Loading

 

இன்னதென்று இனம் பிரித்தரிய முடியாத சிறு பறவைகளின் கூட்டமொன்று அந்த வேப்பமரத்தைச் சுற்றி சுற்றி கீரிச்சிட்டுக் கொண்டிருந்தது. நேரம் பத்தை கடந்து விட்டதால் அங்கே ஆட்களென்று பெரிதாய் யாருமில்லை. அந்தப் பறவைகளிடம் தனது கவனத்தைக் குவித்தபடி அமைதியாய் அமர்ந்திருந்தாள் ஆரா. அருகில் அமர்ந்திருந்த அவனுக்கும் என்ன பேசுவது, எப்படி ஆரம்பிப்பது என்ற பெரும் தயக்கம். இருவரின் எண்ண அலைகளுமே அவர்களின் கடைசி சந்திப்பிலேயே சுழன்று கொண்டிருந்தது.

 

நூலகத்தில் இருந்து தனக்குத் தேவையான புத்தகங்களைத் தேடி எடுத்து வந்தவள்,  பதிவேட்டில் அதைத் குறித்துவிட்டு  கையெழுத்துப் போட்டுக் கொண்டிருந்தாள்.

 

“ஏங்க ஏதாவது பதில் சொல்லிட்டு போங்க… பதிலே சொல்லாம சுத்தல விட்டா என்ன அர்த்தம்… எனக்கு உங்கள பிடிச்சுருக்கு… ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிச்சுருக்கு… கல்யாணம் பண்ணிக்கலாமா..?” என்றவனை நிமிர்ந்து பார்த்தாளே தவிர, ஆரா பதிலொன்றும் சொல்லி விடவில்லை. பதில் சொல்லும் எண்ணமும் அவளுக்கு இருக்கவில்லை.

 

முதல்முறை கேட்ட போதே பிடிக்கவில்லை என்ற பிறகும், தொடர்ந்து நச்சரித்துக் கொண்டிருப்பவனுக்கு என்ன பதில் சொல்வதாம். அப்படியே சொன்னாலும் அது அவன் செவியில் நுழைந்து மூளையை அடையுமா என்பது சந்தேகம் தான். வெளியில் வந்தவள், படிப்பதற்கு எடுத்த புத்தகங்களை வண்டியின் இருக்கைக்கு அடியில் வைத்துப் பூட்டிக் கொண்டிருந்தாள்.

 

“இன்னைக்கு இல்லனாலும் எனக்கான பதில நீங்க கண்டிப்பா கூடிய சீக்கிரமே சொல்லி தான் ஆகணும்… அன்னைக்கு உங்க பதில் சம்மதமா தான் இருக்குமுனு நம்பறேன்…” என்றான் அவன் மலர்ந்த முகமாய். ஒரே ஒரு நொடி அவளின் விழிகள் அவனின் விழிகளைக் கூர்மையாக ஊடுருவி பார்த்தது. அவளின் இதழோரம் அலட்சியமாய் சுழிந்தது.

 

“பெஸ்ட் ஆப் லக்…” என்றவள் வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டாள். அவனோ பார்த்தது பார்த்தபடி அவள் கண்களில் இருந்து மறைந்த பின்பும் அப்படியே தான் நின்றிருந்தான்.

 

அன்று அவள் அவனை அத்தனை பெரிதாய் நினைத்திருக்கவில்லை. ஏனோ அப்படி நினைத்திருக்க வேண்டுமோ என்று இப்போது தோன்றுகிறது. இல்லையென்றால் அவள் அன்னை வரை இந்த விசயத்தை வளர விட்டிருக்க மாட்டாளே!

 

நிதானமாக அவனின் புறம் பார்வையைத் திருப்பினாள். இன்னும் அவன் ஆழ்ந்த சிந்தனையில் தான் இருந்தான்.

 

“டீ ஆர் காஃபி…” என்றாள் அவனிடம்.

 

“ஹான்…” அதிர்ந்து விழித்தான் ஒரு நொடி. அவள் கேட்டது காதுகளை அடைந்திருந்தாலும் மூளையை எட்டியிருக்கவில்லை.

 

“டீயா காஃபியானு கேட்டேன்… சாப்பிடுவீங்க தானே…” எனக் கேள்வியாய் அவனைப் பார்த்தாள் ஆரா.

