
சபதம் – 16
குறள் 771
மறம் என்ப தாழாது மன்னுயிர்க்கு
அறம் என்ப தாழ்ந்து வரல்.
பொருள்:
ஒரு அரசன் அல்லது வீரனுக்கு, உயிரைக் காக்கும் போது கூட அறத்திற்காக (நியாயத்திற்காக) போராடுவது தான் உண்மையான வீரத்தன்மை.
இருள் கிழித்துக்கொண்டு கண்களைக் கூசச் செய்யும் ஒளி பிரகாசித்துக் கொண்டிருந்த அந்த அறை முழுவதும் வெறுமை நிறைந்திருந்தது. ஒரே ஒரு மருத்துவப் படுக்கை, அதைச் சுற்றி இயந்திரங்கள் ஒழுங்கான தாளத்தில் பீப் பீப் என ஒலித்துக் கொண்டிருந்தன. ஐ.வி. குழாய்கள் கலீலின் கைகளில் ஊடுருவி அவனின் மார்பு இயந்திரத்தின் கட்டுப்பாட்டில் உயர்ந்து இறங்கியது.
அந்த நேரம் கலிலின் விரல்கள் சிறிது நடுங்கின. கண் இமைகள் அசைந்து, மூச்சுக்குச் சிரமப்படும் அவனின் உதடு பிளந்து மெல்ல சுவாசித்தவன் கண்களைத் திறந்தான்.
கண்களை நிறைத்த வெண்மையான மேல்சுவரை நோக்கியவனின் கண்களைப் புண்படுத்தும் அந்த அறையைப் பார்க்க முடியாமல் கண்களை இறுக மூடிக் கொண்டான்.
பலநாள் இருட்டுக்குள் இருந்து விழித்த அவனது கண்கள் வெளிச்சத்துக்குப் பழகும் வரை கண்களைச் சிமிட்டி சரி செய்தவன், மெல்ல எழுந்திருக்க முயன்றான். ஆனால் கம்பிகள், குழாய்கள், உணர்வி தகடுகள் அனைத்தும் அவனின் தோலை இழுத்து பிடித்தன.
நகர முடியாத உடலை மேலும் சிரமப்படுத்த விரும்பாமல், தான் இருந்த அறையை கண்களால் அலசினான். மிகவும் சிறிய அறை, பாதுகாப்புக்கு பயன்படுத்தப்பட்டதாக இருக்கலாம். ஜன்னல்கள் இல்லை. கண்கள் எட்டும் வரை கதவுகள் எதுவும் தெரியவில்லை. வெள்ளைச் சுவர்களும், இயந்திரங்களின் ஓசை மட்டும் தொடர்ந்து அவன் காதுகளில் கேட்டுக் கொண்டிருந்தது.
தான் எப்படி இங்கு வந்தோம் என்றவனின் நினைவுகள் பின்னோக்கி செல்ல, தனக்கு நடந்த விபத்து, அதில் தோன்றிய சில உணர்வுகள். தன்னை யாரோ வழிநடத்தியது. முடியாத நிலையில் அந்த உருவத்தின் கைகளில் மயங்கியது என்று ஒவ்வொன்றாக நினைவுகூர்ந்தான்.
தன்னைக் காப்பாற்றியது யார் என்று, நினைவுக்குக் கொண்டு வர முயன்றவனுக்குத் தோன்றிய ஒரே எண்ணம், தன்னை பிரிந்த தன் உடன்பிறவா சகோதரன் என்று நம்பியவன் உதடுகள், “ரஷீத்” என்று முணுமுணுத்தபடி கண்களின் ஓரம் சிறு துளி கண்ணீர் வெளியேறியது.
அந்த பெயர் அவனுக்கு பல நினைவுகளை மேலெழுப்பித் தாக்கியது. மெல்ல மெல்ல பழைய நினைவுகளை அசைபோட்டவனின் கண்களில் இருந்து அறை கரைந்து மறைந்தது.
