Loading

ருத்ரன் அன்று முழுவதும் யோசனையுடனே இருந்தான்.

 

தன் மாமாவிடம் இவ்வாறு பேசியது தவறு என்று உணர்ந்தவன், அன்று மாலை வேலை முடிந்து வீட்டிற்கு வரும்போது நேராகத் தனது மாமாவின் வீடு நோக்கிச் சென்றிருந்தான்.

 

அப்பொழுது தனம் தான் வீட்டு வேலை செய்து கொண்டு இருக்க, “வாப்பா ருத்ரா, என்ன இவ்வளவு தூரம் இந்தப் பக்கம்?” என்றார்.

 

“அத்தை, மாமா இல்லையா?” என்று கேட்டான்.

 

“மாமா காட்டுல தான்டா இருக்காரு. ஏன்ப்பா மாமாவைப் பார்க்கணுமா?” என்று கேட்டார்.

 

“ஆமா அத்தை அவரை தான் பாக்கணும். நான் பார்த்துக்குறேன். ஆனா, உங்க கிட்டயும் பேசணும்” என்றான்.

 

“என்னப்பா?” என்று கேட்க,

 

“என்னை மன்னிச்சிடுங்க. கல்யாணம் வேணாம்னு அப்படி மூஞ்சில அடிச்ச மாதிரிப் பேசி இருக்கக் கூடாது. நான் பேசினது தவறு” என்றான்.

 

“நீ என்ன ருத்ரா தப்பாப் பேசின, எதுவும் தப்பாப் பேசல… மாமா உன்கிட்ட அவரோட விருப்பத்தைக் கேட்டாரு. நீ உன்னோட விருப்பத்தைச் சொன்ன. நீ அவருக்காக யோசிச்சோ, இல்ல அம்மாவுக்காக வேண்டியோ, உன் மனசுல இருக்கற பொண்ணத் தூக்கி எறிஞ்சிட்டுத் தமிழைக் கல்யாணம் பண்ணி இருந்தா தான் அது தப்பு ருத்ரா. நீ உன் மனசுல இருக்குறதை வெளிப்படையா சொன்னதுல எந்தத் தப்பும் இல்லை. நாங்க உன்ன நல்லா தான் வளர்த்து இருக்கோம் என்பதற்கு இதுதான் ஒரு எடுத்துக்காட்டு” என்றார்.

 

ருத்ரன் சிரித்துவிட்டு, “ரொம்ப நன்றி அத்தை. என்னைப் புரிஞ்சுகிட்டதுக்கு” என்றான்.

 

“உன்ன நாங்க புரிஞ்சுக்காம வேற யாரு, புரிஞ்சுக்கப் போறாங்க. நாங்க உண்மையாவே நீ தமிழை வேணாம்னு சொன்னதுக்குக் கவலைப்படல ருத்ரா. உன் அம்மாவுக்கு மட்டும்தான் கொஞ்சம் கஷ்டம். எனக்கும் மாமாக்கும் ஒன்னும் பெருசா வருத்தமில்லை. நீ உன் மனசுல வேற ஒரு பொண்ணு இருக்கு என்று சொல்லும்போதே அமைதி ஆயிட்டோம்.

 

நான் அப்பச் சொன்னது தான், நீ எங்களுக்காகத் தமிழைக் கட்டி இருந்தா தான் தப்பு. உன் மனசுல இருப்பதை வெளிப்படையா எங்ககிட்ட சொல்ற. அதுல எந்தத் தப்பும் இல்ல” என்று அவன் கையில் டீ கொடுக்க வாங்கிக் குடித்துவிட்டு, “சரி அத்தை நான் வரேன்” என்று கிளம்பி விட்டான்.

 

நேராகக் காட்டிற்குச் சென்றான்.

 

ருத்ரனுடைய மாமா தண்ணி திருப்பிக் கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டுத் தன் மாமாவின் அருகில் செல்ல,

 

“என்னையா இவ்ளோ தூரம் இந்தப் பக்கம், அதுவும் பேண்ட் சட்டையோட வந்திருக்க?” என்றார்.

