
வசந்த் ,நிவேதாவிடம் “உங்க அம்மாவுக்கு தெரியுமா?” என்று கேட்க .
நிவி திருதிருவென முழித்து கொண்டு இருந்தாள்.
அவள் முழித்துக் கொண்டிருப்பதிலேயே உண்மை வெளிப்பட்டது. அவள் அம்மாவுக்கு தெரியாது என்பதைப் புரிந்த வசந்த், வார்த்தைகளை விழுங்கிக் கொண்டு அமைதியாக நின்றான்..
இதயம் பதற, முகம் வெளிறி தெரியாது என்றாள்..
மேற்கொண்டு எதுவும் பேசவில்லை அவன்..அப்படியே, அன்றைய பொழுது கழிந்தது.
நிவேதா வசந்த்க்கு திருமணமாகி மூன்று மாதங்கள் ஆகி இருந்தது.
மூன்றாவது மாத தொடக்கத்திலேயே தாலி பிரித்து கோர்த்து இருந்தார்கள்.
தாலி பிரித்து கோர்த்த அன்றே இருவரும் தனியாக சமையல் செய்யத் தொடங்கி விட்டார்கள்.
அதுவரை வசந்த்தின் அண்ணன் அண்ணியுடன் இருந்தார்கள் .
வசந்தின் அம்மாவிற்கு வசந்த் திருமணத்தில் விருப்பமில்லை என்பதால் வசந்தின் அம்மா வசந்தா இருவரிடமும் பேசுவதில்லை.
ஆனால் வசந்தாவிற்கு வசந்த் என்றால் அவ்வளவு பிரியம் .தனது மகன் தனக்கு விருப்பமில்லை என்று சொல்லியும் ஒரு பெண்ணை திருமணம் செய்து இருக்கிறான் என்ற கோபம் அவருக்கு நிறையவே இருந்தது .
அவர் இல்லாமலே இந்த திருமணமும் முடிந்திருந்தது .
இந்த மூன்று மாதத்தில் நிவேதாவாக தனது மாமியாரிடம் சென்று பேச முயற்சி செய்தாள்..முதலில் ஒதுக்கம் காண்பித்தவர் பிறகு, சிறிய பெண் அவள் என்ன செய்வாள் என்று யோசித்தவர் அவளிடம் ரொம்ப பேசவில்லை என்றாலும் மேலோட்டமாக பேச செய்தார்.
தாலி பிரித்து கோர்ப்பதற்கு தேவையான அனைத்தையும் முன் நின்று நிவேதா மாமியார் வசந்தா செய்ய அனைத்தும் நன்றாக முடிந்தது.
ஊடலும் கூடலுமாக நிவேதா, வசந்த் வாழ்க்கை சென்று கொண்டிருந்தது.
தினமும் காலேஜ் சென்று வந்தாள்.
அவ்வப்போது எங்காவது வசந்த் மாலை வேளையில் நிவேதா காலேஜ் விட்டு வந்த பிறகு வெளியே அழைத்துக் கொண்டு செல்வான்.
ஒரு சில நேரங்களில் படத்திற்கு அழைத்து செல்வான். வீட்டில் உள்ளவர்கள் புலம்பினாலும் காதில் வாங்கிக் கொள்ள மாட்டான் .
நிவேதா திருமணம் ஆனா புதிதில் வசந்திடம் நான் படிக்கணும் என்று கேட்டிருக்க.
அவள் எதற்காக கேட்கிறாள் என்பதை புரிந்து கொண்ட வசந்த் கொஞ்ச நாள் கழிச்சு குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்று கூறியிருந்தான் .
ஆனால், திருமணம் ஆகி நான்காவது மாதம் தொடங்கியிருந்த நிலையில் வசந்த் ஒரு நாள் இரவு வேளையில் நிவேதா விடம் ,”அம்மா சுத்தமாக என் கிட்ட பேசறதே இல்லை டி “என்று கவலையாக சொன்னான்.
