
நாள்கள் வேகமாகச் சென்றது.
ஒரு வாரம் சென்றிருக்கும். அன்று ருத்ரன் வேலையில் இருந்து வந்த பிறகு ருத்ரனைப் பார்க்க வந்தார் செல்வம்.
“ருத்ரா, நீ ஒரு பொண்ணை விரும்புறேன்னு சொன்ன இல்லையா? அந்தப் பொண்ணு வீட்ல போய் பேசலாம். அந்தப் பொண்ணப் பத்திச் சொல்லு.”
“இல்ல மாமா… அதுக்குள்ள என்ன அவசரம்?” என்றான்.
“என்னப்பா அவசரம் சொல்ற. அன்னைக்குச் சொன்னது தான், உனக்கு வயசு கூடிட்டே போகுது” என்றவுடன் தன் தாயைத் திரும்பிப் பார்த்தான்.
அவர் முறைத்துக் கொண்டு நிற்க, வேறு எதுவும் பேச முடியாமல் ஆனந்தி பற்றிய முழு விவரத்தையும் தனக்குத் தெரிந்தவரை சொல்ல,
“சரிப்பா, நாளைக்குக் கொஞ்சம் வேலைக்கு லீவு போடுறியா? நீ, நானு, அத்தை மூணு பேரும் போய் அவங்க வீட்ல பார்த்துப் பேசிட்டு வரலாம்” என்று சொல்ல,
ஒரு சில நொடி தயங்கியவன், தனது அத்தை பேசவும் சரி என்று ஒத்துக் கொண்டான்.
மறுநாள் மூவரும் சென்று ஆனந்தி வீட்டில் பேச,
ஆனந்தி வீட்டில் இருப்பவர்களும் தங்கள் மகளின் விருப்பத்திற்காக ஒத்துக் கொள்கிறோம் என்பது போல் சொல்ல,
சரி என்று விட்டு அடுத்து வரும் முகூர்த்தத்தில் நிச்சயதார்த்தமும், ஒரு மூன்று மாதம் கழித்துத் திருமணத்தையும் வைத்துக் கொள்ளலாம் என்று செல்வம் பேச,
“என் பொண்ணுக்கு வயசாகிட்டே போகுது இல்ல, திருமணத்தைச் சீக்கிரம் முடித்து விட்டால் கூட கொஞ்சம் நல்லது தான்” என்று ஆனந்தியின் பெற்றவர்கள் சொன்னார்கள்.
செல்வம் ஒரு சில நொடி தயங்கி நின்றாலும், “இல்ல வீட்ல மொத கல்யாணம், கொஞ்சம் விமரிசையா செய்யலாம் என்று தான்” என்றார்.
“ஏன்? பணம் காசு எல்லாம் இருக்குது தான, ஒரு மாசத்தில் செய்ய முடியாதா?”என்று கேட்க,
ஆனந்தி அமைதியாக இருந்த உடன் ருத்ரனுக்குக் கோபம். ஆனந்தியைத் தனியாக அழைத்து, “உங்க வீட்ல இப்படி ஏன் பேசுறாங்க?” என்று கேட்டான்.
“நானும் எங்க வீட்டுக்கு ஒரே ஒரு பொண்ணு தானே, அதான்பா அப்படிப் பேசுறாங்க, தப்பா எடுத்துக்காத. அப்பா அம்மா பேசினதுக்கு நான் உன்கிட்ட மன்னிப்புக் கேட்டுக்குறேன். உங்க மாமாகிட்டக் கூட மன்னிப்புக் கேட்டுக்குறேன்” என்ற உடன் அருகில் வந்த செல்வம்,
“ஒன்னும் இல்லம்மா, பெத்தவங்க இல்லையா? அதான் அப்படிப் பேசறாங்க. எந்த ஒரு பொண்ணப் பெத்தவங்களுக்கும் பதைபதைப்பு இருக்கதான் செய்யும். பொண்ணுக்கு வயசு கூடிட்டுப் போகுதுன்றதால அப்படிச் சொல்றாங்க, இதுல நம்ம தப்பா எடுத்துக்க ஒன்னும் இல்ல. விடுமா, நீயும் என் மாப்பிள்ளையும் சந்தோஷமா இருந்தாலே எனக்குப் போதும் என்று ஆனந்தியிடம் சொல்லிவிட்டு, “இன்னும் ஒரு மாதத்தில் திருமணத்தை வைத்துக் கொள்ளலாம்” என்று சொல்லி வந்துவிட்டார்.
