
அத்தியாயம் 99
நன்றாக தூங்கிக் கொண்டிருந்த லீலா, திடீரென ஏதோ சத்தம் கேட்கவும், ஏற்கனவே இரண்டு முறை நடந்த விபரீதம் நினைவு வர பதறிப் போய் கண் விழித்து, அரக்கப் பறக்க அறையின் மின்விளக்கை ஒளிர்விக்க வர, அதன் அருகே நின்றுகொண்டிருந்த உருவத்தைப் பார்த்து பயந்து பின்னால் சாய அவளைப் பிடித்தபடி அறையில் வெளிச்சத்தைக் கொண்டுவந்தான் செல்வா.
“ஹே ரிலாக்ஸ் நான் தான் லீலா.” செல்வா சொல்லவும் தான் அவளுக்கு சற்றே நிம்மதி.
ஆசுவாசமாக மூச்சுவிட்டவள், “என்ன ஆச்சு, தூங்கலையா நீங்க?” என்று கேட்டுக்கொண்டே மீண்டும் மெத்தையில் வந்து அமர்ந்தாள். அவள் கால்கள் நடுங்கிக்கொண்டிருந்தது. அதைக் கணவனிடம் இருந்து சமார்த்தியமாக மறைத்தாகிற்று என்கிற நிம்மதியுடன் தண்ணீர் குடிக்க ஆரம்பித்தாள்.
அவள் நிதானமாகும் வரை அமைதியாக நின்றுகொண்டிருந்த செல்வா, தன்னைக் குழப்பமாய் பார்த்த மனைவியின் கண்களைப் பார்த்துக்கொண்டே மின்விசிறிக்குண்டான சுவிட்சை அழுத்த, அது சுழல ஆரம்பித்து அதில் இருந்து ரோஜா இதழ்கள் ஒவ்வொன்றாக கீழே விழ ஆரம்பித்து, சில நொடிகளில் பூமழை லீலாவின் மீது கொட்ட ஆரம்பித்தது.
முதலில் என்னவோ ஏதோ என்று பயந்தவள் அடுத்த நொடி அதன் சுகந்தத்தை உணர்ந்து, அந்த பூ மழையில் சந்தோஷமாக நனைய ஆரம்பித்தாள்.
“பிறந்தநாள் வாழ்த்துக்கள் லீலா.” என்ற வண்ணம் மஞ்சள் நிற பூங்கொத்தை அவளிடம் நீட்டினான் செல்வா.
“என்னங்க” என்ற வார்த்தையைத் தாண்டி லீலாவிற்கு எதுவுமே பேச முடியவில்லை. அத்தனை ஆனந்தமாக இருந்தது. இத்தனை வருடங்கள் அம்மா, அத்தை, தங்கைகள், உடன்வேலை செய்தவர்கள் எனப் பலர் பிறந்தநாள் வாழ்த்து சொல்லி இருந்தாலும், கட்டியவனிடம் இருந்து கிடைக்கும் முதல் வாழ்த்தல்லவா?
இணையிடம் இருந்து கிடைக்கும் முதல் பாராட்டு, முதல் வாழ்த்து, முதல் முத்தம் என ஒவ்வொன்றும் காலத்திற்கும் நினைத்துப் பார்த்து சந்தோஷப்படவேண்டிய விஷயம் அல்லவா?
அந்த வகையில், எதிலும் எதையும் பெரிதாக ஆசைப்பட்டு இருக்காத லீலாவிற்கு இந்த நாள் அவள் வாழ்நாளில் மறக்க முடியாத பொன்னாளாக மாறியிருந்தது.
“லீலா இன்னைக்கு உங்க பிறந்தநாள் னு எனக்குக் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் தெரிய வந்தது. அதனால் என்னால இப்போதைக்கு இது மட்டும் தான் ரெடி பண்ண முடிஞ்சது. ஆனா நாளைக்கு நான் பல சர்ப்பரைஸ் ரெடி பண்ணி இருக்கேன். நீங்க கண்டிப்பா அசந்து போயிடுவீங்க.” என்றவனை கண்கள் இனிக்கப் பார்த்தாள்.
“நான் கவனிச்ச வரை உங்ககிட்ட மஞ்சள் கலர் புடவைகள் அதிகம். அது தான் உங்களுக்குப் பிடிச்ச கலரான்னு உறுதியா தெரியாம இதை ரெடி பண்ணிட்டேன்.” என்றவன் அடுத்த வார்த்தை பேசும் முன்னர், அவன் இதழ்களைத் தன் கரம் கொண்டு மூடினாள் லீலா.
