Loading

    அருணிற்கு தேஜாவை திருமணம் செய்து கொடுப்பதாகவும் பிரதன்யாவை யுகாதித்தனுக்கு பேசி முடிக்க இருப்பதாகவும் பத்மநாபன் சொந்தங்கள் முன்னிலையில் கூறினார்.

    “நல்ல விஷயம். ஒண்ணுக்குள்ள ஒண்ணா போகும். அருணும் சென்னையில தான் இருக்காப்டி அங்கேயே பாத்துக்கலாம்”என்று சொல்லி பேசவும் பத்மநாபன் மகிழ்ச்சியாக ஆமாம் என்றார்.

    “நிச்சய தேதி இதெல்லாம் பெரியப்பா பாத்து சொல்றேன்னார். ரெண்டு கல்யாணமும் ஒண்ணா வைக்கலாம் னு நினைக்கிறேன்”என்று கூற

    “அதுவும் சரிதேன் ஒரு செலவா போகும். கந்தசாமி மாமனும் பக்கமா இருக்காக தோதா முடிப்பாக”என்றவர்கள் “ஏன் சாரதா நீ எப்படி பெங்களூர் ல இருந்து இங்க”என்று இழுக்க

    “அதெல்லாம் பார்த்துக்கலாம் பெரியாத்தா.‌தம்பியை கொஞ்ச நாளைக்கு வீட்டுல இருந்து வேலை பார்க்கற மாதிரி சொல்லி இருக்கேன்.‌நானும் அவரும் சென்னையில் வீடு பார்க்கலாம் னு இருக்கோம்.”

    “அப்ப மெட்ராசுலயா கல்யாணம்”என்று சிலர் முணுமுணுக்க

    “அதெல்லாம் நம்ம மருமவன் கொலசாமி கோயில்ல தான் கல்யாணம். என்ன பத்து சரிதான. கந்தசாமிக்கும் அதானே கொலசாமி.கல்யாணத்தை கொலசாமி கோவில்ல முடிச்சுக்கிட்டு இங்கின வீட்டோட கெடா விருந்து போட வேண்டியது தான். அப்பறம் அங்க வேலை பாக்குறவியளுக்கு தனியா கூப்டு வச்சு விருந்து போட வேண்டியது தான்.”என்ற கெஜலட்சுமி சம்பந்தப்பட்டவர்களுக்கு சம்மதமா என்றும் கேட்டுக் கொண்டார்.

    “அப்பத்தா சொன்னா சரிதேன். என்ன சித்தப்பா”என்று சுதாகரன் கேட்க

    “சரிதான்யா”என்றார் அவரும்.

    இதில் எதுவுமே பேசாதது சம்பந்தப்பட்ட நால்வரும் தான். பிரதன்யாவிற்கு இதில் சுத்தமாக விருப்பம் இல்லை. ஒரு வேளை அக்காவிற்கு அருணைப் பிடித்து இருக்கிறதோ அது தான் அமைதியாக இருக்கிறாளோ என்று யோசிக்க அருண் வேறு தேஜாவை பார்த்து நிற்க முடிவே செய்து விட்டாள் அருணுக்கும் தேஜாவிற்கும் பிடித்து இருக்கிறது என்று.

    தேஜாவிற்கு மனது ஒரு நிலையில் இல்லை. தங்கை வேறு அருணின் புகைப்படத்தை நேற்று இரவு பார்த்தாள் அது சாதாரணமாகவா அல்லது வேறு ஏதேனும் விஷயம் இருக்கக் கூடுமோ என்றும் யோசித்தவள் பின் தனது கடந்த கால காதல் அவனை உறுத்துகிறதோ என்ற சிந்தனையிலும் இருந்தாள்.அருண் அவளின் கடந்த காலம் பற்றி நன்கறிந்தவன். அவனுக்கு அதனால் தன்னைப் பிடிக்கவில்லை போல அதுதான் இப்படி இறுக்கமாக இருக்கிறான் என்று சிந்தித்தாள்.

    அருணோ தந்தையின் சொல்லால் காயப்பட்டு எந்த யோசனையுமின்றி விரக்தியும் கவலையுமாக இருந்தான்.

