
அத்தியாயம் 102
“என்னை எங்க கூட்டிட்டுப் போறீங்க.” தன் கண்களை மறைத்தபடி அழைத்துச் செல்லும் கணவனைப் பார்த்து கேட்டாள் தேவகி.
“சொல்றேன் சொல்றேன். இன்னைக்கு என் செல்லக்குட்டி வெல்லக்கட்டி பொண்டாட்டிக்குப் பிறந்தநாள் இல்லையா. அதுவும் என் கூட கொண்டாடப் போறதால இன்னும் ஸ்பெஷல். இந்த ஸ்பெஷல் டேவை ஸ்செலிபரேட் பண்றதுக்காக ஒரு சின்ன சர்ப்பரைஸ்.” என்றான்.
“இப்படி சொல்லி சொல்லியே இன்னும் எவ்வளவு தூரம் கூட்டிட்டு போகப் போறீங்க” என்க,
“இதோ வந்துட்டோம் செல்லம்.” என்று மெதுவாக தன்னுடைய கைகளை எடுத்து, சிறைபட்டிருந்த மனைவியின் கண்களுக்கு விடுதலை கொடுத்தான் தர்மா.
விடுதலை பெற்றதே சந்தோஷம். அதுவும் விடுதலைக்குப் பின்னர் முதன் முதலாகப் பார்க்கும் இடம் மனதிற்கு மிகவும் பிடித்த இடம் என்றால் சொல்லவா வேண்டும். தேவகியின் கண்கள் வைகை ஆற்றில் துள்ளி விளையாடும் மீன்குஞ்சு போல மகிழ்ச்சியில் மின்னியது.
“சென்னையில் இவ்வளவு பெரிய ஏரி இருக்கா? எனக்குத் தெரியவே தெரியாதுங்க. நாம இங்க போட்டிங் போகிறதுக்காக வந்திருக்கோமா.” துள்ளலுடன் தேவகி கேட்க, “அதே தான் என் செல்லமே. உனக்கு போட்டிங் ரொம்பப் புடிக்கும் னு கேள்விப்பட்டேன். அதனால் தான் சர்ப்பரைஸா இங்க கூட்டிட்டு வந்தேன். என்ன என்னோட சர்ப்பரைஸ் பிடிச்சிருக்கா.” ஆர்ப்பாட்டமாய் கேட்டான்.
“ஐயோ ரொம்பப் புடிச்சிருக்கு.” என்று சந்தோஷத்தில் குதித்தவள் ஒரு நிமிடம் நின்றவாறு, “ஆமா எனக்குப் போட்டிங் புடிக்கும் னு உங்களுக்கு யார் சொன்னது.” விவரமாய் கேள்வி கேட்டாள்.
“சண்டாளி சரியா பாயிண்ட்டை பிடிச்சிட்டா பாரு.” என்று உள்ளுக்குள் நினைத்துக் கொண்டவன், “யாரு சொன்னா என்ன டார்லிங். அத்தான் உனக்கு எவ்வளவு பெரிய சர்ப்ரைஸ் கொடுத்து இருக்கேன். ரிட்டன் கிப்ட் எதுவும் கிடையாதா?” எனக்கேட்டு அவள் கவனத்தை திசைமாற்றினான்.
“அலையாதீங்க, அதெல்லாம் வீட்டுக்கு போனதுக்கு அப்புறம் தான்.” சிரிப்புடன் சொன்னாள்.
“யாரைப் பார்த்து டி அலையுறேன்னு சொல்ற. அலையுறவன் என்ன செய்வான்னு சொல்லவா. இன்னைக்கு பப்ளிக் நியூசன்ஸ் கேஸில் உள்ளே போனாலும் பரவாயில்லை.” என்றபடி தர்மா துரத்த தேவகி அந்த ஏரிக்கரையோரமாய் ஓட ஆரம்பித்தாள்.
மூச்சிறைக்கும் வரை ஓடிப்பிடித்து விளையாடியவர்கள் தாகம் எடுக்கவும் நல்ல தண்ணீர் எங்கேயும் கிடைக்குமா என்று சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டிருக்கும்போது அவர்கள் இருவரையும் நோக்கி நடந்து வந்தான் ஒருவன்.
