
அத்தியாயம் 35
‘Wherever you go, you must come back to me!’
நேரம் மதியம் இரண்டு மணி. காலையில் சந்தனமாரி அவளின் பாஸ் மாமாவின் வீட்டில் இருந்து வந்து கிட்டத்தட்ட ஆறு மணி நேரங்கள் ஆகின்றன. இந்த ஆறு மணி நேரங்களில் ஏறக்குறைய ஆறாயிரம் முறை அந்த குரல் வழி செய்தியைக் கேட்டிருப்பாள்.
“நான் சனா கிட்ட கொஞ்சம் பேசணும். நீ ஏதோ வேலை இருக்குதுன்னு சொன்னியே அஜூ கண்ணா? கிளம்பு!” என அர்ஜூனிடம் சொன்ன பாஸ்கரன் தான் காலையில் அவளை அழைத்து வந்தான்.
வரும்போதே, “அம்மா கிட்ட சஞ்சு விஷயம் சொல்லு சனா. நானும் சொல்லணும். ஆனா அவளை இப்போதைக்கு அவிக்கிட்ட எதுவும் ஷேர் பண்ண வேணாம்ன்னு சொல்லணும்.” என்றான்.
“நானும் நினைச்சேன் மாமா. அவிக்கு விஷயம் தெரிஞ்சா பாதி டிரிப்லயே கிளம்பி வந்துடுவான்.”
இது முதலில் அவினாஷ் எடுத்த முயற்சிதானே? அவன் காட்டிய தீவிரத்தினாலே தான் இத்தனை வருடங்களுக்குப் பின்னரும் பெங்களூரு என்று சஞ்சுவின் இடத்தைக் கண்டறிய முடிந்தது. கல்யாணம் பேசிய பின்னரும் கூட அவினாஷ் தொடர்ந்து தேடுதலில்தான் இருந்தான். அர்ஜூன் சஞ்சுவை மோப்பம் பிடித்த பின்னர், கல்யாணத்தைக் காரணம் காட்டி திருமணம் முடிந்த பின் தேடுதல் வேலையைத் தொடரலாம் என்று பேசி அவனைச் சரிக்கட்டியிருந்தான்.
நம் அம்மாவிற்காக அவி அத்தான் திருமணத்தை நிறுத்தும் எல்லைக்கும் போவார் என்று அர்ஜூன் அக்னியை மிரட்டிய காரணமும் இதுவே!
இப்போது நிர்மலாவிடம் சொன்னால் நிச்சயம் அவினாஷிடம் சொல்லுவாள். அப்படி சொன்னால் அவனுடன் சேர்ந்து பிரகதியும் தன் அண்ணனை எண்ணி பதறக்கூடும்.
இப்படியாக தன் மாமனுடன் பேசிக்கொண்டு வந்த போதுதான் அக்னியிடமிருந்து அந்த குரல் வழி செய்தி வந்தது. அவன் பெயரைக் கண்ட மாத்திரத்தில் பரபரத்த உள்ளத்தை மறைக்க இவளெடுத்த பிரயத்தனங்களெல்லாம் வியர்த்தமாகித்தான் போனது.
“என்னடா?”
“ஹான்?!” விழித்தவள் ஒன்றுமில்லையென தலையாட்டினாள்.
“சனாக்குட்டி! மாமா இதைத்தான் உன்கிட்ட பேசணும்னு சொன்னேன். உன் நிலைமை எனக்கு புரியுது. பட், டோண்ட் பீ ஃபியர் ஆர் ஸாரி ஃபார் எனிதிங்டா! இங்கே யாரும் எதுக்காகவும் உன்னை வற்புறுத்த போறதில்லை. உனக்கான நேரத்தை நீ எடுத்துக்கோ! ஃபைனலி உன் முடிவு எதுவா இருந்தாலும் மாமா வில் ஆல்வேஸ் ஸ்டாண்ட் வித் யூ.”
“தாங்க்ஸ் மாமா!” – மூஞ்சூறு குரல்.
பாஸ்கரன் தன் மனைவியுடனான உடன்பாட்டின் பொருட்டு, சில பொழுது அவளைச் சமாதானப்படுத்த சஞ்சுவிற்கு தான் சனா என்று சொல்வதுண்டு. ஆனால் அப்போதெல்லாம் சந்தனா அவள் நிலையில் உறுதியாக இருப்பாள். இப்போது பரிதவித்துக் கிடக்கிறாளே! மாமனுக்கு மனம் தாங்கவில்லை.