“இந்த உலகத்தில் என்னையும் சேர்த்து முக்கால்வாசி பொண்ணுங்களுக்கு தங்க, வைர நகைகளை விட ஆசைப்பட்ட ஒருத்தன் வாங்கிக் கொடுக்கிற ஒரு முழம் மல்லிகைப்பூ பெருசு.
தங்கம், வைரம் யார் வாங்கிக்கொடுத்தாலும் அதுக்கு மதிப்பு ஒன்னு தான். ஆனா பொண்ணுங்க வைக்கும் பூவிற்கு அதை வாங்கிக்கொடுக்கும் நபர்களைப் பொறுத்து மதிப்பு நிர்ணயிக்கப்படும்.” என்க, புருவம் உயர்த்தினான் செல்வா.
“பெரிய ஹோட்டலுக்குப் போய் அங்க பிறந்தநாள் ஏற்பாடு பண்ணி, நிறைய பேர் முன்னாடி பாட்டு பாடி, டான்ஸ் ஆடி, கேக் வெட்டி தனிப்பட்ட இரண்டு பேரோட நெருக்கத்தை அங்க இருக்கிற அத்தனை பேருக்கும் காட்சிப்பொருளாக்கி பெருமைப்படுறதை விட, சொந்த வீட்டில் சொந்த ரூமில் சிரிக்க சிரிக்க பேசுற அந்த ஒரு மணிநேரம் எனக்குப் பெருசு.” என்க, செல்வாவின் முகத்தில் புன்னகை.
“சாதாரண நூல் புடவையோ, பல லட்சம் மதிப்புள்ள பட்டுப்புடவையோ அதை வேறுயார் மூலமோ வாங்கிக்கிட்டு வந்து கொடுக்கிறதுக்குப் பதிலா, நாலு கடை ஏறி இறங்கி தன்னோட விருப்பத்துக்கும், பொண்டாட்டியோட விருப்பத்துக்கும் ஏத்த மாதிரி வாங்கிட்டு வந்து புருஷன் தன்னோட கையாலே கொடுக்கிறது எல்லாம் பெரிய வரம்.
இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொரு மனுஷனோட ரொம்பப் பெரிய சந்தோஷமும் ஏதாவது ஒரு சின்ன பொருளில் தான் இருக்கும். அதை சிலர் உணர்ந்து இருக்காங்க, பலர் உணராம இருக்காங்க.” லீலா சொல்ல,
“நான் உங்களை என்னவோன்னு நினைச்சேன் லீலா. உங்க பிறந்தநாளுக்கு எதை எதை நான் செய்யக்கூடாதுன்னு, என்னோட மனசு சங்கடப்படாம எவ்வளவு அழகா சொல்றீங்க. இதுக்குப் பெயர் தான் வார்த்தை ஜாலமா.” மனதோடு நினைத்துக்கொண்டான் செல்வா.
“நாளைக்கு நீங்க எனக்கு என்னென்ன சர்ப்ரைஸ் கொடுத்தாலும், அது இந்த ரோஜாக்களுக்கு ஈடாகுமான்னு தெரியல.” அனுபவித்துச் சொன்னாள் லீலா.
“இந்த ரோஜாக்கள் தங்க, வைர நகைகளை விட பெருசான்னு எனக்குத் தெரியாது. ஆனா சின்னச் சின்ன விஷயங்களில், அதுவும் நான் பண்ற சின்ன சின்ன விஷயங்களில் சந்தோஷப்பட்டு, அதை ஏதோ இந்த உலகத்தை விட பெருசுன்னு நினைக்கிற என் லீலாவோட குழந்தைத்தனமான மனசு தான் என்னைப் பொறுத்த வரைக்கும் இந்த உலகத்தில் விலை உயர்ந்த ஒன்று.” உணர்ந்து சொன்னான் செல்வா.
அதில் இலயித்தவள் தன்னால் தன்னவனை நெருங்கி அவன் மேல் சாய்ந்து அணைத்தபடி, “அப்ப, இந்த உலகத்தில் நீங்க தான் ரொம்ப பெரிய பணக்காரருன்னு சொல்றீங்க.” என்க, வழக்கம் போல் அவள் சொல்லின் அர்த்தம் புரியாமல் முழிக்க ஆரம்பித்தான் செல்வா.
