Loading

என்னுள் நீ காதலாய்💞 

அத்தியாயம் 34

இளமாறன் அவளை பார்த்துக் கொண்டே கொஞ்சம் பின்னால் நகர, கட்டிலில் காலை இடித்தவன் மெத்தையில் விழ, விழாமல் இருக்க செந்தமிழை பிடிக்கிறேன் என்று அவள் கையை பிடித்து இழுக்க, அவளும் அவனுடன் மெத்தையில் விழ, இருவரும் மெத்தையில் ஒருக்களித்தவாறு விழுந்தனர்.

“என்ன இளா நிக்க முடியாம நீங்க விழுந்துட்டு என்னையும் தள்ளி விழ வச்சுட்டீங்க” என்று சிரித்தவள், சட்டென்று முகம் மாறினாள்.

அவள் மனதில் தோன்றிய பயம் கண்களில் தெரிய, கீழுதடு நடுங்க, “நான்.. நான்.. சும்மா விளையாட்டுக்கு தான் சொன்னேன். உங்களை குத்திக் காட்டல” என்று சொன்னவள் மெதுவாக கையை ஊன்றி எழுந்து வெளியே சென்று விட, அவன் மனதில் இருந்த மொத்த உற்சாகமும் கரைந்து போய் அவள் மனதில் உணர்ந்த வலியை அவனும் உணர, அவன் கண்கள் கரிக்கும் நீரை சுரக்க தயாராக, அதை அடக்கிக் கொண்டு மெல்ல எழுந்து அமர்ந்தான்.

‘செந்தமிழ் விளையாட்டாகப் பேசியது அவன் மனதை நோகடித்து விடக் கூடாதே’ என்பது மட்டும் தான் அவள் பயம் வலி எல்லாம்.

அறைக்குள் இருந்து வெளியே சென்ற செந்தமிழ் சோபாவில் உட்கார்ந்து எங்கேயோ பார்த்து எதையோ யோசித்துக் கொண்டிருக்க, புனிதா, “செந்தமிழ்..” என்று அழைத்ததும் சுயநினைவுக்கு வந்தாள்.

“குழந்தை அசைவுலாம் உனக்கு தெரியுதா செந்தமிழ்?” என்று அவர் கேட்க, “இல்லம்மா ரேவதி சொன்னான்னு நானும் கூட அப்பப்போ வயித்தை தடவி கொடுத்து பேசுவேன். ஆனா அசைவு ஒண்ணும் தெரியல” என்று அவள் சோகமான முகத்தோடு சொல்ல, “விடுடா ஒவ்வொருத்தருக்கு சீக்கிரம் தெரியும், ஒவ்வொருத்தருக்கு லேட்டா தெரியும். பயப்படாத” என்றார்.

இவர்கள் பேசிக் கொண்டிருக்க அங்கு வந்த இளமாறன், “தமிழ் நைட் நீ தூங்கும் போது நான் உன் வயித்து மேல கை வச்சு படுத்திருந்தப்போ குழந்தை அசையுறது தெரிஞ்சது” என்று சொல்ல, “அவ தான் குழந்தையை சுமக்கிறா. அவளுக்கு தெரியல உனக்கு தெரிஞ்சுடுச்சா” என்று கிண்டலாக சொன்னார் புனிதா.

“இல்ல புனிதாம்மா.. நான் நல்லா பார்த்தேன். என் கைல குழந்தை நல்லா உதைச்சது” என்று சொன்னவன் வேகமாக செந்தமிழ் வயிற்றில் கை வைத்து நகர்த்தி நகர்த்தி பார்த்தான். அவன் திடீரென்று அப்படி செய்ய அவள் கூச்சத்தில் நெளிந்தாள். “அவளை விடு இளமாறா..” என்று சொல்லிக் கொண்டே செந்தமிழுக்கு அருகில் வந்தமர்ந்தார் புனிதா.

அவனோ எதையும் கேட்காமல் அவள் வயிற்றை தடவி பார்த்து, ஆராய்ச்சி செய்து கொண்டே, ‘நேத்து குழந்தை உதைச்சதே.. இல்ல கனவு எதுவும் கண்டேனா?’ என்று யோசித்துக் கொண்டிருந்தான். என்ன நினைத்தானோ, “பட்டு குட்டி.. நேத்து அப்பா கையில நீங்க உதைச்சீங்க தான?” என்று கேட்க, குழந்தை மெதுவாக அவன் கையில் உதைக்க, செந்தமிழ் திடுக்கிட்டு அதிர்ந்தாள். இளமாறனோ சிரித்தான்.