“சார் நீங்க தானே மிஸ்டர் தர்மா, போட்டிங்க்காக புக் பண்ணி இருந்தீங்களே.” என்க, கவனத்தை அவன்பக்கம் திருப்பினான் தர்மா.
“சார் உங்களுக்கான போட் ரெடியா இருக்கு. நீங்களே போயிடுவீங்களா இல்ல ஹெல்ப்பர் யாராவது வேணுமா?” என்க, “இல்லல்ல இவருக்கு போட் எல்லாம் ஓட்டத் தெரியாது.” வேகமாக பதில் வந்தது தேவகியிடம் இருந்து.
“உன்கிட்ட கேட்டாங்களா?” மனைவியை முறைப்போடு பார்த்து சொன்னவன், “ஹெல்ப்பர் அரேன்ஜ் பண்ணுங்க.” என்றான் உதவிக்கு வந்தவரிடம்..
சிறிது நேரத்திற்குள் அவர்கள் இருவரும் போட்டில் ஏரியை வலம் வர ஆரம்பித்தனர்.
“இந்த இடம் எவ்வளவு அழகா இருக்கு. மட்ட மத்தியானம் ஆனா வெளியில் அவ்வளவா தெரியவே இல்லை பாருங்களேன். அங்க பாருங்க மீன் துள்ளுது. இந்த மாதிரி பறவைங்களை எல்லாம் இதுவரைக்கும் நான் பார்த்ததே இல்ல. ரொம்ப அழகா இருக்கு இல்ல. இந்தத் தண்ணியை தொட்டு பாருங்களேன், இந்த வெயிலிலும் கூட ஜில்லுன்னு இருக்கு.” தன் கண்ணால் பார்க்கும் அனைத்தையும் ரசித்து, ரசித்ததை கணவனிடம் பகிர்ந்து கொண்டு என அந்த படகுசவாரியை ஆனந்தமாக அனுபவித்தாள் தேவகி. இயற்கையை ரசிக்கும் தன் மனைவியை ரசித்தவாறு அழகியின் அருகே அமர்ந்திருந்தான் தர்மா.
அந்த நேரம் அலைபேசி சத்தம் கொடுக்க அதை எடுத்து பார்த்தவன் முகம் அஷ்ட கோணலாகியது. “நானும் சென்னை தான் போகணும். அதனால் நானும் உங்களோடவே வரேன்.” என்று விமானத்தில் தங்களுக்கு நடுவில் நந்தி போல் அமர்ந்து கரடி வேலை பார்த்த அரசுவின் நினைவு வர, அழைப்பை ஏற்றவன்,
“ப்ளான் போட்டுக்கொடுத்த சரி, அதை செயல்படுத்த விடமாட்டியா டா? ப்ளைட்டில் தான் கரடியா கூட இருந்தன்னா இப்பவுமா?“ நேரடியாகவே கேட்டான்.
“என்ன சொன்ன நந்தி, கரடியா. சரி விடு, நான் உனக்கு ஒரு சர்ப்ரைஸ் ஏற்பாடு பண்ணி வைச்சிருந்தேன். அதைப் பத்தி சொல்லத்தான் போன் பண்ணேன். ஆனா உனக்கு இஷ்டம் இல்லாதப்ப எதுக்கு அதையெல்லாம் பண்ணிக்கிட்டு. நான் இடைஞ்சல் பண்ணல, நீ என்ஜாய் பண்ணு நான் போனை வைச்சிடுறேன்.” என்றான் அரசு.
“ஐயோ ராஜா என் வாயில் சனி புகுந்திடுச்சு போலடா. உன்னைப் போய் நான் அப்படியெல்லாம் நினைப்பேனா? நீ இராதா இல்லத்தோட மெயின் பில்லர் ஆச்சே. எங்களை விட புத்திசாலி. நீ என்ன செய்தாலும் அதில் ஒரு காரணம் இருக்கும். நான், நீ சொன்ன அதே ஏரியில என் பொண்டாட்டி கூட போட்டிங் போயிட்டு இருக்கேன்.” வேகவேகமாய் சமாதானம் சொன்னான் தர்மா.
“அப்படி வாடா என் ராஜா.” என்று மனதிற்குள் நினைத்துக் கொண்ட அரசு, “போர்ட் நம்பர் 7 தானே.” என்று கேட்க, “ஆமா” என்றான் தர்மா.