காதல் பாடத்தில் மருத்துவனுக்கே வைத்தியம் தேவைப்படும் போல என்று தன்னோடு நினைத்துச் சிரித்தாலும் அந்த மக்கு மாணவனைத் தான் அதிகம் பிடித்தது லீலாவிற்கு.
இரவு விளக்கின் வெளிச்சத்தில் தூங்கிக் கொண்டிருக்கும் தன் மனைவியை வைத்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் நாகா. பன்னிரண்டைத் தாண்டி சில நிமிடங்கள் சென்றுவிட்டது தெரிந்த பின்னரும் அவளை எழுப்ப மனம் வரவில்லை அவனுக்கு.
பிள்ளைகள் சுமக்கும் வயிறு கொடுத்த சோர்வு மற்றும் எடுத்துக்கொண்ட மாத்திரை காரணமாக அயர்ந்த உறக்கத்தில் வாய் திறந்த நிலையில் உறங்கிக் கொண்டிருந்தவள் வாயின் ஓரமாக சிறிதளவு எச்சில் வடிந்திருந்தது.
அதைத் தன்னுடைய கைகளால் துடைத்தவன், அவளைப் பார்த்து லேசாக சிரித்தபடி, அவள் நெற்றியில் முட்டினான். “தூங்கும் போது கூட அழகா இருக்கடி. எங்க இருந்துடி வந்த, நானா இதுன்னு எனக்கே இப்பெல்லாம் சந்தேகமா இருக்கு. அவ்ளோ மாறி இருக்கேன். எல்லாம் உன்னால், உனக்காக.
என்னை விட்டுப் போனா தான் நீ நல்லா இருப்பன்னு, எங்க அப்பா முதற்கொண்டு எல்லோரும் சொன்னப்ப கூட, நான் மாறுவேன்னு என்னை நம்பி எப்படி என் கூடவே இருந்த.
ஒருவேளை நான் கடைசி வரைக்கும் மாறாமலே இருந்திருந்தா, உன்னைக் கொடுமைப்படுத்திக்கிட்டே இருந்திருந்தாங்கிற எண்ணம் கொஞ்சம் கூட வரலையா?
நான் மாறுவேன்னு எப்படி உன்னால ஆணித்தரமா நம்ப முடிஞ்சது. ஒருவேளை உன்னோட நம்பிக்கை தான் என்னை இந்த அளவுக்கு மாத்திடுச்சோ.
கடவுள் னு ஒருத்தர் இருக்காரான்னு எனக்குத் தெரியாது. அப்படி ஒருத்தர் இருந்தா நான் அவர்கிட்ட கேட்கிறதெல்லாம் ஒன்னே ஒன்னு தான். நான் இப்பவும், எப்பவும் எதுக்காகவும் உன்மனசு உடையுற மாதிரி எதுவும் பண்ணிடக் கூடாது. அப்படி ஒரு சூழ்நிலையை எனக்கு எப்பவும் அவர் தந்திடக் கூடாது.” மனதோடு உறுதியாய் நினைத்துக்கொண்டு தன்னவளை மீண்டும் அணைத்துக்கொண்டான் நாகா.
நேரங்கள் கடக்க, இராதா இல்லமே இதமான இரவின் இருளில் இலயித்திருக்க, தெய்வாவின் அறையில் மட்டும் நல்ல வெளிச்சசம்.
“என்னங்க மணியைப் பார்த்தீங்களா. இன்னும் அஞ்சு கூட ஆகல. அதுக்குள்ள ஏன் எழுப்புறீங்க.” கொக்கரித்தாள் ருக்கு.
“நாலு மணிக்கே அலாரம் வைச்சேன். என் நேரமோ என்னவோ அது அடிக்கவே இல்லை. யாராவது உன்னையும் என்னையும் பார்த்துட்டா காரியம் கெட்டுப் போகும். சீக்கிரமா போய் குளிச்சிட்டு வா. நாம உடனடியா இங்க இருந்து கிளம்பனும்.” என்றான் தெய்வா.
