, காயு மூவரையும் பார்த்தான்.

மூவரும் முறைப்புடன் நிற்க,

இறுதியாகத் தமிழ்விழியைப் பார்க்க, அவளது கண்கள் கலங்கி இருந்தது.

அவளைப் பார்த்துக் கொண்டே அவளது கழுத்தில் மூன்று முடிச்சு இட்டான். அவன் தாலி கட்டிய அடுத்த நொடி, அவனது கையை நனைத்து இருந்தது தமிழ்விழியின் கண்ணீர்.

அவளது கண்ணீரைத் துடைத்துவிட்டு அவளது நெற்றி வகிட்டிலும், தாலியிலும் குங்குமத்தை வைத்தான்.

ஒவ்வொரு சடங்காக ஐயர் சொல்லச் சொல்ல நடந்தேறியது.

இறுதியாக இருவரையும் வீட்டிற்கு அழைத்துச் செல்ல,

தனா சிரித்த முகத்துடன் ஆரத்தி எடுத்து வீட்டுக்குள் அழைக்க,

சொந்த பந்தங்கள் சூழ்ந்து இருக்க எதுவும் பேச முடியாமல், தமிழ் விழி அமைதியாகவே நின்றாள்.

“எப்படியோ, நாங்க ஆசைப்பட்ட மாதிரி நீயே என் வீட்டு மருமகளா வந்துட்ட தங்கம்” என்று பாக்கியம் தமிழை நெட்டி முறித்து அவளது நெற்றியில் முத்தமிட,

தமிழ் அவருக்காகச் சிரித்த முகமாக அமைதியாக இருந்தாள்.

வீட்டில் உள்ளவர்கள் எதுவும் பேசாமல் இருக்க,

மற்றச் சடங்குகளைப் பொறுமையாக வைத்துக் கொள்ளலாம் என்று தனம் கேட்டுக் கொள்ள,

“சரிங்க அண்ணி, நீங்க சொல்லி எதைக் கேட்டுக்காம இருக்கேன்” என்று பாக்கியம் சிரித்த முகமாகச் சொல்லி விட்டு அமைதியாகி விட்டார்.

அப்படியே அன்றைய பொழுது கழிந்து இரவுப் பொழுது வந்தது.

பாக்கியம் தனத்திடம் வந்தவர், “அண்ணி, ரெண்டு பேரும் ஒரே ரூம்ல இருக்கட்டும்” என்றார்.

சிரித்துக் கொண்டே “எனக்கும் புரியுது பாக்கியம். கல்யாணம் எப்பேர்ப்பட்ட சூழலில் நடந்திருந்தாலும், ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுகிட்டா மட்டும்தான் வாழ்க்கையை ஓட்ட முடியும்” என்று சிரித்தார்.

தனம் வேறு எதுவும் பேசாமல் தன் மகளை ருத்ரனின் அறைக்கு அனுப்பி வைத்துவிட்டுத் தங்கள் வீடு நோக்கிச் சென்று விட்டார்கள்.

தமிழ் உள்ளே சென்றவுடன் ருத்ரன் தமிழிடம் மன்னிப்புக் கேட்க,

அவனைப் பார்த்து முறைத்தவள்,

“நீங்க வந்து கேட்டவுடன் தலையாட்டுவேன்னு நினைச்சிட்டீங்க, இல்ல” என்றாள் வருத்தம் தோய்ந்த குரலில்..

“இல்லடி தமிழ், அந்த நேரம்…”

“போதும்… நீங்க விரும்புனீங்க, என்னைக் கேவலமாய் பேசுனீங்க. உங்க வாழ்க்கைய விட்டு நான் விலகிட்டேன். இந்த ஒரு மாசத்துல உங்ககிட்டப் பேசி இருப்பேனா? வீட்ல எல்லாரு முன்னாடி கல்யாண விஷயத்தைப் பேசினதோடு சரி. அதைத்தாண்டி உங்ககிட்டத் தனிப்பட்ட முறையில் வந்து நான் எதுவும் பேசலை.

