
அத்தியாயம் 97
அன்றைய நாள் இரவில், வழமை போல் மனைவிமாருக்குத் தெரியாமல் அவர்கள் வீட்டு மாடியில் ஒன்று கூடினர் ராஜ் சகோதரர்கள்.
“மை டியர் பிரதர்ஸ், நான் உங்களுக்காக ரொம்ப சந்தோஷமான ஒரு செய்தியைக் கொண்டு வந்திருக்கேன்.” சந்தோஷமாய் ஆரம்பித்தான் தெய்வா.
“எனக்குக் கல்யாணம், எனக்குக் கல்யாணம் னு சொல்லிக்கிட்டே திரியுமே சின்னத்தம்பி பட பைத்தியம் ஒன்னு, அதே மாதிரி நான் தனிக்குடித்தனம் போறேன், தனிக்குடித்தனம் போறேன்னு தண்டோரா போடாத குறையா ஊர் முழுக்க, உலகம் முழுக்க சொல்லி என்ன ஆர்ப்பாட்டம் பண்ண நீ.
ப்ளான் சொதப்பி ட்ரான்ஸ்பர் ஆர்டர் கேன்சல் ஆன கடுப்பில், மூஞ்சியைத் தொங்கப் போட்டுக்கிட்டு, உங்குத்தமா எங்குத்தமான்னு பாட்டு பாடிட்டு இருப்பன்னு பார்த்தா, இப்படி சந்தோஷத்துல குதிச்சுக்கிட்டு இருக்க.
ஒருவேளை உன் பொண்டாட்டி இந்த ஊரில் வேற வீட்ல தனியா இருக்கலாம் னு சொல்லிட்டாங்களா என்ன?” வாய்ப்பே இல்லை என்று தெரிந்தும் கேட்டான் நாகா.
“நீ வேற, அதெல்லாம் கனவில் கூட நடக்காது. இது வேற விஷயம்.” என்ற தெய்வாவின் உற்றாகம் சற்றும் குறையவில்லை.
“நீ இந்த அளவுக்குச் சந்தோஷமா இருக்கன்னா, ஒருவேளை உனக்குக் கிடைச்ச அந்த சந்தோஷமான செய்தியில், நம்ம திட்டத்துக்கு ஏத்த மாதிரி ஏதாவது பெனிபிட் இருக்கா என்ன?” சரியாகக் கணித்துக் கேட்டான் செல்வா.
“பெனிபிட் இருக்காவா எக்கச்சக்க பெனிபிட் இருக்கு. நாம நம்ம பொண்டாட்டிங்களோட மனசில் முழுசா இடம் பிடிக்க இதுவரைக்கும் எத்தனையோ காரியம் பண்ணி இருக்கோம். அதில் பாதி சக்சஸ் ஆயிருக்கு பாதி தோல்வியில் முடிஞ்சிருக்கு. அது எல்லாத்தையும் தாண்டி நமக்கு இப்ப மிகப்பெரிய வாய்ப்பு ஒன்னு கிடைச்சிருக்கு. நாளைக்கு நம்ம பொண்டாட்டிங்களுக்கு பிறந்த நாள்.” தெய்வா இதைச் சொன்னவுடன் மற்ற மூவரின் முகத்திலும் ஒருநிமிடம் சந்தோஷ மின்னல் வெட்டி மறைந்தது.
“நிஜமாவாடா” ஆச்சர்யமாய் கேட்டான் செல்வா.
“சத்தியம் டா, ருக்குவே என்கிட்ட சொன்னா.” அத்தனை கனவுடன் சொன்னான் தெய்வா.
“நம்ம பொண்டாட்டிங்க யாரும் நம்ம கிட்ட சொல்லவே இல்ல பாருங்களேன்.” பரபரப்பானான் தர்மா.
“அவங்க சரியான கேடிங்க டா. எங்க முன்னாடியே சொல்லிட்டா, நாளைக்கு நாம நாலு பேரும் அவங்களை தனித்தனியா எங்கேயாவது கூட்டிட்டுப் போயிடுவோமோன்னு பயந்து போய் சொல்லாம இருந்து இருப்பாங்க.
நல்ல நாளில் நம்ம கூட வெளியே ஊர் சுத்தப் போகாம இருந்தாலும் பரவாயில்லை அக்கா தங்கச்சிங்களை விட்டுப் போகக்கூடாதுன்னு நினைப்பு மூணு பேருக்கும்.” ஊர்மியை நினைத்து பற்களைக் கடித்தபடி சொன்னான் நாகா.