“இன்னும் என்னடா? நீ இவ்ளோ அப்செட்டாக வேண்டிய அவசியமே இல்ல சனா. அத்தையை மனசுல வச்சு நீ எந்த முடிவும் எடுக்க வேணாம். சஞ்சுவை உனக்கு பிடிக்கலைன்னா கூட நீ மாமா கிட்ட நேரடியா சொல்லலாம்.”
“ம்ம்!”
மருமகளை இலகு மனநிலைக்கு மாற்றும் பொறுப்பு தனக்கிருப்பதாக உணர்ந்த பாஸ்கரன் மேலும் பேசினான். “இன்ஃபாக்ட் சின்ன வயசுல உங்கம்மாவும் அத்தையும் போட்டிப் போட்டுக்கிட்டு உன்னை வச்சு பேசறதுல எனக்கு கொலைவெறியே வரும் தெரியுமா? ரெண்டு பேரும் நான் இருக்கும்போது ஜெர்க் ஆகற மாதிரி ஆகிட்டு என் தலை மறைஞ்சதும், ஹை பிட்ச்ல ஆடற ரச்சின் மாதிரி ஆகிடுவாளுங்க!” எனவும், பக்கென சிரித்துவிட்டாள் சந்தனா.
“எனக்கும் ஞாபகம் இருக்குது மாமா. அஜூ கூட நீங்க போனதும் இட்’ஸ் அ கேமிங் டைம்ன்னு கேலி பண்ணுவான்.”
“ஹான்! அதான் சொல்றேன். சஞ்சு உனக்கே தெரியாம உன் மனசுல திணிக்கப்பட்ட ஒரு விஷயம்.”
‘அப்டி ஒண்ணும் இல்லை.’ இன்னமும் அவள் காதலை(?) விட்டுக்கொடுப்பதாக இல்லை.
“அதனால அதைப் பத்தி நீ பெரிசா யோசிக்க வேணாம். அத்தை கிட்ட நான் பேசிக்கறேன். சோ அவளைப் பத்தியும் நீ யோசிக்க வேணாம். யூ கெட் மீ?”
“யாஹ்!” என்றாலும் விரல்கள் அச்செய்தியைத் திறந்து, அவன் குரலைக் கேட்டுவிடும் ஆவலை வெளிப்படுத்தின.
வீட்டிற்கு வந்ததும் பாஸ்கரன் தங்கையிடம் செய்தியைச் சொல்ல, அப்படியே சமைந்துவிட்டாள் நிர்மலா. அவளுக்கு எப்படி எதிர்வினை ஆற்றுவது என்றும் தெரியவில்லை.
“அக்னி தான் சஞ்சுவா?!”
சஞ்சுவைப் பிடிக்காது. ஆனால் அக்னியின் மேல் மதிப்பும் பிரமிப்பும், கூடவே ஒருவித பயமும் இருக்கிறது. அவனின் ஆளுமையிலும் பொருளாதார வளர்ச்சியிலும் பிரமிப்பென்றால், பயத்திற்கு காரணம் அவன் கடைசியாக இவளிடம் பேசிய பேச்சு!
திருமண வரவேற்பு முடிந்து அன்று மாலையில் தம்பதியர் தேனிலவிற்கு புறப்பட தயாராகிக் கொண்டிருந்தபோது, மண்டபத்தில் யாருக்கோ வேலை ஏவியபடி இருந்த நிர்மலாவிடம் வந்த அக்னி, “பிரகதியைப் பார்த்துக்கோங்க. எதையும் நார்மலா சொன்னா புரிஞ்சுக்குவா! அவளுக்கு அம்மாவை விட நான்தான் க்ளோஸ்! சோ எல்லாத்தையும் என்கிட்ட தான் சொல்லுவா! டேக் கேர் ஆஃப் ஹெர்!” என்றான்.
அவனின் நிதானமான பேச்சும் அழுத்தமான பார்வையும் வார்த்தைகளில் இருந்த மறைமுக எச்சரிக்கையும் நிர்மலாவிற்கு உள்ளுக்குள் குளிரைப் பரப்பத் தவறவில்லை. அதற்குத்தானே அவனும் அப்படி பேசினான்!