“நீங்க போய் பேசினா என்ன? உங்க மேல தானே தப்பு.. அவங்களா உங்க கிட்ட வந்து பேசணும் என்று நினைக்கிறீங்களா? “என்று கேட்டு இருந்தாள்
அவனிடம் கேள்விக்கனையை தொடுத்து விட்டு, அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் .
“நான் உன்னை காலேஜ் அனுப்புவேன் வேதா. என் மேல நம்பிக்கை இல்லையா ?”என்று கேட்டான்.
அவன் பேசுவதன் நோக்கம் புரியாமல் அமைதியாக இருந்தாள்.
“குழந்தைப் பெத்துகலமா டி” என்றான்.எங்கு அவள் வேண்டாம் என்று சொல்வாளோ? என்று எண்ணி ..
நிவேதா அவனைப் பார்த்து மென்னகைப் புரிந்தவள் , “நான் உங்களை ஒண்ணுமே சொல்லலையே…
ஆனா நான் படிக்கணும்.அதுக்காக உங்க மேல நம்பிக்கை இல்லாமல் இல்லை”..
“உண்மையவே நீ படிக்கிறதுக்கும் காலேஜ் போறதுக்கும் நான் தடையா இருக்க மாட்டேன் டி. யார் போக வேணாம்னு சொன்னாலும் கேட்க மாட்டேன் . உன்ன அனுப்பி வைப்பேன் “என்றான் உறுதியாக..
அவன் மீது அவளுக்கு நம்பிக்கை மட்டும் இல்ல ,காதலும் பெருக்கெடுத்து ஓடியது.
இந்த நான்கு மாதத்தில் அவனை சின்ன சின்ன விஷயத்திலும் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறாள் .
அவளது மாமியார் கூட இவளிடம் பேச செய்தாலும் ,அவ்வப்போது ஊரில் உள்ளவர்களிடம் இவளால்தான் என் மகன் என்னை விட்டு போயிட்டான்.
என் மகனை இவள் கைக்குள்ள போட்டு முடிஞ்சு கிட்டா முந்தானையில் முடிஞ்சிட்டா என்ன பண்ணா என்று தெரில பின்னாடியே சுத்தறான் என்று சொல்லியது எல்லாம் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறாள்.
அதன் பிறகு ,தனது அண்ணன் அண்ணியுடன் சாப்பிட மட்டும் ஒரே வீட்டில் இருந்த வசந்த் நிவேதாவுக்கு மூன்றாவது மாதம் தாலி பிரித்து கோர்க்கும் போது தனியாக வந்து விட்டார்கள்.
வசந்த் அண்ணன் ரஞ்சித் கூட தாலி பிரித்து கோர்ப்பதற்கு மூன்று நாட்களுக்கும் முன்பு,” கல்யாணத்தை எடுத்துக் கட்டி தானே செஞ்சோம் ஏன் நாங்க பாத்துக்க மாட்டோமா ?”என்று கேட்கும் பொழுது கூட ..
“தனியா இருக்கிறது தான் நல்லது. சண்டை வந்து முகத்தை திருப்பிக் கொண்டு பேசாமல் பிரிந்து செல்வதை விட.. சுமூகமான முறையில் பேச்சுவார்த்தையுடன் பிரிந்து இருப்பது நல்லது..உறவுகளோடு அருகில் இருந்துக் கொண்டே என்னன்னா என்னன்னு தனித்தனியாக வாழலாம் அதான் எல்லாருக்குமே நல்லது .. நம்ப உறவும் ரொம்ப நாளைக்கு நிலைச்சு நிக்கும்…”என்றான் மனதில் எதையோ யோசித்து, தனது மனைவியை நினைத்து மட்டும் தான் இம்முடிவை எடுத்தான்.
ஏனென்றால், அவனது குடும்பத்தை பற்றி அவனுக்கு தெரியாததா ? நிவேதாவிற்கு தெரிந்து விட போகிறது.
நிவேதா கூட எதற்காக தனிக்குடித்தனம் என்று கேட்டிருந்தாள். ஆனால் வசந்த் தான் ஒன்றும் இல்லை அதெல்லாம் நீ அங்க இருந்தால் நிறைய வேலை செய்யணும்.