“நான் சொல்ல வந்ததும் அது தான் எனதருமைச் சகோதரர்களே.” தெய்வா சொல்ல, மற்ற மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
“அவங்களைப் பொறுத்தவரைக்கும் நமக்கு அவங்களோட பிறந்த நாள் தெரியாது. அதனால நாளைக்கு சாதாரணமா வெளில கூட்டிட்டு போற மாதிரி போய், அவங்களோட பிறந்தநாளுக்கான சர்ப்ரைஸை கொடுக்கலாம்.
ஒருநாள் முழுக்க அவங்களோட நேரம் நம்மளோட தான் கழியனும். இரவு நேரம் வேண்ணா அவங்க அக்கா, தங்கச்சிங்களுக்குள்ள பேசிக்கட்டும்.” பெரிய மனதுடன் சொன்ன தெய்வா, தானே தொடர்ந்தான்.
“நாளைக்கு நாம செய்யப் போற செயலில், நம்ம பொண்டாட்டிங்க மனசில் சின்ன புள்ளி அளவு கூட இடைவெளி இல்லாமல் நாம முழுசா நிறைஞ்சிடணும்.” இப்போதே அது நடந்துவிட்டது போல் அத்தனை பெருமையாகச் சொன்னான் தெய்வா.
“சூப்பர் தெய்வா, நீ சொல்றது உண்மை தான். அவங்க மனசில் முழுசா இடம் பிடிக்க, நாம எந்தளவு அவங்களை நேசிக்கிறோம் னு அவங்களுக்குப் புரியவைக்க நாளைக்கு நல்ல ஒரு சான்ஸ். இதெல்லாம் நடக்கிறதுக்காகத் தான் உன்னோட ட்ரான்ஸ்பர் கேன்சல் ஆச்சோ என்னமோ.” அனுபவித்துச் சொன்னான் செல்வா.
“அட ஏன்டா நீ வேற. ஏற்கனவே மனசெல்லாம் நொந்து போய் இருக்கு. அதைக் கொத்தி கொத்தி இன்னும் புண்ணாக்காத. எப்படி ஒரு நல்ல சான்ஸ் அதுவும் தானா என் கையில் வந்து விழுந்தது. அதைப் போய் கோட்டை விட்டுட்டேனே.
எல்லாத்துக்கும் காரணம் அந்த ஒடிஞ்சு விழுந்த மரக்கிளையும், அங்க நின்னு சண்டை போட்டுக்கிட்ட அந்த இரண்டு பக்கிகளும் தான். அவனுங்க மட்டும் என் கையில கிடச்சானுங்க அப்படியே கொன்னுடுவேன்.” தெய்வா சொல்ல இதை மறைந்து நின்று கேட்டுக் கொண்டிருந்த அரசுவிற்கு ஒரு நிமிடம் பக்கென்றது.
“அடப்பாவி உனக்குள்ள இவ்வளவு கொலைவெறி இருக்கா. இது எல்லாத்துக்கும் காரணம் நான் தான்னு தெரிஞ்சா என்னை என்ன பண்ணுவ. ஆண்டவா நீ தான் இந்த அரசுவைக் காப்பாத்தணும்.” நின்ற இடத்தில் இருந்து அரசு வேண்டிக்கொண்டிருந்த நேரத்தில்,
“சொல்ல வேண்டியதைச் சொல்லிட்ட தானே தெய்வா, ரூமுக்கு போய் நாளைக்கு என்ன பண்றதுன்னு யோசிக்கிறேன் நான்.” என்று நகரப் பார்த்தான் செல்வா.
அவன் கரம் பிடித்து நிறுத்தி, “தூங்குற உன் பொண்டாட்டியை சைட் அடிக்கத் தானே இத்தனை வேகமா போற. ஒன்னும் தேவையில்லை. கொஞ்ச நேரம் இங்கேயே இரு.” தெய்வா தனக்குத் தானே போட்டு வைத்திருந்த பலகட்ட கட்டளைகளையும் தாண்டி அவன் பொறாமை வெளியே வந்துவிட்டது.