“குட் நீங்க போயிட்டு இருக்க அந்த போர்ட்டில் ரைட் சைடு கார்னரில் ஒருசின்ன மஞ்சள் கலர் கவர் இருக்கும். அது தான் சர்ப்ரைஸ். அதை உன் பொண்டாட்டிகிட்ட கொடுத்து ஓபன் பண்ணச் சொல்லு. அப்புறம் இன்னைக்கு சாயங்காலம் அஞ்சு மணி இல்ல அஞ்சரைக்கு மெரினா பீச்சுக்கு வந்துடு அங்க இருந்து நாம எல்லாரும் ஒன்னா வீட்டுக்கு போயிடலாம்.” பேச்சோடு பேச்சாக சேர்த்து சொல்லிவிட்டான்.
“என்னடா இப்படிச் சொல்ற. தேவகி கேட்டுக்கிட்டதுக்காக அஞ்சு மணிக்கு வீட்டுக்கு போகனும் னு உன்கிட்ட சொன்னேன் தானே.” தர்மா கேட்க, “அடேங்கப்பா இவர் அப்படியே பொண்டாட்டியோட எல்லா ஆசையையும் நிறைவேத்தி வைச்சிட்டு தான் மறுவேலை பார்ப்பாரு.
டேய் நீ யாரு, உன் அண்ணனுங்க யாருன்னு எல்லாம் எனக்குத் தெரியும். ரொம்ப சீன் போடாத. தேவகிகிட்ட நான் சொன்னேன்னு சொல்லு. அவ ஒன்னும் சொல்ல மாட்டா.” என்றான் அரசு.
“அது எப்படி இதையே காலையில் நான் சொன்னப்ப கோவப்பட்டா, இப்ப நீ சொன்னதா நான் சொன்னா ஏத்துக்குவாளா என்ன?” தர்மா கேட்க,
“ஏய் வாத்தி எது எதில் பொறாமைப்படணும் னு விதிவிலக்கு இருக்கு டா. நான் அவ அண்ணன். நான் எது சொன்னாலும் அதில் ஒரு விஷயம் இருக்கும் னு அவளுக்குத் தெரியும். அது மட்டும் இல்லாம நான் அவளுக்கும் அவ அக்காக்களுக்கும் நடுவில் என்னைக்கும் வரமாட்டேன். இது அவளுக்கும் தெரியும். என்கிட்ட மொக்கை போட்டு நேரத்தை வீணடிக்காமல், சர்ப்பரைஸ் என்னன்னு போய் பாருங்க இரண்டு பேரும்.” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தான் அரசு.
தர்மா சொன்னது போல் தேவகி அந்த கவரை எடுத்து வந்து திறந்து பார்க்க, இரண்டு அடுக்கில் ரெட் வெல்வெட் கேக் இருந்தது. அதில் இருந்த தன் பெயரைப் பார்த்து அழகாக, அளவாகப் புன்னகைத்தாள் தேவகி. தர்மாவின் யோசனையின் பேரில் அவள் கேக்கை வெட்ட அதன் உள்ளிருந்து குட்டி பொம்மை ஒன்று வெளியே வந்தது.
பயந்து போன தேவகி தர்மாவின் மீது சாய்ந்து கொண்டு அவன் சட்டையை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டாள். அவளை இந்தளவுக்கு பயமுறுத்திய அந்த பொம்மையோ ஹேப்பி பெர்த்டே தேவகி என்று இடைவிடாமல் கத்திக்கொண்டே இருந்தது.
“ஏய் லூசு சாதாரண பொம்மை. உங்க நொண்ணன் சர்ப்பரைஸ் னு ஏற்பாடு பண்ணிருக்கான். அதைப் பார்த்து இப்படிப் பயப்படுற.” என்ற தர்மா அதன்பிறகு தான் அந்த பொம்மையின் கழுத்தில் ப்ளாஸ்டிக் கவருக்குள் பத்திரமாக வைக்கப்பட்டிருந்த இதய வடிவ செயினைப் பார்த்தான்.
‘என் தங்கச்சிக்கு என்ன பிறந்தநாள் பரிசு கொடுக்கப் போற.’ என்ற அரசுவின் கேள்விக்கு, இன்னும் முடிவு செய்யவில்லை என்று பொய் சொன்னதும், நீயெல்லாம் என்ன புருஷன் என முழுதாக ஐந்து நிமிடம் தன்னைத் திட்டிவிட்டு, ஏற்பாடு செய்து தருவதாக அரசு சொன்னதும் நினைவு வந்தது.