 

“ம்ம்ம்… ஆனா இங்க கடை எங்க இருக்கு… நாம வேணுமுனா ஏதாவது ரெஸ்ட்ராண்ட் போய்டலாமா..?” என்றவனுக்கு எதிர்புறமிருந்த தள்ளுவண்டிக் கடையைக் கண்களால் காட்டினாள்.

 

“இங்கலாம் கூட நீங்க சாப்பிடுவீங்களா..?” என்றவன் அவளின் கண்டிப்பான பார்வையை உணர்ந்து, “இல்ல பொதுவா பொண்ணுங்க இத மாதிரி இடத்துல எல்லாம் சாப்பிட மாட்டாங்க… அதான்…” என்றவனுக்கு அவள் பதிலேதும் சொல்லவில்லை.

 

“டீ…” அவளின் மௌனத்தில் சற்றே இறங்கி ஒலித்தது அவன் குரல்.

 

“ஓ.கே… வெயிட் பண்ணுங்க வாங்கிட்டு வந்துடறேன்…” என்றவள் எழுந்துக் கொண்டாள்.

 

“நானும் வரவா..?” என்றான் அவன் சற்றே தயங்கி.

 

“இல்ல வேண்டாம்…” என்றவள் அந்தக் கடையருகில் சென்றிருந்தாள்.

 

“மணிண்ணா ரெண்டு டீ… ஒன்னு ஸ்ட்ராங்கா… சுகர் கம்மியா…” என இவள் பூங்காவின் உள்ளிருந்தே குரல் கொடுக்க, ஐம்பதைத் தொட்ட மனிதர் ஒருவர் ஆவலாய் எட்டிப் பார்த்தார். ஆங்காங்கே முடிகள் நரைத்து தசைகள் சுருங்கி இருந்தாலும் உடல் திடகாத்திரமாகவே இருந்தது. அதிலிருந்தே அவனுக்குத் தெரிந்துப் போயிற்று இந்த இடத்திற்கும் அந்த மணியண்ணனுக்கும் அவள் புதியவளில்லை என்று. அப்போது தான் புரிந்தது அவனின் கேள்வி எத்தனை அபத்தமென்று.

 

“என்ன கண்ணு கொஞ்ச நாளா இந்தப் பக்கம் ஆளையே காணும்… வேலை ரொம்ப அதிகமோ..?” என்றார் அவள் கேட்ட தேனீரைப் போடுவதற்கு ஆவன செய்தபடியே.

 

“கொஞ்சம் அதிகம் தான் மணியண்ணா…” என்றாள் அவள் புன்னகை முகமாய்.

 

“சரிதான் கண்ணு… இந்த காலத்து புள்ளங்களுக்கு எங்க நிக்க நேரமிருக்குது… அப்படி ஓடி ஓடி என்னத்த தான் சேக்கறீங்களோ போ..?” என்றார் அங்கலாய்ப்பாய் அவர். சிரித்துக் கொண்டவள் பதிலொன்றும் சொல்லவில்லை.

 

“நீ பேச கூட வேண்டான் கண்ணு… இப்படியே நின்னு சிரிச்சுட்டே இருந்தா போதும்… மனசுக்கு நிறைவா இருக்கு…” என்றதற்கும் சிரித்துக் கொண்டாள் அவள்.

 

சற்றே தொலைவிலிருந்து இவர்களையே பார்த்துக் கொண்டிருந்த வெற்றிக்கு அவர் ஒன்றும் பொய் சொல்வதாகத் தோன்றவில்லை. உண்மையில் அப்படி ஒரு வசீகரிக்கும் புன்னகை அவளுக்கு. ஆனால், அந்த புன்னகையை இப்போது தான் முதன் முறை பார்க்கிறான் அவன். ‘கார்ஜியஸ்…’ என முணுமுணுத்தவன் பார்வை அவனை மறந்து அவளின் இதழ்களிலேயே தேங்கிவிட்டது.

