Loading

அகம்-34

“மதூ..!” மாடிப்படியிலிருந்து இறங்கி வந்த நெடுமாறனின் கண்கள் ஆசையாய் மதுவைத் தீண்டியது.

 

தன் கண்களை தன்னாலே நம்ப முடியாது, இமை சிமிட்டினால் மறைந்து விடுவாளோ என்றெண்ணி கண்சிமிட்டாது இறங்கி வந்தான் நெடுமாறன். தன் கண்ணெதிரில், அதுவும் தன் வீட்டில் அவன் மதுவை எதிர்பார்க்கவே இல்லை.

“ம்க்கும்! நெடு மாமா! நானும் இங்கண தான் இருக்கேன்.!” கருவிழியின் குரல் கூட மதுவின் மீதிருந்த கவனத்தை திருப்பவே இல்லை.

“உன் ஆளு தான் பக்கத்திலேயே நிக்கிறான்ல்ல, அவன்கிட்டே போய் ஒரண்டை இழு! என்கிட்டே வராதே!” பதில் என்னவோ கருவிழிக்கு தான். ஆனால் பார்வை மதுவிடம் மட்டுமே மையம் கொண்டிருந்தது.

“நானும் இங்கணதேன் இருக்கேன் நெடுமாறா! கடல் கன்னி, கூட இங்கணதேன் இருக்கா!” காத்தவராயன் வீம்புக்கென்று பேசினான்.

“பேசாமல் காப்பியைக் குடிங்களேன்.. என்னை ஏன் ஊடால இழுக்குறீக?” சங்கடமாய் நெளிந்தது கயலழகியே தான்.

 

“இந்தாரு கிழவி! உன் பேரனுங்களுக்கு மட்டும் சோடி சேர்க்கிற? என்னைய உன் பேரன் மாதிரின்னு சொன்னதெல்லாம் பேச்சுக்கு மட்டும்தேன். நானெல்லாம் யாரோ தானே?” அங்கயற்கண்ணியின் முக வாட்டம் பட்டும் படாமலும் காத்தவராயனின் கண்களில் விழ, அங்கயற்கண்ணியை இயல்பாக்குவதற்காய் பேசினான் காத்தவராயன்.

“போடா! கூறுகெட்ட குப்பைப் பயலே.. நீ வேற அழகரு வேறன்னு நான் நெனைச்சதே இல்லைடா! இந்தா நிக்கிறாளே.. இவளை உனக்காகத்தேன் நானும் உங்க தாத்தனும் இழுத்துட்டு வந்தோம்! அதுக்குத்தேன் அவரு உன் ஆத்தாளை வரச் சொன்னாரு, அவரு சொல்லியே எத்தனை நாளாகுது உங்க ஆத்தாளைக் கூட்டியாந்தியா டா நீ?” அவன் நினைத்ததைப் போலவே கொஞ்சமாய் இயல்பிற்கு மீண்டார் அங்கயற்கண்ணி.

“பார்ரா.. நெசமாவா கிழவி? கடல் கன்னி எனக்கே எனக்கு மட்டும்தானா? பொய் ஒண்ணும் சொல்லலையே?”

“நீ நம்பினால் நம்பு, இல்லைன்னா போ! நான் வேணும்ன்னா அவளுக்கு வேற நல்லப் பையனாய் பார்த்துக்கிறேன். உன்னை மாதிரி காக்கா குருவியெல்லாம் கயலுக்கு வேணாம்.!” இதழுக்குள் சிரிப்பைப் பதுக்கியபடி சொன்னார் அங்கயற்கண்ணி.

“இந்தாரு கிழவி.. நான் இந்தக் கடல் கன்னியோட ஃபிக்ஸ் ஆகிட்டேன். வேற எவனையாவது கொண்டு வந்து நிறுத்தின இவளோடு உன்னையும் சேர்த்து நாடு கடத்திருவேன் பார்த்துக்கோ!”

