Loading

சமுத்திரா – 2

‘செலெப்ரேட் வித் வேவ்ஸ்’ என்ற ரிசார்டின் வரவேற்பறையை அடைந்தனர் ரங்கராஜ், விலோச்சனா மற்றும் ஷிவன்யா. அங்கே இரண்டு மங்கைகள் அமர்ந்து அவர்களது வேலையை செய்துக் கொண்டிருந்தனர். அவர்களை நோக்கி சென்ற ரங்கா, அவனிடம் உள்ள உறுப்பினர் அட்டையை காண்பித்து விசாரித்துக் கொண்டிருந்தான்.

அந்த கடற்கரையை ஒட்டி அமைக்க பட்டிருந்த ரிசார்டில், வரவேற்பறையின் மேசை கூட படகு வடிவிலே வடிவமைத்து அழகாக காட்சியளித்ததை ஷிவன்யாவும் விலோவும்  பார்த்துக் கொண்டிருந்தனர்.

அவர்களிடம் வந்த ரங்கராஜ், “உள்ளே போகலாம்” என்றான். அங்கிருந்த பணியாளர் வந்து அவர்களின் பயணமூட்டையை வாங்கி சென்றனர். போகும் வழியில் இருவரிடமும் அந்த ரிசார்ட் மற்றும் போட் க்ளபை பற்றி கூறிக்கொண்டே ரங்காச் சென்றான்.

“இது பிரைவேட் ரிசார்ட். ரொம்ப பாதுகாப்பானது தான். இங்கே விடுமுறையை கொண்டாடுவதற்கு, ட்ரிப் மாதிரி பிளான் பண்ணி தங்க வருவாங்க” என்றான்.

“அது தெரிஞ்ச விஷயம் தான ரங்கா. நாமலும் இங்க இரண்டு நாள் தங்க தான் வந்திருக்கோமா விலோ?” என்று ரங்காவை இடையிட்ட ஷிவன்யா விலோவிடம் கேள்வி கேட்டாள்.

“இல்ல.. இல்ல ஷிவ், கொஞ்சம் வெயிட் பண்ணு அதை நானுனக்கு காட்டுறேன்”

கொஞ்சம் ஆர்வம் இருந்தாலும் அவளை பார்த்துக்கொண்டே, “எதையோ என்கிட்ட இருந்து மறைக்கிற, எப்படியும் எனக்கு தெரிய வரும். அப்ப இருக்கு உனக்கு..” என்று மிரட்டினாள் ஷிவன்யா.

‘இவ்வளவு தூரம் வந்துவிட்டோம். எப்படியாவது அவளும் உடன் வர சம்மதிக்க வேண்டும்!’ என்று மனதோடு வேண்டிக் கொண்டாள் விலோச்சனா.

சக்திவேல், ரங்கராஜ், அமரன், ப்ரதீப், விலோச்சனா என ஐவருமே பெங்களூரில் உள்ள புகழ்பெற்ற தனியார் பல்கலைக்கழகத்தில் பயின்றவர்கள். இதில் சக்தி மற்றும் விலோ இருவரும் நடைபழகிய காலத்தில் இருந்தே நண்பர்கள். படிப்பு முடிந்து இப்பொழுது அனைவருமே அவர்களின் துறையில் முன்னேறிக் கொண்டிருக்கின்றனர்.

வெவ்வேறு துறையை சார்ந்த அனைவரும் நட்பு என்ற ஒரே நூலால் இணைக்கப்பட்டவர்களே! எவ்வளவு வேலையிருந்தாலும் மாதம் ஒருமுறையாவது அனைவரும் சந்தித்துக் கொள்ள வேண்டும் என்பது அவர்களுக்குள் எழுதப்படாத அன்பு சாசனம்.

இந்திய சினிமா துறையில் விரல் விட்டு எண்ண கூடிய தயாரிப்பாளர்களுள் ஒருவர் வீட்டின் மூத்தவாரிசு தான் சக்திவேல். வசதி பார்க்காமல் வருவது காதல் மட்டுமில்லை நட்பும் தானே! அப்படி தான் அவர்களுக்குள் எந்த வேற்றுமையையும் பார்க்காமல் நட்பு மலர்ந்தது.

அமரனின் தந்தை அந்தோணி சென்னையில் உள்ள எண்ணூர் துறைமுகத்தில் மீன் பிடி வியாபாரி. அவருக்கு சொந்தமாக இரண்டு கப்பல்களும் இருந்தன. அமரின் மூலமாக தான் அவர்களுக்கு கடல் வழி பயணம் அறிமுகமாகியது!