வீட்டுக்கு வந்து தனது தங்கையிடமும் விஷயத்தைச் சொல்ல, பாக்கியம் தான் குதித்துக் கொண்டு இருந்தார்.
“என்ன அண்ணா, நினைச்சுட்டு இருக்க? அவங்க தான் கேட்டாங்கன்னா, நீயும் 10, 15 நாள்ல நிச்சயதார்த்தத்தையும், ஒரு மாசத்துல கல்யாணத்தையும் முடிச்சுடலாம்னு சொல்லிப் பேசிட்டு வந்திருக்க. இவ்வளவு அவசரம் எதுக்கு? எனக்கு ஒன்னும் சரியாப் படல, எனக்கு மனசு அடிச்சுக்கிட்டே இருக்கு” என்றார்.
அவன் அமைதியாகத் தன் தாயைக் கடந்து விட, தனம் தான் தனது நாத்தனார் பாக்கியத்தைச் சமாதானப்படுத்தினார்.
“பொண்ணப் பெத்தவங்க பாக்கியம் அவங்களுக்கும், அவங்க பொண்ணு கல்யாணத்தைச் சீக்கிரம் முடிக்கணும்ன்ற ஆசை இருக்கும் இல்ல” என்றார்.
“வீட்ல நல்லது நடக்கப் போகுது, மூஞ்சியைத் தூக்கி வச்சுட்டுத் திரியாம, நீயும் உன் மகளும் சிரிச்ச முகமா இருங்க. நம்ம வீட்டுக் கல்யாணம்… அதுவும் நம்ம வீட்டோட மொதக் கல்யாணம்” என்றார்.
தனக்கு மனம் இல்லை என்றாலும், பாக்கியம் தனது அண்ணனின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு அமைதியாக இருந்தார்.
நாள்கள் வேகமாகச் சென்று நிச்சயதார்த்தமும் முடிந்து திருமணத்திற்குத் துணி எடுக்கச் சென்றார்கள்.
திருமணப்பட்டை தனம் ஒவ்வொன்றாகத் தேடிப் பிடித்து எடுத்துக் கொண்டு இருக்க,
“எனக்குப் பிடிக்கவில்லை, அது சரி இல்லை, இது சரியில்லை” என்று ஆனந்தியும் சரி, ஆனந்தியின் பெற்றவர்களும் சொல்ல, தமிழ் கண்டும் காணாமல் விலகி விட்டாள்.
காயத்ரி தான் இங்கு புலம்பித் தீர்த்தாள். அவள் கூடச் சேர்ந்து அகிலாவும் புலம்பித் தள்ளினாள்.
“உங்களுக்கு என்னடி வந்துச்சு, கட்டிக்கப் போற பொண்ணுக்கு எது புடிச்சிருக்கோ, அதை எடுத்துக்கட்டும். அவங்க தானே கட்டிக்கப் போறாங்க” என்று தமிழ் தன் தங்கையிடமும், தன் தோழியிடமும் சொல்ல,
தமிழை முறைத்த காயுவும், அகிலாவும் “உன்னைலாம் திருத்தவே முடியாது” என்று விட்டு நகர்ந்து விட்டார்கள்.
தனாவும் சரி, பாக்கியமும் சரி அவர்களும் விலகி தான் நின்றார்கள்.
ஆனந்தியின் பெற்றவர்கள் ஏன் இருவரும் ஒதுங்கி நிற்கிறார்கள் என்று கேட்க, தனம் தான் மழுப்பிச் சமாளித்தார். “ஒன்னும் இல்ல சம்மந்தி, சும்மாதான்” என்று விட்டு அமைதியாகி விட்டார்.
ஆனந்தியின் பெற்றவர்கள் அதைப் பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை.
ஆனந்தியும் சரி, அவளுடைய பெற்றோர்களும் சரி, உயர்ந்த விலையில் பட்டுப்புடவை, நகைகள் அனைத்தும் எடுத்து இருந்தார்கள்.
தனத்திற்கும் லேசாக உறுத்தச் செய்தாலும், தன் மருமகனுக்காக என்று அமைதி ஆகி விட்டார்.
திருமண நாளும் வந்தது. இரவு ரிசப்ஷன், பெண் அழைப்பு இரண்டும் முடிந்து
மறுநாள் திருமணத்திற்குத் தேவையான அனைத்தும் விமரிசையாக நடந்து கொண்டிருந்தது.
