
அத்தியாயம் 103
“போலீஸ்காரன் கிட்ட இருந்து கூட தப்பிச்சிடலாம் போல, இந்த வாத்திகிட்ட முடியலடா.” என்று தனக்குள் நினைத்துக்கொண்டு வெளியே சிரித்து வைத்தான் அரசு.
“சிரிக்கிறதை நிப்பாட்டு டா ரொம்பக் கேவலமா இருக்கு. ஆமா எங்களை வரச்சொல்லிட்டு எங்களுக்கு முன்னாடியே வந்து இங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்க.
இது என்ன, எதுக்காக பைனாகுலர் எல்லாம். ஆமா யாரையோ வெள்ளை கலர் பலூன் வாங்கி வைச்சிக்கிட்டு இருக்கச் சொன்னியே யாரு டா அது. எங்களுக்குத் தெரியாம ஏதாவது ஆள் எதுவும் செட் பண்ணிட்டியா என்ன.” குறுகுறு பார்வையுடன் கேட்டான் தர்மா.
“டேய் வாத்தி, நீ உன் காலேஜ் பசங்களைக் கூட இத்தனை கேள்வி கேட்டு இருக்க மாட்ட. ஏன்டா ஒரே நேரத்தில் ஓராயிரம் கேள்வியைக் கேட்டு என் உயிரை வாங்குற.”
“சரிடாப்பா நான் எதுவும் கேட்கல. டைம் ஆச்சு கிளம்புவோமா. இங்க பார், டைம் ஆக ஆக உன் தங்கச்சி முகம் சுருங்கிக்கிட்டே வருது. சும்மாவே இவ முகத்தைப் பார்க்க முடியாது. இப்ப பாரு உன் முகம் மாதிரியே மாறிக்கிட்டு இருக்கு.” ஒரே நேரத்தில் தேவகி, அரசு இருவரையும் கிண்டல் செய்தான் தர்மன்.
தேவகி அவனை முறைக்கவும், “கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா.” அதே சிரிப்புடன் கேட்டான் அவன்.
“டேய் வடிவேல் பெத்த மகனே, நல்லா தானே டா இருந்த. எதுக்காக இப்ப சம்பந்தம் இல்லாம பேசுற. நல்லா இருந்த புள்ளைக்கு காத்து கருப்பு ஏதும் அடிச்சிடுச்சோ.” அரசு தர்மனை சுற்றி வந்து அவன் பார்த்தான்.
“அட நீங்க வேற ஏன் அண்ணா. காத்து கருப்பை இவர் அடிக்காம இருந்தா சரி.” தேவகியும் சரியான நேரத்தில் கணவனைக் காலை வார மற்றதை மறந்து சிரிக்க ஆரம்பித்தான் தர்மா.
“தர்மா ஒரு ஹெல்ப் பண்றியா? எனக்குத் தெரிஞ்ச ஒரு பையன் அவன்கிட்ட இருந்து முக்கியமான டாக்குமெண்ட் ஒன்னு வாங்க வேண்டியது இருக்கு. அவன் பொண்டாட்டியோட இங்க வந்திருக்கான். வெள்ளைக் கலர் பலூன் கையில் வைச்சிருப்பான் அவனைத் தேடிக் கண்டு புடிக்கிறியா?” அரசு தன் விளையாட்டை ஆரம்பித்தான்.
“இவ்வளவு தானே, ஒன்னு பண்ணுவோம் நீ நான் தேவகி மூணு பேரும் ஆளுக்கு ஒரு பக்கமா போய் தேடுவோம். யார் பார்த்தாலும் டாக்குமெண்ட்டை வாங்கிட்டு திரும்ப இங்க வந்திடலாம்.” யோசனை சொன்னான் தர்மன்.
“தேவகிக்கு இது புது இடம். தனியாப் போறது நல்லது இல்ல. அதனால நீங்க இரண்டு பேரும் போங்க போய் தேடுங்க.” என்று அவர்களை அனுப்பி வைத்துவிட்டு, பைனாகுலரில் தெய்வாவை பார்வையிட ஆரம்பித்தான் அரசு.