அந்த நினைவில் புன்னகைத்தவன் பரிசைக் கைகளில் எடுத்துப் பார்த்தான். நல்ல சிகப்பு நிறத்தில் இருந்த அந்த இதயத்தை அழுத்த அது அழகாகத் திறந்து கொண்டது. அதில் ஒருபக்கம் தேவகி இன்னொரு பக்கம் தர்மா என இருவரின் புகப்படமும் இருக்க பார்க்கவே அத்தனை அழகாக இருந்தது. யோசனை பழையது தான் என்றாலும் அந்தச் சங்கிலியில் இருந்த வேலைப்பாடுகள் புதிது என்று பார்த்ததும் புரிந்தது தர்மனுக்கு.
கணவனின் குரலில் பயம் தெளிந்து கண்ணைத் திறந்து பார்த்தவளுக்கும் அரசுவின் பரிசு மிகவும் பிடித்திருந்தது. தர்மா தன்னுடைய கைகளாலே அதை அவளுக்கு அணிவித்து விட, ஏரியின் நடுவே இயற்கையை முழுமையாக அனுபவித்தபடி தன்னுடைய பிறந்தநாளை கணவனுடன் சந்தோஷமாகக் கொண்டாடினாள் தேவகி.
“எனக்கு சென்னைக்கு வருவதில் சுத்தமா விருப்பம் இல்ல ஊர்மி. உன்னை உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போகத் தான் எனக்கு ஆசையா இருந்துச்சு. ஆனா அந்த அரசு பையன் தான் ரொம்ப உயிரை வாங்கினான். அவன் இங்க வைச்சு நமக்கு ஏதோ ஒரு பெரிய சர்ப்ரைஸ் ஏற்பாடு பண்ணி இருக்கிறதா சொன்னான். அவன் மனசு சங்கடப்படக்கூடாதுன்னு தான் ஒத்துக்கிட்டேன்.
ஆனா ப்ளைட்டில் ஏறி உட்காரும் போது தான் இந்த வீடு எனக்கு நினைவு வந்தது. இந்த வீடு என்னோட பெயரில் தான் இருக்குன்னாலும் இப்போதைக்கு என் ப்ரண்டு அவன் ஆபிஸா பயன்படுத்திக்கிட்டு இருக்கான். உன்னை இங்கே கூட்டிட்டு வந்தே ஆகனும் னு தோணுச்சு.” என்ற நாகாவை உற்றுப் பார்த்தாள் ஊர்மி.
“இந்த வீடு எனக்கு ரொம்ப ஸ்பெஷல். என்ன ஒன்னு இந்த வீட்டுக்கு இதுவரைக்கும் நான் வந்ததே இல்லை. உன்கூட சேர்ந்து தான் நான் இங்க விஜயம் செய்யணும் என்பது விதி போல.” அபார்ட்மெண்ட் ஒன்றின் நான்காவது மாடியில் இருக்கும் இரண்டு படுக்கையறை கொண்ட வீட்டு வாசலில் நிற்க வைத்தபடி பேசிக்கொண்டிருந்தான் நாகா.
“இந்த வீட்டில் அப்படி என்ன தனித்துவம் இருக்கு. எல்லா வீட்டையும் மாதிரி இதுவும் கல், மண், செங்கல் வைச்சு கட்டின வீடு தானே.” புரியாமல் கேட்டாள் ஊர்மி.
“அதில் எந்த சந்தேகமும் வேண்டாம் செல்லமே. ஆனா இந்த வீடு என்னோட திறமைக்குக் கிடைச்ச பரிசு.” என்க, ஊர்மியின் முகத்தில் அதிர்ச்சி.
“என்னடி சந்தேகமாப் பார்க்கிற. என்னோட க்ளையண்ட் ஒருத்தரை கொலை கேஸில் இருந்து நான் காப்பாத்தினதுக்காக, வேண்டாம் வேண்டாம் னு சொன்னாலும் கட்டாயப்படுத்தி எனக்குப் பரிசா இந்த வீட்டை வாங்கிக் கொடுத்தார்.” பழைய நினைவில் சொன்னான் நாகா.