இப்போது யோசித்துப் பார்த்தால் அனுவைத் தான் நடத்திய விதத்தைக் கண்டுதான் அப்படி தன்னிடம் எச்சரிக்கும் விதமாக பேசியிருப்பானோ என்று சரியாக ஊகித்தாள் நிர்மலா.
“இப்போதைக்கு அவினாஷ் கிட்ட சொல்ல வேணாம் நிர்மா! அவன் ஊருக்கு ரிட்டர்ன் வந்ததும் சொல்லிக்கலாம். பிரகதியும் ஷாக் ஆகி உடனே வரணும்ன்னு நினைப்பா!”
“இதையும் அவன்தான் சொன்னானா?”
தங்கையின் கண்களில் தெரிந்த பயம் எதற்கென்று புரியவில்லை. இருந்தும் அவளுக்கு சஞ்சுவைப் பிடிக்காது என்றாலும் அக்னியின் மேல் மதிப்புண்டு என்பதைக் கணித்து, “ஆமா!” என்றுவிட்டு கிளம்பினான் பாஸ்கரன்.
தங்கையிடம் சொல்லிவிட்டு வந்தவன் அடுத்து காமாட்சியிடம்தான் விடயத்தை உடைத்திருந்தான்.
அதிர்ச்சியடைந்தவர், “டேய் அஜூ! போய் பாட்டி கண்ணாடியை எடுத்துட்டு வா!” என்று விரட்டி, மூக்குக் கண்ணாடியைப் போட்டுக்கொண்டு அக்னியை அருகே அமர வைத்து அவன் முகத்தை உற்று உற்று பார்த்தார்.
“சஞ்சுவா?”
“அத்தை, கண்ணைப் பாருங்க! அப்டியே உங்க மகன் மாதிரி!”
“ஆமாண்டியம்மா!” என அதிசயித்தார்.
சிறிதுநேரத்தில் அதிர்ச்சி தெளிந்து பெருமூச்சை விட்டுக்கொண்டு அபிராமியிடம், “இவ்ளோ உசரத்துல இருக்கும்போது பார்த்திருக்கேன்.” என்று உள்ளங்கையைக் கவிழ்த்தி அளவு வைத்து காண்பித்தவர், மெதுவே அவன் கைப்பிடித்து வருடியவாறு, “இந்த சித்திப் பாட்டியை ஞாபகம் இருக்குதா? மகாபாரதக் கதை சொல்லிக்கிட்டே உனக்கு பருப்பு சாதம் குழைச்சு ஊட்டிவிடுவேனே ஞாபகம் இருக்குதா?” எனக் கேட்க,
அவரின் பாவனையில் இவனுக்கு சிரிப்பு வந்தது. “ஞாபகம் இருக்குது பாட்டி!”
“ஹ்ம்ம்… நீ இல்லாம உங்கம்மா தான் உருக்குலைஞ்சு போயிட்டா! குடும்பமே சிதைஞ்சிடுச்சுன்னு எங்கக்கா உயிரையே விட்டுட்டா…” என்று பழங்கதையை ஆரம்பிக்க,
“சித்தி, பழசை ஆரம்பிக்காதே! நடக்க வேண்டியதைப் பார்ப்போம்.” எனக் கண்டித்தான் பாஸ்கரன்.
“அதுவும் சரிதான்.” எனக் கண்களைத் துடைத்துக்கொண்டவர், அபிராமியிடம், “மரியாதை தெரிஞ்ச பிள்ளை. ராஜா மாதிரி வளர்ந்து நிற்கறான். என்ன பொறுப்பா தங்கச்சி கல்யாணத்தை எடுத்து நடத்திருக்கான்! நல்லபடியா வளர்த்திருக்கீங்க.” என்று புகழ்ந்து தள்ளினார்.