 

“உங்களப் பார்க்க தான் மாமா. வீட்டுக்குப் போனேன், அத்தை நீங்க காட்டுல இருக்கறதா சொன்னாங்க…”

 

“என்னய்யா அவ்வளவு முக்கியமான விஷயம்? வேலை முடிச்ச கையோடு இங்க வந்து இருக்க” என்றார்.

 

“ஆமாம் மாமா, முக்கியமான விஷயம் தான்” என்றான்.

 

“சரிப்பா உக்காரு” என்று தன் தோளிலிருந்த துண்டைக் கீழே போட்டு உட்கார வைத்தார்.

 

“எதுக்கு மாமா துண்டு. எப்பயும் வந்து போற இடம் தானே?” என்றான்.

 

“இல்லையா, நீ வீட்ல இருக்க கைலி சட்டையோட வந்து இருந்தா பிரச்சனை இல்ல. பேண்ட் சட்டை போட்டு இருக்கியா, அது அழுக்கு ஆயிடும்” என்று கீழே மண்ணில் துண்டைப் போட்டவர் அதில் அவனை உட்கார வைத்து அவன் தோளில் தட்டிக் கொடுக்க,

 

“மாமா, என்னை மன்னிச்சிடுங்க” என்றான்.

 

அவன் கண்ணை உற்றுப் பார்த்தவர், “மன்னிப்புக் கேட்கிற அளவுக்கு ஒன்னும் இல்ல ருத்ரா. லைட்டா வருத்தம் இருக்கு தான், இல்லன்னு சொல்ல மாட்டேன். என் மகள் வந்தா எனக்கு அப்புறம் இந்தக் குடும்பத்தைப் பார்த்துப்பா, என் தங்கச்சியைப் பார்த்துப்பா என்ற ஒரு நம்பிக்கை அவ்ளோ தான்.

 

இப்பவும் ஒன்னும் இல்ல, நீ பார்த்திருக்கிற பொண்ணு நல்ல பொண்ணா தான் இருக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கு. உன் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு. நீ நம்ம குடும்பத்துக்கு ஏத்த பொண்ணா தான் பார்த்து இருப்ப” என்றார்.

 

“எங்களுக்காகனு சொல்லி நீ தமிழைக் கல்யாணம் பண்ணிகிட்டு இருந்தா தான் தப்பு” என்றார்.

 

அவரைக் கட்டிக் கொண்டு கண் கலங்கியபடி, “அத்தையும் இதே தான் மாமா சொன்னாங்க. இப்போ தான் அத்தைகிட்டப் பேசிட்டு வந்தேன்.” என,

 

“எங்களோட வளர்ப்பு என்னைக்கும் தப்பாகாது டா ” என்று அவன் தோளில் தட்டிக் கொடுத்து,

 

“சரி வீட்டுக்குப் போ நேரமாகவே…” என்றவுடன் “சரி மாமா” என்று விட்டு இப்பொழுது தான் நிம்மதியாக உணர்ந்தவன் வீட்டிற்குச் சென்றான்.

 

தன் தாயிடம் பேசச் செல்ல அவர் முறுக்கிக் கொண்டு செல்ல, “அம்மா…” என்றான்.

 

“ஒன்னும் பேசாதடா, தமிழை விட வேற எவளும் என்னையும் சரி, உன் தங்கச்சியையும் சரி, அப்படிப் பார்த்துக்க முடியாது. ஆனா உனக்கு அவ்ளோ ஆயிடுச்சு, வளர்ந்துட்ட இல்லையா? அதான் இந்தப் பேச்சு பேசுற” என்றார்.

 

“அம்மா ப்ளீஸ், நான் மாமாவ எடுத்து எறிஞ்சி பேசணும்னு பேசல. என் மனசுல இருக்கறதைச் சொன்னேன்.”