செல்வம் அனைத்தையும் எடுத்துக்கட்டிச் செய்தார். ஓடியாடி தனமும், செல்வமும் திருமணத்திற்குத் தேவையானதைச் செய்ய, பாக்கியமும் சரி, தனாவும் சரி, தனது அண்ணன், மாமாவிற்காகப் பட்டும் படாமல் விருப்பம் இல்லாமல் அதில் கலந்து கொண்டு அமைதியாக ஒதுங்கியே நின்றார்கள்.
செல்வத்திற்கு உதவியாகச் சரவணன் தான் தனது நண்பனின் ஆசைக்காகவும், தன்னுடைய சித்தப்பா, சித்திக்காகவும் அனைத்தையும் ஓடியாடிச் செய்து கொண்டிருந்தான்.
காலை திருமணத்திற்கு ருத்ரன் மணமகன் அறையில் கிளம்பிக் கொண்டிருக்க,
மணமகள் அறையில் ஒரு பெரிய பேச்சே ஓடிக் கொண்டிருந்தது.
ஆனந்தியிடமும், ஆனந்தியின் பெற்றவர்களிடமும் தமிழ்தான் பேசிக் கொண்டு இருந்தாள்.
“புரிஞ்சுக்கோங்க, கல்யாணம் முடிஞ்ச உடனே கூட கையோட மாமா பேர்ல அப்பா எழுதி வைத்து விடுவார்” என்று சொல்ல,
“என் பொண்ணு பேருல பாதிச் சொத்து இருக்கணும்” என்றார் ஆனந்தியின் அம்மா.
“சரி, உங்க பொண்ணு பேர்ல பாதிச் சொத்தும், மாமா பேர்ல பாதிச் சொத்தும் எழுதி வச்சுருவோம். கல்யாணம் முடிஞ்ச கையோட எங்க அத்தையும், தனாவையும் கூட நாங்க கூப்பிட்டுப் போயிடுவோம்” என்று சொல்ல,
“நாங்க அவங்க ரெண்டு பேரும் அங்கு இருக்கக் கூடாதுன்னு எல்லாம் சொல்லல. என் பொண்ணு வந்து வாழப்போற வீடு, என் பொண்ணு பேருலன்னு கொஞ்சம் சொத்து இருக்கணும். எல்லா சொத்தையும் நீங்களே ஆட்டையைப் போட்டுக்கலாம் என்று நினைச்சுட்டு இருக்கீங்களா? உங்க அப்பா பேருல எல்லாச் சொத்தும் இருக்கு. உங்க அப்பா நாளப் பின்ன என் பேர்ல இருக்க சொத்து எனக்கு தான் சொந்தம் என்று சொல்லி விட்டால்” என்று ஆனந்தி கேட்டாள்.
தமிழ் ஆனந்தியை அடிபட்ட பார்வை பார்த்தவள், எதுவும் பேசாமல் சரி என்று சொல்லிக் கொண்டிருக்க,
அப்பொழுதுதான் சத்தமாக இருக்கிறது என்று அகிலாவும், காயத்ரியும், செல்வம், தனத்திடம் சொல்ல,
வேகமாகச் செல்வமும், தனமும் அங்கு வந்தவர்கள் என்னவென்று கேட்க, தமிழ் இருவரிடமும் காதில் மெதுவாகச் சொல்ல,
இருவருக்கும் சிறிது வருத்தமாக இருந்தாலும், “கல்யாணம் முடிஞ்ச உடனே எழுதி வச்சிடுவேன் மா…” என்று சொல்ல,
“திருமணத்திற்கு முன்பு எழுதி வைக்க வேண்டும், உங்களை எப்படி நம்புவது நாங்கள்?” என்று சொல்ல,
அப்பொழுது தனம் தான், “இப்ப வந்து இந்த நேரத்துல அவசரகதியா சொன்னால் எப்படி மா செய்ய முடியும்? இரண்டு நாளைக்கு முன்னாடி சொல்லி இருந்தால் கூட நேத்தோ, இல்ல அதுக்கு முன்னாடி நாளோ எழுதி வச்சிருக்கலாம். இப்பச் சொன்னால் அதுவும் “மணமேடைக்குப் போற கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கேட்டால்? உடனே எப்படிச் செய்ய முடியும்? இப்படிச் சொன்னா என்ன அர்த்தம்?” என்றார்.
அங்கு வந்த பாக்கியம், “என்ன பண்ணிட்டு இருக்கீங்க, அண்ணி?” என்று கேட்க,
“ஒன்னுமில்ல பாக்கியம், நீ அமைதியா இரு” என்றார் தனம்.
“அண்ணி இவங்க இவளோ பேசுறாங்க, நீங்க அமைதியா இருக்கீங்க. இப்போ இது அவசியமா?” என்றார் பாக்கியம்.