வேகமாக அவன் அம்மாவின் கையை எடுத்து அவன் கையோடு சேர்த்து செந்தமிழ் வயிற்றில் வைக்க, குழந்தை உதைக்க அவர் கண்கள் கலங்கியது. செந்தமிழும் அவர்கள் கையின் மேல் கையை வைத்துக் கொண்டு இருவரையும் பார்த்தாள். “அம்மா குழந்தை அசையுறா” என்றவள் புனிதாவை அப்படியே அணைத்துக் கொண்டாள். ‘பாவம் தன்னை இவ்வாறு அவள் அணைத்துக் கொள்ளவில்லையே’ என்று இளமாறனுக்கு ஏக்கமாக இருந்தது.

“புனிதாம்மா.. குழந்தை அசையுறா” என்று வயிற்றை வருடிக் கொண்டே அன்னையின் மார்பில் சாய்ந்திருந்தது செந்தமிழ் என்னும் குழந்தை.

இரண்டு நாட்கள் கழித்து… செந்தமிழை மாதாந்திர செக்கப்புக்கு ஹாஸ்பிடலுக்கு அழைத்து சென்றான் இளமாறன். டாக்டரை பார்த்து விட்டு ஸ்கேன் பார்க்க சென்றார்கள்.

இதுநாள் வரை புனிதா தான் ஒவ்வொரு மாதமும் அவளை செக்கப்பிற்கு அழைத்து சென்றார். முதல் முறை இன்று இளமாறன் வந்திருக்கிறான். “குழந்தை நல்லா இருக்கா? செந்தமிழ் நல்லா இருக்காளா? எப்போ குழந்தை பிறக்கும்? நார்மல் டெலிவரி ஆகுமா? வேற என்னெல்லாம் அவ சாப்பிடணும்?” என்று டாக்டரை அவன் கேள்விகள் கேட்டுக் கொண்டேயிருக்க, டாக்டர் அவனை முறைத்தவாறு பதிலளித்தார்.

டாக்டர் சுஹாசினி அந்த ஏரியாவில் மிகவும் புகழ்பெற்ற மகப்பேறு மருத்துவர். அது ஒரு சின்ன கிளினிக் தான், அவர் பெரிய கிளினிக் பெட் வசதியுடன் வேறு ஏரியாவில் உள்ளது. அவர் பொறுமையாக அமைதியாக தான் பேசுவார். அவரையே கேள்விகள் கேட்டு முறைக்க வைத்து விட்டான் இந்த இளமாறன்.

சாருக்கு இப்போ தான புத்தி வந்திருக்கு. செந்தமிழ் அவன் செய்வதை எல்லாம் பார்த்து வியப்பில் இருந்தாள்.

ஸ்கேன் பார்க்க சென்றதும்.. நர்ஸ் வந்து செந்தமிழ் சேலையை விலக்கி வயிற்றில் ஜெல் தடவி ரெடி செய்ய, அருகில் இளமாறன் இருந்ததால் செந்தமிழுக்கு கூச்சமாக இருந்தது. அவனோ எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.

டாக்டர் வந்து ஸ்கேன் செய்து பார்க்க, படுத்திருந்தவளுக்கு எதிரே சுவற்றில் இருந்த ஒரு சின்ன திரையில் குழந்தை உருவம் தெரிந்தது. செந்தமிழும் இளமாறனும் கண்ணிமைக்காமல் அந்த திரையில் இருந்த குழந்தையை தான் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

டாக்டர் குழந்தையின் ஒவ்வொரு உறுப்பாக காட்டினார். அவர் குழந்தையின் பாதங்களை காட்ட இவ்வளவு நேரம் இளமாறன் கண்களில் அடக்கி வைத்திருந்த கண்ணீர் கரை தாண்டியது. “குழந்தை ஹெல்த்தியா இருக்கு. வெயிட் லாம் சரியா இருக்கு” என்று டாக்டர் சொல்ல, “டாக்டர் குழந்தையோட ரெண்டு காலும் நல்லா இருக்கா?” என்று கேட்டான் இளமாறன்.