“அப்ப அன்னைக்கு செல்வா சொன்னது உண்மை தான் போல. லீலா அண்ணியை அவன் சைட் அடிச்சா உனக்கு ஏன்டா காந்துது.” நாகா சிரிக்க,
“இந்தக் கொடுமையெல்லாம் அனுபவிக்க வேண்டாம் னு தான் தனியா ஓடிடலாம் னு நினைச்சேன். என் கிரகம் இப்படி மொத்தமா மாட்டிக்க வேண்டியதாப் போச்சு.” உள்ளுக்குள் புலம்பியபடி வெளியே கம்பீரமாக நிமிர்ந்து நின்றான் தெய்வா.
“கெத்து, கெத்து” இது தானே தெய்வா இப்ப உன்னோட மைண்ட் வாய்ஸ். நான் சரியா கேட்ச் பண்ணிட்டேனா?” தர்மாவும் கிண்டலில் இறங்கினான்.
“என்னைக் கிண்டல் பண்றதை விட்டுட்டு அடுத்து என்ன செய்யலாம் னு யோசிக்கலாம் வாங்க. நாம ஹனிமூன் போகும் போது திட்டம் போட்டு தனித்தனி ஊருக்குப் போன மாதிரி, நாளைக்கும் தனித்தனி இடத்துக்கு தான் கூட்டிட்டு போகனும்.” சீரியஸாக முகத்தை வைத்துக்கொண்டு சொன்னான் தெய்வா.
“ஆமா இது ரொம்ப முக்கியம். இல்லன்னா அக்கா இங்க பக்கத்தில் தான் இருக்காங்க. நான் அக்கா இல்லாம கேக் வெட்ட மாட்டேன் அது இதுன்னு ஏதாவது அடம் பிடிச்சாலும் பிடிப்பாங்க.” மனைவியை மனதில் நினைத்தபடி சொன்னான் தர்மா.
“என் பொண்டாட்டி ருக்கு ஒரு சரியான சினிமா பைத்தியம். அவளை நான் மால் ல தியேட்டருக்கு கூட்டிட்டுப் போறேன். தயவு செஞ்சு யாரும் அந்த பக்கம் வந்துடாதீங்க சரியா?” தெய்வா முதல் ஆளாக ஆஜரானான்.
“லீலா ரொம்ப நாளா ஒரு கோவிலுக்கு போகனும் னு சொல்லிக்கிட்டு இருந்தாங்க. நான் அங்க கூட்டிட்டு போறேன்.” என்றபடி செல்வா முன்வந்தான்.
“என் பொண்டாட்டி ஊர்மிக்கு எந்த இடம் ரொம்ப ரொம்ப சந்தோசத்தைக் கொடுக்கும் அப்படின்னு எனக்குத் தெரியும். அதனால நான் அவளை அங்க கூட்டிட்டு போய்க்கிறேன்.” நாகா சூட்சுமமாய் சொன்னான்.
“டேய் என்ன இடம் னு தெளிவா சொல்லிடு. இல்லன்னா யாராவது பிளான் மாறி அங்க வந்திடப் போறோம்.“ தெய்வா பதற,
“எல்லாம் அவங்க நாலு பேரும் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்த இடம் தான்.” சொன்ன நாகா மற்றவர்கள் அனைவரும் தன்னைப் பார்க்கும் பார்வை தாங்காது இடதுகையால் பிடறி முடியை வருடிக்கொண்டான்.
“நாகா நான் உன்னை என்னவோ நினைச்சேன் டா. ஆனா உனக்குள்ள இப்படி ஒரு லவ்வர் பாய் இருந்திருக்கான் பாரேன்.” தர்மா சொல்ல, வெட்கச் சிரிப்பு வந்தது நாகாவின் முகத்தில்.
“உண்மை நாகா, இதைச் செஞ்சா கண்டிப்பா உன் மனைவி மனசு நிறைஞ்சிடும்.” உணர்ந்து சொன்னான் செல்வா.
“நாகா உன் பொண்டாட்டி கர்ப்பமாக இருக்காங்க தானே. அவங்களுக்கு எதுக்கு அவ்வளவு தூரம் அலைச்சலைக் கொடுக்கிற. பக்கத்தில் எங்கேயாவது போயிட்டு வா. நான் என் பொண்டாட்டியை அவங்க வீட்டுக்கு கூட்டிப் போயிட்டு வரேன்.” சைடு கேப்பில் சிந்து பாட நினைத்தான் தர்மா.
