
அந்தி சாயும் நேரத்தில் போக்குவரத்து நெரிசலைப் பொருட்படுத்தாது எந்த சிக்னலையும் மதியாது சாலையில் பறந்து ஆராவமுதனின் தார்.
உள்ளூர எழுந்த படபடப்பு இன்னும் தீரவே இல்லை அவனுக்கு. குன்னூரில் குடோன் ஸ்டாக் செக்கிங்கில் இருந்தவனிடம் ஷக்தியை மருத்துவமனையில் சேர்த்திருப்பதாகச் சிவா சொன்னவுடன் அவன் இருதயத் துடிப்பு அத்தனை அதிகரித்தது.
இதோ இப்போது மருத்துவமனையை அடைந்த பின்னும் இன்னும் அது மட்டுப்பட்டிருக்கவில்லை.
சிவாவைப் பார்த்தவுடன், “ஆரா எங்கடா?” என்று வேர்த்துப் போய் பயந்த முகத்துடன் கேட்ட ஆராவமுதனை அவன் அரைந்த அரையில் அந்த தளத்தில் இருந்தவர்களின் பார்வை மொத்தமும் அவர்கள் இடம் தான்.
“சிவா”
“மூடிட்டு வா” என்று ஆத்திரம் மீதுற கத்தியவன் மருத்துவரின் அறைக்குள் சென்றான்.
“நீங்க தான் ஷக்தியோட அண்ணாவா?” என்று உறுதிப்படுத்தக் கேட்டார் அந்த பெண் மருத்துவர்.
அவரின் பார்வையின் முறைப்பிலேயே ஒரு மாதிரி ஆகிவிட்டது அவனிற்கு. அதுவும் அவரின் தொடர் முறைப்பு சிவாவை நோக்கி இருக்க, குழம்பியும் போனான் அவன்.
“ஆமா டாக்டர். என்னாச்சு அவளுக்கு?”
“ஸ்ட்ரெஸ் அட்டாக்”
அதிர்ந்து விட்டான் அவன்.
“டாக்டர்” என்றவன் குரலே மேலெழும்பவில்லை.
“இப்போ ரொம்பவே பெட்டர் அவங்க. ஆனா தைரியமில்லாம இருக்காங்க” என்றவர் சிவாவை அழுத்தமாய் பார்த்தபடி, “மிஸ்டர் நீங்கக் கொஞ்சம் வெளிய இருங்க” என்றார்.
சிவா, “பரவாயில்ல. நீங்க சொல்லுங்க” என்றான் அலட்டாது.
“ம்ம்ப்ச்” என்று அவர் சலிக்க,
“நீங்க சொல்லுங்க மேம். அவனுக்கு தெரியாம எதுவும் இல்ல”
“உங்க சிஸ்டர் அதீத டிப்ரஸன்’ல இருக்காங்க ஸர். ஒருவித விரக்தி நிலை. இவர் வந்து சேர்த்த அரை மணி நேரத்துல மயக்கம் தெளிஞ்சுடுச்சு ஆனா அந்த இன் பிட்டுவீன் பிரியட்ல அவங்க பேசுனத நான் ரெக்கார்ட் பண்ணியிருக்கேன். அது முழுக்க அவங்க அப்பா தான்” என்றவர் நிறுத்தினார்.
அதற்கே ஆராவமுதனின் கண்ணில் நீர் கோர்த்துவிட்டது. தந்தை, அவரின் திடீர் மரணம் இதுவெல்லாம் இன்னமும் அவனால் ஜீரணிக்க முடியாத ஒரு வலி.
“கன்ட்ரோல் மிஸ்டர். அதுவும் போக அவங்கள ஹராஸ் பண்ணியிருக்காங்க” என்றவர் சொல்லைக் கேட்டு,
“டாக்டர்” என்று அதிர்ந்து கத்தி விட்டான் ஆராவமுதன்.