கல்லூரி காலத்தில் விடுமுறையின் பொழுது, இரண்டு மூன்று நாட்கள் கூட நடுக்கடலில்  மீன்பிடி படகில் தங்கிருக்கின்றனர். ஆனால் விலோவை பெண் என்பதால் ஒருநாளும் இரவில் கடலிற்கு அழைத்து சென்றதில்லை. இதில் மிகவும் வருத்தம் கொண்டவளிற்காகவே இந்த தனிப்பட்ட பயணத்திட்டம்.

இப்பொழுதும் விலோவின் பெற்றோர் பெண்ணை தனியாக அனுப்ப சம்மதிக்கவில்லை தான். ‘உடன் ஷிவன்யாவையும் அழைத்து செல்கின்றேனே..’ என்று அடம்பிடித்து அவளிடம் கூறாமல் இங்கு அழைத்தும் வந்துவிட்டாள்.

ரிசார்டின் வரவேற்பை தாண்டி நேராக நடந்துக் கொண்டிருந்த மூவரும் இப்பொழுது இடப்புறமாக திரும்பி நடக்கத் தொடங்கினர்.

“இந்த ரிசார்ட் தங்குவதற்கு மட்டுமில்லை ஷிவ். பிறந்தநாள், திருமணம், பிசினஸ் பார்ட்டின்னு பல நிகழ்ச்சிகளை இங்க பின்னாடி  போட் கிளப்பில் (yacht) இருக்க உல்லாச படகில் கொண்டாடுவாங்க. அதற்கு விலை பல லட்சங்களில் இருந்து கோடிவரை இருக்கும்” என்றான் ரங்கராஜ்.

ஷிவன்யா, “அதான! பணம் இருந்துட்டா போதுமே.. அந்த பணத்தை எப்படி வீண் செலவு பண்ணலாம்னு யோசிப்பாங்க போல..” மனதில் தோன்றிய ஆற்றாமையுடன் சொன்னாள்.

“அப்படின்னு சொல்ல முடியாதே ஷிவ்! அவங்களுடைய ப்ரைவசி மற்றும் பாதுகாப்பிற்காக கூட இப்படி செய்யலாமே..” என்று தன் கருத்தையும் முன் வைத்தாள் விலோ. சிறு தோள்குலுக்களுடன் அதனை ஏற்றுக் கொண்டாள் ஷிவன்யா.

இப்பொழுது அவர்கள் குடில்கள் நிறைந்த ரிசார்ட்டின் பின்புறம் வந்தனர். ஒவ்வொரு குடிலிற்கும் தனிமை கொடுக்கும் விதத்தில் அழகாக இயற்கை முறையில் தென்னை மரங்களுக்கும் பலவித பூந்தோட்டங்களுக்கும் நடுவே குடிலை அமைத்திருந்தனர்.

நடப்பதற்கு ஏற்றவாறு நடைபாதை ஒரு புறம், சிறிது தூரம் தள்ளி நீச்சல் குளம், அவுட்டொர் விளையாட்டிற்கென்று தனியாக ஒரு பகுதி, குழந்தைகள் விளையாட்டு பகுதி என்று அனைத்தையும் அழகாகவும் நேர்த்தியாகவும் வடிவமைத்திருந்தனர்.

“இப்படி ஒரு இடத்துல நடக்க சொன்னா, நாள் முழுக்க வேடிக்கை பார்த்துட்டே நடக்கலாம்” என்ற ஷிவன்யா, எல்லாவற்றையும் விழி வழியே மனதிலும் கேமராவில் உள்ள குவி லென்ஸ் வழியே கேமராவிலும் சேமித்துக் கொண்டாள் ஷிவன்யா.

அனைத்தையும் பார்த்த விலோ, “இந்த குடில் செம்மையா இருக்கு, இப்பவே கடல் அலை சத்தம் நல்லா கேட்குது” என்று கடலலை போன்று ஆர்ப்பரித்தாள்.

ரங்கராஜ், “ஆமா விலோ. இந்த ரிசார்ட் ஏரியா  தாண்டிட்டா போட் கிளப் வந்திடும்” என்றான் குழந்தைப்போல் குதூகளிப்பவளை ரசித்தபடி.