“இம்சைங்க உங்களோட” என்றவாறே பாத்ரூமிற்குள் சென்றவளை நிம்மதியாக குளிக்கக் கூட விடாமல், “ருக்கு லேட்டாகிடுச்சு சீக்கிரம்.” என்று கதவைத் தட்டிக்கொண்டே இருந்தான் தெய்வா. குளித்து முடித்து வந்தவள் புடவை கட்டிக்கொண்டிருக்க, அவளுடைய குட்டி முடியை டிரையரில் உலர வைக்கும் பணியைச் செவ்வெனே செய்து கொண்டிருந்தான் தெய்வா.
சற்று நேரத்தில் தயாராகி முடித்தாலும் ருக்குவிற்கு கணவனின் அவசரம் என்னவோ போல் இருந்தது. “என்னங்க சாயங்காலம் நாம வீட்டுக்கு வந்திடுவோம் இல்ல.” என்க, “சத்தியம் பண்ணா தான் என்னை நம்புவியா ருக்கு. உன்கூட வெளியே போகணும் னு எனக்கு இருக்கிற ஆசை, உனக்கு இல்லன்னு ஒவ்வொரு முறையும் தோண வைச்சுக்கிட்டே இருக்க. இப்ப என்ன, நாம போகலாமா வேண்டாமா?” காட்டமாகக் கேட்க, ருக்கு தான் இறங்கிப் போக வேண்டியதாகிப் போயிற்று. சற்று நேரத்தில் எல்லாம் தேவையான பொருள்களை எடுத்துக்கொண்டு தங்கள் அறையை விட்டு வெளியே வந்தனர்.
“மணி ஆறு ஆக இன்னும் அரை மணி நேரம் இருக்கு. இப்பவே எதுக்காக இப்படி என்னை அவசர அவசரமா கூட்டிக்கிட்டு போறீங்க. அட்லீஸ்ட் அக்கா எழுந்திரிக்கிறவரைக்கும் வெயிட் பண்ணுங்க சொல்லிட்டுப் போகலாம்.” என்றாள் ருக்கு.
“இப்பவே ரொம்ப லேட் ருக்கு. ஏழு மணிக்கு நமக்கு முக்கியமான வேலை இருக்கு.” பொதுவாகச் சொன்னான்.
“அப்படி என்ன வேலை அதையாவது சொல்லுங்களேன்.” ருக்குவிற்கு கணவனின் நடவடிக்கைகளை நினைக்கவே என்னவோ போல் ஆனது.
“அது நான் உனக்காக ஏற்பாடு செய்திருக்கும் சர்ப்பரைஸ் இதுக்கு மேல என்கிட்ட எதுவும் கேட்காத.” என்ற தெய்வா தங்கள் வீட்டு டிரைவருக்கு அழைத்துக்கொண்டிருந்தான்.
“பெரிய சர்ப்பரைஸ், யாரு கேட்டா இவரோட சர்ப்பரைஸை. இன்னைக்கு எனக்கு பிறந்தநாள் னு நானே வெட்கத்தை விட்டுச் சொல்லிட்டேன். அதுக்கப்புறம் கூட ஒரு விஷ் பண்ண தோணல இந்த மனுஷனுக்கு.
போலீஸ்காரங்கன்னா இதயம் இல்லாத ரோபோவா. இல்லல்ல இவரை ரோபோக்களுக்கு அடுத்து ஏதாவது க்ரியேச்சர் இருந்தா, அந்த லிஸ்டில் தான் சேர்க்கணும். ஏன்னா ஊர் உலகத்தில் ரோபோக்களுக்கு கூட லவ் வந்தாலும் வரும் ஆனா இவருக்கு வராது.
பனை மரத்தில் பாதி வளர்ந்திருக்காரு ஆனா அறிவு பனங்கொட்டை சைஸ்க்கு கூட இல்லையே.” என மானாவாரியாக கணவனை மனதிற்குள் திட்டிக்கொண்டிருந்தாள்.
“ஒருவேளை நான் சொன்னதை மறந்து இருப்பாரோ.” என அவள் மனம் கணவனைக் காப்பாற்றப் பார்க்க, “இல்லையே மறந்திருந்தா, வெளியே போகனும் னு நான் கேட்டது மட்டும் எப்படி ஞாபகம் இருக்கும். இவருக்கு நிச்சயம் தெரிஞ்சிருக்கு.
இருந்தாலும் வேணும் னே அலைக்கழிக்கிறார். என்ன ஆனாலும் சரி. நாம வாயைத் திறந்து நம்ம பிறந்தநாள் னு அவர்கிட்ட சொல்லவே கூடாது. அவரா எப்ப விஷ் பண்றாருன்னு பார்க்கலாம்.” நினைத்தவண்ணம் உர்ரென்று முகத்தை வைத்துக்கொண்டு கணவனோடு காரில் ஏறினாள் ருக்கு.