 

இப்படி ஒரு சிரிப்பை அவனைப் பார்க்கையில் அவள்  வெளிப்படுத்தியதே இல்லை. ஏன், அந்த நூலகத்தில் இருக்கும் யாரிடமுமே வெளிப்படுத்தியது இல்லை. வருவாள், புத்தகத்தைத் தேடி எடுத்துக் கொண்டு சென்று விடுவாள். ஒரு சில நாட்கள் அங்கேயே இருந்தும் படித்திருக்கிறாள் தான். ஏன் அப்படியான ஒரு சமயத்தில் தான் அவன் அவளில் காதலில் விழுந்தான். அவள் எந்த காட்சியை எம்மாதிரியான புத்தகத்தைப் படிக்கிறாள் என்பதைப் புத்தகத்தை அல்ல, அவள் முகத்தைப் பார்த்தாலே கண்டு கொள்ளலாம். ஏழுவர்ண ஜாலம் காட்டும் வானவில் அவள் முகம். உள்ளது உள்ளபடி காட்டும் பளிங்கு அவள் வதனம். அதில் தலைக்குப்பற விழுந்தவன் தான் இன்னும் எழ மனமில்லாமல் தவழ்ந்து கொண்டே இருக்கிறான்.

 

“பஜ்ஜி இப்பத் தான் போட்டேன்… சூடா இருக்குது… சாப்பிடறீயா கண்ணு…” என்றார் அவர்.

 

“சாப்பிடலாமே…” என்றவள் வெற்றியைப் பார்த்தாள்.

 

“வெற்றி பஜ்ஜி சாப்பிடறீங்களா..?”

அவள் அங்கிருந்தே கேட்கவும் இவன் தலை சம்மதமாய் ஆடியது.

 

“ஐய்யே… அந்த புள்ளய உக்கார வச்சுட்டு தான் நீ இங்க கத பேசிட்டு நிக்கறீயா கண்ணு… போய் பஜ்ஜிய சாப்பிடு போ… டீய போட்டு நானே குடுத்து விடறேன்…” என்றவர் சின்ன சின்னதாய் கிழிக்கப்பட்ட செய்தி தாள்களில் நான்கு பஜ்ஜியைச் சுருட்டிக் கொடுத்தார்.

 

வாங்கிக் கொண்டு வந்தவள் அவனிடம் இரண்டை நீட்டினாள். மறுக்காது வாங்கிக் கொண்டான்.

 

“அப்போ பதில் சொல்ல ரெடியாகிட்டீங்க… அப்படி தானே…” என்றான் புன்னகை முகமாய். அவளின் செய்கைகள் அவனுக்குச் சம்மதம் சொல்ல அழைத்து வைத்திருப்பதைப் போன்ற எண்ணத்தைத் தான் கொடுத்தது.

 

“நான் தான் என் பதில நீங்க முதல் தடவை கேட்கும் போதே சொல்லிட்டேன்னே வெற்றி… நீங்க தான் என் பதில ஏத்துக்காம திரும்ப திரும்ப அதே கேள்வியக் கேட்டுட்டு இருக்கீங்க…” என்றாள் அவள் அவனை நேருக்கு நேர் பார்த்து.

 

“ஆனா நான் என் விருப்பத்த சொல்லியும் நீங்க தொடர்ந்து லைப்ரரி வரவும் உங்களுக்கும் என் மேல நல்ல அபிப்பராயம்

தானோனு நினைச்சேன்…” என்றான் அவன் சட்டென சருங்கிய முகத்துடன்.

 

“அப்போ நீங்க புடிச்சுருக்குனு சொன்னதுக்காகவே நான் நீங்க இருக்க இடத்துக்கு வராம ஓடி ஒழிஞ்சுக்கணும்னு சொல்லறீங்க அப்படி தானே…  அப்போ வேலை செய்யற இடத்துல ஒருத்தர் புடிச்சுருக்கதா சொன்னா வேலைக்கே போக கூடாது… இல்லையா..?” என்றாள் அவள் அமைதியான குரலில், அதே நேரம் தீவிரமான அழுத்த பாவத்துடன்.

 

அவனிடம் அப்படமான அதிர்ச்சி. அவன் சட்டென்று பதிலெதும் சொல்லி விடவில்லை. சொல்ல முடியவில்லை. அவள் அன்னையிடமிருந்து அத்தனை நம்பிக்கை ஊட்டும் வார்த்தைகள் அவனை அடைந்திருந்தது. அதற்குள் மணியண்ணாவே வந்து அவர்களுக்கான தேநீரைக் கொடுத்துவிட்டு சென்றிருந்தார்.

 

“டீய சாப்பிடுங்க…” என்றவள் தன்னுடையதைப் பருக தொடங்கி இருந்தாள்.

 

“அது… நா… நிஜமாவே உங்களுக்கு என்ன பிடிக்கலையா..?” என்றவனின் தடுமாற்றமான குரலில், நிராசையும் ஏமாற்றமும் வழிந்தது.