    யுகாவிற்கு பழைய காதலை மறக்க முடியாத நிலை பிரதன்யாவின் எதிர்பார்ப்பு அதனை தன்னால் நிறைவேற்ற முடியாமல் போனால் அதனால் சொந்தங்களுக்கு இடையே மனக்கசப்பு வந்தால் என்று அந்த கோணத்தில் சிந்திக்க இரண்டு இணைகளை திருமண பந்தத்தில் இணைக்க பெரியவர்கள் தீர்மானித்து விட்டனர்.

    “ஆமா இந்த பொண்ணு பார்த்து பூ வைக்கிற விசேஷம் எல்லாம் இல்லாம இப்படி சாதாரணமா வந்து நின்னா என்ன அர்த்தம். போய் ஒரு சீலைத்துணியை கட்டி கூட்டி வந்து நிக்க சொல்றது”என்று உறவு பெண் கூற

    “அதானே”என்று மற்றவர்கள் கேட்க

    “எல்லாம் நம்ம புள்ளைய இதுல சடங்கு சம்பிரதாயம் எல்லாம் எதுக்கு”என்று சுதாகரன் அம்மா வள்ளிநாயகி கேட்க

    “அதுக்காக சும்மா விட முடியுமா? ஏ ரெண்டு பேரும் உள்ள வாங்கடி சீலையை கட்டுங்க”என்று சகபெண்கள் அதட்ட பிரதன்யா மூக்கை விடைக்க தேஜா திருதிருவென விழித்தாள்.

  “எந்தங்கச்சிய எல்லாம் இப்புடியே அழகுதேம் ஏன்டா மாப்ளைகளா உங்களுக்கு இந்த அலங்காரம் போதாதா”என்று சுதாகரன் கிண்டல் செய்ய

    “இப்ப அது ஒண்ணு தான் குறைச்சல்”என்று அருண் யுகா இருவரும் மெல்லிய குரலில் சொல்லிக் கொண்டனர்.

    அப்படி இப்படி என்று பேசி இருவரையும் புடவை கட்ட வைத்து பழச்சாறை கொடுக்க வைத்து விட்டு தான் மறுவேலை பார்த்தனர் உறவுகள்.

    “சரி மத்தது எல்லாம் பேசிப்போம் இப்ப சோலிய பார்க்கத்தான”என்றதும் அனைவரும் கலைந்து செல்ல பிரதன்யா தேஜா இருவரும் ஒரு பக்கம் செல்ல அருணும் யுகாவும் சுதாகரன் குழுவின் வாழ்த்து மழையில் சிக்கினர்.

    அறைக்குள் நுழைந்த பிரதன்யா அருணுக்கு குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பினாள்.

    இரவு மாடிக்கு வரவும் உங்களிடம் பேச வேண்டும் கூடவே யுகா மாமாவையும் அழைத்து வரவும் என்று அனுப்பி விட்டு ஆஃப்லைன் சென்றாள்.

    ‘இவ எதுக்கு என்னைப் பார்க்க கூப்பிடுறா அதுவும் யுகாவோட சேர்ந்து வர சொல்றா’என குழம்பிப் போனான் அருண்.

    யுகாவோ தனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என்று பிரதன்யாவிடம் சொல்லி திருமணத்தை நிறுத்த வேண்டும் என்று முடிவெடுத்தான்.

    “யுகா இந்த தனு லூசு நம்ம ரெண்டு பேர் கிட்டயும் பேசணுமாம் நைட் மாடிக்கு வர சொல்றா எதுக்கா இருக்கும்”என்று அருண் கேட்க

    “யாருக்கு தெரியும் போவோம்”என்றவன் “அப்புறம் கங்கிராட்ஸ் டா”என வாழ்த்த

    “நீ வேற ஏன்டா”என்றவன் “போவோம் என்ன தான் சொல்றான்னு கேட்போம்”என்றபடி படுத்து விட்டான்.

    சட்டென நினைவு வந்தவனாக வரும் போது தேஜாவையும் அழைத்து வா என்று குறுஞ்செய்தி அனுப்பி விட்டு படுத்தான்.

    “அக்கா உங்க கிட்ட ஒண்ணு கேட்கணும்”என்று தேஜாவிடம் மெல்ல பேச்சுக் கொடுத்தாள் பிரதன்யா.