“குழந்தையோட கை கால் எல்லாம் நல்லா இருக்கு” என்று அவர் சொல்ல, “அதில்ல டாக்டர் எனக்கு ஒரு கால் சின்னதா இருக்கும். குழந்தைக்கும் அந்த மாதிரி ஏதாவது..” என்று அவன் தயக்கத்தோடு கேட்க, “பார்த்தா படிச்ச மாதிரி இருக்கீங்க.. அறிவு இல்லையா? உங்களுக்கு அப்படி இருந்தா குழந்தைக்கு அப்படி இருக்கணும்னு எந்த அவசியமும் இல்ல. குழந்தை ஆரோக்கியமா இருக்கு” என்று டாக்டர் அவனை திட்டினார்.

இளமாறன் சந்தோஷத்தில் திக்குமுக்காடி போயிருந்தான். அவர் அவனை பாராட்டி கொண்டிருப்பதை போல் முகமெல்லாம் சிரித்தவன், “ரொம்ப தேங்க்ஸ் டாக்டர்” என்றான்.

நர்ஸ் வந்து “க்ளீன் பண்ணிக்கோங்க..” என்று ஒரு டிஸ்யூவை அவளிடம் தர, வேகமாக அதை நர்ஸிடமிருந்து வாங்கியவன் அவள் வயிற்றில் இருந்த ஜெல்லை துடைத்து விட்டு, அவளை மெல்ல தூக்கி உட்கார வைத்தான். மனமெங்கும் நிறைந்திருந்த மகிழ்ச்சி அவன் முகத்திலும் தெரிய, அவனை பார்த்து கொண்டேயிருந்தாள் செந்தமிழ்.

அவளை ஹோட்டலுக்கு அழைத்து சென்றவன், தனக்கு அருகில் அமர்ந்திருந்தவளின் முகம் பார்த்து, “உனக்கு என்ன பிடிக்கும் தமிழ்?” என்று மென்மையாக கேட்க, ‘இளா எனக்கு உன்னை தான்டா பிடிக்கும்’ என்றாள் மனதிற்குள்.

பாவம் அவள் மனதில் உள்ளதை அறியாதவன் பதிலுக்காக அவள் முகத்தையே பார்த்திருக்க, “சிக்கன் ஃப்ரைட் ரைஸ்..” என்றாள். ‘அவனுக்காக தான் அவள் அதை கேட்டாள்’ என்று தெரிந்து உதட்டுக்குள் சிரித்தான்.

மட்டன் பிரியாணி, மட்டன் சுக்கா, சிக்கன் ரைஸ் ஆர்டர் செய்தான். உணவு வந்ததும் அவள் இலையில் பரிமாறி, தனக்கும் போட்டுக் கொண்டு சாப்பிட்டான். “இத்தனை வருஷத்துல உனக்குனு பிடிச்சது ஏதாவது ஒன்னாச்சும் இருக்குமே சொல்லு. எனக்கும் உனக்காக ஏதாவது பண்ணனும்னு ஆசையா இருக்கு” என்று இளமாறன் கேட்க,

அவளுக்கு பிடித்தது அவன் மட்டும் தான், அந்த ஒன்றையும் வேண்டாம் என்று சொல்ல வைத்தவனே அவன் தான். செந்தமிழ் பதிலேதும் பேசாமல் இருந்தாள். அவள் கண்களிலிருந்து கண்ணீர் வழிய தலையை குனிந்து கொண்டாள். அவள் கண்ணீரை பார்த்து பதறியவன், “தமிழ் என்னாச்சுடி? ஹேய்.. நான் எதுவும் தப்பா கேட்டுட்டேனா? என்று கேட்க, “ஒண்ணுமில்ல..” என்று கண்ணீரை துடைத்துக் கொண்டாள்.

அவளுக்குள் அவன் ஏற்படுத்திய காயங்களை, சரிசெய்ய முடியவில்லையே என்று நினைக்கும் போது அவனுக்கும் மனம் வேதனையாக தான் இருந்தது.