“மதுரையைத் தாண்டாத மங்குணிப் பயல் நீ.. நீ என்னை நாடு கடத்துவியா..? போடா கிறுக்குப் பயலே..!” அங்கயற்கண்ணி நக்கலாய் சொன்ன அங்கயற்கண்ணியின் முகம் சிரிப்பிற்கு மாறியிருந்தது.

“ஏம்மா தங்கச்சி, எல்லா விஷயத்திலும், குறுக்கே போட்டு தாண்டற துண்டு மாதிரி, என்னைப் போட்டு தாண்டுவீகளே.. இப்போ பேருக்காச்சும் எனக்கு சப்போர்ட் பண்ணுறீங்களா?” எனக் கருவிழியிடம் வினவினான் காத்தவராயன்.

“நாங்கதேன் கயலை அனுப்ப மாட்டோமே.. அப்பறம் எப்படிண்ணே உங்களுக்கு சப்போர்ட் பண்ணுறது?”

“ஏன் அனுப்ப மாட்டீக? நான் கடத்திட்டு போயிருவேன் பார்த்துக்கோ!”

“கயலு போய்ட்டா, எனக்கு யாரு நெய் தோசை சுட்டுக் கொடுக்கிறது? அம்மாச்சி, கயலு இங்கணையே இருக்கட்டும்.! நீங்க வேற பொண்ணு பார்த்துக்கோங்க!”என கருவிழி சொல்ல,

“ஆமா தம்பி! கயலு கூட மாட ஒத்தாசைக்குத்தேன் இங்கண வந்தா! ஆனால் வந்து கொஞ்ச நாளிலேயே எங்க வீட்டுப் பொண்ணாகிட்டா! அவ இங்கணையே இருக்கட்டும் தம்பி! நீங்க வேற பொண்ணு பார்த்துக்கிடுங்க!” தன் பங்குக்கு அரசியும் சொல்ல, கடுப்புடன் முறைத்துக் கொண்டு நின்றான் காத்தவராயன்.

“குடும்பம் மொத்தமும் சேர்ந்து, எனக்கு கட்டம் கட்டுறீங்களோ? யார் என்ன சொன்னாலும், கடல்கன்னி எனக்கு மட்டுந்தேன்.! வா, கடல்கன்னி நாம போவோம்!” கயலழகியின் கரம் பற்றி அழைத்தான் காத்தவராயன். முதன்முறையாய் ஓர் ஆணின் தொடுகையில் மேனி சிலிர்த்தது கயலழகிக்கு. வேகமாய் அவன் கரம் உதறியவள்,

“உங்க அம்மாவைக் கூட்டி வந்து பேசுங்க ராயரே..! அப்பத்தா சொல்லாமல் நான் உங்களுக்கு வாக்கப் பட மாட்டேன். அப்பத்தா, என்னைக் கூட்டி வரும் போதே, உங்களுக்குக் கட்டி வைக்கப் போறேன்னு சொல்லித்தேன் கூட்டியாந்தாக!” தலையை நிமிர்த்தாது தரையைப் பார்த்தே பதில் சொன்னாள் கயலழகி.

“ஏன் கிழவி நெசமாவா? ஐ லவ் யூ! ஐ லவ் யூ! எனக்காக பொண்ணெல்லாம் பார்த்து கூட்டியாந்திருக்கே! நான் ஏதாச்சும் தப்பா பேசியிருந்தால் மன்னிச்சுரு!” அங்கயற்கண்ணியை இறுக அணைத்து, கன்னத்தில் முத்தம் பதித்திருந்தான் காத்தவராயன். அதீத உணர்ச்சிப் பெருக்கில் கண்ணீர் வரும்போல் இருந்தது அவனுக்கு.

“நான் வெறும் வேலை பார்க்கிறவன் தானே? எம் மேலேயும் அன்பு காட்டற இப்படியொரு குடும்பம் கிடைக்க நான் கொடுத்து வச்சிருக்கணும்!”