இவர்களுடைய கார் கோயம்புத்தூர் ஏர்போர்ட் பார்க்கிங் ஏரியாவுக்குள் நுழைய, “என்னங்க இப்ப நாம எதுக்காக ஏர்போட் வந்து இருக்கோம்.” படபடப்பாய் கேட்டாள் ருக்கு.
“ஏன், என்ன, எதுக்குன்னு இத்தனை கேள்விகளுக்குப் பதில் சொன்னா தான் அம்மணி என் கூட வருவீங்களோ.” சரியான நேரத்திற்குள் வந்து விட்டோம் என்ற மமதையில் சீண்ட ஆரம்பித்தான் தெய்வா.
“ஐயா சாமி நான் எதுவுமே கேட்கல. நீங்க முன்னாடி போங்க நான் பின்னாடி வரேன்.” கடுகடுத்த குரலில் சொன்னாள் ருக்கு.
“கோச்சுக்கிட்டியா ருக்கு, சும்மா விளையாட்டுக்கு. நீ படம் பார்க்க ரொம்ப ஆசைப்படுவ இல்ல. இன்னைக்கு நல்ல படம் ஒன்னு ரிலீஸ் ஆகி இருக்கு. அதைப் பார்க்கத் தான் சென்னைக்கு போகப் போறோம்.” என்க, இவன் என்ன பைத்தியமா என்பது போல் தான் பார்த்து வைத்தாள் அவன் அருமை மனைவி.
அவள் பார்வையின் அர்த்தம் புரிந்தவன் அளவாய் புன்னகைக்க, அதில் கணவன் ஏதோ பெரிதாய் செய்ய இருக்கிறான் என்பதைக் கண்டுகொண்டவள், “கோயம்புத்தூர்ல தியேட்டரே இல்லாத மாதிரி இதுக்காக சென்னை கூட்டிட்டுப் போறேன்னு சொல்றீங்களே. உங்களுக்கே இது ரொம்ப மொக்க காரணமா தெரியல.” ஒரு வேகத்தில் மனதில் தோன்றியதை அப்படியே கேட்டுவிட்டாள்.
“இதுக்கு மேல நீ என்ன கேள்வி கேட்டாலும் என்கிட்ட இருந்து பதில் வராது. நான் முடிவு பண்ண இடத்துக்குப் போய் சேர்ந்த பின்னால் பார்த்துக்கலாம் வா ருக்கு.” என்றவண்ணம் கை பிடித்து அழைத்துச் சென்றான் தெய்வா.
“ஊர்மி என்ன இன்னைக்கு சீக்கிரம் எழுந்துட்ட.” நாகா கேட்க, “தெரியலங்க என்னவோ சீக்கிரம் முழிப்பு வந்திடுச்சு.” என்றாள் ஊர்மி.
“பாதகத்தி இப்படிச் சாதிக்கிறாளே. இப்பவாச்சும் பிறந்தநாளைப் பத்தி வாயைத் திறந்து சொல்லத் தோணுதா இவளுக்கு. அழுத்தம் அத்தனையும் அழுத்தம். அவளா வாயைத் திறந்து சொல்ற வரைக்கும் நாம விஷ் பண்ணக் கூடாது. ரோஷத்தில் அவளுக்கு கொஞ்சம் கூட சளைச்சவன் இல்ல இந்த நாகா.” என்று தனக்குள் நினைத்துக் கொண்டவன்,
“ஊர்மி அதான் எழுந்துட்ட இல்ல. ஒரு டீ போட்டு எடுத்துட்டு வாயேன்.” என்க, அவனின் சிவந்த கண்களையும் கடிகாரத்தையும் பார்த்தவள் தனக்குள் என்ன நினைத்தாளோ வெளியே தலையை ஆட்டிவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.
காபி போடுவதற்கான வழக்கமான பாத்திரத்தை எடுத்த போது அதில், ‘இனியவளுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்’ என்று சிறிய இதய வடிவ அட்டை ஒட்டப் பட்டிருந்தது. அதைக் கண்டதும் சின்னப்புன்னகை ஒன்று தன்னால் வந்து ஒட்டிக்கொண்டது ஊர்மிளையிடத்தில்.