“அமுதா” என்று அவன் கைகளைச் சிவா பிடிக்க,
“என்ன சொல்லுறீங்க” என்றவனுக்கு அதிர்ச்சி தாங்க முடியவில்லை.
கோபம் வந்தாலும் ஷக்தியைப் பார்க்காதத் தன் இயலாமையை நினைத்துக் குன்றிவிட்டான் அவன்.
இதுவே இமயவரம்பன் இப்போது இருந்திருந்தால் என்ற எண்ணம் வராமலில்லை அவனுக்கு. அவனிற்கே தங்கையை பார்க்காதது ஒரு இழுக்காய் போனது.
“ஹ.. ஹராஸ்’னா எப்படி?” என்றவன் கேட்பதற்குள் செத்து மடிந்தான் அண்ணனவன்.
“அமுதா.. அமைதியா இரு” என்று சிவா மீண்டும் அதட்ட,
“அவங்க எழுந்தா தான் கேட்கனும் ஸர். மேலோட்டமா தான் அவங்க புலம்பல் இருந்துச்சு.. அப்பா, சிவா, ஈசா, அண்ணா இப்படி பலது அவங்க சொன்னாலும் ‘தள்ளிப் போடா, தொடாத என்னை’ இந்த வார்த்தைகள வெச்சுத் தான் நான் அவங்கள ஹராஸ் பண்ணியிருக்காங்கன்னு சொன்னேன்” என்றவர் ஷக்தி பிதற்றிய ஒலி வடிவத்தை ஓட விட்டார்.
அதைக் கேட்கக் கேட்க அண்ணனாய் பதறினான், கோபமுற்றான். இருக்கும் இடத்தில் தன்னின் உணர்வுகளை மிகுதியாய் கட்டுப்படுத்தியவன் சிவாவின் கைகளைப் பற்றிக்கொண்டான் பற்றுக்கோலாய்.
“ரொம்ப டிஸ்டர்ப்டா இருந்தாங்கன்னு இவர் பர்மிஷனோட செடேஷன் போட்டிருக்கேன். கொஞ்சம் தூங்கனா பெட்டர் ஆவாங்க.
(Psychiatrist) சைக்கியாடிஸ்ட் கிட்ட ஒரு செஷன் போகறது நல்ல ஆப்ஷன்” என்றவர் ஷக்தியின் ரிப்போர்ட்டை ஆராவமுதனிடம் கொடுத்தார்.
“எனி திங் எல்ஸ்?”
ஆராவமுதன், “அது, இந்த ஸ்ட்ரெஸ் அட்டாக்னால ஏதாவது பிராபலம்?”
“ஸ்ட்ரெஸ் தான் மேஜர் ரீசன். அதுதான் எல்லாத்துக்குமே காரணம். இப்போ கேன்சர் விட ஸ்ட்ரெஸ்ஸும் டிப்ரெஷனும் தான் ரொம்பவே பயங்கரமா இருக்கு. ஷக்திக்கு ரெண்டுமே இருக்கு, அவங்கக் கூட கொஞ்சம் டைம் ஸ்பென்ட் பண்ணுங்க. மறக்காம சைக்கியாடிஸ்ட் கிட்டப் போங்க, ஷி வில் பீ ஓகே சூன்” என்றவர் சிவாவைக் கை காட்டி,
“இவர இனி ஷக்தி பக்கத்துலையே விடாதீங்க. How dare you beat her? பொண்ணுனா அடிச்சுடுவீங்களா? நீங்க அவங்க ப்ரணட்னால விடறேன்” என்றவர் தன் கோபத்தைக் காட்டினார்.
“Am dare enough to beat her! தப்புனா அவள கேட்கற முழு உரிம எனக்கு இருக்கு. அண்ட் தேங்க்ஸ்” என்றவன் வெளியேறிவிட்டான்.