ஆனால், எப்படிக் கூச்சமே இல்லாம அத்தனை பேரு முன்னாடி வந்து என்னைக் கல்யாணம் பண்ணிக்கோன்னு வந்து கேக்குறீங்க? எல்லாரு முன்னாடி கேட்டா தலையாட்டிருவானு நினைச்சிட்டிங்களா? எனக்குனு மனசு இருக்கு என்பதை மறந்துட்டீங்க இல்ல.

என் அப்பாவோட வளர்ப்பு இந்த அளவுக்குப் படுமோசமா இருக்கும்னு நினைக்கல மாமா” என்று அழுகை உடனே சில பல அடிகளைக் கொடுக்க,

அவள் அடிக்கும் வரை வாங்கிக் கொண்டு அவளது கையைக் கீழே இறக்கிவிட்டு, “என் மாமாவோட வளர்ப்புத் தப்பாகலைடி, என்னோட நேசம் தான் தப்பா ஆகியிடுச்சு. அதை அந்த நிமிஷம் தான் உணர்ந்து இருக்கேன்”.

“அதை அங்க தான் உணர்ந்தீங்க சரி, அதுக்கு நான் தான் பலியாடா?” என்று கேட்க,

“ஏன் தமிழ், நீ என்ன விரும்ப தான செஞ்ச”.

“நீங்க சொன்னது தான், விரும்ப தான் செஞ்சேன். இப்ப விரும்பல, என் விருப்பம் செத்துப் போச்சு. அது செத்து ஒரு மாசம் ஆகுது. எப்போ நீங்க வேற ஒருத்திக்குப் புருஷனாகப் போறீங்கன்னு தெரிஞ்சுதோ, அந்த நிமிஷம் என் மனசுல இருந்து உங்களைத் தூக்கி எறிஞ்சிட்டேன். இனியும் அந்த விருப்பம் வரும்னு நினைக்காதீங்க” என்று விட்டு வேறு எதுவும் பேசாமல் தலையணையைக் கீழே எடுத்துப் போட்டவள் அமைதியாகப் படுத்துக் கொள்ள, அவளது நினைவுகள் பின்னோக்கிச் சென்றது.

‘எத்தனை முறை இந்த ரூமுக்குள் வரும்போது எல்லாம் பட்டாம்பூச்சியாகச் சிரித்துக் கொண்டே இது வருங்காலத்தில் தன்னுடைய ரூம் என்ற நினைவுடன் வந்து இருப்போம். ஆனால், இப்போது இந்த ரூமுக்குச் சொந்தக்காரி நான் தான் என்று இருக்கும் பட்சத்தில் கூடத் தனக்குச் சந்தோஷம் இல்லையே’ என்று அவளது உதட்டில் கசந்த முறுவல் தான் வந்து சென்றது.

அவளையே பார்த்துக்கொண்டு நின்று கொண்டிருந்த ருத்ரனுக்குக் கஷ்டமாக இருந்தது.

‘சொன்னாலும், சொல்லா விட்டாலும் நாம் தமிழை ரொம்பவே காயப்படுத்தி இருக்கிறோம், அதுவும் வார்த்தைகளால்… இதை எப்படிச் சரி செய்யப் போகிறோம்?’ என்று புரியாமல் அவளையே பார்த்துக் கொண்டு நின்றான்.

“ஏன்? இப்படியே விடிய விடிய நின்னுகிட்டே இருக்கலாம்ன்ற ஐடியாவா… எனக்கு டயர்டா இருக்கு, லைட் ஆஃப் பண்ணீங்கன்னா கொஞ்சம் தூங்கலாம்” என்று அவனிடம் எரிந்து விழுந்து விட்டுப் படுத்தாள்.

ருத்ரன் தான் அதிர்ச்சியோடு தமிழையே பார்த்துக் கொண்டிருந்தான்.

‘இவளுக்கு இப்படி எல்லாம் பேச வருமா? அதுவும் தன்னிடம் இதுவரை அவள் பேசிய ஒரு வார்த்தை கூட வெறுப்போடு இருக்காதே… இனி வாழ்நாள் முழுவதும் இந்த வெறுப்போடு தான் வாழ வேண்டுமா?’ என்று எண்ணினான்.

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 9

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
3
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்