Loading

 

KKEN-16
இத்தனை நேரம் பத்ர காளி போல இருந்தவள் இப்போது பச்சை குழந்தையாக கதறினாள். அவளை அடக்க முற்பட்ட மாற்ற காவலர்களை தடுத்து விட்டாள்  மது. அடுத்த சில நிமிடங்களில் மெதுவாக இவளே அவள் தலை கோதினாள்.
“நீங்க கவலைப்படாதீங்க மேடம். நான் மைனர்  தான். பெரிசா ஒன்னும் தண்டனை கிடைக்காது” அவளே தன்னை சமாதானம் செய்து கொண்டாள் .
அவளை சிறையில்  போட்டார்கள். அடுத்து அடுத்து நடக்க வேண்டிய விஷயங்கள் நடந்தன.
அந்த பெண்ணை நினைத்த மதுவுக்கு அன்று மனம் முழுவதும் யோசனையாகவே இருந்தது.
அவளுக்காக வாதாட அரசே வக்கீலை நியமித்தது. அந்தப் பெண் வக்கீலிடம் இவள்தான் பேசிக் கொண்டிருந்தாள்.
“இந்த பொண்ணுக்கு தண்டனை இல்லாம வெளில கொண்டு வர முடியுமா?”
“நீங்க இப்டி கேக்கலாமா மது ? ”
“நான் ஒரு காவலரா  இதை கேக்க முடியாது. ஒரு சக மனுஷியா கேக்கறேன். இந்த பொண்ணு அவன வெட்டி இருக்கலன்னா அவன் இன்னும் எத்தனை பொண்ணுங்களை  இந்த மாதிரி பண்ணுவானோ?”
“அதுக்குத் தான் சட்டம் இருக்கே?”
“இருக்குத்தான். நான்தானே போய் அவங்க அப்பாவோட, அக்காவோட பிணங்களை அள்ளி  போட்டுக்கிட்டு வந்தேன். அதுக்கும் சட்டம் இருக்குத்தான்”
“உங்க கோபம் சரியானதுதான். ஆனா நாம  சட்டத்தை மதிக்கணும்.”
“குடிச்சுட்டு ஒரு பெண்ணை நிர்வாணப்படுத்தி, நண்பர்கள் கூட சேர்ந்து அணுஅணுவா சிதைச்சு கொன்னவனுக்கு மைனர்னு சொல்லி தையல் தொழில் செஞ்சுக்கோன்னு கத்தரிக்கோலை குடுக்க முடியும்னா இந்த பொண்ணுக்கு ஏன் நியாயம் கிடைக்க கூடாது?”
“இதே பாயிண்டை நான் நீதிபதிகிட்ட வைக்கறேன். என்னால முடிஞ்ச வரைக்கும் அவளுக்காக போராடுவேன். கவலைப்படாத மது” வக்கீல் ஆறுதலாக கையில் தட்டிக் கொடுத்தாள் .
“அது சரி! இப்ப அந்த பொண்ணு வெளி வந்ததுக்கு அப்புறம் என்ன செய்வா ? எங்கையாவது மகளிர் சுய உதவி குழு, இல்லை வேற ஏதாவது சேவா சங்கத்துல இருந்துக்குவாளா? நீதிபதி கேப்பாங்களே?”
“அதெல்லாம் பத்தி நீயும் நானும் கவலை பட வேண்டாம். மேடத்துக்கு ஒரு காதல் இருக்கு. அத்தை பையனாம் ”
“ஓ! பப்பி லவ்வா” இருவருக்கும் ஒரு மாதிரி வெட்கம் கலந்த சிறு புன்னகை வந்தது.
“ஓகே டியர்! ஏற்கனவே ரொம்ப லேட்டாகிடுச்சு. ட்ரைவரை வேற வீட்டுக்கு அனுப்பனும்.”
காரில் ஏறி அமர்ந்ததும்  முதலில் செல்வியை பற்றி யோசித்தவளுக்கு பிறகு அவளின் காதல் கதை நினைவுக்கு வந்தது. கூடவே சேர்ந்து தன் மனம் கவர்ந்தவனின் நினைப்பும் வந்தது. தன்  மனதை அழகிய புன்னைகையில் திருடிக் கொண்டவன் இவளது புன்னகையையும் சேர்த்தே திருடி விட்டான் போலும். அதனால் தானோ என்னவோ இவள் உதட்டோர வளைவை தவிர பெரியதாக புன்னகிப்பதில்லை. பிறந்த போதே தாயை இழந்தவளுக்கு இருந்த தந்தையும் விமான விபத்தில் இறந்து போனார். நல்ல வசதியான குடும்பம். தந்தையின் தம்பி அனைத்து சொத்துக்களையும் சுருட்டிக் கொண்டு இவளை அனாதை ஆசிரமத்தில் சேர்த்து விட்டார். உற்றார் உறவினர், பணம் எல்லாம் இருந்தும் இவள் யாரும் இல்லாத அநாதையாகத் தான்  அன்றும் இருக்கிறாள். இன்றும் இருக்கிறாள்.
“மேடம் வீடு வந்துருச்சு” என்ற காவலரின் குரலில் நடப்புக்கு வந்தாள் .
‘இனி இதைப் பத்தி நினைக்கக் கூடாது.’
“காலைல சீக்கிரம் வந்துருங்க. அந்த ராக்கி கேஸ் விஷயமா நாளைக்கு கோர்ட்டுக்கு போகணும். டீசல் புல் பண்ணிடுங்க”
“எஸ் மேடம் ” கிளம்பி விட்டார். குளித்து, உண்டு முடித்தவளுக்கு படுத்தால்  போதும்  என்றிருந்தது.
வாருங்கள் நாமும் மதுவுடன்  சேர்ந்து உறங்க போகலாம்.