ஆராவமுதன் அவஸ்தையாய் உணர்ந்தான். அவனும் சிவா சென்றவுடன் எழுந்துகொள்ள, “ஷக்திய கல்யாணம் பண்ண போறவறா?” என்றார் அந்த மருத்துவர் திடீரென்று.
அது ஆராவமுதனை உள்ளூர திருகியது. ஏதோ தோன்ற “ம்ம்ம்” என்றவன், “தேங்க்ஸ் டாக்டர்” என்றவுடன் வெளியேறிவிட்டான்.
அவன் முகம் கூம்பி, குன்றியபடி வெளியேறியதைப் பார்க்கப் பார்க்கப் பொறுக்கவில்லை சிவாவிற்கு.
அவன் அமுதா எப்போதும் கெத்தாக, கவலையின்றி இருப்பதே விரும்புபவன் அவனை இப்படிக் காணச் சகிக்காது, “ஷக்திக்கு ஒன்னுமில்லை. அவங்க சொன்ன மாதிரி அவள ஹராஸ் பண்ணியிருக்கான் ஒரு *** பய. அதத்தாண்டி வேற ஒன்னுமில்லை.” என்றான் அழுத்தமாய்.
“சிவா”
“ம்ம்.. இப்போதான் என்கிட்ட சொன்னா. சொல்லச் சொல்ல என் கன்ட்ரோல் மீறி அடிச்சுட்டேன்” என்றான் ஆராவமுதனைப் பார்ப்பதைத் தவிர்த்து.
“அடிசியா?” என்றவன் முறைக்க,
“ம்ம்ப்ச்.. இப்போ என்ன உனக்கு? அவ பேசினது சுத்த டம்ப்! அதான் என்னையும் மீறி அடிச்சுட்டேன்.”
ஆராவமுதன் அப்போதும் அழுத்தமாய் சிவாவையே பார்க்க,
“பாரு, ஷக்தி எனக்கு எப்பவுமே ஸ்பெஷல். அவளுக்கு ஒன்னுன்னா உன்ன மாதிரி எனக்கும் பதறும். அவள அதட்டுறது திட்டுறது மட்டுமில்லை அடிக்கவும் எனக்கு உரிமை இருக்க, அதக் கேட்க உனக்கும் ரைட்ஸ் இருக்கு. புரியுதா” என்றவன் பேச்சில் தெறித்த உரிமையுணர்வு புரிந்தது ஆராவமுதனுக்கு.
“ம்ம்ப்ச்.. விட்டுத் தொல” என்றவன் ஷக்தியைப் பார்க்க அவள் அனுமதிக்கப்பட்டிருந்த அறைக்குள் சென்றனர்.
அவளின் களைத்த நிலை அவனை வதைக்க, கண்மூடி அங்கிருந்த நாற்காயில் அமர்ந்துவிட்டார் ஆராவமுதன்.
“என்கிட்ட கூட இவ சொல்லலையேடா” என்றவனால் தாளவே முடியவில்லை.
ஷக்தி ஆராதனா, அத்தனை தைரியமாய் தன்னம்பிக்கையுடன் வளர்ந்த பெண்.
நமக்கு மிகப்பிடித்த செயல்கள் பலவற்றை, இதுவெல்லாம் ஆண்கள் மட்டும் செய்ய வேண்டியது என்று கூறி தடைவிதித்திருப்பர். அதிலேயே நம்மில் பலரது கனவுகள் முறிந்திருக்கும். ஆனால் அதுவெல்லாம் அவளுக்கு இயல்பாய் கிடைக்கச் செய்தார் இமயவரம்பன்.
அப்படி இருக்க அவள் அருகே ஒருவன் அவளிடமே அத்துமீறி உள்ளான்! அவளின் அப்போதைய நிலை அண்ணனவனுக்குப் புரிந்தாலும், அவனிடம் ஏன் சொல்லவில்லை என்ற கோபமே பிரதானமாய் இருந்தது.