    “கேளேன்”என்றபடி துணிகளை மடித்துக் கொண்டிருக்க

    “உங்களுக்கு நிஜமாவே இப்போ மேரேஜ் ஓகேவா”என்று வினவ

    “ஏன் அப்படி கேட்கிற ப்ரது எப்ப இருந்தாலும் செய்துக்கத் தான் போறோம் அதை அப்பா அம்மா விருப்பப்படி செய்ய வேண்டியது தான்.‌ ஏற்கனவே அவங்களுக்கு நான் நிறைய கஷ்டத்தை தந்துட்டேன்”என்றாள் உள்ளடங்கிய குரலில்.

    “அக்கா”என்று தயங்கி நின்ற தங்கையை தீர்க்கமாக பார்த்து விட்டு “எதுவா இருந்தாலும் நேரடியா கேளு ப்ரது”என்றாள் அழுத்தமாக.

    “எனக்கு இப்போ மேரேஜ் வேண்டாம்”என்றாள் ஒரு வழியாக.

   தங்கையை கூர்மையாக பார்த்த தேஜா”இப்போ மேரேஜ் வேண்டாமா இல்லை இந்த மேரேஜ் வேண்டாமா”என்று கேட்க

    “இந்த மேரேஜ் வேண்டாம்”

    “ஏன் வேண்டாம் யுகாவை பிடிக்கலையா”

    “இல்லை அது வந்து”என்று இன்னும் எப்படி பேசுவது என்று தயங்கியவளிடம் “உனக்கு அருணைப் பிடிச்சு இருக்கு ரைட்”என்றாள் நேரடியாக.

    “அக்கா”என்று அதிர்ந்த தங்கையிடம் “உன் ஃபோனை நேத்து பார்த்தேன்”என்றாள் மொட்டையாக.

    “என்ன முழிக்குற ஜஸ்ட் நீ அருணோட டிபியை பார்த்துட்டு அப்படியே வச்சதை தான் பார்த்தேன் அதான் ஒரு தாட் உனக்கு அருணைப் பிடிச்சு இருக்கோன்னு”என்று சொல்ல

    “ஆமாம் னு சொன்னா எனக்காக அப்பா அம்மா கிட்ட பேசுவீங்களாக்கா”என்று தைரியமாக கேட்கவும் தேஜாவின் முகத்தில் சிறு புன்னகை.

    “ஓஓஓ அந்த அளவுக்கு பிடிக்கும் அருணை”என்றதும் ப்ரதன்யா முகத்தில் நாணம் படர்ந்தது.

    “ஒரு வேளை அப்பா ஒத்துக்காட்டா”என்று கேட்க

    “அக்கா நோ ப்ராமிஸா அவங்களை உங்க ஹஸ்பண்டா என்னால பார்க்கவே முடியாது”என்று வருத்தமாக கூற தேஜா சிரித்தபடியே “ஓகே ஓகே நான் பேசறேன்”என்றாள்.

    “தேங்க்ஸ் க்கா”என்று அவளைக் கட்டியணைத்து கொண்ட ப்ரதன்யா இரவு அருணை பேச வரச் சொல்லி இருப்பதாக கூறினாள்.

    “எதுக்கு இந்த அவசரம் ப்ரது”என்றதும் “இல்லைக்கா அவங்க மனசில் என்ன இருக்குன்னு எனக்கு தெரிஞ்சா தானே நான் தைரியமா வீட்டில் பேச முடியும்”என்று சொல்ல தேஜாவிற்கும் அதுதான் சரியென்று பட்டது.

    இரவு நால்வரும் மாடியில் அமர்ந்திருக்க அங்கே மௌனம் நிலவியது.

    “ஹேய் வரச் சொல்லி விட்டு எதுவும் பேசாமல் இப்படி உட்கார்ந்து இருந்தா எப்படி”என்று அருண் ஆரம்பிக்க யுகா பெண்கள் இருவரையும் பார்த்தான்.

    பிரதன்யா தொண்டையை செருமிக் கொண்டவள் “எனக்கு உங்களை தான் பிடிச்சு இருக்கு பிரசாத். என்னால் யுகா மாமாவை கல்யாணம் பண்ணிக்க முடியாது”என்றாள் திடமாக

    “என்ன”என்று அதிர்ந்தவன் “இதை என் கிட்ட சொல்லி”என்றான் சட்டென

    “உங்க கிட்ட சொல்லாம பக்கத்து வீட்டுக் காரன் கிட்டவா சொல்ல முடியும்”என்று முறைத்தவள் “என் அக்கா ஹஸ்பண்டா நீங்க வர்றதை சத்தியமா என்னால ஏத்துக்க முடியாது. யுகா மாமா ஐம் சாரி எனக்கு பிரசாத்தை தான் பிடிச்சு இருக்கு”என்று நேரடியாக விஷயத்தை போட்டுடைத்தாள் பிரதன்யா.