பின்பு அந்த ரிசார்ட்டை வேடிக்கைப் பார்த்துக் கொண்டே, அங்கிருந்த போட் கிளப்பை வந்தடைந்தனர். அங்கிருந்து பார்த்தாலே சில உல்லாச கப்பல்கள், பல வண்ணங்களில் சிறிய படகுகள் அந்த நீல கடலில் மிதந்த வண்ணம் இருப்பது தெரிந்தது.

ரங்கராஜ், “இங்கு தனியார் கப்பல்களை நிறுத்துவதற்கும் அரசிடம் அனுமதி வாங்கியிருக்காங்க. அந்த அனுமதி இருந்தா நம்ம போட் கூட இவங்கிட்ட பாதுகாப்பா நிறுத்திக்கலாம். கிட்டத்தட்ட பைக், கார் பார்க்கிங் மாதிரி போட் பார்கிங். ஆனால், கப்பல் முழுக்க ரொம்ப சோதனை போட்டுட்டு தான் நிறுத்தவிடுவாங்க. நம்ம கப்பலும் இங்க தான் இருக்குது” என்றான்.

‘நம்ம கப்பலா..? இவர்கள் எதை பற்றி பேசுகிறார்கள்..?’ என்று புரியாவிடினும் அமைதியாக அவர்களுடன் நடந்தாள், ஷிவன்யா. போட் கிளப் நுழைவாயிலில் பரிசோதனைகளை முடித்துவிட்டு அந்த கடற்கரையை நோக்கி நடந்தனர்.

விலோ, “ஷிவ்! அங்க இருக்கிற பெரிய ரெட் கலர்ல வைட் கலர் கோடு போட்ட கப்பல் தெரியுதா..? அதுல தான் நாம இப்ப போக போறோம். இதுதான் நான் சொன்ன சர்ப்ரைஸ்! எப்படி இருக்கு..?”, என்றாள் தன் பதட்டத்தை மறைத்து குரலில்.

அவள் கூறியதை கேட்டு முதலில் இன்பமாய் அதிர்ந்த ஷிவன்யா, “என்ன! நிஜமாவா?” என்றவள் பின்பு குழப்பத்துடன், “ஆனா அந்த கப்பல்ல நாம எங்க போகபோறோம்..?” என்றாள்.

“ஒரு சின்ன ட்ரிப், இங்கேயிருந்து கப்பல்லையே பாண்டிச்சேரி போய்ட்டு, திங்கட்கிழமை காலைல வந்துடலாம்” என்றாள் விலோ ஆர்வத்துடன்.

விலோச்சனா அவளை உடன் அழைக்கும் பொழுதே அவளுடைய நண்பர்கள் அனைவரும் வருவார்கள் என்பது ஷிவன்யாவிற்கு தெரியும். இருந்தாலும், “யாருடைய கப்பல் அது?” என கேட்டாள்.

விலோ ரங்காவை ஒரு பார்வை பார்த்துவிட்டு, “ச.. சக்தி” என்றாள் உள்ளே போன குரலில்.

ப்ரதீப்பை தவிர அனைவருக்கும் ஷிவன்யா அறிமுகமானவள் தான். அதிலும் சக்தியுடன் முதல் சந்திப்பிலேயே சண்டை வந்திருக்க, அவனை சந்திப்பதையே தவிர்த்துவிடுவாள்.

அவளுக்கு அவர்களுடன் செல்வதில் பிரச்சனை இல்லை. ஆனால் சக்தியுடைய கப்பலில் செல்ல தான் தயக்கம். எனவே, “இல்ல விலோ. நான் வரல.. நீங்க எல்லாரும் போய்ட்டு வாங்க. ஹவ் ஃபன்” என்றாள் பொறுமையாக.

அவள் கண்டிப்பாக வர மறுப்பாள் என்று தெரிந்து தான் விலோ அவளிடம் எதுவும் கூறாமலே இவ்வளவு தூரம் அழைத்து வந்தாள். ரங்கா கூட அவளிடம் சொல்ல சொல்லி சொன்னான். ஆனால் ஷிவன்யாயை பற்றி அறிந்தவள் அவளிடம் சொல்லவில்லை. அவனையும் அவளிடம் சொல்லவிடவில்லை.