பல ஆண்டுகள் முன்பு காஷ்மீர் மாநிலம் ராணா குடும்ப அரண்மனை. இரவு நேரம் பனித்துளிகள் மெதுவாக விழுந்து அரண்மனையின் கூரைகளை வெண்மையாக்கிக் கொண்டிருந்தது. அரண்மனையின் உள்ளே, எட்டே வயதான கலீல் ஹாசிம், எனும் ரன்வீர் சிங் ரானா தனது தந்தையின் அருகில் அமர்ந்திருந்தான். ஆரவள்ளியின் காவலர்களாக விளங்கிய ராணா குலத்தின் கடைசி வாரிசு.
உதய் சிங் ராணா தற்போதைய அரசன், ஆனால் ராஜ்ஜியம் இல்லாமல் தன் வம்சத்தை காக்க ஓடிக் கொண்டிருக்கிறான்.
தன்னைப் போல் மகனின் நிலை இருந்து விடக் கூடாது என்று உறுதி கொண்ட உதய் சிங்,”நீ ராஜபுத்திரர்களின் இரத்தத்தைச் சுமக்கிறாய், மகனே…ஆனால் இந்த இரத்தம் உனக்குக் ஆபத்தை விளைவிக்கக் கூடியது” என்ற தந்தையை குழப்பத்துடன் பார்த்திருந்தான் குழந்தை ரன்வீர்.
“ஆபத்தா? யாரிடமிருந்து?” என்று வினவிய குழந்தையின் கேள்வியில் ராஜா உதய் சிங்கின் கண்கள் இருண்டது .
“சபதக்கல்லின் சக்தியை விரும்புபவர்களிடமிருந்து. ராஜபுத்திர மரபைக் கண்டு அஞ்சுபவர்களிடமிருந்து. நமது வம்சத்தை வேட்டையாட துடிப்பவர்களிடமிருந்து. ஆரவள்ளியை ஆழத்துடிப்பவர்களிடமிருந்து”
அந்த நேரத்தில் சாளரத்தின் வெளியே ஏதோ நிழல் நகர்வது போல் இருக்க, உலோகத்தின் மெல்லிய சத்தம் தொடர்ந்து பெரும் இடியாக மாற, கதவு உடைந்து திறந்தது. முகமூடி அணிந்த ஆட்கள் அந்த அரண்மனைக்குள் நுழைந்தனர்.
அரசர் உதய் சிங், அந்த அறையை இருளில் மூழ்கச் செய்து, ரன்வீரை அழைத்துக் கொண்டு ஒரு தூணின் பின்னால் இருக்கும் சுரங்கக் கதவை நெருங்கியவர், ” ரன்வீர்.. நான் சொல்வதை கவனமாகக்கேள். ராணா குலத்தின் எதிர்காலம் நீ! உன்னை காக்க ராஜபுத்திர குலங்கள் பல உதவும். வீரம் போரிடுவதில் மட்டும் இல்லை, சில நேரங்களில் பதுங்கிப் பாய்வதும் வீரம் தான். ஓடு. ஆசாத் உன்னை பாதுகாப்பார். உயிரோடு இருந்தால் நான் உன்னை தேடி வருவேன். இல்லையேல் நீ வாழும் காலம் முழுதும் என் ஆன்மா உன்னில் இருக்கும்” என்றவர் மகனை ஒருமுறை அணைத்து உச்சி முகர்ந்துவிட்டு, உடைவாளுடன் அங்கிருந்து நகன்றார்.
தனது தந்தையை நோக்கி ஓடத்துடித்த கால்களைக் கட்டுப்படுத்தியவனின் காதுகளில் வாள்கள் மோதும் சத்தம் கேட்க, பயத்தில் வெளிறிய முகத்துடன் ஆசாத்தின் ஹவேலியை நோக்கி ஓடத் தொடங்கினான்.