“அவ என்கிட்ட கூட சொல்லனும்னு சொல்லல. அவள பேச வெச்சு நானா கேட்கவும், சொல்லிட்டா” என்றவன் ஆராவமுதன் தோளில் கை வைத்து அழுத்தினான்.
ஆராவமுதன், “எந்த பரதேசி நாய்னு சொன்னாளா”
சிவா, “சொல்லியிருந்தா நான் இப்போ இங்க இருந்திரும்பேனா என்ன?”
ஆராவமுதன், “ம்ம்.. கண்ணு தெறக்கட்டும். கேட்டு எவன்னு எலும்பு எண்ணிடறேன்” என்றவன் கோபம் மட்டுபடவே இல்லை.
நேரம் சென்று எழுந்தவளின் கேள்விகளை ஆராவமுதன் தொடுக்க, “அந்த டென்ட் கடை ஓனர் நினைக்கறேன். ஐம்பது வயசுக்கு மேல இருக்கும்” என்றாள் வறண்டக் குரலில்.
மருத்துவரின் ஆலோசனை பற்றி சிவா கூற, “நான் இப்போ ரொம்பவே நல்லா இருக்கேன் ஷிவ்! ஈசாகிட்ட உன்கிட்ட சொல்லிட்டேன் தான, அதுவே கொஞ்சம் பர்டன் கொறஞ்ச ஃபீல். தேவைனா நானே சொல்லுறேன், அப்போ கன்சல்ட் பண்ணிக்கலாம்” என்றுவிட்டாள்.
“அவங்க இவ்வளவு தெளிவா இருந்தா அவங்களுக்கு தோனும் போது கூட்டிட்டு வாங்க. ஆனா கூட யாராவது இருக்க மாதிரி; தினமும் அவங்க கிட்ட பேசுற மாதிரி பார்த்துக்கோங்க. பெட்டர், ஒரு மாற்றத்திற்கு வேற எங்கையாவது ஒரு வாரம் போல அவங்கள கூட்டிட்டு போங்க. ஒரு மைண்ட் சேஞ் கிடைக்கலாம்” என்றார் அந்த மனோதத்துவ மருத்துவர்.
அவரின் அறிவுரைப்படி ஷக்தியை ஆழ்வார்திருநகரி அழைத்துச் செல்ல எண்ணி முதலில் ப்ரமோத்திடம் இருந்து ஆரம்பித்தான் சிவா.
“அண்ணா ஷக்திய நான் எங்க ஊருக்கு நாலு நாள் கூட்டிட்டு போறேன். அவளுக்கும் ஒரு சேஞ்சா இருக்கும். இப்போ வருசையா கவர்மென்ட் ஹாலிடே தானே அதான் இப்போ பிளான் போட்டேன்’ண்ணா” என்றான் ப்ரமோத்திடம் தெளிவாய்.
அவன் யோசிக்க, “வீட்டுல அம்மா, ஆச்சி, அக்கா, அக்கா பசங்க எல்லாம் இருக்காங்க அண்ணா” என்றான் ப்ரமோத்தின் யோசனையை நினைத்து.
“ம்ம்ப்ச்.. அதுக்கில்லடா. அவ எங்கள தவிர்த்து இப்படி தனியா வேற இடத்தில இருந்ததில்லையா அதான் யோசிச்சேன்” என்றவன் சற்று பொருத்து, “நா அப்பாகிட்ட சொல்லிட்டு உனக்குக் கால் பண்ணுறேன் சிவா” என்றிருந்தான்.
அது ஒரு விநாடி சிவாவிற்குக் கோபத்தைக் கொடுத்தாலும் அந்த நொடி அவளின் மீதான அவர்களின் அக்கரையில் சமாதானம் ஆகியிருந்தான்.