“அது.. ஷிவ்.. அம்மாப்பா நான் தனியா பசங்க கூட போறதுக்கு ஒத்துக்கவே இல்லை. என்ன தான் நானும் ரங்காவும் கல்யாணம் பண்ணிக்க போறோம்ன்னு இருந்தாலும் அவங்களுக்கு இது பிடிக்கல. அதான் நீயும் என்கூட வரன்னு சொல்லி உன்கிட்ட சொல்லாம கூட்டிட்டு வந்தேன். உனக்கும் கப்பல்ல போறது ரொம்ப பிடிக்கும்னு எனக்கு தெரியும். அதான்..” என்ற விலோ வார்த்தைகளை மென்று விழுங்கினாள்.

ஒருவருடம் முன்பு, சென்னையில் துவங்கபட்டிருக்கும் ‘கார்டிலியா க்ரூஸ்’ என்னும் உல்லாச கப்பலில் இருக்கும் வசதிகளை பற்றிய ஆராய்ச்சியை அவர்கள் இருவரும் வேலை செய்யும் பத்திரிக்கையில் கட்டுரையாக வெளியிட்டனர். அதில் முழுவதாக பணியாற்றி மொத்த விவரங்களையும் ஷிவன்யா தான் சேகரித்தாள். அன்றிலிருந்து, “வாழ்க்கைல ஒரு முறையாவது இப்படி உல்லாச கப்பல்ல போகணும் விலோ..” என்றிருந்தாள். அதையே விலோ இப்பொழுது குறிப்பிட்டாள்.

அதுவரை அவர்களின் உரையாடலில் தலையிடாமல் இருந்த ரங்கராஜ், “ஷிவ்! நீ சக்திய பத்தி யோசிக்கிறனா, அதுக்கு அவசியமே இல்ல. சக்தி அந்த சண்டையை எப்பவோ மறந்திருப்பான். அண்ட் நானும் அமரும் தான் உன்கூட இருக்கோமே” என்றான் அக்கறையாக.

“ஓகே நான் வரேன். ஆனா என்னோட பங்கை கொடுத்துடுவேன். இது தான் கடைசி முறை விலோ. இனி இதே மாதிரி என்னை எப்பவும் எதுக்கும் கட்டாய படுத்த கூடாது” என்ற கட்டளையுடன் அரைமனதாக சம்மதித்தாள்.

இதெல்லாம் எதிர்பார்த்து தான் விலோ அவளிடம் உண்மையை மறைத்து அழைத்து வந்தாள். எப்படியோ நினைத்தது நடந்துவிட்டது என நிம்மதியடைந்தவள், “சாரி ஷிவ்” என தயக்கத்துடன் விலோ கூற,

“சாரியெல்லாம் எதுக்கு விலோ? எனக்குன்னு இருக்க ஒரே ஃபிரண்ட் நீ மட்டும் தான.. நீ கூப்பிட்டதும் எங்கன்னு கேட்காம உன்கூட வந்தேன் தான? சரி விடு. ஒருமுறை கப்பல்லயும் போய்ட்டு வந்திடலாம்” என்றதும்,

“தேங்க்ஸ் ஷிவ். எப்படியும் நீ வருவேன்னு எனக்கு தெரியும்” என்றவள் அவளை கட்டிபிடிக்க, “போதும் போதும் போகலாம் வாங்க” என்று ரங்கா அவர்களை அழைத்து சென்றான்.

“பொறாமை..” என்று ஷிவன்யா கூறியதை கேட்டும் கேட்காமல் நகர்ந்தான். விலோவும் சிரிப்பை அடக்கிக்கொண்டாள்.

__________

ரிசார்டின் மற்றொரு நுழைவு வாயிலுள்ள வண்டி நிறுத்தும் பகுதிக்கு வந்த அமர் அங்கு இருசக்கர வாகனத்தை நிறுத்திக் கொண்டிருந்த ப்ரதீப்பிடம் சென்றான். “வாடா நல்லவனே! உனக்கு இப்ப தான் அஞ்சு நிமிஷம் ஆச்சா?” என்றான் நக்கலுடன்.

அவனை முறைத்துக் கொண்டே, “ஏன்டா பேச மாட்டீங்க? மணி ஐஞ்சு இருபது தான் ஆகுது. சீக்கிரமா தான வந்திருக்கேன்” என்றான் ப்ரதீப் தனது வண்டியை நிறுத்திவிட்டு தோளில் மாட்டிய சிறுப்பையை சரியாக மாட்டிக்கொண்டே.

“என்னமோ? உனக்கு இது புதுசு மாதிரி கோவப்படுற?”, என்று மேலும் ப்ரதீப்பை கிண்டலடித்த அமர், அங்கிருந்த அந்தோணியிடம் அழைத்து சென்றான்.