பாதி வழியை கடந்த ரன்வீரின் கைகளை யாரோ அழுந்த பற்ற, அதை உதறிவிட்டு ஓட முயன்றவனின் வாயை சத்தம் வராமல் மூடிய கைகள், அவன் காதுக்குள், “பேட்டா..டரோ மத். மே தும்ஹரா வாப்பா ஹூன். மேரே தரப் தேக்கோ( பேட்டா… பயம் கொள்ளாதே. நான் உனது வாப்பா. என்னை பார்)” என்றபடி ரன்வீரை தன்னை நோக்கி திருப்பினார் ஆசாத்.
ஆசாத்தை கண்ட ரன்வீர், “வாப்பா… பாப்பா ஜி..” என்றவனை இறுகி அணைத்தவர், “அழுகாதே பேட்டா, நான் இருக்கிறேன். இதோ உன் பாய் ரஷீத் இருக்கிறான்” என்றவர் தொடர்ந்து ரன்வீரிடம், “திரும்பிப் பாராமல் இருவரும் ஓடுங்கள்!” என்றவர் இறுதியாக ஒருமுறை பின்னால் ராணா அரண்மனை தீயில் கருகிக் கொண்டிருந்ததை பார்த்துவிட்டு கண்ணீருடன் மகன்களை பின்தொடர்ந்தார்.
ஆசாத்தின் மகன் ரஷீத் கலிலின் கைகளை இறுக்கமாகப் பிடித்து கொண்டு ஓடினான். காட்டின் மத்தியில் சிறு குகைக்குள் அடைக்கலம் இருந்தனர் மூவரும்.
தந்தையை கேட்டு அழும் ரன்வீரை தேற்றும் ஆசாத், தனது மகனிடம், “ரஷீத் ஒரு வேளை தங்கள் இருவரையும் பாதுகாக்க வாப்பா இல்லை எனில். ரன்வீரை நீ தான் பார்த்துக் கொள்ள வேண்டும் பேட்டா. எனக்கு அடுத்து அந்த கடமை உன்னையேச் சேரும். நம் உயிரைக் கொடுத்து ரன்வீரை பாதுகாக்க வேண்டும். இது நம் முன்னோர்களின் வாக்கு. மனதில் கொள்” என்று ஹூன் வம்சத்தின் கடமைகளை மகனுக்கு போதிக்கவும் தவறவில்லை ஆசாத்.
மூன்று நாட்கள் அந்த காஷ்மீர் காட்டின் ஆழத்தில் உள்ள சிறு கல் குகையில் மறைந்திருந்தனர்.
பசி,பலவீனம், பயம் என்று பிள்ளைகள் துடித்துப் போயினர். அதை கண்ட ஆசாத் அவர்கள் முன் மண்டியிட்டு, “இந்த இடத்தை விட்டு வெளியேறாதீர்கள். நான் உங்களுக்கு உணவு கொண்டு வருகிறேன்” என்றதோடு அங்கிருந்து வெளியேறினார்.
அவர் சென்றதும் குகையை சுற்றி வந்த சிறுவர்களால் தாளமுடியாமல் ஆர்வமும் குறுகுறுப்பும் இருவரையும் வெளியே இழுத்துச் சென்றது.
ஆற்றங்கரையில் ரன்வீரும் ரஷீத்தும் நீரைத் தெளித்து விளையாடியவர்கள் பல நாட்களுக்குப் பிறகு சிரித்து மகிழ்ந்தனர்.
அப்போது கேட்ட, கிளை முறிந்த சலசலப்பில் நிமிர்ந்து பார்த்த சிறுவர்கள் முன் ஐந்து பேர் மரங்களின் நடுவில் இருந்து வெளிவந்தனர்.
அதில் ஒருவன் பயந்து நின்ற சிறுவர்களை பார்த்து, “உங்களில் யார் ராணா வம்ச வாரிசு?” என்றதும் ரன்வீரின் இதயம் நின்றுதுடிக்க, அவன் பதில் சொல்லும் முன், ரஷீத், “மே ஹூன், ராணா வன்ஷ் கா பேட்டா” என்றபடி முன் வந்து நின்றான்.