“ஏய்! லூசுப் பயலே..! லவ் கிவ்வு அவ கிட்டே பேச வேண்டியதை என்கிட்டே பேசிட்டு திரியறே? அங்கிட்டு போடா!” அவனைத் தள்ளியவர்,

“நெடுமாறா! உங்கம்மா மதுவைப் பார்க்கணும்ன்னு சொன்னாள், தலையை வலிக்குதுன்னு உறங்கிட்டு கிடந்தா! போய் அழைச்சுட்டு வா!” என்றவர்,

“கயலு! எல்லாருக்கும் காப்பி கொண்டு வா தாயி!” என கயலழகியிடம் முடித்தார்.

“அழகரு! அம்மாச்சி முகத்தைப் பாரேன்! என்னதான் சிரிச்சுப் பேசினாலும், ஏதோ யோசனையோடவே இருக்கே? என்னவா இருக்கும்?”

“எனக்கென்னடி தெரியும்?!”

“அம்மாச்சிக்கும், தாத்தாவுக்கும் ஏதோ மனஸ்தாபம் போல.. நாம தான் என்னன்னு கண்டு பிடிச்சு சேர்த்து வைக்கணும்!”

“அதெல்லாம் ஒண்ணும் தேவையில்லை! புருஷன் பொண்டாட்டி சண்டைக்குள்ளே எப்போவுமே, மூணாவது மனுஷங்க தலையீடு இருக்கக் கூடாது. அதோடு அப்பத்தா நம்மளை விட நிறைய பார்த்திருப்பாங்க! அவங்களுக்கு ஆலோசனை சொல்ற அளவுக்கு நமக்கு, வயசும், அனுபவமும் பத்தாது.!” பொறுமையாய் சொன்னான் அழகர்.

“அது ஏன் அப்படி?”

“ஹான்.. நீ கிழவியாகும் போது சொல்றேன்டி கிறுக்கச்சி!” என்றவன், தன்னை ஒட்டி உரசி அமர்ந்திருந்தவளிடம் இருந்து விலகி அமர்ந்தான்.

“ம்ப்ச்! ஏன் மாமா? ஒட்டி உட்கார்ந்தால் என்ன? எப்போ பாரு விலகிட்டே இருக்கே?” கோபமாய் அவன் செவிக்குள் கேட்டாள் கருவிழி.

“அவஸ்தையா இருக்கு டி! மனுஷனை உரசியே உசுப்பேத்துற டி!” இழுத்துப் பிடித்தப் பொறுமையுடன் அவன் சொல்ல, புரியாது மலங்க விழித்தவள்,

“ஒட்டி உட்கார்ந்தது ஒரு தப்பா? நீ ரொம்ப ஓவரா பண்ணுற மாமா! பெரிய அழகன்னு நினைப்பு!” அவன் எதற்காகச் சொல்கிறான் என்பதைப் புரியாமலே பேசினாள்.

“கல்யாணத்துக்குப் பிறகு, உனக்கு பதில் சொல்றேன்! இப்போ என் கண்ணைப் பார்த்து சொல்லுடி கரு கரு.. நான் அழகனா இல்லையான்னு சொல்லு!”கள்ளத்தனமாய் அவளைப் பார்த்துச் சிரித்தான் அவன்.

“ஆத்தே! இம்புட்டு பேர் முன்னாடி உன் கண்ணைப் பார்த்து சொல்லணுமா? அதெல்லாம் முடியாது! எல்லாரும் நம்மளைத்தேன் பார்ப்பாங்க! வேணாஞ்சாமி நான் இந்த விளையாட்டுக்கு வரலை!”

“உன்னால் என் கண்ணைப் பார்த்துப் பேச முடியாதுன்னு சொல்லுடி கரு கரு!” அத்தை மகளுடனான இந்த விளையாட்டு அவனுக்கு நிரம்பப் பிடித்திருந்தது.

“அதெல்லாம் முடியும்! முடியும்! எல்லாரும் இருக்கும் போது முடியாது!” அவன் விளையாட்டு புரியாது தானாய் வந்து வலையில் விழுந்தாள் கருவிழி.

“அப்போ தனியா என் கண்ணைப் பார்த்து நான் அழகா இல்லைன்னு சொல்றே!”