    “கிறுக்கு தனமா உளறாத தனு”என்று அதட்டிய அருண் “டேய் யுகா ஏதாவது பேசுடா தேஜா நீயாவது சொல்லேன்”என்றான் அருண்.

    “என்னத்த சொல்ல”என்று யுகா தேஜா இருவரும் ஒரு சேர கேட்க

    “சுத்தம்”என்று தலையில் கைவைத்தவனோ “இதோ பார் பிரதன்யா எனக்கு கல்யாணம் பண்றதில் துளியும் விருப்பம் கிடையாது நானே தேஜா கிட்ட எப்படி பேசுறதுனு முழிச்சுட்டு இருந்தேன் நான் இருக்கிற நிலைமையில் கல்யாணம் எல்லாம் யோசிக்கவே முடியாது எங்கப்பா கட்டாயப் படுத்தினதால தான் அமைதியா இருந்தேன்”என்றான்.

    “ப்ப்ச் அதெல்லாம் எனக்கு தேவை இல்லை உங்களுக்கு அக்கா மேல எந்த இன்ட்ரெஸ்டும் இல்லை தானே அதை மட்டும் சொல்லுங்க”என்று கேட்க

    “எனக்கு யார் மேலயும் இன்ட்ரெஸ்ட் கிடையாது”என்றான் பட்டென்று.

    “ரொம்ப சந்தோஷம் அப்படியே இருங்க”என்றவள் “யுகா மாமா நான் நாளைக்கு இந்த கல்யாணம் எனக்கு வேண்டாம் னு சொல்ல போறேன் அதுல உங்களுக்கு எதுவும் அப்ஜெக்ஷன் இல்லையே”என்று வினவ

    “எனக்கு இல்லை ஆனா என் அம்மா மாமாவை ஒரு வழி ஆக்கிடுவார் பார்த்துக்கோ”என்றவன் “அஸ்வி எதையாவது பேசு ஏன் புடிச்சு வச்ச பிள்ளையார் மாதிரி உட்கார்ந்து இருக்க”என்றான் சலிப்பாக.

    “எனக்கு ஒரு திங்க் தோணுது”என்றாள் தேஜா.

    “என்ன இந்த ஹிந்தி சீரியல் மாதிரி முக்காடு போட்டு மறைச்சு வந்து மாத்தி உட்கார்ந்து கல்யாணம் பண்ணிக்கலாம் னு சொல்றியா”என்றான் யுகா கிண்டலாக

    “நாட் பேட் இது கூட நல்ல ஐடியா தான்”என்ற ப்ரதன்யாவை மூவரும் ஒரு சேர முறைத்தனர்.

    “எனக்கு என் தங்கச்சி விருப்பம் தான் முக்கியம். அதனால நானே அப்பா கிட்ட பேசறேன்”என்று எழுந்து கொண்டாள்.

    “இந்த மேரேஜை நிறுத்த வேற ஆப்ஷன் இல்லையா”என்று பரிதாபமாக அருண் கேட்க

    “அபசகுனமா பேசாதீங்க பிரசாத்”என்று வள்ளென விழுந்தாள் ப்ரதன்யா.

    “ப்ப்ச் தனு நிலைமை புரியாம பேசாத”என்று அவன் அலுத்துக் கொள்ள

    “எம்மா தாயே நீ உன் தங்கச்சிக்காக பேசுவ ஆனா எங்கம்மாவை யார் சமாளிக்கறது நான் தான் இவங்க ரெண்டு பேரையும் சேர்த்து வச்சேன்னு முடிவே பண்ணிடுவாங்க”என்றான் பாவமாக

    “அதுக்குன்னு ஜோடி மாத்தியா கல்யாணம் பண்ண முடியும்”என்று தேஜா வெடுக்கென்று கேட்க

    “இது கூட நல்லா இருக்கே ஏன் விரும்புறவங்களை பிரிக்கணும்”என்றபடி வந்து நின்றனர் சுதாகரனும் அகிலனும்.

    ….. தொடரும்

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
4
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்