ரன்வீர் ரஷீத்தை அதிர்ச்சியுடன் பார்த்தபடி, அவன் காதுகளில் மெல்ல, “ரஷீத், தூ க்யா கர் ரஹா ஹை?( ராஷித் நீ என்ன பண்ற?)” என்றவனின் கைகளை இறுக்கப் பிடித்த ரஷீத், “அமைதியாக நில் ரன்வீர். உன்னை காப்பாற்ற சொல்லி வாப்பா எனக்கு கட்டளையிட்டுள்ளார்” என்றவனை முறைத்த ரன்வீர், “வோ நஹி.. மே ஹி ராணா வன்ஷ் கா பேட்டா ஹூன்” என்றபடி ரன்வீரும் முன்னே வந்து நின்றான்.
இதனை சுவாரஸ்யமாக பார்த்த வீரர்கள் சிரித்தபடி, “இருவரையும் கட்டுங்கள்.
மாலிக் இதனை முடிவு செய்து கொள்ளட்டும்” என்றபடி இருவரையும் கட்டி இழுத்துச் சென்றனர்.
மலைப் பாதையில் வண்டி ஏறும் நேரம், சிறுவர்கள் இருவரும் மாற்றி மாற்றி சண்டையிட்டுக் கொள்ள, வேறு வழியின்றி வண்டியை நிறுத்திய குண்டர்களை தள்ளிவிட்டு இரு சிறுவர்களும் இரு திசைகளில் பிரிந்து ஓடினர்.
வீரர்களும் இரு குழுவாக பிரிந்து சிறுவர்களை பின் தொடர, ரன்வீர் காட்டில் தடுமாறி விழுந்து,
அழுது கொண்டு ரஷீதின் பெயரை கூவினான்.
ஆசாத் குடிசைக்கு திரும்பியவர் அது காலியாக இருப்பதைப் பார்த்ததும் அவரது முகம் வெளுத்துப் போனது.
அவரின் உள்மனம் இட்ட கூச்சல் காட்டையே கிழித்திருக்கும். பிள்ளைகளைக் காணாது தவித்தவர், குதிரையில் பாய்ந்து காட்டை நோக்கி பறந்தார்.
முதலில் ரன்வீரை கண்டவர், நிம்மதி மூச்சு விட, அதற்கான ஆயுள் குறைவு என்று அப்போது ஆசாத்துக்கு தெரியவில்லை.
ஆசாத்தை கண்டதும் ஓடி வந்து கட்டிக்கொண்ட ரன்வீர் அதிர்ச்சியில் உடல் நடுங்க, “வாப்பா… ரஷீத்… அவர்கள் ரஷிதை துரத்திக் கொண்டு சென்றுள்ளனர். எனக்கு பயமாக இருக்கிறது வாப்பா…” என்று கதறியவனை தேற்றி ஆறுதல் அளித்தவரின் உள்ளம் பெற்ற பிள்ளைக்காக துடித்தது.
ஆசாத் ரன்வீரை தன்னோடு ஏற்றிக் கொண்டு, சிறுவன் கட்டிய திசையில் குதிரையை வேகமாக செலுத்தினார்.
ஆசாத் சென்ற வழித்தடங்கள் முழுதும் அங்கங்கே ரத்தத் திட்டுக்கள் சிதறி இருக்க, அதனை தொடர்ந்து சென்றவரின் உள்ளம் அதிர்ந்து நிலைகுலைந்து போனது. அவரின் பார்வையை தொடர்ந்த ரன்வீரின் விழிகளில் ஒரு சிறு குடிசை தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது.
உருகி ஓடும் வெள்ளை பனிப்பொழிவில் செவேலென இருந்த ரத்தக்கறைகள் ஆசாத்தை விக்கித்துப் போக வைத்தது என்றால், அது முடிந்த இடம் அங்கு தீப்பற்றி எரியும் குடிசையில்.
ரன்வீரை குதிரையோடு கட்டியவர், தன் மகன் அங்கு இருக்க மாட்டான் என்ற பேராசையில் அந்த குடிசைக்குள் பாய்ந்தார்.