 

“போதும்டா, அவங்க ரெண்டு பேரும் பெருந்தன்மையா விட்டுக்கொடுத்து இருக்கலாம். அதற்காக என் ஆசையை என்னால தூக்கிப் போட முடியாது. நீ எவளை வேணா கல்யாணம் பண்ணிக்கோ, ஆனா எனக்கு மருமகனா அது என் தமிழ் மட்டும்தான். நான் தூக்கி வளர்த்தவ டா என்னை உள்ளங்கையில வச்சு இப்ப வரைக்கும் தாங்குறவ. இனியும் தாங்குவா… நாங்க உன்னோட வாழ்க்கையில இனிமே தலையிட மாட்டோம்” என்று விட்டு அமைதியாகச் சென்று விட,

 

தன் தாயைப் பார்த்துக் கண்கள் கலங்க நின்று கொண்டிருந்தான் ருத்ரன்.

 

தன் அத்தையும், மாமாவும் தன்னைப் புரிந்து கொண்டும், தன் தாய் தன்னைப் புரிந்து கொள்ளவில்லை. ‘அப்படித் தன்னைவிட அவள் என்ன அவர்களுக்குச் செய்து விட்டாள். என் அம்மாவையும், தங்கையையும் என்ன மாய மந்திரம் செய்தாளோ? தெரியவில்லை. இருவருக்கும் அவளை தான் பிடித்து இருக்கிறது’ என்று இப்பொழுது கூட அவனது கோபம் தமிழிடம் தான் சென்றது.

 

அது தவறானது என்பது இந்தப் புத்திக்கு எப்பொழுது தான் புரியப் போகிறது? அவனுக்குக் கோபம் தான் ஏறியது.

 

கோபத்தில் தமிழுக்கு போன் செய்திருந்தான்.

 

“சொல்லுங்க மாமா” என்று அவள் அந்தப் பக்கம் சொல்ல,

 

“என்னடி சொல்லணும்? என்ன சொல்லி மயக்கி வச்சிருக்க, எங்க அம்மாவையும் தனாவையும். நீ தான் இந்த வீட்டு மருமகள்னு நினைச்சுட்டு இருக்காங்க.”

 

“மாமா போதும். நீங்க உங்க விருப்பத்தை வீட்ல இப்போ எல்லோர் கிட்டயும் சொல்லிட்டீங்க. நான் அதிலிருந்து வெளியே வந்துட்டேன். திரும்பத் திரும்ப போன் பண்ணி என்னை எதுக்கு இப்ப இந்த நேரத்துல நையி நையின்னு கத்திக்கிட்டு இருக்கீங்க?”

 

“எது? நான் கத்திட்டு இருக்கேனா?”

 

“அப்புறம் என்ன செய்யறீங்க நீங்க இப்போ”.

 

“நீ என்ன மயக்கினியோ, எங்க அம்மாவும் என் தங்கச்சியும் நீதான் இந்த வீட்டுக்கு மருமகளா வரணும்னு சொல்லிட்டு இருக்காங்க.”

 

“அதுக்கு நான் ஒன்னும் பண்ண முடியாது” என்று விட்டு அவளாகவே போனை வைத்துவிட,

 

“திமிருடி உனக்கு” என்று புலம்பினான்.

 

அவளிடம் பேசிவிட்டுக் கோபத்தில் சரவணனுக்கு ஃபோன் செய்து அவனை வர வைத்து அவனுடன் வெளியே சென்று விட்டான்.

 

அடுத்த அரை மணி நேரத்தில் தமிழ் ருத்ரன் வீட்டிற்கு வந்திருந்தாள்.

 

வந்தவள் தனது அத்தையையும், தனாவையும் உட்கார வைத்து,

 

“அத்த நீங்க நான் இந்த வீட்டுக்கு வரணும் நினைச்சதில தப்பு இல்ல. நீங்க எடுத்து வளர்த்த புள்ள நானு… சொன்னாலும் சொல்லாட்டியும் நான் உங்க மருமக தான். இந்த வீட்டுக்கு வந்தா தான், உங்க பையனக் கட்டிக்கிட்டா தான் நான் உங்க மருமகள்னு கிடையாது. உங்க அண்ணனோட பொண்ணு உங்களோட மருமகள் தான்.