தெய்வா பாவமாக அங்கும் இங்கும் அரசுவைத் தேடிப் பார்த்துக் கொண்டிருந்தான். ஆனால் இவ்வளவு தேடியும் அவனை விட்டு சிறிது தொலைவில் இவன் பார்வைக்கு முதுகு காட்டி அமர்ந்திருந்த செல்வா, லீலாவைப் பார்க்கவே இல்லை அவன்.
வெள்ளை பலூனைத் தேடி அலைந்து கொண்டிருந்த தேவகி, செல்வாவையும், லீலாவையும் கண்டுகொண்டாள். முதலில் தன்னுடைய பிரம்மையாக இருக்கும் என்று எண்ணி தலையை சிலுப்பிக் கொண்டு மீண்டும் பார்த்த பொழுது பதறாமல் சிதறாமல் முழுவதுமாய் தெரிந்தாள் லீலா.
“அக்கா” என்று ஆசையுடன் அவர்கள் இருவரை நோக்கி இவள் ஓட, “தேவகி எங்க போற நீ.” என்று தர்மாவும் அவள் பின்னே ஓடினான்.
செல்வா மற்றும் லீலா இருவரின் முன் சென்று நின்ற தேவகி லீலா சுதாரிக்க சரியான நேரம் கூட கொடுக்காமல் அவள் முன் மண்டியிட்டு அவளை அணைக்க பேலன்ஸ் தவறி இருவரும் கீழே விழுந்தனர்.
இவளுடைய ஆனந்தக் கூச்சல் கேட்கவும், “இது தேவகி வாய்ஸ் மாதிரி இருக்கே.” என சற்று தொலைவில் இருந்த ருக்குவும் சுதாரித்து சுற்றி முற்றி தேடி அவர்களைக் கண்டாள்.
கரை உடைத்து வரும் வெள்ளமென மகிழ்ச்சி ஊற்றெடுக்க அருகில் நின்று கொண்டிருந்தவனையும் மறக்காமல் கரம் பற்றி இழுத்துக்கொண்டு சகோதரிகளைத் தேடி ஓடினாள். அதற்குள் கடற்கரை மணலில் உருண்டு பிரண்டு ஒரு வழியாக எழுந்து அமர்ந்தனர் லீலா, தேவகி இருவரும்.
“தேவகி நீ எங்கடி இங்க.” ஆச்சர்யம் தாங்கவில்லை லீலாவிற்கு. தங்கையின் தலையில் இருந்த கடற்கரை மணலைத் தட்டிவிட்டுக்கொண்டே கேட்டாள் தமக்கை.
அவள் கேட்டதற்கு பதில் சொல்லாமல், “ரொம்ப பயந்துட்டேன் தெரியுமாக்கா. என்ன தான் வீராப்பா இன்னைக்கு சாயங்காலம் ஐந்து மணி வரைக்கும் நாம நாலு பேரும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்க கூடாதுன்னு நேத்தே பேசிவைச்சுக்கிட்டாலும், இன்னைக்கு விடிஞ்சதில் இருந்து உங்க மூணு பேரையும் பார்க்காம நான் பட்ட பாடு எனக்குத் தான் தெரியும்.
இதில் அவர் வேற வீட்டுக்குப் போகலாம் போகலாம் னு சொல்லிக்கிட்டு இங்கேயே சுத்திக்கிட்டு இருந்தாரு. எங்க இன்னைக்கு உங்களைப் பார்க்க முடியாதோ, உங்களுக்கு வாழ்த்து சொல்ல முடியாதோன்னு மனசுக்குள்ள நான் ரொம்ப வருத்தப்பட்டுக்கிட்டே இருந்தேன்.
அவரோட இருந்த நேரங்களில் கூட என்னால முழு மனசோட சந்தோஷப்பட முடியல. ஒரு சின்ன உறுத்தல் மனசுக்குள்ள இருந்துக்கிட்டே இருந்துச்சு. உங்களைப் பார்த்ததுக்கு அப்புறம் தான் உண்மையான சந்தோஷம் கிடைச்ச மாதிரி இருக்கு.” தன்னையும் மீறி சொல்லிக்கொண்டிருந்தாள் தேவகி.
“அக்கா, தேவகி நீங்க இரண்டு பேரும் எப்படி இங்க. என்னால நம்பவே முடியல.” என்றபடி ஓடிவந்து அவர்களின் அருகே வந்தமர்ந்தாள் ருக்கு.