அவரை பார்த்ததும் மரியாதையுடன், “எப்படி இருக்கீங்க ஐயா?” என்று நலம் விசாரித்தான் ப்ரதீப்.

“எனக்கென்னப்பா, நல்லாருக்கேன்.. இவனுக்கு சீக்கிரமா ஒரு பெண்ணை பார்த்து கல்யாணம் பண்ணிட்டா.. நிம்மதியா இருக்கும்” என்று அமரை பற்றி கூறினார்.

அதை கேட்டு சிரித்த ப்ரதீப், “நான் வேணும்னா கல்யாணம் பண்ணிக்கிறேன் ஐயா. எனக்கு பொண்ணு பாருங்க” என்றான்.

அமர்,”அலையாத டா. டைம் ஆகுது போகலாமா..?” என்றபடி நடக்க தொடங்கினர்.

“மச்சான் நீ கல்யாணம் பண்ணிக்கலாம் தான..?  ஐயா எவ்ளோ பீல் பண்ணுறாங்க” ப்ரதீப் நக்கலுடன் கூற, அவனின் தோளில் தனது கையை அழுத்தமாக போட்ட அமரன், “என்ன சொன்ன? திருப்பி சொல்லு?” என மேலும் கையின் பலத்தை கூட்டினான்.

“டேய் டேய்.. தெரியாம சொல்லிட்டேன் டா. துடுப்பு மாதிரி இருக்க கைய வெச்சியே என்னைய கொன்னுடாத..” என அவனின் கையை போராடி எடுத்துவிட்டான்.

“ஹ்ம்ம். இனிமே நீயும் ஐயா மாதிரி கல்யாணம் பண்ணிக்கோன்னு சொன்ன..? தொலைச்சிடுவேன்!” என நாக்கை மடக்கி விரலை நீட்டி மிரட்டினான்.

“ரௌடி பயலே.. டெய்லி கடல்ல துடுப்பு போட்டு உன்னோட கையும் அப்படியே இருக்கு டா. இனி உன்கிட்ட கல்யாணத்தை பற்றி பேசுனா என்னனு கேளு” என்றான் ப்ரதீப்.

“வாயால கேட்கலாம் மாட்டேன். என்னோட கைதான் பேசும்” என்றவன் கையில் உள்ள காப்பை முறுக்கினான்.

கையெடுத்து கும்பிட்ட ப்ரதீப், “இப்ப தான் என்னோட மேனேஜர் கிட்ட வாங்கி கட்டிக்கிட்டு வரேன் டா. இதோட விட்டுடு” என்று சரணடைந்தான்.

“எதுக்குடா..?”, என கேட்டான் அமர் ஏதும் அறியாததை போல்.

ப்ரதீப் கடுப்புடன், “ஏன் டா டேய்.. வெளிய போறோம்னா ரெண்டு நாள் முன்னாடி சொல்ல மாட்டீங்களா? காலைல எனக்கு கால் பண்ண சக்தி, நாலரைக்கு இங்க இருக்கணும்னு சொல்லுறான். எங்க மேனேஜர் என்ன உங்க ஆயாவா? கேட்ட உடனே சந்தோசமா போய்ட்டு வா பேராண்டின்னு லீவ் கொடுக்க?” என்று அமரின் மேல் பாய்ந்தான்.

“எங்க ஆயா எதுக்கு டா? ஐடி கம்பனில வேலைக்கு போக போறாங்க.. எங்களுக்கு தான் ஃபிஷ்ஷிங் நெட் இருக்கே” என்றான் கையை கடலில் வீசும் வலையாக வலைத்து.

“ஆஃப் டே லீவு கேட்டதுக்கு.. என்னமோ அவரோட சொத்தை கேட்ட மாதிரி மொறைக்குறாரு டா அந்த மனுஷன்.” என, அமரன் சிரித்துவிட்டான்.

“சிரிக்காத டா எருமை. ரங்கா, விலோலாம் வந்துட்டாங்களா?” என்றபடி பேசிக்கொண்டே அவர்கள் கப்பல் நிறுத்தும் இடத்திற்கு செல்ல தொடங்கினர். இவர்களின் பேச்சை கேட்டுக்கொண்டே சிரிப்புடன் இவர்களுடன் நடந்தார் அந்தோணி.

– சமுத்திரா வருவாள்.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
3
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. நட்பு பேச்சு கலாட்டா சூப்பர்.