சிலர் இப்படித்தான் கண்மறைத்து வசை பாடுவதும், கண் முன்னே புகழ் பாடுவதுமாக இருப்பார்கள். அப்படியோர் பெண்மணிதான் காமாட்சி. ஆனால் அவரிடம் உள்ள ஓர் நல்ல குணம் அனைவரின் நலன் விரும்பியாக இருப்பார். அந்த நல்ல குணம்தான் சஞ்சுவைக் குழந்தைப் பருவத்தில் கவனித்துக்கொண்டது; அனுவின் உடல்நிலை கெடும்போதும் அவளை வார்த்தைகளால் வதைக்காமல் பார்த்துக்கொண்டது. தவிர அவரின் அக்கா மங்கையும் கடைசியாக சொன்ன, ‘நான் பொறுமையா இருந்திருக்கலாம். அனு நல்ல குணவதி!’ என்ற வார்த்தைகளும் அனுவை இவரிடமிருந்து காப்பாற்றியிருந்தது .
இப்போதும் தன் பேத்தி சந்தனாவின் நலனை நினைத்து, அவள் வாழ்வில் ஓர் மலர்ச்சி வந்தால் நிம்மதி என்ற எண்ணம் அவரை இப்படி பேசச் செய்கிறது. அவர் அடுத்து அங்கேதான் வருவார் என்று புரிந்திருந்த பாஸ்கரன் அதற்கு மேல் அவரை பேச அனுமதிக்கவில்லை.
*********
தன் மாமா புறப்பட்டதும் அவரை வழியனுப்பிவிட்டு வந்த சந்தனா, அம்மா தன்னிடம் எதையும் கேட்பதற்கு முன்பாக ஓடிப்போய் அறைக்குள் அடைந்துகொண்டாள். வேகவேகமாக அக்னி அனுப்பியிருந்தச் செய்தியைத் திறக்க,
‘Wherever you go, you must come back to me!’ என்ற செய்தி தாங்கிய அவன் குரல், அவளை விம்மித் தவிக்க செய்தது.
என்ன அழுத்தம்! என்ன இறுமாப்பு! எத்துணை உறுதி!
ஆனால் இந்த அழுத்தத்திற்கும் இறுமாப்பிற்கும் நம்பிக்கையளித்தவள் இவளல்லவா?
‘நான் அஸ்தமிக்கும் வரை சஞ்சுவின் மேலுள்ள என் அன்பும் மாறாது!’ என்று இவள் அவன்முன் உறுதிமொழி போல் சொல்லவில்லையா? அதனாலல்லவா இப்போது இத்தனை திமிராக இப்படியொரு செய்தியை அனுப்பியிருக்கிறான்!
ஆறாயிரத்து சொச்சம் முறையாக அதை அவள் கேட்டுக் கொண்டிருந்த போது அறைக்கதவு அசுரத்தனமாகத் தட்டப்பட்டது. “சனா, கதவைத் திற! தாத்தா லைன்ல இருக்கார்.”
‘தாத்தாவா?’
அம்மாவின் கூச்சலையடுத்து யோசனையுடன் கதவைத் திறக்க, அவர் தந்த அலைப்பேசி திரையில் அக்னியின் முகம் தெரிந்தது.
நெஞ்சின் நடுவே ஓர் மொட்டு துளிர்ப்பதை லாவகமாக மறைத்துக்கொண்டு, “இவர்தான் தாத்தாவா?” என்றாள் தனக்கேயுரிய குறும்புடன்!
அந்தப் பக்கம் அவன் பல்லைக் கடித்து ஒற்றைப் புருவம் உயர்த்திவிட்டு திரையைத் திருப்ப, “சந்தனம்!” என்ற தாத்தாவின் முகத்தைக் கண்டுவிட்டு,
“தாத்தா! என்ன திடீர்னு உனக்கு பேத்தி ஞாபகம் வந்திருக்குது?” எனக் கேட்டாள் குழப்பத்துடன்!
அபிராமி பாட்டி ஊருக்கு புறப்படுவதற்கு முன்னால் கலியபெருமாளைப் பார்த்துவிட்டு போகலாம் என்று சொன்னதையடுத்து, பாஸ்கரன் அவர்களை அவர் இருக்கும் இல்லத்திற்கு அழைத்து வந்திருந்தான்.
புறப்படும்போதே தான் ஒருமுறை சந்தனாவுடன் போய் தாத்தாவைப் பார்த்ததாகச் சொன்ன அக்னி, அவர் இவனை ‘சஞ்சு’ என்று அழைத்ததையும் சொன்னான்.
“அவர் அப்டித்தான்! சஞ்சு வயசு பசங்களைப் பார்த்தா அப்டித்தான் கூப்பிடுவார். சஞ்சு, அர்ஜூன் தவிர வேற எதுவும் பேசவும் மாட்டார்.” என்ற அனு, தன் மாமனாரைப் பற்றி மேலும் சிறிதுநேரம் பேசினாள்.