 

“அப்படி தான் முதல் தடவச் சொன்னதா எனக்கு நியாபகம்…” என்றாள் அவனின் கண்களைப் பார்த்து அழுத்தமாய்.

 

“மறுபடி கேட்கும் போது நீங்க எதுவுமே சொல்லாததால தான்…” என்றான் தயக்கமாய் அவள் முகம் பார்த்து அவன்.

 

“அதான் வீட்டுக்கு பொண்ணு கேட்டு ஆள் அனுப்பிட்டீங்க போல…” என்றாள் வெட்டும் பார்வையில் ஆரா.

 

“அது நீங்க அமைதியா இருக்கவும்… லவ் எல்லாம் புடிக்காது போலனு…” என்று தயக்கமாய் இழுத்து நிறுத்தி, சங்கடமாய் அவளைப் பார்த்தான் வெற்றி.

 

“நேரடியா வீட்டுலயே பேசிடலானு வீட்டுக்கு ஆள் அனுப்பிட்டீங்க… கரெக்ட்… வீட்டுல சொன்னா கண்டிப்பா ஒத்துப்பேனு நினைப்பு… அப்படி தானே…” என்றாள் அழுத்தமாக அமைதியான குரலில்.

 

“சாரி…” என்றவன் தலை தானாய் குனிந்திருந்தது.

 

“சொன்னா புரிஞ்சுப்பீங்கனு நினைச்சேன் வெற்றி… ஆனா, நீங்க இப்படி பண்ணுவீங்கனு நான் எதிர்பாக்கல…” என்றாள் ஆற்றாமை நிறைந்த குரலில்.

 

“என்ன தெரியும் என்ன பத்தி… எப்படி என்ன கல்யாணம் பண்ணிக்கணுமுனு  முதல முடிவு பண்ணீங்க…” என்றாள் அவனைக் கூர்ந்து பார்த்து.

 

“உங்களுக்கு அப்பா இல்ல… அம்மா மட்டும் தான்… ஒரே ஒரு தங்கச்சி… அவங்களுக்கு கல்யாணம் ஆகி மூணு வயசுல ஒரு குழந்தை இருக்கு…” அவன் மேலே சொல்ல விடாது தடுத்திருந்தது ஆராவின் கேலியில் சுழிந்த இதழ்கள்.

 

“என்ன பத்திக் கேட்டா… என் பாயோ டேட்டாவ மனப்பாடம் பண்ணி சொல்லிட்டு இருக்கீங்க வெற்றி நீங்க… கல்யாணம் பண்ணிக்க கேட்கறீங்களா..? இல்ல வேலைக்கு எதுவும் ஆள் எடுக்கறீங்களா..?” என்றவளுக்கு இம்முறையும் அவன் பதிலெதுவும் சொல்லவில்லை.

 

“புரிஞ்சுக்கோங்க வெற்றி… எனக்கு உங்க மேல எந்த இன்ட்ரெஸ்டும் கிடையாது… நமக்குள்ள கல்யாணம் பண்ணாலும் செட் ஆகாது… இது ஒன்னும் ஒத்த மாட்டு வண்டி கிடையாது… ஒருத்தருக்கு புடிச்சா மட்டும் போதுனு நினைக்க… இந்த பாரத்த கடைசி வரைக்கும் ஒத்தையா இழுக்க முடியாது வெற்றி…” என்றாள் அவனையே ஆழ்ந்து பார்த்தபடி.

 

“ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க ஆரா… நிஜமாவே உங்கள நான் ரொம்ப நல்லா பாத்துப்பேன்… என் காதல் நிச்சயம் உங்களையும் காதலிக்க வைக்கும்… ஒருவேள உங்க அம்மாவுக்காக யோசிக்கறீங்களோ..? கல்யாணத்துக்கு அப்பறம் அவங்கள நாம ரெண்டு பேரும்  நல்லா பாத்துக்கலாம்… வேணுமுனா நம்ம கூடவே கூட கூட்டிட்டுப் போய்டலாம்… உங்க அம்மாவும் இத தான ஆசை படறாங்க… எப்படியாவது நீங்க கல்யாணம் பண்ணிக்கணுமுனு நினைக்கறாங்க… ப்ளீஸ் ஆரா… உங்க அம்மாக்காவாவது நீங்க கல்யாணம் பண்ணிக்கலாம் இல்ல…” என்றான் அவன்.