காளிதாஸும் யோசிக்க ஜான்வி, “எத்தன நாளுக்கு தான் நம்ம முகத்தையும் வேலையுமே அவ பார்ப்பா? அங்கையும் கொஞ்ச நாள் இருக்கட்டுமே மாமா. சிவா வீடு தானே, அவனும் புதுசில்லையே?” என்றிருக்க,
லாவண்யா, “போகட்டும் அண்ணா. விவரம் தெரியாத புள்ளையா அவ? நல்லா பழகுற ஆளுங்க தான சிவா வீட்டுலயும். நாலு நாள் தான, இருக்கட்டும். அனுப்பி வைங்க’ண்ணா” என்றதிலேயே ஷக்தியின் பொறுப்பு அவருடையது என்பதையும் உணர்த்தி இருந்தார் அவர்.
“சரி, ப்ரமோ சிவாவை என்கிட்ட பேசச் சொல்லு” என்றுவிட்டு அவர் சென்றுவிட்டார்.
உடனே அவருக்கு அழைத்தவன், பேசும் விதத்தில் பேசி ஷக்தியை அழைத்துச் செல்ல அனுமதியும் வாங்கிவிட்டான், சிவனேஷ் வீரபத்திரன்.
அவன் வீட்டிற்கு அழைத்து நம்மாழ்வார் தேனாட்ச்சியிடம் பேச, முதலில் ஒரு தயக்கம் அவர்களிடம்.
வயது பெண்ணுடன் மகன் வீட்டிற்கு வருகிறேன் என்றால் தயக்கம் இருக்காதா அந்த பாரம்பரிய மனிதர்களுக்கு?
இருந்தும், ஷக்தி ஆராதனாவிற்காக அவளின் மனநிலையை மாற்றம் செய்வதற்காகவே, “கூட்டி வாய்யா. பிள்ள இங்கனவாவது முகம் பூக்க இருக்கட்டும்” என்று தேனாட்ச்சி சொல்லிய பின் மறுப்பு வேறாரிடம் இருக்கும்.
அன்று மாலையே டென்ட் கடைக்காரனின் எலும்புகள் எண்ணப்பட்டிருந்தது ஆராவமுதன், சிவா மற்றும் ப்ரகாஷால்.
அதிலும் சிவாவின் போலீஸ் அடியில் குற்றுயிராகிப் போயிருந்தான் அவன்.
அதன்பின், ஆழ்வார்திருநகரி ஷக்தியையும் சிவாவையும் வாரி அணைத்துக்கொண்டது.
அதைவிட நம்மாழ்வாரும் உண்ணாமலையும் தாங்கவே செய்தனர் ஷக்தியை.
அவள் அவர்களுக்கு ஷக்தியாய் இல்லாது ஆராதனாவாகத் தெரிந்தால். ஷக்தி என்றால் முழுமையும் ஆளுமையும் அதிகாரமுமாய் பார்த்திருப்பார்கள்.
ஆனால், ஆராதனா அன்பாகக் குறும்பு குமிழியிடும் பெண்ணாகத் தான் தெரிவாள்.
அவளின் பெயரிலேயே அவளின் இருவேறு முகங்களும் தெளிவாகத் தெரிந்துவிடும். சிவாவின் வீட்டாட்களுக்கு அவள் முதலில் ஆராதனா தான்.
ஆனால், ஷக்தியாய் அவளைப் பார்த்த பின்னர்?
தேனாட்ச்சி, “நாங்கூட பேன்ட் சட்டையோட வருவேனுட்டு இருந்தனே ஆத்தா, நீ என்னடான்னுட்டு பொடவையில வந்து நிக்கிறவ” என்று தவக்கடையில் கை வைத்தபடி அவளை வரவேற்றார்.