இன்று பாப்பாவுக்கு பிறந்த நாள். மூன்று அரை முடிந்து நாலு தொடங்கும் நாள். நேற்றுதான் கையில் ஏந்தி ஆரத்தி எடுத்து கொண்டு வந்தது போல இருந்தது. நாட்கள் மாதங்களாக மாறி, இதோ நான்கு வருடங்கள் ஆகி விட்டது . தேவதை. அனைவரின் வாழ்வையும் மாற்றி அமைத்த தேவதை. மழலையில் தாத்தா என்று அழைத்த  போது உலகமே மறந்து போனது அவள் தாத்தாவிற்கு. அம்மாவில் இருந்து மாமா வெகு சுலபமாக கற்றுக் கொண்டாள் போலும். முதலில் சொன்ன வார்த்தையே மாமா தான். மற்றவர்களுக்கு எப்படியோ வெற்றியின் வாழ்க்கையில் பூ பூக்க வைத்தவள். எந்த பிடிப்பும் இல்லாதிருந்தவனுக்கு நான் இருக்கிறேன் என்று இவன் விரலை அழுத்தி பிடித்து கொண்டவள் .

‘ஆமா எதுக்கு வீட்டுக்கு போகணும்?’ மலர் திருமணமாகி சென்றதன் பிறகு மனதிற்குள் அலுத்துக் கொள்ளாத நாளே இல்லை. வீட்டின் நினைவு வரும்போதெல்லாம் வெறுப்பும் சேர்ந்தே வரும். இவள் வந்ததன் பிறகு எல்லாமே மாறியது. யார் சொன்னாலும் கேட்காமல் குட்டி ஜட்டியுடன் சுற்றி கொண்டிருப்பவளை  வெற்றி வந்து சட்டை போட்டு விட்டு உயர தூக்கி ஒரு சுற்று சுற்ற  வேண்டும். இப்போதும் அப்படிதான். எத்தனை களைப்பாக இருந்தாலும் அவளுக்கு பத்து ரூபாய்க்கு பிஸ்கட் வாங்கி வர வேண்டும். அல்லது ஒரு ரூபாய் மிட்டயாவது மாமன் வாங்கி வந்து விட வேண்டும். மாமனுக்கு வாயில் சொல்லாத கட்டளை. குட்டி மகாராணியின் கட்டளை.