அர்ஜூன் தவிர மற்ற அனைவரும் சென்றனர். அனுமதி கேட்டு வெயிட்டிங் ஹாலில் அமர்ந்திருக்க, சஞ்சய் தாத்தா வரும் பாதைப் பார்த்து நின்றிருந்தான்.
வெள்ளை வேஷ்டி, சட்டையில் தளர்ந்த நடையுடன் வந்தவர் கண்களைச் சுருக்கி, “பாஸு, குழந்தையைத் (அர்ஜூன்) தூக்கிட்டு வந்தியா?” எனக் கேட்டவாறுதான் வந்தார்.
முன்னால் நின்றிருந்த இவனைப் பார்த்தவரின் கண்கள் ஒளிப்பெற்று, பின் அவனுக்கு பின்னால் போய் சுருங்கியது.
“சந்தனம் எங்கேடா?” எனக் கேட்க, சங்கடத்துடன் தலைக்கோதினான் பேரன்.
அனு, பாஸ்கரனுக்கு ஆச்சரியமான ஆச்சரியம்! எப்போது வந்தாலும் ‘சஞ்சு கிடைத்தானா? அர்ஜூனைக் கண்ணில் காட்டுவாயா?’ என்ற கேள்விகளையே கேட்பார். இன்று புதிதாக சந்தனாவையும் தேடவே பாஸ்கரன் எழுந்து வந்தான்.
“அப்பா, இவங்க எல்லாரும் உங்களைப் பார்க்கத் தான் வந்திருக்காங்க!”
அவனைக் கண்டுகொள்ளாமல் மீண்டும் சஞ்சயிடம் கேட்டார். “உன்னைத்தான் கேட்கறேன். சந்தனம் எங்கே? உன்னை அவ கையை விடக்கூடாதுன்னு சொன்னேனா இல்லையா?”
கடுப்புடன் அவர் முன் இருந்த இருக்கையில் அமர்ந்தவன் ஷூவைக் கழற்றியவாறு, தாத்தாவிடம் அவளைக் கோள்மூட்டும் நோக்குடன் சொன்னான். “உன் பேத்திதான் என்னோட வராம அவங்கம்மா கிட்ட போறேன்னு ஓடிட்டா!”
அவரும் இயல்பு போல் அவன் முன் தரையில் சம்மணமிட்டு அமர, “மாமா, மேலே உட்காருங்க!” என்று எழுந்து வந்தாள் அனு.
அவளையும் அவர் கணக்கில் கொள்ளவில்லை. “ஏன் போனா? உன்னைப் பிடிக்கலன்னு சொல்லிட்டாளா?” என்றபடி தன் வேஷ்டியால் அவன் ஷூவை எடுத்து துடைக்க, அங்கிருந்த அத்தனை பேரும் வியப்பில் ஆழ்ந்தனர்.
சஞ்சய் சலனமற்று பார்த்திருந்தான். இதைப் புரிதல் என்பதா?, குற்றவுணர்வு என்பதா? அல்லது செய்த தப்பிற்கு பிராயச்சித்தம் என்பதா? இல்லை… உண்மையிலேயே தாத்தாவிற்கு தன் மேல் பாசம் தான் சுரந்துவிட்டதா?
சஞ்சுவின் நிலைப்பாட்டை சந்தனா கணித்ததைப் போல, அவனுக்கு தாத்தாவிடம் வருத்தமோ, கோபமோ, பழிவாங்கும் எண்ணமோ அல்லது செய்ததற்கெல்லாம் நன்றாக அனுபவித்துவிட்டாயா என்ற மகிழ்ச்சியோ எதுவுமில்லை. அதற்காக அவரை மன்னித்துவிடும் அளவிற்கு பெரிய மனதும் அவனிடமில்லை.
கடந்த சில மாதங்களாக அவன் கவனம் முழுவதும் எப்படி நிரஞ்சனாவைக் காயப்படுத்தாமல், அனுவைத் தன்னுடன் தக்க வைத்துக்கொண்டு, அவள் அன்பினில் சீராடுவது என்பதிலேயே இருந்துவிட்டதால் அவன் தாத்தாவைப் பெரிதாக கணக்கில் கொள்ளவில்லை என்பதுதான் நிஜம்!