“ருக்குக்கா நீங்களும் இங்க தான் இருக்கீங்களா?” கேட்ட தேவகிக்கு கண்களில் கண்ணீரே வந்துவிட்டது.
“ஆமா டி நம்ம வீட்டு கடைக்குட்டி.” என்றபடி அவள் கன்னம் கிள்ளி கொஞ்சினாள் ருக்கு.
“இங்க என்ன நடக்குது. என்னை விட்டுட்டு நீங்க மூணு பேரும் கொஞ்சிக்கிட்டு இருக்கீங்களே இது உங்களுக்கே நியாயமா தெரியுதா?” என்ற சத்தம் கேட்டு மூவரும் திரும்ப அங்கே ஊர்மியும், நாகாவும் நின்றிருந்தனர்.
“ஊர்மி” என்ற சந்தோஷத்துடன் மூவரும் எழுந்து ஒரே அலைவரிசையான வேகத்தில் அவளை நோக்கி நடந்து சென்று அணைத்துக்கொள்ள, தன்னையும் அறியாமல் அவர்களுக்கு இடம் விட்டு தள்ளி நின்றான் நாகா.
அக்கா, தங்கைகள் நால்வரும் ஒன்று சேர்ந்துவிட தனியாய் நின்ற அண்ணன், தம்பிகள் தங்களையும் அறியாமல் அருகருகே வந்துவிட்டிருந்தனர்.
அண்ணா நீ எப்படி இங்க, சின்னண்ணா நீ எப்படி இங்க என்கிற சந்தானம் காமெடியைப் போல், “செல்வா நீ எப்படி இங்க? அதைத் தான் நானும் கேட்கிறேன் தெய்வா, நீ எதுக்காக இங்க வந்த?
நாகா நீ நெய்வேலிக்குப் போறதா தானே ப்ளான் எதுக்காக சென்னை வந்த? அப்புறம் தர்மா நீயும்.” என ராஜ் சகோதரர்கள் நால்வரும் ஒருவரை மாற்றி ஒருவர் கேட்டுக்கொள்ள,
“ஒரு மந்தையில் இருந்த நான்கு ஆடுகள் வேறு வேறு பாதையில் சென்றுவிட்டன. அவை மீண்டும் சந்திந்துக்கொண்ட போது பேச முடியவில்லையே.” சொல்லிக்கொண்டே வந்தான் அரசு. அவனைப் பார்த்த ஆண்கள் நால்வருக்கும் இது அவன் லீலை என்று புரிய கொடூரமாக முறைத்தனர் அவனை.
இதற்கெல்லாம் அசந்தால் அவன் அரசு இல்லையே. வெகு கவனமாக இவர்கள் பக்கம் பார்வையைத் திருப்பாமல், சில மணி நேரம் கழித்து பார்த்த தங்கள் உடன்பிறந்தவர்களிடம் காலையில் இருந்த தங்களுக்கு நடந்த ஒவ்வொன்றையும் பிரம்பிப்புடன் சொல்லி மகிழ்ந்து கொண்டிருந்த பெண்களைத் தான் பார்த்தான்.
“என்னம்மா தங்கச்சிங்களா, காலையில் இருந்து புருஷங்களோட ஒவ்வொரு சர்ப்பரைஸையும் பார்த்து பார்த்து சந்தோஷப்பட்டு இருப்பீங்க. இப்ப அவங்களோட மிகப்பெரிய சர்ப்ரைஸ் எப்படி இருக்கு.” தான் செய்த அனைத்தையும் மற்ற ஆண்கள் தலையில் ஏற்றி, பெண்களின் மனதில் அவர்களை கோபுர உயரத்திற்கு உயர்த்தினான் அரசு.
“எங்களோட முக்கியமான இந்த நாளில், இவங்க நாலு பேருக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்க நினைச்சு, இன்னைக்கு சாயங்காலம் வரை நாங்க அக்கா, தங்கச்சிங்களா இல்லாமல் இவங்களோட மனைவிமார்களா மட்டும் இருக்க நினைச்சோம். ஆனா இவங்க இத்தனை பெரிய சர்ப்ரைஸ் பண்ணுவாங்கன்னு நாங்க எதிர்பார்க்கவே இல்லை.