இங்க நம்ப தனியா இருந்தா வேலை கம்மியா இருக்கும் நீ வேலை செஞ்சுட்டு காலேஜ் போக ஈசியா இருக்கும் என்று ஒரே வார்த்தையில் முடித்துக் கொண்டான் .
ஆனால் ,அதற்கான காரணத்தை நிவேதா அறிவாள் .
கல்யாணம் ஆன புதிதில் வசந்தின் அண்ணி இளவரசி என்னவோ நன்றாக தான் பார்த்துக் கொண்டாள் .
போகப்போக வீட்டில் காய்கறி இல்லை ,அரிசி இல்லை ,அது இல்லை இது இல்லை என்று சொல்ல அவளுக்கு ஆரம்பத்தில் ஒன்றும் புரியவில்லை.
இரு குடும்பமாக இருக்கும்போது தனது கணவன் மட்டும் அனைத்தையும் வாங்கி போட வேண்டுமா? என்பது போல் ஜாடை மாடையாக பேச..
எதற்காக இப்படி பேசுகிறார்கள் என்று எதுவும் புரியாமலே நிவேதா ஆரம்பத்தில் தனது கணவரிடம் இதை அனைத்தையும் சொல்லி இருந்தாள் .. இளவரசி பேசுவதை முழுமையாக சொல்லவில்லை என்றாலும் , அங்கு நடப்பதை அப்படியே கூறாமல் இது இது வாங்கிக் கொண்டு வருமாறு கேட்டுக் கொண்டாள்..
“நீங்களும் இனி வீட்டுக்கு தேவையான எல்லா பொருளையும் வாங்கி தாங்க.. நாமளும் அங்க தான சாப்பிட்டு இருக்கோம்”
“சரி விடு நான் பார்த்துக்கிறேன்!” என்று வசந்த் சொல்லி இருந்தான்.
அடுத்தடுத்து காய்கறிகளையும், அரிசியும் வாங்கிக் கொண்டு வீட்டில் வந்து வைக்க.
வசந்தின் அண்ணன் ரஞ்சித் வசந்திடம்,” என்ன டா இது பழக்கம் ?ஒண்ணா ஒரே வீட்ல இருக்கோம்.. நீ தனியா அரிசி, காய்கறி எல்லாம் வாங்கிட்டு வர …இது என்ன புது பழக்கம் ? பிரிச்சி பாக்குறியா?” என்றான் கோபமாக..
“இவ்வளவு நாள் வாங்கி போட்ட எனக்கு தெரியாதா ? பொருள் இல்லனா என்கிட்ட சொல்லி இருந்தா நான் வாங்கிட்டு வரப் போறேன்..” என எகிறினான் ரஞ்சித்.
“அப்படியா? அப்புறம் ஏன் டா அண்ணா அரிசி காலி ஆகிடுச்சு, அரிசி வாங்கணும் ,காய்கறி இல்ல அது வாங்கணும் ..இது இல்ல இது வாங்கனும்னு என்றெல்லாம் பேச்சு வருது” என்று தனது அண்ணன் முன்பு கேட்டு நின்றான் வசந்த்.
ரஞ்சித்திற்கு ஒன்றும் புரியாமல் என்ன அரிசி காலி ஆயிடுச்சா ?என்று தனது மனைவியை திரும்பிப் பார்த்தான் .
அவளோ,”இ..இல்ல கல்யாணத்துக்கு வாங்கி இருந்த அரிசி மூட்டை மீதி இருக்கிறதை நான் பார்க்கல.. அது உள்ள ரூமில் இருந்துச்சு.. அதான், காலையில அரிசி இல்லைன்னு சொல்லிட்டு இருந்தேன் நிவேதா கிட்ட …உள்ள இருக்கிறது தெரியாம நான் அரிசி காலி ஆயிடுச்சுன்னு சொல்லிட்டேன் ”
என்றாள் லேசான மிரட்ச்சியுடன் இளவரசி ..