ஒருவேளை அவன் நினைத்ததற்கு எதிராக எல்லாம் நடந்து, இப்போதும் அவனின் தங்க அம்மா கைநழுவிப் போயிருந்தால் அவனின் கோபம், அனைத்துக்கும் மூலகாரணமாக இருந்த தாத்தாவின் மேல் திரும்பியிருக்குமோ என்னவோ! இப்போதைக்கு அவரின் வயதிற்கு மரியாதையளிக்க நினைக்கின்றான். அவ்வளவே! மற்றும்படி அவர்மேல் பாசமும் வந்துவிடவில்லை.
அவன் சிலை போல் அமர்ந்திருந்ததில் அருகிருந்த நிரஞ்சனா அவன் தோளில் குத்த, குனிந்து தாத்தாவிடமிருந்த ஷூவை வாங்கி ஓரமாக வைத்தான். “அவளை அப்புறம் பார்க்கலாம். இப்போ இவங்களைப் பாரு தாத்தா! என்னை இத்தனை வருஷமா பத்திரமா பார்த்துக்கிட்டவங்க இவங்கதான்! அம்மா, அப்பா, பாட்டி!”
அவர்கள் மூவரையும் பார்த்தார்; கைக்கூப்பினார்; கண்களால் நன்றியுரைத்தார்.
“உடம்புக்கு நல்லா இருக்குதா ஐயா?” என்ற அபிராமிக்கு மரியாதையுடன் தலையசைத்தார்.
தன் பேரனைக் கண்களால் காட்டி, “நல்லாயிருப்பீங்கம்மா!” என்றார். கண்கள் பனித்தது. வேறெதுவும் பேசவில்லை.
அவரின் தூர நிறுத்தும் அமைதியில் அவர்களுக்கும் வேறு பேசத் தோன்றவில்லை. அக்னியின் அழுத்தம் எங்கிருந்து வந்தது என்று புரிந்தது. அதிகம் பேசாத அக்னி இப்படித்தான் இருப்பான். ஒருவித ஒட்டுதலில்லா தன்மை! அதைத் திமிர் என்றுவிட முடியாது. அவனின் இயல்பே அதுதான். கலியபெருமாளின் இறுக்கமான தாடையில் அவர்கள் அக்னியை உணர்ந்தனர்.
இருவருமே வைத்தியரிடம் கூட வாயைத் திறக்காதவர்கள் என்பது நாமும் அறிந்த சங்கதிதானே?
“சந்தனம் வராதா?” என மீண்டும் பேரனிடம் ஆரம்பிக்க,
பொறுமையற்று, “அப்பா, நம்மளோட ஆசையைப் பசங்க மேல திணிக்க வேணாம்ப்பா!” என்ற பாஸ்கரனின் கரத்தை அழுத்தி, “அத்தைக்கு வீ.சி பண்ணுங்கப்பா!” என்றான் கட்டளையாக!
அன்று இவன் சந்தனாவின் கையைப் பற்றியிருக்கையில் தெளிந்திருந்த தாத்தாவின் விழிகள், இன்று அவளை இவனுடன் காணாமல் அலைபாய்ந்து திரிகிறது. சந்தனாவைக் கட்டி வைத்து சஞ்சுவைத் தன் குடும்பத்துடன் பிணைத்துவிட நினைக்கிறார் எனப் புரிந்தது.
பாஸ்கரன் மிகுந்த தயக்கத்துடன் பிரபஞ்சன் குடும்பத்தினரைப் பார்த்துவிட்டு நிர்மலாவைக் காணொளியில் அழைத்து, அலைபேசியைக் கலியபெருமாளின் கையில் தந்தான்.
நிர்மலா சற்றுமுன்னர் தான் காமாட்சியிடம் பேசி, அவர், ‘நம் சந்தனத்திற்கு மாலை பூத்துவிட்டது.’ என்றதில் கடுப்பாகி அவரிடம் சண்டைப் பிடித்து மண்டைக் காய்ந்துபோய் அமர்ந்திருந்தாள்.