“ப்ராடு பாம்பு, இன்னைக்கு எனக்குப் பிறந்தநாள் னு எப்படியோ தெரிஞ்சிக்கிட்டு சர்ப்பரைஸ் கொடுக்க ட்ரை பண்றியா? அது எப்படி வாய் வார்த்தையா சொல்லாம, கார்டு கொடுத்தா எல்லாம் சரியாகிடுமா. நீயா சொல்ற வரைக்கும் இதை நான் பார்த்த மாதிரி காட்டிக்க மாட்டேனே.” என்று நினைத்தவண்ணம் பாலை எடுக்க வேண்டி ப்ரிட்ஜ் அருகே வர அதன் மேல், ‘ஹேப்பி பர்த்டே மை லவ்’ என்று இதய வடிவ காகிதம் ஒட்டப்பட்டிருந்தது.
“பாம்பு கொஞ்சம் கொஞ்சமா கொல்லுதே.” என்று நினைத்தவண்ணம் அந்தக் காகிதத்தை எடுத்தவள், அடுத்து எடுத்த தேயிலை டப்பா, சர்க்கரை டப்பா, நாகாவின் தனிப்பட்ட கப் என அனைத்திலும் வேறு வேறு மொழிகளில் பிறந்தநாள் வாழ்த்தை தாங்கிய காகிதங்கள் கிடைத்துக்கொண்டே இருக்க, ஏற்கனவே வயிற்றில் வளரும் பிள்ளைகளின் புண்ணியத்தில் பூரித்திருந்த ஊர்மியின் முகம், இப்போது அதன் தகப்பனின் செயலினால் இன்னும் பூரிப்படைந்தது.
கணவனின் செயலில் உண்மையிலே கவரப்பட்ட ஊர்மி, உள்ளம் நிரம்பி வழியும் சந்தோஷத்துடன் அறையை நோக்கி நடக்க, மாடிப் படிக்கட்டின் ஆரம்பத்தில் ஒரு ரோஜா ஒட்டி வைக்கப்பட்டிருந்தது. “பார் மை பியாரி பீவி” என்ற வாழ்த்து அட்டையுடன். அதைக் கையில் எடுத்தவளுக்கு முதன் முதலாக ஒரு சந்தேகம் வந்தது.
“நம்ம ஆளுக்கு இந்த அளவுக்கு அறிவு கிடையாதே. ஒருவேளை வேற யாரும் ரெடி பண்ணி வைச்ச சர்ப்பரைஸ் அத்தனையும் எனக்குதான்னு லூசுத்தனமா சந்தோஷப்பட்டுக்கிட்டு இருந்தேனா.” இதை நினைக்கும் போதே ஏதோ ஒருமாதிரி இருந்தது ஊர்மிளாவிற்கு.
“ஆனா இந்த நல்லபாம்பு எப்பவும் இல்லாம ஏன் இன்னைக்குன்னு பார்த்து இத்தனை சீக்கிரமா டீ கேட்கணும்.” என்று தனக்குத் தானே கேள்வி எழுப்பிக்கொள்ள, “ஏன்னா இன்னைக்குத் தான் அவன் சீக்கிரம் எழுந்து இருக்கான்.” பதில் கொடுத்தது மனசாட்சி.
“இன்னைக்கு என் பிறந்தநாளுன்னு அவருக்குத் தெரியுமா தெரியாதா?” ஊர்மி தன்னைப் போல் கேட்டுக்கொள்ள, “நீ தான் சொல்லவே இல்லையே. அப்புறம் அவருக்கு எப்படித் தெரிஞ்சிருக்கும்.” என்று தனக்கும் அவனுக்குமாக சேர்த்து மாறி மாறி யோசித்து குழம்பியவண்ணம் அறைக்குள் வந்தாள் ஊர்மி.
“ஏன்டி ஒரு டீ போட்டு எடுத்துட்டு வர இவ்வளவு நேரமா. ஆமா கையில் என்ன ரோஜாப்பூ.” சாதாரணமாய் கேட்டான் நாகா.