தந்தை வந்ததும் அப்பா என்று ஓடிப் போய் கட்டி கொள்வாள். மாமன் வந்ததும், “என்ன வாங்கிட்டு வந்த?” பாக்கெட்டை துழாவுவாள்.
அன்னை அருகில் இருக்கும் பேக்கரியில் இருந்து கேக் வாங்கி குடுத்தாலும் மாமன் வாங்கி வரும் மிட்டாய்தான்  அவளுக்கு இன்னும் ருசி. இவள் பிறந்ததில் இருந்து வெற்றி எங்கும் வெளியில் தங்குவதில்லை. காஞ்சியில் இருக்கும் அத்தை எத்தனை முறை அழைத்து விட்டார்?
“பாப்பாவை விட்டு எங்கும் வெளியில் தங்க மாட்டேன்.” வெளிப்படையாகவே சொல்லி விட்டான். காலை சென்றால் இரவில் வீட்டுக்கு வந்து விடுவான்.
பாப்பாவுக்கு பரிசு வாங்க வித்யாவும் வெற்றியும் சென்றார்கள். அவன் அழகான மஞ்சள் நிற பிராக் வாங்கினான். வித்யா அழகான மஞ்சள் நிற ப்ராக்  அணிந்த பார்பி பொம்மை வாங்கினாள் .
“எப்படி டா இருக்கு?”
“உன்னை மாதிரியே இருக்கு” சொன்னவன் குரலிலும், உடல் மொழியிலும் ஏதோ ஒரு புது வித மாற்றம். நொடியில் இவள் முகம் சிவந்து லேசாக மூச்சு வாங்கியது.

வெற்றி, இதுவரை வெளிப்படையாக இதுவரை தன்  உணர்வை காட்டியதில்லை. ஆனால்  இப்போது….அவளுக்கு கூச்சமாக இருந்தது.
“வெற்றி! நாம் கைடைல இருக்கோம்” தலை குனிந்து முகத்தை காட்டிக் கொள்ளாமல் சொன்னாள் .
தன்  மகள் இத்தனை அழகாக வெட்கப்படுவாளா? அடடா காயத்ரி  பார்க்கவில்லையே? முகம் நிமிர்த்தி அவள் கன்னத்தில் அழகாக ஒரு முத்தம் கொடுக்க வேண்டும் போல இருந்தது.

” இது ஓகேவா மேடம்?” விற்பனை செய்யும் பெண்ணின் குரல் கலைத்தது. உண்மையில் இவர்களின் காதல் நாடகம் பார்த்தவளுக்கும் வெட்கம் வந்து விட்டது.
தலை தூக்கி பார்த்தான். ஒரு பக்கம் முழுவதும் கரடி பொம்மைகளாக இருந்தது. மறுபுறம் முழுவதும் பரப்பி பொம்மைகளாக இருந்தது.  பொம்மைகள் மட்டுமல்ல. அதற்கென்று தலை வாரும் சீப்பு முதல் காலில் அணியும் செருப்பு வரை வைத்திருந்தார்கள்.
“எனக்கு என்னடா வாங்கித் தர போற?”
அவள் கேட்டதும் அவன் சங்கடமாக நெளிந்தான். அது மேடம் நான் உங்களுக்கு நாளைக்கு வாங்கித் தரவா?
“ஏண்டா தங்கச்சி பொண்ணுக்கு மட்டும்தான் வாங்குவியா? எனக்கு ஒன்னும் இல்லையா?”
உரிமையாக அவன் சட்டையில் கை  விட்டு பணத்தை எண்ணினாள் . பணம் கம்மியாகத்தான் இருந்தது. போனால் போகட்டும் என்று விட்டு விட்டாள் .