“என் மருமகனுக்குப் பிடிச்சிருக்குன்னு நாங்க பேசிட்டு இருக்கோம், பாக்கியம். நீ கொஞ்சம் அமைதியா இரு” என்று தனம் சொல்ல,
“அவருக்குப் புடிச்சிருக்கு என்று தான் பேசிட்டு இருக்கீங்களா? அப்ப உங்களுக்கு விருப்பம் இல்லையா ?” என்று ஆனந்தி கேட்க,
தனம் ஆனந்தியை முறைத்துவிட்டு, “என் மருமகனுக்கும் பிடிச்சிருக்கு, எங்களுக்கும் புடிச்சிருக்கப் போய் தான் எடுத்துக்கட்டிச் செஞ்சிட்டு இருக்கோம். கல்யாணம் முடிஞ்ச உடனே கையோட ரிஜிஸ்டர் ஆபீஸ் போய் கூட உன் பேரிலும், ருத்ரன் பேரிலும் முழு சொத்தையும் எழுதி வைத்து விடுவோம்” என்று சொல்ல,
அப்பொழுதுதான் சரவணன் மூலமாக விஷயம் கேள்விப்பட்டு அங்கு வந்து நின்ற ருத்ரன், என்ன நடக்குது இங்க? என்ன ஆனந்தி பேசிட்டு இருக்க அத்தை, மாமா கிட்ட” என்று கேட்க,
ருத்ரனைப் பார்த்தவுடன் அதிர்ச்சியுடன் ஆனந்தி அவனைப் பார்த்தாலும், இனிமேலும் இதில் மறைப்பதற்கு ஒன்றும் இல்லை என்று மனதிற்குள் எண்ணி,
“ருத்ரா, சொத்து முழுசும் உங்க மாமா பேருல தான் இருக்காம், உங்க பேருல ஒன்னு கூட இல்லையாமே? என் பெயர்லயோ, இல்ல உங்க பெயர்லயோ இருந்ததுனா நல்லா இருக்கும். அதான் என் பேருல எழுதி வச்சா தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு சொல்லிட்டு இருக்கேன்” என்றாள்.
அவளை அடிக்கக் கை ஓங்கிக் கொண்டு வந்தவன், அவளின் மிரட்சியான பார்வையைப் பார்த்துவிட்டுக் கீழே போட்டுவிட்டு, “என்ன பேசிட்டு இருக்கன்னு உனக்குப் புரியுதா? ஏன்? நம்ம லவ் பண்ணும் போது நான் உன்கிட்டச் சொல்லிருந்தேன் தானே…
என்னோட மாமாவும், அத்தையும் தான் எங்களை எடுத்து வளர்த்தாங்க. அவங்க பேருல தான் மொத்தச் சொத்தும் இருக்குன்னு. இப்ப என்ன புதுசா இன்னைக்குத் தான் தெரிஞ்ச மாதிரி பேசிட்டு இருக்க…”
“இல்ல நீங்க சொன்னிங்க தான். இருந்தாலும், இன்னமும் அவங்க பேர்ல இருந்தா நல்லா இருக்காது இல்ல, அதான்” என்றாள்.
“அவ்வளவு தான் உனக்கு மரியாதை, என்னை எடுத்து வளர்த்தவர் என்னை ஏமாத்திடுவாருனு நினைச்சுட்டு இருக்கியா?”
“அப்படிச் சொல்லல, இருந்தாலும்…”
“போதும்” என்று சொல்லும்போதே…
செல்வம் ருத்ரன் அருகில் வந்தவர் அவனது கையை பிடித்து, “ருத்ரா, நல்ல காரியம் நடக்கிறப்ப ஏன்பா இப்படிக் கத்திட்டு இருக்கணும்? அந்தப் பொண்ணு என்ன இப்ப தப்பா கேட்டுச்சு,நானும் ஏற்கனவே சொன்னது தானே. நான் ஏற்கனவே இதைச் செஞ்சுருக்கணும், அந்தப் பொண்ணு கேக்குற வரைக்கும் அமைதியாக இருந்து இருக்கக் கூடாது” என்றார்.
“மாமா அவதான் கேட்கிறான்னா, நீங்க என்ன மாமா புரியாமல் பேசிட்டு இருக்கீங்க? உங்க பேருல இருந்தா என்ன? என் பேருல இருந்தா என்ன?” என்றான்.
“அது எப்படி ருத்ரா சரி வரும்?”