 

மாமாவோட மனசையும் கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க. அவருக்கு விருப்பம் என் மேல இல்ல. வேற ஒரு பொண்ணு மேல இருக்கும் போது வற்புறுத்திக் கட்டாயப்படுத்தி நீங்க என்னைக் கல்யாணம் பண்ணி வச்சிங்கன்னா அவர் சந்தோஷமா இருந்திடுவாரா? இல்ல நான் தான் சந்தோஷமா இருக்க முடியுமா? இல்ல, உங்களால தான் சந்தோஷமா இருந்திட முடியுமா? கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க. பெரியவங்க தானே… சின்னவர் அவர்தான் அடம் பிடிக்கிறார்னா நீங்க கூடவுமா?”என்று சொல்ல,

 

“இல்லடா தமிழ், உன்ன மருமகளா நினைச்சு இவ்வளவு நாள் வாழ்ந்திட்டேன்.”

 

“இனியும் நான் உங்க மருமக தான். உன் பையனுக்குப் பொண்டாட்டியா வந்தா தான் உங்க மருமகனு கிடையாது. உங்க அண்ணன் பொண்ணும் உங்க மருமகள் தானே… நான் இந்த உலகத்தை விட்டுப் போற வரைக்கும் உங்களுக்கும் எனக்கும் ஆன பந்தமும் அழியாது தானே…” என்று தனது அத்தைக்குப் புரிய வைக்க,

 

அவரும் ஒருமனதாகச் சரி என்று தலையாட்டினார். அதன் பிறகு தனாவிடமும் பேச தனா தான் முறுக்கிக் கொண்டிருந்தாள்.

 

பின்பு “சரி அண்ணி” என்று விட்டு அமைதியாகி விட்டாள்.

 

இரவு ருத்ரன் வீட்டுக்கு வரும்போது தமிழ் வீட்டில் இருக்க,

 

அவளை முறைத்துவிட்டுக் கை, கால்கள் கழுவிக் கொண்டு வந்து சாப்பிட உட்கார,

 

அவனுக்குப் பிடித்த பருப்புத் துவையல் இருக்க, “மதிய சாப்பாட்டுக்குக் கொடுத்து விடலையே” என்றான்.

 

அவனைப் பார்த்து முறைத்த தனா, “உனக்குப் பிடிக்கும்னு அண்ணி தான் எடுத்துட்டு வந்தாங்க” என்று விட்டு அமைதியாகி விட்டாள்.

 

அங்கு ஒரு மூலையில் நின்று கொண்டிருந்த தமிழை முறைத்துப் பார்த்துவிட்டு எதுவும் பேசாமல் சாப்பிட்டு எழுந்தான்.

 

தமிழ் வீட்டில் உள்ளவர்களுடன் சொல்லிக் கொண்டு கிளம்ப,

 

“ருத்ரா கூடப் போ தமிழு, லேட் ஆயிடுச்சு பாரு” என்று பாக்கியம் சொல்ல,

 

ருத்ரன் தமிழைத் திரும்பிப் பார்க்க,

 

“இல்ல அத்தை நான் என்னோட வண்டியில தான் வந்தேன்.”

 

“ஆனா ரொம்ப நேரமாச்சே, மணி என்ன ஆகுது பாரு” என்றார்.

 

“பக்கத்துல தான அத்தை, நான் போயிடுவேன். நான் பொறந்து வளர்ந்த ஊரு, எனக்கு என்னத்த பயம்?” என்று விட்டு வேறு எதுவும் பேசாமல் கிளம்பி விட்டாள்.

 

“திமிருடி உனக்கு, நேரம் கெட்ட நேரத்தில் கிளம்புற” என்று அவள் காதில் விழும்படி அருகில் வந்து அவளைத் திட்டி விட்டு,

 

அவள் தங்கள் தெருமுனை தாண்டும் வரை நின்று பார்த்துவிட்டு அதன் பின்பு வீட்டிற்குள் நுழைந்தான்.