நாங்க ஒரு படி இறங்கி வந்தா இவங்க எங்களுக்காக எத்தனை படி இறங்கி வந்திருக்காங்க. உண்மையில் வடிவேல் மாமா தன் பசங்களை நிறைய நல்லது சொல்லிக்கொடுத்து வளர்த்திருக்கார்.” சிலாகித்துச் சொன்னாள் லீலா.
தாங்கள் செய்யாத செயலுக்கான பாராட்டை ஏற்றுக்கொள்ள முடியாமல், “அடேய் அரசு” என்று பற்களைக் கடித்த வண்ணம் நால்வரும் திரும்ப, இதை எதிர்பார்த்திருந்தானோ என்னவோ அரசு அங்கிருந்து ஓட்டம் பிடித்துவிட்டான்.
“அரசு அண்ணா எதுக்காக இப்படி ஓடுறாரு.” தேவகி கேட்க “அவன் பார்த்து வைச்ச சில சிறப்பான வேலைக்காக நாங்க ஒரு பரிசு ஏற்பாடு பண்ணி வைச்சிருந்தோம். அதை பார்த்த சந்தோஷத்தில் ஓடுறான்னு நினைக்கிறேன்.
ஓடட்டும் ஓடட்டும் எவ்வளவு தூரம் ஓடுவான். திரும்ப நம்ம வீட்டுக்கு வந்து தானே ஆகனும். அப்ப நாங்க நாலு பேரும் சேர்ந்து அவனை ரொம்ப சிறப்பா கவனிக்கிறோம். என்னடா சரிதானே.” என்று தெய்வா மற்றவர்களைப் பார்த்துக் கேட்க அவர்களும் ஆமாம் ஆமாம் என்று மிக வேகமாக தலையாட்டினார்கள். பெண்கள் நால்வரும் இதை அத்தனை ஆச்சர்யமாகப் பார்த்தார்கள்.
“இவங்க வேற சும்மா பேசினதுக்கே வெயிலும் மழையும் ஒன்னா சேர்ந்திருக்கிற மாதிரி அதிசயமா பார்க்கிறாங்க.” மனதோடு புலம்பிக்கொண்டான் தர்மா.
இங்கிருந்து ஓடிச் சென்ற அரசு, எங்கோ மறைந்து நின்று கொண்டிருந்த வடிவேலுவை அழைத்துக் கொண்டு திரும்ப வந்தான்.
“மாமா நீங்களுமா” லீலா கேட்க, “என்னம்மா பண்றது. சின்ன வயசுல விளையாண்டது. அதுக்கு அப்புறம் என் பசங்களோட விளையாட கூட எனக்கு நேரம் இல்லை. அதனால் தான் உங்க கூட கண்ணாம்மூச்சி விளையாட என் பசங்க கூட சேர்ந்துக்கிட்டேன்.” என்றுவிட்டு சிரித்தார் வடிவேலு.
“அடேய் தகப்பா நீயும் இதற்கு உடந்தையா?” என்பது போல் நால்வரும் ஒருசேர வடிவேலுவைப் பார்க்க, அவரோ மிகவும் சாமர்த்தியமாக தான் பெற்ற பிள்ளைகளைப் பார்ப்பதைத் தவிர்த்து மருமகள்களைப்பார்த்துக் கொண்டிருந்தார்.
“எனதருமை பாசமலர்களே வீட்டுக்கு பெரிய மனுஷன் வந்திருக்காரு. நல்ல நாள் அதுவுமா அவர்கிட்ட ஆசிர்வாதம் வாங்கிக்கத் தோணலையா?” அரசுவே அதையும் எடுத்தக்கொடுத்தான்.
“அதெல்லாம் வேண்டாம் மா. யாராவது பார்த்தா சிரிக்கப் போறாங்க. என் பசங்க கூட இப்படி பீச்சில் சந்தோஷமா விளையாட எனக்கு இவ்வளவு நாள் எடுத்திருக்கு.” சிலாகித்துச் சொன்னார் வடிவேலு.