“இதில் என்ன இருக்கு? உண்மை என்னவோ அதைச் சொல்லப் போறேன். நீ ரொம்பவெல்லாம் அழகா இல்லை! ஏதோ கொஞ்சம் சுமாரா இருக்கே அவ்வளவு தான்.!” அவள் சாதாரணமாய் சொல்ல,

“தனியா சிக்குவ தானே பார்த்துக்கிறேன் டி!” அவளுக்கு மட்டும் கேட்கும்படி முணுமுணுத்தான் அவன். அப்போதும் கூட, அவன் சொல்வதன் உள்நோக்கம் புரியாது திருதிருவென விழித்துக் கொண்டுதான் அமர்ந்திருந்தாள் அவள். என்னதான் அவளுக்கு மாமன் மகன் என்ற உரிமையுணர்வு இருந்தாலும், அதைத் தாண்டி அவள் எதையுமே யோசிக்கவே இல்லை! அவன் இல்லாது வாழ முடியாதென்பது மட்டும் அவளுக்கு உறுதியாய்த் தெரியும். ஆனால் அவனோ, தன்னவளோடு நிதமும் கற்பனைகளில் வாழ்ந்துக் கொண்டு இருக்கிறானே? அவன் அவள் மீது கொண்டுள்ள நேசம், எல்லைகளுக்குள் அடங்காமல், இதயம் தாண்டி வழிந்துக் கொண்டு இருந்தது.

அதே நேரம் அறையிலிருந்து வெளி வந்த பூங்கொடி,

“மது! ராசாத்தி! எப்படி இருக்கத்தா? என்னை எழுப்பியிருக்கலாமே அரசி?!” என்றவர் மதுவை அணைத்துக் கொண்டார்.

“அன்றைக்கு உங்க வீட்டில் பேசினதைப் பார்த்து, எம் புள்ளை வாழ்க்கை அம்புட்டுதான்னு நினைச்சு பயந்து போனேன்! வயசைக் காட்டி பிரிச்சிருவாங்களோ? ஆசைப்பட்ட வாழ்க்கை வாழ குடுப்பினை இல்லையோன்னு நினைச்சேன். எந்த சாமி புண்ணியமோ, என் புள்ளை ஆசைப்பட்ட வாழ்க்கை அமையப் போவுதுன்னு எம்புட்டு சந்தோஷமா இருக்குன்னு தெரியுமா? இந்த வீடே நிறைஞ்ச மாதிரி இருக்கு!” ஒரு தாயாய் தன் மகனின் விருப்பம் நிறைவேறுவதிலேயே தன்னிறைவு கொண்டது பூங்கொடியின் மனம்.

 

“இங்கே என்ன கூத்து நடக்குது? அப்பா நடமாட முடியாமல் போனதும், இஷ்டத்துக்கு ஆடுறீகளோ?!” சரவணனின் குரல் வாயிற்புறமிருந்து கேட்க, நொடிப் பொழுதில் அந்தச் சூழ்நிலையை நிசப்தம் ஆட்கொண்டது.

 

“எம்மா மது! கல்யாணத்திற்கு முன்னே இங்கெல்லாம் வரக் கூடாதுன்னு உனக்குத் தெரியாதா? உனக்குத்தான் அறிவில்லைன்னா உன்னைப் பெத்தவங்களுக்கும் அறிவில்லையா? நீங்க நடந்துக்கிறதெல்லாம் பார்த்தால், எப்போ எப்போன்னு காத்துட்டு இருந்த மாதிரி தான் இருக்கு!” அடுத்ததாய் வந்தது கதிரின் குரல்.

 

“இங்கே பாருங்க! நான் வந்தது விழியைப் பார்க்க! ஓவர் இமேஜின் பண்ணி நீங்களா ஒண்ணு பேசாதீங்க! என்னையோ என்னைப் பெத்தவங்களையோ, தரக் குறைவா பேசற உரிமை உங்களுக்கு இல்லை!” என வெடுக்கெனச் சொன்னவள், நெடுமாறனை நோக்கி திரும்பினாள்.