 

“இங்க பாருங்க வெற்றி… இங்க யாருக்காகவும் யாரும் வாழ முடியாது…” என்றவள் ஒரு நொடி நிறுத்தி, “ரேப் பண்ணிட்டா காதல் வந்துடும்… கட்டாய தாலி கட்டிட்டா காதல் வந்திடும்… சேந்து வாழ ஆரம்பிச்சுட்டா காதல் வந்திடும்னு நினைக்கறதெல்லாம் சுத்த முட்டாள் தனம்… எங்க அம்மாவுக்காக எல்லாம் உங்கள கல்யாணம் பண்ணி வாழ முடியாது என்னால… எங்கம்மாவ ஹேண்டில் பண்ண எனக்கு தெரியும்… நமக்காக நாம கல்யாணம் பண்ணிகிட்டா தான் சந்தோஷமா இருக்க முடியும்… இல்லைனா ஒன்னு ரெண்டு வருஷத்துக்கு அப்பறம் இந்த வாழ்க்கை சலிப்பு தட்டிடும்… அதுக்கு அப்பறம் டைவர்ஸ் கேட்டு நீங்களும் நானும் தான் கோர்ட்டுக்கு நாயா அலையணும்…” என்றவள் இதற்கு மேல் சொல்வதற்கு ஒன்றுமில்லை என அமைதியாகிவிட, சில நிமிடங்கள் கணத்த மௌனம் இருவரையும் ஆக்கிரமித்தது.

 

“புரியுது ஆரா…  நானுமே உங்கள இதுக்கு மேல கட்டாயப்படுத்த விரும்பல… ஆனா… ஏன் உங்களுக்கு என்ன புடிக்கலனு காரணமாவது சொல்லலாமே..?” என்றான் தயக்கமாய் வெற்றி.

 

“உங்களுக்கு ஏன் என்ன பிடிச்சிருக்கு…” என எதிர் கேள்விக் கேட்டாள் பெண்.

 

“இந்த பொறுமை… அமைதி… சாந்தமான குணம்… இதோ இப்ப .கூட சண்டை போடாம கூப்பிட்டு வச்சு இவ்வளவு மெச்சூர்டா இந்த விசயத்த ஹேண்டில் பண்ணறீங்களே இந்த விதமுனு உங்கிட்ட எல்லாமே எனக்கு புடிச்சுருக்கு ஆரா…” என்றான் அவளின் விழிகளை நேருக்கு நேர் பார்த்தபடி.

 

“நாணயத்துக்கு எப்பவுமே ரெண்டு பக்கம் இருக்கும் வெற்றி… நீங்க பாக்கற ஒரு பக்கம் தான் அதோட முழுமையான தோற்றம்னு நீங்க நினைச்சீங்கனா உங்கள விட முட்டாள் வேற யாருமில்ல… அப்பறம் என் மனசுக்கு பிடிக்காத நீங்க எப்பவுமே எனக்கு மூணாவது மனுஷன் தான்… விருப்பு வெறுப்பு அதுக்கான காரணமெல்லாம் என்னோட தனிப்பட்ட விஷயம்… ஒரு மூணாவது மனுஷன்கிட்ட பிடிக்கலனு சொல்லறதோட நிறுத்திக்கிட்டா போதும்னு நினைக்கறேன்…” என்றவள் எழுந்து கொண்டாள்.

 

“ஓ.கே வெற்றி… எனக்கு டைமாச்சு… நா கிளம்பறேன்… இத்தோட இந்தக் கல்யாண பேச்சை விட்டுடுவீங்கனு நம்பறேன்… வரேன்…” என்றவள் அவனின் பதிலையும் எதிர்பாராமல் கிளம்பிவிட்டாள்.

 

இவள்தான் வேண்டுமென வலை விரிக்கக் காத்திருக்கும் வேடனவனிடம் இத்தனை இலகுவாய் மறுப்பை உரைத்திடத்தான் அவளால் முடியுமா? உரைத்திட்டாலும் சரியெனக் கேட்டுக் கொண்டு அவனும் தான் விலகிச் சென்று விடுவானா?

 

யார் எதை வேண்டாம் வேண்டாம் என்கிறார்களோ காலம் வலிந்து அதைத்தான் அவர்களிடம் திணிக்கும். அதே காலம், காதலையும் அவளிடம் வலிந்தே திணிக்கும்.

 

  – பற்றி எரியும்…

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 10

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
7
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்