தனது மனைவியை சினம் பொங்க..பார்த்து விட்டு ரஞ்சித் வசந்தை நேருக்கு நேராக பார்த்து…”அதனால உன் பொண்டாட்டி உன்கிட்ட போட்டு கொடுத்துட்டாளா ? இத்தனை நாளா ஒத்துமையா ஒரே வீட்டில ஒருத்தவங்க பொருள் வாங்கி போட வாழ்ந்துட்டு இருந்த இடத்துல தனி தனியா பிரிச்சு பாக்குறீங்களா ?” என்றான் கோப விழிகளுடன்.
அவனது வார்த்தைகளின் தாக்கத்தில் கோபம் வெடிக்க, “ஆமாண்டா… ஆமா” என வசந்த் சத்தமிட்டான் ..
“அரிசி மூட்டை உள் ரூம்ல இருக்கும் போதே..அரிசி இல்லைன்னு சொன்னவங்க நல்லவங்க தான். அவ கிட்ட சொன்ன விஷயத்தை என்கிட்ட வந்து சொன்ன என் பொண்டாட்டி கெட்டவ தான் ..! ஒத்துமையா இருந்தா குடும்பத்தை பிரிக்க வந்தவ தான்.கெட்டவளாவே அவ இருந்து விட்டு போகட்டும் !”என்றவன் அங்கே நின்றால் மேற்கொண்டு வாக்குவாதம் வெடிக்கும் என்பதால், மேற்கொண்டு எதுவும் பேசாமல் அமைதியாக நகர்ந்துவிட்டான்.
இங்கு அண்ணன் தம்பிக்குள் நடந்த பேச்சு வார்த்தை எதுவுமே நிவேதாவிற்கு தெரியாது.. இவை அனைத்துமே நிவேதா காலேஜ் சென்றிருந்த நேரத்தில் நடந்தது.
நிவேதா எதையோ போட்டு கொடுத்து தங்களது மகனை, தம்பியை ,அண்ணனை மொத்த குடும்பத்திடம் இருந்து பிரிப்பது போல் வீட்டில் உள்ள அனைவரும் நிவேதாவை ஜாடை மாடையாக பேச ..
என்ன காரணம் என்று புரியாமல் நிவேதா குழப்பத்தில் இருந்தாள்.
கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் இப்படி சென்ற பிறகுதான் நிவேதாவிற்கு தாலி பிரித்து கோர்க்கும் பொழுது அன்றே தனி குடுத்தனம் சென்று ஆக வேண்டும் என்று வசந்த் வற்புறுத்தியது .
அப்பொழுது கூட ,”எனக்கு ஒன்னா இருக்க தான் புடிச்சிருக்கு .இன்னொரு விஷயம் எனக்கு சமைக்க கூட தெரியாது .
தனியா வந்து என்ன செய்வேன் “என்றாள் கவலையாக. தன்னால் ஒரு குடும்பம் பிரிந்து விடுமோ என்று எண்ணத்தில்..
” உனக்கு நான் கூட மாட வேலை செய்றேன். நான் கொஞ்ச நாள் ஃபாரின்ல தான இருந்தேன் . எனக்கு சமைக்க தெரியும் பாத்துக்கலாம் . ஆனா இனியும் அங்க இருக்க வேணாம் “என்றான் ஒரே வார்த்தையாக.
“ஏன்? என்னாச்சு? ஆச்சு ஏதாவது வீட்டில் பிரச்சனையா ?எல்லாருமே என்கிட்ட ஒரு மாதிரி பேசுறாங்க” .
“என்ன பேசுனாங்க..?”
“இ…இல்ல எதுவும் பேசல ” எங்கு தன்னால் சண்டை வந்து விடுமோ ? என்று அஞ்சினாள்..
“ஒன்னும் இல்ல விடு! தனியா இருப்பது தான் நல்லது.. இனி இதைப் பற்றி பேச வேணாம்”
எத்தனை முறை கேட்டும் அவனிடமிருந்து
எந்த பதிலும் வரவில்லை. தனிக்குடித்தனமே அவனது உறுதியான முடிவென்று உணர்ந்தவள், வேறு வழியின்றி ‘சரி’ என்று மனதை அமைதிப்படுத்திக் கொண்டாள்.