“புடவ கட்டினாதான் வீட்டுக்குள்ள விடுவீங்கனு சொல்லி கூட்டிட்டு வந்தான் பாட்டி”
கருணா, “அது ஒன்னுமில்லாத்தா, ஆத்தா உன் உடுப்பப் பாத்து அதுவும் ஏதாவது இந்த வயசுல உடுத்தனும்னுட்டா? அதென் மாப்புள உசாரா உம்ம பொடவ கட்டியே வரசொல்லிடுத்தான்”
“ஓஓ.. அப்போ பாட்டி வெஸ்டன் ஆவுட் ஃபிட் லவ்வராக்கும்” என்றவள் சிரிக்க,
“எஸ்ஸு.. எஸ்ஸு.. என் பெரிய பேராண்டி எனக்கு நீ உடுத்துற பாவாடயும் குட்டி சட்டையும் வாங்கியாந்தான். இதோ இவன் அய்யென் நான் போட்ட பாவத்துக்குத் தூக்கி கடாசிப்புட்டான், வவுத்தெரிச்ச புடிச்சவன்” என்று ஆழ்வாரை அவர் திட்ட,
“பாவாட குட்டி சட்டையா?” என்று ஷக்தி முழிக்க,
“ஸ்கர்ட் & டாப்டி ஷக்தி” என்று சிவா சொல்லவும் அப்படி ஒரு சிரிப்பு ஷக்தியிடம்.
மனம் விட்டுச் சிரித்தாள் பெண்ணவள். அத்தனை மாதங்களுக்குப் பிறகு அவளின் அந்த சிரிப்பே அத்தனை வசீகரித்தது சிவனேஷ்ஷை.
ஆனால் அது எரிச்சலூட்டியது ஒருவனை!
மேலே அவன் அறையில் ஒரு கேஸ் ஷீட்டில் மும்முரமாக இருந்தவனைக் கலைத்தது அந்த சிரிப்பொலி.
அதுவும் அவளின் அந்த அதீத சப்தத்துடன் சில நிமிடங்கள் வரை கடந்த அந்த சிரிப்பு அவனின் கவனத்தைக் கலைத்ததுடன் கோபத்தையும் தருவிக்க, அமர்ந்திருந்த நாற்காலியை ஆத்திரம் கொண்டு தள்ளிவிட்டு கீழே வந்தான்.
தடதடவென்று மர படிகளில் அவன் இறங்கி வந்த சப்தம் அத்தனை நாராசமாய் இருக்க, வழியில் இருந்த வெண்கல உருளி உதைபட்டது அவனின் வேகத்தில்.
அதெல்லாம் ஷக்தியின் சிரிப்பை நிறுத்தியிருக்க அனைவரும் திரும்பிப் பார்த்தனர்.
“ஹே, சென்ஸ் இல்ல? இப்படியா சிரிப்ப” என்றவன் ஆத்திரத்தில் அறிவிழந்து கேட்க,
“ஏன் உனக்கு டன் கணக்கில வழியுதோ?” என்ற ஷக்தியை வீடே அதிர்ந்து பார்த்தது.
“ஆராதனா” என்று கருணா அவளை அடக்குவதற்குள்,
“அடிங்க” என்றவன் அவளிடம் சீறிக்கொண்டு வர,
“என்ன?” என்று அவனை எதிர்கொண்டு அசராத தோரணையுடன் நேர்கொண்ட பார்வையுடன் நின்ற பெண்ணவளை அந்த கணத்தில் பிடிக்காது போனது, புகழேந்திரனுக்கு.
•••
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
14
+1
2
+1
2
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


தங்கையை கவனிக்காமல் விட்டு விட்ட குற்ற உணர்வு ஆருவிற்கு.
தவறினால் தட்டிக்கேட்கும் உரிமை எனக்கு உண்டு. ✨
சக்திஆராதனா பெயர் காரணம், அவளது இரு வேறு குணங்கள் மற்றும் அவை வெளிப்படும் சூழல் குறித்த விளக்கம் அருமை.
தேனாட்ச்சி பாட்டியின் பேச்சு அழகு. 😍😍