சிறுவயதுப் பிராயம் முழுக்க வறுமையிலும், முடக்கப்பட்டிருக்கும் சொத்துக்கள் கிடைக்குமா கிடைக்காதா என்கிற ஏக்கத்திலும் சென்றிருக்க, இளமைப் பருவங்கள் எல்லாம் தான் வாழ்ந்த வறுமை வாழ்க்கை தன் பிள்ளைகளுக்கு வேண்டாம் என்று பொருள் ஈட்டுவதில் சென்றிருக்க, அந்தக் காலத்தில் நிறைவேறாத ஆசைகள் எல்லாம் இப்போது எட்டிப் பார்த்தது அவரிடத்தில்.
“என்னடா அபூர்வ சகோதரர்களா? பொண்டாட்டிங்களோட சந்தோஷத்திற்காக அவங்க நாலு பேரையும் ஒன்னா மீட் பண்ண வைச்சீங்க. கடைசியில் பெத்தவரை மறந்துட்டீங்களே.” வேண்டுமென்றே கேட்டான் அரசு.
“பச்சோந்தி கூட உன்கிட்ட தோத்துப் போயிடும். யப்பா என்ன ஒரு நடிப்பு.” மனதிற்குள் நினைத்த தெய்வா அரசுவைப் பார்த்து பற்களைக் கடித்தான்.
“எல்லோரும் ஓடுங்க அந்தக் கொடிய மிருகம் நம்மளை நோக்கித்தான் வருது.” என்று ராஜ் சகோதரர்கள் நால்வருக்கும் நடுவில் ஓடுகிறேன் என்று ஒவ்வொருவராக கடல்நீரில் தள்ளிவிட்டான் அரசு.
தண்ணீரில் விழுந்தவர்கள் சும்மா இருப்பார்களா? நால்வரும் ஒன்றாக இணைந்து அரசுவின் காலை பிடித்து இழுத்து கரையோர அலைக்குள் தலையை பிடித்து அழுத்தினர்.
“டேய் கொண்ணுடாதீங்க டா. கொலை கேஸில் உள்ள போயிடுவீங்க.” என்று கத்த முடியாமல் கத்தினான் அரசு. பெண்கள் நால்வரும் சிரிக்க, அரசுவின் நிலையைப் பார்த்து வடிவேலுவுக்குமே சிரிப்பு வந்தது.
கையைப் பிடித்து, காலைப் பிடித்து உருண்டு புரண்டு எப்படியோ எழுந்து நின்ற அரசுவின் தலை மேல் ஒருகிலோ தேறுமளவிற்கு கடல் மண் இருந்தது.
அவன் தலையில் இருந்த சிப்பி ஒன்றை காகம் கொத்திக் கொண்டு போக, இதுவரை சிரிப்பை ஓரளவு கட்டுப்படுத்திக் கொண்டிருந்த பெண்கள் அதற்கு மேலும் தாக்குப்பிடிக்க முடியாமல் சத்தமாய் சிரிக்க ஆரம்பித்திருந்தனர்.
“என்னைப் பார்த்தா சிரிக்கிறீங்க இப்ப பாருங்க உங்க நிலைமை என்ன ஆகப் போகுதுன்னு.” என்றவன் டங்டங்கென்று நடந்து வந்து பெண்கள் ஒவ்வொருவரையும் இழுத்து சரியாக அவர்களின் கணவன்மார் மீது தள்ளிவிட்டான்.
அவ்வளவு கலவரத்திலும் ஊர்மியைப் பிடித்துத் தள்ளும் போது மிகவும் கவனமாக நடந்து கொண்டான் அரசு. நாகா அதற்கு மேல், “ஐயோ என் பொண்டாட்டியைக் கொன்னுட்டானே.” என்று ஓடிவந்து அவளை தாங்கிப் பிடித்துக் கொண்டான்.
ஒவ்வொருவரும் தங்களுடைய இணையின் மீதும் சகோதர சகோதரிகளின் மீதும் கடல் நீரை அள்ளி அடித்து விளையாட ஆரம்பித்தனர். முதலில் சாதாரணமாக ஆரம்பித்து சற்று நேரத்தில் மிகவும் சந்தோஷமாக விளையாட ஆரம்பித்தனர்.