இப்போது அண்ணனின் அழைப்பில் திரையில் அப்பாவைக் கண்டவள், “அப்பா? நீங்களா? என்னப்பா இன்னிக்கு எல்லாரும் அதிர்ச்சி மேல அதிர்ச்சியா கொடுக்கறீங்க?” என,
“சந்தனம் எங்கே?” கிளிப்பிள்ளை போல் அவர்.
“அவ ரூம்ல இருக்கா! உங்களுக்கு விஷயம் தெரியுமாப்பா? அந்த சஞ்சு கிடைச்சிட்டானாம்! காலைல தான் அண்ணன்…”
மெல்ல திரையை எட்டிப் பார்த்த சஞ்சய்யைக் கண்டு நிர்மலாவின் பேச்சு நின்றுபோனது.
“சந்தனாகிட்ட கொடுங்க.” என்றான்.
“அவ… அவக்கிட்ட ஏன்..?”
‘நீ ஏன் அவளிடம் பேசவேண்டும்?’ என்று கேட்க வந்த கேள்வி முழுதாக வெளிவரவில்லை. சஞ்சு கிடைத்துவிட்டான் என்றதே நிர்மலாவுக்கு அதிர்ச்சிதான்! அதிலும் அவன் அக்னியாக இருந்துவிட்டதில் பேரதிர்ச்சியை வாங்கியிருந்தாள்.
அத்துடன் அவன் யாரோ ஒரு வழிப்போக்கனாகவோ யாசகனாகவோ இருக்கவில்லை. சமூகத்தில் ஓர் உயர்ந்த நிலையில் இருக்கின்றான். தன் சம்பந்தியின் தத்துப் பிள்ளையாக இருக்கின்றான். ஆக அர்ஜூன் தான் தன் வீட்டு மருமகனாக வர வேண்டும் என்ற அவள் விருப்பம் பஸ்பமாகிவிடுமோ என்ற அச்சமும் வந்துவிட்டது.
சஞ்சய் முறை தவறி பிறந்தவன் என்ற கூற்றில் இருந்து இன்னமும் அவளால் வெளிவர இயலவில்லை என்பதே நிஜம்!
“பேசணும்!” இறுகிய குரலை மாற்றாமலேயே பதில் வந்தது.
“அவ… அவ தூங்கறா!”
“எழுப்புங்க!”
அவளை மூச்செடுக்கவே விடாமல் பட் பட்டென்று பேசினான். பாஸ்கரனுக்கு சிரிப்பு வரும்போல் இருந்தது. நிர்மலா அனுவை நடத்திய விதத்தைக் கண்டிருக்கிறானெனப் புரிந்தது. வேண்டுமென்றே தான் சந்தனாவை விடுத்து நிர்மலாவின் அலைப்பேசிக்கு தன்னை அழைக்கச் செய்திருக்கிறான். அப்பா சொன்னால் நிர்மலா தலையாட்டித்தானே ஆக வேண்டும்?
அவன் மேலிருந்த கடுப்பில் தான் நிர்மலா மகளின் அறைக்கதவைப் பேய் போல் தட்டினாள்.
“நீ ஏன் சஞ்சுவோட வரல சந்தனம்?”
“அம்மாவைப் பார்க்க வந்தேன் தாத்தா.”
“நான் சொன்னது ஞாபகம் இருக்குதுல்ல?”
மெதுவாக தலைசாய்த்து எட்டிப் பார்த்தான் சஞ்சய். தாத்தாவின் கேள்விக்கு அவளின் பதிலை விட, அவளின் முகம் காட்டும் உணர்வுகளை அவதானிக்க ஆசையாக இருந்தது. மற்றவர்களுக்கு முதுகு காட்டி நின்றிருந்தது வேறு அவனுக்கு வசதியாகிப் போனது.
“ம்ம்!” என்றவள் அவஸ்தையாக இதழ் விரித்தாள். அள்ளிக் கொள்வதைப் போல் பார்த்தான் இவன்.
அந்தப் பார்வையில் திணறிய உள்ளத்தைத் திறக்கமாட்டேனெனப் பிடிவாதமாக தாத்தாவின் முகம் பார்த்தாள். இவனிதழில் எள்ளல் நகையொன்று தோன்றி மறைந்தது.
“உங்கம்மாவை நாளைக்கு என்னை வந்து பார்க்கச் சொல்லு சந்தனம்!” என்றதுடன் பேச்சை முடித்துக்கொண்டார் பெரியவர்.