“அவர் பேர்ல இருந்தா, நாளைக்கு அவங்க பொண்ணுங்களுக்குக் கூட” என்றவுடன் வேகமாக அவளை அறைந்தவன்,
“அவர் பேர்ல இருந்தா அவரோட பொண்ணுங்களுக்குக் கொடுத்துடுவாங்களா? இந்த நிமிஷம் வரைக்கும் அவர் வருமானத்தில் தான் என்னையும் சரி, என் தங்கச்சியையும் சரி, படிக்க வச்சிட்டு இருக்காரு. எங்க சொத்து எதையும் அவர் எடுத்ததில்லை. அவங்க பிள்ளைங்களை வேற மாறியும், எங்களை வேற மாறியும் பார்த்ததில்லை.
அவங்க ரெண்டு பேரையும் எப்படிப் பார்க்கிறாங்களோ, அப்படித்தான் என்னையும், என் தங்கச்சியையும் இந்த நிமிஷம் வரைக்கும் ரெண்டு பேருமே பார்த்துட்டு இருக்காங்க, நேத்து வந்த உனக்கு என்னடி தெரியும் எங்க மாமாவைப் பத்தி” என்று விட்டு முறைப்புடன் பார்த்து “இப்ப லாஸ்ட்டா என்னதான் சொல்ல வர?” என்று கேட்க,
ஆனந்தியும் ஒரு முடிவோடு நிமிர்ந்து நின்றவள்,
“லாஸ்ட்டா என்ன சொல்ல வரேன்னா சொத்து என் பேர்ல பாதி எழுதி வச்சா கல்யாணம் நடக்கும். இல்லன்னா இந்தக் கல்யாணம் நடக்காது” என்றவுடன் அவளை முதலில் அதிர்ச்சியுடன் பார்த்தான்.
பிறகு “அப்படிப்பட்ட கல்யாணமே எனக்கு வேணாம்” என்று சொல்ல,
“உனக்குச் சொத்து இருக்கப் போய்தான் உன்னைக் கட்டிக்கணும் என்று ஆசைப்பட்டேன். அந்த சொத்தே உன் பேர்ல இல்லைன்னு ஆன பிறகு நீ எதுக்குடா எனக்கு வேண்டும்?” என்றாள்.
“ருத்ரா…” என்று செல்வம் பேச வருகையில்,
“போதும் மாமா, நிறுத்துங்க… நான் ஆசைப்பட்டேன்றதுக்காக தான் இந்தக் கல்யாணத்தை இவ்ளோ அவசர அவசரமா நீங்களும் ஏற்பாடு செஞ்சீங்க. இவ பேருல சொத்து எழுதி வச்சாதான் இந்தக் கல்யாணம் நடக்கணும் என்றால், அப்படிப்பட்ட கல்யாணமே எனக்கு வேணாம்” என்றான்.
ஆனந்தி சிரித்துக் கொண்டே, “இப்போ இந்தக் கல்யாணம் நின்னுச்சுன்னா, உங்க மாமாவுக்கு இந்த ஊர் மத்தியில் எவ்வளவு கெட்ட பேரு? உங்க மாமாவும், அத்தையும் தலை குனிஞ்சு தான் நிக்கணும், இந்த ஊருக்கு மத்தியில். உங்க குடும்பத்துக்கு எவ்வளவு கேவலம் தெரியுமா?”என்றவுடன் அவளைப் பார்த்து முறைத்து ருத்ரமூர்த்தியாக நின்றான்.
அடுத்த நிமிடம் சிரித்துக் கொண்டே, “உன் கூட நடக்கிற கல்யாணம் நிக்கும். ஆனா “எங்க மாமாவும் சரி, எங்க அத்தையும் சரி, எந்த இடத்திலும் தலை குனிஞ்சு நிக்க மாட்டாங்க… என்னைத் தலை நிமிர்ந்து வாழ வச்சவங்களை தலை நிமிர்த்தி வாழ வைக்கிறது தாண்டி என் கடமை” என்றான்.
“எப்படி? இந்த மண்டபத்திலே ஒரு பொண்ணப் பார்த்துக் கல்யாணம் பண்ணிப்பியோ?” என்று நக்கலாகக் கேட்டாள் ஆனந்தி.
சுற்றி தன் கண்களைச் சுழல விட்ட
ருத்ரன், நேராகத் தமிழ் அருகில் போய் நின்று “தமிழு, என்னைக் கட்டிக்கிறியா, உனக்குச் சம்மதமா?” என்று கேட்க,
அதிர்ச்சியுடன் நிமிர்ந்து ருத்ரனைப் பார்த்தாள் தமிழ்.