பில் போட்டு விட்டு வந்து ஆட்டோவில் ஏறிக்  கொண்டார்கள்.  வீட்டிற்கு வந்து கைப் பையை ஆணியில் மாற்றும்போது தான் கவனித்தாள்  அதில் ஒரு பெண் பொம்மை போட்ட கீ செயின் மாட்டி இருந்ததை. பார்பி பொம்மை இல்லை. ஆனாலும் இந்த பொம்மையின் பெண்ணும் அழகாகவே இருந்தாள் . நொடியில் புரிந்தது அது யாருடைய வேலை என்று.
அவளை விட்டு விட்டு அவளின் அழைப்புக்காகத் தெரு முனையில் காத்திருந்தான் வெற்றி.
உடனேயே அழைப்பு வந்து விட்டது.
“என்னடா? கிப்டு எல்லாம் வெய்ட்டா இருக்கு?”
“புடிச்சிருக்கா  மேடம்?”
அவள் ஆமாம் என்று ஜிமிக்கி ஆட தலை ஆட்டுவதை  பார்க்க விரும்பியவன் அப்படியே வீடியோ காலுக்கு மாறினான்.
அவனை அவள் ஏமாற்றவில்லை. அவன் கொடுத்த பரிசுக்கு பதிலாக ஒரு எச்சில் முத்தம் கொடுத்தாள் . அவர்கள் இருவருக்கு இடையே இருந்த கைப் பேசி அதை வாங்கி கொண்டது.
“எங்கடா இருக்க?”
“இங்கதான் உங்க வீட்டு முனை(யி)ல”
“கிளம்பு லேட்டாகிட போகுது ” கொஞ்சல் மொழியில் விரட்டினால் அவன் எப்படி போவான்?
மேடம்!
“ம்”
“அது இன்னொன்னு கிடைக்குமா?”
“இப்ப இல்ல” வேண்டுமென்றே அலட்டிக் கொண்டாள் .
“சீக்கிரம் போ. உங்க மலரக்கா காத்திருக்கும். அவன் போலவே பேசினாள் .
மலர் என்ற பெயரை கேட்டதும் தான் எங்கிருக்கிறோம் என்று நினைவு வந்தவனாக அவசரமாக கிளம்பினான்.
காதலிக்கு தெரியாதா ? மந்திரித்து விட்டவனை எப்படி வெளியில் கொண்டு வர வேண்டும் என்று?

தம்பி வருவதற்குள் ரெடியாகி விட வேண்டும். மாலையிலேயே வேகமாக வீடு வேலையை முடித்தாள் . நல்ல வேளையாக தந்தை வீட்டிற்கு செல்வதற்கு மாமியார் ஒன்றும் சொல்லவில்லை.  சென்று விட்டு அடுத்த இரண்டு அல்லது மூன்று மணி நேரத்தில் வந்து விட போகிறாள் என்பதாலோ என்னவோ?
எந்த உடை போடலாம். சுடிதார். எல்லாம் வெளுத்து போய் இருந்தது. புடவை? சென்ற வருட சீட்டில் கொடுத்த புடவை? பெரிய பெரிய பூக்கள் போட்டு   அடர் பச்சை நிறத்தில் ஓஹோ என்று இல்லாவிட்டாலும் ஓரளவு நன்றாகவே இருந்தது. முக்கியமாக அவளிடம் இருந்த அரக்கு வர்ண ரவிக்கை அதற்கு சரியாக இருக்கும். வெளியில் எடுத்து வைத்து விட்டு முகம் கை கால் கழுவிக் கொள்ளப்  போனாள் . அதற்குள் வீட்டிற்கு வந்த நாத்தனார் அதை எடுத்து மேலே போட்டுக் கொண்டு ஆடி ஆடி கண்ணாடியில் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“வாங்க அண்ணி! இந்த புடவை எனக்குன்னே செஞ்ச மாதிரி இருக்குல்ல?”
அவள் பேசுவது புரிந்தது.
“அது வந்து… இப்ப நான் வெளில போடறதுக்கு எடுத்து வச்சுருக்கேன்.”
“உங்களுக்கு இல்லாத புடவையோ. கேட்ட உடனே உங்க தம்பி வாங்கி குடுக்கும். உங்க மூஞ்சிய பார்த்தே உங்க வீட்டுக்காரரு  வாங்கி குடுப்பாங்க. எனக்கு வாங்கி கொடுக்க யாரு இருக்கா?”

அருமை நாத்தனாரின் பேச்சு புரிந்தவள் பதில் பேச முடியாமல் விழித்து நின்றாள் .

  1. காதல் வரும். ..

Click on a star to rate it!

Rating 2 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்