இவ்வளவு நேரமாய் தான் ஆசை ஆசையாய் கண்டுகழித்த அனைத்தும் தனக்கானது இல்லை என்ற கோவம் வர தேநீர் கோப்பை உடையும் அளவிற்கு அழுத்தமான சத்தத்துடன் டேபிளில் வைத்தவள், “இன்னைக்கு என்னோட பிறந்தநாள். நல்ல புருஷனா இருந்தா நான் சொல்லாம இதைத் தெரிஞ்சுக்கிட்டு, எனக்கு பரிசு கொடுக்க முடியலன்னாக்கூட குறைந்தபட்சம் வாழ்த்தாவது சொல்லி இருக்கணுமா இல்லையா?
பொண்டாட்டியோட பிறந்தநாளைக் கூடத் தெரிஞ்சிக்க முடியாத முட்டாளா நீங்க. உங்க அண்ணன், தம்பிங்களில் யாரோ ஒருத்தர் எவ்வளவு அழகா சர்ப்பரைஸ் ப்ளான் பண்ணி இருக்காங்க தெரியுமா?” பொருமலுடன் கேட்டாள் ஊர்மி. அவளுக்கே தன் கோபம் அர்த்தமற்றது என்று புரிந்தது தான். ஆனால் கண நேர ஏமாற்றம் அவளைக் கோபப்படுத்தி இருந்தது.
“ஊர்மி உனக்கு அந்த சர்ப்பரைஸ் நிஜமாவே புடிச்சிருந்ததா?” டீயைக் குடித்துக்கொண்டே கேட்டான் நாகா.
“ஆமா ரொம்பப் பிடிச்சிருந்தது. எனக்காக நீங்க பண்ணி இருக்கீங்கன்னு நினைச்சு அவ்வளவு சந்தோஷப்பட்டேன். ஆனா எனக்கு தான் அதுக்குக் கொடுத்து வைக்கலையே. என் புருஷன் இப்படி மகா மட்டமானவரா, ரசனையே இல்லாதவரா வாச்சிருக்காரே.” தன்னை மறந்து புலம்பினாள் ஊர்மி.
“நான் மகா மட்டமானவன், ரசனையில்லாதவன். அப்படி இருக்க என்னோட சர்ப்ரைஸ் மட்டும் எப்படி உனக்குப் பிடிச்சது.” ஒற்றைப் புருவம் உயர்த்தி நாகா கேட்ட தோரணையில், “அது நீங்க ப்ளான் பண்ணது தானா?” ஆச்சர்யத்தின் உச்சத்திற்கே சென்றாள் ஊர்மி.
“என் பொண்டாட்டி நீ சொல்லலன்னா உன்னோட பிறந்தநாள் எனக்குத் தெரிய வராதா என்ன. சேம்பிளுக்கே இப்படி ஆகிட்டியே. இன்னும் இன்னும் அத்தான் உனக்காக ரெடி பண்ணி இருக்கிற எல்லாத்தையும் பார்த்தா என்ன ஆவ.” என்க,
“நிஜமாவாங்க என்னை வெளியில் கூட்டிட்டு போறீங்களா? எங்கங்க போகப் போறோம்.” ஆசையாகக் கேட்டாள் ஊர்மி.
அவளும் இதற்குத் தானே ஆசைப்பட்டாள். பிறந்தநாள் அன்று கோலாகலக் கொண்டாட்டம் எல்லாம் தேவையில்லை என்றாலும் தான் சொல்லாமல் அந்த நாளை உணர்ந்து கணவன் வாழ்த்து சொன்னால் போதும் என்று அவள் நினைத்திருக்க அது நடந்ததில் அவளுக்கு அத்தனை சந்தோஷம்.
“சென்னைக்குப் போகப் போறோம்.” என்றான் நாகா.
செல்வாவின் அறையில், “பிறந்தநாளைக் கொண்டாடுறதுக்கு எதுக்காக சென்னை வரைக்கும் போகணும். இங்கேயே ஏதாவது ஒரு கோவிலுக்கு போயிட்டு வந்திடலாம் இல்ல.” என சொல்லிக்கொண்டிருந்தாள் லீலா.
அதே நேரம் தேவகி, தர்மா அறையில், “ஏங்க சென்னை ப்ளைட்டுக்கு தான் இன்னும் டைம் இருக்கே. அப்புறம் ஏன் இப்பவே எழுப்புறீங்க. நான் அப்புறமா எழுந்துக்கிறேன் இப்ப தூங்குறேன் என்னைத் தூங்க விடுங்க.” என்று புலம்பினாள் தேவகி.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
8
+1
1
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


அப்படி போடு போடு. எல்லாரும் சென்னைக்கு போறீங்களா