“அப்ப நீங்க உழைச்சு சம்பாதிச்சதுன்னு சொல்லுங்க.” கேட்ட ஊர்மியின் முகத்தில் பெருமிதம். தன் கணவன் திறமையில்லாதவன் இல்லை என்கிற பூரிப்புணர்வு அவளிடத்தில் தெரிந்தது. அதைப் பார்த்த நாகாவின் முகத்திலும் பெருமை தாண்டவமாடியது.
“உண்மையிலேயே இது பெரிய சர்ப்ரைஸ் தான். ஏன்னா ஒன்னுக்கும் உதவாத என்னோட வக்கீல் வண்டு முருகன் திறமையா வாதாடி ஒருத்தரை கேஸில் இருந்து காப்பாத்தி இருக்காரு, நம்பவே முடியல.” என்றாள் ஊர்மி.
நியாயமாக அவள் கேலிக்கு அவனுக்குக் கோபம் வந்திருக்க வேண்டும். ஆனால் நாகாவிற்கு சிரிப்பு தான் வந்தது. சுத்தமா மானங்கெட்டுப் போயிட்ட நாகா என்று தனக்குள் நினைத்துக்கொண்டு தலையைக் கோதினான் அவன்.
“சரி செல்லம் பேசிட்டே இருக்காம கதவைத் திற.” என்றபடி சாவியை நீட்டினான்.
“நான் இப்பவே சொல்லிடுறேன். நீங்க சர்ப்பரைஸ் னு சொல்லி உள்ளே என்ன கண்ட்ராவியை பண்ணி வைச்சிருந்தாலும், நிஜமாவே அது எனக்குப் பிடிச்சிருந்தா மட்டும் தான் பிடிச்சிருக்குன்னு சொல்லுவேன். மத்தமடி நீங்க மனசு வருத்தப்படக் கூடாது.” முன்ஜாக்திரதையாகச் சொல்லிவிட்டாள் அவள்.
“சரி டீல், என்னோட சர்ப்ரைஸ் உனக்குப் பிடிக்காமப் போனாலும் பரவாயில்லை. அரசுவோட சர்ப்ரைஸ் எப்படி இருந்தாலும், உனக்கு ரொம்பப் பிடிச்சிருந்ததுன்னு அவன்கிட்ட சொல்லணும் என்ன.” என்க, “அப்ப என்னை பொய் சொல்லச் சொல்றீங்களா?” அரசுவின் மீதான அவனின் எண்ணங்களைக் கண்டு அகமகிழந்தாலும், வேண்டுமென்றே கேட்டாள் அவள்.
“அடியேய் என் ஹரிச்சந்திரி அதிகமாப் பேசாம கதவைத் திறடி.” நாகாவின் பொறுமை பறக்க ஆரம்பிக்க, “ம்ம்… திறக்கிறேன், எதுக்காக இவ்வளவு அவசரப்படுறீங்க.” என்று பேசிக்கொண்டே அந்த வீட்டின் கதவைத் திறந்தாள் ஊர்மி.
வீடு முழுக்க கலர் கலர் பேப்பர், பல வண்ண ரோஜா மலர்கள், சீலிங்க் முழுக்க ஹீலியம் பலூன்கள் நறுமணத்துடன் கூடிய வண்ண வண்ண மெழுகுவர்த்திகள் என்று பார்க்கவே ரம்மியமாக இருந்தது வீட்டின் வரவேற்பரை.
வீட்டின் நடுவே அலங்காரத்துடன் இருந்த மேஜை ஒன்றில் ரோஜா மலரைப் போல் தோற்றம் கொண்ட கேக் இருந்தது. இதையெல்லாம் பார்த்து சந்தோஷப்பட்டு வாயை திறந்து விட்டால் அவள் ஊர்மி இல்லையே.
“இதுதான் உங்களோட சர்ப்ரைஸா நான் என்ன சின்ன குழந்தையா இது எல்லாம் பார்த்து சந்தோஷப்பட.” என்றாள்.
“அதானே பார்த்தேன் என் பொண்டாட்டி கொஞ்சம் அப்நார்மல். அவளுக்காக நான் பேஸிக்கான அரேஜ்மெண்ட் பண்றேனே. அவளுக்குப் பிடிக்குமோ பிடிக்காதோன்னு யோசிச்சேன். நான் நினைச்ச மாதிரியே நடந்திடுச்சு.