நால்வரில் பொறுமையானவன், அமைதியானவன். அடுத்தவர் பக்கம் இருந்து யோசித்து செயல்படுபவன் அவனே என்றாலும், அவன் மூன்று அண்ணன்களுக்குத் தம்பி தானே. அந்த வகையில் அண்ணன்கள் மத்தியில் தர்மாவின் விளையாட்டு குணம் வெளியே வந்தது.
“இது நல்லா இருக்கே. அந்த ஐடியா எனக்குத் தான் முதன்முதலில் வந்துச்சு. அதனால அந்த ப்ளான் எனக்குத் தான் சொந்தம். நான் என் பொண்டாட்டியை கூட்டிகிட்டு அங்க தான் போவேன்.” அடம்பிடித்தான் நாகா.
“என்ன, இப்ப என்னங்கிறேன். இங்க பார் அந்த வீடு உன் பொண்டாட்டிக்கு மட்டும் சொந்தமான வீடு கிடையாது. என் பொண்டாட்டிக்கும் அது தான் வீடு. அதை எப்பவும் ஞாபகத்தில் வைச்சிக்கோ.” சீண்டினான் தர்மா.
“டேய் என்ன சின்னப் பசங்க மாதிரி அடிச்சுக்கிட்டு. தர்மா, நாகா சொன்னது தான் நியாயம். அவன் தான் முதலில் இந்த யோசனையைச் சொன்னான். அவனுக்கு அவன் பொண்டாட்டியைப் பத்தி அதிகமாவே தெரிஞ்சிருக்கு. அதனால் தான் அவன் வேற எதைப் பத்தியும் யோசிக்காம முதலிலே அந்த வீட்டைப் பத்தி சொன்னான்.
அவன், அவன் பொண்டாட்டியைத் தெரிஞ்சு வைச்சிக்கிட்ட அளவுக்கு நாம நம்ம பொண்டாட்டிங்களைப் பத்தி தெரிஞ்சு வைச்சுக்கலையோ என்னவோ.” நியாயம் பேசினான் செல்வா.
“அது எப்படி அந்த வீடு ஞாபகம் வரலன்னா எனக்கு என் பொண்டாட்டியைப் பத்தி தெரியாதுன்னு அர்த்தமா. எனக்கு என் பொண்டாட்டி ருக்குவைப் பத்தி நல்லாத் தெரியும்.” தெய்வா சண்டைக்கு வந்தான்.
“ஆனா அவளோட ஆழ் மனசு ஆசையைப் பத்தி உனக்குக் கொஞ்சம் கூட கவலை இல்லை. நீ எல்லாம் என்னடா அவ மேல பாசம் வைச்சிருக்க.” உள்ளுக்குள் நினைத்துக் கொண்டான் அரசு.
“தர்மா நீ வேற ஏதாவது முடிவு பண்ணு.” செல்வா சொல்ல, பேச்சுக்கு கூட மறுக்கவில்லை வடிவேலுவின் கடைக்குட்டி.
“இல்ல இவ்வளவு சடனா எனக்கு எதுவும் தோணல. அதான் நாம நாலு பேரும் வாட்ஸ்அப் குரூப்பில் கனெக்ட்டா இருக்கோமே. நைட்டு அந்த குரூப்ல டெக்ஸ் பண்றேன்.” என்றான் தர்மா.
“அடப்பாவிங்களா எனக்குத் தெரியாம எப்படா வாட்ஸ்ஸப்பில் குரூப் எல்லாம் ஓபன் பண்ணீங்க. அந்தளவுக்கு தேறிட்டீங்களா நாலு பேரும். சபாஷ். ஆனா என்னை சேர்த்துக்காம விட்டுட்டீங்க இல்ல. பார்த்துக்கிறேன்.” என்று சிரித்துக்கொண்டான் அரசு.
நால்வரும் நாளைய நாளை எப்படி ஆரம்பிக்கலாம் என்னவெல்லாம் செய்யலாம் என்று யோசித்தவாரே அங்கிருந்து கிளம்ப, இருளில் ஒளிந்திருந்த அரசு அவர்களின் கண்களில் படாமல் இன்னும் இருளில் ஒளிந்து கொண்டான்.