சாப்பிட்டு முடித்து இருவரும் கிளம்ப, “ஹே.. பொண்ணு நில்லு..” என்றவாறு ஒரு பெண் செந்தமிழுக்கு அருகில் வந்தார். அவரை பார்த்தவள் ‘இது மருந்து கொடுத்த அந்த நர்ஸ் தான’ என்று அடையாளம் தெரிந்து கொண்டாள். “நீதான அந்த ரேவதி கூட வந்த பொண்ணு” என்று அவர் கேட்க, “ஹ்ம்ம்..” என்றாள் தயக்கத்தோடு.

அவளுக்கு அருகிலிருந்த இளமாறனை பார்த்தவர், “எத்தனை மாசம்? குழந்தை நல்லா இருக்கா?” என்று அவளிடம் பொதுவாக கேட்டார். “நான் நர்ஸ், ரேவதியோட தோழியா இவங்களை எனக்கு தெரியும்” என்று அவனிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவர், “இங்க வா..” என்று அவளை கொஞ்சம் தள்ளி அழைத்து சென்றார்.

“ஆமா அன்னைக்கு அந்த மருந்து கொடுத்தியா? ஒர்க் அவுட் ஆகிடுச்சு போல” என்று அவர் சொல்லி சிரிக்க, அவளோ ‘இளமாறன் எதுவும் சொல்வானோ?’ என்று பதட்டத்தில் தான் இருந்தாள். “இப்போ உன் வீட்டுக்காரர் உன்னை நல்லா வச்சுக்கிறாரா?” என்று அவர் கேட்க, ஹ்ம்ம் என்றாள்.

“ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்கீங்களா?” என்று அவர் கேட்க, அமைதியாகவே இருந்தாள். “அப்போ இல்லையா?” என்று அவர் கேட்க, “மாசமா இருக்கேன். அப்போ எப்படி ஒண்ணா இருக்க முடியும்?” என்று சமாளிப்பதற்காக சொன்னாள்.

“ஹையோ மக்கு.. அதான் இத்தனை மாசம் ஆகிடுச்சு.அதெல்லாம் தாராளமா இருக்கலாம். ரெண்டு பேரும் அடிக்கடி ஒண்ணா இருங்க. அப்போதான் குழந்தை பிறக்கும் போது உனக்கு ஈஸியா இருக்கும்” என்று அவர் சொல்ல, புரியாமல் திருதிருவென விழித்தவள், “ஹ்ம்ம்..” என்றாள்.

அவளுடைய குழப்பமான முகத்தை பார்த்தவர் “இப்படிலாம் இரு.. இதெல்லாம் பண்ணு” என்று மேலும் சில அறிவுரைகளை வழங்கினார். அவர் சொல்வதை எல்லாம் நினைத்து பார்த்தே அவளுக்கு வெட்கத்தில் முகம் சிவந்து விட்டது. “ஒரு நூறு ரூபா இருந்தா குடு. ஆட்டோக்கு பணம் பத்தல” என்று அவர் கேட்க,

‘அதான.. என்னடா இந்தம்மா இவ்வளவு பேசுதுன்னு நானும் யோசிச்சேன். ஆனா இப்படிலாம் காசு குடுத்தாலும் நம்ம மேல அக்கறையா இருக்க, அறிவுரை சொல்ல யார் இருக்காங்க?’ என்று யோசித்தவள், அவளுடைய சின்ன பர்ஸில் இருந்து பணத்தை எடுத்துக் கொண்டிருக்க,  இவர்களுக்கு அருகில் வேகமாக வந்த இளமாறன், ஒரு 500 ரூபாய் தாளை அவரிடம் நீட்டினான்.

“இப்போ நாங்க ரெண்டு பேரும் ஒண்ணா சந்தோஷமா இருக்க நீங்களும் ஒரு காரணம், ரொம்ப நன்றி” என்று சொல்லி, அவன் பணத்தை அவரிடம் தர, “நல்லா இருங்க பா.. இந்த பொண்ணை நல்லபடியா பார்த்துக்கோங்க” என்று சொன்னவர் பணத்தை வாங்கி சென்று விட, செந்தமிழ் தான் அதிர்ச்சி குறையாமல் அப்படியே நின்றிருந்தாள்.

காதலாய் வருவாள்💞 

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
1
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்