அங்கு கருகிய நிலையில் இரண்டு உடல்கள் இருக்க, அந்த உடலில் ஹூன் வம்சத்தின் வாரிசுகள் அணிய கூடிய பதக்கம் மினுமினுத்துக் கொண்டிருந்தது.
அதற்கு மேல் யோசிக்க தெம்பில்லாத ஆசாத் அந்த உடலின் அருகே முழங்காலிட்டு அமர்ந்தவர் மறைந்த மகனுக்காக அழுதார். தன் துரதிஷ்டத்தை எண்ணி வாய்விட்டு கதறினார்.
அவரின் அழுகுரலில் உள்ளே வந்த ரன்வீர், ஆசாத்தையும், அவர் கைகளில் மின்னிக் கொண்டிருந்த பதக்கத்தையும் பார்த்து கதறி துடித்தான்.
ரன்வீரின் பிஞ்சு உள்ளத்தில் பதிந்தது எல்லாம் ஒன்றுதான், ‘ரஷீதின் மரணத்திற்கு காரணம் தான் தான் என்பது’. ஆசாத்தின் அருகில் மண்டியிட்டான், “வாப்பா… ரஷீத்… என்னால் தான்…” என்பதற்கு மேல் சொல்ல முடியாமல் திக்கியவனை இழுத்து அனைத்துக்கொண்டார் ஆசாத் கான்.
“இல்லை, மகனே. ரஷீத் எனது வாக்கை நிறைவேற்றியுள்ளான். எங்கள் முன்னோர்கள் அளித்த சத்தியத்தை, அதிவாரின் வாரிசை காப்பாற்றியுள்ளான். உன்னை காப்பாற்றி என் கைகளில் கொடுத்துள்ளான்” என்றவரின் வார்த்தையில் உடல் நடுங்க அவரை மட்டுமே நங்கூரமாக பற்றிக் கொண்டான்.
இன்றுவரை ஒவ்வொரு ஆண்டும் ஆசாத் மற்றும் கலிலாக மாறிப் போன ரன்வீரும் அந்த எரிந்த குடிசைக்கு திரும்புவார்கள். ஒரு விளக்கை ஏற்றிவிட்டு, மலர்களை படைத்துவிட்டு ரஷீத்தோடு சற்று நேரம் பேசிவிட்டு வீடு திரும்புவர்.
அன்றிலிருந்து இன்றுவரை கலீல் தன் பாதுகாப்பிற்காக உயிரை விட்ட தன் தந்தை மற்றும் நண்பன் ரஷீதின் நிலை யாருக்கும் வரக் கூடாது என்று தன் உறவுகளிடம் இருந்து விலகியே நிற்பான்.
தனக்காக இன்னொரு உயிர் பறிபோகக் கூடாது என்பதில் அதிக கவனம் கொள்பவனுக்குத் தெரியவில்லை. இந்த குற்ற உணர்ச்சி இவனை மறுஜென்மம் வரை தொடர்கிறது என்று.
அனைத்தும் கனவாக மனதினில் தோன்ற, அதில் திடுக்கிட்டு முழித்த கலீல் கண்களில் வழிந்த கண்ணீர் அவன் மார்பைத் தொட்டது.
அவன் உதடுகள் மெல்ல அசைந்து, “ரஷீத்…நான் இன்னும் உயிரோடு இருக்கிறேன்… அன்றும் நீ தான் காப்பாற்றினாய். இன்றும் நீ தான்…” என்றவனுக்கு மேற்கொண்டு பேச முடியவில்லை.
சாளரத்தின் வழியே வந்து விழுந்த சூரிய ஒளியை நோக்கி பார்த்தவன், மெல்ல எழுந்தான்.
பலவீனமாக இருந்தாலும், மன உறுதியுடன் எழுந்து நின்றான்.
“ராணா குலத்தின் வாரிசு.. ரன்வீர் சிங் மீண்டும் உயிர்த்தெழுந்தான்”
ரணசூரன் வருவான்…….