அவர்கள் கடந்து சென்ற நேரத்தில் அரசுவின் கை பட்டு காக்கைகளுக்கு சாதம் வைப்பதற்காக வைத்திருந்த தட்டு கீழே விழுந்து சத்தம் எழுப்பிவிட, நாகா திரும்பி வந்து பார்த்தான். அந்த நேரம் பூனை ஒன்று தாவிக்குதித்து ஓட, தலையாட்டியபடி சென்றுவிட்டான் நாகா.
நல்லவேளை வக்கீல் வண்டுமுருகன் வந்தான். இதுவே ஆபீஸர் துரைசிங்கம் வந்திருந்தா கையும் களவுமா மாட்டி இருப்பேன். போயிட்டானுங்களா வடிவேலு நாலு திசையில் தவம் இருந்து பெத்த நாலு பேரும்.
“ஆனா ஒன்னு, நீங்க என்ன வேண்ணா பண்ணுங்க டா. வாழ்க்கையோட மிகப்பெரிய பாடம் என்னன்னு நாளைக்கு இராத்திரி நான் உங்களுக்குப் புரிய வைக்கிறேன்.” என்று உள்ளுக்குள் நினைத்துக் கொண்டான் அரசு.
பெண்களின் பிறந்ததினத்தை வைத்து மிகப்பெரிய திருவிளையாடல் விளையாட சூத்திரதாரி அரசு நினைத்திருக்கையில், ராஜ் சகோதரர்களால் அதை மாற்றிவிட முடியுமா என்ன.
தங்களுடைய அறையில் ஏதேதோ நினைத்தவண்ணம் சிரித்துக் கொண்டிருந்த செல்வாவிடம், “என்னங்க இன்னிக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கீங்க போல. முகம் எல்லாம் பூரிச்சு போய் இருக்கு.” கேட்டாள் லீலா. உறங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தாள்.
“இன்னைக்கு நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் லீலா அதனால் தான் முகம் பூரிப்பா இருக்கு. ஒன்னு பண்ணலாமா, நாளைக்கு நீங்க, நான் இரண்டு பேரும் கொஞ்சம் வெளியில் போகலாமா.” செல்வா கேட்க, லீலா சங்கடமாகத் தயங்கினாள்.
“நாளைக்கு உங்களுக்கு ஹாஸ்பிடல் இருக்குல்ல.” சமாளிக்க நினைத்து எதையோ கேட்டு வைத்தாள்.
அவள் நிலை உணர்ந்து புன்னகைத்துக் கொண்டவன், “ஹாஸ்பிடல் கிடக்குது, இன்னைக்கும் நாளைக்கும் நாளை மறுநாளும் அது அங்கேயே தான் இருக்கும். ஆனா நமக்கான பொன்னான நேரம் அப்படியே இருக்குமா என்ன. நாளும் பொழுதும் கடந்து போய்க்கிட்டே தானே இருக்கு.” என்க, கைகளைப் பிசைந்தபடி அவனைப் பார்த்தாள் அவள்.
“நாமளும் எத்தனை நாள் தான் இப்படி ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பார்த்துட்டே இருக்கிறது. நம்மளும் எல்லா கணவன் மனைவி மாதிரி அந்நியோன்யமா இருக்கனும் னு ஆசையா இருக்கு.” என்க, பட்டென்று அவனை நிமிர்ந்து பார்த்தாள் லீலா.
“எனக்குத் தெரிஞ்ச வரைக்கும் இந்த வீட்டில் இன்னும் இடைவெளியோட சுத்திக்கிட்டு இருக்கிறது நாம மட்டும் தான்.” என்க, லீலாவின் கன்னங்கள் சிவந்தது.
“வீட்டுக்கு மூத்தவங்களாப் பிறந்ததாலும், பொறுப்பான பதவியில் இருக்கிறதாலும் தானோ என்னவோ நம்ம இரண்டு பேருக்கும் பொறுப்பு கொஞ்சம் அதிகமாவே இருக்கு. அந்தப் பொறுப்பு பொறியல் தான் நமக்கு நடுவுல இடைவெளியா இருக்குன்னு நினைக்கிறேன்.
நம்ம கொஞ்சம் மனதளவில் நெருங்கலாம். அப்பதான் உடலளவில் நெருங்க முடியும்.” செல்வா இதைச் சொன்னவுடன் முகம் சிவந்து தலை குனிந்தாள் லீலா.