சந்தோஷ விளையாட்டில் அவர்களையும் அறியாமல் கொஞ்சம் கொஞ்சமாக கடலுக்குள் செல்ல, அவர்களுக்கே தெரியாமல் எண்வரும் ஒருவர் கையை ஒருவர் கெட்டியாகப் பிடித்துக் கொண்டனர் .
யார், யார் அருகில் நிற்கிறார்கள் எவர், எவர் கையைப் பிடித்திருக்கிறார்கள் என்பதெல்லாம் யாருக்கும் தெரியாது. அந்த நேரத்தில் அருகே இருப்பவர் தன்னுடைய குடும்பத்தினர். அவருக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என்ற எண்ணம் மட்டுமே இருந்தது அத்தனை பேரின் மனதிலும்.
இடை வரை கடல் நீர் சூழ்ந்திருக்க திடீரென்று வந்த சற்று பெரிய அளவில் ஊர்மி சற்று தடுமாற அவளைப் பிடித்துக்கொண்ட செல்வா, “பார்த்து மா.” என்றான் தன்னையும் மீறி.
மாமனின் அக்கறையில் ஊர்மிக்கு கண்கள் கலங்கிவிட்டது. இதைத் தானே அவள் எதிர்பார்த்தது. தெய்வா, தர்மாவைப் பற்றி அவளுக்குக் கவலை இல்லை. ஆனால் செல்வாவை தன் தகப்பனின் போர்வையில் பார்த்தவளால், அவனை நெருங்க முடியாமல் இருந்தது சொல்ல முடியாத நெருடலாகவே இருந்தது. அந்தக் கவலை நீங்கியதில் அவளுக்குப் பேரானந்தம். தற்காலிக உணர்வு தான் என்றாலும் இது இன்னும் பல மாதத்திற்குத் தாங்கும் என்கிற நினைப்பு அவளிடம்.
“நாகா, ஊர்மி பயப்படுறா கொஞ்சம் பின்னாடி போயிடலாம் வாங்க.” என்றான் செல்வா.
மற்ற நேரமாக இருந்தால் அவள் ஒருவளுக்காக நாம் அனைவரும் ஏன் வெளியே செல்ல வேண்டும். அவளை மட்டும் கரையில் காத்திருக்கச் சொல்லலாம் என்று சொல்லி இருப்பார்கள் தான்.
ஆனால் இன்று அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து விளையாடிய தருணங்கள் அதிகம் பிடித்திருக்க, அவளை மட்டும் ஒதுக்கி வைக்க மனம் வரவில்லை. அதனால் அவளுக்காக மற்ற ஏழு பேரும் இறங்கி வந்தனர். தன் சந்தோஷம் மட்டுமே முக்கியம் என்று யோசிக்கும் தெய்வா கூட இது தான் சரி என்று இறங்கி வந்தது தான் அங்கே சுவாரசியம்.
சூரியனைக் கூட சில நேரம் மேகங்கள் சிறையெடுக்கும். ஆனால் மேகம் விலகினால் சூரிய ஒளியைத் தடுக்கும் சக்தி யாருக்கும் கிடையாது. அப்படித்தான் ராஜ் சகோதரர்களின் மனதும். இயல்பில் நல்லவர்கள், வடிவேலுவின் நல்ல குணங்களைக் கொண்டவர்கள் தான் என்றாலும் அதீத செல்லத்தின் காரணமாக சில வேண்டாத எண்ணங்கள் கறையாக ஒட்டிக்கொண்டிருந்தது அவர்களிடத்தில். அரசு என்பவனால் கறை நீக்கப்பட சூரியன் ஜொலித்தது அங்கே.
மிதமான அளவுள்ள நீரில் நின்று விட்ட இடத்தில் இருந்து விளையாட ஆரம்பித்தனர். அலை வரும் நேரத்தில் எல்லாம் இதுதான் சாக்கென்று செல்வாவைத் தவிர மற்ற மூவரும் தங்களுடைய மனைவிகளை உரசிவிட்டு விலக, செல்வா மட்டும் கண்ணியம் காத்துக் கொண்டிருந்தான்.
ஓரிரு முறையில் அதைக் கவனித்த நாகா, தெய்வாவின் காதில் ஏதோ சொல்ல அவனும் தலையசைத்தான். அடுத்த அலை வரும் நேரம் வேண்டுமென்றே தெய்வா, செல்வாவின் மீது சாய அதை எதிர்பாராதவன் அருகே இருந்த லீலாவின் மீது விழுந்து அவளோடு சேர்ந்து அலைக்குள் விழுந்தான்.