பின் அபிராமியிடம் திரும்பியவர் கைக்கூப்பி நின்றார். “நன்றிம்மா! ரொம்பப் பெரிய விஷயம் செஞ்சிருக்கீங்க. இரத்தினம்ன்னு தெரியாம புழுதிக்குள்ள போட்டு புதைச்சிட்டேன். நீங்க அதைத் துலக்கி வெளிச்சம் கொடுத்து சுடர்விட வச்சிட்டீங்க! உங்க முன்னாடி நான் சிறுமைப்பட்டு நிற்கறேன். இப்போ என் மனசுல எத்தனை விசாலமான வெளிச்சத்தைக் கொண்டு வந்திருக்கீங்கன்னு உங்களுக்கு தெரியாது. உங்க அத்தனை தலைமுறைக்கும் சேர்த்து புண்ணியம் செய்துட்டீங்க!” என்றவர், பிரபஞ்சன் தம்பதியரைப் பார்த்து, “நல்லா இருப்பீங்க!” என்று ஆசி கூறிவிட்டு திரும்ப,
ஓடிப்போய் அவர் முன் நின்றாள் அனு. “சஞ்சு என்னை பெங்களூர் கூப்பிடறான் மாமா. நீங்களும் வந்தா சந்தோஷப்படுவான். இன்னும் ஏன் இங்கேயே இருக்கணும்?”
“இந்தக் கிழவனுக்கு இங்கேதான்மா வசதி! நான் தொலைச்ச உன் பிள்ளை உனக்கு கிடைச்சிட்டான். இனி நீ அவனோட நிம்மதியா இரு!”
“இன்னும் என் மேல கோவமா மாமா?”
“எனக்கு என்னம்மா கோவம்? நான் உனக்கு ஏற்க முடியாத துரோகத்தைச் செஞ்சும் கூட, இப்பவும் மனசார என்னை உன் வீட்டுக்கு கூப்பிடறியே… அந்த வார்த்தையே எனக்குப் போதும். கிடைச்ச உன் குழந்தையைக் கெட்டியா பிடிச்சுக்கோ!”
“நீங்க எப்போ இங்கிருந்து வருவீங்க?”
திரும்பி சஞ்சுவை ஒரு பார்வை பார்த்தார். “இவன் கல்யாணத்துக்கு வர்றேன்.”
அவ்வளவுதான். போய்விட்டார்.
“ஆல்மோஸ்ட் பதினஞ்சு வருஷத்துக்கு அப்புறம் அப்பா இவ்ளோ தெளிவா, நீளமா பேசி இன்னிக்கு தான் பார்க்கறேன்.” என்ற பாஸ்கரனின் கண்களில் ஈரம்!
இசைக்கும்🦋🌷…
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
11
+1
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


அனைவருடைய உணர்வுகளையும் அழகா பிரபலிக்கின்றன உங்கள் வார்த்தைகள்
மிக்க நன்றி சிஸ்💗🎈
தாத்தா சஞ்சுவின் உரையாடல் உணர்வுகுவியலாக இருந்தது. படிக்கும் சமயம் ஒரு வித பூரிப்பு மனதினில் எழுகிறது. அத்தனை அழகான எழுத்துக்கள். 🌻✨
பாஸ்கரன் யாரையும் கட்டாயப்படுவதில்லை அவர்களை அவர்களாகவே ஏற்றுக்கொள்கிறார்.
திணிக்கப்பட்ட ஒன்றை ஏற்க இயலா பரிதவிப்போ சனாவிற்கு என்ற எண்ணம்.
அவள் உருவகத்துக்கும் உறவுக்கும் இடையே இனிய தத்தளிப்பில் அல்லவா இருக்கின்றாள்.
அழுத்தக்காரர்களான தாத்தாவும் பேரனும் அவளை விடுவதாய் இல்லை.
“Whenever u go u must come back to me” 🌿🌿🫰🏼
இந்த நாவலுக்கு இதுவரை வந்த கருத்துக்கள்ல பாஸ்கர் பத்தி அவர் நிலைல இருந்து சொன்னது நீங்க தான் 🪶🌻 ஆமா, உருவகத்துக்கும் உறவுக்குமிடையே இனிய தத்தளிப்பில் சனா! 🍂🍁 மிக்க நன்றி சிஸ் 🪻🍃
😊😊✨