வேஸ்ட், சுத்த வேஸ்ட் நீயும் வேஸ்ட், நானும் வேஸ்ட். உனக்காக இந்த அலங்காரத்தை எல்லாம் பண்றதுக்காக நான் செலவு பண்ண பணமும் வேஸ்ட்.
என்ன பொண்ணு டி நீ. இந்த மாதிரி ரொமான்டிக் சர்ப்பரைஸ் பார்த்து இம்ரஸ் ஆகாத பொண்ணு எனக்குத் தெரிஞ்ச வரைக்கும் நீ ஒருத்தியாத் தான் இருப்ப.” விரக்தியாகச் சொன்னான் நாகா.
“ஆமா நான் அப்படித் தான். ஏன் என்னை இந்த துரைக்கு பிடிக்கலையோ.” என்க,
“செல்லம்மா நான் எப்படா அப்படி சொன்னேன். எப்படி இருந்தாலும் நீதான் என் செல்லம், வெல்லம், பட்டுக்குட்டி, என் அழகான ராட்சசி, குட்டிப்பிசாசு தேவதை, காட்டேரி எல்லாமே.”
“சரி என்னோட சர்ஸ்ப்ரைஸ் தான் உனக்குப் பிடிக்கல. இனி உங்க அண்ணன் ஏதோ சர்ப்ரைஸ் வைச்சிருக்கேன்னு சொன்னானே, அதாச்சும் உனக்குப் பிடிக்குதான்னு பார்ப்போம். சட்டுபுட்டுன்னு கேக்கை வெட்டி சாப்பிட்டுட்டு மெரீனாவுக்கு கிளம்புவோமா.” நாகா கேட்க சில பல எதிர்பேச்சுகளுக்குப் பிறகு ஊர்மியும் ஒப்புக்கொண்டாள்.
மாலை மணி நான்கைத் தாண்டி சுற்றிக் கொண்டிருந்தது கடிகாரம். அரசுக்கு உள்ளுக்குள் பக்பக் என்று அடித்துக் கொண்டிருந்தது இதயம்.
“இன்னும் கொஞ்ச நேரம் தான். கடவுளே உனக்கு என்னைப் பத்தி நல்லாத் தெரியும். என்னோட நோக்கம் எல்லாமே நேர்மைக்கும், நியாயத்திற்கும் கட்டுப்பட்டது தான். அதனால நீ என்ன பண்ணுவியோ எனக்குத் தெரியாது. என் பக்கமிருந்து இந்த ப்ளானில் என்னை ஜெயிக்க வைக்கிற நீ.”
“இன்னைக்கு அந்த நாலு பசங்களுக்கும் அன்பு, பாசம், உறவுன்னா என்னன்னு புரிய வைக்கிற. என் உடம்புலையும் மனசிலையும் தெம்பு இருக்கிறக்குள்ள அவங்க நாலு பேரும் ஒன்னா சேர்ந்திடணும், நீ சேர வைக்கிற.” என்று பலமாக வேண்டுதல் வைத்தான் அரசு.
முதலாக லீலா மற்றும் செல்வா அவ்விடம் வந்து சேர, தூரத்தில் இருந்தபடி அவர்களைக் கண்டுகொண்ட அரசு அவர்கள் தன்னைப் பார்த்துவிடாதபடி ஓரிடத்தில் மறைந்து நின்றுகொண்டான்.
வார நாள் என்றாலும் அங்கு ஏகப்பட்ட கூட்டம் இருந்தது அவனுக்கு வசதியாய் போயிற்று. “அரசு இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்திடுவான். அதனால் நம்ம இரண்டு பேரும் கொஞ்ச நேரம் உட்காரலாம்.” என்று கடற்கரையை காண்பித்தான் செல்வா.
இருவரும் கடல் அலைகளை ரசித்த வண்ணம் அமைதியாக ஆரம்பித்திருக்க செல்வாவிற்கு போனில் அழைத்தான் அரசு.
“என்ன செல்வா வந்துட்டியா?”
“வந்துட்டேன் டா நீ வந்துட்டியா?”