தனக்கான அவளின் வெட்கத்தை இரசித்தாலும் அவளைத் தன்னுடன் சகஜமாகப் பேச வைக்க நினைத்து, “லீலா எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம். உங்க தங்கச்சிங்க மூணு பேருக்கும் ருக்மணி, ஊர்மிளா, தேவகின்னு புராணக்கதைகளில் வரும் பெண்களோட பெயர் வைச்சிருக்கும் போது, உங்களுக்கு மட்டும் லீலாவதின்னு எப்படி உங்க அம்மா பேரு வைச்சாங்க.” நெடுநாள் சந்தேகத்தை கேட்டான்.
இதைக் கேட்டதும் பழைய நினைவுகளில் லேசாக சிரித்துக் கொண்டாள் லீலா. “ஹேய் சிரிக்கிறீங்க, அப்போ உங்க பேருக்குப் பின்னாடி ஏதோ ஒரு ப்ளாஷ்பேக் இருக்கு அப்படித்தானே.” கேட்ட செல்வாவிற்கு இப்போது ஆர்வம் அதிகமானது.
“பெரிய ப்ளாஷ்பேக் எல்லாம் இல்லைங்க. எங்க பொன்மணி அத்தை சரியான சீரியல் பைத்தியம். அவங்களுக்கு விருப்பமான சீரியரில் விருப்பமான கதாபாத்திரத்தோட பெயர் லீலா.
கதைப்படி அந்தப் பொண்ணு லவ் பண்ணவரை விட்டுட்டு, இன்னொருத்தனைக் கல்யாணம் பண்ணிப்பாங்க. ஆனா அவன் சரியான சந்தேக பிராணி. சந்தேகப்பட்டு அந்தப் பொண்ணை இல்லாத கொடுமை எல்லாம் பண்ணுவான். டிவியில் அந்த பொண்ணு அழுகுதோ இல்லையோ, அதைப் பார்த்து பார்த்து எங்க அத்தை தினமும் அழுவாங்க.
எங்க அம்மா வயித்துக்குள்ள நாங்க இருந்தப்போ நடந்த கூத்து இதெல்லாம். அப்பவே அத்தை அடிக்கடி சொல்லுவாங்களாம். உன்னோட பிள்ளைங்களில் ஒரு பிள்ளைக்கு லீலான்னு பேரு வை. அந்த லீலா வாழாத சந்தோஷமான வாழ்க்கையை இந்த லீலா வாழட்டும் னு.
எங்க அத்தையோட அந்த ஆசையை நிறைவேத்த தான் எனக்கு லீலாவதின்னு பேரு வைச்சிருக்காங்க எங்க அம்மா.” சொல்லி முடித்த லீலா எதையோ யோசித்து தாராளமாகப் புன்னகைத்தாள்.
“அப்ப அந்த சீரியலில் வர லீலா கேரக்டர் மாதிரி தான் நீங்களுமா. ஏன் கேட்கிறேன்னா நீங்களும் தான் வேற ஒருத்தரை லவ் பண்ணிட்டு என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க.” செல்வா சிரிப்புடன் சொல்ல,
“ஹலோ என்ன ஒரு சின்ன திருத்தம். நான் ஒன்னும் கைலாஷை லவ் பண்ணல. கைலாஷ் தான் என் பின்னாடி சுத்திக்கிட்டு இருந்தார்.” வேகமாய் பதில் வந்தது லீலாவிடம் இருந்து.
“ஹேய் சாரி சாரி நான் சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்.” என்றபடி சரணடைந்தான் செல்வா.
“ஆனா ஒருவிதத்தில் நீங்க சொன்ன மாதிரி அந்த லீலாவுக்கும், இந்த லீலாவுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு. அந்த சீரியலில் அந்தப் பொண்ணு லவ் பண்ண ஆளோட பெயர் செல்வா.” என்றுவிட்டு அவன் கண்டுபிடிக்கும் முன்னர் அறையை விட்டு வெளியே வந்துவிட்டாள் லீலா. மனைவி சொல்லிச் சென்றதின் சரியான அர்த்தம் புரியாமல் முழித்துக் கொண்டிருந்தான் செல்வா.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
4
+1
1
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


செல்வா நீ இவ்ளோ டியூப்லைட்டா இருக்கக் கூடாது🤣 பொண்டாடிகளை பிரிக்கிறேன்னு இவங்க ஒண்ணு சேர்ந்துட்டாங்க.