 

ஒரு கால் மணி நேரம் கழித்துக் காயத்ரி போனுக்கு அழைத்திருந்தான் ருத்ரன்.

 

“சொல்லுங்க மாமா?” என்று பட்டும் படாமல் பேச,

 

“காயு…” என்றான்.

 

“என்ன மாமா?” என்று அவள் கேட்க,

 

“உங்க அக்கா வீட்டுக்கு வந்துட்டாளா?” என்றான்.

 

“அவ வந்துட்டாளா இல்லையான்னு கேட்டு நீங்க என்ன பண்ணப் போறீங்க? ரொம்ப தான் அக்கறை” என்று நொடிந்துக் கொண்டாள்.

 

“உனக்கு என் மேல கோவமா?”என்றான்.

 

“உங்க மேல கோவப்பட நான் யாரு? மாமா, போதும் மாமா. அவ உங்களை எத்தனை வருஷமா விரும்பினானு எனக்குத் தெரியும். அவளோட வலியும், வேதனையும் என்னால புரிஞ்சுக்க முடியும். ஆனா, நீங்க இவ்ளோ கஷ்டப்படுத்தி இருக்க வேண்டாம். அவளை வார்த்தையால கொன்னுட்டீங்க. இதுக்கு மேலயும் வேணாம், போதும். அவ வீட்டுக்கு வந்துட்டா…

 

அவ மேல இருக்கற அக்கறையை இதோட நிறுத்திக்கோங்க. அவளை அவளுக்குப் பார்த்துக்கத் தெரியும். இல்லனாலும் நாங்க இத்தனை பேர் இருக்கோம் அவளைப் பார்த்துக்க” என்று விட்டுக் காயத்ரி போனைச் சட்டென வைத்து விட்டாள்.

 

ருத்ரனுக்கு ஒரு நிமிடம் மனது வலிக்கதான் செய்தது.

 

சிறு வயதிலிருந்து அவனும் தமிழைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறான். அவளைப் பற்றித் தனக்குத் தெரியாததா? அவளுக்குத் தன் மேல் காதல் இருக்கிறது என்பதை வேண்டுமானால் தமிழ் சொல்லித்தான் ருத்ரன் அறிந்திருக்கலாம். ஆனால், அவள் எந்த அளவிற்கு நல்லவள் என்பதையும் அவளது குண நலன்களையும், சிறுவயதிலிருந்து பார்த்துக் கொண்டு தான் இருக்கிறான்.

 

தனக்காகவும், தன் குடும்பத்திற்காகவும் என்று சொன்னாலும், சொல்லா விட்டாலும் ஒவ்வொன்றையும் தன் மாமாவைப் போலவே தாங்கக் கூடியவள் தான்.

 

‘என் மனதில் யாரும் இல்லை என்றால் கூட, தமிழைப் பற்றி யோசிக்கலாம். ஆனால், நான் ஆனந்தியை விரும்பிக் கொண்டிருக்கும் பொழுது தமிழைத் தன் குடும்பத்திற்காக ஏற்றுக் கொள்ள முடியாது’ என்று யோசித்தான்.

 

தன் தலையை உலுக்கி விட்டு, ‘நாம் இவ்வாறு யோசிப்பதே தவறு, தமிழ் என்னுடைய மாமன் மகள் மட்டும்தான். என்னுடைய மனைவி, காதலி அனைத்துமே என்னுடைய ஆனந்தி தான்…’ என்று எண்ணியவன் அப்படியே படுத்து இருந்தான்.

 

ஆனால் அவனுக்குத் தூக்கம் தா

ன் எட்டாக் கனியாக இருந்தது.

 

‘நாம் செய்வது சரியா? தவறா?’என்று யோசனையிலேயே புரண்டு புரண்டு படுத்துக் கொண்டு இருந்தான்.

 

விடியற்காலை போல் தான் தூங்கி இருந்தான்.

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
3
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்