“வர கொஞ்சம் லேட் ஆகும். நீ ஒன்னு பண்ணு, அங்க பலூன் விக்கிறவங்க யாராவது இருந்தா, சிகப்பு கலர் பலூன் வாங்கி கையில் வைச்சிரு. அதை வைச்சு உன்னை அடையாளம் கண்டுபிடிச்சுஉன்கிட்ட வரேன். அப்புறம் முக்கியமான விஷயம் லீலாவை விட்டுட்டு தனியா எங்கேயும் போகாதே.
கடற்கரையில் உட்கார்ந்து பேசிக்கிட்டு இருங்க சரியா. சொன்னது கேட்டுச்சா பேசிக்கிட்டு மட்டும் இருங்க. நான் பத்து நிமிஷத்தில் வந்திடுவேன்.” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்த அரசு நாகாவிற்கு போன் செய்தான்.
“வந்துட்டியா டா நாகா எங்க இருக்க? என்னது அந்தப் பக்கமா போகப்போறியா? அதெல்லாம் வேண்டாம், அங்க கூட்டம் நிறைய இருக்கும்.
நீ ஒன்னு பண்ணு சுந்தரி மீன் கடை இருக்கு பார்த்தியா அது பக்கத்தில் ஒரு மஞ்சள் கலர் பலூன் வாங்கி கையில் வைச்சிக்கிட்டு கடற்கரையில் உட்கார்ந்து இரு.
இல்லன்னா அங்க பக்கத்திலே கொஞ்ச தூரம் நடந்துக்கிட்டு இரு. ரொம்ப தூரம் போயிடாத நான் சீக்கிரம் வந்துடுறேன்.” என்றுவிட்டு அழைப்பை அணைத்தான். இதற்கே அவனுக்கு தாறுமாறாக மூச்சுவாங்கியது.
“இரண்டு எலி வந்திடுச்சு இன்னும் இரண்டு எப்ப வருமோ. நான் சொல்றதுக்கு முன்னாடி நாலும் ஒன்னை ஒன்னு பார்த்துச்சுன்னா என்னோட மொத்த ப்ளானும் சொதப்பிக்குமே. ஆண்டவா எனக்குத் துணையா இருப்பா.” என்று வேண்டிக்கொண்டு அடுத்தவனுக்கு போன் செய்தான் அரசு.
“என்ன சொல்ற தெய்வா நீ அல்ரெடி வந்துட்டியா?” என்ற அரசுவிற்கு பதற்றம் தொற்றிக்கொண்டது.
“ஐயோ இவன் எங்க நிக்கிறான்னு தெரியலையே.” என்று பைனாகுலரில் அங்கும் இங்கும் பார்த்தவன் ஒருவழியாக அவனைக் கண்டுபிடித்துவிட்டான். ஆனால் துர்அதிர்ஷ்ட வசமாக தெய்வா செல்வாவை விட்டு சிறிது தொலைவிலே நின்று கொண்டிருக்க, அரசுவின் வயிற்றில் பயம் பந்தாய் சுழல ஆரம்பித்தது.
“தெய்வா அப்படியே நில்லு. இன்னும் ஒரு அடி கூட எடுத்து வைக்கக் கூடாது. அதாவது நான் என்ன சொல்ல வந்தேன்னா ஏற்கனவே லேட் ஆகிடுச்சு. ருக்கு வேற சீக்கிரம் வீட்டுக்குப் போகணும் னு சொன்னா தானே. நீ பாட்டுக்கு ரொம்ப தூரம் உள்ள போயிட்டா எல்லாருக்கும் கஷ்டம். அதனால அப்படியே கொஞ்ச தூரம் பின்னாடி வந்து வெயில் இல்லாத இடத்தில் உட்கார்ந்திரு.
உன்னை ஈஸியா கண்டுபிடிக்கிறதுக்காக ஒரு வெள்ளை பலூன் வாங்கி கையில் வைச்சிரு. நான் வந்துக்கிட்டே இருக்கேன்.” என்று அரசு சொல்லிக் கொண்டே இருந்த நேரத்தில் அரசுவின் தோள் மீது யாரோ கை வைக்க, பேய் வீட்டில் மாட்டிக்கொண்ட ஹீரோயின் போல பயத்துடன் திரும்பியவனுக்கு பின்னால் நின்று கொண்டிருந்தனர் தர்மா, தேவகி இருவரும்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
7
+1
2
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


அய்யோ இது என்ன பிளானா இருக்கும் சஸ்பென்ஸ் தாங்கல