அலை இருவரையும் ஒரு போர்வை போல் போர்த்திவிட்டு மீண்டும் உள்ளே சென்று விட அவர்கள் இருவரும் தான் மற்றதை மறந்து ஒருவரை ஒருவர் பார்த்தபடி அதே நிலையில் இருந்தனர்.
லீலாவைச் சுற்றி செல்வாவின் கரங்கள் வளைத்திருக்க, அவர்கள் இருவரையும் சுற்றி மாயவலை போர்த்தப்பட்டு இருவரும் தனியாக வேறு கிரகத்திற்குப் போய்விட்டது போல், சுற்றியுள்ள உலகம் மறந்து அவர்கள் இருவரும் ஒருவரின் பார்வையில் மற்றொருவர் நிலைத்து விட்டனர்.
“ஏய் அக்காவைப் பாரேன்.” ஊர்மி சொல்ல மற்ற இருவரும் லீலாவைப் பார்த்து ஏதோ தானே அந்த நிலையில் இருப்பது போல வெட்கப்பட்டனர்.
“ஹலோ மை டியர் ப்ரதர் ஷோ காட்டி முடிச்சிட்டன்னா கொஞ்சம் எழுந்திரிக்கிறியா? உங்களைப் பார்த்தா எங்களுக்கே ஷையா இருக்கு.” என்றபடி செல்வாவின் மோன நிலையைக் கலைத்தான் நாகா.
முதலில் சுய நினைவுக்கு வந்த லீலா தன் மீதிருந்த செல்வாவைத் தள்ளிவிட்டு கடற்கரையை நோக்கி ஓடினாள்.
“ஹே லீலா” என்றவண்ணம் செல்வாவும் ஓட, ஒருகட்டத்தில் ஈர சேலை தட்டி கடற்கரையில் விழுந்தாள் லீலா. பின் வந்த செல்வா அவளைப் பார்த்து சிரிக்க, அவன் காலில் உதைத்து அவன் தடுமாறி மீண்டும் தன் மீது விழப்போகும் சமயத்தில் லீலா நகன்று விட கடல்மண்ணில் குப்புற விழுந்தான் செல்வா.
முகம் முழுவதும் கடல் மண் அப்பிக்கொள்ள அவனைப் பார்த்து விழுந்து விழுந்து சிரித்தாள் லீலா. தன் முகத்தில் இருந்து சிறிதளவு மண்ணை அள்ளி அவள் முகம் முழுவதும் பூசிவிட்டு மகிழ்ந்தான் செல்வா.
மற்ற அறுவருக்கும் இந்தக் காட்சி ஏதோ ஒரு பூரிப்புணர்வைக் கொடுக்க மெய்மறந்து ரசித்தனர். அடுத்த சில நிமிடங்களில் லீலாவுக்கு அருகே அவளைத் தொடர்ந்து அவள் சகோதரிகளும், செல்வாவைத் தொடர்ந்து அவனுடைய சகோதரர்களும் படுத்துக்கொள்ள அலை ஆனந்தமாக அவர்களின் பாதம் தொட்டுச் சென்றது.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
8
+1
1
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


சூப்பர் பிறந்த நாள் கொண்டாட்டங்கள். அரசுவின் மாஸ்டர் பிளான் சக்சஸ்.
Super… Ipatiye ellarum onna irukanum
சூப்பர் சூப்பர் இந்த அத்தியாயம் அவ்வளவு அழகு. இந்த மாதிரி ஒரு சர்ப்ரைஸ் எங்களுக்கும் தான். அரசு வடிவேல் சூப்பர். ஒண்ணா ஒற்றுமையா இருந்தா எவ்வளவு சந்தோஷமா இருக்கும்னு ராஜ் பிரதர்ஸ் புரிஞ்சுப்பாங்களா. ஆனா அத்தியாயம் ஆரம்பிச்சு படிச்சு முடிக்கிற வரை சிரிப்பு தான் எனக்கு. ரொம்ப உணர்வுப்பூர்வமா இருந்தது 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