 

“மாறன்! இது சரியில்லை சொல்லிட்டேன்!” மது தெளிவாய் பேச,

 

“மதூ! ப்ளீஸ் அமைதியாய் இரு!” அவள் கரத்தில் அழுத்தம் தந்து உணர்த்த முயன்றான் நெடுமாறன்.

 

“அமைதியா இருக்கணுமா? என் வீட்டில் உன்னைப் பத்தியோ, உன் அப்பா, அம்மாவைப் பத்தியோ பேசினால் நீ சும்மா தான் நிப்பியா? எனக்கு என்னோட, என் குடும்பத்தோட சுய மரியாதை ரொம்ப முக்கியம்!”

 

“இன்னும் கல்யாணமே முடியலை! அதுக்குள்ளே இம்புட்டு பேச்சு பேசுது, இதெல்லாம் சரியா வருமா?” என்ற சரவணனை இடையிட்டு தடுத்து நிறுத்தினார் அங்கயற்கண்ணி.

 

“இதெல்லாம் தப்பு சரவணா! அவங்க அம்மா அப்பாவைப் பத்தி பேசற உரிமை உனக்கு யார் கொடுத்தது? மாப்பிள்ளை வீட்டுக்கு பொண்ணு கல்யாணத்திற்கு முன்னே வரக் கூடாதுன்னு சட்டம் எதுவும் இருக்கா? மதுவை நான்தேன் வரச் சொன்னேன். இப்போ உன் பிரச்சனை என்ன? மது வந்ததா? இல்லை இந்தக் கல்யாணம் நடக்கறதா? நீங்க பேசுறதையெல்லாம் பார்த்தால், நான்தேன் உங்களைப் பெத்தேனான்னு சந்தேகமா இருக்கு. உங்களுக்கு இங்கே நடக்கறது பிடிக்கலைன்னா விலகி நில்லுங்க! ஊடால வந்து குட்டையைக் குழப்பாதீங்க!” அங்கயற்கண்ணி தெளிவாய் சொல்லிவிட,

 

“அப்பா முடியாமல் இருக்கிறதைப் பயன்படுத்தி, அல்லி ராஜ்ஜியம் நடத்துறீகளோ? எத்தனை நாளைக்குன்னு பார்க்கிறோம்! நீங்க என்னதேன் சொன்னாலும், எங்க அப்பா எழுந்து வந்து சொல்லாமல் இந்தக் கல்யாணம் நடக்காது!” எனச் சொன்ன கதிர்வேல் கோபமாய் சரவணணுடன் வெளியேறியிருந்தார்.

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 17

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
19
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. கயலுக்கு காக்கா குருவி எல்லாம் வேணாம். 🤣🤣

    நெய் தோசை யாரு சுட்டு தருவா? எண்ட கவலை விழிக்கு.

    காத்து கடற்கன்னி உங்களுக்கே உங்களுக்குதான் dont worry.

    அழகன் கனவில் கருகரு கூட ரொம்ப காலமா வாழுறான். அதனால அவளை காதல் கண்கொண்டு பார்க்கிறான்.

    ஆனா கரு கரு இப்போதான் காதலிக்கவே ஆரம்பிச்சிருக்கா அவன் காதல் பார்வை, ஆசை பார்வையை எல்லாம் புரிஞ்சுக்க காலம் ஆகும்.

    சொக்கேசன் என்னனா மருமகள்க கையாள சாப்பிட வெறுக்கிறாரு.

    அவங்க பசங்க என்னனா பொண்டாட்டி பேசக்கூடாது, அம்மா அதிகாரம் பண்ணகூடாதுனு சத்தம் போடுறாங்க.

    1. Author

      😂😂😂 கரு கரு புரிஞ்சுக்க வேண்டியது நிறைய இருக்கு டியர். அப்பா பேச்சுகேட்டு பழகினவங்களுக்கு அந்த இடத்தில் பெற்ற தாயாய் இருந்தாலும் கூட, அங்கயற்கண்ணியை ஏத்துக்க முடியலை. தொடர் ஆதரவிற்கு நன்றிகள் டா 💜